காதல் கடன்காரா 22

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
புவனா ஓடிச் சென்று முத்தமிழை வரவேற்றாள்.

"வாங்க.." என்றாள். முத்தமிழின் கண்கள் அபிராமியை தேடியது. விரைவில் வருவேன் என்று சொன்னவள் எப்போது வருவாள் என்று கவலையோடு யோசித்தான்.

"அ..‌அண்ணி வேலையா உள்ளே இருக்காங்க.. நீங்க வாங்க சாப்பிடுவிங்க.." என்ற புவனாவை அவன் கண்டுக் கொள்ளவே இல்லை.

"வாங்க தம்பி.." என்று அழைத்தார் முருகன்.

"கார்த்திக் செஞ்சது எதையும் மனசுல வச்சிக்காதிங்க தம்பி.. அவன் முன்னை மாதிரி இல்ல.. அபிராமி மேல உயிரா இருக்கான்.." என்றாள் யமுனா.

புன்னகைத்தான் முத்தமிழ். "வீட்டுல கொஞ்சம் வேலை.. அதனாலதான் நான் மட்டும் வந்தேன்.." என்றவன் "மொய் எங்கே எழுதுறாங்க.?" என்றான்.

"மொய்யெல்லாம் எதுக்கு தம்பி.? வாங்க சாப்பிடுவிங்க.." என்ற முருகன் அவனை அழைத்துக் கொண்டு நடந்தார்.

அவன் தன்னை வேண்டுமென்றே நிராகரிப்பதாக புவனாவிற்கு தோன்றியது. மனது வலித்தது. ஒருதலைக் காதல் இப்படிதான் வலிக்கும் என்று அறிந்திருந்தால் அவள் முதலிலேயே காதலிக்காமல் இருந்திருப்பாள்.

அபிராமியின் தாடை பற்றி நிமிர்த்தினான் கார்த்திக்.

"நீ ரொம்ப மாறிட்ட மாதிரி இருக்கு அபிராமி.. நீ உன் அண்ணன் மேல வச்சிருந்த பாசம்தான் என்னை ஸ்லிப்பாக வச்சது.. ஆனா நீ அவனையே வெறுக்கற இன்னைக்கு.." என்றான் குழப்பத்தோடு.

"என் அண்ணன் மேல இன்னைக்கும் பாசம் இருக்கு கார்த்தி.. ஆனா உன் மேல உயிரே இருக்கு. பாசக்காரன் என் உயிரை காயப்படுத்துவதை விரும்பல நான்.." என்றாள்.

அவளை தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டவன் "விடு.. அதெல்லாம் ஏதோ ஒரு கோபத்துல பண்ணதுதானே.. அதுவும் உன் மேல இருக்கற பாசத்துலதானே அப்படி செஞ்சான்.?" என்றான்.

அபிராமி சிறிது நேரம் யோசித்தாள். "சரி. என்னை விடு.. நான் போய் அவனை அழைக்கிறேன்.." என்று தள்ளி நின்றாள்.

கார்த்திக் அவளை தன் அணைப்பிலிருந்து விடுவித்தான். இரண்டடி நடந்த அபிராமி அவனை திரும்பி பார்த்தாள். "உனக்காகதான் அவன்கிட்ட பேச போறேன்.." என்று விட்டு நடந்தாள்.

கார்த்திக் இடம் வலமாக தலையசைத்தான். "இவ அவங்க அண்ணன் மேல வச்ச பாசத்தை பார்த்து ஒரு காலத்துல பொறாமையா இருந்தது. ஆனா இன்னைக்கு கொஞ்சம் பரவால்ல.." என்றவன் அடுப்பின் மீதி சூடு ஆறிப் போயிருந்த பாலை டம்ளரில் ஊற்றி குடித்தான்.

அபிராமி ஹாலுக்கு வந்தபோது அங்கிருந்த உறவினர்களுக்கு இடையே அமர்ந்து உணவு உண்டுக் கொண்டிருந்தான் முத்தமிழ். தங்கையை எதிர்பார்த்து காத்திருந்தவன் இவள் வந்ததும் புன்னகைத்தான். இயல்பான புன்னகை.

இவளால்தான் பழைய புன்னகையை தர முடியவில்லை. பத்து நிமிடங்கள் கடந்தது. உணவை முடித்துக் கொண்டு எழுந்து வந்தான் முத்தமிழ்.

"புது வீடு குடி வந்திருக்க.. சீர் என்ன வேணும்ன்னு சொல்லு.. வாங்கிட்டு வரேன்.." என்றான் தங்கையிடம்.

கொஞ்சம் தொலைவில் நின்றுக் கொண்டிருந்த கார்த்திக்கை ஓரக்கண்ணால் பார்த்த அபிராமி அண்ணன் புறம் திரும்பி "இந்த வீட்டுல நாங்க சீர், வரதட்சனை எதுவும் வாங்கிக்கறது இல்ல‌‌.. எங்க உழைப்புல மட்டும்தான் நாங்க வாழ்வோம்.." என்றாள்.

முத்தமிழின் முகம் வாடி விட்டது. "அ.. சரி.. நான் கிளம்பறேன்.." என்றவன் அங்கிருந்து வெளியே நடந்தான்.

"தம்பி இருங்க.." எங்கிருந்தோ வந்தபடி அழைத்தாள் யமுனா.

"இன்னொரு நாளைக்கு வரேன்ங்க.." என்றுவிட்டு சென்றான் அவன்.

அபிராமியை முறைத்தாள் புவனா.

சொந்தங்கள் அனைவரும் வந்து சென்றுவிட்ட பிறகு இரவு வேளையில் அந்த வீட்டில் இருந்த அனைவரும் ஒன்றாய் சேர்ந்து கூடத்தில் அமர்ந்திருந்தனர்.

"நம்ம வீடு.." என்றான் கார்த்திக் வீட்டின் கூரையை பார்த்தபடி.

"ஆமா.." என்ற மூர்த்தி வயிற்றை தடவினான். "இப்பதான் சாப்பிட்டேன்.. ஆனா லேசா பசிக்கற மாதிரியே இருக்கு.." என்றான்.

"மீதியான ரவா லட்டு இருக்கும்ன்னு நினைக்கிறேன்.. இருங்க எடுத்து வரேன்.." என்றபடி எழுந்து கிச்சனுக்கு நடந்தாள் அபிராமி.

புவனாவும் எழுந்தாள். "தண்ணி தாகம்.." என்றபடி அபிராமியின் பின்னால் நடந்தாள்.

அபிராமி செல்பில் இருந்த ரவா லட்டு பாக்ஸை எடுத்தாள். அவளருகே நின்று தண்ணீரை குடித்து முடித்த புவனா "இந்த அளவுக்கு ஹெட் வெயிட் வேணாம் சரியா.?" என்றாள்.

அபிராமி அவளை திரும்பி பார்த்தாள். "என்னையா.?" என்றாள் சந்தேகத்தோடு.

"ஆமா.. பொண்டாட்டி வந்த உடனே பெத்தவங்களை மறந்துடுற எத்தனையோ ஆண்களை பார்த்திருக்கேன்.. ஆனா புருசனை கண்டதும் பெத்தவங்களையும், கூட பிறந்தவனையும் மறந்தவ நீயாதான் இருப்ப.!" என்றாள் எரிச்சலோடு.

அபிராமி‌ லட்டு பாக்ஸை வைத்துவிட்டு அவளை திரும்பி பார்த்தாள். "உன் வேலையை மட்டும்.." நினைத்ததை அவள் சொல்லி முடிக்கும் முன்பே கார்த்திக் கிச்சனை நோக்கி வருவது பார்வையில் தெரிந்தது.

"என் மேலதான் தப்புன்னு சொல்றியா நீ.?" என்றாள் ஆடு ஒன்று வந்து தானாய் மாட்டியதே என்ற எண்ணத்தோடு.

புவனா கைகளை கட்டியபடி அவளை பார்த்தாள். "ஆமா.. நீ ஒரு செல்பிஷ். புருசன் வந்ததும் முழுசா பிறந்த வீட்டை மறந்துட்ட.. உண்மை ஒன்னை நேர்மையா சொல்லட்டா.. வெறும் மஞ்ச கொம்புல மஞ்ச கயிறு கோர்த்து விருப்பம் இல்லாதபோது நடந்த கல்யாணத்துக்கே இவ்வளவு ஓவரா பண்ற நீ.. இன்னும் என் அண்ணன் உன்னை நல்லமுறையில் காதலிச்சி கல்யாணம் பண்ணியிருந்தா உன் பிறந்த வீட்டாரை சும்மா கூட நினைச்சி பார்த்திருக்க மாட்ட.. இதை விடவும் நேர்மையா இன்னொன்னும் கூட சொல்றேன் கேளு.. உங்களுக்கு நடுவுல இருப்பதை லவ்வுன்னு நினைச்சி நம்பிட்டு இருக்கிங்க இரண்டு பேரும்.. ஆனா இது வெறும் லஸ்ட்தான்.. அவன் பாடியை பார்த்து உனக்கும் உன் அழகை பார்த்து அவனுக்கும் ஜஸ்ட் லஸ்ட்.." என்று அவள் சொல்லி முடித்த நேரத்தில் பளீரென்று அறை ஒன்று அபிராமியின் கன்னத்தில் விழுந்தது. புவனா இரண்டடி தள்ளி போய் விழுந்திருந்தாள்.

கார்த்திக் மனைவியை முறைத்தான். புவனாவைதான் அறைய முயன்றிருந்தான் அவன். அபிராமி குறுக்கே புகுந்து அவளை தள்ளிவிட்டு அந்த அறையை இவள் வாங்கிக் கொண்டாள்.

"நீ ஏன் குறுக்கே வந்த.?" என்று மனைவியை கேட்டவன் தங்கையின் பக்கம் திரும்பினான்.

புவனா அவனை நேர் பார்வை பார்த்து நின்றாள். ஆனாலும் பயத்தில் அவளின் கைகள் நடுங்கியதை அபிராமி கவனித்தாள். 'அச்சோ பாவம்.. ஆனா வாய் ஓவர்தான்..' என நினைத்தாள்.

"எங்களோட பர்சனலை பத்தி நீ எதுக்கு பேசுற.?" ஆத்திரத்தோடு கேட்டான் கார்த்திக். கண்கள் இரண்டும் சிவந்து போயிருந்தது அவனுக்கு. அவன் கத்திய கத்தலில் புவனா துள்ளி விழுந்தாள். கூடத்தில் அமர்ந்திருந்தவர்களும் ஓடி வந்தனர்.

"ஏன்டா கத்துற.?" என்றாள் அம்மா.

"உன் பொண்ணை கேளு.. என்னவா புத்தி வளர்த்து வச்சிருக்கா.. ச்சே.! உன்னை என் தங்கச்சின்னு நினைக்க கூட கேவலமா இருக்கு எனக்கு.." என்று எரிந்து விழுந்தான்.

அருகே வந்து தங்கையை அணைத்துக் கொண்டான் மூர்த்தி. அவளின் கண்கள் கலங்கி போயிருந்தது. கோபமும் அச்சமும் அவளுக்கு நடுக்கத்தை தந்திருந்தன. மூர்த்திக்கு ஒன்றும் புரியவில்லை. "என்ன ஆச்சி.?" என்றான் இவளிடம்.

"அவனுக்கு பைத்தியம் பிடிச்சிருக்குண்ணா.. நான் அண்ணியோட.." அவள் சொல்லும் முன் குறுக்கே புகுந்தான் கார்த்திக்.

"அண்ணின்னு சொன்னா வாயை உடைச்சிடுவேன் பார்த்துக்க.. நீ என்ன இவளை அண்ணி மாதிரி நினைச்சா பேசின.?" என்று கர்ஜித்தான்‌. அவனின் கர்ஜனையில் அம்மாவும் கூட பயந்து போனாள்.

"நல்ல நாளும் அதுவுமா ஏன்டா இப்படி சண்டை போட்டுக்கிறிங்க.?" அப்பா கவலையோடு கேட்டார்.

கன்னத்தை பிடித்தபடி நின்றிருந்த அபிராமி "பிரச்சனை வேண்டாம் கார்த்தி.. விடு.! தப்பு என் மேலதான்.. என் அண்ணனை நான்தான் சரியா ட்ரீட் பண்ணாம போயிட்டேன்.." என்றாள் கண்ணீரோடு.

மற்ற மூவருக்கும் என்ன பிரச்சனை என்றே புரியவில்லை.

கார்த்திக் அபிராமியின் அருகே வந்தான். அவளின் கைப்பிடித்து இழுத்துக் கொண்டு வெளியே நடந்தான்.

அம்மா புவனாவை பார்த்தாள். "என்னடி ஆச்சி.?" என்றாள்.

புவனாவிற்கு தான் அபிராமியிடம் கேட்டது தவறோ என்று தோன்றியது. முத்தமிழ் மீதுள்ள ஒருதலைக் காதலில் அவனுக்கு சரியான மரியாதை கிடைக்கவில்லை என்று நாம்தான் அதிகபடியாக பேசி விட்டோமோ என்றிருந்தது‌. தயங்கி தயங்கி பயத்தோடு நடந்ததை சொன்னாள். அவள் எதிர்பார்த்தது போலவே அனைவருமே அவளை முறைத்தனர்.

"உனக்கு எதுக்கு அவங்க வாழ்க்கையை பத்தியெல்லாம்.? உன் அண்ணனை நீயே கேவலமா பேசலாமா.? நீயாவது அவனை மாதிரி இல்லாம நல்ல பொண்ணா இருப்பன்னு நினைச்சேன்.. நீ அவனை விடவும் மோசமா பண்ற.." மன வருத்தத்தோடு சொல்லியபடி அங்கிருந்து சென்றார் அப்பா.

"அவ நம்ம வீட்டை நம்பி வந்தவடி.! நீயே அவளுக்கு மரியாதை தரலன்னா அவ மனசு எப்படி வேதனை படும்ன்னு நினைச்சி பாரு.. இனியாவது இப்படி பேசி வைக்காத.!" என்றுவிட்டு சென்றாள் அம்மா.

நீ ஒருத்தன்தான் பாக்கி என்பது போல மூர்த்தியை பார்த்தாள் புவனா. அவன் அவளின் தோளில் இருந்த கையை விலக்கினான்.

"ரொம்ப நாளாக மனசுல இருந்தது.. இன்னைக்கு நீ கேட்டிருக்க.." என்றான் சிரிப்போடு. புவனா ஆச்சரியத்தோடு அவனை பார்த்தாள். தங்கை தான் செய்ததை தவறு என்று உணர்ந்து விட்டாள் என்று அவனுக்கும் தெரியும். ஆனால் சொன்னதை நினைத்து அவள் அதிகம் வருத்தப்பட கூடாது என்றே இப்படி சொன்னான்.

"அவங்க இரண்டு பேரையும் பார்த்தியா.. எப்ப பார்த்தாலும் கொஞ்சிக்கிட்டே இருக்காங்க.. இதே வீட்டுல இரண்டு பேச்சுலர்ஸ் இருக்காங்களே.. அவங்களுக்கு மரியாதை தரலாம்ன்னு நினைக்கிறாங்களா.?" என்றான் சிரிப்போடு.

புவனா தன்னை மறந்து சிரித்தாள். அவளை அழைத்துக் கொண்டு வெளியே வந்தான் மூர்த்தி. அவளின் கண்களை துடைத்து விட்டான்.

"உனக்கு உன் அண்ணனை திட்டணும்ன்னா அவனை தனியா கூப்பிட்டு அவனை மட்டும் திட்டு.! அதுக்கு உனக்கு முழு உரிமையும் இருக்கு.. பொண்டாட்டியை திட்டினா எல்லா புருசங்களுக்கும் கோபம் வரும்.. அதிலேயும் இதுங்க ரொம்ப நாளாக எலி பூனையா இருந்து ஒன்னு சேர்ந்ததுங்க.. அதனால அவனுக்கு ரொம்பவே கூட கோபம் வரும்.." என்றான்.

புவனா புரிந்ததாக தலையசைத்தாள். ஆனால் இனி அவள் அவனை தனியாக அழைத்து சும்மாவாக கூட பேச மாட்டாள் என்று அவளுக்கே தெரியும்.

அபிராமி வாடி போன முகத்தோடு கட்டிலின் ஒரு ஓரத்தில் அமர்ந்திருந்தாள். அவளின் நெஞ்சில் இருந்த மஞ்சள் கயிறு கார்த்திக்கிற்கு உறுத்தலாக இருந்தது.

அபிராமி எச்சில் விழுங்கியபடி அவனை நிமிர்ந்து பார்த்தாள். "நீயும் இது லவ் இல்ல லஸ்ட்ன்னு சொல்றியா.?" என்றாள்.

கார்த்திக் கோபத்தோடு முறைத்தான் அவளை. "அவ சின்ன பொண்ணு.. என்னவோ உளறிட்டா.." என்றவனிடம் மறுப்பாக தலையசைத்தவள் "அவளை விடு.. இப்ப நீ சொல்லு.. நான் உன்னை லவ் பண்றதா நினைக்கிறியா.? இல்ல லஸ்டுக்காக உன்னோடு வாழ்வதா நினைக்கிறியா.?" என்றாள்.

"அபிராமி.. ஏன் இப்படி கேட்கற.? உன் லவ்வை முழுசா நம்புறேன் நான்.. உன் லவ்வை பத்தி எனக்கு நல்லா தெரியும்.. ஐ டிரஸ்ட் யூ.." என்றான்.

அபிராமி கண்களை துடைத்துக் கொண்டாள். "அப்படியே இதையும் சொல்லு.. நீ என்னை லவ் பண்றியா.? இல்ல உன் தேவைக்காக என்னை உன்னோடு வச்சிருக்கியா.?" என்றாள்.

கார்த்திக் பற்களை கடித்தான். "இன்னொரு முறை இப்படி கேட்டா உன்னை கொன்னுடுவேன்.. ஐ லவ் யூடி.. உன் கழுத்துல விருப்பம் இல்லாம தாலி கட்டிட்டேனேன்னு தினம் தினம் வருத்தப்பட்டுட்டு இருக்கேன்‌.. மறுபடியும் இறந்த காலத்துக்கு போனா ரோஜா பூ தந்து உன்னை சுத்தி சுத்தி வந்து உன்னை லவ் பண்ணுவேன்.. அவ்வளவு பிடிச்சிருக்கு உன்னை.." என்றான்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW

கமெண்டெல்லாம் பார்த்து பதமா டைப் பண்ணுங்க.. ஆன்டி ஹீரோயின் வெர்சனுக்கு இன்னும் கொஞ்சம் தூரம் இருக்கு...
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN