மௌனங்கள் 20

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
குழலி POV

ஏதேதோ கனவுகள். கனவு முழுக்க அழுகை‌யும் கண்ணீரும்தான் இருந்தது.

கவிழ்ந்து படுக்க முயன்றேன். என்னவோ தடை இருப்பது போலிருந்தது. தூக்கம் அரையாய் கலைந்து போனது‌.

அரை தூக்கத்தில் என்னவோ ஒரு நினைவு. சுற்றி நெருப்பு..

சட்டென்று கண் விழித்தேன். சுற்றி பார்த்தேன். எனது படுக்கை அறையில்தான் இருந்தேன். சிறு நிம்மதி பரவிய அதே கணத்தில் என்னவோ உறுத்தல். என்னை பார்த்தேன்.

கட்டிலின் மீது சாய்ந்து அமர்ந்திருந்தேன். நேராய் எழுந்து அமர்ந்தபோது என் கைகள் இரண்டையும் ஒன்றாய் சேர்த்து கட்டிப் போடப்பட்டிருந்த கட்டுகள் பார்வைக்கு வந்தது. எனது துப்பட்டாதான். கால்களிலும் கட்டு இருந்தது‌. நகர முடிந்தது. ஆனால் கட்டிலை விட்டு கீழே இறங்க முடியவில்லை.

புவினின் மீது கோபமாக வந்தது. அதை விட அதிகமாக என் மீதுதான் கோபம் வந்தது. இந்த உலகில் வாழ தகுதி இல்லாத உயிரில் நானும் ஒருத்தி. என் நாட்டை அழிக்க வந்திருக்கான் இவன். கேவலம் இவனை போய் காதலித்துள்ளேனே என்று நினைக்கையில் என் மீதே வெறுப்பு வந்தது. பூமியில் குழி தோண்டி உயிரோடு புதைந்து போக வேண்டும் போல இருந்தது.

நான் செய்வது அத்தனையும் சொதப்பல்தான். அவன்தான் குண்டு வெடிப்புக்கு காரணம் என்று அறிந்ததுமே நான் காவல் துறையிடம் சென்றிருக்க வேண்டும். ஆனால் ஏன் இங்கே ஆதாரம் தேட வந்தேன்.? இவனாய் இல்லாமல் போக ஜீரோ புள்ளி ஜீரோ ஒன்று பர்சண்டாவது காரணம் கிடைக்கலாம் என்ற ஒரு குருட்டு தனமான நம்பிக்கை. அந்த நம்பிக்கையின் காரணம் காதல்தான் என்று நானும் அறிவேன்.

இந்த காதலை அளவுக்கு அதிகமாக வெறுத்தேன். எனது பேன்டஸியின் தோல் உரிந்ததும் அது இவ்வளவு வலியை தரும் என்று நான் துளியும் எதிர்பார்க்கவில்லை.

இவன் ராஜகுமாரன் அல்ல. ராட்சசன். என் மக்களை தினம் தினம் பலி வாங்கிக் கொண்டிருந்தவனுக்கு இதே கையால் உணவிட்டு, அவனுக்கு என்னையே தந்து, இதையெல்லாம் விட முக்கியமாக எனது மனதையும் தந்துள்ளேன்.

நான் ஆதாரம் தேடி இந்த வீட்டிற்கு வந்தபோது இவனாய் இல்லாமல் இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டேதான் இருந்தேன். ஆனால் நெஞ்சத்தின் படபடப்பு விசயத்தை முன்கூட்டியே சொல்லி விட்டது என்பதுதான் உண்மை.

அவனின் வீட்டு பூட்டை உடைத்து உள்ளே சென்று அனைத்து இடங்களையும் தேட ஆரம்பித்தபோது இதயம் இரு மடங்கு வேகத்தில்தான் துடித்துக் கொண்டிருந்தது.

அந்த வீட்டின் சமையலறை அலமாரிகளில் துப்பாக்கிகளை கண்டதும் கை கால்கள் நடுங்க ஆரம்பித்து விட்டன எனக்கு. என் வீட்டில்தான் இவை இருந்துள்ளன. எந்த அளவிற்கு குருடாய் இருந்துள்ளேன் என்று அறிந்ததும் என் மீதேதான் மீண்டும் கோபம் வந்தது.

வெடி குண்டுகள், டைம் பாம்கள், நீண்ட பெரும் துப்பாக்கிகள் நோட்டு குறிப்புகளில் இதுவரை பாம் வெடித்த இடங்களை பற்றிய தகவல்களை.. என நான் கண்டது அனைத்தும் என் மனதை கொன்று விட்டன.

மூளை வேலை செய்ய ஆரம்பித்து, நான் காவல் துறைக்கு தகவல் தரலாம் என நினைத்து திரும்பிய நேரத்தில் புவின் வீடு வந்து விட்டான்.

மீண்டும் தவறு செய்து விட்டேன். முதலிலேயே சென்று தொலைந்திருக்க கூடாதா.? என்று கோபம்தான் வந்தது.

அவனுடனான உரையாடல் அவன் மீது இருந்த வெறுப்பைதான் அதிகப்படுத்தின.

பசித்தது கொன்றேன் என்கிறான். பசித்தால் அந்த பசி தீர்க்க இவனுக்கு வழியே கிடைக்கவில்லையா.? அடுத்தவர்களின் உயிர்களை கொன்றால்தான் பசி தீருமா.?

நான் எனது எண்ணங்களில் மூழ்கி இருந்தபோது படுக்கையறையின் கதவை திறந்துக் கொண்டு உள்ளே வந்தான் புவின். சக்தி இருந்திருந்தால் முறைப்பாலேயே கொன்றிருப்பேன் அவனை.

கையில் உணவு தட்டை எடுத்து வந்தவன் என் முன்னால் வந்து அமர்ந்தான். என் முகத்தை நோக்கி கையை நீட்டினான். அவனின் தீண்டல் பிடிக்காமல் முகத்தை திருப்பினேன். எனது தாடையை பற்றி அவன் பக்கம் திருப்பியவன் என் வாயின் மீதிருந்து எதையோ பிரித்து எடுத்தான்.

டேப்.. இவ்வளவு நேரம் வாய் பேச முடியவில்லை.. வாயின் மீது டேப் இருந்ததை கூட அறியவில்லை நான். முட்டாள்தனத்தின் அளவு அதிகரித்துக் கொண்டே இருப்பது போலிருந்தது.

உணவு தட்டை கையில் எடுத்தவன் ஸ்பூன் நிறைய உணவை அள்ளி என் வாயின் முன் கொண்டு வந்தான்.

முறைத்தேன் நான். "எனக்கு வேணாம்.." அழுத்தமாக சொன்னேன்.

என்னை குறுகுறுப்பாக பார்த்தவன் துப்பாக்கி ஒன்றை எடுத்து என் முன் வைத்தான்.

"சொல் பேச்சை கேட்கலன்னா சுட்டுடுவேன்.."

"நெஞ்சுக்கு நேரா சுடு.." என்றேன் எரிச்சல் குரலில் முகத்தை திருப்பிக் கொண்டு.

அவனை காதலித்த பாவத்திற்கு இதயத்தில் குண்டடிப்பட்டு இறந்தால் கொஞ்சம் வலி குறைவாக இருக்கும் என்று தோன்றியது.

என் பின்னங்கழுத்தை பற்றியவன் என் முகத்தை அவனுக்கு அருகே இழுத்தான்.

"நாட்டுப்பற்றா.? இல்ல திமிரா.?" என்றான் சிறு கர்ஜனையில்.

அவனை இப்படி பார்ப்பது இதுவே முதல் முறை. அப்பாவி பிஞ்சு குழந்தைகளை கொல்பவன் என் ஒருத்திக்கு நியாயமாய் இருக்க வாய்ப்பு இல்லை.

"என்னை விடு.." என்றேன் எரிச்சலோடு. அவனின் தீண்டல் அருவெறுப்பை தந்தது. அவன் கை விரல்களின் அழுத்தம் என் கழுத்திற்கு வலியை தந்தது.

"சாப்பிடு.. விடுறேன்.." என்றான்.

"உன் கையால் சாப்பிடுவதுக்கு பதிலா செத்து போலாம்.." என்றேன்.

முறைத்தான். உடனே பார்வையை மாற்றிக் கொண்டான். அதே காதல் பார்வையோடு என் கண்களை பார்த்தான்.

"கோபப்படாதே.. நாம இன்னும் ஒரு வாரத்துல இங்கிருந்து கிளம்பிடலாம்.. மனுசங்க காலடி தடமே பதியாத தனி தீவுல நீயும் நானும் மட்டும் வாழ போறோம்.." என்றான் கண்கள் மின்ன.

அவனின் வலது கரம் என் கன்னத்தை தடவியது. என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை. முகம் அனிச்சையாக திரும்பியது‌. கன்னத்தை பற்றியிருந்தவனின் கரம் அழுத்தமானது.

"உன்னால என்னை விலகி தள்ள முடியாது.. நாம இரண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தரா பிறந்திருக்கோம்.. நீயில்லன்னா நான் இல்ல.. நான் இல்லன்னா நீயும் இல்ல.." என்றவன் நெருங்கி வந்து இதழின் ஓரத்தில் சிறு முத்தம் பதித்தான்.

கண்கள் கலங்கியது எனக்கு. கண்ணீர் கன்னம் தாண்டியது. நிமிர்ந்து பார்த்தவன் "ஏன் என்னை பார்த்து பயப்படுற.? ஏன் என்னை வெறுக்கற.? நான் உனக்கு எந்த தீங்குமே செய்ய மாட்டேன்.. ப்ராமிஸ்.." என்றான்.

தேம்பினேன். "நீ என்னில் பலரை.. என் நாட்டில் பலரை கொன்னுட்ட.." என்றேன். ஏன் இந்த தேம்பல் என்று புரியவில்லை. அவன் என்னை காதலிக்கவில்லை. இதுதானே உண்மை.? பிறகு ஏன் அழுகை வருகிறது.?

"நாடு எங்கே இருக்கு.? இதே நான் உன் எதிரி நாட்டாரை அழிச்சிருந்தா அப்போது என்னை நல்லவன்னு சொல்லியிருப்ப.." என்றவனை முறைத்தேன்.

"எந்த நாடா இருந்தா என்ன.? மனுசங்களை கொல்ற நீ மிருகம்தான்.." என்றேன் ஆத்திரத்தையும் அழுகையையும் அடக்க முடியாமல்.

"உனக்கு இந்த நாட்டை பத்தி தெரியாது குழலி.. நானும் என் குட்டி தம்பியும் பசியோடு எத்தனை நாள் இருந்திருக்கோம் தெரியுமா.? ஒருவேளை சாப்பாட்டுக்காக எத்தனை வீடு ஏறி இறங்கியிருக்கோம் தெரியுமா.?" என அவன் கேட்டதும் என் கண்கள் அதிகபடியான கண்ணீரை சிந்தின. காதலித்த தோசம் அவன் வாழ்ந்த வாழ்க்கையை அவன் சொன்னதும் என்னையும் அந்த நேரத்திற்கு சென்று வாழ வைத்தது‌.

"உனக்கு பசிங்கறதுக்காக மொத்த நாட்டையும் அழிப்பியா.? இது தப்பு இல்லையா.? எல்லாருமே ஏதோ ஒரு விதத்துல உன் சொந்தம்தானே.? இவங்களை நீயே ஏன் கொல்ற.?" தேம்பியபடி கேட்டேன்.

"இல்ல குழலி.. இங்கே சொந்தம் கிடையாது.. பந்தம் கிடையாது.. இவங்க எல்லோருக்கும் பணம் பதவி புகழ் இது மட்டும்தான் தேவை.. என்னை போன்ற பசியால வாடுற குழந்தைகளுக்கு பதிலா நான் அவங்க இடத்துல இருந்து இந்த நாட்டை அழிக்கிறேன்.." என்றான்.

அவனின் கன்னத்தில் அறைய ஆசையாக இருந்தது எனக்கு.

"பசியால வாடுற குழந்தைங்க உன்னை பழி வாங்க சொன்னாங்களா.? அதுக்கு பதிலா நீ அவங்களுக்கு பசி தீர்த்து வச்சிருக்கலாமே.!" என்று நான் கேட்டதும் பைத்தியக்காரன் போல சிரித்தான்.

"இந்த நாகரீகத்தை அழிக்க ஆசைப்படுறேன் குழலி.. இந்த மக்களோட வாழ்க்கை முறையை அழிக்க நினைக்கிறேன்.. மீண்டும் ஆதிகாலத்துக்கு திரும்பட்டும் அனைவரும்.. வனத்தின் மரத்து கனிகள் அனைவருக்கும் பொதுவானதா இருக்கட்டும். பசித்த வேளையில் பழம் பறித்து தின்று, தாகமெடுத்த வேளையில் ஓடை, குட்டையில் தண்ணீர் குடித்து என் போன்ற குழந்தைகள் பசியில் வாடாத‌ ஒரு காலத்துக்கு திரும்ப போகணும்.." என்றான்.

உதட்டை கடித்தபடி அவனை பார்த்தேன். "வனத்து வாழ்க்கையில் அனாதை குழந்தைங்க சாக மாட்டாங்களா.? அங்கேயும் நாய் நரி பிடிச்சி சாப்பிடும்.. மரத்தின் உச்சி கிளை முறிஞ்சி விழுந்து குழந்தைங்க கை கால் உடைஞ்சி சாவாங்க.. யாரோ உன் மைண்டை நல்லா கன்ப்யூஸ் பண்ணி விட்டிருக்காங்க.. உன் சுய சிந்தனைக்கு வந்து யோசிச்சி பாரு.. நீ செய்வது எல்லாமே ரொம்ப பெரிய தப்பு.." என்றேன்.

இடது கையால் ஸ்பூனை எடுத்து வாயில் உணவை ஊட்டினான். நான் இடது புறம் திரும்பி உணவை தரையில் துப்பினேன்‌. பளீரென்று கன்னத்தில் ஒரு அறை விழுந்தது. அவன்தான் அறைந்திருந்தான்.

"சாப்பாட்டுக்காக.. ஒரு வேளை பசி தீர்க்கும் உணவுக்காகதான் நான் இத்தனை உயிர்களை கொன்னுட்டு இருக்கேன்.. என் கண் முன்னாடி சாப்பாட்டை வேஸ்ட் பண்ணாதே.." என்று கர்ஜித்தான்.

"*** யோக்கியம் மாதிரி பேசாதே! இந்த பாம் வெடிச்சதுல எத்தனை பெற்றோர் இறந்திருப்பாங்க.. அவங்க குழந்தைங்க எல்லாம் இப்ப உன்னை போல அனாதை ஆகி இருக்க மாட்டாங்களா.? நீ ஒரு ராட்சசன்னு சொல்லு ஒத்துக்கறேன்.. நீ கஷ்டப்பட்ட.. அதனால இந்த நாட்டுல இருக்கும் மத்த குழந்தைகளும் கஷ்டப்படணும்ன்னு ஆசைப்படுற.. அவ்வளவுதான். அது போலதான் இந்த சாப்பாடும்.. நீ வச்ச குண்டுகளால பலதரபட்ட மக்கள் இறந்திருங்காங்க. அதுல எத்தனை விவசாயிகள் இறந்திருப்பாங்க.? உணவு படைப்பவனையே கொன்னுட்டு உணவை கொண்டாடுறியா நீ.? குதிரைக்குதான் கண்ணை கட்டி ஒரே பாதையில் பார்க்க விடுவாங்க..‌ உனக்கு என்ன கேடு.? யோசிக்க கூடவா மூளை இல்ல.? அமைதியையும் அன்பையும் தவிர எந்த ஒரு விசயமும் பிரச்சனையை தீர்க்காதுன்னு உனக்கு தெரியாதா.?" என்றேன் கோபத்தோடு. கன்னம் வேறு சுரீரென்று எரிந்தது.

"இன்னும் ஒரு வாரம் டைம் இருக்கு.. நிறைய பேசலாம்.. நீ இப்ப சாப்பிடு.." என்றான்.

மறுப்பாக தலையசைத்தேன். "நான் பாத்ரூம் போகணும்.." என்றேன்.

சந்தேகமாக பார்த்தவன் என்னை எழுப்பி நிறுத்தினான்‌. கால் கட்டுகளை அவிழ்த்து விட்டான்.

"நட.." என்றான்.

பாத்ரூம் வாசலில் நின்றபடி கை கட்டை பார்த்தேன். "இதையும் கழட்டி விடு.." என்றேன்.

"நான் ஹெல்ப் பண்றேன்.." என்றவனை என்னவென்று சொல்வதென்று தெரியவில்லை.

"ஒரு ***ம் வேண்டும்.. கை கட்டை அவிழ்த்து விடு.." என்றேன்.

என்னை அடிக்கண்களால் பார்த்துக் கொண்டே கைகளின் கட்டை அவிழ்த்து விட்டான்.

"நான் இங்கேயேதான் நிற்பேன்.. தப்பிக்க நினைக்காதே.." என்றவனை கண்டுக் கொள்ளாமல் பாத்ரூமுக்குள் புகுந்து கதவை அறைந்து சாத்தினேன்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN