என்னைத் துரத்தும் உன் நினைவுகள்... 4

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
நினைவுகள்: 4

அறையில் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்த யாழினியைப் பிறகு வந்து எழுப்பிய சந்தியா “யாழினி எழுந்து குளித்துவிட்டு நீங்க ரெண்டு பேரும் பக்கத்தில் இருக்கிற கோவிலுக்குப் போய்ட்டு உன் வீட்டிலிருந்து வர்றதுக்குள்ள வந்திடுங்க” என்று சொல்லவும்

அதன்படியே கிளம்பி நந்துவோடு பைக்கில் செல்ல, கோவிலுக்குள் நுழைந்ததிலிருந்து கணவன் ஏதாவது பேசுவானோ இல்லை கொடுத்த வாக்கைக் காப்பாற்றாமல் இப்படி ஏமாற்றிட்டியே என்று திட்டுவானோ என்று அவன் வார்த்தைக்காக அவள் காத்திருக்க அவனோ புருவங்கள் இரண்டும் நெறிய நெற்றியின் மத்தியில் யோசனை முடிச்சுடன் வலம் வந்து கொண்டிருந்தான்.

யாழினிக்கு அவனைப் பார்க்கும் போதே தெரிந்தது கணவனின் உடல் தான் இங்கிருக்கு. ஆனால் சிந்தனை எல்லாம் வேறு எங்கோ உள்ளது என்று. இப்படியே பிரகாரம் சுற்றி ஒரு இடத்தில் இருவரும் அமர பின் “கிளம்பலாம்” என்று அவன் சொல்லிய படி எழுந்து அவன் வெளியே செல்ல

இவளோ நிச்சயம் வீட்டுக்குப் போய் ஏதோ இருக்கு என்று யோசித்தவள் ‘அப்பா பெருமாளே! நீ தான் பா என்னைக் காப்பாற்றணும். எந்த பிரச்சனையும் இல்லாமல் இருந்தால் நான் அவருக்கு இன்னொரு மொட்டை போடுறேன் பா’ என்ற வேண்டுதலுடன் கிளம்பிச் சென்றாள் யாழினி.

இவர்கள் வீட்டுக்கு வர, இவர்களுக்கு முன்பே அங்கு வந்திருந்தார்கள் யாழினி வீட்டார். அதுவும் இரண்டு லாரி முழுக்க சீர்வரிசையுடன். இதையெல்லாம் வண்டியை நிறுத்தும் போதே பார்த்தவன் இது வேறயா என்று வண்டியைப் பூட்டிக் கொண்டே மனைவியை ஒரு உஷ்ணப் பார்வை பார்க்க சட்டென உள்ளே சென்று விட்டாள் அவள். உள்ளே வந்த நந்து எந்த கோபதாபமும் இல்லாமல் மனைவி வீட்டாரை வரவேற்றவன் யாழியின் அப்பாவிடம் “இதெல்லாம் எதற்கு மாமா?” என்று கேட்க

“என்ன மாப்பிள்ளை? இப்படி கேட்டுடிங்க! எனக்கு எதுவும் வேண்டாம் எது செய்தாலும் உங்க பொண்ணுக்கு செஞ்சுடுங்கனு சொல்லிட்டாலும் இதெல்லாம் முறை தானே? கல்யாணம் கோயிலில் நடந்ததாலே அங்கே இந்த பொருட்ளை எல்லாம் வைக்க முடியல.. அதான் இங்கே கொண்டு வந்தோம்” என்று அவர் சொல்ல,

‘ஆமா.. அப்போ இந்த கல்யாணம் நின்று போய்டும் என்ற நம்பிக்கையில் அப்படி சொன்னேன். இப்படி உங்க பொண்ணு என் கழுத்தை அறுப்பானு எனக்கு எப்படி தெரியும்?’ என்று மனதிற்குள்ளே கேள்வி கேட்டவன் கூடவே அங்கிருந்த டிவி, ஃபிரிட்ஜ் என்று சகலத்தையும் பார்க்க பார்க்கத் தான் இந்த குந்தாணியிடம் தோற்று நிற்பது உள்ளங்கை நெல்லிக்கனியாய் தெரிய உள்ளுக்குள் எரிமலை வெடித்தாலும்

“மாமா! இதெல்லாம் இங்கு வைக்கக் கூட இடமில்லை. அதுவுமில்லாம என் மனைவிக்கு எது வேண்டுமென்றாலும் நான் வாங்கித் தருவேன். நீங்க எல்லாத்தையும் திரும்ப எடுத்துட்டுப் போய்டுங்க” என்று தன்மையாகவே சொல்ல, பதிலுக்கு அவர் ஏதோ சொல்ல வருவதற்குள்

“ஏன் டா கூறு கெட்ட என் பேரான்டி! நீ உன் மனைவிக்கு எல்லாம் வாங்கித் தருவேடா.. யாரு வேண்டாம் சொன்னது? இங்கே இருக்கிறவளுங்களோ இல்லை நாளைக்கு இந்த வீட்டுக்கு வரப் போறவளுங்களோ ஏன் இந்த தெருவுல இருக்களுவங்களோ உன் பொண்டாட்டிய வெறும் கையோட வந்தவனு நாக்குல பல்லு போட்டு பேசக் கூடாதுடா” என்று நிதர்சனத்தை உரக்கச் சொல்லிய பாட்டி, கூடவே

“இங்கே இடம் இல்லைனா என்ன? இப்போ நாம் இதை எல்லாம் புழங்கப் போறமா என்ன? அதனாலே எல்லாத்தையும் எடுத்துட்டுப் போய் உன் அத்தை சுந்தரி வீட்டில் வைப்போம். அங்கே வீடு சும்மா தானே இருக்கு? இடமும் நெறைய இருக்கு. இதைப் பற்றி பிறகு யோசிக்கலாம்” என்று அவர் வீட்டுக்குப் பெரியவராய் யோசனை சொல்ல, அங்கிருந்த அனைவருக்குமே அதுவே சரி என்று பட்டது.

அனைவரும் உள்ளே பேசிக் கொண்டிருக்க, தன் மொபைலுக்கு கால் வரவோ ராம்பிரகாஷ் வெளியே வந்து பேசிக் கொண்டிருந்த நேரம் அவன் மேல் காக்கா எச்சம் பண்ணி விட காரில் உள்ள தண்ணீர் பாட்டில் எடுத்து சுத்தம் செய்ய நினைத்தவன் அதில் தண்ணீர் இல்லை என்றதும் வீட்டின் பின் கட்டிற்குச் செல்ல பக்கவாட்டில் வழி இருக்கவும் அதன் வழியே சென்றவன் அங்கிருந்த கிணற்றைப் பார்த்து தண்ணீர் எப்படி எடுப்பது என்று தெரியாமல் திணறியபடி

அங்கிருந்த இலைகளைப் பறித்து அவன் தோளில் உள்ளதை சுத்தம் செய்து கொண்டிருந்த நேரம் அங்கு வந்த விஜி இவனைப் பார்த்தவள் அவனே ஏதாவது கேட்கட்டும் என்று ஒரு வினாடி நிற்க அவள் தனக்காக நிற்பதைப் பார்த்தும் ராம் தன் வேலையை செய்து கொண்டிருக்கவும் பின் ஒரு தலை சிலுப்பளுடன் உள்ளே சென்றவள் தம்பி விஜயனிடம் சொல்லி அனுப்ப உடனே பின் கட்டுக்கு வந்து ராமுக்கு உதவி செய்தான் அவன்.

விஜயலஷ்மியும் விஜயனும் இரட்டையர்கள். விஜிக்கு அடுத்து விஜயன் பிறந்து அவளுக்கு தம்பியாகிவிட்டான். மற்றபடி இருவருக்கும் ஒரே வயதுதான். மற்றபடி இருவருக்கும் ஒரே வயதுதான். விஜி சி.ஏ படித்துக் கொண்டிருக்கிறாள். விஜயனுக்கு ஜர்னலிசம் மீது ஆர்வம். அதில் யு.ஜி முடித்தவன் தற்போது அதே துறையில் வேலை பார்த்துக்கொண்டே பி.ஜியும் படித்து வருகிறான். இதுவே இவர்களைப் பற்றிய அறிமுகம்.


சிறிது நேரத்தில் சாரங்கன் குடும்பமும் வந்து விட அங்கு பொழுது இனிமையாவே கழிந்தது. அனைவருக்கும் இரவு உணவுக்கு நந்து வீட்டில் ஏற்பாடு செய்திருக்க, விருந்து முடிந்ததும் தங்கள் வீட்டு குலவிளக்கிடம் ஆயிரம் புத்திமதி சொன்னவர்கள் மனமே இல்லாமல் யாழினியின் அண்ணன்கள் கிளம்ப பாரிவேந்தருக்கு மட்டும் இரவு ஒன்பது ஆகியும் கிளம்ப மனதே இல்லை. தந்தையாயிற்றே! சாப்பிட்டு முடித்ததிலிருந்து மகள் கையைப் பிடித்த படி உட்கார்ந்திருந்தார் அவர்.

அவளுக்கும் உள்ளுக்குள் ஏதோ செய்ய தந்தையையே ஒட்டிக் கொண்டு அமர்ந்திருந்தாள் அவள். ஆனால் முகத்தில் எதையும் காட்டிக் கொள்ளவில்லை இருவரும். அலமேலுக்கு தான் இன்று இரவு நடக்க வேண்டிய சடங்கு ஞாபகம் வரவும் பின்கட்டிற்கு வழி கேட்டு மகளை அழைத்தவர் இருவரும் பின் கட்டு வந்ததும்

“ஏன் டி இனி உன்னைப் பார்க்காம எப்படி இருக்கிறதுனு உங்க அப்பா சோர்ந்து போய் உட்கார்ந்திருக்கார். இந்த எலி பொந்துல நீ எப்படி இருப்பேனு நான் கவலைப் பட்டுகிட்டு இருக்கேன். நீ என்னமோ இந்த வீடு எனக்கு பழக்கம் தான் என்ற மாதிரி நடமாடிட்டு சர்வசாதாரணமா உட்கார்ந்து இருக்க. நாங்க கிளம்பும்போதாவது கண்ணைக் கசக்கிட்டு இருடி” என்று அவர் எதை எதையோ மனதில் வைத்துப் பொரிந்து தள்ள

“அம்மா! இனி நான் உங்களை எல்லாம் பார்க்க முடியாதேனு எனக்கும் கவலை இருக்கு. யாரு இல்லைனு சொன்னா? ஆனா அதை எல்லாம் விட இது என் வீடு என்றது தான் அதிகமா இருக்கு. சின்ன வயசுல இவங்க வீட்டுல தானேமா நான் எப்போதும் இருப்பேன்.. எத்தனை நாள் இரவு இவங்க கூடவே தூங்கி இருக்கேன்? அப்பா தானே தூக்கத்துல இருக்கும் என்னைத் தூக்கிட்டு வந்து நம்ப வீட்டுல படுக்க வைப்பார்..

அப்பறம் எப்படிமா இது எனக்குப் புது வீடாகும்? எலி பொந்து என்ன மண் புழு வாழற சிறு பொந்தேனாலும் இது என் வீடு. அதே மாதிரி நான் நானா எப்போதும் இருக்கேன். அப்படியே கடைசி வரை இருக்கேன். சும்மா கண்ணைக் கசக்கு அப்படி இரு இப்படி இருனு இனி எனக்குப் பாடம் எடுக்காதே” என்று யாழினி தன் உணர்வை மறையாது சற்றே அதட்டிச் சொல்ல.

“அம்மாடியோ அம்மா! நீ இந்த பேச்சுப் பேச உன் புருஷன் என்ன தான்டி உனக்குப் பண்ணிட்டான்?” என்று அவர் நொடிக்க

“அம்மா.. இனி அவர் உன் மாப்பிள்ளை! ஏதோ சின்ன வயசுல பார்த்த நந்துனு நினைச்சிட்டு அவன் இவன்னு இனி பேசாதே” என்று இவள் தாய்க்கே கட்டளையிட

“எல்லாம் என் நேரம் டி.. இவ்வளவும் உன் அண்ணனுங்க உனக்குக் கொடுக்கிற இடம் டி…” மேற்கொண்டு என்ன பேசி இருப்பாரோ? அதற்குள் அவர் கணவர் “அலமேலு!” என்றழைக்க “ஒஸ்தானன்டி..” என்ற சொல்லுடன் விலகிச் சென்றார் அவர்.

பிறகு யாழினி தாய் தந்தையர் கிளம்ப தயாராக மகளைச் சற்று நேரம் தன் தோள் சாய்த்து அணைத்துப் பிடித்து நின்றார் பாரிவேந்தர். அதுவே அவர்கள் இருவருக்குள்ளும் அழுகையாலும் வார்த்தையாலும் சொல்ல வேண்டியவைகளைச் சொல்லிக் கொண்டது. பிறகு நந்து தான் பல தைரியம் சொல்லி அவருக்குத் தேற்றி அனுப்பினான்.

நந்துவின் ஓட்டு வீட்டில் சிறிய இரண்டு படுக்கை அறைகளையும் ஒரு ஹாலும் ஏதோ இரண்டு பேர் புழங்கக் கூடிய சமையல் அறையில் ஒரு ஷெல்ஃபில் பூஜைக்கென இடம் ஒதுக்கப் பட்டிருந்தது. பின்புறம் சற்று தள்ளிப் போனால் சிறிய தோட்டத்தில் கிணறு மற்றும் தனித் தனியே பாத்ரூம் வசதிகளும் கூடவே அக்கம் பக்கத்தில் இவர்கள் மாதிரியே ஓட்டு வீடுகளும் நிறைந்து இருந்தன.

ஆந்திராவிலிருந்து வந்தது முதல் இந்த வீட்டில் தான் குடியிருக்கிறார் பச்சையப்பன். அப்போது அவர் பிள்ளைகளைத் தவிர அம்மா அப்பா தங்கை சுந்தரி என்று யாரும் இல்லாததால் இந்த வீடு கொஞ்சம் வசதியாகவே இருந்தது. ஆனால் இப்போதோ எல்லோரும் வந்து சேர்ந்து விட பிள்ளைகளுக்கும் கல்யாணமாகி விட இட நெருக்கடி வந்து விட்டது.

அவர் எப்போதோ வளசரவாக்கத்தில் வாங்கிப் போட்ட இடத்தைப் பிள்ளைகள் வேலைக்குப் போக ஆரம்பித்த பிறகு கட்ட கை வைத்தவர்கள் ஏதோ சிறுகச் சிறுக நான்கு வருடமாகக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். கீழ் மேல் என தன் பெண் பிள்ளைகளுக்கும் சேர்த்து மூன்று படுக்கை அறையுடன் கூடிய வீட்டை இவர் கட்டி வர முழுமையாக வேலை முடிய இன்னும் ஐந்து மாதம் இருக்கும் நேரத்தில் நந்துவுக்கு ட்ரீட்மெண்ட் என வர மகனை நினைத்தே அடுத்து காந்திமதியும் வீல் சேரில் அமர்ந்து விட அதற்கே செலவுகள் ஆகி இன்று வீடு அப்படியே நிற்கிறது.

இன்று இரவு நந்துவுக்கும் யாழினிக்கும் சடங்கு என்பதால் சுந்தரி அவள் மகள் மற்றும் விஜி என்று சுந்திரி வீட்டுக்குப் படுக்கப் போக கூட ஆண் துணைக்காக விஜயனும் சென்று விட்டான். சுந்தரி வீடு எப்போதும் பூட்டியே தான் இருக்கும். கணவன் இறந்த பிறகு அவள் எப்போதும் அண்ணன் வீட்டிலேயே இருக்க ஆரம்பித்திருந்தாள்.

ஈஸ்வரியையும் காந்திமதியையும் எப்போதும் பார்த்துக் கொள்ள அவள் மாமியார் அவருடைய மருத்துவ மனைமயிலிருந்து ஒரு செவிலியரை இங்கு அனுப்பி இருந்தார். இரவு சந்தியா தான் யாழினிக்கு சிறியதாக அலங்காரம் செய்தவள் அவளை நந்து இருந்த அறைக்கு அனுப்ப

என்ன தான் புயல் வீசும் என்று தெரிந்து முன்னெச்சரிக்கை என்ற பெயரில் அதற்கான நடவடிக்கைகளை யாழினியின் இதயம் எடுத்திருந்தாலும் புயலுக்கு முன் அமைதி என்பது போல் காலையிலிருந்து கணவனின் அமைதியைப் பார்த்து இருந்தவளுக்கு எங்கே தான் உள்ளே சென்றதும் அங்கிருக்கும் ஆழிக் காற்று தன்னை சின்னாபின்னமாக ஆக்கிவிடுமோ என்று ஒரு வினாடி தயங்கியவள்

பிறகு எது நடந்தாலும் சமாளிப்போம் என்று அவளுக்கு அவளே திடத்தைக் கொடுத்துக் கொள்ள ஏன் கல்யாணத்தை நிறுத்தலைனு கேட்டா என்ன பதில் சொல்றது என்று பலவாறு சிந்தித்துக் கொண்டே தங்கள் அறைக்குள் வந்திருந்தாள் யாழினி. கட்டிலில் அமர்ந்த படி அவள் வருகையைப் பார்த்தவனோ

“வாடி என் மாமா பெத்த மைனாவே!” என்று எள்ளலுடன் அழைக்கவும்

யாழினிக்கு கைகள் உதற ஆரம்பித்தது. கையிலிருந்த பால் சொம்பையும் அதன் மேல் உள்ள டம்ளரையும் இறுக்கிப் பிடித்த படி கதவுக்குத் தாழ்ப்பாள் போட்டவள் ‘எனக்கு என்ன அவரைப் பார்த்தா பயமா? அப்படி எல்லாம் இல்லை, ஏதோ குற்றயுணர்ச்சி அவ்வளவு தான்..’ என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டவள் கணவனை நிமிர்ந்தும் பார்க்காமல் அடி மேல் அடி வைத்து அவனை நெருங்கி பால் சொம்பை அங்கிருந்த டேபிளில் வைத்து விட்டு அவன் பாதம் தொட நினைக்க

“யூ ராஸ்கல்!..” என்ற சொல்லைத் தன் கடித்த பற்களுக்கிடையில் துப்பிய படி அங்கு சொம்பிலிருந்த பாலை சளார் என்று மனைவியின் முகத்தில் ஊற்றியிருந்தான் நந்தா.

அவள் விக்கித்து நின்ற நேரம் அவள் வலது கையின் புஜத்தை இறுக்கப் பற்றியவனோ ”என்ன நம்ப வைத்து ஏமாற்றினதும் இல்லாம எவ்வளவு பெரிய கேடி வேலை எல்லாம் நீ செய்து இருக்கடி!
இப்படி எல்லாம் செய்திட்டு எந்த குற்றவுணர்வும் இல்லாம என்னமா உன் அண்ணன்ங்ககிட்டேயும் என் அக்கா அண்ணி என்று எல்லார்கிட்டயும் சிரிச்சிப் பேசுற.. கூடவே என்னை சீண்டிப் பார்க்கிற. ஏன்டி என்ன பார்த்தா உனக்கு இளிச்ச வாயா தெரியறனா டி?” என்று உறுமியபடி மனைவியை அவன் கட்டில் பக்கம் தள்ளி விடவும், அதன் மேல் போய் விழுந்தவள் அப்படியே கட்டிலில் ஏறி கால்களைக் கட்டிக் கொண்டு அமர்ந்துவிட
அவளைப் பார்த்தவனுக்கு இன்னும் வெறி ஏறியது. “என்னடி மகாராணி! ஒய்யாரம மேலே உட்கார்ந்திட்ட.. அடச்சீ! இறங்கு டி” என்று அவன் அவள் கையைப் பிடித்து இழுக்க கொஞ்சம் தடுமாறியவள் அப்படியே கணவன் மேலேயே விழுந்து விட்டாள்.

இப்போது அவள் முகத்திலிருந்து கழுத்து வரை இறங்கிய பால் எல்லாம் நந்துவின் சட்டையில் ஒட்டிக் கொண்டது. அதற்கும் அவளை உதறியவன் அவள் எதற்கும் வாய் திறக்காமல் இருக்கவும்,
“ஏன் டி ஊமை மாதிரி இருந்து நடிக்கிற? இது உன் குணம் இல்லைனு எனக்குத் தெரியும்டி. சொல்லு எதுக்கு நான் கேட்டதற்கு கல்யாணத்தை நிறுத்துறனு சொல்லிட்டுப் பிறகு என்னை ஏமாற்றின? அதுவும் இன்றைக்குக் காலையில் கூட எனக்கு வாட்ஸ் அப்ல மெசேஜ் செய்த நான் இந்த கல்யாணத்தை நிறுத்திடுவேனு. அவ்வளவு நம்பிக்கையா இருந்தேனே உன் பேச்சைக் கேட்டு..
கடைசியில் என்னை ஏமாற்றியதும் இல்லாம என் போனில் நீ அனுப்பின மெசேஜ் எல்லாம் சாட்சியாகிடக் கூடாதுனு டெலீட் செய்து எவ்வளவு கிரிமினல் வேலை பார்த்து இருக்க டி! ஏன் அப்படி பண்ண? சொல்லுடி..” என்று நந்து கர்ஜிக்க

அப்பொழுதும் யாழினி அமைதியாக இருக்கவும் “திமிர்! எவ்வளவு கேட்டாலும் இப்படியே நிற்கிறதைப் பாரு.. கீதா! வீணா என்னை டென்ஷன் பண்ணாதே.. வாயைத் திறடி” என்ற ஆயாசத்துடன் அவன் கட்டிலில் அமர்ந்த படி தன் தலையைப் பிடித்துக்கொள்ளவும் உடனே கணவனின் உடல் நிலையை மனதில் கொண்டவள்

“என்னை நிறுத்து நிறுத்துனு சொன்னா நான் எப்படி நிறுத்த முடியும்? உங்களாலேயே உங்க வீட்டில் இருக்கிறங்களை எதிர்த்து எதுவும் செய்ய முடியலை என்னும் போது நான் மட்டும் எப்படி செய்ய முடியும்?

கடைசி நிமிஷம் நான் இப்படி செய்தா அது எங்க வீட்ல உள்ளவங்களுக்கு மட்டும் அசிங்கமாகாதா? நீங்க எப்படி உங்க குடும்பத்துக்காகப் பார்க்கறீங்களோ அதேமாதிரி தானே நானும் என் குடும்பத்தப் பார்ப்பேன்? நீங்களே கொஞ்சம் யோசிச்சிப் பாருங்க” என்று அவள் பதவிசாக எடுத்துரைக்க

“அன்று நீ இப்படி சொல்லலையே? நான் என்ன சொன்னேன்? என் வீட்டில் இருக்கிறவங்க வற்புறுத்தலால் தான் நான் இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சேன்.
அதனால் நீ என்னைப் பிடிக்கலைனு சொல்லி இந்த திருமணத்தை நிறுத்துனு உன்கிட்ட சொன்னனா இல்லையா? அப்போ சரினு தானே சொன்ன?” என்று இவன் அன்றைக்கான பேச்சை நினைவுபடுத்தவும்

அவளால் அவனைப் பிடிக்கவில்லை என்ற வார்த்தையை சும்மா சொல்லுக்காவது சொல்ல முடியுமா என்ன? மீண்டும் அவள் மௌனமாக அழகுப் பதுமையென நிற்கவும்

“இப்போ இப்படி மாற்றி பேசுறியேடி! நாம் சிறு வயதில் போட்ட சின்னச் சின்ன சண்டைக்கு எல்லாம் என் மேலிருந்த கோபம் ஆத்திரம் எல்லாத்தையுமே வஞ்சகமாகப் பழிதீர்க்கணும் என்ற எண்ணத்தில் தான் இப்படி செய்தியா?
ஆனா குந்தாணி, அது சின்ன வயசு டி. அந்த வயதில் நாம் போட்டுகிட்டது எல்லாம் ஒரு சண்டைனு நினைத்து அதுக்காகப் பழி வாங்கிட்டியே.. கூடவே இப்ப உன் வாழ்க்கையை நீயே அழித்துகிட்டேயே!” என்று கணவன் உச்சு கொட்டவும்..

‘இப்போ இவர் என்ன சொல்லவர்றார்?’ என்று கலங்கிய படி அவள் கணவனைப் பார்க்க…

“என்ன பார்க்கிற? நீ என்ன ஏமாற்றியதுக்கு தண்டனை வேண்டாம்?” என்று பூடகமாகக் கேட்க

‘இப்போது நான் ம்… சொல்லனுமா இல்ல ம்ஊம்…. சொல்லணுமா?’ என்று யோசித்தவள் இரண்டு விதமாகவும் தலை அசைத்து வைக்க..
“அதுவும் சாதராண தண்டனை இல்ல. நான் உனக்கு கொடுக்கிற தண்டனையை நீ சாகற வரை அனுபவிக்கணும்..” அவள் கணவனை ஆழ்ந்து பார்க்க

“நான் சொல்லுறதை நல்லா கேட்டுக்கோ.. நீ என் மனைவி தான்! அதற்கான உரிமையும் மரியாதையும் உனக்கு எப்போதும் கிடைக்கும். ஆனா அது வெளி உலகத்துக்குத் தான். ஆனால் நாம் இப்படி நான்கு சுவற்றுக்குள்ளும் வேறு எங்கே இருந்தாலும் அங்கே நீ யாரோ நான் யாரோ தான். நீ எனக்கு செய்த துரோகத்துக்கு என்கிட்டயிருந்து ஒரு கணவனா எந்த பந்த பாசம் உரிமையும் எதுவும் கிடைக்காது. என்ன புரிஞ்சிதா?” என்று நந்து கொஞ்சமும் பிசிர் இல்லாத குரலில் சொல்ல பேந்த பேந்த முழித்தபடி கணவனின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள் நம் நாயகி.
மனைவியிடமிருந்து பதில் இல்லை என்றதும் அவள் முகத்தை உற்றுப் பார்த்தவன் “என்னடி நான் சொன்னதை எல்லாம் கேட்டியா இல்ல நின்னுட்டே தூங்கிட்டியா?” என்று சலிப்புடன் அவன் அதட்ட

அந்த குரலுக்கு சற்றென தெளிந்தவளோ “அப்போ ஒரு வருடம் கழித்து நாம டிவோர்ஸ் எல்லாம் வாங்கிப் பிரிய மாட்டோமா பாவா?” என்று அவளுடைய அதிமுக்கியமான கேள்வியை யாழினி ஆச்சரிய குரலில் கேட்க, அதற்கு ‘நீ என்ன லூசா?’ என்பது போல் மனைவியை ஒரு பார்வை பார்த்தவன்

“என்ன உளர்ற?” என்று கேட்க….
“பின்ன இல்லையா? மனசுக்குப் பிடிக்காதவங்க இரண்டு பேரும் கல்யாணம் பண்ணிகிட்ட பிறகு அவங்களுக்குள்ள போடற கண்டிஷனே, ஒரு வருஷம் தான் நாம கணவன் மனைவி. பிறகு டிவோர்ஸ் வாங்கிட்டுப் பிரிஞ்சிடுவோம்னு தானே பேசிப்பாங்க?
இன்னும் சொல்லப் போனா டிவோர்ஸ் பேப்பரில் சைன் பண்ணப் பிறகு தானே கல்யாணமே நடக்குது!” என்று தான் படித்த பார்த்த கதைகளில் வருவது போல் தன் வாழ்விலும் நடக்கும் என்று அவள் நம்பி இருந்ததற்கு மாறாக கணவன் இப்படி சொல்லவும் தான் கேட்டது சரியோ என்ற எண்ணத்தில் அவள் தன் கேள்விக் கணைகளைத் தொடுக்கவும்.

“அட ச்சீ…. வாய மூடு பேச்சைப் பாரு, நீ எல்லாம் சைக்காலஜில Mphil படிச்சவனு வெளியே சொல்லிடாதே, இதில வேற Phd பண்றாளாம்!” எங்கேயிருந்து அவனுக்கு அவ்வளவு கோபம் வந்ததோ, இன்னும் கோபம் ஏற, “உனக்கு எல்லாம் மூளைக்குப் பதில் களிமண்ணுதான் இருக்குடி” மனம் ஆறாமல் மறுபடியும், “கேட்கிற கேள்வியைப் பார்,” என்றவன், “கல்யாணம் ஆன முதல் நாளே பிரிவு, டிவோர்ஸ்னு உளர்ற இல்ல? எல்லாம் பணத் திமிர்” என்று சகட்டுமேனிக்கு அவளிடம் பொரிந்தவன் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள ஜக்கிலிருந்து தண்ணீரைக் குடிக்க…

கணவனின் செயலைப் பார்த்துக் கொண்டிருந்த யாழினிக்கு ஒன்றும் புரியவில்லை. ‘இப்போ என்ன சொல்லிட்டேனு இவ்வளவு கோபப்டுறாங்க இவங்க?..’ அவளின் சிந்தனையைத் தடை செய்தது அவனின் குரல்.

“இங்கே பார், இப்போ சொல்லுறதை நல்லா கேட்டுக்க, எனக்கும் இந்த திருமணத்தில் விருப்பம் இல்லைதான். ஆனா அதை எனக்காக கோவில் கோவிலா போய், ஒரு குடும்ப வாழ்வு அமையணும்னு வேண்டிக்கிறவங்க கிட்ட சொல்ல முடியாது, சொன்னாலும் அதை தாங்குற சக்தி அவங்களுக்குக் கிடையாது.

அதனால தான் உன் கிட்ட சொல்லி இந்த திருமணத்தை நிறுத்தச் சொன்னேன். கடைசியில் நீ என்ன ஏமாற்றிட்ட! மணமேடை வரை வந்த உன் கழுத்தில் தாலி கட்டாமப் போக, எவ்வளவு நேரம் ஆகி இருக்கும் எனக்கு? ஆனா அது உன்னையும் என்னையும் பெற்றவங்களுக்கு செய்கிற தலை குனிவு. அதனால் தான் அதை செய்யலை. இன்னொன்று, நீ என்னை ஏமாற்றியதற்கு, உனக்கு தான் தண்டனை தரணும். எதுக்கு நம் குடும்பத்தைத் தண்டிக்கணும்? நீ சொன்னபடி டிவோர்ஸ் தந்தால், அது அவங்களுக்கும் தான் தண்டனை. என் வாழ்க்கையில் திருமணம் ஒரு முறை தான்…. அது உன்னோடு தான். அதுக்காக உன்னை மனைவியா மட்டும் ஏற்றுக்குவேன் நினைக்காதே,” என்று தெள்ளத்தெளிவாக தன் நீண்ட வாதத்தை அவன் வைக்க,

‘இப்போ எதற்கு இவ்வளவு பெரிய சொற்பொழிவு?’ என்று மனதிற்குள் புகைந்தவள், ‘இப்போ மட்டும் இவர் இப்படி நடந்துகிறது அவங்களுக்கு தெரிய வந்தா கஷ்டப்பட மாட்டாங்களா?’ என நினைத்தாள். அதேசமயம், ‘அப்பாடா! இனி எப்போதும் பிரிவு இல்லை!’ என்று நிம்மதி அடைய, பாவம்! அவளுக்குத் தெரியாதே… இன்று விளையாட்டாகச் சொன்ன விவாகரத்து என்னும் வார்த்தை நாளை அவள் வாழ்வில் விஸ்வரூபம் எடுக்கும் என்று!
 
Last edited:
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN