மௌனங்கள் 17

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
குழலி POV

இன்று என் வாழ்வில் மறக்க முடியாத நாள். நான் அதிகம் மகிழ்ந்ததும் இந்நாளே. அதிகம் வருந்தியதும் இந்நாளே.

இன்றைய நாள் என் வாழ்வில் வராமலேயே இருந்திருக்கலாம்.

காலையில் சீக்கிரத்திலேயே வெளியே கிளம்பி விட்டான் புவின். அவன் இன்று வீட்டில் இருந்திருந்தால் நானும் கடைக்கு விடுமுறை எடுத்துக் கொண்டு அவனோடு இருந்திருப்பேன்.

தாமதமாகதான் கடைக்கு கிளம்பினேன் நான்.

அன்றைக்கு ஸ்ரீயின் பிறந்தநாள். கடைக்கு செல்லும் முன் அவனின் வீட்டிற்கு சென்றேன். வருடா வருடம் நிஷாவோடு சேர்ந்து அனைவரும் அவனது பிறந்தநாளை கொண்டாடுவோம்.

இந்த வருடத்தில் யாரும் அவனின் பிறந்தநாளை கொண்டாடவில்லை. நிஷா மதியின் மாலையணிந்த புகைப்படங்களை பார்த்து பார்த்து அழுதுக் கொண்டிருந்தவர்கள் எப்படி இவனின் பிறந்தநாளை கொண்டாடுவார்கள்.?

நான் வீட்டிற்கு சென்றதும் நிஷாவின் அம்மா என்னை அழைத்து அமர வைத்து காப்பி தந்தாள். வீட்டின் சோகம் முழுதாய் விட்டுச் செல்லவில்லை. ஒரே நாளில் இரு குழந்தைகளை பறி தந்த வீடு அது. எப்படி துக்கத்தை மறக்கும்?

"ஹாய் அக்கா.." என்றபடி என் அருகே வந்து அமர்ந்தான் ஸ்ரீ.

குளித்து முடித்து அழகாய் தலை வாரி இருந்தான் அந்த காலை வேளையிலேயே. அதுவே எனக்கு திருப்தியாக இருந்தது. அவனின் தலையை வருடி விட்டேன். உடன்பிறப்புகள் இல்லாத குறையை பல நாளாக தீர்த்து வைத்துள்ளார்கள் இவனும் மதியும்.

வரும்பொழுது கடை ஒன்றில் வாங்கி வந்த வாட்சை அவனின் கரத்தில் கட்டினேன். "இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஸ்ரீ.." என்றேன்.

முகம் மலர்ந்தவன் "தேங்க்ஸ்க்கா.." என்றான்.

"சாப்பிட வா குழலி‌‌.." என்று அழைத்தாள் அம்மா. அரையாய் உருகி போயிருந்தவளுக்கு எந்த ஆறுதல் மன கவலையை நீக்கும்.?

"இல்லம்மா.. சாப்பிட்டுதான் வந்தேன்.." என்றேன் நான்.

சில நிமிடங்கள் கடந்தது. "அந்த பையனுக்கும் உனக்கும் கல்யாணம் ஆகிடுச்சாம்மா.?" என கேட்டாள் அம்மா. அவளின் பார்வை எனது கை விரல்களின் மீது இருந்தது.

விரல் வெறுமனே இருக்கிறதே என்பதற்காக நேற்று பாட்டியின் மோதிரம் ஒன்றை எடுத்து அணிந்திருந்தேன். அதை பார்த்துவிட்டு கேட்டாள் அவள்.

"இ.. இல்லம்மா.. இன்னும் கொஞ்ச நாள் ஆகட்டும்ன்னு சொல்லியிருக்கார் அவரு.." என்றேன். என் முகம் லேசாக சிவந்து இருந்ததை அருகே இருந்த கண்ணாடியில் பார்த்து தெரிந்துக் கொண்டேன்.

ஸ்ரீ எழுந்து தன் அறைக்கு சென்றான். அவனுக்கு நண்பர்கள் வட்டம் கூட அவ்வளவாக கிடையாது. அவன் மீது நிஷா வைத்திருந்த பாசம் என்னவென்று எனக்கு நன்றாக தெரியும்.

"ஸ்ரீ.." என்றேன்.

அவனது அறையிலிருந்த வெளியே வந்தான்.

"எங்கேயாவது வெளியே போகலாமா.?" என்றேன்.

அவன் தயக்கத்தோடு தன் அம்மாவை பார்த்தான். பிறந்தநாளும் அதுவுமாக மகன் முகம் வாடி இருப்பதே அவளுக்கும் சேர்ந்து கவலையை தந்து விட்டிருந்தது.

"போய்ட்டு வா ஸ்ரீ.." என்றாள்.

முக மலர்ச்சியோடு என்னை பார்த்தான் அவன்.

"போகலாம் அக்கா.. எங்கே போகலாம்.?" என்றேன்.

"உன் பிறந்தநாள்.. நீயே சொல்லு.." என்றேன்.

"கேம் சென்டர் போகலாமா.? பஸ் ஏறினா இருபது நிமிசம்தான்.." என்றான்.

சரியென்று தலையசைத்தேன். அந்த முகத்தில் அவ்வளவு ஆர்வத்தை பார்த்த பிறகும் எப்படி மறுப்பேன் நான்.?

இருவரும் கிளம்பினோம். பேருந்து ஏறும் முன்பே குஷியாகி விட்டோம். ரோட்டோர கடை ஒன்றில் வரிசையாக தொங்கிக் கொண்டிருந்த வண்ண கண்ணாடி மாலைகளை பார்த்ததும் அதில் இரண்டை வாங்கி நானும் அவனும் அணிந்துக் கொண்டோம்.

"வாவ்.. செம ப்யூட்டிக்கா நான்.." என்றான் ஸ்ரீ.

பேருந்து வந்ததும் ஏறினோம் இருவரும்.

வழியெல்லாம் நிறைய பேசினோம். நிஷாவை பற்றி பேசுவதை நானே தவிர்த்தேன். அவன் இன்று ஒருநாளாவது சோகத்தில் மூழ்காமல் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.

பேருந்து நின்றதும் இருவரும் கை கோர்த்தபடி இறங்கினோம். எதிரே இருந்த கேம் சென்டரை கண்டதும் ஓட முயன்றான் ஸ்ரீ. வண்டிகள் வரும் சாலை அது. சட்டென்று இழுத்து பிடித்து நிறுத்தினேன் அவனை. இதயம் எனக்கு அடித்துக் கொண்டது.

"வெயிட் பண்ணுடா.. ஏன்டா பறக்கற.? கேம் சென்டர் ஓடியா போக போகுது.." என்று கடிந்துவிட்டு அவனை பத்திரமாக அழைத்துக் கொண்டு சாலையின் மறுபுறத்திற்கு சென்றேன்.

கேம் சென்டர் கட்டிடத்தின் காம்பவுண்ட் கேட்டிற்குள் நுழைந்த பிறகே அவனின் கையை விட்டேன் நான்.

"கேம்ஸ்.." என்றபடி துள்ளிக் கொண்டு ஓடினான் அவன். அவனின் சந்தோசத்தை என் மனதில் நிரப்பியபடி அவனை பின்தொடர்ந்தேன் நான்.

அரை மணி நேரம் கடந்திருந்தது. நானும் அவனும் பல விளையாட்டுகள் விளையாடினோம். எதிலுமே அவனை தோற்கடிக்க முடியவில்லை என்னால்.

ஒவ்வொரு முறை ஜெயிக்கும் போதும் "நான்தான் வின்.." என்று என் காதின் அருகே வந்து கத்தினான்.

இது போன்ற கேம் விளையாடுவது திறமையா என்று எனக்கு சரியாக தெரியவில்லை. ஒருவேளை அதில் திறமைசாலிகள் என்று யாரையாவது தேர்ந்தெடுத்தால் அதில் ஸ்ரீயும் இருப்பான். விளையாடுகையில் அவனுக்குள் வேகம் இருந்தது.

அடுத்த கேமிற்குள் நுழைந்தான் அவன். "ஸ்ரீ.. நான் ரெஸ்ட் ரூம் போய்ட்டு வந்துடுறேன்.." என்றேன்.

"ஓகேக்கா.. நான் அதுவரை தனியா விளையாடுறேன்.." என்றான்‌.

இருக்கையை விட்டு எழுந்து நடந்தேன்.

"அக்கா.." என்று அழைத்தான்.

திரும்பினேன்.

"பத்திரம்.." என்றான்.

புன்னகைத்து விட்டு ரெஸ்ட் ரூம் இருந்த திசை நோக்கி நடந்தேன்.

புவின் வீடு வந்து சேர்ந்திருப்பானா என்று சந்தேகமாக இருந்தது. போன் செய்தேன் அவனுக்கு. போன் ரிங் ஆகியது‌. அவன் எடுக்கவில்லை. வேலை செய்கிறான் என்று புரிந்தது. ஏதோ ஒரு வெளிநாட்டு கம்பெனிக்காக வீட்டிலிருந்தே கம்ப்யூட்டரில் வேலை செய்வதாக ஏற்கனவே சொல்லி இருக்கிறான். தொந்தரவு செய்ய வேண்டாம் என நினைத்து போன் இணைப்பை துண்டித்துக் கொண்டேன்.

ரெஸ்ட் ரூமை விட்டு வெளியே வந்தேன். மணி பார்த்தேன். பதினொன்றறையை தாண்டி இருந்தது. அவ்வளவுதானா என்று எண்ணினேன்.

ஸ்ரீ இருந்த அறை நோக்கி நடந்தேன். அதே வேளையில் சற்று தூரத்தில் புவின் நடந்து சென்றான். அது புவின்தானா என்றும் சிறு சந்தேகம் வந்தது. இங்கே என்ன செய்கிறான் அவன் என்று குழம்பியபடி அவனை நோக்கி நடந்தேன். எங்கோ வளைந்தான். நானும் தொடர்ந்து சென்று அவன் வளைந்த திசையில் வளைந்தேன்

அந்த கேம் சென்டரில் இருந்த ஒற்றை நீள வராண்டாவின் கடை கோடியில் நடந்துச் சென்றுக் கொண்டிருந்தான் அவன்.

"புவின்.." என்று அழைத்தேன். காதில் வாங்காமல் போய் விட்டான். நான் அந்த வராண்டாவின் எல்லைக்கு வந்து சேர்ந்தேன். அது அந்த கேம் சென்டரின் பின் வாசலுக்கு செல்லும் வழி. பின் வாசலில் இறங்கி சுற்றும் முற்றும் பார்த்தேன். கார்கள் வரிசையாக நின்றிருந்தன. தூரத்தில் கேட் இருந்தது. கேட்டை தாண்டி புவின் நடந்துக் கொண்டிருந்தான்.

"புவின்.." அவனின் பின்னால் ஓடினேன். ஆனால் நொடியில் ஓட்டத்தை நிறுத்தினேன். ஓடுவது சரியென்று தோன்றவில்லை‌. வேக நடை எடுத்து வைத்து நடந்தேன்.

கேட்டை விட்டு வெளியே வந்து பார்த்தேன். சற்றுத் தொலைவில் சாலையின் ஓரத்தில் ஒரு மரத்தின் அடியில் நின்றுக் கொண்டிருந்தது ஒரு கார். அதனருகே நின்று காருக்குள் இருந்தவரோடு பேசிக் கொண்டிருந்தான் அவன்.

திடீரென்று அவன் முன் தோன்றி அவனுக்கு சர்ப்ரைஸ் தர வேண்டும் என்று நினைத்தேன். ஓடும் வாகனங்களை பார்த்தபடி அவனை நோக்கி நடந்தேன்.

அருகே சென்ற பிறகுதான் அவனின் காதில் இருக்கும் ப்ளூடூத்தை பார்த்தேன். அதனால்தான் நான் அழைத்தது அவன் காதுகளுக்கு கேட்கவில்லை. அவனை நெருங்கினேன். மரத்தின் பின்னால் ஒதுங்கி நின்றேன்.

'பே..' என்று அவன் முன்னால் எகிற குதிக்க சொன்னது மனம். கைகள் இரண்டையும் நான் உயர்த்திய வேளையில் "நாளைக்கு நீ சொன்ன அந்த நீச்சல்குளம் பக்கத்துலயே பாம் வச்சிடலாம்.." என்றான் அவன்.

சட்டென்று நின்றேன் நான். என்ன சொன்னான் அவன் என்பதை மீண்டும் சிந்தையில் வரவைத்து யோசித்தேன். பாம்.. ஆனா ஏன்.? நீச்சல் குளம் பக்கத்துல பாம்.. சரியாக புரியவில்லை எனக்கு. இல்லையென்றால் இப்படியும் சொல்லலாம்.. புரிந்திருந்தும் நம்புவதற்கு மனம் வரவில்லை என்று‌.

"இன்னும் பத்து செகண்ட்ல கேம் சென்டர் காலி.." என்றவன் காரில் ஏறி அமர்ந்தான். என் மூளை ஸ்தம்பித்து போனது. கேம் சென்டர் காலி என்றால் அதன் அர்த்தம்?

கேம் சென்டரை திரும்பி பார்த்தேன். மீண்டும் புவின் பக்கம் திரும்பினேன். அந்த காரை காணவில்லை. சென்றுவிட்டது போலும்.

இது உண்மை இல்லை, நான்தான் தவறுதலாக எதையோ கற்பனை செய்துக் கொண்டிருக்கிறேன் என்று நினைத்தேன். கேம் சென்டரை நோக்கி நடந்தேன். எவ்வளவு வேகமாக நடக்க முடியுமோ அவ்வளவு வேகமாக. இது எதுவும் உண்மை இல்லை என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்.

திடீரென்று ஒரு சத்தம். டமார் என்று! கேம் சென்டர் என் கண் முன்னால் வெடித்து சிதறியது. பார்க்கு இடமெல்லாம் கொளுந்து விட்டு எரிந்தது நெருப்பு. சிவப்பு. எங்கு பார்த்தாலும் சிவப்பு. என் கையை பார்த்தேன் அதுவும் சிவப்பு. ஒன்றும் புரியவில்லை. சாலையை பார்த்தேன். சாலையும் சிவப்பு. சாலை சுழன்றது போல இருந்தது. தலையை பிடித்தபடி அப்படியே தரையில் அமர்ந்தேன்.

"அம்மா.. அச்சோ.. அப்பா.." என்று கதறல்கள் எங்கெங்கும் ஒலித்தது. காது முழுக்க அந்த சத்தம்தான்.

யாரோ என் முகத்தில் தண்ணீரை அடித்தார்கள்‌.

"தண்ணி குடி பாப்பா.. உனக்கு ஒன்னும் ஆகல.." என்றார்கள். தண்ணீரை இரு விழுங்கு குடித்து விட்டு நிமிர்ந்தேன். ஒரு பாட்டி நின்றுக் கொண்டிருந்தாள்.

"அந்த பக்கத்து கட்டிடத்துல பாம் வெடிச்சி போச்சி பாப்பா.. பாவம்.. எத்தனை உசுரோ.?" என்றாள் அவள்.

இப்போது மயக்கம் ஓரளவிற்கு தெளிந்து விட்டது. கை கடிகாரத்தை பார்த்தேன். பன்னிரெண்டு ஆகியிருந்தது. மயக்கத்திலேயே அமர்ந்து விட்டிருக்கிறேன் என்று புரிந்தது.

"இன்னும் தண்ணி வேணுமா பாப்பா.?" என்றாள் பாட்டி.

வேண்டாமென்று தலையசைத்துவிட்டு எழுந்து நின்றேன்.

லேசாக தலை சுற்றியது. எதிரில் இருந்த கேம் சென்டர் கருப்பாகவும் சிகப்பாகவும் தெரிந்தது. போலிஸ் வாகனங்கள் விரைந்தோடிக் கொண்டிருந்தன. ஆம்புலன்ஸ் சைரன் சத்தம் அந்த இடம் முழுக்க ஒலித்தது.

கேம் சென்டரின் பின் வாசலில் கூட்டமாக இருந்தது. நான் உள்ளே நுழைய முயன்றேன். கேட்டின் உள்ளே நின்றிருந்த காவலர் "உள்ளே யாரும் வர கூடாது.." என்றார் அதட்டலாக.

எரியும் கட்டிடம் பார்த்தேன். பத்திரமாக போய் வா என்ற ஸ்ரீயும் அதே நெருப்பில் எரிந்துக் கொண்டிருக்கும் காட்சி கண்களில் வந்தது. கலங்கிய கண்களை துடைக்க மனமில்லாமல் திரும்பி நடந்தேன்.

ஏற்கனவே இது போலதான் நிஷாவையும், மதியையும் பறி வந்தேன். இன்று ஸ்ரீயும். ஏன்.? நாங்கள் என்ன தவறு செய்தோம்.? என்று இறைவனிடம் கேட்டேன். இறைவன் பதில் சொல்லவில்லை.

மனதில் புவினின் முகம் வந்து சென்றது. குழப்பத்தில் தலை வெடிக்கும் போல இருந்தது. இரு பக்கமும் இருந்த மண் பாதை உடைந்து கொண்டிருப்பது போலிருந்தது. எந்த திசையில் நடந்தாலும் பாதாளம் என்பது போல் இருந்தது என் எண்ணம்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN