குறிப்பேடு 23

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
தினேஷை வெறுப்போடு பார்த்த வசந்தன் "லூசு பையன்.. கொல்ல டிரை பண்றான்.." என்றார்.

"நாம இங்கிருந்து போயிடலாம் அங்கிள்.." என்ற சிவா அவரின் கையை இழுத்துக் கொண்டு வெளியே செல்ல திரும்பினான்.

அவர்கள் வந்த கதவு திடீரென்று மூடப்பட்டது. சதாசிவமும் முஸ்தபாவும் கதவை திறக்க முயன்று தோற்று நின்றனர்.

"யாருக்கும் விடுதலை கிடையாது.. இந்த கோட்டைக்குள் வந்த யாருக்கும் விடுதலை கிடையாது.." கோமண சாமியாரின் குரல் அந்த அறை முழுக்க கேட்டது.

தினேஷ் அவர்கள் நால்வரையும் தாக்க முயன்றான்.

"நீங்க கதவை திறக்க டிரை பண்ணுங்க சார்.. நான் இவனை பார்த்துக்கறேன்.." என்ற சிவா நண்பனின் முன்னால் வந்து கோபத்தோடு நின்றான். "நீ என் நண்பன் கிடையாது.. செத்த பிறகும் அவனோட உடம்புக்கு நிம்மதி கிடைக்காம பண்ணிட்டு இருக்க நீ.. நீ ஒரு சாத்தான்.." என்றான்.

"என்னை கொல்ல போறேன்.." என்றபடி அவனை தாக்க வந்தான் தினேஷ். சிவா அவனை திரும்பி தாக்கினான். அவனின் வயிற்றில் உதைத்தான். கத்தியை பயன்படுத்த தயக்கமாக இருந்தது அவனுக்கு. என்ன இருந்தாலும் அது அவனின் நண்பனின் உருவம்‌. அதை அழிக்க நினைக்கவில்லை அவன்‌.

இருட்டில் மின்னல் வெளிச்சத்தில் ஆடிக் கொண்டிருந்த ஆலமரத்தை பயத்தோடு பார்த்த யாழினி மெல்ல அடியெடுத்து வைத்து நடந்தாள்.

"பயம் எதுக்கு யாழினி.? போதும் இது.. நீ இறந்தாலும் சம்மதமே.. நீயும் இந்த ஆன்ம கோட்டைக்குள் அடிமையானாலும் சம்மதமே.! இம்முறை தந்தையை நிச்சயம் காப்பாற்றி விடு.!" தனக்குதானே சொல்லிக் கொண்டவளின் நினைவுகளில் ஏதோ ஒரு காட்சி வந்தது.

இதே போல ஒரு இரவு. இதே போல ஆலமரம். ரவிக்கை இல்லாத சேலையை அணிந்திருந்தாள் அவள். மூன்று தலைமுறைக்கு முன்னால் வாழ்ந்தவளாக இருக்க வேண்டும். அழுத முகத்தோடு ஆலமரத்தின் அருகே அவள் சென்றதும் ஆலமரம் இரண்டாய் பிளந்து உள்ளிருந்த கோட்டை காட்சிக்கு வந்தது. தேம்பியபடி திறந்திருந்த கதவின் வழியே உள்ளே நுழைந்தாள்.

மணமாலை சூடி ஆன்மாக்களின் இடையே நின்றிருந்தான் அவன். அழகிய மனிதன். எப்படி இங்கே வந்தான் என்று அவளுக்கு குழப்பமாக இருந்தது‌. ஆன்மாக்கள் அவனின் மனதை கலைத்து விட்டிருக்கிறது என்பதை தாமதமாகதான் புரிந்துக் கொண்டாள்.

அவனுக்கு பின்னால் நின்றிருந்த இளவரசர்கள் நால்வரும் இவளை கண்டு புன்னகைத்தனர்.

ஓரத்தில் ஆன்மாக்கள் சூழ அமர்ந்திருந்தார் அவளின் தந்தை. முகம் முதல் கால் வரை ரத்த காயம் இருந்தது. அந்த ரத்த காயங்களை சுற்றி அலைந்த ஆன்மாக்கள் அவரின் உடலில் இருந்த ரத்தத்தை உறிந்துக் கொண்டிருந்தன.

"மகாராணி சாந்தவிக்காக பல ஆண்டுகளாக காத்திருக்கிறேன் நான்.." என்றான் அவன்.

அழுதபடி சென்று அவனருகே நின்றாள் அவள். மணமாலையை எடுத்து அவளின் கழுத்தில் அவன் சூட இருந்த நேரத்தில் அவளை சுற்றி இருந்த அனைத்தும் நின்று போனது.

குழப்பத்தோடு சுற்றி பார்த்தாள். மாலை ஏந்திய அவனின் கையும், மகிழ்ச்சியோடு பார்த்துக் கொண்டிருந்த இளவரசர்களின் உருவமும் அசையாமல் நின்றது.

"மகளே.." என்றபடி அவளின் முன்னால் வந்து நின்றார் கோமண சாமியார்.

இவள் அவரை திரும்பி பார்த்தாள்.

"என்னையும் என் தந்தையையும் வெளியே அனுப்பி விடுங்கள்.." என்றாள்.

"நீ இந்த ஐவரையும் கொன்று விடு.! நான் உங்கள் இருவரையும் விடுதலை செய்கிறேன்.!" என்றார் அவர்.

அவள் அழுகையோடு மறுத்தாள். அதன் பிறகு..

மாளிகையின் நடுவில் நின்றிருந்த யாழினி "அப்பா.." என்று கத்தினாள். உறைந்து போயிருந்த இளவரசர்களையும் ஆன்மாக்களையும் பயத்தோடு பார்த்தாள்.

அவள் மீண்டும் அழைத்தபோது "வந்தேன் மகளே.!" என்றபடி வந்தார் கோமண சாமியார்.

"நீங்க கொல்ல சொல்ற எல்லோரையும் கொல்றேன்.. என் அப்பாவையும் மத்தவங்களையும் வெளியே விட்டுடுங்க.." என்றாள்.

கோமண சாமியார் சிரித்தார். அவளின் முன்னால் வாளை நீட்டினார்.

"நான் என் அப்பாவையும் மத்தவங்களையும் பார்க்கணும்.." என்றாள்.

கோமண சாமியார் தன் கையை அசைத்தார்.

கதவை திறக்க வெகுநேரமாக முயற்சி செய்துக் கொண்டிருந்த சதாசிவம் கதவு தானாக திறந்தது கண்டு சிவாவை பார்த்தார்‌.

"சிவா போகலாம் வா.." என்றார்.

சிவா தினேஷை தூர தள்ளிவிட்டு வெளியே ஓடினான்.

நால்வரும் அந்த அறையை விட்டு வெளியே இருந்த கூடத்திற்கு வந்தனர். யாழினி ஒரு பக்கம் அழுதபடி நின்றிருந்தாள். மறுபக்கத்தில் கோமண சாமியார் நின்றிருந்தார்.

"யாழினி.." என்றபடி அவளை நோக்கி ஓடினார் வசந்தன்.

"வராதிங்கப்பா.." அவளை கை காட்டி தடுத்து நிறுத்தியவளை குழப்பத்தோடு பார்த்தனர் அனைவரும்.

"இங்கிருந்து கிளம்பி போங்க.. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கிளம்புங்க.." என்றாள்.

"யாழினி.. நீ.." சிவா என்னவோ சொல்ல வந்தான்.

‌"நான் சொல்ல வருவது உனக்கு புரியலையா.? எல்லாரும் இங்கிருந்து போங்க.. இது எதுவும் உண்மை கிடையாது.. இது எல்லாம் கற்பனை.. எல்லாமே மாயம்.. இது எல்லாமே நிராகரிக்கப்பட்ட ஒரு நிஜத்தின் நிழல்.." என்று கத்தினாள்.

சிவா அவளை குழப்பத்தோடு பார்த்தான்.

"இவங்களை இங்கிருந்து வெளியேற்றுங்க.." கோமண சாமியாரை பார்த்து சொன்னாள் யாழினி.

கோட்டையின் கதவு திறக்கப்பட்டது. "என் மகள் சாந்தவியை தவிர மற்ற மனித பதர்கள் யாரும் இங்கே இருக்க வேண்டாம்.." என்றார் அவர்.

"போங்க இங்கிருந்து.." யாழினி மீண்டும் கத்தினாள்.

வசந்தன் மறுப்போடு தலையசைத்தார்.

"முஸ்தபா சார்‌‌.. சதாசிவம் சார்.. உங்க இரண்டு பேர்கிட்டயும் கெஞ்சி கேட்கிறேன்.. தயவுசெஞ்சி அந்த இரண்டு பேரையும் இங்கிருந்து கூட்டிப் போங்க.. ப்ளீஸ்.." என்றாள்.

வசந்தனால் அவளை புரிந்துக் கொள்ள முடியவில்லை. அவள் அவரின் மகள். எப்படி அவர் அவளை விட்டு செல்வார்.?

அவள் தங்களை காப்பாற்ற முயற்சி செய்கிறாள் என்பது சதாசிவத்திற்கும் முஸ்தபாவிற்கும் புரிந்தது. மற்ற இருவருக்கும் புரிந்திருந்தாலும் கூட அவளை ஆபத்தில் விட்டு செல்ல விரும்பவில்லை அவர்கள்.

திடீரென்று அந்த கோட்டைக்குள் புயல் காற்று சுழன்றது. சதாசிவததையும் மற்ற மூவரையும் அந்த கோட்டையிலிருந்து வெளியே தள்ளியது அந்த கதவு.

சிவாவையும் தன் தந்தையையும் கண்ணீரோடு பார்த்தாள் யாழினி. அவள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அவர்கள் எங்கோ தூரமாக சென்று விழுந்தார்கள். அந்த கோட்டையின் கதவு மூடப்பட்டது‌.

கோமண சாமியார் தன் கையை அசைத்தார். இளவரசர்கள் நால்வரும் இயல்பிற்கு வந்தனர்.

"கொன்னுடு சாந்தவி.." என்றார் கோமண சாமியார்.

அவர் வீசிய கத்தியை கையில் பிடித்தாள் யாழினி.

சென்ற முறையும் இதே இடத்தில் இதே சூழ்நிலையில் நின்றது நினைவுக்கு வந்தது. தந்தையின் உயிர் செல்வதை காண இயலாமல் இளவரசர்கள் நால்வரையும் குத்தி கொன்றாள் அவள். தனக்கு மாலையிட இருந்தவன் கழுத்திலும் கத்தியை பாய்ச்சி அவனையும் கொன்றாள்.

கண்ணீரோடு ரத்தம் வழியும் கத்தியோடு நின்றிருந்தவளின் அருகே வந்தார் கோமண சாமியார். அவளின் கையிலிருந்த கத்தியை பிடுங்கி தூர எறிந்தார். அவர் எறிந்த இடத்தை அதிர்ச்சியோடு பார்த்தாள் அவள். அவளின் தந்தையின் நெஞ்சில் குத்தி நின்றது கத்தி.

"அப்பா.." அழுகையும் கதறலுமாக அவரை நோக்கி ஓட இருந்தவளை பிடித்து நிறுத்தினார் கோமண சாமியார்.

"அவன் உனக்கு தந்தையாக இருக்க தகுதி இல்லாதவன் சாந்தவி.. நானே உன்னை வளர்த்திருந்தால் உன்னை பலி தந்திருக்க மாட்டேன். இவனுக்கு தத்து தந்ததால்தான் உன்னை இழந்தேன். ஆனால் இனி இல்லை.. வா.. நாம் உனது பூந்தோட்ட கோவிலுக்கு செல்லலாம். அந்த இடத்தை உனக்கு மிகவும் பிடிக்கும் என்று எனக்கு தெரியும்.." என்றவர் அவள் அழுவதையும் பொருட்படுத்தாமல் அந்த பூந்தோட்ட கோவிலுக்கு கூட்டிச் சென்றார். அந்த பூந்தோட்டத்தில் இருந்த கோவிலின் மத்தியிலிருந்த படிக்கட்டில் அழுதபடி அமர்ந்திருந்தவள் கடைசி வரை அப்படியேதான் அமர்ந்திருந்தாள், அழுதபடியே.!

கத்தியோடு நிமிர்ந்தாள் யாழினி. "இளவரசர்கள் ஐவரையும் கொன்று விடு சாந்தவி.." என்றார் கோமண சாமியார்.

வலது பக்கம் திறந்த கதவின் வழியே வெளியே வந்தான் தினேஷ். அவனின் அழுகிய உடல் கண்டு கண்ணீர் பெருக்கெடுத்தது யாழினிக்கு. அவனை எந்த அளவிற்கு காதலிக்கிறோம் என்பதை யோசித்தாள்.

"ஐ லவ் யூ தினேஷ்.." என்றாள்.

"அவன் தினேஷ் இல்ல.." என்றபடி தன் அருகே வந்த கோமண சாமியாரை சிரிப்போடு பார்த்தவள் "நீதான் உண்மை இல்ல.. இந்த ஆன்ம கோட்டை உண்மை இல்ல.. இந்த இளவரசர்கள் யாரும் உண்மை இல்ல.!" என்றவள் கத்தியை சுழற்றினாள்.

"ஒன்று நீ இறக்கணும்.. இல்லன்னா நான் இறக்கணும்..‌ இரண்டில் ஒன்னு நடந்தாதான் இதுக்கு முடிவு கிடைக்கும்.." என்ற யாழினி கத்தியை அந்த கோமண சாமியாரின் நெஞ்சில் குத்தினாள்.

இளவரசர்கள் நால்வரும் அதிர்ச்சியோடு அவளை பார்த்தனர்.

"தயவுசெஞ்சி செத்து போ.. இந்த பொய்களிலிருந்தும், உன் கற்பனைகளில் இருந்தும் விடுதலை கொடு.. உன்னை எனக்கு சுத்தமா பிடிக்கல.. மரகதன் என்னை ஒரு முறைதான் கொன்றான்.. ஆனா நீ ஒவ்வொரு ஜென்மத்திலும் என்னை கொல்ற.. உன்னை வெறுக்கறேன் நான்.! நான் நாய்க்குட்டி இல்ல, உன் தடவல் போதும்ன்னு ஜென்மங்களை பழி தர! நான் கூண்டில் அடைத்த பறவையும் இல்ல, நீ தர தானியங்களை மட்டும் உண்டுட்டு திருப்திப் பட்டுக்க!" என்றவள் கத்தியை உருவி அவனின் கழுத்தில் குத்தினாள்.

கோமண சாமியார் குத்துப்பட்டதும் இளவரசர்கள் கொஞ்சம் கொஞ்சமாக மறைய ஆரம்பித்தார்கள்.

"நீ என் தந்தை இல்ல.. என் தந்தையை போல உன்னால் ஒருநாள் கூட இருக்க முடியாது.‌. உன் கோபத்திற்காக ஒரு நாட்டையே அழித்த நீ கற்பனையில் கூட வாழ தகுதியற்றவன்.." என்றவள் மீண்டும் அவரை குத்தினாள்.

"என் பாசம் உனக்கு புரியவில்லையா சாந்தவி.?" தன் ஆன்மாவை காற்றில் கரைத்தபடி கேட்டார் கோமண சாமியார்.

"பாசம் அளவுக்கு அதிகமானால் அதுவும் ஆபத்தே என்பதை இன்றுதான் புரிந்துக் கொண்டேன் தந்தையே.! உங்களின் பாசத்திற்கு தகுதியானவள் இல்லை நான்.. தயவுசெய்து எங்கள் அனைவரையும் விட்டு சென்று விடுங்கள்.. மீண்டும் எந்த ஜென்மத்திலும் எங்களை தேடி வராதீர்கள்.." என்றாள்.

"என் உயிரே நீதான் சாந்தவி!"

அவரின் ஆன்மா முழுதாய் காற்றில் கரைந்தது. இளவரசர்கள் நால்வரும் அந்த இடத்தில் இல்லை. மிஞ்யிருந்த ஆன்மாக்கள் வௌவால் போல கத்திக் கொண்டே அந்த இடத்திலிருந்து மறைந்தன. அந்த பிரேத கோட்டை முழுதாய் இடிந்து விழுந்தது. யாழினி அந்த இடிபாடுகளின் இடையே சிக்கி மயங்கி விழுந்தாள்.

பளிச்சென்று கண்களை கூசியது வெயில். படக்கென்று எழுந்து அமர்ந்தான் சிவா‌. இமைகளை தேய்த்து விட்டுக் கொண்டவன் "கோட்டைக்குள்ள இருந்து எப்படி வெளியே வந்தோம்.?" என்றான்.

தரையில் மண்டியிட்டிருந்த முஸ்தபா தடுமாறி எழுந்து நின்றார். சுற்றும் முற்றும் பார்த்தார். அவர்கள் இருந்தது அடர்ந்த வனம். வானூயர்ந்த மரங்கள். பறவைகளின் கீச்சிடல் சத்தங்களோடு அழகாய் இருந்தது அந்த வனம்.

"எங்கே இருக்கோம் நாம.?" சதாசிவம் குழப்பத்தோடு கேட்டார்.

"பிரேத மலை.." என்றார் முஸ்தபா.

மற்றவர்கள் குழப்பத்தோடு அவரை பார்த்தனர்.

"தினேஷின் பிணம் அங்கே இருக்கு.." என்றார் அவர் கையை நீட்டி.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN