குறிப்பேடு 24

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
சதாசிவம் முஸ்தபா கை காட்டிய திசையில் ஓடினார். தினேஷின் அழுகிய உடல் தரையில் கிடந்தது.

"ஜோம்பியா இருந்தவன் இப்ப உண்மையிலேயே பிணமாகிட்டான்னு நினைக்கிறேன் சார்.." என்றார் முஸ்தபா‌.

சிவாவிற்கு நண்பனின் இறந்த உடலை கண்டு மனம் வேதனை கொண்டது. தொண்டை அடைத்தது அவனுக்கு. அழுகை வரும்போல இருந்தது. மண்டியிட்டு அமர்ந்தான். தினேஷின் உடலிலிருந்து வரும் நாற்றத்தையும் பொருட்படுத்தாமல் அவனின் தோளில் கை வைத்து உலுக்கினான்.

"உன்னை பிடிச்ச பிசாசு போயிடுச்சி தினேஷ்.. இனி நீ நிம்மதியா இருக்கலாம்.." என்றான்.

சுற்றும் முற்றும் பார்த்தார் சதாசிவம். "இந்த இடம் பிரேத மலை.. ஆனா அந்த பிரேத கோட்டை எங்கே.?" என்றார்.

"அது இருந்த இடம்.." என்றபடி சுற்றிலும் பார்த்த முஸ்தபா "நாம நடுக்காட்டுல இருக்கோம் சார்.. பிரேத கோட்டையை பார்க்கணும்ன்னா நாம இன்னும் அரை கிலோமீட்டர் நடக்கணும்.. இந்த வழியில.." என்று ஒற்றையடி பாதை ஒன்றை கை காட்டினார்.

சதாசிவத்திற்கும் பின்னால் நின்றுக் கொண்டிருந்த வசந்தன் முஸ்தபா கை காட்டியதும் அந்த பாதையில் வேகமாக நடந்தார்.

"அங்கிள் நில்லுங்க.." சிவா அவரை அழைத்தான்.

"என் பொண்ணு அங்கே இருக்கா சிவா.." என்றவர் வேகமாக ஓட ஆரம்பித்தார்.

"குண்டும் குழியுமான பாதை சார்.." என்று எச்சரித்தார் முஸ்தபா. ஆனால் அவர் காதில் கூட வாங்கவில்லை.

சிவா காவலர்கள் இருவரையும் பார்த்தான். "யாழினி கோட்டைக்குள்ள இருக்கா சார்.. தினேஷ் பாடி வேற இங்கே இருக்கு‌‌.. என்ன சார் பண்றது.?" என்றான்.

அவனுக்கும் யாழினியை தேடி ஓட வேண்டும் என்றிருந்தது. நண்பனின் பிணத்தை அனாதையாக விட்டு செல்லவும் மனம் வரவில்லை.

"நாம தூக்கிட்டு போகலாம் சார்.. இங்கேயே இருந்தா நரியோ நாயோ வந்து இழுத்துட்டு போயிடும்.." என்ற முஸ்தபா சுற்றும் முற்றும் பார்த்து விட்டு ஒரு மரத்தின் அருகே ஓடினார்.

அந்த மரத்தின் பச்சை பட்டையை நீளம் நீளமாக உரித்து எடுத்துக் கொண்டு வந்தார். தினேஷின் உடலை சுற்றி அதை கட்டினார். இரண்டு பக்கமும் கையில் பிடிக்கும்படி அதே பட்டையாலேயே கட்டினார்.

"தூக்கிட்டு போகலாம் சார்.. நாத்தம்தான் நாறும்.." என்றார் அவர்.

சிவா அந்த பட்டையின் ஒரு பகுதியை தூக்க சென்றான்.

"இல்ல சிவா நான் பார்த்துக்கறேன்.." என்ற சதாசிவமே அதை தூக்கினார்.

முஸ்தபாவும் சதாசிவமும் தினேஷின் உடலை தூக்கிக் கொண்டு நடந்தனர். "நான் முன்னாடி போறேன் சார்.." என்றுவிட்டு ஓடினான் சிவா.

அவனுக்கு மனம் இங்கே நிற்கவேயில்லை. 'யாழினி.. யாழினி..' என்று புலம்பியபடியே ஓடினான்.

சதாசிவத்தை யோசனையோடு பார்த்தார் முஸ்தபா. "இது கட்டுக்கதை இல்லன்னு இப்போதாவது நம்பிட்டிங்களா சார்.?" என்றார்.

சதாசிவத்திற்கு உடல் சிலிர்த்தது. தன்னை ஒரு மன்னராக நினைத்து பெருமைப்பட்டுக் கொண்ட அதே நேரத்தில் ஐந்து கொடூரர்களை பெற்று விட்டதை நினைத்து வருத்தப்பட்டார்.

நிகழ் காலத்தில் அவருக்கு திருமணமாகி பதினைந்து வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால் இன்னும் குழந்தை இல்லை. அன்றைய பாவம்தான் இன்று தன்னை பிடித்துக் கொண்டதோ என்று வருத்தத்தோடு எண்ணினார் அவர்.

"நீங்க என்ன நினைக்கிறிங்கன்னு தெரியல சார்.. ஆனா நான் இதை இப்ப கட்டுக்கதையில் ஒன்னாதான் நம்புறேன்.." என்ற முஸ்தபாவை அதிர்ச்சியோடு திரும்பி பார்த்தார் அவர்.

"யாரோ ஒருத்தர் ஆரம்பிச்ச கட்டுக்கதை இதுக்கு முன்னாடி வாழ்ந்த பல மக்களோட எண்ணங்களில் வாழ்ந்து உறுதிப்படுத்திக்கிட்டு இன்னைக்கு நம்ம பார்வைக்கும் தெரிஞ்சிருக்கு.." என்றார்.

"அட போயா நீ..! ஆரம்பத்துல நீயேதான் இதை உண்மைன்னு சொன்ன.. இப்ப கட்டுக்கதைன்னு சொல்ற.. முதல்ல நீ கரெக்டா பேசுய்யா.." என்றார்.

முஸ்தபா சிரித்தார். "இப்பவும் நம்ம நம்பிக்கைதான் சார்.. அது உண்மைன்னு நினைச்சா உண்மை. கட்டுக்கதைன்னு நினைச்சா கட்டுக்கதை.." என்றார்.

சதாசிவம் பற்களை கடித்தார். முஸ்தபாவை முறைத்தார்.

"லூசு மாதிரி உளறாம வாயா.." என்றவர் வேகமாக அடியெடுத்து வைத்து நடந்தார்.

வசந்தன் பறவைகளின் இறந்த உடல் இருந்த மரத்தின் கீழ் வந்து நின்றார். அங்கேதான் அந்த கோட்டையை பார்த்ததாக நினைவுகள் சொன்னது.

சுற்றும் முற்றும் தேடி பார்த்தார். கோட்டையை காணவில்லை. இரவில்தான் கோட்டை தெரியுமா என்று எண்ணி பயந்து போனார்‌.

"யாழினி.. அம்மு.." மகளை அழைத்தபடி அந்த இடத்திலேயே சுற்றி சுற்றி வந்து தேடினார்.

மரங்களையும் புற்களையும் மண்ணையும் கல்லையும் தவிர அங்கே வேறு எதுவும் இல்லை.

தலையை பிடித்தபடி தரையில் அமர்ந்தார். "யாழினி.." என்றவருக்கு அழுகை வந்தது.

மகள் இனி வரவே மாட்டாளா.. அந்த கோட்டைக்குள்ளேயே சிக்கிக் கொள்வாளா என நினைத்து உள்ளம் வெம்பினார். முழு தவறும் தன் மேல்தான் என்று நினைத்து தன்னையே திட்டிக் கொண்டார். நெற்றியில் அடித்துக் கொண்டார்.

"யாழினி வந்துடு ப்ளீஸ்.. இனி உன் விருப்பத்துக்கு எந்த தடையும் செய்ய மாட்டேன்.." என்றார் கண்ணீரோடு.

ஏதோ ஓசை கேட்டது. கண்ணீர் குளமாக நின்றுக் கொண்டிருந்த கண்களால் நிமிர்ந்து பார்த்தார். சிவா தூரத்திலிருந்து ஓடி வந்துக் கொண்டிருந்தான்.

"யாழினி.." என்றபடி வந்தவன் சுற்றும் முற்றும் பார்த்தான். வசந்தன் தரையில் சோகமாய் அமர்ந்திருப்பதை கண்டவனுக்கு மனம் உடைந்து போனது.

கோட்டை இருந்த திசையை பார்த்தான். வெற்றிடமாக இருந்தது. நம்பிக்கை இல்லாமல் அந்த இடத்திற்கு சென்று நடுவில் நின்று பார்த்தான். கண்களை மூடி திறந்தான். அப்போதும் கோட்டையோ யாழினியோ பார்வைக்கு தென்படவில்லை.

"யாழினி.." என்றவனுக்கு அடுத்த நட்பையும் இழந்து விட்டது நினைத்து அழுகை வந்தது.

திடீரென்று அந்த வனத்தின் தரை ஆடியது. பூகம்பம் வருவது போல குலுங்கியது. சிவா பயந்துப் போய் நின்றான். மின்னல் போல என்னவோ பளீரென்று மின்னியது. சிவாவிற்கும் வசந்தனுக்கும் கண்களே குருடானது போல இருந்தது.

இருவரும் கண்களை மூடிக் கொண்டனர். சில நொடிகளுக்கு பிறகு கண்களை திறந்த சிவா கண்கள் இப்போதும் கூசுவதை உணர்ந்து கண்களை தேய்த்து விட்டுக் கொண்டான். மீண்டும் அவன் பார்த்தபோது அவனிடமிருந்து இருபதடி தள்ளி இருந்த மணல் மேட்டில் யாழினி மயங்கி கிடந்தாள்.

"யாழினி.." கத்திக்கொண்டே அவளருகே ஓடினான். தட்டு தடுமாறி எழுந்த வசந்தன் மகள் இருந்த இடத்திற்கு ஓடினார்.

யாழினியின் அருகே மண்டியிட்ட சிவா அவளின் தோளை பற்றி உலுக்கினான். அவள் கண் விழிக்கவில்லை. பயந்துப்போய் அவளின் மணிக்கட்டை சோதித்தான். நாடி துடித்துக் கொண்டிருந்தது. நெஞ்சில் நிம்மதி பரவ தரையில் தலையை முட்டினான்.

வசந்தன் ஓடி வந்து மகளின் தலையை தூக்கி தன் மடி மீது வைத்துக் கொண்டார். மகளின் கன்னத்தில் தட்டினார். சீராக மூச்சு விட்டுக் கொண்டிருந்தாள் யாழினி. அதை கண்ட பிறகே அவருக்கு உயிர் வந்தது போலிருந்தது. நிம்மதி பெருமூச்சி விட்டபடி மகளை கைகளில் தூக்கினார்.

அந்த வனத்தை விட்டு செல்லும் பாதையில் நடந்தார். சிவா எழுந்து அவர் பின்னால் ஓடினான். அந்த வனத்தை தாண்டுகையில் கடைசியாக ஒருதரம் திரும்பி பார்த்தான். பிரேத மலையை அவனுக்கு துளியும் பிடிக்கவில்லை.

யாழினி கண்களை திறந்தாள். கூரை வெள்ளை நிறத்தில் இருந்தது. பார்வையை திருப்பினாள். வசந்தன் நாற்காலி ஒன்றில் அமர்ந்திருந்தார். அவரின் பார்வை ஜன்னலுக்கு வெளியே இருந்தது.

யாழினி எழுந்து அமர முயன்றாள்.

"படுத்துக்கோ யாழினி.." என்றான் மறுபக்கத்தில் அமர்ந்திருந்த சிவா.

வசந்தன் மகளை திரும்பி பார்த்தார். "உனக்கு ஓகேவா.?" என்றார்.

"ம்.." என்றபடி எழுந்து அமர்ந்தாள்.

மகளின் தலையை வருடி விட்டார் அவர். "நேத்து மதியத்துல இருந்து மயக்கத்துல இருக்க.. ரொம்ப பயந்துட்டேன் யாழினி.." என்றார் கவலை நிரம்பிய குரலில்.

யாழினி தன் கைவிரல்களை பார்த்தார்.

"நா.. நான் அந்த சாமியாரை கொன்னு அவருக்கு முடிவு கட்டிட்டேன்ப்பா.." என்றாள்.

வசந்தன் அவளை அதிர்ச்சியோடு பார்த்தார்.

"நீ கொன்னது தப்பு இல்ல யாழினி.. அந்த ஆள் ஒரு உயிர் போனதுக்கு பழி வாங்குறேன்னு மொத்த நாட்டையே அழிச்சிருக்கான்.." என்றான் சிவா.

ஆமென தலையசைத்த யாழினி "அது மட்டுமில்ல.. இதே போலதான் ஒவ்வொரு முறையும் நடந்திருக்கு‌‌.. சில வருசங்களுக்கு ஒருமுறை இதே போல இந்த அரண்மனை கதவு ஓபன் ஆகியிருக்கு. ஒவ்வொரு முறையும் என்னை அந்த கோட்டைக்குள்ள சிறை பிடிச்சிருக்கான் அந்த பைத்தியக்காரன். என் கையால இளவரசர்கள் சாகறதை பார்க்கணும்ன்னு அவனுக்கு ஆசை. அதுக்காகவே என்னை ஒவ்வொரு முறையும் வாழ விடாம பண்ணி இருக்கான். இனி அவனால என்னை பிடிக்க முடியாது.." என்றவளை குழப்பத்தோடு பார்த்தான் சிவா.

அவனின் பார்வை புரிந்தவள் தன் உள்ளுணர்வு தனக்கு புரிய வைத்த அனைத்தையும் அவர்களிடம் சொன்னாள்.

"அந்த கோட்டை உருவாக்கப்பட்டது உண்மை. மக்கள் இறந்தது உண்மை. ஆன்மாக்கள் கோட்டையை காவல் காத்தது உண்மை. ஆனா அந்த கோட்டை நிஜத்துல தொடர்ந்து இருக்கல. அவர் இளவரசர்களிடம் சொன்ன எல்லாமே பொய்.. அந்த நாட்டையே அழிக்கறதுதான் அவரோட திட்டம். அந்த இளவரசர்களை தன் மகள் கையால கொல்லணுங்கறதுதான் ஆசை. அதுக்காக அந்த இளவரசர்களையும், தன்னையும், அந்த அழிஞ்சி போன பிரேத கோட்டையும் மத்தவங்களின் நினைவுகளில் பதிய வச்சிட்டு போயிருக்காரு.. அதுக்கு முக்கிய காரணம் அந்த டைரி.. அந்த டைரி இருக்கும் வரை அந்த கற்பனை இருக்கும். படிக்கும் எல்லோரும் அந்த கற்பனைக்குள்ள போவாங்க.. முக்கியமா நான் போவேன். கற்பனையில் எனக்காக காத்திருந்த அந்த பைத்தியக்காரன் அந்த இளவரசர்களை என் கையால கொல்ல வச்சி அது மூலம் இன்பத்தை அனுபவிச்சான். அதுவும் இல்லாம நிஜமான என்னையும் அந்த கற்பனையில் சிக்க வச்சி ஒவ்வொரு முறையும் என்னை வாழ விடாமலேயே சாகடிச்சான்.. அவன் சைக்கோ சிவா.. ஒரு கோபத்துக்காக எல்லா பிறவியிலும் தொடர்ந்து வந்து சாகடிச்சிட்டான்.. இனி வர மாட்டான்.." என்றவளை குழப்பமாக பார்த்தான் சிவா.

"அ.. அப்படின்னா அந்த இளவரசர்கள் உண்மை இல்லையா‌.?" என்றான் தயக்கத்தோடு.

"அவங்க அந்த கோட்டையின் அழுகல் நாற்றத்திலேயே இறந்துட்டாங்க.. இவன்தான் அவங்களோட தோலை உரிச்சி பதப்படுத்தி அதுல அந்த டைரியை உருவாக்கி வச்சிருக்கான்.." என்றவள் "அவனை கொன்ன பிறகு நிறைய விசயம் புரிஞ்சது. வயசானதுல அவனும் இறந்துட்டான்.. ஆனா கற்பனையிலேயே இத்தனை வருசம் ஆட்சி செஞ்சிருக்கான்.. ஒவ்வொரு பிறவியிலும் அவனிடம் சிக்கியது நானா இல்லாம கூட இருக்கலாம். இதுவே என் முதல் பிறவி, இல்லன்னா ஒரே பிறவியாக இருக்கலாம்.. ஆனா அத்தனை போரோட வலியையும் நான் உணர்ந்தேன் சிவா. அவனை நான் கொல்லாம இருந்திருந்தா நானும் இப்ப அந்த பூந்தோட்டத்துல அடிமையாகி இறந்திருப்பேன்.." என்றவள் மேலும் சொல்லும் முன் அந்த மருத்தவமனை அறையின் கதவு தட்டப்பட்டது.

கதவை திறந்துக் கொண்டு உள்ளே வந்தார் சதாசிவம்‌. நேராக வந்து வசந்தனின் கைகளில் விலங்கை பூட்டினார். குழப்பத்தோடு பார்த்தாள் யாழினி.

"எங்க அப்பாவை ஏன் அரெஸ்ட் பண்றிங்க சார்.?" என்றாள்.

"உங்க அப்பாதான் தினேஷை கொலை பண்ணியிருக்காரு யாழினி.." என்றார் அவர்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN