காதல் கடன்காரா 20

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
ஈஸ்வரின் தந்தையை கார்த்திக்கின் வீட்டில் இருந்த யாரும் நம்பவில்லை.

"எங்களை கொல்ல முயற்சி பண்ணிட்டு இப்ப நல்லவர் மாதிரி வந்து நடிக்கிறிங்களா.?" என்று கோபத்தோடு கேட்டாள் புவனா. இந்த சிலிண்டர் விபத்தால் அவளுக்கு காய்ச்சல் வந்து விட்டது. திண்ணையில் அம்மாவின் மடியில் படுத்திருந்தவள் பெரியப்பாவின் புது பாசம் கண்டு கொந்தளித்து விட்டாள்.

அவளின் பெரியப்பா இவர்களை கோபத்தோடு பார்த்தார். "நான் ஏன் உங்களை கொல்ல பார்க்கறேன்.? அப்படி உங்களை கொல்ல நினைச்சிருந்தா உங்க அப்பா குழந்தையா இருக்கும்போதே அவனை கொன்னிருப்பேன்.. சாமி குத்தம் வந்திருக்குன்னு சொத்தை பிரிச்சி தர வந்திருக்கேன் நான்.. வாங்கிட்டு எங்க குடும்பத்து மேல நீங்க வச்ச சாபம் எல்லாத்தையும் திருப்பிக்கங்க.." என்றவர் பணமும் நகைகளும் இருந்த பெட்டிகளை அவர்களின் வீட்டு வாசலில் வைத்தார்.

"நல்லா நடிக்கறாரு இவரு.." என்ற மூர்த்தி கையை முறுக்கிக் கொண்டு எழுந்தான்.

"சும்மா இரு மூர்த்தி.." முருகன் மகனை எச்சரித்தார்.

"நான் தப்பு செஞ்சா அதை மறைக்கணும்ங்கற தலைவிதி கிடையாது.. இப்ப நினைச்சா கூட உங்களை வெட்டிட்டு கெத்தா கிளம்புவேன்.. ஆனா உங்க வீட்டுல நடந்த அசம்பாவிதத்துக்கும் எனக்கும் நடுவுல எந்த சம்பந்தமும் இல்ல. ஆதாரம் இல்லாம பழி போடாதிங்க.." என்ற ஈஸ்வரின் அப்பா அங்கிருந்து கிளம்பி போனார்.

அபிராமியை அணைத்தபடி அமர்ந்திருந்த கார்த்திக் "சீக்கிரம் ஆதாரம் கண்டுபிடிச்சி அந்த ஆளை ஜெயில்ல போடு அண்ணா.. நீயெல்லாம் போலிஸாகியும் ஒரு ப்ரயோசனுமும் இல்ல.. நானா இருந்திருந்தா முத வேலையா அந்த குடும்பத்தை ஜெயிலுக்கு அனுப்பிட்டுதான் அடுத்த வேலை பார்த்திருப்பேன்.." என்றான்.

மூர்த்தி திண்ணை தூணில் தலை சாய்த்தான். தம்பியின் மீது எரிச்சலாக வந்தது. அவன் பணிமாற்றம் பெற்று இன்ஸ்பெக்டராக அந்த ஊர் காவல் நிலையத்தில் பொறுப்பேற்றதுமே முதல் புகாராக முத்தமிழைதான் கைது செய்தான், அதுவும் வழக்கு கூட பதியாமல்.!

'இவனுக்காக எவ்வளவு ரிஸ்க் எடுத்துட்டு இருக்கேன் நான்.. என்னை வேஸ்டுன்னு சொல்றானே..' என்று மனதுக்குள் அவனை திட்டினான்.

யமுனா ஒருபக்கம் அமர்ந்திருந்தாள். எரிந்த வீட்டையே கவலையோடு பார்த்துக் கொண்டிருந்தாள்.

"இனி என்ன செய்றது.?" என்றாள்.

முருகனும் கவலையோடுதான் இருந்தார். "தெரியல.. வாடகைக்கு வீடு பார்க்கலாம்.." என்றார்.

"நாம ஏன் சொந்த வீடு கட்ட கூடாது.?" என்றாள் அபிராமி பணப்பெட்டியை சுட்டிக்காட்டி.

முருகனுக்கும் சரியென்றுதான் தோன்றியது.

"அந்த ஆளை பழிவாங்காம இந்த காசை பயன்படுத்த கூடாது.." என்றான் கார்த்திக்.

'நீ பழி வாங்கறவனா.? உன் பழி வாங்கல் பெண்ணை தாண்டி செல்லாதுன்னு எனக்கு மட்டும்தானே தெரியும்..' என நினைத்தவள் "அதுக்காக வயசு பெண்ணை வச்சிக்கிட்டு திண்ணையிலா குடியிருக்க முடியும்.? ஆறு பேர் குடியிருக்க வாடகை வீடு பிடிச்சா வாடகையே அதிகமா இருக்கும். நாம கையில காசை வச்சிக்கிட்டு ஏன் சும்மா இருக்கணும்.?" என்றாள்.

"அபிராமி சொல்றதுதான் சரி.." என்றார் முருகன்.

மறுநாளே வாடகைக்கு வீடு பார்த்து குடி போனார்கள். அந்த வாரத்திலேயே ஈஸ்வரின் குடும்பம் பாதி சொத்தை முருகனின் பெயருக்கு மாற்றி தந்தார்கள்.

சொத்தின் மதிப்பை கணக்கிட்டு பார்த்த கார்த்திக்கும் மூர்த்தியும் "நாமளும் கோடீஸ்வரர்கள்.." என்றார்கள்.

அடுத்த வாரத்திலேயே தார்சாலையை ஒட்டியிருந்த ஒரு நிலத்தில் வீடு கட்ட முகூர்த்தகால் போட்டார்கள்.

மூர்த்தி தங்களின் வீடு எரிந்த வழக்கை பற்றி ஆராய்ந்தான். நிறைய பேரிடம் விசாரித்தான். மேலிடத்தில் அனுமதி வாங்கி ஈஸ்வரின் வீட்டிற்கு சென்று அவர்களையும் விசாரணை செய்தான். அன்றுதான் அவன் ஈஸ்வரை பார்த்தான். எலும்பும் தோலுமாக சாகும் நிலையில் இருந்தான் அவன்.

தான் வந்த பணி மறந்து அவனருகே சென்றவன் "என்ன ஆச்சி உனக்கு.?" என்றான்.

"எல்லாம் உங்களால வந்ததுதான்.. சாபமா தந்து என் பையனை இப்படி ஆக்கிட்டிங்க.. நீங்க நல்லாவே இருக்க மாட்டீங்க.." என்றாள் பெரியம்மா.

மூர்த்திக்கு கோபமாக வந்தது. சாபம் வைப்பதில் இவர்களை விடவும் திறமைசாலிகள் வேறு உண்டோ என்று நினைத்தான்.

ஈஸ்வரின் அம்மாவிற்கும் அப்பாவிற்கும் சொத்துக்களை கை மாற்றி விடுவதில் சிறிதும் விருப்பமே இல்லை. ஆனால் மகனின் நிலை அவர்களை கவலைக்கு உள்ளாக்கி விட்டது. பெற்ற ஒற்றை மகனையும் இழந்து விட்டால் பிறகு யார்தான் சொத்துக்களை அனுபவிப்பார்கள் என்றும் நினைத்தார்கள்.

மகன் குணமடைந்தால் போதும், வருங்காலத்தில் இது போன்று பல மடங்கு சொத்துகளை சேர்த்து கொள்ளலாம் என்று நினைத்துதான் சொத்தை பிரித்து தந்தார்கள்.

மூர்த்தி பெரியப்பாவிடம் தீவிரமாக விசாரித்தான்.

"நான் உங்க வீட்டுக்கு நெருப்பு வைக்கல.. என்னை இத்தோடு விடு.." என்றார் அவர் கோபத்தோடு.

மூர்த்தியின் உடன் வந்த கான்ஸ்டபிள் ஒருவர் ஈஸ்வரின் அம்மாவை பார்த்தார். "குடிக்க தண்ணீர் தரிங்களா.?" என்றார்.

"கோட்டைசாமி.. இவங்களுக்கு தண்ணி கொண்டு வா.." என்றாள் அவள் சமையலறை பக்கம் பார்த்து‌.

சற்று நேரம் கழித்து கை நடுங்கியபடி கண்ணாடி டம்ளரில் தண்ணீர் கொண்டு வந்தான் கோட்டைசாமி.

அவனை சந்தேகமாக பார்த்த கான்ஸ்டபிள் தண்ணீரை வாங்க கையை நீட்டினார். கோட்டைசாமியின் கை நடுக்கம் அதிகமாகி தண்ணீர் டம்ளர் கீழே விழுந்து உடைந்தது.

"கோட்டைசாமி.. ஒரு வேலையை கூட உருப்படியா செய்ய மாட்டியா நீ.?" என்று ஈஸ்வரின் அம்மா திட்டிய நேரத்தில் கான்ஸ்டபிளின் காலில் பொத்தென விழுந்தான் கோட்டைசாமி.

"ஐயா பணத்துக்கு ஆசைப்பட்டு தெரியாம தப்பு பண்ணிட்டேன்.. மன்னிச்சி விட்டுடுங்க ஐயா.." என்றான் கெஞ்சலாக.

ஈஸ்வரின் அப்பா அதிர்ச்சியோடு அவனை பார்த்தார். அவரை விசாரணை செய்துக் கொண்டிருந்த மூர்த்தி எழுந்து வந்தான்.

"என்ன.?" என்றான் சந்தேகத்தோடு. அவனை பார்க்கையில் மூர்த்திக்கு உள்ளுக்குள் பொறி தட்டியது.

"ஐயா பேச்சை கேட்டு விசுவாசத்துக்காகவும் அவர் தந்த அம்பதாயிரம் பணத்துக்காகவும் உங்க வீட்டுக்கு நெருப்பு வச்சிட்டேன் சாமி.. என்னை மன்னிச்சி விட்டுடுங்க.. வேணும்ன்னா அவர் தந்த அம்பதாயிரத்தை கூட திருப்பி தரேன்.. வாங்கிட்டு என்னை விட்டுடுங்க.." என்றான் கோட்டைசாமி பயந்த குரலில்.

"என்னடா உளருற.?" என்று ஈஸ்வரின் தந்தை கேட்ட நேரத்தில் தன் இடுப்பிலிருந்த துண்டை உருவிய கோட்டைசாமி துண்டுக்குள் கட்டாக இருந்த பணத்தை மூர்த்தியிடம் தந்தான்.

"என்னை விட்டுடுங்க சார்.. நான் புள்ளைக் குட்டிக்காரன்.." என்றான்.

கான்ஸ்டபிளை திரும்பி பார்த்தான் மூர்த்தி. "இவரை அரெஸ்ட் பண்ணுங்க.." என்றவன் தன் பெரியப்பாவிடம் சென்று அவரின் கைக்கு விலங்கு பூட்டினான்.

"உங்களையும் சேர்த்து அரெஸ்ட் பண்ணனும்.. ஆனா அண்ணனுக்கு உடம்பு ரொம்ப மோசமா இருக்கேன்னு விட்டு போறேன்.." என்று பெரியம்மாவிடம் சொன்ன மூர்த்தி பெரியப்பாவை அழைத்துக் கொண்டு வெளியே நடந்தான்.

"மூர்த்தி அவன் பொய் சொல்றான்.. நாலு நாள் முன்னால வீட்டுல இருந்த பணம் ஆயிரத்தை திருடிட்டான்னு திட்டினேன்.. அதுக்காக பழி வாங்கறான் அவன். நான் ஏன் உங்களை கொல்ல நினைக்கிறேன்.?" என்றார்.

அவரை ஜீப்பில் அமர வைத்த மூர்த்தி "கார்த்திக் ஹாஸ்பிட்டல் பெட்ல படுத்திருக்கும்போதே அவனுக்கு விஷம் கொடுக்க டிரை பண்ணவங்கதானே நீங்க.? இதை மட்டும் செய்யலன்னு பொய் சொன்னா உடனே நம்பிடுவேனா‌.? சாட்சியை பக்கத்துலயே வச்சிக்கிட்டு கூட பொய் சொல்ல உங்களால்தான் முடியும்.." என்றவன் ஜீப்பில் ஏறி ஸ்டேசன் நோக்கி கிளம்பினான்.

இரண்டு மாதங்கள் ஓடியது. ஈஸ்வரின் தந்தைக்கு ஆயுள் தண்டனை கிடைத்தது. ஆனால் அவர் தான் தப்பு ஏதும் செய்யவில்லை என கூறி மேல் முறையீடு செய்திருந்தார்.

ஈஸ்வருக்கு உடம்பு இப்போது கொஞ்சம் தேறியிருந்தது. ஆள் துணை இல்லாமல் தானாய் எழுந்து நடமாடும் அளவுக்கு தேறி விட்டான்.

கார்த்திக்கின் வீடு அடி அடியாக மேலுயர்ந்துக் கொண்டிருந்தது. அனைவருக்கும் பெரிய அறை வைத்து வீட்டை கட்டினார்கள். அபிராமி அந்த வீட்டிற்காக வெகுவாக உழைத்தாள். சித்தாள் ஒருத்தி குறைந்தபோது அவளே வேலையில் இறங்கி செங்கற்களை சுமந்தாள்.

தலைவலியோடு கை சிவந்து இருந்தவள் வேலை செய்த விசயத்தை மாலையில் வந்துதான் அறிந்தான் கார்த்திக்.

அவளை திட்டினான். "உன்னை யார் இந்த வேலையெல்லாம் செய்ய சொன்னது.?" என்றவன் அவளின் கையை ஊதி விட்டான்.

"நம்ம வீட்டுக்கு நாம செய்யாம யார் செய்வாங்க.?" என்றவளை முறைத்தான் அவன்.

"வீட்டோடு அமைதியா உட்கார்ந்திரு.. உனக்கு எந்த குறையும் வைக்காம பார்த்துக்கறேன் நான்.." என்றான்.

அபிராமி சரியென தலையசைத்து அவனின் நெஞ்சில் சாய்ந்துக் கொண்டாள். அவள் உடுத்தியிருந்தது யமுனாவின் புடவை. இந்த சில மாதங்களில் அவன் வாங்கி வந்து தந்த நான்கு புடவைகளுமே மாற்றி மாற்றி கட்டியதில் கிழிந்து விட்டது. அவளிடம் பணம் இருந்தது. ஆனால் அவள் தனக்கென எதையும் வாங்க விரும்பவில்லை.

ஒருநாள் அபிராமியும் கார்த்திக்கும் சேர்ந்து நின்றபடி கட்டப்பட்டுக் கொண்டிருந்த வீட்டை பார்த்தார்கள்.

அவர்கள் நின்றிருந்த இடத்தின் அருகே மின்தூக்கி மூலம் மேல் மாடிக்கு கற்கள் தூக்கி வைக்கப்பட்டுக் கொண்டிருந்தது.

"நம்ம ரூம் பெருசா இருக்கு அபிராமி.. நமக்கு எந்த தொந்தரவும் இருக்காது.." என்றான்.

வெட்கத்தோடு ஆமென தலையசைத்தவளை தன் தோளோடு அணைத்துக் கொண்டான் அவன்.

"ஜாலியா இருக்கணும் அபிராமி.. நீயும் நானும் செம ஜாலியா இருக்கணும்.." என்றவனை "சார்.." என்று அழைத்தார்கள் யாரோ.

திரும்பி பார்த்தான்.

"கிச்சன் டிசைன் பார்த்து சொல்லுங்க சார்.." என்றான் அவர்களின் வீட்டை கட்டிக் கொண்டிருந்த இன்ஜினியர். அவனை அபிராமிதான் தேர்ந்தெடுத்திருந்தாள். கார்த்திக்கின் குடும்பம் எதிர்பார்த்ததை விடவும் வீடு சிறப்பாகதான் கட்டப்பட்டுக் கொண்டிருந்தது.

"அதையெல்லாம் அம்மாக்கிட்ட கேளுங்களேன்.." என்றவன் இன் இன்ஜினியர் மீண்டும் அழைக்கவும் அபிராமியை அழைத்துக் கொண்டு அவர் அருகே சென்றான்.

"நீ செலக்ட் பண்ணு அபிராமி.." என்றவன் இன்ஜினியர் காட்டிய டிசைன்களை அடுத்தடுத்த பார்த்தான். எல்லாம் ஒன்றை போலவே இருப்பது போலிருந்தது.

அபிராமி ஒரு டிசைனை தேர்வு செய்து இன்ஜினியரிடம் காட்டினாள். "இது ஓகே.." என்றாள்.

"தேங்க்ஸ் அபி.." என்றவன் அவள் திருப்பி தந்த தன் டேப்லட்டை வாங்கிக் கொண்டு தன் வேலையை பார்க்க கிளம்பினான்.

"இவனோடு அதிகம் பேசாதே.." என்றான் கார்த்திக்.

ஏனெனும் விதமாக நிமிர்ந்து பார்த்தாள் அபிராமி.

"ஓவரா கொஞ்சுறான்.. அது என்ன அபி.? நானே அபிராமின்னுதான் கூப்பிடுறேன்.. பன்னாடை மாதிரி இருக்கான்.." என்றான்.

அபிராமி சிரிப்போடு அவனை பார்த்தாள். "அவன் பிரெண்டுப்பா.." என்றாள்.

"என்னவா இருந்தாலும் இனி காரணமில்லாம பேசாதே.." என்றான்.

"ஓகே.." உதட்டை சுளித்து சொன்னவளின் மூக்கை கிள்ளி ஆட்டினான் கார்த்திக். "கிண்டல் கிடையாது.. சீரியஸா பேசாதே.." என்றான் அழுத்தமாக.

அவனின் கையை தட்டி விட்டவள் "சரி.." என்றாள்.

அதே வேளையில் கார்த்திக் நின்றிருந்த இடத்திற்கு மேல் தூக்கப்பட்டுக் கொண்டிருந்த மின்தூக்கி முழு பாரத்தோடு திடீரென்று கீழே இறங்கியது. அறுந்து விழுந்ததா இல்லை அதன் செயல்பாடு நின்று போனதா என்று தெரியவில்லை.

சராலென்று கீழிறிங்கிய மின்தூக்கியை முதலில் அபிராமிதான் பார்த்தாள். "கார்த்திக்.." கத்தியபடி அவனை தூர தள்ளி விட்டாள். அவளும் அந்த விசையில் அவனோடு சேர்ந்து விழுந்தாள். அவர்கள் இருவரின் காலடிக்கு கீழே சில அடிகள் தூரத்தில் வேகத்தோடு விழுந்தது செங்கல் பாரத்தோடு இருந்த மின்தூக்கி. அது விழுந்த வேகத்தில் அதிலிருந்த செங்கற்கள் நான்கு புறமும் சிதறின. அதில் ஒன்று பறந்து வந்து அபிராமியின் கால் மீது விழுந்தது.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN