என்னைத் துரத்தும் உன் நினைவுகள்... 5

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
நினைவுகள்: 5

நந்து கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாமல் யாழினி அமைதியாக நிற்கவும், “என்னடி குந்தாணி, நான் சொன்னது புரிந்ததா?”

“ம்ம்ம்…. புரிந்தது” அவள் பட்டும் படாமலும் சொல்ல,

“ம்ம்ம்…” என்று எப்போதும் போல் தன் இடது கையால் நெற்றியில் உள்ள தழும்பை இருவிரலால் வருடியவனோ, “ஆனாலும் உனக்கு தில்லு அதிகம் தான்டி! என்னை ஏமாற்றிட்டு என் கண்முன்னேயே என்ன தைரியமா வந்து நிற்கிற! இதில் உன் அண்ணன்களும் அப்பாவும் உன்னைத் தங்கம், குட்டிமா, பாப்பானு கொஞ்சறாங்க.

உன் மகேஷ் அண்ணாகிட்ட மட்டும் உன் வண்டவாளத்தைச் சொல்லலாம்னு பார்த்தா, என் வாட்ஸ்ஆப் எல்லாத்தையும் டெலீட் செய்திருக்க. அவங்க மேல் எல்லாம் அவ்வளவு பயம் இருக்கிறவளுக்கு என் மேல் மட்டும் பயம் இல்லாமல் போயிடுச்சு” என்று அவன் கோபப்பட இதற்கும் யாழினியிடமிருந்து பதில் இல்லை.

“சும்மா ஒண்ணுமே தெரியாத மாதிரி நடிக்காதேடி கேடி” என்று ஆத்திரப்பட்டவன், அவளை ஏற இறங்க ஒரு பார்வை பார்த்து விட்டு, “இன்னும் ஏன் நின்னுகிட்டே தூங்குற? போ போய் படு” என்று சத்தம் போட்டவன், அவ்வளவு தான் பேச்சு முடிந்தது என்பது போல் தானும் படுக்க ஆயத்தமாக, அவளோ மெல்ல வெளிக்கதவை நோக்கிச் செல்லவும், அதை பார்த்தவன் “ஏய்…ய்… இப்போ எதுக்குடி வெளியே போற?” என்று மிரண்டபடி கேட்க

அப்படியே நின்று கணவன் முகம் பார்த்தவள், அவனைச் சீண்டிப் பார்க்க எண்ணம் தோன்ற, “இப்போ நீங்க சொன்னதை எல்லாம் வெளியே இருக்கிறவங்க கிட்ட சொல்லி நியாயம் கேட்கலாம்னு தான்” என்று அவள் சீரியஸாக முகத்தை வைத்துக் கொண்டு சொல்ல,

உள்ளுக்குள் ‘ஜயோ!’ என்ற ஒரு முணுமுணுப்பு இருந்தாலும், அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல், “அடியேய்! நீ அடங்கவே மாட்டியா? அப்படி மட்டும் ஏதாவது உளறின.. உன்னைக் கொன்னே போட்டுடுவேன்டி.. ஜாக்கிரதை! இந்த சுவேஷ்நந்தன பத்தி உனக்கு இன்னும் சரியா தெரியல. அதை தெரிய வைத்து விடாதே” என்று அவன் மிரட்ட

‘இவரு பெரிய இஸ்ரோ விஞ்ஞானி! இவரைப் பற்றி நான் தெரிஞ்சிக்கிறதுக்கு’ என்று மனதிற்குள் நினைத்தவள், ‘இந்த மிரட்டலுக்கு எல்லாம் நான் அசருவேனா?’ என்ற தலை சிலுப்புடன் அவள் கதவுப் பக்கம் திரும்ப,

‘குந்தாணி அடங்க மாட்டேன்றாளே..’ என்று பல்லைக் கடித்த படி சடாரென அவளுக்கும் கதவுக்கும் இடையில் புகுந்து அவள் முகம் பார்த்த படி கண்ணில் கனலுடன் நின்றான் நந்தா.

போஸ்ட் கம்பமென இருக்கும் கணவனை நிமிர்ந்து பார்த்தவள் ”இங்கே பாருங்க…. இப்ப எதையும் சொல்ல நான் வெளியே போகலை…. இங்க இருக்கறவங்க கிட்ட சொன்னா, நாளைக்கு அது என் வீட்டுல இருக்கறவங்க கிட்டேயும் போகும்னு எனக்குத் தெரியாதா? அதனால எதையும் சொல்ல மாட்டேன். நீங்க பால் ஊற்றினதால என் முகம் முழுக்க” என்று நிறுத்தியவள், சட்டென கணவனின் கையைப் பிடித்து அவன் சட்டையில் தன்னை இழுக்கும் போது ஏற்பட்ட பால் கரையில் அவன் விரல்களை ஓட விட்டவள் “இப்படி பிசுபிசுப்பா இருக்கு. உங்க பாட்டி வேற பேரனுக்குனு சொல்லி ஏதோ பாதாம், பிஸ்தானு கலந்தாங்க பாலில். அதெல்லாம் ஒரு மாதிரி இருக்கு. அதான் முகம் கழுவ வெளியே போறேன்” என்று சொல்லி சற்று மூச்சு விட்டு நிறுத்த,

‘முகம் கழுவப் போறேனு சொன்னா முடிந்தது. இதுக்கு எதுக்கு இவ்வளவு பேச்சு?’ என்று யோசித்தவன் இன்னும் அவள் பிடியில் தன் கை இருப்பதை உணர்ந்து ஒரு வேகத்துடன் அவள் கையைத் தட்டி விட்டவன், “அதுக்கு எதுக்கு இந்த வழியா போற? பின்கட்டுக்குப் போகிறதுக்கு இதோ இந்த அறையிலேயே ஒரு கதவு இருக்கு” என்று அவளுக்குப் பின்புறமாக இன்னோர் கதவு இருப்பதை அவன் காட்ட

அவன் கையைத் தட்டி விட்டதில் கோபமாக இருந்தவள், கூடவே ஏதோ டோராவுக்கு மேப் வழி காட்டுவது போல் கணவன் அவளுக்கு வழி காட்டுவதில் கடுப்பானவள், “என்னமோ புண்ணாக்கு மூட்டைய எடுத்து குடோன்ல போடுற மாதிரி என்னைக் கூட்டி வந்து இந்த அறையில வேண்டா வெறுப்பா தள்ளி விட்டுட்டு உங்க வேலையப் பார்க்கப் போனீங்களே? அப்போ கண்டுபிடிச்சிட்டேன்.. இந்த பக்கம் ஒரு வழி இருக்கிறதை. அதனால கூகுள் மேப் மாதிரி எனக்கு வழி சொல்லுற வேலை எல்லாம் உங்களுக்கு வேணாம்” என்று மதியம் அவன் முகம் திருப்பியதை வைத்து இவளும் குத்திக் காட்டினாள்.

“நான் தான், என் கிட்டயிருந்து எதையும் எதிர் பார்க்காதேனு சொல்லிட்டேனே!” என்று அவன் தோளைக் குலுக்க

“அதுக்காக தான் இப்போ உங்கள எதிர்பார்க்காம சந்தியா அக்காவ தேடிப் போறேன்” என்று இவள் மிடுக்காகச் சொல்ல

“ஏய்! என்னடி? என்ன சீண்டி பார்க்கிறியா? நீ முகம் கழுவ அண்ணி எதுக்குடி? இப்போ மணி என்ன தெரியுமா? கூறு கெட்டத் தனமா இப்போ போய் அவங்கள எழுப்புறாளாம்” என்று அவன் பல்லைக் கடிக்க,

“ஏன் உங்களுக்கு கண்ணு இருக்கு இல்ல? அப்போ நீங்க நேரம் என்னனு பாருங்க. அப்படியே உங்களுக்கு மூளை இருந்தா இந்த இருட்டுல பின்பக்கம் நான் எப்படி தனியா போவேனு யோசிங்க. அக்காதான் உனக்கு ஏதாவது உதவி வேணும்னா எப்போ வேணாலும் என்ன கேளுனு சொல்லி இருக்காங்க” என்று நக்கலில் ஆரம்பித்து தனிவாக முடித்தவள், கணவனைச் சுற்றிக் கொண்டு போய் தாழ்ப்பாளில் கை வைக்கவும் ….


இந்த அதிரடி தாக்குதலில் அவள் சொன்ன மூளை இல்லாதவன் கூட அவனுக்கு மறந்து போக, “ஏய் இம்சை! பால் எப்படி முகத்துல கொட்டினது கேட்டா என்னடி சொல்லுவ?” அவள் கையைத் தாழ்பாளிருந்து தட்டி விட, தான் செய்தது குடும்பத்தாருக்கு தெரிந்து விடுமோ என்ற பயம் அவனுக்கு.

‘வாடா வா.. என் அத்தை பெத்த சீனப் பட்டாசே! ராசாவுக்குத் தான் செய்தத நினைத்து பயம். இனி இப்படி செய்வ?’ என்று மனதிற்குள் நினைத்தவள், “நான் பால் குடிக்கும் போது பொறுமை இல்லாம அவசரப்பட்டு என்னைக் கட்டி பிடிச்சிங்க, அதான் பால் எல்லாம் என் மேல கொட்டிடுச்சுனு சொல்லுவேன்” என அவள் லஜ்ஜையே இல்லாமல் சொல்ல, அவன் தான் மிரண்டு போனான்.

‘பாதகி சொன்னாலும் சொல்லுவாள்’ என்று நினைத்தவன், கண் இமைக்கும் நேரத்திற்குள் கையைப் பிடித்து கண் மண் தெரியாமல் இழுத்துச் சென்றவன் நின்றது என்னவோ பின் கட்டில் இருந்த கிணற்றுக்கு அருகில். “விடுங்க உப்ஸ்…. உப்ஸ்…. விடுங்க…. உப்ஸ்…. நீங்க மட்.. டு…. ம் என் உப்ஸ்…… கைய தொ… ட…. லாமா?“அவள் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கிய படி கேட்க,

அவள் வார்த்தைகளைக் காதில் வாங்காதவன் போல் “அதான் கிணற்றுப் பக்கம் வந்தாச்சு இல்ல, முகம் கழுவு” என்றான்.

“எனக்குத் தண்ணி இழுக்கத் தெரியாது”


“சரியான இம்சைடி நீ” என்று பல்லைக் கடித்தவன், பட்டு சட்டையைக் கழற்றி கொடியில் போட்டவன், கூடவே பட்டு வேஷ்டியை மடித்துக் கட்டி, அவளுக்காக தண்ணீர் இறைத்துத் தர, அதை தொடாமல் அந்த இருட்டிலும் தன் கட்டதுரையின் அழகை ரசித்தபடியே அவள் இருக்க, அதை உணர்ந்தவனோ “இப்படியெல்லாம் இனி பார்த்தேனு வை, கண்ணு முழிய நோண்டிடுவேன்டி… சீக்கிரம் முகம் கழுவிட்டு வா” என்று உறும, அப்போதும் அவள் ஒரு வித தயக்கத்துடனே இருக்கவும்..

“இப்போ என்ன?”

“இல்ல…. பால் கொட்டினதுல கழுத்து புடவை எல்லாம் ஒரு மாதிரி இருக்கு. கொஞ்சம் குளிச்சா..” என்று அவள் இழுக்க

அவன் “என்னது?” என்ற குரலில் அவளுடைய குரலோ இறுதியாக உள்ளே போய் விட்டது.

பிறகு அண்ணாந்து கணவன் முகம் பார்த்தவள், “இதுக்கு தான், சந்தியா அக்காவ கூப்பிட்டுகிறேனு சொன்னேன்” அவள் இழுக்கவும்,

“சரி போய் குளி” என்றான் பொறுமை இழந்தவனாக. உடனே ஒரு துள்ளலுடன் பாத்ரூம் பக்கம் திரும்பி இரண்டு அடி வைத்தவள் பின் முகம் வெளிற திரும்பி அவனைப் பார்க்க,

“இன்னும் என்ன?” அவன் குரலில் சலிப்பு இருந்தது.

“நான் குளிக்கப் போனதும், என்ன தனியா.. விட்டுட்டு நீங்க.. உள்ள போய்ட்டிங்கனா?..” அவள் குரல் தந்தி அடித்தது.

“போகமாட்டேன் போடி”. அவன் குரலில் திடம் இருக்க,

“பிராமிஸ்…..” என்று கேட்டாள் பெண்ணவள்.

“என் குந்தாணி மேல, பிராமிஸ்…. டி” என்றான் அவன்.

கணவன் சொன்ன என் குந்தாணியில் சிறகில்லாமல் ஆகாயத்தில் பறந்தபடி குளிக்கச் சென்றாள் யாழினி.

அப்போதும் சும்மா இல்லாமல் கணவன் வெளியே இருக்கிறானா என்று அறிய உள்ளிருந்த படி, “மாமோய்..” என்றாள்

“என்ன டி?” என்றான்

அடுத்த முறை “மாமா” என்க

“ம்… ம்…” என்றான் இவன்

அதற்கும் அடுத்த முறை, “பாவா இருக்கீங்களா” என இவள் உருக,

“இருக்கேன் டி குந்தாணி” என்றான் இவன் பதவிசாக,

குளித்த பிறகு தான் மாற்றுடை எடுத்து வராமல் வந்தது அவளுக்குத் தெரிந்தது. இப்போது என்ன செய்வது என்று யோசித்தவள், தான் முன்பு கட்டி வந்த பாவாடையையே இடுப்புக்குக் கட்டியவள், கதவை லேசாகத் திறந்து அதன் பின்புறத்தில் மறைந்தார் போல் நின்று கொண்டு “பாவா உங்க சட்டையைக் கொடுங்க” என்று கேட்க,

“அது எதுக்குடி? அதில் கறை இருக்குனு அலசிப் போட்டிருக்கேன்” தன்மையாகத் தான் வந்தது அவனிடமிருந்து பதில்.

“பரவாயில்ல பாவா! அதையே கொடுங்க. என் பிளவுஸ், புடவை எல்லாம் ஒரே பிசுபிசுப்பு பாவா” அவள் சொல்லி முடிப்பதற்குள் அவன் சட்டை அவள் கையிலிருந்தது.

அதை போட்டவள், “ஐயோ! பாவா, உங்க பட்டு வேஷ்டியைக் கழற்றி கொடுங்க” என்று அவள் உள்ளிருந்தே கிரீச்சீட,

“என்னடி கொழுப்பா?” அவன் முடிப்பதற்குள்,

“அச்சோ பாவா! ஈரத்துல உங்க சட்டை அப்படியே உடம்போட ஒட்டிகிச்சு. இப்போ நான் எப்படி வெளியே வர?” விட்டால் அவள் அழுதுவிடுவாள் என்று உணர்ந்தவனோ,

“சரி… சரி… இரு தரேன்” என்றவன் அங்கு கொடியிலிருந்த துண்டை எடுத்து இடுப்பில் கட்டியபடி வேஷ்டியைக் கழற்றி அவள் கையில் வைத்த நேரம்,

“யாரது பின் கட்டுல இந்த நேரத்துல நிற்கிறவ?” என்று கேட்ட படி தன் இயற்கை உபாதைக்காக தூக்கக் கலக்கத்தில் ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து அவனை நெருங்கினார் அவனின் பாட்டி. இவன் பேசாமல் இருக்கவும்,

“யாருனு கேட்கிறேன் இல்ல?” என்று கண்ணை சிமிட்டியபடி அவர், அவன் முகத்தைப் பார்க்க,

“நான் தான் பாட்டி நந்தன்” என்றான் நெளிந்த படி.

உடனே, “நான் கீதயாழினி பாட்டி! பாத்ரூம் உள்ள இருக்கேன்” என்று அவர் கேட்காமலே அட்டண்டென்ஸ் போட்டாள் நம் நாயகி.

நந்துவோ, தலையில் கை வைத்தபடி அங்கிருந்த கல்லில் உட்கார்ந்து விட்டான்.

“இந்த நேரத்துல உள்ளே என்ன டி பண்ற?”

“ஆங்….. இது என்ன கேள்வி பாட்டி? பாத்ரூம்குள்ள உட்கார்ந்துட்டு சமைப்பாங்களா இல்ல தூங்குவாங்களா? எல்லாம் குளிக்கத் தான் வந்தேன்” என்று அவள் உண்மையை ஒப்புக் கொள்ள, நந்துவோ தலையிலேயே அடித்துக் கொண்டான்.

உடனே பேரனிடம் வந்து, அவன் இருந்த கோலத்தைப் பார்த்து, “ஏன்டா போக்கத்தவனே, இந்த நேரத்துக்கு குளிக்கணும்னு சொல்லுவாங்கதான். அதுக்காக இப்படி நடுசாமத்திலா அந்த புள்ளையை குளிக்கச் சொல்லுவ? மேலுக்கு ஏதாவது ஆச்சுனா, நாளைக்கு அவங்க வீட்டுக்கு நாம தான்டா பதில் சொல்லனும். பார்த்து சூதானமா இருடா” என்றவர், தான் எதற்கு வந்தோமோ, அந்த வேலையை முடித்துக் கொண்டு கிளம்பினார்.

“போச்சு.. போச்சு… காலையில், இந்த எப்.எம் ரேடியோ, என்னெல்லாம் ஒலிபரப்பப் போகுதோ?” என அவன் புலம்ப

“பாவா…. ஆச்சி போய்டாங்களா,” யாழினி சிறு குரலில் கேட்க,

‘இவ்வளவு நேரம் கத்திட்டு, இப்போ பூனை மாதிரி என்ன குரல் பார்’ என்று மனதிற்குள் சாடியவனோ, “ம்… ம்… போயாச்சு” என்றான்.

“அப்போ இங்கே வந்து கதவுகிட்ட திரும்பி நில்லுங்க. நான் வெளியே வரேன்” என்று அவள் சொல்ல,

“ஏன் அப்படியே வந்தா என்னவாம், எனக்கு கடுப்பு ஏத்தாதடி,”

“ப்ளீஸ் பாவா.. எனக்கு கூச்சமா இருக்கு, நீங்க முன்னே போங்க, உங்க முதுகை ஒட்டினார் போல நான் பின்னாடி நடந்து வரனே” என அவள் கெஞ்ச,

அவள் சொன்னபடியே வந்து நின்றவன், “ம்… வா” என்று சொல்ல, வெளியே வந்து அவன் பின்னே நடந்தாள் யாழினி.

அவள் அணிந்திருப்பது அப்படி ஒன்றும் ஆபாசமான ஆடை இல்லை. இடுப்பில் பாவாடை, மேலே கணவன் சட்டை, அதற்கு மேல் அரசியல்வாதிகள் போர்த்திக் கொள்ளும் சால்வை போல் கணவனின் பட்டு வேஷ்டி. ஆனாலும் இப்படிகூட அவன் முன்னால் நிற்க அவளுக்கு, அப்படி ஒரு தயக்கம். இன்னும் வாழ்க்கையே ஆரம்பிக்காதவர்களுக்கு, இந்த லஜ்ஜை எல்லாம் இருக்கத் தானே செய்யும்?

அவர்கள் ரூம் கதவு வந்ததும், “அப்படியே நின்னு கண்ணை மூடுங்க,” என்று அவள் கட்டளை இடவும்,

‘குந்தாணி ரொம்ப படுத்துறாளே.. இருடி உன்னை ஒரு நாள் நான் பாடாபடுத்துறன்’ என்று கருவியவன் அவள் சொன்னதைச் செய்ய,

சட்டென உள்ளே புகுந்து கதவை சாற்றிக் கொண்டாள் அவள்,

கொஞ்சம் நேரத்திற்கு எல்லாம் சுடிதாரில் வெளியே வந்தவள், “நீங்க போய் டிரஸ் மாற்றுங்க, நான் இங்கேயே நிற்கிறேன்” என்று சொல்ல,

“ஏன் இப்போ மட்டும், பின்புற இருட்டு உனக்கு பயமா இல்லையா? நீ கண்ணைத் திறந்து வச்சிட்டு என்னைப் பார்த்தாலும் நான் துணியை மாத்துவேன், நீ உள்ளே வா” என்று அவள் கையைப் பிடித்து இழுத்துச் சென்றவன், உடை மாற்ற, பாவையவளோ முகத்தை வேறு புறம் திருப்பிக் கொண்டாள்.

ஆடை மாற்றி வந்தவன், படுக்க ஆயத்தமாக, இவளும் படுப்பதற்கு கட்டிலில் இருந்த போர்வையையும் தலையணையையும் எடுக்க முயல,

அவளின் நோக்கம் புரிந்தவனோ, “அதில் கையை வைச்ச, கையை உடைச்சிடுவேன். போய் அப்படியே தரையில் படுடி,” என்று கட்டளை இட,

கண்ணை உருட்டிய படி “தலையணை மட்டுமாவது தாங்களேன்” என்றாள்.

“முக்கியமா அதைத் தான் தர மாட்டேன்” என்றான் விடாப்பிடியாக

“இதெல்லாம் அநியாயம், அக்கிரமம்! இவ்வளவு நேரம் நீங்க சொன்னதை எல்லாம் கேட்டேன். ஆனா இதையெல்லாம் நான் கேட்கவே மாட்டேன்” என்று அவள் கோபப்பட

“கேட்காம… என்னடி பண்ணுவ?” என்று புருவம் உயர்த்திக் கேட்டவனோ, அவளுக்கான தலையனையை எடுத்து படுத்தபடியே அதை தன் காலுக்குக் கீழே கொடுத்து, மிதி மிதி என்று மிதித்தவன் “இப்போ என்னடி செய்வே?” என்று ஒரு கோணல் சிரிப்பை உதிர்த்தபடி கேட்க

அவளுக்கு சர்வமும் விளங்கியது. ‘கட்டதுரை இன்னும் எதையும் மறக்காம நியாபகம் வைத்து கட்டம் கட்டுது’ என்று மனதிற்குள் எண்ணியவள், அவனிடம் எந்த வம்பும் வளர்க்காமல் தரையில் சென்று படுத்தாள்.

நெற்றியில் கையை வைத்து கட்டிலில் தூங்க ஆரம்பித்தவனின் எண்ணமோ அப்படியே பின்னோக்கி பயணித்தது..
 
Last edited:
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN