மௌனங்கள் 21

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
தன சேகரன் POV

அந்த ஓநாய்கள் மூவரையும் தனி அறை ஒன்றில் அடைத்து வைத்திருக்கிறோம். சக காவலர்கள் தங்களின் கோபம் தீர எவ்வளவோ முறை அடித்து விட்டனர் அவர்களை. ஆனால் அந்த மூவரும் வாய் திறக்கவேயில்லை.

விஷாலோடு பேசி ஒரு முடிவுக்கு வந்தேன் நான். மூவரையும் தனி தனியே பிரித்து அடைத்தோம். மூவரில் இருவரின் குழந்தைகள் பள்ளிச் சென்றுக் கொண்டிருந்தனர். இன்னொருவனின் மனைவி செவிலியராய் இருக்கிறாள். அவர்கள் மூவரையும் அழைத்து அவர்களிடமும் பேசினோம்.

தங்களின் தந்தை, தனது கணவன் ஒரு தேச துரோகி என அறிந்ததும் அவர்களின் கண்களில் கண்ணீர் வழிந்தது. கண்ணீர் வழிந்த அதே அளவுக்கு கோபமும் முகத்தில் குடிபுகுந்தது.

"இவங்களை கோர்ட்ல ஒப்படைச்சா காலம் முழுக்க ஜெயில்லதான் இருக்கணும்.." என்று நான் ஆரம்பித்ததும் "சுட்டு கொன்னுடுங்க சார்.. நடு ரோட்டுல நிக்க வச்சி சுடுங்க சார்.. அப்பதான் இன்னொருத்தன் இந்த மாதிரி தப்பை செய்ய மாட்டான்.." என்றாள் அந்த செவிலியை.

இளம்பெண். இருபத்தி ஐந்துக்குள்தான் இருப்பாள். அவனை அதிகம் காதலித்திருப்பாள். ஆனால் அந்த காதலை மீறி இதை சொல்கிறாள். அவளின் கோபம் நியாயமானது என்னுடையதை போலவே.

"ஜெயிலுக்கு அனுப்புறதோ என்கவுண்டர் பண்றதோ மேட்டர் இல்ல.. அந்த தீவிரவாதிகள் நிச்சயம் இங்கேதான் எங்கேயோ இருந்தாகணும்.. அவங்களை கண்டுபிடிக்கணும்.. அதுக்கு இவங்க மூணு பேரும் வாய் திறக்கணும்.. அவங்க இவங்க மூணு பேரையும் நல்லா மூளை சலவை பண்ணிட்டாங்க.. அவங்களாலயே இவங்க புத்தியை மாத்த முடியும்ன்னா நம்மால் ஏன் மாத்த முடியாது.? நீங்க எங்களுக்கு உதவி செய்யணும் இதுக்கு. அதனால்தான் உங்களை வர சொன்னேன்.. இந்த விசயம் பிரெஸ்க்கோ வெளியவோ தெரிஞ்சா தீவிரவாதிங்க அலார்ட் ஆகிடுவாங்க.. நாமதான் இதை நம்மால முடிஞ்ச அளவுக்கு ரகசியமா செய்யணும்.." என்றேன்.

சரியென்று தலையசைத்தனர் மூவரும். அவர்கள் பேச வேண்டியதை சொல்லி தந்தேன். குழந்தையில் ஒன்றை விஷால் அழைத்துக் கொண்டு ஓநாய்களில் ஒருவனிடம் சென்றான்.

செவிலியை தன் கணவனை காண தனியே கிளம்பினாள். ஓரடி நடந்தவளை அழைத்து நிறுத்தி அவளின் கையில் துப்பாக்கி ஒன்றை தந்தேன். "அவன் இப்ப உங்க வீட்டுக்காரன் கிடையாது.. முக்கால் மிருகம்.. ஆபத்துக்கு யூஸ் பண்ணிக்கங்க.. தப்பி தவறி கூட இந்த கன்னை அவன் கைக்கு தந்துடாதிங்க.!" என்றேன். அவள் சரியென்று தலையசைத்து விட்டு சென்றாள்.

மற்றொரு சிறுமியை அழைத்துக் கொண்டு நான் கிளம்பினேன். என் யூகத்தில் அவளுக்கு பன்னிரெண்டு பதிமூன்று வயது இருக்கலாம்.

இருட்டறையில் தனியாக அமர்ந்திருந்த என் சக பணியாளன்.. மன்னிக்கவும் இன்றைய தேச துரோகி தன் குழந்தையை கண்டதும் நிமிர்ந்து அமர்ந்தான். "இங்கே ஏன் வந்த பாப்பா.? போயிடு.. இல்லன்னா இவங்க ஏதாவது செஞ்சிடுவாங்க.." என்றான் பதட்டமாக.

அவனை செவிலில் அறைய வேண்டும் போல இருந்தது எனக்கு. அரசியல் கட்சி கூட்டத்தில் பாம் வெடித்தபோது விசாரணைக்கு அழைத்து வந்த அவர்களின் குடும்பத்தாரை அடித்து கொன்றதே இவனும் மற்ற ஓநாய்களும்தான். அன்றே நான்தான் உஷாராகி இருக்க வேண்டும். உடன் இருப்பவன் மீது நான் வைத்த நம்பிக்கைதான் இன்று எங்களின் மொத்த கூட்டத்தையும் ஒட்டு மொத்த அழிக்க கிளம்பியுள்ளது.

"எல்லோரையும் உன்னை போலவே நினைக்காதே.!" என்று கர்ஜித்தேன். சிறுமி என் முதுகின் பின்னால் ஒளிந்தாள்.

"ஏன் நினைக்க கூடாது.? இதே நாட்டுல விசாரணைக்கு கூட்டி வந்த எத்தனை பொண்ணுங்களோட கற்பு பறி போயிருக்குன்னு எனக்கு தெரியாதா.?" என்றான்.

சிறுமி என் முதுகில் முகத்தை அழுந்த பதித்தாள். பயந்து விட்டாள் என்று நினைக்கிறேன்.

"கண்டிப்பா நடந்திருக்கு.. உன்னை போல சில பல துரோகிங்க எல்லா பதவியிலும் இருக்காங்களே.. அதன் வினை இது.. நாட்டுக்கு சேவை புரியறோம், நம்ம மக்களுக்காக வேலை பார்க்கறோம்ன்னு நினைச்சிருந்தா நீயும் அவங்களும் இப்படி செஞ்சிருக்க மாட்டிங்க.. பதவி கிடைச்சதும் சாத்தானை மனசுக்குள்ள புக விட்டு கண் முன்னாடி தென்படுற எல்லோரையும் கேவலமா பார்த்தா அப்படிதான் இருக்கும்.. ஆனா அதுக்காக எங்களையும் உங்க கூட்டத்தோடு சேர்த்தாதே.. ஒன்னும் தெரியாத மக்கள் சொல்லட்டும்.. வாங்கிட்டு போறோம்.. ஆனா நீ சொல்லாதே.!" என்றபடி அவனின் முன்னால் இருந்த இருக்கையில் அமர்ந்தேன். குழந்தையை இழுத்து என் அருகே அமர வைத்தேன். அந்த சாத்தானின் முன்னால் குழந்தையை தனியாய் அமர வைக்க பயமாக இருந்தது.

"அ.. அப்பா இப்படி செய்யாதிங்க.. நம்ம நாடு இது.." சின்ன குரலில் சொன்னாள் அச்சிறுமி.

சிரித்தான் எதிரில் இருந்தவன். "இந்த ஆள் பேச்சை கேட்டியா நீ.? இவன் சொல்ற மாதிரி கிடையாது இந்த நாடு.. நீ பத்திரமா வளருவது எவ்வளவு கஷ்டம்ன்னு எனக்குதான் தெரியும்.. உன் அக்காவுக்கு என்ன நடந்ததுன்னு மறந்துட்டியா.?" என்றான் புருவம் உயர்த்தி. என் அருகே அமர்ந்திருந்த சிறுமி உதட்டை கடித்தாள். உடல் குலுங்கியது. கண்ணீரை அடக்க முயல்கிறாள் என்று புரிந்தது.

ஆனால் இந்த ஓநாய் இதை காரணமென்று சொல்லும் என்று நினைக்கவில்லை. எனக்கும் இந்த விசயத்தில் வருத்தம் உண்டுதான்.

அவனின் மூத்த மகள் கல்லூரி சென்று திரும்புகையில் சில கயவர்களால் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்டாள். கயவர்களை கண்டுபிடித்து கோர்ட்டில் நிறுத்திய பிறகும் கூட அவர்கள் வெளி வந்து விட்டார்கள். அரசியல் பின்புலம். மேல் முறையீடு உதவவில்லை. அந்த நாளில் நானுமே கூட கையாளாகாதவனாகதான் உணர்ந்தேன்.

சிதையின் முன் நின்று இவன் அழுகையில் உடன் சேர்ந்து நானும் அழுதேன். இல்லையென்று சொல்லவில்லை.

'நேரடியாக மோதாமல் தனியே கவனித்துக் கொள்ளுங்கள்..' என்று என் மேலதிகாரிகள் சொன்னார்கள். அரசாங்க அதிகாரிகளை விடவும் அதிக பலத்தை பெற்றிருந்தார்கள் அரசியல்வாதிகள். அந்த பலத்தை மக்கள்தான் தந்திருந்தார்கள் என்பது வேறு கதை.

அந்த கயவர்களை எப்படியாவது அழிக்க வேண்டும் என்று இன்னமும் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறேன். அந்த கயவர்களை என்கவுண்டர் செய்ய திட்டம் தீட்டி இருந்த நேரத்தில்தான் இந்த குண்டு வெடிப்பு சம்பவங்கள் என்னையும் மற்றவர்களையும் திசை திருப்பி விட்டது. ஆனால் இன்னும் பகை நெஞ்சில் உண்டு. அவர்களை நிச்சயம் தீர்ப்பேன் விரைவில்.

"ஏதோ சில மிருகங்களை உன்னால அழிக்க முடியலன்னு மொத்த நாட்டையே பழி தர நினைச்சியா நீ.?" எரிச்சலோடு கேட்டேன்.

மீண்டும் சிரித்தான். வலியுடனான சிரிப்பு‌. கண்களோரம் கண்ணீர் வழிந்தது.

"என் உலகமே என் பொண்ணுங்கதான். மூத்தவ செத்துட்டா.. அவளுக்கே சரியான பாதுகாப்பை தர முடியாத என்னால இளையவளுக்கு மட்டும் எப்படி பாதுகாப்பை தர முடியும்.? என் பொண்ணே செத்துட்டா.. இனி இந்த நாடு இருந்தா என்ன.. அழிஞ்சா என்ன.? வன்புணர்வு திருட்டை விடவும் சாதாரணமாகி போய் விட்ட நாட்டுல நான் மட்டுமில்ல பொண்ணை பெத்த எல்லோருமே தற்கொலை படைகளோடுதான் சேருவாங்க.." என்றான்.

"இ.. இப்படி சொல்லாதிங்கப்பா.. அக்கா மனசு வருத்தப்படும்.." என்றாள் அவனின் மகள். கரகரத்த குரலோடு சொன்னவளின் கையை பற்றிக் கொண்டேன் நான்.

"நம்ம நாடு.." என்று ஆரம்பித்தவளை "ஜஸ்ட் ஷெட் அப்.." என்று அடக்கினான் அவன்.

"நம்ம நாடு எதுவும் கிடையாது.. இவங்க யாரும் நம்ம மக்களும் கிடையாது.. இதே நாட்டுக்காக உழைக்கிற என்னாலயே என் மகளை காப்பாத்த முடியல.. இதான் இங்கே நிதர்சனம். இங்கிருக்கும் எல்லோரும் வாழ தகுதி இல்லாதவர்கள்.. இந்த நாடு மட்டுமில்ல இந்த உலகமே இருக்க கூடாது.. மொத்தமா அழியணும்.." என்றான். அவனின் கன்னத்தில் ஒரு அறையை விட்டாள் அச்சிறுமி.

"சில மிருகங்கள் இருக்குன்னு எல்லோரையும் அழிக்க நினைக்கிறிங்க.. நீங்க ரொம்ப பேட்.. நீங்களும் மிருகங்களோடு ஒன்னாகிட்டிங்க.." என்றவள் முகத்தை மூடிக்கொண்டு அழுதாள்.

"மிருகம்ன்னு தோலுரிக்கப்பட்டாலும் கூட இங்கே எல்லோருக்கும் தண்டனை வாங்கி தர முடியாதுடா செல்லம்.. நீயும் இவங்களை நம்புறதுக்கு பதிலா வீட்டுக்கு போனதும் விஷத்தை குடிச்சிடு.. இதுதான் உனக்கு பாதுகாப்பானது.." என்றவனின் கன்னத்தில் பளீரென்று நான் ஒன்று விட்டேன்.

முழு பைத்தியமாகி விட்டான். 'என் பொண்ணுக்கு நடந்த மாதிரி வேற யாருக்கும் நடக்க கூடாது சேகர்.. வேலையை விட போறேன் நான்.. இந்த மாதிரி கயவர்களை தேடி தேடி வேட்டையாடி கொல்ல போறேன். நாட்டுக்கு நான் செய்ய போற சிறந்த சேவை அதுதான்.." என்றான் அன்று. ஆனால் இன்று முழுதும் மாறி விட்டான். அந்த அளவிற்கு மாற்றி விட்டார்கள் அயலார்கள்.

சிறு பலவீனத்தையும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துகிறார்கள் அவர்கள் என்பது புரிந்தது. எனக்கு என்னவோ அந்த வன்புணர்வு கயவர்களே அந்நியர்களின் கைக்கூலிகள்தானோ என்று இப்போது சந்தேகம் வந்தது. மக்களுக்குள் இருக்கும் ஒற்றுமையை குலைக்கும் செயல்களை செய்யும் அனைவருமே அந்நிய கைக்கூலிகள்தான் என்று உள்ளம் சொன்னது.

"இவருக்கு பைத்தியம் சார்.. நீங்க இவரை கோர்ட்ல ஒப்படைச்சிடுங்க.." என்று சொன்னபடி எழுந்த சிறுமி அழுதபடியே வெளியே நடந்தாள்.

நான் எதிரில் இருந்தவனை பார்த்தேன். மகளை ஏக்கமாக பார்த்தான்.

"மேனியின் குளிரை அழிக்க நெருப்புல குதிச்சவன் நீதான்.." என்றேன்.

"என் வலி உனக்கு புரியாது சேகர்.." என்றவனின் சட்டையை பற்றினேன். "உன் பொண்ணு செத்தப்போது உன்னை விட அதிகம் உடைஞ்சி போனவன் நான்தான்.. உனக்கு அவ மக மட்டும்தான்.. ஆனா எனக்கு அவ என் நாட்டோட வருங்கால தூண்ல ஒன்னு.." என்றேன். இவனுக்கு ஏன் புரிய வைக்க வேண்டும் என்று சலிப்பாக இருந்தது. அவனை விட்டுவிட்டு தள்ளி நின்றேன். இவனிடம் விசாரித்து பிரயோசனம் இல்லை என்பதால் அங்கிருந்து வெளியே நடந்தேன்.

அந்த சிறுமி அழுதபடியே ஒரு சேரின் மீது அமர்ந்திருந்தாள். விஷால் மற்றொரு சிறுமியோடு வந்தான். இடம் வலமாக தலையசைத்தான். அவனோடு வந்த பெண் விக்கி விக்கி அழுதாள்.

"என் அப்பா ஹார்ட் டிரான்ஸ்பிளேஷனுக்கு வெயிட் பண்ணாரு.. அவருக்கு கிடைக்க வேண்டிய ஹார்ட்டை ஒரு போலி சாமியாருக்கு வச்சிட்டாங்க.. இந்த நாட்டுல நீதி நேர்மையே கிடையாது.. இது அழிய வேண்டியதுன்னு உலறுறான் சார் அவன்.." என்றான் விஷால்.

இவர்களோடு இன்னும் சற்று நேரம் பேசினால் நானே என் நாட்டில் நீதி நேர்மை கெட்டு விட்டது என்று எண்ணி விடுவேனோ என்று தோன்றியது. மனதின் அழுத்தத்தை மாற்றும் வழி தெரியவில்லை. ஜன்னல் வழி தெரிந்த சாலையை பார்த்தேன்.

தள்ளுவண்டி நிறைய வாழைப்பழங்களை வைத்து தள்ளிக் கொண்டு சென்ற கிழவன் பாரம் தந்த பளு தாங்காமல் என் பார்வைக்கு முன்னால் நின்றான். வியர்த்து கொட்டியது அவனுக்கு. அவனின் முகத்தையே பார்த்தேன். தாகமாய் இருப்பான் போல. அருகே இருந்த கடையிலிருந்த தண்ணீர் பாட்டில்களை ஏக்கமாக பார்த்தான். சட்டை பாக்கெட்டை தொட்டுப் பார்த்தான். பின்னர் மீண்டும் அந்த தள்ளுவண்டியின் கைப்பிடியை பற்ற முயன்றான். அதே நேரத்தில் அவனுக்கு முன்னால் சிறு கரம் ஒன்று தண்ணீர் பாட்டிலை நீட்டியது.

மூன்று வயது இருக்கலாம். குழந்தைதான். கழுத்தில் மாட்டியிருந்த பொம்மை வடிவ தண்ணீர் பாட்டிலை கழட்டி அந்த கிழவனிடம் நீட்டியது. பாட்டிலின் மூடி குழந்தை குடிப்பதற்கான ஸ்ட்ராவோடு இருந்தது. கிழவன் குழந்தையை ரசித்து பார்த்துவிட்டு பாட்டிலை குழப்பத்தோடு பார்த்தான். திடீரென்று ஒரு கரம் அந்தப் பாட்டிலை வெடுக்கென பிடுங்கியது. கிழவன் நொடியில் முகம் செத்துவிட்டான். நிமிர்ந்து பார்த்தான்.‌ அந்த குழந்தையின் தாயார் அந்த பாட்டிலின் மூடியை கழட்டிவிட்டு அவனிடம் மீண்டும் நீட்டினாள். அந்த கிழவன் ஆச்சரியத்தோடு அவளை பார்த்தான். தண்ணீரை குடித்துவிட்டு பாட்டிலை திருப்பி நீட்டினான். நன்றி அவன் முகம் முழுக்க நிரம்பி இருந்தது.

இல்லை.. என் நாட்டில் நீதி நேர்மை மட்டுமல்ல அன்பும் கருணையும் கூட இன்னும் அழியவில்லை. நான் உழைப்பது மிருகங்களுக்காக அல்ல.. அந்த மிருகங்களின் இடையே தப்பி பிழைத்து வாழும் இந்த செல்வங்களுக்காக! ஆயிரம் குற்றவாளி தப்பினாலும் ஒரு அப்பாவி கூட பழியாக கூடாது. இது பழமொழி. அப்படியிருக்கையில் ஒரு குற்றவாளிக்காக ஆயிரம் பொக்கிஷங்கள் ஏன் அழிய வேண்டும்.?

"சார்.."

திரும்பி பார்த்தேன். செவிலியை துப்பாக்கியை என்னிடம் நீட்டினாள்.

"சொல்லிட்டான் சார்.." என்றாள்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN