காதல் கடன்காரா 26

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அபிராமி கார்த்திக்கை விட்டு பிரிந்து மூன்று மாதங்களுக்கு மேலாகி விட்டது.

கார்த்திக் பைத்தியக்காரன் போலவே ஆகிவிட்டான். அவளோடு வாழ்ந்த நாட்களை நினைத்து நினைத்து மனதுக்குள் மருகினான்.

அவளை கனவில் கூட மறக்க முடியவில்லை அவனால். இரவுகள் அவளின் அணைப்பை தேடின. பகல்கள் அவளின் குரலையும், முகத்தையும் தேடின.

பார்க்கும் இடமெங்கும் அவளைத்தான் கண்டான் கார்த்திக். உணவு சரியாக இறங்கவேயில்லை. உறக்கமும் பிடிக்கவில்லை. வேலையிலும் சரியாக ஈடுபாடு காட்ட முடியவில்லை. நிறுவன அதிகாரியிடம் நிறைய திட்டுகள் வாங்கினான்.

ஆரம்பத்தில் அபிராமிக்குதான் ஆதரவாக இருந்தாள் யமுனா. ஆனால் அவள் நேரில் சென்று அழைத்தும் கூட அபிராமி வீடு வந்து சேராததால் அவளுக்கு மருமகளின் மீது கோபம்.

"ஊர்ல இவ ஒருத்தியேதான் ரம்பையா.?" என்று மகனின் காதுபட அவ்வப்போது முனகினாள்.

கார்த்திக்கால் இன்னொரு ரம்பையை நினைக்க முடியவில்லை. அவள் அவனின் இன்னொரு உயிர். அவளை பிரிந்து இருப்பது தன்னை முழுமையாக இழந்து நிற்பது போலிருந்தது.

மாலை நேரங்களில் வீடு வரும் போதெல்லாம் இவனுக்காக வாசலில் காத்திருக்கும் அவள் இப்போது இல்லை. வீடு வரவே பிடிக்கவில்லை அவனுக்கு.

காலையில் காப்பி தந்து எழுப்பியவளின் அனுசரணையை இப்போதும் எதிர்பார்த்தான். அதனாலேயே விடியலும் கசந்து போனது.

அவர்களின் குளியலறையில் அவள் விட்டுப் போன ஸ்டிக்கர் பொட்டு அவன் ஒவ்வொரு முறை குளிக்க செல்லும் போது ரணமாய் வலியை தந்தது.

நடைப்பிணம் போல வாழ பிடிக்காமல் அபிராமியை அழைத்து வர அவனும் பல முறை முயன்றான். ஆனால் அபிராமியின் பிடிவாதம் தளரவேயில்லை. அவளுக்கு இவ்வளவு பிடிவாதம் என்பதையே இப்போதுதான் அறிந்தான் அவன்.

அந்த மார்பிங் புகைப்படங்களை ஈஸ்வர்தான் அனுப்பினான் என்று யூகித்தாலும் கூட அதை நிரூபிக்க வழி கிடைக்காமல் போய் விட்டது.

இவனின் நினைவில் அபிராமியும் உடலை வருத்திக் கொண்டு இருப்பதாக தகவல் வந்தது. இவன் சென்று பார்க்கும் ஒவ்வொரு முறையும் அவளும் ஒரு சுற்றி இளைத்துதான் போயிருந்தாள். இவனை தூரமாக காணுகையிலேயே கண்ணீரை துடைப்பாள். அதை பார்க்கையில் கார்த்திக்கிற்கு இதயம் வலிக்கும்.

ஆனால் அவள் இவன் சொல்ல வந்ததையே ஏற்க மறுத்து விட்டாள்.

"நான் பார்த்தேன்.. தூங்கினா கூட நீயும் அவளும் சேர்ந்து இருக்கற மாதிரிதான் கனவு வருது.. இன்னும் கண்ட கண்ட பொண்ணுகளோடு நீ சுத்துறதுதான் மூளை முழுக்க ஓடிட்டு இருக்கு.. நான் இன்னும் சாகாம இருக்கறதே பெரிசு.. தயவு செஞ்சி உன் பொய்யை என்கிட்ட வந்து சொல்லாதே.. உன்னை காதலிச்ச பாவத்துக்கு இப்படியே அழுதே சாகறேன்.." என்று விட்டாள் அவள்.

அவளின் கண்ணீர் துளிகள் ஒவ்வொன்றும் இவனின் நெஞ்சில் நெருப்பு துளியாக விழுந்தன.

அவளை திட்டுகையில், அறைகையில், அவளை பணக்காரி என நினைத்து ஓரம் கட்டுகையில் வராத பாசம் இப்போது மலையாய் வளர்ந்தது.

அவளை கொஞ்சும் போதும், அவளின் இதழ் வருடி முத்தம் தருகையிலும் கூட உணராத காதலை இந்த பிரிவில் உணர்ந்தான். காதலின் சுவையை பிரிவில்தான் அறிய முடியும் என்பதை கேட்டு சிரித்தான். ஏனெனில் அவன் அனுபவித்துக் கொண்டிருந்தது அனைத்தும் காதலின் வலிகளே!

சிறு பிள்ளை போல அடம் பிடிக்கிறாள் என்று பல நேரங்களில் எண்ணம் வரும். ஆனால் அவள் தங்களின் சொத்தை கட்டி காப்பாத்துகையில் எந்த அளவிற்கு மெச்சூரிட்டியோடு நடந்துக் கொண்டாள் என்று நினைக்கும்போது இந்த அடம் காதலின் விளைவு என்று மட்டுமே தோன்றியது அவனுக்கு.

மாலை வேளைகளில் தங்களின் குழி காட்டு வயலுக்கு செல்லும் போதெல்லாம் அவனுக்கு அவளோடு கை கோர்த்து இந்த வயல் வெளியில் நடந்துச் சென்றதுதான் நினைவுக்கு வந்தது.

சில மாதங்களுக்கு முன்னால் அபிராமி அந்த குழிகாட்டில் பருத்தியை நட்டிருந்தபோது ஒரு சில நாட்கள் அவளுக்கு துணையாக கார்த்திக்கும் வந்திருக்கிறான்.

அவன் துணை வந்த ஒருநாளில் அவள் பருத்தியின் இளம் பிஞ்சு காய் ஒன்றை பறித்து தோல் நீக்கி உண்டு விட்டு "செம டேஸ்ட்.." என்றதும், அவளின் இதழின் ஓரம் கசிந்த பருத்தி பிஞ்சின் வெள்ளை பாலை வெறித்து பார்த்தவன் அவள் எதிர்பாராதவிதமாக சட்டென்று அவளின் இதழில் தன் இதழ் பதித்து அந்த பருத்தி பிஞ்சின் ருசியை அறிந்ததை அந்த காட்டின் சுவரோரம் சாய்த்து வைக்கப்பட்டிருந்த காய்ந்த பருத்தி குச்சிகளை பார்க்கும் போதெல்லாம் நினைத்து பார்த்தான். பருத்தி பிஞ்சின் இனிப்பு தொண்டையில் கரைவது போலவே இருக்கும் அவன் இதை நினைக்கும் ஒவ்வொரு முறையும்.

அவனது அறையின் கூரையில் வட்ட சாமந்தியின் உருவம் பதிக்கப்பட்டிருந்தது. அவளே அருகே இருந்து ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்தாள். அவளின் அக்கறையின் அருமை இப்போதுதான் அவனுக்கு முழுமையாக புரிந்தது.

அவள் சமைக்க கற்றுக் கொண்ட பிறகு தானாக தனியா நின்று சமைத்த பலகாரத்தை முதலில் எடுத்து வந்து கார்த்திக்கிற்குதான் ஊட்டி விடுவாள்.

"எல்லாம் காக்காவுக்கு முதல் சாதம் வச்சி டெஸ்ட் பண்ணுவாங்க.. அண்ணி உன்னை வச்சே எல்லாத்தையும் டெஸ்ட் பண்றாங்கடா அண்ணா.." என்று புவனா கிண்டல் செய்யும்போது கூட "நான் முதல் முதலாக செய்வதை உன் அண்ணா சாப்பிட்டு நல்லாருக்குன்னு சொன்னா எனக்கு ஒரு சந்தோசம் இருக்கும் இல்லையா.?" என்றுதான் கேட்பாள் அவள்.

அவளை மீண்டும் வீட்டுக்கு அழைத்து வர அவன் செய்த முயற்சி அத்தனையும் தோல்வியே! அதட்டி அழைத்தால் "கட்டாயப்படுத்தினா நான் சூஸைட் பண்ணிப்பேன்.." என்றாள் கண்ணீரோடு.

"வேற ஒருத்தியை கட்டிக்கறதா சொல்லுண்ணா.. உடனே வருவா.." என்று தன் மனதில் உண்டான திட்டத்தை சொன்னாள் புவனா.

அபிராமியை காயப்படுத்தும் எந்த விசயத்தையும் அவனால் தற்போது செய்ய முடியவில்லை. எப்போது இந்த அளவிற்கு காதலில் விழுந்தோம் என்று அவனுக்கே நினைவில் இல்லை.

மூர்த்தியும் இரண்டு மூன்று முறை போன் செய்து அபிராமியிடம் பேசினான். ஆனால் அபிராமியோ புவனாவிடம் சொன்னதையேதான் இவனிடமும் சொன்னாள்.

அபிராமி நாளை முதல் கல்லூரிக்கு செல்வதாக தகவல் வந்தது.

அந்த செய்தி கேட்டதிலிருந்தே அவனுக்குள் கலவரம் உண்டாகி இருந்தது. கல்லூரியில் வேறு யாரையாவது பார்த்து காதலித்து விடுவாளோ என்று பயந்தான். அவளின் பொசசிவ்னெஸ்ஸை இப்போது இவனும் அனுபவித்தான். என்ன செய்வது என்று புரியாமல் குழம்பி போனான்.

உடற்பயிற்சியை முடித்த அபிராமி வீட்டின் மொட்டை மாடி கைப்பிடி சுவரில் ஏறி அமர்ந்தாள். இளம் சூரியன் கிழக்கில் இருந்தது. சில்லென்று தென்றல் அருகே இருந்த அவர்களின் தென்னந்தோப்பில் இருந்து பரவிக் கொண்டிருந்தது. அவள் அணிந்திருந்த கையற்ற பனியனும், முக்கால் பேண்டும் அவளுக்கு வெகு அழகாய் பொருந்தி போயிருந்தது.

கர்லா கட்டையால் தலையை சுற்றி வட்டம் சுத்திக் கொண்டிருந்த முத்தமிழ் தங்கையின் பக்கம் திரும்பினான்.

வியர்வையில் குளித்து இருந்தவள் அம்மா வைத்து விட்டு சென்ற தண்ணீரை எடுத்து குடித்தாள்.

சொம்பை ஓரம் வைத்தவள் உதட்டை துடைத்துக் கொண்டு நிமிர்ந்தாள்.

"என்ன பார்வை.?" என்றாள் அண்ணனிடம்.

"அது எதுக்கு இன்னும் அந்த தாலி கயிறு.? உனக்கு கொஞ்சமும் பொருந்தல.!" என்றான்.

கயிற்றை தூக்கி கண்களுக்கு முன் கொண்டு வந்து பார்த்தவள் கேலியோடு கயிற்றை கீழே விட்டாள்.

"இருக்கட்டும்.. அந்த மாப்பிள்ளைக்கு உண்மை தெரியற வரைக்கும்.!" என்றாள்.

கை கடிகாரத்தை பார்த்து விட்டு கைப்பிடி சுவரை விட்டு இறங்கியவள் ஓரத்தில் கிடந்த ஸ்கிப்பிங் கயிற்றை கையில் எடுத்தாள்.

"அந்த வீட்டுக்கு போன பிறகு எவ்வளவு வெயிட் போட்டுட்டேன் தெரியுமா.?"

"நீ இங்கே கஷ்டப்பட்டு வொர்க் அவுட் பண்ணி உடம்பை ஷேப்புக்கு கொண்டு வர டிரை பண்ணிட்டு இருக்க.. ஆனா அங்கே அவன் 'என் பொண்டாட்டி என்னை பிரிஞ்சி இருப்பதால இளைச்சி போயிட்டா'ன்னு பீல் பண்ணிக்கிட்டு இருக்கான்.." என்று சொல்லி சிரித்தான் முத்தமிழ்.

"அவனை பத்தியே பேசாத அண்ணா.. இரிட்டேட்டிங்கா இருக்கு.." என்றவள் ஸ்கிப்பிங்கில் கவனம் செலுத்த ஆரம்பித்தாள்.

இருவரும் பயிற்சியை முடித்துக் கொண்டு குளித்து விட்டு உணவு உண்ண சென்றனர். அனைவரும் உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அபிராமி தன் தாத்தாவுக்கும் அண்ணனுக்கும் இடையில் அமர்ந்தாள்.

"ஸ்கூட்டியை ரெடி பண்ணி வச்சிருக்கேன் அபிராமி.. நாளையிலிருந்து காலேஜ்க்கு அதுலயே போ.." என்றார் தாத்தா.

உணவை உண்டுக் கொண்டே தாத்தாவை நிமிர்ந்து பார்த்தவள் "எனக்கு கார் வேணும்.. புது மாடல் காரா இருக்கணும்.." என்றாள்.

தாத்தா தன் மகனை திரும்பி பார்த்தார். அவரோ தனக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்பது போல சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

"சரிம்மா.." என்றார் தாத்தா. அபிராமி நிமிர்ந்து பார்க்காமல் தலையை மட்டும் அசைத்தாள்.

அன்று முற்பகலில் முத்தமிழும் தாத்தாவும் சென்று புது காரை வாங்கி வந்தனர்.

மாலை நேரத்தில் தன் கல்விக்கு சம்பந்தமான தகவல்களை திரட்டி நோட்டில் எழுதிக் கொண்டிருந்தாள் அபிராமி. ஹாலின் ஒரு ஓரத்தில் இருந்த ஊஞ்சலில் அமர்ந்தபடிதான் எழுதிக் கொண்டிருந்தாள். ஒற்றை கால் கீழே ஆடிக் கொண்டிருந்தது.

"அபிராமி.." என்றபடி அருகே வந்து நின்றாள் அம்மா.

ஊஞ்சலின் ஆட்டத்தை நிறுத்திவிட்டு நிமிர்ந்து பார்த்தாள் அபிராமி. தான் அணிந்திருந்த கண்ணாடியை கழட்டி நோட்டின் மேல் வைத்தாள்.

"ஏன்ம்மா.?" என்றவளை தயக்கமாக பார்த்தாள் அவள்.

"நேத்து உன் மாமா போன் பண்ணாரு அபிராமி. காட்டுலயும் பண்ணையிலும் வேலைன்னு சுத்திட்டு இருந்தவரு போன வாரம்தான் நம்ம வீட்டுக்கே வந்தாரு.." என்ற அம்மாவை தலை சாய்த்து பார்த்தவள் "இப்ப எதுக்கு பிறந்த வீட்டு ராமாயணம்‌.? மாமாதான் பிஸின்னு எனக்கே தெரியுமேம்மா.." என்றாள்.

"அது இல்ல அபிராமி.. உன் கால்ல கொலுசு இல்லன்னதும் உன் மாமாவுக்கு வருத்தம். அன்னைக்கே கேட்க தயக்கமா இருந்ததால நேத்துதான் போன் பண்ணி என்கிட்ட கேட்டாரு.. 'கொலுசு அந்து போச்சின்னு சொன்னா நான் மாத்தி கூட தந்திருப்பேனே.. ஏன் புள்ளை காலு சும்மா இருக்கு.?'ன்னு கேட்டாரு.."

கார்த்திக்கின் வீட்டில் கொலுசை விட்டுவிட்டு வந்து விட்டாள் அபிராமி. மற்றப் யோசனைகளில் இந்த கொலுசை பற்றி யோசிக்க மறந்து விட்டாள். கிட்டத்தட்ட ஒரு வருடமாக காலில் கொலுசே அணியாமல் இருந்ததில் கால் வெறுமனை இருப்பது வித்தியாசமாக தென்படாமல் போய் விட்டது அவளுக்கு.

"ஆள் அனுப்பி வாங்கிட்டு வர சொல்றேன்ம்மா.." என்றவள் கையிலிருந்த புத்தகத்திற்கு பார்வையை திருப்பினாள்.

"அ.. அது இல்லடி.. என்ன இருந்தாலும் அவன் உன் புருசன் இல்லையா.? ஒரு வருசம் கூட வாழ்ந்துட்டு எப்படிடி பிரிய முடியும்.? ஏதோ பழி வாங்கல், நாடகம்ன்னு நீயும் உங்க அண்ணனும் பேசிக்கிறிங்க.! வாழ்க்கை அப்படி இல்லடி.! அனுசரணை, விட்டு கொடுத்து போறது, பொறுத்து போறது எல்லாம் நமக்குதான் நல்லது.." என்றாள் அம்மா.

அபிராமி கண்ணாடியை எடுத்து அணிந்தபடி அம்மாவை திரும்பி பார்த்தாள்.

"இதுக்கு முன்னால உன்னை திட்டி இருக்கேனா அம்மா.?" என கேட்டாள்.

இல்லையென தலையசைத்தவளிடம் "இனியும் திட்ட கூடாதுன்னு நினைக்கிறேன்.. 'எனக்கு உன் புருசனை பிடிக்கல.. நீ அவரோடு வாழாதே'ன்னு சொன்னா உன்னால முடியுமா.? முடியாது.! ஏனா அதான் லவ்வு.! அது போலதான் இதுவும். 'அவன் உனக்கு புருசன். அவனை எனக்கு பிடிச்சிருக்கு. வாழ்ந்துதான் ஆகணும்'ன்னு நீ கண்டிசன் போடாதே.! அது முடியாது. ஏனா இது வெறுப்பு.. ப்யூர் ஹேட்.." என்றவள் நோட்டில் குறிப்புகளை எழுத ஆரம்பித்தாள்.

'ஒரு வருசம் கூடவே வாழ்ந்தும் அவனை கொஞ்சம் கூட நேசிக்காம இருந்திருப்பாளா.?' அம்மாவிற்கு குழப்பமாக இருந்தது.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN