என்னைத் துரத்தும் உன் நினைவுகள்... 6

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
நினைவுகள்: 6

ஏழு வயதான யாழினி தன் கால் கொலுசுகள் தரையில் தாளமிட அவர்களின் அவுட்ஹவுஸ்க்கு ஓடி வந்தவள், ஹாலில் எல்லோரும் இரவு படுப்பதற்குப் பாய் விரித்துக் கொண்டிருந்த பச்சையப்பனிடம் வந்தவள், “மாமகாரு! நான் சாப்பிட்டேன்” என்று அழகான ஒரு வெள்ளை டெடிபியர் பொம்மை போல தலை சாய்த்துச் சொல்ல. அப்படி சொன்னவளைப் பார்த்து, அவள் குண்டு கன்னம் கிள்ளி, “அப்படியா தங்கம்? சமத்து.. போங்க, போய் கிட்சன்ல உங்க அத்தை என்ன பண்றானு பாருங்க” என்று சொல்லி அனுப்பி வைக்க

“ம்ம்ம்….” என்று தலையாட்டிச் சென்றவளோ, போகும் வழியிலேயே கீழேயிருந்த இரண்டு தலையணைகளை, கைக்கு ஒன்றாக எடுத்து மார்பில் அணைத்தபடி கிட்சனில் வேலையாக இருந்த காந்திமதியைப் பார்த்து, “அத்தம்மா! தூங்க வாங்க” என தூங்கத் தயாராக இருக்கும் தன் விழிகளைச் சிமிட்டி தூக்கத்தை விரட்டியபடியே அழைக்க,

“எனக்குக் கொஞ்சம் வேலை இருக்குடா தங்கம். நீங்க போய் ஈஸ்வரி கூட படுங்க. இதோ சீக்கிரமா வேலையை முடிச்சிட்டு, அத்தை வரேன்” என்று அவர் அவளை அனுப்பி வைக்க,

ஈஸ்வரி பக்கத்தில் தன் தலைக்கு ஒன்றும் காலுக்கு ஒன்றும் என்று தன்னிடமிருந்த இரண்டு தலையணைகளைப் போட்டு அவள் பாயில் படுக்க,

சிறிது நேரத்தில் எல்லாம், “அம்மாஆஆஆஆஆஆஆஆ……” என்று நந்து போட்ட கூச்சலில், அடித்துப் பிடித்து கிட்சனிலிருந்து ஓடி வந்தார் மதி.

“என்னடா ஆச்சி? ஏன்டா இப்படி கத்துன?”

“இன்னைக்கும் இந்த குந்தாணி என் தலையணையை எடுத்துட்டாம்மா” என்று ஒன்பது வயதே ஆன நந்து, யாழினி மேல் புகார் பட்டியல் வாசிக்க,

மதிக்குக் கோபத்தில் கை துடிக்க, ‘படார்….’ என மதிக்கு முன்பே மகன் முதுகில் ஒன்று வைத்த பச்சையப்பரோ, “இதுக்காகவாடா இந்த கத்து கத்தின? எத்தனை தடவை சொல்லி இருக்கேன், அந்த குழந்தை பிள்ளைகிட்ட வம்புக்குப் போகாதே, எதுவா இருந்தாலும் பாப்பாவுக்கு விட்டுக் கொடுத்துப் போனு.. இப்போ என்ன? உனக்கு தலையணை தானே வேணும்? இந்தா என்னோடதை வைத்துப் படு” என்று தந்தையாய் அதட்டல் போட, கப்சிப் என அடங்கினான் நந்தா.

மகனின் சோர்ந்த முகத்தைப் பார்த்த மதி, “இன்னைக்கு ஒரு நாள் பாப்பா கிட்ட இருக்கட்டும்டா, நாளைக்குப் புதுசு ஒண்ணு வாங்கி வந்து யாழினிக்குத் தந்துடுறேன்” என்று மகனை சமாதானப் படுத்த, ‘உன் சமாதானம் ஒண்ணும் எனக்கு வேண்டாம்’ என்ற முறைப்புடன், அங்கிருந்த சேரில் அமர்ந்தான் நந்து.

மகனின் முறைப்பு இப்போதைக்கு குறையாது என்று உணர்ந்தவரோ, அமைதியாகச் சென்று யாழினியின் பக்கத்தில் படுத்தார்.

நந்து போட்ட சத்தத்திற்கு உருண்டு புரண்டு எழுந்த மற்ற பிள்ளைகள் கூட, தந்தை நந்துக்கு வைத்த ஒரு அடிக்குப் பயந்து சுருண்டு படுத்து விட்டனர்.

நந்துவை ஒரு பார்வை பார்த்த யாழினி, பின் மதியின் கழுத்தில் கை போட்டு அவளிடம் ஒண்டியவள், “அத்தம்மா நீங்க புதுசா தலையணை வாங்கினீங்கனா, அதை எனக்குக் கொடுக்காதிங்க நந்துக்குக் கொடுத்துடுங்க. ஏன்னா, எனக்கு இந்த தலையணையை” தப்…. தப்… ஜல்…. ஜல்…. என்று தன் கொலுசுக் காலால் மிதித்துக் காட்டியவள், “இப்படி செய்தா தான் தூக்கம் வரும்” என்று அவர் காதில் ரகசியம் போல் சொல்லி யாழினி சிரிக்க

பாவம்! அது நந்து காதிலும் விழுந்து வைக்க, இதுவரை தன் விரோதிகளில் ஐந்து பேரில், அவளை ஐந்தாவது இடத்தில் வைத்திருந்தவனோ, அப்படியே முன்னேற்றி நான்காவது இடத்திற்குக் கொண்டு வந்து வைத்தான்.

இது எப்போதும் அவர்களுக்குள்ளே நடப்பது தான். இதற்குத் தீர்வாக அவன் தந்தையோ தாயோ சொல்வது, ‘நீ விட்டுக் கொடுத்து போ’ என்பது தான். ‘அந்த தங்கம், எப்பேர்ப்பட்ட கோடீஸ்வரன் வீட்டில் பிறந்துட்டு, ஒண்ணும் இல்லாத நம்ப வீட்டுக்கு அன்பு பாசத்துக்காக ஓடி வருது. அது கிட்ட போய் மல்லுக்கு நிற்கிறியே’ என்பது தான். இந்த வார்த்தைகளை மற்ற பிள்ளைகள் கேட்டாலும் நந்து மட்டும் கேட்க மாட்டான். யாழினிக்கும் அவனைச் சீண்டிப் பார்க்க ஆசை உண்டு. அதனால் இருவருக்கும் எட்டாம் பொருத்தம் ஆனது.

யாழினியின் கொலுசொலியில், அவன் சிந்தனைகள் கலைந்தது. ‘கட்டான் தரையில் படுக்கச் சொன்னா கூட படுத்திடுவா. ஆனா தலையணை இல்லாம தூங்க மாட்டா. இப்போ எப்படி தூங்கறானு தெரியலையே?’ என அவன் மனம் சொல்ல, அவன் மூளையோ ‘உன்னை ஏமாற்றியதற்கு படட்டும் விடுடா’ என்றது. மனமோ ‘பாவம்டா! அவளைக் கொஞ்சம் திரும்பித் தான் பாரேன்’ என்றது. இரண்டில் எதை என்று அவன் யோசிக்க, மனம் சொன்னதையே எடுத்துக் கொண்டவன், மனைவியைப் பார்க்க, வெறும் தரையில் கைகளைத் தலைக்கு முட்டுக் கொடுத்து, கால்களைக் குறுக்கி தூங்க முயற்சி செய்து கொண்டிருந்தாள் அவன் மனையாள்.

அவளையே பார்த்தவன், நாலரை அடி உயரம், எப்போதும் குழந்தைத்தனமும், சிரிப்பு தவழும் வட்ட முகமும், கொஞ்சமே அகண்ட நெற்றி, அதில் வட்ட பொட்டு வைத்திருக்க, சிற்பிகள் அளவெடுத்து செதுக்கினார் போன்று சிறியதும் பெரியதும் இல்லாத இரண்டு விழிகள். சற்றே சப்பை மூக்கு, மேல் உதட்டை விட தடித்த கீழ் உதடு. அதற்கு அழகு சேர்ப்பது போல் அந்த உதட்டை ஒற்றி ஒரு மச்சம். எல்லாவற்றையும் விட அந்த கன்னங்கள் என்னும் ரெண்டு சந்தனக் கிண்ணங்கள். சற்றே பூசினார் போல உடல், நிறமோ பால் நிலாவோடு கொஞ்சம் இல்லை அதிகமாவே சிவப்பு ரோஜா இதழ்களைக் கலந்த மேனி.

இப்படி மனைவியை முதன் முதலாக தன் கண்களால் ரசித்துக்கொண்டிருந்தவனின் மனமோ ‘இவளுக்கும் எனக்கும் என்ன பொறுத்தம்னு இவ இந்த கல்யாணத்திற்கு சம்மதித்தா? நிறம், படிப்பு, அழகு என்னைவிட அதிகம். நானும் அழகு தான்.. ஆனா, நானா இவளா என்று வரும் போது யாரும் இவளைத் தானே கை காட்டுவார்கள். எல்லாவற்றையும் விட வசதி! ஏணி வைத்தாலும் எந்த விதத்திலும் எட்டாதே! அப்படி இருக்க எதற்கு என்னை மணந்தாள்? ஒருவேளை சிறு வயதில் என்னை அடித்துக் கிள்ளி அழ வைத்துப் பழி தீர்ப்பவள் இப்போது மணந்தும் அதே பழியை தீர்த்துக் கொள்ளப் பார்க்கிறாளோ? ஆனா அப்படி பழி தீர்க்கிற அளவுக்கு அவளுக்கு நீ என்னடா செய்த? யோசி நந்து.. யோசி..’

“ஹாச்” மனைவியின் தும்பலில் நினைவு கலைந்தவன், “தலைக்கு தண்ணீர் ஊற்றுனியாடி?” என கேட்க

“…” அவளிடம் பதில் இல்லை.

“உன்ன தான் டி…” சற்றே குரலை உயர்த்த

“ம்ம்ம்…”

“அறிவு கெட்டவளே! இந்த நேரத்திலையா தலைக்குக் குளிப்பாங்க? எழுந்து வந்து மேலே படுடி” அவளுக்கு ஏதாவது ஆகி விடுமோ என்ற பயத்தில் அவன் சொல்ல அவள் அசையக் கூட இல்லை.

“கீதா! இப்போ நீ எழுந்திருக்கப் போறியா இல்லை உன்னைத் தூக்கிட்டு வந்து படுக்க வைக்கவா?” அவன் குரலோ நான் சொன்னதைச் செய்வேன் என்று ஒலித்தது.

முதலில் கணவனிடம் வம்பு பண்ணலாமா என்று யோசித்தவள் பிறகு வேண்டாம் என்று விட்டு விட்டு வேண்டா வெறுப்பாக எழுந்து வந்து அவனுக்கு முதுகு காட்டிப் படுத்தாள். அவளுக்கும் இந்த காலத்து யுவதிகள் போல் முதுகில் படரும் அளவு முடி தான் என்றாலும் அதுவே மனைவிக்குக் காய வேண்டுமே என்ற தவிப்புடன் தூங்கினான் அவன். இதோ விடிவதற்குள் இவர்கள் இரண்டு குடும்பங்களைப் பற்றி..

பச்சையப்பருக்கு மதுரையில் உள்ளடங்கிய ஒரு கிராமம் தான் சொந்த ஊர். அப்பா நந்தகோபாலன். அப்பவே மெத்த படித்தவர், தாசில்தார் பணி. அவருக்கு ஒரு மகன் மகள் மட்டும் தான். அப்பாவுக்கு அரசாங்க வேலை என்பதால் மகன் ராஜா வீட்டுக் கன்றுக்குட்டியாக சுற்றிக் கொண்டு வந்தவருக்கு பி.யு.சி படிக்கும் போதே தன் பள்ளியில் ஒன்பதாவது படித்த காந்திமதிமேல் காதல். அதை காலேஜ் படிக்கும் போது காந்திமதியிடம் சொல்ல வேற்று ஜாதி என்பதால் முதலில் தயங்கியவள் பிறகு அரை மனதாய் ஒத்துக் கொள்ள, அவர்கள் காதல் வளர்ந்தது.

மூன்று மாதங்கள் சென்ற நிலையில் திடீரென்று மதி பாட்டியின் உடல் நிலையைக் காட்டி அவள் வீட்டார் அவள் திருமணத்திற்கு ஏற்பாடு செய்ய இருவரும் மேஜர் ஆகாத நிலையில் என்ன முடிவு எடுப்பது என்ற குழப்பத்தில் தவறான முடிவை எடுத்து அந்த வயதிலேயே இருவரும் வீட்டை விட்டு ஆந்திரா போய் அங்கு பாரிவேந்தரிடம் டிரைவராய் வேலை பார்க்க அப்படி வளர்ந்தது தான் இருவருடைய நட்பு. அவர்கள் நட்பு மட்டும் இல்லை பாரிவேந்தர் பச்சையப்பர் குடும்பத்தார் தங்குவதற்குத் தங்கள் கெஸ்ட்ஹவுஸிலேயே இடமும் தர அதில் அவர்களுக்குப்எஎ பிற்காலத்தில் பிறந்த பிள்ளைகளின் நட்பும் வளர்ந்தது, யாழினி நந்துவைத் தவிர.

காலையில் கண்விழித்த போது யாழினி முதலில் பார்த்தது நேரத்தைத் தான். அது ஆறு பதினைந்து என்று காட்டவும் சற்றே ஆசுவாசம் ஆனவள் பிறகு திரும்பி கணவனைப் பார்க்க அவளுக்கு முன்பே அவன் எழுந்துவிட்டான் என்பதற்கு சாட்சியாக கட்டிலின் மறு கோடி காலியாக இருந்தது.

முன்பே எழுந்த இவர் என்னை ஏன் எழுப்பவில்லை என்ற எண்ணத்துடன் அவள் பின்கட்டு வந்து தன் காலைக் கடன்களை முடித்து வெளியே வந்தவளின் கண்ணில் வீட்டுக்கும் தோட்டத்துக்கும் இடையில் பக்கவாட்டில் சிமெண்ட் தரை இருக்க, அங்கு அவளின் நாயகன் கை இல்லாத பனியனும் ஷார்ட்ஸ்யுடன் தரையில் படுத்த படி ஒரு கையை முதுகுக்கும் ஒரு கையைத் தரையிலும் மாற்றி மாற்றி ஊன்றி ஊப்ஸ்.. ஊப்ஸ்.. என்று மூச்சு வாங்க அவன் புஷ் அப் எடுத்துக் கொண்டிருக்க, எப்போதும் கணவனின் அழகில் மயங்குபவளோ இன்று காலை வேளையில் இதுவரை காணாத ஒரு புது வித பரிமாணத்தில் தன்னவனைக் காணவும் மெய் மறந்து அதே இடத்தில் நின்று விட்டாள் அவள்.

“என்ன யாழினி! நேற்று கோவிலில் உன் புருஷன் பக்கத்தில் உட்கார்ந்த போது அவரைப் பார்த்து நீ சைட் அடிக்க ஆரம்பித்தது இன்னும் விட மனசு வரல போல!” என்று அங்கு வந்த சந்தியா கேலி பண்ணவள் “உனக்கு தான் உன் வீட்டுக்காரரைப் பார்த்தா பசியே எடுக்காது போல.... ஆனா எங்க வீட்டுப் பிள்ளைக்குப் பசிக்கும் மா....” என்றவள் இந்தா இது உனக்கான பூஸ்ட், இது தம்பிக்கு சத்துமாவு கஞ்சி” என்று இரண்டு கோப்பைகளை அவள் கையில் திணிக்கவும்,

“அக்கா இதையெல்லாம் நீங்க ஏன் க்கா எடுத்துட்டு வந்து...” என்று யாழினி சங்கடப்படவும், “ஒரு இரண்டு நாள் தான் யாழினி நான் செய்வேன். பிறகு நீ தான் பார்த்துக்கப் போறே.... பின்னாடி தோட்டம் இருக்கு. அங்கு நடந்த படியே ரெண்டு பேரும் பேசிகிட்டே இதைக் குடிச்சிட்டு சீக்கிரம் குளிச்சிட்டு நல்ல புடவையா கட்டிட்டு வா. ஏன் யாழினி படிச்ச பிள்ளையா இருந்துட்டு இப்படியா நடு சாமத்துல குளிப்ப? அதுவும் தலைக்கு..” என்று சிறு கண்டிப்பு குரலில் அவள் கேட்க,

இவர்களுக்கு எப்படி தெரியும் என்பது போல் யாழினி விழிவிரித்துப் பார்க்கவும் ஒரு கண் சிமிட்டலுடன் அவளிடமிருந்து விலகிய சந்தியா, அப்பொழுது தான் புஷ் அப் முடிந்து எழுந்து நின்ற நந்துவைப் பார்த்து “ஏன் கொழுந்துனாரே.. கல்யாணம் ஆனா முதல் நாளே என் தங்கையைப் பிடித்து கிணற்றுக்குள்ளே தள்ளி விட்டு இருக்கீங்களே? எனக்கு ஏதாவது ஆகிட்டா உங்க அண்ணா எப்படி உங்க எல்லோர் தலையையும் உருட்டுகிறாரோ அதே மாதிரி உங்க மனைவிக்காக நீங்க எங்க யார் தலையையும் உருட்டக் கூடாது சொல்லிட்டேன்..” என்று அவள் செல்லமாய் கட்டளையிட

“அது எப்படி அண்ணி அண்ணனுக்கு தம்பி நான் தப்பாம நடப்பனா? அவருக்கு ஒரு படி மேலே போய் என் பொண்டாட்டி காலில் முள்ளு குத்தினா கூட உங்களைத் தான் கேட்பேன்” என்று சிரித்த முகமாக வம்பு வளர்த்தான்.

“க்கும்...” என்று தன் முகவாயைத் தோளில் இடித்தபடி அவள் உள்ளே சென்று விட, துண்டால் முகத்தைத் துடைத்த படி மனைவியிடம் வந்தவன் அவள் கையிலிருந்த கஞ்சியை வாங்கி, “இன்னைக்கு ஒரு நாள் இதை குடிக்கிறேன். ஆனா நாளையிலிருந்து எனக்கான தேவையை நீ தான் செய்யணும்” என்று கண்டிப்புடன் கூறவும்

“ம்ம்ம்...” என்று தலையை உருட்டியவள் “ஏன் நான் குளிச்சதை அண்ணிகிட்ட சொன்னிங்க?” கணவனைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது என்பதால் இவன் தான் சொல்லி இருப்பானோ என்ற எண்ணம் அவளுக்கு.

“ஆமா.. இது பெரிய உலக சாதனை பாரு, நான் போய் எல்லார்கிட்டயும் சொல்ல... இது எல்லாம் நம்ப வீட்டு எப்.எம் உபயம்!” எனவும் அவள் புரியாமல் பார்க்க

“அதான் நேற்று இரவு மைக் வைத்து கத்தாத குறையா பாட்டி கிட்ட நீ இருக்கிறத சொன்ன இல்ல? அவங்க பண்ண வேலை” என்று அவன் சர்வ சாதாரணமாகச் சொல்ல,

“கடைசியில இது பாட்டி போட்டுக் கொடுத்த வேலையா?” என்று இவள் போலியாகப் பல்லைக் கடிக்கவும்

“இந்த போட்டுக் கொடுக்கிறது, நம்ப வைத்து ஏமாற்றுவது இதெல்லாம் எங்க வீட்டுல் இருக்கிறவங்க யாருக்கும் வராது. பாட்டி ரொம்ப எதர்த்தமானவங்க, அதான் சொல்லிட்டாங்க. இனி யாரையும் இப்படி பேசாத.. புரிந்ததா?” என்று கண்டித்தவன் தான் குடித்த கோப்பையை அவள் கையில் திணித்து விட்டு தோட்டத்தில் ஓட ஆரம்பிக்கவும், ஒரு வினாடி ஸ்தம்பித்து நின்றவள் பிறகு ‘நாம் யாரைப் போட்டுக் கொடுத்தோம்?’ என்ற தலை சிலுப்பலுடன் உள்ளே சென்றவள் குளித்துப் புடவை கட்டி வரவும்

“வந்துட்டியா? விஜி!” என்று அழைத்து, அவள் வந்ததும் ஒரு வெண்கலக் குடத்தை அவளிடம் கொடுத்த சந்தியா “சின்ன அண்ணியைக் கூட்டிட்டுப் போய் நம்ப காம்பவுண்ட்குள்ள இருக்குற பொது கிணற்றிலிருந்து நீர் எடுத்துக் கொடு. யாழனி! நீ வாசல் பெருக்கி அந்த தண்ணீயைத் தெளித்துக் கோலம் போட்டுட்டு அப்படியே உன் கையால் பால் காய்ச்சிப் பூஜை அறையில் வைத்து விளக்கு ஏற்றிடுமா” என்று இருவருக்கான வேலையைச் சந்தியா கொடுக்க, இருவரும் சரி என்று விலகுகிற நேரம் ஏதோ ஞாபகம் வந்தவளாக “விஜி! நீ பாட்டுக்கு சட்டுனு அழைச்சிட்டு வந்திடாதே. கொஞ்சம் பொறுமையா ரெண்டு வீடு சுற்றி கூட்டி வா” என்று சொல்லி அனுப்பினாள்.

இன்றும் சில கிராமங்களில் இப்படி ஒரு வழக்கம் இருக்கிறது. புதிதாக திருமணம் ஆன பெண்ணை நாத்தனார் முறை உள்ள பெண் அழைத்துச் சென்று குடத்தில் நீர் எடுத்துத் தர அதை அவள் தூக்கி வருவதை ஊரே பார்த்து இது தான் புதுப் பெண்ணா என்று அறியாதவர்கள் அறிவார்கள். அதைத் தான் சந்தியா செய்யச் சொல்லவும் இங்குமா அந்த பழக்கம் என்று சோர்ந்து போனாள் யாழினி.


அதிகம் பேரைக் கூப்பிடாமல் சொந்தத்துக்குள் எளிமையாக கோவிலில் திருமணம் நடந்ததால் இங்கு இருப்பவர்களுக்கு யாழினியைத் தெரியப்படுத்தவே சந்தியா இப்படி செய்தது.


அந்த காம்பௌண்டைச் சுற்றி, சேர்ந்தார்போல் மூன்று ஓட்டு வீடுகளைக் கொண்ட, தனித்தனியே வில்லாக்கள் என்று, பதினைந்து வீடுகள் இருந்தன. அங்கிருந்த அனைவருமே யாழினியை ஒரு வித சுவாரஸ்யத்துடன் பார்க்கவும், குடம் தூக்கி பழக்கம் இல்லாத அவள், கொஞ்சம் இல்லை, அதிகமாகவே திணறிப் போனாள்.

“இவ தான் நந்தா பொண்டாட்டியா?” என்று சில பெரியவர்கள் கேட்க

“அச்சசோ! அந்த அக்காவுக்கு குடமே தூக்கத் தெரியலை” என்று சில இளம் பெண்கள் தங்களுக்குள் பேசி சிரிக்க

“அந்த கருப்பனுக்கு இப்படி ஒரு கலரான மனைவியா?” என்று சில இளம் வயது ஆண்கள் ரகசியமாக புலம்ப, இது எதற்குமே அவளுடைய முகத்தில் எந்த பிரதிபலிப்பம் காட்டாமல் சமாளித்து வர,
அவளுக்கு அடுத்த சோதனை, தெரு கூட்டுவதில் வந்து நின்றது. எப்போதாவது அவசியப்பட்டால் மட்டுமே தங்கள் வீட்டில் வேக்யூம் கிளீனர் கொண்டு சுத்தம் செய்வளுக்கு, இன்று தென்னந்துடைப்பம் வடிவத்தில் விதி சதி செய்தது. கூட்டும் போது அவள் கைகளில் அதன் குச்சிகள் குத்தி, வலியையும் சிவந்து போன தடிப்பைத் தரவும், அவளுக்கு அழுகை வராத குறைதான்.
விஜி கூட பார்த்துவிட்டு, தானே செய்வதாகச் சொல்ல, மற்ற நேரம் என்றால் அவளும் சரி என்று விட்டு விட்டிருப்பாள். ஆனால் அவள் கணவனோ பேப்பர் படிக்கும் சாக்கில் வீட்டு வாசலிலே அமர்ந்து, அவள் வேலையையே பார்வையிடவும், எங்கே இதைக் கூட செய்ய முடியாதா என்று திட்டுவானோ என்ற பயத்தில் பல்லைக் கடித்துக் கொண்டு அனைத்தையும் செய்தாள்.
அவள் எண்ணம் சரி தான். எப்போதோ படித்து முடித்த பேப்பரை, பேருக்கு என்று படிப்பது போல் வைத்துக் கொண்டிருந்ததற்கு அது தானே காரணம். கூடவே இந்த வேலை எல்லாம் அவள் செய்வதில் அவனுக்குள் அப்படி ஒரு சந்தோஷம். அவளைக் கஷ்டப் படுத்தி பார்க்கிறாராம் அவளின் கட்டதுரை.

காலை உணவுக்குப் பிறகு தம்பதிகள் இருவரையும் யாழினி வீட்டு விருந்துக்குப் போகச் சொல்ல, வேண்டா வெறுப்பாக மனதில் புகைந்து கொண்டே கிளம்பினான் நந்தா. இப்படி ஒரு நிலை வரும் என்று அவன் சிறிதும் யோசிக்கவில்லை.
இந்த திருமணமே நடக்காது என்று மனக்கோட்டை கட்டியவனுக்கு அதெல்லாம் தரைமட்டமாய் ஆகிவிட்டதே என்ற கோபத்திற்குத் தூபம் சேர்ப்பது போல் இரவு எதுவும் நடக்காமலேயே, இருவருக்குள்ளும் ஏதோ நடந்த மாதிரி பாட்டி கொடுத்த பில்டப்பில் வீட்டில் உள்ளவர்கள், அவனை குறுகுறுவென்று பார்ப்பதாகவே பட்டது.

ஈஸ்வரியும் சந்தியாவும் அவனிடம் நேரடியாக வம்பு வளர்க்கவில்லை என்றாலும் நந்துவைப் பார்க்கும்போது எல்லாம் வாய்க்குள் சிரிப்பை அடக்குவது போலவே அவனுக்குத் தோன்றியது. அவன் அண்ணன் கிருஷ்ணாவோ காலை உணவைத் தடபுடலாக செய்யச் சொல்லி பரபரத்தான். இப்பவும் பாட்டி சும்மா இல்லாமல் நந்து காதுபடவே “கல்யாணமே வேண்டாம் சொன்னானே? இப்போ பாருங்க..” என்று தன் கணவனிடம் சொல்ல, “யாரு? அவன் இந்த நந்தகோபாலின் பேரன்டி!” என்று சொல்லி அவர் மீசையை முறுக்கவும், இதெல்லாம் பார்த்த நந்துவுக்கு எங்கேயாவது போய் முட்டிக்கொள்ளலாம் போலிருந்தது.

‘ச்சே.. இவர்கள் எல்லோரும் இப்படி நினைக்க இந்த குந்தாணி தான் காரணம்’ என்று ஒரு சாதாரண கேலியைக் கூட அவமானமாக நினைத்தவன், ‘இப்படி என் வீட்டினர் முன்பாக என்னைத் தலைகுனிய வைச்ச மாதிரி உன் வீட்டினர் முன்பு உன்னையும் தலை குனிய வைக்கிறேன்டி’ என்று உள்ளுக்குள் கங்கணம் கட்டிக் கொண்டான் அவளின் மணாளன்.
 
Last edited:
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN