மௌனங்கள் 22

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
தனசேகரன் POV

செவிலியை ஆச்சரியத்தோடு பார்த்தேன்.

"தீவிரவாதிகளை பத்தி இவங்களுக்கும் சரியா தெரியல சார்.. ஆனா இவங்களுக்கு வேலை சொன்னவன் பிரபல தொழிலதிபர் வீர ராகவன்.." என்றாள்.

வீர ராகவன்.!?

சமூகத்தில் பெரும் புள்ளி அவன். அரசியல் பின்புலம் உள்ளவன். அரசு அதிகாரிகளையே இடம் மாற்றும் அளவுக்கு திறமைசாலிதான். ஆனால் கேவலம் தீவிரவாதிகளோடு கூட கூட்டு சேர வேண்டுமா.?

வீர ராகவன் பெயரை கேட்டதும் விஷால் போனோடு கிளம்பினான்.

ஒவ்வொருவரை பற்றியும் தெரிய தெரிய சாக்கடைகளை பார்ப்பது போலவே இருந்தது. சாக்கடைகளை விடவும் மோசமாகத்தான் இருந்தனர்.

விஷால் என் அருகே வந்தான். "வீர ராகவனை நேத்திலிருந்து காணம்ன்னு சொல்றாங்க சார்.." என்றான்.

குழப்பமாக இருந்தது. எங்களுக்கே இப்போதுதான் தெரியும். பிறகெப்படி.?

"வீர ராகவனுக்கு இன்னொரு ஆள் கூட்டு சார்.." என்றாள் செவிலியை இப்போதுதான் நினைவு வந்தது போல. அவளின் கவலை அவளுக்கு. காதல் கணவன் நாட்டை அழிப்பவனின் கைக்கூலி என்று தெரிந்த பிறகு யாருக்குத்தான் கவலை வராது.?

"வசந்தின்னு என்னவோ பேர் சொன்னாரு.." என்றாள். குரல் அளவுக்கு அதிகமாக சோர்ந்து போயிருந்தது. கோடி ஆண்டுகள் அழுதாலும் தீராத துரோகம் அவளுக்கானது.

வசந்தி என்ற பெயரை கேட்டதும் என்னவோ பொறி தட்டியது போலிருந்தது. நேற்று முற்பகலில் யாரோ அவளை சுட்டுக் கொன்றதாக சேதி வந்தது. அவளின் கேஸை நான் கவனிக்கும் அளவிற்கு எனக்கு இப்போது நேரம் இல்லை என்பதால் அவளின் வட்டார காவல்துறை அதிகாரியிடம் தீர விசாரிக்க சொல்லி இருந்தேன்.

வசந்தியை ஆரம்பத்திலேயே சந்தேகித்தேன் நான்.‌ இந்நாட்டை வெறுப்பதாக அவ்வப்போது சமூக வலைதளங்களில் வீடியோ பகிர்வாள்.

வெளிநாடுகளில் இருந்து யாருக்கெல்லாம் அதிக பணம் வந்துள்ளது என்று நாங்கள் சோதித்த நேரத்தில் வெளிநாட்டு பணம் அல்ல, ஆனால் திடீர் பணக்காரியாக இவள் ஆகியுள்ளாள் என்பது கவனத்திற்கு வந்தது. அவளை விசாரிக்க ஓநாய்களில் ஒன்றை அனுப்பியதுதான் முட்டாள்தனத்திலும் பெரிய முட்டாள்தனம்.

நான் ஒன்றும் ஈஸ்வரன் அல்ல. ஆயிரமாய் பிரிந்து போய் கோடி பேரிடம் விசாரிக்க.! எனது கூட்டாளிகளிடம் ஆளுக்கொரு வேலையை நான் பிரித்து தந்துதான் ஆக வேண்டும். நட்டம் முழுக்க எனக்கேதான். விசயம் பத்திரிக்கைகளுக்கு தெரிய வருகையில் அர்ச்சனை முழுக்கவும் எனக்கேதான். ஆனால் என்ன செய்யட்டும்.?

குழந்தைகள் இரண்டையும் இரண்டு காவலர்கள் அழைத்துக் கொண்டு கிளம்பினார்கள். அழுதுக் கொண்டே சென்றார்கள் குழந்தைகள்.

"நீங்க வீட்டுக்கு கிளம்புறிங்களா.?" என்றேன் செவிலியையிடம்.

சோகமாக தலையசைத்தாள். இங்கிருந்து கிளம்பினாள். மனம் ஒரு மாதிரியாக இருந்தது. அவளை பிடித்து நிறுத்தினேன்.

"யாரோ செஞ்ச தவறுக்கு நாம காரணம் கிடையாது. மத்தவங்களோட தவறுகளுக்கு நம்மை பலியாக்கிக்க வேண்டிய அவசியமும் இல்ல.." என்றேன்.

கசப்பாக சிரித்தாள். "இவனுக்காக தற்கொலை பண்ணிக்கும் அளவுக்கு இல்ல சார் இப்ப. இதே நாலஞ்சி வருசம் முன்னாடியா இருந்தா தற்கொலை பண்ணிட்டு இருந்திருப்பேன். ஆனா இப்ப நான் காப்பாத்த வேண்டிய உயிர்கள் ஆஸ்பிட்டல்ல எனக்காக காத்திட்டு இருக்கு‌. சாத்தான் தவறு செஞ்சதுக்காக எந்த தேவதைகளும் செத்து போகாதுங்க.." என்றவள் என்னிடமிருந்து விலகி நடந்தாள்.

சிறகு இரண்டு அவளுக்கு இருந்தது போலவே தோன்றியது எனக்கு.

"அனைத்து போலிஸ் ஸ்டேசனுக்கும் தகவல் அனுப்பி இருக்கேன் சார்.. வீர ராகவனை பற்றிய தகவல்கள் சீக்கிரம் கிடைக்கும். வசந்தியோட மர்டர் கேஸை பார்த்துட்டு இருக்கும் இன்ஸ்பெக்டர்கிட்டயும் விசாரணையை தீவிரப்படுத்த சொல்லி இருக்கேன்.." என்றான் விஷால்.

அவனின் தோளில் தட்டி தந்தேன்.

"இவங்ககிட்டயும் இன்னும் விசாரணை செய்யலாம்.." என்றேன்.

உண்மையில் இதுவரை எந்த பிரச்சனையும் இத்தனை நாட்கள் இழுத்தடித்ததே இல்லை. தீவிரவாதிகள், வெடிகுண்டுகள் என்றாலே தேடுதல் வேட்டை அதிபயங்கரமாக இருக்கும்‌. சந்தேகப்படும்படி உள்ள அத்தனை பேரையும் முட்டிக்கு முட்டி தட்டி, தீவிரவாத சாயல் கொஞ்சமாக தெரிவோரை கூட தலைகீழாக கட்டி தோலை உரித்து யாரெல்லாம் எதிரிகள் என்பதை உடனே அறிந்து விடுவோம்.

இந்த முறையும் அப்படிதான் இருந்தது. ஆனால் இந்த ஓநாய்களின் குழி பறிப்பில் நாட்டு மக்கள் மொத்த பேரும் பழி வாங்கப்பட்டு விட்டனர்.

என் குழு பழைய தீவிரத்தோடு செயல்பட ஆரம்பித்தது. ஓநாய்கள் கட்டிய திரையை விலக்கிய பிறகு பாதை சுலபமாக இருப்பது போலிருந்தது.

ஓநாய்கள் மூவரையும் பட்டினியாய் சாகடித்தோம். தண்ணீர் கூட யாரும் தர கூடாது என்று கடும் உத்தரவிட்டேன்.

அன்றைய நாள் மாலையில் வட ஏரியா பகுதி போலிஸ் ஸ்டேசனை சேர்ந்த சப் இன்ஸ்பெக்டர் போனில் அழைத்தார். அந்த பகுதியில் இருந்த ஒரு வீடு நேற்றைய நாள் சிலிண்டர் விபத்துக்கு உள்ளானதாகவும், அந்த வீட்டை சோதனை செய்ததில் அங்கே நின்றிருந்த கார் வீர ராகவனுக்கு சொந்தம் என்று தகவல் கிடைத்ததாகவும் சொன்னார்.

விசயம் கேட்டதும் விஷால் கை விரல் முட்டியால் சுவற்றை குத்தினான்.

"அந்த நாய் மட்டும் கையில் கிடைச்சா ஊறுகா போடலாம்ன்னு இருந்தேன். ஆனா இப்படி தப்பிச்சிட்டான்.." என்றான் ஆத்திரத்தோடு.

இது நிச்சயம் தீவிரவாத கூட்டத்தின் வேலைதான்.‌ நாங்கள் சரியான பாதையில் செல்கிறோம் என்பதற்கு இதுதான் சிறந்த அத்தாட்சி.

வீர ராகவனின் வீட்டில் இரண்டு நாட்களாக தீவிர சோதனை நடந்தது. ஆனால் தடயங்கள் எதுவும் கிடைக்கவில்லை. தடயங்கள் கிடைக்கும்வரை சோதனையை இரு மடங்காக்குங்கள் என்று சொன்னேன்.

மூன்று மாதங்களுக்கு முன்புவரை அவன் ஹோட்டல் ஒன்றிற்கு அடிக்கடி சென்று தங்கியிருந்ததாகவும் தகவல் வந்தது. விஷால் சென்று விசாரித்து வந்தான்.

போனில் புகைப்படம் ஒன்றை காட்டினான்.

"இவன் பேரு புவின்னு ஹோட்டல்ல வேலை செஞ்சவங்க சொன்னாங்க. சி.சி.டி.வி ரெக்கார்ட்ல விழுந்த முகம் இது. இவனோடுதான் வீர ராகவன் கடந்த சில மாதங்களாக பேசிட்டும் பழகிட்டும் இருந்திருக்கான். இந்த ஆளை பத்தி டீடெயில் சரியா தெரியல. ஆனா இவன் வந்த டேட்டுக்கு பிறகுதான் நம்ம நாட்டுல குண்டு வெடிக்க ஆரம்பிச்சிருக்கு.. பயங்கர சந்தேகம் எனக்கு இவன் மேல.. இப்ப ஆள் எங்கேன்னு சரியா தெரியல.." என்றான்.

விஷாலின் முகம் வியர்த்து போயிருந்தது.

"இந்த போட்டோவை எல்லா ஸ்டேசனுக்கும் எல்லா பிரெஸ்ஸுக்கும் அனுப்புங்க.. எல்லா ஸ்டேசன்ல உள்ள காவலர்களுக்கும் அவங்க சரகத்துக்கு உட்பட்ட அனைத்து வீட்டுக்களுக்கும் போய் இப்படி ஒரு ஆள் எந்த வீட்டுலயும் இல்லன்னு கன்பார்ம் பண்ண சொல்லுங்க.. அப்படி இருந்தா அவனை பார்த்த இடத்துல கை காலை உடைச்சி தூக்கிட்டு வர சொல்லுங்க.. இந்த ஆளை கண்டுபிடிச்சி தரவங்களுக்கு கோடி ரூபா பரிசுன்னு அறிவிங்க.. எல்லா மக்களுக்கும் இந்த நியூஸ் போகணும்.. தீவிரவாதின்னே இவனை சுட்டுங்க.." என்றேன்.

அவன் தீவிரவாதியாய் இல்லாமல் கூட இருக்கலாம்‌. ஆனால் அவன் என் கைக்கு உடனடியாக கிடைக்க வேண்டும். அதற்காக எந்த வழியையும் கையாளுவேன் நான்‌‌.

மற்றொரு சக தோழரை அழைத்தேன். "விஷால் போய்ட்டு வந்த ஹோட்டலுக்கு போங்க.. அங்கே எதாவது கிரிடெட் கார்டையோ இல்ல வேறு ஏதாவது விசயத்தையோ அவன் பயன்படுத்தி இருக்கலாம். அதை பற்றிய முழு தகவலும் கொண்டு வாங்க.. குயிக்.." என்றேன். அவர் வீர வணக்கத்தை வைத்துவிட்டு அவசரமாக ஓடினார்.

எடுபிடி வேலையாவது கொடுப்பார்கள் என்று நம்பிக்கையோடு எனக்கு உதவியாளர்களாக சேர்ந்திருந்த ஐந்து புது கடைநிலை காவலர்களை அழைத்தேன்.

"இதுவரை நாம கலெக்ட் பண்ண அத்தனை வீடியோஸையும் மறு பரிசோதனை செய்யணும்.. சீக்கிரமா முடிக்கணும். அதே நேரம் கவனமா இருக்கணும்.. அவனோட போட்டோவை உங்க எல்லார் போனுக்கும் அனுப்பி வச்சிருக்கேன். சந்தேகத்துக்கு இடமான வீடியோஸ்ல இவன் இருந்தான்னா உடனே அதை எடுத்து வைங்க. என்னை கூப்பிடுங்க.." என்றேன். அவர்கள் விசயத்தின் தீவிரம் புரிந்து கிளம்பினார்கள்.

துறைமுகங்கள், விமான நிலையங்கள், சாலை வழிகள் அனைத்தையும் தங்களின் கட்டுப்பாட்டில் வைக்க சொல்லி அனைத்து அதிகாரிகளிடமும் கேட்டுக் கொண்டேன். புகைப்படத்தில் உள்ளவனின் சாயலில் யாராவது ஒருவர் கிடைத்தால் கூட அவர்களை கைது செய்ய சொன்னேன்.

அனைவருக்கும் அனைத்து உத்தரவுக்களையும் போட்ட பிறகு நாற்காலியில் அமர்ந்தேன். போனில் இருந்தவனின் புகைப்படத்தை பார்த்தேன்.

உடல் பலமுள்ளவன்தான்‌. முகத்தில் வெறுப்பும் கடின தன்மையும் வெளிப்படையாகவே தெரிந்தது. இதே நாடுதான். நன்றாக உற்று பார்த்தால் ஊர்க்காரன் என்று சொல்லும்படிதான் இருந்தது முகத்தின் தோற்றமும். இவன்தான் தீவிரவாதியா, இல்லை தீவிரவாதியோடு சம்பந்தம் உள்ளவனா என்று சந்தேகமாக இருந்தது.

யாராக இருந்தால் என்ன.? சந்தேக வட்டத்துக்குள் வந்து விட்டான். தூக்காவிட்டால் எனக்கு மனம் சரியாக வேலை செய்யாது. தூக்கி வந்த பிறகு வேண்டுமானால் அவன் தீவிரவாதியா இல்லையா என்பதை விசாரிக்கலாம். ஆனால் அவன் என் கைக்கு கிடைக்கும் வரை கெட்டவனேதான்.

அவனின் புகைப்படம் பார்த்து அமர்ந்திருந்த வேளையிலேயே போன் ஒலித்தது. முக்கிய அதிகாரி. போன் அழைப்பை ஏற்றேன்.

"நீ ஏன் இவ்வளவு மோசமா செயல்படுற சேகர்.? உன் கூட்டத்துலயே ஓநாய்களை வச்சிட்டு இருந்திருக்க.. இதுக்கு அர்த்தம் என்ன தெரியுமா.? நீ ஒழுங்கா வேலை செய்யலன்னுதான்.!" என்றார்.

ஏற்கனவே மற்ற அதிகாரிகள் திட்டி விட்டார்கள். இவர் ஒருவர்தான் பாக்கி. இவரும் முடித்து விட்டால் பிறகு கொஞ்சம் நிம்மதியாக இருக்கலாம்.

"உன்கிட்ட இந்த வேலையை தந்ததுக்கு பதிலா ரோட்டுல போற ஒரு காட்டு மிருகத்துக்கிட்ட தந்திருக்கலாம். அதுங்களாவது நாட்டு மேல இருக்கற அக்கறையில் முதல்லயே ஓநாய்களை கண்டுபிடிச்சி இருக்குங்க.!" என்றார்.

"சாரி சார்.." என்றேன். இதை தவிர என்ன சொன்னாலும் திட்டு அதிகமாக விழுமே தவிர குறையாது.

அவர் இன்னும் சில பல வார்த்தைகள் திட்டினார். "நீ என்ன செய்வியோ.? எத்தனை பேரை கொல்வியோ.? அதெல்லாம் எனக்கு தேவையில்ல. ஆனா அந்த நாய் சாகணும். ரொம்ப ரோசத்துல அவனை நீயே ஏதாவது செஞ்சிடாதே.! அவனை வச்சி அவன் பின்னாடி இருக்கும் மொத்த பேரையும் பிடிச்சாகணும்.. அன்டர்ஸ்டேன்ட்.?" என்று விட்டு தொடர்பை துண்டித்தார்.

பெருமூச்சு விட்டுக் கொண்டு போனை காதிலிருந்து எடுத்தேன்.

"சார்.." என்றார் சக காவலர் ஒருவர். திரும்பினேன். கையில் போனோடு இருந்தார். வெகுநேரமாக காத்திருப்பார் போல. நான் வாங்கிய அர்ச்சனைகளையும் கேட்டிருப்பார் போல!

"கிழக்கு ஏரியா போலிஸ் ஸ்டேசன் இன்ஸ்பெக்டர் சார்.. உங்களோடுதான் பேசணும்ன்னு சொல்றாரு. முக்கியமாக விசயம்ன்னு சொன்னாரு.!" என்றான்.

போனை வாங்கினேன்.

"ஹலோ‌‌.."

"சார்.. இங்கே ஒரு பொண்ணு வந்திருக்கா.. தீவிரவாதியை தெரியும்ன்னு சொல்றா.." என்றான் எதிர்முனைக்காரன்.

"சார் அவங்க பணத்துக்காக இப்படிதான் சொல்வாங்க சார்.. ஒரு நாளைக்கு ஒரு ஸ்டேஷன்ல இருந்தே பத்து இருபது கால் வருது.." என்றேன் சலிப்பாக‌.

"அந்த பொண்ணோடு போய் அந்த பொண்ணு சொல்ற வீட்டை செக் பண்ணுங்க‌. கன்பார்ம்ன்னா மட்டும் அவனை அரெஸ்ட் பண்ணிட்டு போன் பண்ணுங்க.." என்றேன்.

அழைப்பை துண்டிக்க முயன்ற நேரத்தில் "சார்.. உங்களுக்கு என் கவலை புரியுதா.?" என்றது ஒரு பெண் குரல். போனை மீண்டும் காதில் வைத்தேன்.

"சார்.. நீங்க புவினை பத்தி விசயங்களை கண்டுபிடிச்சிங்கன்னு கூட எனக்கு இப்பவேதான் தெரியும். அவன் இரண்டு நாளா என்னை ரூம்ல கட்டிப்போட்டு வச்சிருந்தான். கஷ்டப்பட்டு தப்பிச்சி வந்திருக்கேன்.. ப்ளீஸ் என் பேச்சை கேளுங்க.. அவனை சீக்கிரம் பிடிங்க.. இல்லன்னா மறுபடியும் பாம் வைப்பான்.." என்று அழுகையும் கோபமுமாக பேசினாள் அவள்.

"காரை எடுங்க.." என்றேன் போன் கொண்டு வந்து தந்தவரிடம். "இந்த போன் வந்த ஸ்டேசனுக்கு வண்டியை விடுங்க.." என்றேன்.

அவளின் குரலும், அழுகையும் என்னை யோசிக்க வைக்கவில்லை அந்த பெயர். அவனின் பெயரை நாங்கள் எங்கேயும் வெளியே பகிர்வில்லை. இவளுக்கு நிச்சயம் ஏதோ ஒன்று தெரிந்திருக்க வேண்டும்.

"இன்ஸ்பெக்டர்க்கிட்ட போன் கொடும்மா.!" என்றேன்.

"சார்.." என்றார் அவர்.

"சார்.. அந்த பொண்ணை ஸ்டேசன்லயே இருக்க வைங்க. இரண்டு லேடி போலிஸை பாதுகாப்புக்கு கொடுங்க.. ஆனா கவனமாக இருக்க சொல்லுங்க. இவளும் நல்லவன்னு நமக்கு தெரியாது. உடனே அவ சொல்ற அட்ரஸ்க்கு போய் அந்த ஆள் இருக்கானான்னு பாருங்க‌. இருந்தா உடனே கை காலை உடைச்சி அரெஸ்ட் பண்ணுங்க.." என்றேன்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN