மௌனங்கள் 19

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
புவின் POV

கேம் சென்டரில் குண்டு வெடித்த பிறகு வீட்டிற்கு வந்தேன். என்னவள் உள்ள வீடு. பூட்டியிருந்த கதவை என்னிடமிருக்கும் சாவியை பயன்படுத்தி திறந்து உள்ளே சென்றேன்.

வழக்கம் போல வேலைக்கு சென்றிருக்கிறாள். இப்படி ஒரு கட்டுப்பாட்டிலும் ஏன் இவள் வேலைக்கு செல்ல வேண்டும் என்று புரியவில்லை எனக்கு.

அவள் சமைத்து வைத்த உணவை உண்டேன். ருசி அள்ளியது. உணவோடு காதலையும் கலந்து விட்டிருப்பாள் போல.

உண்டு முடித்த பிறகு உறங்கலாம் என நினைத்து படுக்கையறைக்கு சென்றேன். படுக்கையின் மீது ஒரு கிஃப்ட் பாக்ஸ் இருந்தது. ஆச்சரியத்தோடு சென்று அதை எடுத்தேன். நிஷாவின் தம்பிக்கு பிறந்தநாள் என்று சொல்லியிருந்தாள். அவனுக்காக வாங்கியது போல. ஆனால் நான் எடுத்து பார்த்தபோது அதன் மேல் "என்னவனுக்கு‌‌.." என்று எழுதியிருந்தது.

எனக்கு பரிசு.. அதுவும் காதலியிடம் இருந்து. புது உணர்வாக இருந்தது. மகிழ்ச்சியாகவும் இருந்தது. அந்த கிஃப்ட் பாக்ஸை பிரிக்க நான் முயன்ற அதே நேரத்தில் எனது ஃபோன் ஒலிக்க ஆரம்பித்தது.

போனை எடுத்து பேசினேன்.

"ஹலோ புவி.. நம்ம சைட் வேலை பார்த்த போலிஸ் யாரும் கரெக்ட் டைம்க்கு போன் பண்ணல.. மாட்டிங்கிட்டாங்கன்னு நினைக்கிறேன்.." என்றான் என் டிரைவர்.

"செக் பண்ணி பார்க்கறேன்.." என்று சொல்லி விட்டு இணைப்பை துண்டித்தேன். மாடி வீட்டுக்கு சென்றேன். எனது மேஜையின் ஒரு ஓரத்தில் கிஃப்ட் பாக்ஸை வைத்து விட்டு லேப்டாப்பில் முன் அமர்ந்தேன். எனக்கு துணை புரியும் காவலர்களின் கையில் ஜி.பி.எஸ் பேண்ட் இருக்கும். அவற்றை தேடினேன். இடம் கிடைக்கவில்லை. அவர்களிடம் தரப்பட்ட பேண்டும் வொர்க் ஆகவில்லை.

தலையை கோதி விட்டுக் கொண்டு நாற்காலியில் சாய்ந்து அமர்ந்தேன். தன சேகர் என்னை நோக்கிய பாதையில் ஓரடி எடுத்து வைத்து விட்டான் என்பது புரிந்தது.

தம்பிக்கு போன் செய்தேன். விசயத்தையும் சொன்னேன்.

"அந்த நாட்டுக்கு வர போக்குவரத்து அனைத்தும் ரொம்ப அதிக கட்டுப்பாடா ஆகிடுச்சி அண்ணா.. நீ அங்கிருந்து இப்போது கிளம்ப முடியாது‌.. ஒரு வாரம் உனக்கு டைம்.. அந்த போலிஸை கொன்னுட்டு உன் அடுத்த வேலையை பாரு.. இல்லன்னா ஒரு வாரம் கழிச்சி அங்கே வர ரூபி உன்னை இங்கே கூட்டி வந்துடுவா.. இனி உன் முடிவு.." என்றுவிட்டு போனை வைத்தான்.

வந்த வேலையை முடிக்காமல் செல்வது எனது பழக்கம் இல்லை. தனசேகரை கொன்றாக வேண்டும் நான். அதுவும் ஒரு வாரத்திற்குள். இல்லையேல் நான் தோற்றதாக ஆகிவிடும்.

வீட்டை பூட்டி விட்டு வெளியே கிளம்பினேன். எனது டிரைவர் தெரு மூலையில் நின்றிருந்தான்‌.

"வசந்தி வீட்டுக்கு போ.." என்றேன்.

வசந்திதான் எங்களின் பாலம். அவளின் மூலம்தான் போலிசாரை அனைத்து செயல்களையும் செய்ய வைத்தோம்.

நாங்கள் அவளின் வீட்டிற்கு சென்றபோது அவளே பதட்டத்தோடு எதிரே வந்தாள். "தன சேகர் நம்மளை நெருங்க போறான்னானோன்னு பயமா இருக்கு.." என்றாள். வியர்த்துக் கொட்டிக் கொண்டிருந்தது அவளின் முகம்.

அவளின் வீடு சற்று பெரியது. வேலைக்காரர்கள் காலையில் வந்துவிட்டு ஒரு மணி நேரத்தில் வேலைகளை முடித்து விட்டு கிளம்பி விடுவார்கள் என்று கேள்விப்பட்டுள்ளேன். அவள் ஒரு தனிமை விரும்பி.

அவளுக்கென்று சொந்த பந்தம் எதுவும் இல்லை. கணவனையும் மகனையும் ஏதோ ஒரு உரிமை மீட்பு போராட்டத்தில் பலி தந்தவளாம். அவளுக்கு எதிராய் போன நாட்டின் மீதும், அவளுக்கு துணை நிற்காமல் போன நாட்டு மக்களின் மீதும் துவேஷம் கொண்டு உள்ளாள். அதனால்தான் எங்களுக்கு உதவுவதாக சொன்னாள். அவளுக்கு கொட்டி தந்த பணம் அதிகம். அதனால்தான் வேலை செய்கிறாள் என்று சொல்லியுள்ளான் என் டிரைவர்.

"வீட்டுல யாரும் இல்லையா வசந்தி‌.?" நான் கேட்க கேள்வியை டிரைவரே கேட்டான்.

"இல்ல.." என்றவள் அடுத்து சொல்லும் முன் எனது துப்பாக்கியிலிருந்த ஒரு குண்டை அவளின் நெற்றிப்பொட்டில் இறக்கி விட்டு விட்டேன்.

அங்கேயே சரிந்தாள் அவள். நிச்சயம் இறந்து விட்டாள்.

டிரைவர் என்னை ஆச்சரியத்தோடு பார்த்தான்.

"இவளால நமக்கு ஆபத்து. ஜெயிலுக்கு போக விருப்பமா உனக்கு.?" என்றேன்.

இல்லையென தலையசைத்தவன் நான் வெளியே நடப்பது கண்டு எனக்கு முன்னால் நடந்தான்.

"இவளை போட்டு தள்ளியது தப்பே இல்ல புவி.." என்றான்.

அளவுக்கு அதிகமாகவே இவன் எனக்கு சோப்பு போட்டுக் கொண்டிருக்கிறான். பயத்தாலா இல்லை பதட்டத்தாலா என்றுதான் தெரியவில்லை.

"இவளை பற்றியோ இல்ல மொத்த போலிஸார் பத்தியோ ஏதாவது விவரம் வச்சிருக்கியா.?" என்றேன் காரில் ஏறி அமர்ந்த பிறகு‌.

"என் தனி வீட்டுல இருக்கும் புவி.." என்றான்.

அங்கேதான் இருக்கும் என்று எனக்கும் தெரியும். "அங்கே போகலாம்.. சில விவரம் தேவைப்படுது.‌." என்றேன்.

அவனது தனி வீடு பற்றி அவனது குடும்பத்திற்கு கூட தெரியாது. அவ்வளவு நல்லவன் இவன். பினாமி பேரில் இந்த வீட்டை பதிவு செய்துள்ளான். இவனை பற்றிய பல தகவல்களும், அசையும் சொத்துகளும் இங்கேதான் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது.

காம்பவுண்ட் கேட்டில் நின்றிருந்த கிழவனை பார்த்து புன்னகைத்து விட்டு காரை வாசலுக்கு ஓட்டிச் சென்று நிறுத்தினான்.

"வாங்க புவி.." என்றான்.

இவன் இப்படி அழைப்பது சுத்தமாக பிடிக்கவில்லை எனக்கு. பெண் பிள்ளை பெயர் போல இருக்கிறது.

வீட்டுக்குள் நடந்தான். எனக்கு பருக தேனீர் தந்தான்.

பிறகு ஒரு அறைக்கு சென்று போலிசாரை பற்றிய தகவல் இருந்த பைல்களை தேடி எடுத்து நீட்டினான். யாரெல்லாம் எனக்கு உதவுகிறார்கள் என்பதும், எனக்கு தேவையான தற்கொலை படைகளை யாரெல்லாம் தயார் செய்து தருகிறார்கள் என்றும் அனைத்து தகவல்களும் அதில் இருந்தது‌.

இந்த பைலில் உள்ள பெயர்களுக்கு சொந்தகாரர்கள் யாரையும் இதுவரை நேரில் சந்திக்கவில்லை நான். நான் சந்தித்த நால்வர் குண்டு வெடிப்பில் அன்றே இறந்து போனார்கள். எனக்கு பாலமாக இருந்த வசந்தியும் டிரைவரும் இப்போது உயிரோ.. ஒரு நிமிடம்..

அவன் அந்த பக்கமாக திரும்பி நின்றிருந்த வேளையில் அவனின் பின்னங்கழுத்தில் ஒரு தட்டு தட்டினேன். அங்கேயே மயங்கி விழுந்தான்.

பைலை எடுத்துக் கொண்டு வெளியே வந்தேன். கேட்டில் வாட்ச்மேன் நின்றிருந்தான்.

"உங்க சார் உங்களை கூப்பிடுறாரு.." என்றேன். அவன் குழப்பத்தோடு உள்ளே சென்றான். அவன் உள்ளே சென்ற ஐந்தாம் நொடியில் அந்த வீட்டில் டமாரென வெடித்தது. பாம் அல்ல. கேஸ்தான் வெடித்தது. சிலிண்டர் டியூப்பை கழட்டி விட்டுவிட்டு அருகே இருந்த மின்காந்த அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து விட்டு வந்தேன். பாத்திரத்தின் சூட்டு அனலும் சிலிண்டரின் எரிவாயுவும் ஒன்றாய் சேர்ந்து தீ பரவி வெடித்து விட்டது.

எனக்கு பாலமாக இருந்த இருவரும் இப்போது இறந்து விட்டனர். நான் யாரென்று வெளியே உள்ள மக்கள் துரோகிகள் யாருக்கும் தெரியாது. என்னை நேர் வழியில் பிடிக்க வேண்டுமானால் நிச்சயம் ஒரு வார காலம் ஆகும். அதற்குள் நான் மற்ற தடயங்கள் அனைத்தையும் அழித்து விடுவேன்.

வீடு தீ பிடித்தது கண்டு சுற்றி இருந்தவர்கள் அந்த வீட்டின் வாசல் முன் குவியும் முன்பே நான் அங்கிருந்து கிளம்பி விட்டேன். ஆட்டோ ஒன்றை நிறுத்தி ஏறி அமர்ந்தேன். எனக்கு ஒரு ஆபத்து வந்தால் முதலில் இவனைதான் அழிப்பேன் என்பதை அறியாத இவன் ஒரு முட்டாள்.

நான் வீட்டிற்கு வந்த போது வீடு திறந்திருந்தது. குழலி வந்து விட்டாள் போல. இவ்வளவு நேரம் மனதில் இருந்த குழப்பம் முழுதும் ஒற்றை நொடியில் தீர்ந்து போனது போல இருந்தது.

கதவை சாத்தி விட்டு பூனை எட்டு வைத்து நடந்தேன். அவளோடு செல்ல விளையாட்டு விளையாடுவது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

ஹாலிலும் படுக்கையறையிலும் அவள் இல்லை. சமையலறையிலும் இல்லை. குழப்பத்தோடு மேல் இருந்த வீட்டிற்கு நடந்தேன். வீட்டின் கதவு திறந்திருந்தது. அவள்தான் திறந்தாளா இல்லை அதற்குள் தனசேகர் என்னை தேடி வந்து விட்டானா என்று தெரியவில்லை.

அரையாய் சாத்தியிருந்த கதவை திறந்து உள்ளே சென்றேன். வீட்டில் ஒரு பொருள் கூட அந்தந்த இடத்தில் இல்லை. அனைத்தும் கலைந்து போய் இருந்தது. சுவரில் மாட்டியிருந்த தொலைக்காட்சியும் தரையில் கிடந்தது. முகம் பார்க்கும் கண்ணாடி ஒரு பக்கம் சில்லு சில்லாய் உடைந்து போயிருந்தது. ஒரு இடத்தில் எனது துப்பாக்கிகளும் மற்ற ஆயுதங்களும் இருந்தது.

தடுமாறிய மனதோடு நடந்தேன் நான். எனது அறையில் குழலி நின்றிருந்தாள். அழுத முகம், கசங்கிய ஆடையுமாக நின்றிருந்தாள். தரை பார்த்து நின்றிருந்தவள் என்னை நிமிர்ந்து பார்த்தாள்.

"நீதான் எல்லாத்துக்கும் காரணமா.?" என்றாள்.

நான் இல்லையென்று சொன்னால் அவள் நம்ப இரு சதவீத வாய்ப்பு இருக்கிறது.

"ஆமா.." என்றேன்.

அருகே வந்து கன்னத்தில் ஒரு அறையை விட்டாள்.

"ராட்சசனா நீ.?" என்றாள் அழுத குரலில்.

"நாம பேசலாம் குழலி.." என்றேன்.

"எதுக்கு.?" என கேட்டவள் வீட்டை விட்டு வெளியே சென்றாள். அவள் கீழ் வீட்டிற்குள் நுழைந்த போது ஓடி சென்று அவளை மறித்து நிறுத்தினேன்.

"எங்கே போற.?" என்றேன்.

"போலிஸ்க்கு.. உன்னை பிடிச்சி ஜெயில்ல போட.. உனக்கு பின்னாடி இருக்கும் மொத்த கும்பலையும் நடு ரோட்டுல வச்சி சுட்டு தள்ள.."

எனது வலது கரம் சட்டென்று மேலே சென்று அவளின் கழுத்தை நெரித்தது. நான்தான் நிதானம் தவறி விட்டேன். உடனே கையை விலக்கிக் கொண்டேன்.

"போலிஸோடு நீ பேச வேண்டாம்.. வா நாம பேசலாம்.." என்று அவளின் கை பிடித்து இழுத்தேன். அவள் வர முடியாது என்று மறுத்தாள். அவளை வலுக்கட்டாயமாக இழுத்து வந்து எங்களது படுக்கையறையில் தள்ளினேன். கதவை தாழிட்டு விட்டு அவள் பக்கம் திரும்பினேன். துப்பாக்கியை எடுத்து அவள் முன்னால் நீட்டினேன்.

"அசையாதே.! சுட்டுடுவேன்.!" என்றேன்.

"சுடு.." என்றாள் கோபத்தோடு.

எனக்கு எரிச்சலாக வந்தது. "உன் போனை கொடு.." என்றேன்.

"என்கிட்ட இல்ல.‌." என்றவளை நம்பாமல் சோதித்து பார்த்தேன். அவளிடம் போன் இல்லை.

"நான் கெட்டவன் கிடையாது.." என்றேன்.

"*** நீ ஒரு ராட்சசன்.. மனிதர்கள் எல்லோரையும் அழிக்கறவன்.." என்றாள் கோபத்தோடு.

"மனிதர்களை அழிக்கல நான்.. மிருகங்களை மட்டும்தான் அழிக்கிறேன்.." என்று நான் சொன்னபோது என் மேல் பூச்சாடி ஒன்று வந்து விழுந்தது. விலகி நின்று அவளை பார்த்தேன். என்னை முறைத்துக் கொண்டு நின்றாள்.

"சின்ன குழந்தைங்க.. வயசு பசங்க.. உனக்கு மிருகமா‌.?" அடி தொண்டையிலிருந்து கத்தி கேட்டாள்.

"என் பசிக்கு இங்கே யாரும் சாப்பாடு போடல.. அதனால நான் அவங்களோட வாரிசுகளை அழிக்கிறேன்.." இதை சொல்லுக்கையில் கடுப்பாக இருந்தது எனக்கு.

அவள் என்னை விசித்திரமாக பார்த்தாள். "பசி தாங்க முடியலன்னா செத்து போக வேண்டியதுதானே.. ஏன் மத்தவங்களை கொல்லுற.?" என்றாள்.

கண்களை அரை நொடி மூடி திறந்தேன். என் பசி இவளுக்கு நையாண்டி பொருளாகி விட்டது போல. ஆத்திரத்தை அடக்க இயலாமல் அருகே சென்று அவளின் கன்னத்தில் வேகமாக ஒரு அறையை விட்டேன். அடுத்த நொடி மயங்கி தரையில் சாய்ந்தாள். துப்பாக்கியை விட்டுவிட்டு அவளை தாங்கி பிடித்தன எனது கரங்கள்.

மயங்கி கிடந்தவளின் நெற்றியில் ஒற்றை முத்தம் பதித்தேன். இன்னும் ஒரு வாரம். நான் என் வேலையை தொடர விரும்பவில்லை. நான் தப்பி செல்லும் நேரம் வந்ததும் இவளை கடத்திக் கொண்டு செல்ல போகிறேன்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN