காதல் கடன்காரா 21

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
என்ன நடந்தது, என்ன நடக்க இருந்தது என்று புரியவே கார்த்திக்கிற்கு சில நிமிடங்கள் பிடித்தது.

"அம்மா.." செங்கல் விழுந்த காலை பற்றியபடி கத்தினாள் அபிராமி.

கார்த்திக் எழுந்து அமர்ந்தான். அவளின் காலை பார்த்தான். காயம் பட்டு ரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது.

"அபிராமி வா ஹாஸ்பிட்டல் போகலாம்.." அவளை எழுப்பி நிறுத்தினான் கார்த்திக்.

அபிராமி அவன் மீது சாய்ந்து நின்றாள். "ரொம்ப வலிக்குது கார்த்தி.." என்றாள் அழுகையோடு.

அவளின் வலியை அவனும் உணர்ந்தான்.

"கொஞ்சம் பொறுத்துக்கோ அபிராமி.." என்றவன் அவளை அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான்.

மருத்துவமனையில் மருத்துவர் அவளின் காலுக்கு கட்டிடும் வரை இவனும் பரபரப்போடு இருந்தான்.

"இனி பிரச்சனை இல்ல.." என்றார் மருத்துவர்.

அபிராமியை அழைத்துக் கொண்டு வெளியே வந்த கார்த்திக் "சாரி.." என்றான்.

அபிராமி அவனை தலை முதல் கால் வரை பார்த்தாள். "உனக்கொன்னும் ஆகலதானே.?" என்றாள்.

"எதுவும் ஆகல அபிராமி.." என்றவன் அவளை வீட்டிற்கு அழைத்து வந்தான்.

யமுனாவிற்கு வருத்தமாக இருந்தது. "நமக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்குது.?" என்றாள்.

"செங்கல் கீழே விழுந்தபோது உயிரே போயிடுச்சி அத்தை.. கார்த்திக்கு ஏதாவது ஆகியிருந்தா என்னால தாங்கிட்டே இருந்திருக்க முடியாது.." என்றாள்.

அவளால் அடுத்த சில நாட்களுக்கு நடக்க முடியவில்லை.

"வீட்டு வேலையெல்லாம் அத்தையே தனியா செய்றாங்க.." என்று படுக்கையில் இருந்தபடி சொன்னாள் அபிராமி.

"உனக்கும் கால் இப்படி இருக்கே.. அம்மா தனியா சமாளிச்சிப்பாங்க.." என்றவனிடம் "அதுதான் காசு இருக்கு இல்ல.. வீட்டுக்கு ஒரு வேலைக்காரியாவது வைக்கலாம் இல்ல.?" என்றாள்.

கார்த்திக் யோசித்து பார்த்தான். காடும், வயலும் அசையாத சொத்தாக அப்படியே இருந்தது. தன் உயிருள்ள வரை அவற்றை விற்க மாட்டேன் என்று சொல்லிவிட்டார் முருகன்.

கையில் பிரித்து தந்த பணத்தையும் நகையையும் வைத்துதான் வீட்டை கட்டிக் கொண்டிருந்தார்கள். இருக்கும் சம்பள பணத்தில் ஒரு வேலைக்காரி வைப்பது ஒன்றும் பெரியதாக தெரியவில்லை. ஆனால் சில நாட்களுக்கு எதற்காக என்று யோசித்தான்.

"ப்ளீஸ் கார்த்தி.. அத்தை தனியா வேலை செய்வதை பார்க்கும்போது ரொம்ப கில்டி பீலிங்கா இருக்கு.." என்றாள்.

"சரி.." என்றான் அவன்.

மறுநாளே வேலைக்கார பெண் ஒருத்தி வீட்டிற்கு வந்தாள். யமுனாவிற்கு இப்போதுதான் நிம்மதியாக இருந்தது.

ஒரு வாரம் ஓடியது.

"அந்த பொண்ணு பார்வையே சரியில்லை.." என்று வேலைக்கார பெண்ணை பற்றி கார்த்தியிடம் குறை சொன்னாள் அபிராமி.

கார்த்திக்கிற்கு அப்படி ஒன்றும் தெரியவில்லை. சிறு வயது பெண்தான். அபிராமியை விடவும் சின்னவள். கார்த்திக்கிடமும் மூர்த்தியிடமும் அதிகம் கவனமெடுத்து பேசினாள்தான். ஆனால் அதில் தவறு இருக்கும் என்று நினைக்கவில்லை அவன்.

"அந்த பொண்ணு உன்னையே பார்க்கறா கார்த்திக்.." என்றாள் அடுத்து வந்த சில நாட்களுக்கு பிறகு.

"உனக்கு பிடிக்கலன்னா அவளை நிறுத்திடலாம்.." என்றான் அவன்.

வேண்டாமென தலையசைத்தவள் "அத்தை பாவம்.." என்றாள். இன்னமும் நொண்டிக் கொண்டிருந்தாள் அவள்.

"வேற ஆளை வச்சிக்கலாமா.?" என்றதற்கும் வேண்டாமென்றாள்.

"விடு இருந்துட்டு போகட்டும்.. ஒரு அப்பாவி பொண்ணோட வயிறை வாட வச்ச பாவம் நமக்கு எதுக்கு.?" என்றாள்.

வீட்டு வேலை முழுதாக முடிந்தது.

வெள்ளிக்கிழமையில் புதுமணை புகு விழா நடத்தலாம் என்று முடிவு செய்தார்கள்.

அழைப்பிதழ் அடித்து அனைவருக்கும் தந்தார்கள்.

"அவங்க வீட்டுக்கும் பத்திரிக்கை வச்சிட்டு வா அண்ணா.." என்றாள் புவனா.

கார்த்திக் அபிராமியை அழைத்துக் கொண்டு சென்றான். தயக்கத்தோடு முத்தமிழின் வீட்டு படி ஏறினான்.

அபிராமி வாசலிலேயே சில நிமிடங்கள் நின்றாள். பெரும் பெரும் மூச்சுகளை விட்டுவிட்டு உள்ளே சென்றாள்.

டைனிங் டேபிளை சுத்தம் செய்துக் கொண்டிருந்தாள் அம்மா. முன்னால் வந்த கார்த்திக்கை பார்க்காதவள் பின்னால் வந்த மகளைதான் முதலில் பார்த்தாள்.

"அபிராமி.." என்று ஓடி வந்தாள். இளைத்து போன உடல், கருவளையம் சூழ்ந்த கண்கள்.. பொலிவிழந்த கண்களுமாக இருந்த அம்மாவை கவலையோடு பார்த்தாள் அபிராமி.

"அப்பாவும் தாத்தாவும் எங்கேயோ வெளியே போயிருக்காங்க‌.. இரு நான் போன் பண்றேன்.." என்றவள் போன் இருந்த இடம் நோக்கி ஓடினாள்.

"இல்ல நாங்க உடனே போகணும்.." என்றாள் அபிராமி.

அம்மா அதிர்ச்சியோடு அவளை பார்த்தாள். "அப்பாவையும் தாத்தாவையும் பார்க்க வேணாமா அபிராமி.?" என்றாள்.

"நிறைய இடங்களுக்கு பத்திரிக்கை தர வேண்டி இருக்கு.." என்றவள் கார்த்திக்கின் கையிலிருந்த பத்திரிக்கை ஒன்றை வாங்கி அம்மாவின் கையில் தந்தாள்.

"வெள்ளிக்கிழமை புது வீடு பால் காச்சுறோம்.. வந்துடுங்க.." என்றவள் கார்த்திக்கை இழுத்துக் கொண்டு வெளியே வந்தாள்.

கார்த்திக் அவளை அதிர்ச்சியோடும் குழப்பத்தோடும் பார்த்தான்.

"என்ன ஆச்சி அபிராமி.?" என்றான் மற்றொரு வீட்டுக்கு பத்திரிக்கை தந்து விட்டு வந்த பிறகு.

அபிராமி கோபத்தோடு அவனை பார்த்தாள். "உனக்கு சூடு சொரணையே இல்லையா.? அவங்க உன்னை வரவேற்க கூட இல்ல.? மருமகன் முதல் முறையா வீட்டுக்கு வந்திருக்க.. எப்படியெல்லாம் உன்னை வரவேற்கணும்.!" என்றவளின் கோப முகத்தை பற்றி நிமிர்த்தியவன் "எதுக்கு இவ்வளவு கோபம்? ரொம்ப நாள் கழிச்சி மகளை பார்த்ததால என்னை கண்டுக்கல.. விடு இதெல்லாம் பெரிய விசயமா.?" என்றான்.

அவனின் கையை தட்டி விட்டாள்.

"என் புருசன்னா கெத்தா இருக்கணும்.. எல்லாரும் மரியாதை தரணும்! என் வீட்டு ஆளுங்களா இருந்தாலும் எனக்கு கவலை இல்ல.. எனக்கு உன் மரியாதை மட்டும்தான் முக்கியம்.." என்றாள்.

கார்த்திக் அவளின் நெற்றியோடு தன் நெற்றியை முட்டிக் கொண்டான். "ஐ லவ் யூ.." என்றான்.

அபிராமி அவன் கழுத்தில் தன் கைகளை கோர்த்தாள். "நானும்.." என்றாள்.

அழைப்பிதழ்களை தந்துவிட்டு இருவரும் வீட்டிற்கு வந்து சேர்ந்தபோது மாலையாகி விட்டது.

"இன்னும் நாலு நாள்ல நம்ம வீட்டுல நம்ம ரூம்ல இருக்க போறோம் நாம.." என்றான் கார்த்திக் கட்டிலில் படுத்த வண்ணம்.

அபிராமி ஆமென தலையசைத்தபடி அவனின் நெஞ்சில் தலை வைத்து படுத்தாள்.

"நமக்குன்னு ப்ரைவஸி இருக்கும்.. நிறைய நேரம் இருக்கும்.. இரண்டு பேரும் கொஞ்சிக்கிட்டே இருக்கலாம்.." என்று சொன்னபடி அவனின் உதடுகளை வருடினாள்.

"ஆமா.. இரண்டு பெண் குழந்தைகளை பெத்துக்கலாம். அப்புறம் ஒரு பையன் கூட பெத்துக்கலாம்.. ஜாலியா இருக்கலாம்.." என்றான் அவன்.

'பெண் குழந்தையா.?' என நினைத்தவளுக்கு சிரிப்பு வர இருந்தது.

"இல்ல எனக்கு இரண்டு பையன்‌.. ஒரு பொண்ணுதான் வேணும்‌‌.." என்றாள்.

சின்ன தீண்டல்களிலும் பெரிய பூகம்பம் உணர்ந்தான் கார்த்திக். அவளின் சிறு கொஞ்சல்களில் தன்னை தொலைத்தான். அவளின் பார்வையும் மொழியும் அவனுக்கு சுவாச காற்று போல மாறி போனது.

மறுநாள் கிரக பிரவேசம். மூர்த்தி சோகத்தோடு வீட்டிற்கு வந்தான்.

"என்னை வேற மாவட்டத்துக்கு மாத்திட்டாங்க.." என்றான்.

வீட்டில் இருந்த அனைவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது.

"ஏன்டா.?" என்றாள் அம்மா.

"ஏன்னு தெரியலம்மா.. நார்மல் டிரான்ஸ்பர் போலதான் இருக்கு.."

"இங்கேயே இருந்தா தினம் வீட்டுக்கு வந்து போய்ட்டு வேளா வேளைக்கு சாப்பிட்டுட்டு இருந்திருக்கலாம். புது ஊர்ல எப்படி தனியா சமாளிப்ப.?" கவலையோடு கேட்டாள் அம்மா.

அபிராமிக்கு மூர்த்தியை நினைத்து கவலையில்லை. அவன் எங்கிருந்தாலும் பிழைத்துக் கொள்வான். ஒற்றை வேளை பசி தீர்க்க அரை கரண்டி மாவை ஊற்றி தோசை கூட சுட தெரியாத கார்த்தி மாதிரி உள்ளோர்தான் தனி ஊருக்கு சென்றால் கவலைப்பட வேண்டும் என்று நினைத்தாள் இவள்.

"பொண்ணு பார்க்கலாமா‌.? பொண்டாட்டியை துணைக்கு கூட்டி போவ.." என்றாள் புவனா.

வேண்டாமென தலையசைத்தான் மூர்த்தி.

"கொஞ்ச நாள் போகட்டும் இருங்க.. நான் என்ன குழந்தையா தனி ஊருக்கு போனா தொலைஞ்சி போக? பத்திரமா இருப்பேன்.. உங்க எல்லாருக்கும் தினம் போன் பண்றேன்.." என்றான்.

"புது வீடு கட்டி அதுல நல்லா நாலு தங்காம வெளியூர் போகணுமா.?" புலம்பலை நிறுத்தவேயில்லை யமுனா.

மூர்த்திக்கே சலிப்பாகி விட்டது. "வீடு ஓடியா போக போகுது‌.? லீவ்க்கு வந்தா தங்க போறேன்.. மறுபடியும் இங்கேயே மாத்தினாலும் தங்க போறேன்.. அப்புறம் என்ன உங்களுக்கு பிரச்சனை.?" என்றான்.

அடுத்த நாள் யாகங்களோடும் பூசைகளோடும் புது வீட்டிற்குள் குடி புகுந்தனர் கார்த்திக்கின் குடும்பத்தினர்.

சபையில் சொந்தங்கள் நிறைந்தது. முருகனுக்கு சந்தோசமாக இருந்தது‌. தன்னாலும் இவ்வளவு பெரிய வீட்டை கட்ட முடியும் என்று நினைக்கவே இல்லை அவர். அபிராமி வந்த பிறகு தன் வீட்டில்தான் எத்தனை மாற்றங்கள் என்று மருமகளை நினைத்து பூரித்தார்.

பிற்பகல் வேளையில் சொந்தங்கள் முக்கால்வாசி சென்ற நேரத்தில் அவர்களின் வீட்டிற்கு வந்தான் முத்தமிழ்.

"உங்க அண்ணா வந்திருக்காரு.?" என்று வந்து அபிராமியிடம் தகவல் சொன்னாள் புவனா. அப்போது அபிராமி கிச்சனில் தனியாக இருந்தாள்.

நின்ற இடத்திலிருந்து எட்டிப் பார்த்தாள் அபிராமி. "கலா.. சொந்தக்காரங்க வந்திருக்காங்க பாரு.. கூப்பிட்டு சாப்பாடு கொடு.." என்றாள்.

புவனாவிற்கு அவள் மீது கோபமாக வந்தது. "உன் அண்ணன் முதல் முறையா நம்ம வீட்டிற்கு வந்துருக்காரு.. உன்னால அவரை வரவேற்க கூட முடியாதா.?" என்றாள்.

அபிராமி கோபத்தோடு அவளை பார்த்தாள். "உனக்கு என்ன தெரியும்.? என் புருசனை அடிச்சிருக்கான் அவன்.. நான் எப்படி கூப்பிட்டு கொஞ்ச முடியும்.?" என்றாள்.

புவனா ஆத்திரத்தோடு அவளை பார்த்தாள். "இவ்வளவு சீப்பா இருக்காதே.! உன் அண்ணன் உன்னை எவ்வளவு மிஸ் பண்றாரு தெரியுமா.? எத்தனை நாள் எங்கேயெல்லாம் நின்னு உன்னை பார்த்துட்டு போயிருக்காரு தெரியுமா.?" என்றவள் அவளே முத்தமிழை வரவேற்க கிளம்பினாள்.

கிச்சனின் வெளி சுவரோரம் நாற்காலியில் அமர்ந்தபடி அபிராமி சொன்னதை கேட்டுக் கொண்டிருந்த கார்த்திக் எழுந்தான். மனைவியின் அருகே வந்து அவளின் தோளை பற்றினான்.

"என்ன ஆச்சி.? கர்வமோ.? அன்னைக்கு உங்க அண்ணனை பார்த்து பேசிட்டு வந்ததுக்கே அப்படி அழுத.. ஆனா இப்ப அவனை கண்டுக்க மாட்டேங்கிற..!" என்றான்.

அபிராமி அவனை விலக்கி தள்ளினாள்.

"அன்னைக்கு கொஞ்ச நஞ்சம் பாசம் இருந்தது. இல்லன்னு சொல்லல.. ஆனா என்னைக்கு நீ இல்லாம என்னால வாழ முடியாதுங்கற சூழ்நிலை வந்ததோ அப்போதிருந்தே உன்னை வெறுத்து பார்க்கறவங்களை நானும் வெறுக்கிறேன் கார்த்திக்.. அன்னைக்கு ஒருவேளை உனக்கு ஏதாவது ஆகியிருந்தா என்ன ஆகியிருக்கும்ன்னு நினைச்சாலே உடம்பெல்லாம் பதறுது.. லவ் யூ கார்த்திக்.." என்றவளின் விழிகள் கலங்கியது.

"எனக்கு என்னவோ ஆயிடுச்சி கார்த்திக்.. ரொம்ப டீப்பா விழுந்துட்டேன்.. உன்னை ஒரு காலத்துல வெறுத்தேன்னு கூட என்னாலயே நம்ப முடியல.. உன்னை விட்டுட்டு ஒரு செகண்ட் பிரிஞ்சி இருக்க கூட கஷ்டமாக இருக்கு.. என்னை பார்த்தா உனக்கு பைத்தியக்காரி மாதிரி இருக்கும்.. ஆனா நான் என்ன செய்யட்டும்.? தினம் தினம் உன் மேல இருக்கற லவ் ரொம்ப அதிகமாகுது.‌ உன்னை நினைக்காம ஒரு செகண்ட் கூட இருக்க முடியல. உன்னை எதிரியா பார்க்கறது என் அண்ணனாவே இருந்தாலும் என்னால அவனை ஏத்துக்க முடியாது கார்த்திக்.‌." என்றாள் கண்ணீரோடு.

கார்த்திக் அவளை அதிர்ச்சியோடு பார்த்தான். எப்படி இருந்தவளை எப்படி மாற்றி விட்டோம் என்று நினைக்கையில் அவனுக்கே குற்ற உணர்வாக இருந்தது.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN