காதல் கடன்காரா 27

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
காலை நேரம்.

கல்லூரியின் முதல் நாளை ஆர்வமாகவும் பரபரப்போடும் வரவேற்றுக் கொண்டிருந்தனர் மாணவர்கள்.

சிவப்பு வண்ண கார் ஒன்று கல்லூரி வளாகத்திற்குள் நுழைந்தது.

மாணவர்களின் பார்வை அந்த காரை பின் தொடர்ந்தது. பேராசிரியர் யாராவது இருக்கலாம் என்று மாணவர்கள் யோசித்த வேளையில் காரை ஓரம் நிறுத்திவிட்டு இறங்கிய அபிராமி கல்லூரி கட்டிடத்தை நோக்கி நடந்தாள்.

ஒரு வருடம் இடைவெளியால் அவளின் சக தோழிகள் அனைவரும் அடுத்த வகுப்பில் படித்துக் கொண்டிருந்தனர்.

"அபிராமி.." சுவாதியின் குரல்தான். அபிராமி மலர்ந்த முகத்தோடு திரும்பினாள்.

ஸ்கூட்டியை ஓரம் கட்டிவிட்டு இறங்கினாள் சுவாதி. சிந்துவும் வேறு ஒரு திசையிலிருந்து வந்தாள். இருவரும் சூப்பர் மாடலை போல தோற்றமளித்தனர்.

"என்ன டிரெஸ் இது.?" தோழியை கண்டதும் சுவாதி முதலில் கேட்டது இதைதான்.

அபிராமி தன்னை பார்த்தாள். எளிமையான பருத்தி புடவை அது. அவளுக்கு மிகவும் அழகாய் இருப்பதாக அம்மாவும் சொன்னாள்.

"ஏன்.? எனக்கு மேட்சா இல்லையா.?" என கேட்டவளிடம் உதடு பிதுக்கிய சுவாதி "அரை கிழவி மாதிரி புடவையெல்லாம் கட்டிக்கிட்டு காலேஜ் வந்திருக்க.." என்றாள்.

"இன்னும் கொஞ்ச நாள்.. அதுக்கப்புறம் பழைய மாதிரி மாறிடுவேன்.." என்றவள் தோழிகளை கோபத்தோடு பார்த்தாள்.

"எல்லாத்துக்கும் நீங்க இரண்டு பேரும்தான் காரணம்.. நீங்க மட்டும் என் கல்யாண நாள் அன்னைக்கு டூர்ல மாட்டிக்காம இருந்திருந்தா நான் அந்த கார்த்திக் பிசாசுக்கிட்ட மாட்டி இருக்க மாட்டேன்.." என்றாள் எரிச்சலோடு.

"இவ ஒருத்தி.. இதை ஒன்னையே சொல்லி சாவடிக்கறா.. ஆள் ஹேண்ட்சமாதானே இருக்கான்.. கிடைச்சதுடா லக்குன்னு கிடைச்ச வரைக்கும் வாழ்ந்துட்டுதானே வந்திருப்ப.. இப்ப என்னவோ சன்யாசி வேஷம் போடுற.." கிண்டலடித்த சிந்துவின் தோளில் அறைந்தாள் அவள்.

"அவன் அந்த அளவுக்கு வொர்த் ஒன்னும் கிடையாது.. நீ கொஞ்சம் நிறுத்து.." என்றாள்.

"கிளாஸ்க்கு போகலாம் வாப்பா‌‌.." தோழிகள் முன்னால் நடந்தனர். பின்தொடர்ந்த அபிராமி "ஒரு வருசமே வீணா போச்சி.. ச்சை.." என்றாள்.

சிந்துவும் சுவாதியும் ஒருவரையொருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர்.

இருவருக்கும் இடையில் வந்து நின்ற அபிராமி "சிரிச்சிங்கன்னா கொன்னுடுவேன்.." என்று பொய்யாக மிரட்டினாள்.

"அபிராமி.." தோழிகளோடு பேசி சிரித்தபடி நடந்தவள் தன்னை அழைப்பவனின் குரலை கேட்டதும் சட்டென்று முகத்தை மாற்றிக் கொண்டாள். திரும்பி பார்த்தாள்.

கார்த்திக் அவளின் முன்னால் வந்து நின்றான். அடர்ந்திருந்த தாடி அவனை கோரமாக காட்டியது. விழிகள் உள்வாங்கி இருந்தன. அவனின் குரல் கூட சற்று மாறி போயிருந்தது.

தினமும் வீட்டின் வாசலுக்கு வந்து காவல் இருப்பவன் இங்கு ஏன் வந்தான் என்று குழம்பினாள்.

'காலேஜ் கேட்ல வாட்ச்மேன் இல்லையா.?' எரிச்சலாக நினைத்தவள் முகத்தில் மட்டும் அதீத சோகத்தை காட்டியபடி தரையை பார்த்தாள்.

"இங்கே ஏன் வந்திங்க.?" என்றாள் புடவையின் நுனியை விரலில் சுற்றியபடி.

தோழிகள் இருவரும் அபிராமியின் நடவடிக்கை கண்டு அதிர்ந்து விட்டனர்.

"என் கூட வந்துடு அபிராமி.. ப்ளீஸ்.. எனக்கு பைத்தியமே பிடிக்கற மாதிரி இருக்கு.. நான் ஆயிரம் முறை சாரி வேணா கேட்கறேன்.. வந்துடு.. அந்த பொண்ணுக்கும் எனக்கும் நடுவுல எந்த சம்பந்தமும் இல்ல.. நம்பு.." என்றான் கெஞ்சலாக.

அபிராமி தன் கண்களை துடைத்துக் கொண்டாள்.

சிந்து மறுபக்கம் திரும்பினாள். நெஞ்சை பற்றிக் கொண்டாள். தன் தோழியால் இந்த அளவிற்கு நடிக்க இயலும் என்பதையே இன்றுதான் அறிந்தாள் அவள். அபிராமி அந்த சுட்டு விரலை மடக்கி விழியின் ஓரங்களை துடைத்த காட்சியை சிந்து அவ்வளவு சீக்கிரத்தில் மறக்கவே மாட்டாள்.

"நானும் மறக்கணும்ன்னுதான் டிரை பண்றேன் கார்த்திக்.. எனக்கு மட்டும் உன்னை விட்டு பிரிஞ்சி இருக்கணும்ன்னு ஆசையா.?" என கேட்ட அபிராமியின் கொஞ்சல் குரலில் சுவாதியும் கூட தடுமாறி விட்டாள் என்றே கூறலாம்.

கார்த்திக் வருத்தமாக மனைவியை பார்த்தான். அவளின் கழுத்தில் இருந்த தாலி கயிறு நைந்து போய் இருந்தது. அந்து விடும் அளவிற்கு இருந்தது. அவனின் சட்டை பையில் அவன் செய்த புது தாலி இன்னமும் இருந்தது.

"நீயா தப்பா புரிஞ்சிக்கிட்ட அபிராமி. அந்த பொண்ணோட நிழலை கூட நான் தொட்டது இல்ல.." என்றவனை கலங்கும் விழிகளோடு நிமிர்ந்து பார்த்தாள்.

"நானும் அதைதான் நம்பணும்ன்னு எனக்குள்ள தினம் ஆயிரம் முறை சொல்லிக்கிறேன் கார்த்திக்.. ஆனா இந்த மனசு.. இந்த மனசு என் பேச்சை கேட்கவே மாட்டேங்குது.." என்றவள் விம்மியபடி மீண்டும் தரையை பார்த்தாள். கண்ணீர் அவளின் கன்னங்களில் கோடு போட்டது.

கார்த்திக்கிற்கு தலையை பிய்த்துக் கொள்ள வேண்டும் போல இருந்தது. அவளின் நிலையை தான் புரிந்துக் கொண்டதாக நினைத்தான். ஆனால் அதே சமயம் தான் என்ன செய்வது என்று புரியவில்லை அவனுக்கு‌.

ஒவ்வொரு முறையும் அவளின் இடத்தில் இருந்தேதான் யோசித்தான் கார்த்திக். அவளின் மனம் என்ன பாடுபடும், அவளின் இதயம் எப்படி வலித்திருக்கும் என்று இருபத்து நான்கு மணி நேரமும் அவளையேதான் யோசித்தான்.

பிரிவு வரும் அளவுக்கு பிரச்சனையே நடக்கவில்லை என்பது கூட நினைவில் இல்லை.

"செத்துடலாம் போல இருக்கு கார்த்திக்.. என்னை தொந்தரவு செய்யாதேன்னு உன்கிட்ட சொல்லவும் மனசு வரமாட்டேங்குது. அதே சமயம் உன்னை பார்த்த பிறகு உண்டாகுற என் மனசோட காயத்தையும் என்னால ஆற வச்சிக்க முடியல.." என்றாள் எங்கோ பார்த்த வண்ணம்.

அவளின் முகத்தையே பார்த்து நின்றவன் "என்ன செஞ்சா என்னோடு வருவ.? நான் என்ன பண்ணா உன் கோபம் தீரும்.?" என்றான்.

'செத்து போ.. அப்ப வேணா என் கோபம் தீரும்..' என்று நினைத்தவள் "இது கோபம் இல்ல கார்த்திக்.. சோகம்.." என்றாள்.

கார்த்திக் கீழுதட்டை கடித்தபடி யோசித்தான்.

சிந்து தோழியின் கையை பற்றினாள்.

"வா போகலாம்.. டைம் ஆயிட்டு இருக்கு.." என்றபடி தோழியை கல்லூரி கட்டிடம் நோக்கி நடத்தி சென்றாள்.

அபிராமி நடந்தபடியே கார்த்திக்கை திரும்பி பார்த்தாள். அவளையே பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு அவளின் ஏக்க பார்வை கண்டு நெஞ்சம் வலித்தது‌.

அருகே இருந்த கட்டிடத்தை பார்த்தவன் அதனுள் ஓடி படிகளில் வேகமாக ஏறினான். ஆறு தளங்களை தாண்டி ஏறியவன் அதன் மொட்டை மாடிக்கு வந்தான்.

குழப்பம், கவலை, காதலின் பிரிவு தந்த வலியின் அளவும் அதிகரித்துக் கொண்டே இருந்ததில் அவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. மனதின் சஞ்சலத்தை சரிசெய்யும் வழி தெரியாமல்தான் கட்டிடத்தின் உச்சிக்கு ஏறியிருந்தான் அவன். எப்படியாவது அபிராமியை தன்னோடு வரவைத்து விட வேண்டும் என்ற ஒரு எண்ணம் மட்டும்தான் அவனுக்குள் இருந்தது.

மொட்டை மாடியின் கைப்பிடி சுவரின் மீது ஏறி நின்றவன் கீழே பார்த்தான். அபிராமி தன் தோழிகளோடு உரையாடியபடி நடப்பது தெரிந்தது.

"அபிராமி.." என்று கத்தினான்.

அபிராமி திரும்பி பார்த்தாள். ஆச்சரியத்தில் விழிகளை விரித்தான்.

"ஹீ இஸ் சம்திங்.." என்றாள் சுவாதி.

பற்களை அரைத்தபடி தன் முக பாவத்தை மறைத்தாள் அபிராமி. கல்லூரி வளாகத்தில் அங்கும் இங்கும் நடந்துக் கொண்டிருந்த மற்ற மாணவர்களும் கார்த்திக்கை பார்த்ததும் அவன் ஏறியிருந்த கட்டிடத்தின் முன்னால் வந்து நின்றார்கள்.

அபிராமி தயக்கத்தோடு அந்த கூட்டத்தின் முன்னால் வந்து நின்றாள்.

"நீ இப்ப என்னோடு வரலன்னா நான் இங்கிருந்து குதிச்சிடுவேன்.." என்று அவன் சொன்னதும் அவளுக்கு சிரிப்புதான் வர இருந்தது.

'அன்னைக்குதான் கல்யாண டென்ஷன், உன் திடீர் மாறுதல், அண்ணனுக்கு ஏதாவது ஆகிடுமோங்கற பாசமும் சேர்ந்து என்னை கரெக்டா யோசிக்க விடல.. ஒரு முறை தடுமாறினா வருசம் முழுக்கவாடா தடுமாறுவாங்க.?' என்று எண்ணியவள் தன் மனதை ஒரு நிலைக்கு கொண்டு வரவே சில நிமிடங்கள் பிடித்தது.

"என்னோடு வா அபிராமி.." என்று கத்தினான் அவன்.

"அவனை கீழே இறங்க சொல்லுடி.. எல்லாரும் உன்னைத்தான் ஒரு மாதிரி பார்க்கிறாங்க.." என்று அவளின் காதோரம் சொன்னாள் சுவாதி. அபிராமி சுற்றி இருந்தோரின் பார்வையை கண்டு விட்டு தலையை குனிந்தாள்.

"அன்னைக்கு நான் மண்டபத்தை விட்டு போனதும் கல்யாணத்துக்கு வந்திருந்த சொந்தக்காரங்க எல்லாரும் எங்க குடும்பத்தையும் இப்படிதான் பார்த்திருப்பாங்க இல்ல.?" என்று மெல்லிய குரலில் கேட்ட அபிராமியை விந்தையாக பார்த்தாள் சிந்து.

"இவனை சாகடிக்கிறதுதான் உன் திட்டமா.?" என்றவளிடம் ஆமென தலையசைத்தாள் அபிராமி.

சோகம் வழியும் முகத்தோடு அண்ணாந்து கார்த்திக்கை பார்த்தவள் "அப்படி எதுவும் செய்யாதே கார்த்தி.. நீ இல்லன்னா நானும் செத்துடுவேன்.." என்றாள்.

"காலேஜ்ல என்ன காதல் நாடகம்.?" இளம் வயது பேராசிரியர் ஒருவர் இதை கேட்டபடி கூட்டத்தினுள் புகுந்து முன்னால் வந்து நின்றார்.

"ஹலோ பாஸ்.. காலேஜ்ல சூஸைட் பண்ண கூடாது.. கீழே இறங்கி வாங்க.." என்றார்.

"அப்ப காலேஜ்க்கு வெளியே சூஸைட் பண்ணிக்கலாமா சார்.?" என கேட்டாள் மாணவி ஒருத்தி.

அவளை பார்த்து முறைத்த பேராசிரியர் "ஸ்கூல்ல இருந்தும் வீட்டுல இருந்தும் வந்திருந்தா ஆகியிருக்கும். நேரா ஜூவுல இருந்து வந்தா இப்படிதான் சந்தேகம் வரும்.." என்றார்.

"அப்படின்னா எங்களை மிருகம்ன்னு சொல்றிங்களா சார்.?" என கேட்டாள் இன்னொருத்தி.

"வாத்தியாரை பார்த்து பயந்த காலம் போய் இப்ப வாத்தியாரையே கிண்டல் பண்ற அளவுக்கு முன்னேறி இருக்கிங்க.." என்று திட்டினார் அவர்.

"சார்.. அதோ நிக்கறாளே அபிராமி அவதான் என் பொண்டாட்டி.. யாரோ செஞ்ச தப்புக்கு என்னை விட்டுட்டு வந்துட்டா.. அவ இல்லாம நான் மெண்டல் ஆகிட்டேன். அவளை என்னோடு வர சொல்லுங்க.. இல்லன்னா நான் இங்கிருந்து குதிச்சிடுவேன்.." என்றான் கார்த்திக்.

"அப்படி செய்யாதே கார்த்திக்.. என்னால தாங்க முடியாது.." அழுகையோடு சொன்னாள் அபிராமி.

"அப்படின்னா என்னோடு வா.." என்றான் அவன். மௌனமாக தலை குனிந்தவள் விம்மியழுதாள்.

"வர சொல்லும்மா.. கீழே வந்ததும் போலிஸ்ல பிடிச்சி தந்துடலாம்.." என்றார் அந்த பேராசிரியர் சின்ன குரலில்.

'நம்மை விட மூளைக்காரரா இருப்பாரு போல..' என நினைத்தவள் "எப்படி கார்த்தி நான் என் கண்ணால பார்த்ததை மறப்பேன்.? நெஞ்செல்லாம் வலிக்குது கார்த்தி.. ரொம்ப கஷ்டமா இருக்கு.. உனக்கு எதுவுமே புரியல.." என்றவள் அழுதபடி கூட்டத்தில் புகுந்து வெளியே நடந்தாள்.

"ஏய்.. அவன் குதிக்க போறான்டி.." என்றாள் சிந்து அவளோடு உடன் நடந்தபடி‌.

"வெறும் நடிப்புடி.. அவனெல்லாம் மத்தவங்களைதான் சாகடிப்பான்.." என்று அபிராமி சொன்ன அதே நேரத்தில் "அச்சோ.. அம்மா.." என்று கூட்டத்தில் இருந்தவர்கள் கூச்சலிட்டது காதில் விழுந்தது. அபிராமி நடப்பதை நிறுத்தினாள்.

கூட்டத்தோடு கூட்டமாக நின்றுக் கொண்டிருந்த சுவாதி தன் தோழியை சுற்றி பார்த்து தேடினாள். அவள் தூரத்தில் நடப்பது கண்டு அவளின் பின்னால் ஓடினாள்.

"அவன் நிஜமாவே குதிச்சிட்டான்டி.." என்றாள்.

தோழியின் முகம் பார்த்த அபிராமி "டெத் கன்பார்மா.?" என்றாள்.

இடம் வலமாக தலையசைத்தாள் சுவாதி.

"நடிச்சி நடிச்சி சலிக்குது எனக்கு.." என்று எரிச்சலோடு சொன்னவள் "கார்த்திக்.." என்று கத்திக்கொண்டு கூட்டத்தில் புகுந்து உள்ளே ஓடினாள்.

கார்த்திக் தரையில் விழுந்து கிடந்தான். அவனை சுற்றி ரத்தம் தேங்கியிருந்தது.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN