காதல் கடன்காரா 28

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
உள் பூச்சு முடியாத அவர்களின் வீட்டுக்குள் நுழைந்தான் கார்த்திக். ஈர செங்கல் சுவர்கள் ஒரு வித கிறக்கத்தை தந்தன அவனுக்கு.

ஹாலை கடந்து சமையலறை நோக்கி நடந்தான். இன்னும் டைல்ஸ் பதியாத கிச்சன் அடுப்பங்கரை செல்பின் மீது ஏறி நின்றபடி கூரைக்கு தண்ணீர் விட்டுக் கொண்டிருந்தாள் அபிராமி. கையிலிருந்த பைப்பையும் ஈரம் படராத கூரையையுமே கவனித்துக் கொண்டிருந்தவள் வாசற்படியில் வந்து நின்ற கார்த்திக்கை கவனிக்காமல் போய் விட்டாள்.

கையை கட்டியபடி சுவரில் சாய்ந்து நின்றிருந்த கார்த்திக் உதட்டின் உள் பகுதியை கடித்தபடி அவளை பார்த்தான். கணுக்காலுக்கு மேலிருந்தது அவள் ஏற்றி சொருகி இருந்த புடவை. இடுப்பு புடவையை ஏற்றி ரவிக்கையோடு பின் செய்து வைத்திருப்பாள் எப்போதும். ஆனால் இன்று அந்த பின் கழன்று அவளின் ஒருபக்க இடுப்பழகை அப்படியே காட்டிக் கொண்டிருந்தது.

அவளையே வெறித்துக் கொண்டிருந்த கார்த்திக் கண்களை இமைக்க மறந்து விட்டான். அவளை அப்படியே அள்ளிக் கொள்ள சொன்னது அவனுக்குள் இருந்த சாத்தான்.

ஐந்து நிமிடங்கள்தான் கூரைக்கு தண்ணீரை விட்டாள் அவள்‌. ஆனால் அவனுக்கு வருடங்களே கடந்தது போலிருந்தது. கூரையிலிருந்து சிந்திய தண்ணீர் துளிகள் சில அவளின் மீதும் விழுந்தன.

கூரையின் ஓரங்களுக்கு தண்ணீரை விட்டுக் கொண்டிருந்தவள் இன்ச் இன்ச்சாக பின்னால் நகர்ந்தாள். செல்பின் விளிம்பில் நின்றுக் கொண்டிருந்தவளின் இமைகளின் மீது வந்து விழுந்தது கூரையிலிருந்து விழுந்த ஒரு துளி தண்ணீர்.

இடது கையால் கண்களை துடைத்தவள் தன்னை அறியாமல் இன்னும் ஒரு இன்ச் பின்னால் நகரவும், பாதங்கள் விளிம்பை தாண்டியதில் தடுமாறி பின்னால் சாய்ந்தாள்.

பயத்தில் கண்களை மூடியபடி சாய்ந்தவளை சட்டென்று தாங்கி பிடித்தன கரங்கள் இரண்டு.

தயக்கத்தோடு திரும்பி பார்த்தாள். கார்த்திக் நின்றிருந்தான். அவளின் வலது கையிலிருந்த பைப்பிலிருந்து வெளியேறிக் கொண்டிருந்த தண்ணீர் அவனின் தோளில் விழுந்து அவனையும் அவனின் மேல் சாய்ந்திருந்த அவளையும் நனைத்தது.

கூரையிலிருந்து சிந்திய தண்ணீர் துளிகள் மீண்டும் அவளின் இமைகளின் மீது பட்டது. தண்ணீர் விழுவதை கண்ட உடனே கண்களை மூடிக் கொண்டவளை இரையை நோட்டமிடும் சிறுத்தையின் பார்வையாய் பார்த்தான் அவன்.

சில நொடிகள் கடந்த பிறகு தண்ணீர் துளிகளை இடது கையால் துடைத்துக் கொண்டு கண்களை திறந்தாள் அபிராமி. தன்னை வேட்டையாடும் அவனின் விழிகளை கண்டு வெட்கம் கொண்டாள்.

"எ.. என்னை விடு.." என்றவளிடம் மறுப்பாக தலையசைத்தான் அவன்.

"யாராவது பார்த்தா சிரிப்பாங்க.. என்னை இறக்கி விடு.." என்றாள். அவன் விடமாட்டான் என்று புரிந்துக் கொண்டவள் செல்பின் மீதிருந்த தன் கால்களை தரையில் பதித்து அவனை விட்டு விலகி நின்றாள். இருவருமே கழுத்துக்கு கீழே தொப்பலாக நனைந்திருந்தனர். அவளின் கையிலிருந்த பைப்பிலிருந்து சிந்திய தண்ணீர் தரையில் விழுந்து நாலாபுறமும் சிதறியோட ஆரம்பித்தது.

அபிராமி பைப்பை இழுத்துக் கொண்டு ஹாலுக்கு சென்றாள். அவளை நிழல் போல தொடர்ந்தவன் "ஒரு முத்தமாவது கொடு.." என்றான்.

அவனை விசித்திரமாக பார்த்தவள் "லூசா நீ.?" என்றாள். அவனை கண்டுக் கொள்ளாமல் ஹாலின் கூரைக்கு தண்ணீர் விட ஆரம்பித்தாள்.

அவளை முதுகோடு அணைத்தபடி அவளின் கையை பற்றியவன் அவளோடு சேர்ந்து ஹாலின் கூரைக்கு தண்ணீர் விட்டான்.

தன் கரத்தை பற்றிக் கொண்டிருந்தவனை திரும்பி பார்த்து முறைத்தாள். அந்த முறைப்பை கூட ரசித்தான் அவன்.

"என்னை விடு.."

"அப்படின்னா நீ முத்தம் கொடு.."

யாரோ தேம்பி அழும் சத்தம் கேட்டு கண் விழித்தான் கார்த்திக்.

உடம்பில் கட்டுக்கள் இருந்தன. மருத்துவமனையில் இருந்தான் அவன்.

என்றோ நடந்ததை இப்போது நினைத்து பார்த்திருக்கிறோம் என்று உணர்ந்தவனுக்கு கண்களை திறவாமலேயே இருந்திருக்கலாம் என்று தோன்றியது. எவ்வளவு அழகான நாட்கள் அவை அனைத்தும் என்று எண்ணினான். அவளை சீண்டிக் கொண்டும் அவளின் வெட்கத்தை ரசித்துக் கொண்டும் இருப்பதே வாழ்வின் ஆசை அவனுக்கு.

அவளின் கார் குழலில் முகம் புதைத்து, அவளின் காதோரம் கதை பேசி உறங்க வேண்டும் அவனுக்கு.

அரை மயக்கத்தோடு கண்களை அலை பாய விட்டான். புவனா மட்டும் அவனின் அருகே இருந்தாள்.

"ஏன்டா இப்படி கிறுக்கனை போலவே செய்ற.?" கார்த்திக் கண் விழித்தது கண்டதும் அழுகையோடு திட்டினாள்.

கார்த்திக் அவளை கண்டுக் கொள்ளாமல் சுற்றும் முற்றும் பார்த்தான்.

"அம்மா இப்போதுதான் வீட்டுக்கு போனாங்கடா.." என்ற தங்கையை நிமிர்ந்து பார்த்தவன் "அ.. அபிராமி எங்கே.?" என்றான்.

புவனா தன் கண்களை துடைத்துக் கொண்டு அவனை முறைத்தாள்.

"உனக்கு என்ன சொரணை கெட்டு போச்சாடா.? அவதான் உன்னோடு வர மாட்டேன்னு சொல்லிட்டா இல்ல.. பிறகு ஏன் உன்னையே நீ டார்ச்சர் பண்ணிக்கற.? கொஞ்சம் மிஸ் ஆகியிருந்தா கூட நீ இன்னேரம் செத்து போயிருப்ப.." என்றாள் கோபத்தோடு.

கார்த்திக்கிற்கு அவளின் பேச்சை கேட்க கூட விருப்பம் இல்லை. அவனுக்கு அபிராமி வேண்டும். இப்போது வேண்டும். இரு மில்லிமீட்டர் இடைவெளி கூட இல்லாமல் அவள் நெருக்கத்தில் வேண்டும்.

"அபிராமி எங்கே.?" அதே கேள்வியை மீண்டும் கேட்டான்.

"அந்த கடன்காரியையே ஏன் கேட்கற.? அவளுக்கு திமிரும் கொழுப்பும் அதிகம்.."

"என் பொண்டாட்டியை பத்தி ஏதாவது சொன்ன.. பல்லை உடைச்சி விட்டுருவேன் பார்த்துக்க.. உன் வேலை என்னவோ அதை மட்டும் பாரு.." என்றான் கார்த்திக் தன் பொறுமை இழந்து. அபிராமி அருகில் இல்லை என்ற வருத்தம் அவனை சரியாக சிந்திக்க கூட விடவில்லை. ஆசையாய் பாசம் காட்டி வளர்த்த தங்கையை இன்று மிரட்டுகிறோம் என்பதை கூட உணரவில்லை அவன்.

புவனா பற்களை கடித்தாள். "எனக்கு தெரியாது.. அவ இங்கே இல்ல.." என்றவள் எரிச்சலோடு எழுந்து அந்த அறையை விட்டு வெளியே நடந்தாள்.

கதவின் அருகே நின்றபடி இவனை பார்த்தவள் "நீ இப்படியே பைத்தியமாக போற.. ஆனா அவ உன்னை திரும்பி கூட பார்க்க போறது இல்ல.. கடைசியா புரிஞ்சிக்கிட்ட பிறகு எங்ககிட்ட வந்து அழ போற நீ.." என்றாள். கார்த்திக் அவளின் முகம் கூட பார்க்கவில்லை. கடுப்பு அதிகமாகவும் அவனை முறைத்து விட்டு அங்கிருந்து சென்றாள் புவனா.

கார்த்திக்கின் விழிகள் கலங்கியது. பைத்தியமாக கூட தயார் அவன். ஆனால் அபிராமி அருகில் இருந்த வேண்டும்.

'ஏன் அவ வரல.? என்னோடு வாழ வரவே மாட்டாளா.? அபிராமி.. நான் எந்த அளவுக்கு உன்னை மிஸ் பண்றேன்னு உனக்கு ஏன் புரியவே மாட்டேங்குது.. நீயும் என்னை இதை விட அதிகமாக மிஸ் பண்றன்னு தெரியும்.. உனக்கு நீயே ஏன் தண்டனை தந்துக்கற.? வந்துடு அபிராமி..' என்று மனதுக்குள் உலறினான்.

ஆறாம் மாடியிலிருந்து விழுந்தாலும் கூட அதிர்ஷ்டவசமாக அதிக அடி விழவில்லை அவனுக்கு. காலிலும் கையிலும் மட்டும் சின்ன சின்ன அடிகள் இருந்தன‌. வயிற்றில் சிராய்ப்பு இருந்தது.

இரண்டு நாட்கள் கடந்து விட்டது. அம்மாவும் அப்பாவும் மாற்றி மாற்றி இவனை பார்த்துக் கொண்டனர். இவனை முறைத்து விட்டு போன புவனா அதன்பிறகு வரவேயில்லை.

யமுனா அழுதாள். அவனை திட்டினாள். அவனை பெற்றதற்கு பதிலாக கடலில் இறங்கியிருக்கலாம் என்று திட்டினாள்.

முருகன் நிறைய அறிவுரை தந்தார் மகனுக்கு. "நீ கெட்டவன்.. இது உனக்கே தெரியும். விருப்பம் இல்லாத பொண்ணு கழுத்துல தாலி கட்டுறவன் இன்னொரு பொண்ணு மேல ஆசை வந்துச்சின்னு அவளையும் கரெக்ட் பண்ண டிரை பண்ணி இருப்ப.." என்றார் அவர்‌.

"பெத்த எனக்கே உன் மேலதான் சந்தேகம்.. அந்த பொண்ணுக்கு எப்படி நம்பிக்கை வரும்.? அந்த பொண்ணையே குத்தம் சொல்றதை விட்டுட்டு நீ முதல்ல திருந்து.. மகாலட்சுமி மாதிரி வீட்டுல இருந்தா.. உன்னாலதான் வீட்டை விட்டு போய்ட்டா.." என திட்டினார் அவரே.

கார்த்திக் அவருக்கு பதில் சொல்லவில்லை. தான் சொன்னாலும் அவர் நம்ப மாட்டார் என்று அவனுக்கே நன்றாக தெரியும்.

யமுனாவின் போனுக்கு அழைத்து அவுட் ஸ்பீக்கரில் தம்பியோடு பேசினான் மூர்த்தி. ஆனால் கார்த்திக் வாயே திறக்கவில்லை.

கார்த்திக் தாய் தந்தையோடும் கூட பேசவேயில்லை. சுவரையே வெறித்து பார்த்தபடி படுத்திருந்தான். அவனின் எண்ணமெல்லாம் அபிராமி மட்டுமே.

அடிக்கடி ஜன்னல் அருகே வந்து நின்று அபிராமி எங்கேயாவது தெரிகிறாளா என்று பேராசையோடு நோட்டமிடுவான்.

இன்னும் இரண்டு நாட்கள் கடந்தது. அவனை வீட்டிற்கு அழைத்து செல்லலாம் என்று சொல்லி விட்டார் மருத்துவர். ஆனால் முழு ஓய்வு அவசியம் என்று சொன்னார்.

"இங்கேயே இரு.. நான் போய் பைக்கை பார்க்கிங்க்ல இருந்து எடுத்துட்டு வரேன்.." என்று அவனை வாசலில் நிறுத்துவிட்டு கிளம்பினார் முருகன்.

தரை பார்த்து நின்றிருந்த கார்த்தியின் சட்டையை வந்து பற்றியது ஒரு கரம். நிமிர்ந்து பார்த்தான். முத்தமிழ் சிவந்த கண்களோடு நின்றிருந்தான்.

"நீ என்னைக்கு எங்க வீட்டுக்குள்ள அடியெடுத்து வச்சியோ அன்னைக்கே எங்க நிம்மதி போயிடுச்சி.. கீழே விழுந்த நீ செத்திருக்கலாம்.." என்றான்.

நண்பனின் கோபம் கார்த்திக்கிற்கு புரியவில்லை.

"உன்னாலதான் என் தங்கச்சி கையை கட் பண்ணிக்கிட்டா.. என் அம்மா மட்டும் சரியான நேரத்துக்கு பார்க்கலன்னா அவ நரம்பையும் சேர்த்து கட் பண்ணிக்கிட்டு இன்னேரம் செத்து போயிருப்பா.." என்று அவன் சொன்னதும் அதிர்ந்து போய்விட்டான் கார்த்திக்.

"என்ன ஆச்சி.?" என்றான் அவசரமாக.

"எல்லாம் உன்னாலதான்.. நீ கீழே விழுந்த.. ஆனா அவ உடைஞ்சி போயிட்டா.. ஆம்புலன்ஸ்ல உன்னை இந்த பக்கம் எடுத்து வந்ததும் அந்த பக்கம் அவ எங்க வீட்டுக்கு வந்து சூஸைட் பண்ணிக்கிட்டா.. இதே ஹாஸ்பிட்டலதான் அவளும் இத்தனை நாளா இருக்கா.. இதுவரை எத்தனை யூனிட் ரத்தம் அவளுக்கு செலுத்தப்பட்டிருக்குன்னு உனக்கு நிச்சயம் தெரியாது.. வேலைக்காரி மேல வச்ச பாசத்துல கொஞ்சத்தை என் தங்கச்சி மேலயும் வச்சிருக்கலாம் நீ.." என்றவனிடம் "எந்த ரூம்ல இருக்கா.?" என கேட்டபடி ஹாஸ்பிட்டலின் உள்பக்கம் நோக்கி பாய இருந்தான் கார்த்திக்.

"ரூம் நம்பர் எய்ட்டி ஒன்.. ஆனா உனக்கெதுக்கு.." முத்தமிழ் முழுதாய் முடிக்கும் முன்பே உள்ளே ஓடினான் கார்த்திக். கையும் கால்களும் வலித்தன. வயிற்று பகுதியில் கூட என்னவோ செய்தது‌ அவனுக்கு.

எண்பத்தி ஒன்றாம் அறையின் கதவை திறந்துக் கொண்டு உள்ளே ஓடினான். அபிராமி கட்டிலின் மீது படுத்திருந்தாள். வாழை நார் போல துவண்டிருப்பது போலவே இருந்தது கார்த்திக்கு. அருகே சென்று அவளின் கையை பார்த்தான். வெள்ளை துணியால் போடப்பட்டிருந்தது கட்டு. மறுகையில் டிரிப்ஸ் ஏறிக் கொண்டிருந்தது.

அந்த அறைக்குள் வந்த முத்தமிழ் "இரண்டு நாள் முன்னாடிதான் கண் விழிச்சா.. ஆனா உடம்பும் மனசும் ரொம்ப பலவீனமா இருக்குன்னு சொல்லி இவளை இன்னும் சில நாளுக்கு அட்மிட் பண்ண சொல்லிட்டாரு டாக்டர்.." என்றவன் அருகே வந்து தங்கையின் கையை பிடித்தபடி கட்டிலின் ஓரத்தில் அமர்ந்தான்.

"நீயெல்லாம் நல்லாவே இருக்க மாட்ட கார்த்திக்.. நான் மனசு எரிய சாபம் தரேன்.. என் தங்கச்சியை உயிரோடு கொல்ற நீ.! இவளுக்கு மட்டும் ஏதாவது ஆகியிருந்தா உன்னை கண்டம் துண்டமா வெட்டி போட்டுட்டு நிம்மதியா இருந்திருப்பேன் நான்.." என்றான்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN