காதல் கடன்காரா 30

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அபிராமியும் அவளது தோழிகளும் ஐஸ்கிரீம் கடை ஒன்றில் அமர்ந்து ஐஸ்கிரீமை சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

சுவாதியின் கண்கள் கடையின் வெளியே இருந்த பார்க்கிங்கையே வட்டமிட்டது.

"டேஸ்ட் பிடிக்கலையா.?" கோன் ஐஸ் ஒன்றை சாப்பிட்டபடியே கேட்டாள் சிந்து.

"அவனை பார்த்தா ரொம்ப பாவமா இருக்கு.? இவளை கடத்திட்டு போனதுக்கு பதிலா என்னை கடத்திட்டு போயிருந்தான்னா நல்லா இருந்திருக்கும்.." என்று சுவாதி சொல்லி முடித்த நேரத்தில் அவளின் தொடையில் சிந்தியது ஒரு டம்ளர் தண்ணீர்.

அவசரமாக எழுந்து சுடிதாரின் டாப்பை உதறினாள் அவள்.

"சாரி சுவா.. தெரியாம கை பட்டுட்டிச்சி.." என்றபடி சாய்ந்து கிடந்த டம்ளரை எடுத்து நேராக வைத்தாள் அபிராமி.

பற்களை கடித்தபடி அவளை பார்த்தாள் சுவாதி.

"இட்ஸ் நாட் ரைட் அபி.. எனக்கு அவன் மேல எந்த கிரஷ்ம் கிடையாது. இது ஜஸ்ட் கேலி கிண்டல். உனக்கு பிடிக்கலன்னா 'அவனை பத்தி கிண்டல் பண்ணாதே'ன்னு சொல்லிடு. நான் அத்தோடு விட்டுடுவேன். ஆனா ஏன் எப்பவும் உன் கோபத்தை இப்படி வேறு விதமாவே காட்டுற.?" என்று தன் டாப்பின் நனைந்த பகுதிகளை கை காட்டினாள்.

அபிராமி விழிகளை சுழற்றினாள். "சாரி.." என்றாள். அது அவளின் மனதிலிருந்து வந்த வார்த்தை அல்ல என்று அவளுக்குமே தெரியும்.

சிந்து ரகசியமாக சிரித்தாள். "நீ அவனை லவ் பண்றியா.?" என்றாள்.

இடம் வலமாக தலையசைத்த அபிராமி "நான் ஏன் லவ் பண்ணனும்.?" என்றபடி பார்க்கிங்கை பார்த்தாள்.

ஐஸ்க்ரீம் கடையின் வாசலையே பார்த்துக் கொண்டிருந்தான் கார்த்திக். நடுவிலிருந்த கண்ணாடி சுவர் அபிராமியை அவனின் பார்வைக்கு காட்டவில்லை. ஆனால் உள்ளிருந்து பார்த்த அபிராமிக்கு அவனின் தேடல் பார்வை புரிந்தது.

தன் பைக்கின் மீது அமர்ந்திருந்தவன் அமர்ந்த இடத்திலேயே தவியாய் தவித்துக் கொண்டிருந்தான் அவன். அவனின் தேவதை மீண்டும் எப்போது பார்வைக்கு தென்படுவாள் என்று நொடிக்கு யுக யோசனையோடு காத்திருந்தான்.

"உன் ஆளுக்கு வேலை போயிடுச்சாம்.." சிந்து சொன்னதற்கு தெரியும் என்பது போல தலையசைத்த அபிராமி "ஊரை சுத்தி காடு தோட்டத்தை வச்சிக்கிட்டு அடுத்தவன்கிட்ட போய் வேலை பார்த்துட்டு இருக்கான். சோம்பேறிதனம் இவன் உடம்பு முழுக்க ஊறி போயிருக்கு சிந்து. நடக்கறது நடக்கட்டும். இந்த வேளைக்கு சோறு கிடைச்சா போதும்ங்கறதுதான் இவன் எண்ணம்.." என்றவள் ஐஸ்க்ரீமை காலி செய்து விட்டு எழுந்து நின்றாள்.

"இன்னொரு ஐஸ்க்ரீம் வாங்கிட்டு வரேன்.." என்று சென்றவள் வாசலை தாண்டி சென்று ஐஸ்க்ரீமை வாங்கிக் கொண்டு திரும்பினாள். அவள் இந்த பக்கமும் அந்த பக்கமும் தாண்டி செல்கையில் ஆவியாய் அலை பாய்ந்தது கார்த்திக்கின் மனது.

"நான் ஒன்னு சொல்லட்டா அபி.?" என கேட்ட சிந்துவை நிமிர்ந்து பார்த்தாள்.

சிந்து கார்த்திக்கை திரும்பி பார்த்துவிட்டு இவள் புறம் திரும்பினாள். "அவன் அனுபவிச்சிட்டான்னு நினைக்கிறேன். போதும். உன் நாடகத்தை நிறுத்திக்க. பார்க்கற இடத்துல எல்லாம் அவனேதான் இருக்கான். செத்து போன முகத்தோடு நிற்கிறான். உன்னை பார்க்கும் போதெல்லாம் ஏக்கத்துலேயே செத்துடுறதை போல அப்படி பீல் பண்ணி பார்க்கறான். நிஜமா சொல்லணும்ன்னா அவனை பார்த்தாலே வதையா இருக்கு எனக்கு.!" என்றாள்.

'ஓவராவா டார்ச்சர் பண்றோம்.?' என யோசித்தபடி கார்த்திக்கை பார்த்தாள் அபிராமி. அசல் பிச்சைக்காரனை நினைவுபடுத்துவது போல இருந்தது அவனை தோற்றம். முள்ளு முள்ளாய் வறண்டு போன தலைமுடி, குழி விழுந்த கன்னம், பரட்டை தலையை போல தாடி, எத்தனை நாளுக்கு முன் குளித்தானோ என்பது போல அழுக்கு சட்டை.. என்று அவனை பார்த்தாலே அவளுக்கு அப்படிதான் தோன்றியது.

அபிராமி ஐஸ்க்ரீமை சுவைத்தாள். "டார்ச்சர் மாதிரி தெரியல சிந்து. ஒருவேளை நான் அவனோடு போன அந்த நாள்ல குடும்ப மானமே போச்சின்னு எங்க தாத்தாவோ அப்பாவோ தூக்கு மாட்டிக்கிட்டு இருந்திருந்தா என்ன ஆகியிருக்கும்.?" என்றாள்.

சுவாதி கடுப்போடு சிரித்தாள். "நீயே சொல்லிட்ட.. நீ அவனோடு போனன்னு.. நீ போனா அதுக்கு நீதான் முழு பொறுப்பு. அவன் சாகட்டும்ன்னு நீ விட்டிருக்கணும். பெத்தவங்களுக்கு மானம் போயிடும்ன்னு யோசிக்கறவ அதை அந்த செகண்டே யோசிச்சி இருக்கணும். சின்ன குழந்தை நீ.. அவன் மிட்டாய் தந்து கூட்டி போனான்!" என்றாள் கேலியாக.

அபிராமி அவளை கீழ்பார்வை பார்த்தாள்.

"சாரி தோழி.. நீ மறுபடியும் கொட்ட இங்கே தண்ணீர் இல்ல.." முப்பத்தியிரண்டு பற்களையும் காட்டியபடி சொன்னாள் சுவாதி.

"ஒரு விதத்துல சுவா கேள்வி ரைட்தானே.?" சிந்துவும் சுவாதியோடு இணைந்து நின்றவாறு கேட்டாள்.

அபிராமி பெருமூச்சு விட்டபடி இரு தோழிகளையும் பார்த்தாள். "முதல் விசயம்.. அன்னைக்கு எனக்கு கல்யாண நாள். பரபரப்பு, புது வீட்டுக்கு போக போற தயக்கம், பெற்றோரை விட்டு பிரிஞ்ச போகணுமேங்கற சோகம், மணமேடையில் எந்த சடங்கையாவது மாத்தி செஞ்சிடுவேனோங்கற பதட்டம்ன்னு.. எத்தனை விசயம் என் மனசுக்குள்ள இருந்ததுன்னு எனக்கு மட்டும்தான் தெரியும். வலது கை, இடது கையா இருக்க வேண்டிய என் பிரெண்டுங்க இரண்டு பேரும் என்னை தனியா விட்டுட்டு டூர்ல போய் உட்கார்ந்துட்டு 'சாரி இங்கே ஒரு சின்ன தடங்கல்.. அதனால இன்னைக்கு எங்களால வர முடியல'ன்னு காரணம் சொல்லி என்னை அந்த நேரத்துல அனாதை மாதிரி விட்டுட்டாங்க. கல்யாணத்துல பிரெண்ட்ஸ் எவ்வளவு முக்கியம்ன்னு அனுபவிச்ச எனக்குதான் தெரியும். எவ்வளவு ஸ்ட்ரெஸ் மனசுக்கு.! அந்த டைம்ல இந்த பன்னாடை வந்து கட்டிக்கிறியா இல்ல நான் சாகட்டான்னு கேட்டா நான் என்ன செய்வேன்.? முழு குழப்பத்துல இருந்த டைம் அது. என் முடிவு எப்படி வேணாலும் இருக்கலாம். என் பலவீனமான சூழ்நிலையை பயன்படுத்தி என்னை கார்னர் பண்ணது அவன் தப்புதானே தவிர என் தப்பு இல்ல.." என்றவளின் பதிலை இருவருமே ஏற்றுக் கொள்ளவில்லை.

"நீ உன் அண்ணன்கிட்ட சொல்லி இருக்கலாம். இல்லன்னா எங்களுக்கு போன் பண்ணி இருக்கலாம்.."

சுவாதியை கோபத்தோடு பார்த்தாள் அபிராமி. வெடித்து சிதற இருக்கும் எரிமலையாக இருந்தது அவளின் உள்ளம்.

"அந்த *** எனக்கு யோசிக்க கூட டைம் தரலன்னு எத்தனை முறை சொல்றது.? இரண்டு செகண்ட் யோசிச்சி நிற்கறேன்.. நீ போய் தாலியை கட்டிக்க.. நான் போய் தற்கொலை பண்ணிக்கறேன்னு கிளம்பறான்.." என்ற அபிராமி சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு தோழிகளோடு நெருங்கி அம்ரந்தாள்.

"என்னையும் என் பேமிலியையும் விட்டுடுன்னு அந்த பரதேசியோட கால்ல கூட விழுந்தேன் நான்.." என்றாள் மூக்கு சிவக்க.

சிந்துவும் சுவாதியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். 'இவளா காலில் விழுந்தாள்?' என்று சந்தேகித்து குழம்பினர்.

"ப்ராமிஸாவா.?" சுவாதி தன் உள்ளங்கையை நீட்டி கேட்டாள்.

அபிராமி பற்களை கடித்தபடி அவளின் கையில் அடித்து சத்தியம் செய்தாள். தோழிகள் இருவரும் ஆச்சரியத்தோடு அவளை பார்த்தனர்.

"அபி.. யூ ஆர் குயின்டி!" என்று அவளை தோளோடு கட்டிக் கொண்டாள் சிந்து.

"நோ.. இவளையே கால்ல விழவச்ச அவன்தான் கிங்கு.." என்றாள் சுவாதி.

"நீ அவனுக்கே ஜால்ரா போட்டுக்கிட்டு இரு.. நான் உன்னை கொன்னுட்டு அடுத்த வேலையை பார்க்கறேன்.." என்று எச்சரித்த அபிராமி "நான் அவன் கால்ல விழுந்த விசயம் பத்தி வெளியே சொன்னிங்கன்னா அப்பவும் கொன்னுடுவேன்.." என்றாள் மிரட்டலாக.

"கருமம் இதையெல்லாம் எவன் சொல்லுவான்.?" கிண்டலாக கேட்ட சுவாதியை கை காட்டி நிறுத்திய சிந்து "இப்ப மேட்டர் அது இல்ல.. அவனை கண்ணுல பார்க்க முடியல என்னால! அவன் உன்னை பாலோவ் பண்றான்னு நமக்கு மட்டும்தான் தெரியும். ஆனா பார்க்கற மத்தவங்க எங்க இரண்டு பேரையும் சேர்த்து இல்ல தப்பா நினைக்கிறாங்க.." என்றாள்.

அபிராமி தோழிகள் இருவரின் முகத்தையும் பார்த்தாள். உண்மையாகவே வருந்தினார்கள் இருவரும்.

"ச.. சரி.. இதுக்கு ஒரு முடிவு கட்டுறேன்.." என்றவளிடம் "செய்ற வேலையை சட்டுன்னு முடிச்சா ஆகும்.." என்றாள் சிந்து.

"ஓகே.." என்றபடி எழுந்த அபிராமி "இன்னைக்கே முடிச்சிடலாம்.." என்றபடி வெளியே நடந்தாள்.

தோழிகள் இருவரும் அவசரமாக எழுந்து அவளை பின்தொடர்ந்தனர்.

அபிராமி தன்னை நோக்கி வருவதை கண்டு பைக்கிலிருந்து எழுந்து நின்றான் கார்த்திக். அவனின் கண்கள் சூரியனை கண்ட தாமரையை போல மலர்ந்தது.

அபிராமி அவனின் முன்னால் வந்து நின்று அவனை நேர்கொண்ட பார்வை பார்த்தாள். கார்த்திக் அந்த பக்கமும் இந்த பக்கமும் பார்த்துவிட்டு "நான் சும்மா இந்த பக்கம் ஒரு வேலையா வந்தேன்.." என்றான்.

"கார்த்திக்.."

அவன் எச்சில் விழுங்கினான். மனம் மாறி தன்னோடு வர போகிறாள் என்று நினைத்தான்.

பெருமூச்சி விட்டாள் அபிராமி. என்னவோ தொண்டைகுழியில் சிக்கி கொண்டது போலவே இருந்தது. தோழிகள் அவளை கண்காணித்தனர்.

"இது எல்லாமே பேஃக் கார்த்தி.. நான் உன்னை பழி வாங்கதான் உன்னோடு வாழ வந்தேன்.. ஆனா நான் என் பழிவாங்கறதை இப்ப நிறுத்திக்கலாம்ன்னு இருக்கேன். ஏனா போரடிக்குது.."

கார்த்திக் ஒன்றும் புரியாதவனாக நின்றிருந்தான்.

"நான் உன்னை லவ் பண்ணல.. ஐ ஹேட் யூ.. ரொம்ப வெறுக்கறேன்.. நீ இனி என்னை பாலோவ் பண்ண வேணாம்ன்னுதான் இதை ஓபனாவே சொல்றேன்.. சோ ப்ளீஸ் என்னை எப்பவும் பாலோவ் பண்ணாதே.!" என்றவள் திரும்பி நடந்தாள்.

சட்டென அவளின் கை பிடித்து திருப்பி அவளை தன்னருகே இழுத்து நிறுத்தினான் கார்த்திக்.

"நான்தான் உனக்குன்னு டைம் தந்திருக்கேனே.! பிறகேன் இப்படி பொய் சொல்ற.?" என கேட்டான். அவனின் குரல் அவளை என்னவோ செய்தது. அவனின் வாசம் நாசியில் ஏறியதுமே மனம் போதையானதை போல உணர்ந்தாள். 'ஊர்ல அத்தனை ஆண்கள் இருந்தும் இவன் மேல ஏன் லஸ்ட்.? ச்சை.. இந்த மனசும் மோசம். ஆசையும் மோசம்..' என நினைத்தவள் அவனிடமிருந்து விலகி நிற்க முயன்றாள். அவனின் பிடி அவளை விடவேயில்லை.

"நான் உண்மையைதான் சொல்றேன்.. நீ என்னை கட்டாயப்படுத்தி கல்யாணம் செய்யவும் எனக்கு கோபம். என் அண்ணனையும் ஸ்டேசன்ல பிடிச்சி வச்சிட்டான் உன் அண்ணன். நான் சின்ன வயசுல இருந்தே கொஞ்சம் பிடிவாதமா வளர்ந்த பொண்ணு.. எனக்கு பிடிக்காத விசயத்தை யாராவது செய்ய வச்சாங்கன்னா அந்த விசயத்தை செய்வேன். ஆனா அது அழியற நிலையில்தான் இருக்கும். அது போலதான் இதுவும். உன்னை சுத்தமா பிடிக்காது எனக்கு. கட்டாயத்தால காதல் வர வைக்க முடியாது. ஆனா கட்டாயத்தால நீ இன்னும் அதிகமா சாதிக்க விரும்பின. அதான் கோபத்துல நான் இப்படி செஞ்சேன். இன்னும் உன்னை கதறவிட ஆசைதான். ஆனா உன்னை பார்க்க பாவமா இருக்கேன்னு இத்தோடு நிறுத்திக்கறேன்.. ப்ளீஸ் இனி எப்பவும் என் வழியில் குறுக்கே வராதே.! நான் என் முழு கோபத்தை உன்கிட்ட காட்ட விரும்பல.." என்றவள் அவனை விலக்கி நிறுத்திவிட்டு தோழிகளோடு நடந்தாள்.

கார்த்திக் சிலை போல நின்றிருந்தான். அவள் சொன்னதில் ஒரு வார்த்தையை கூட அவன் நம்பவில்லை. அவளோடு சேர்ந்து கழித்த காலங்கள் கனவு கிடையாது. அத்தனையும் வரமாய் வந்த நிஜம். வேறு எதையும் விட அவளை அதிகம் விரும்பினான் அவன். அவளுக்காக எதையும் செய்வான். ஏனெனில் அப்படிதான் அவள் இவனை மாற்றி விட்டாள்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே..

நாளையிலிருந்து ஆன்டி ஹீரோயின் சீசன் ஆரம்பம்.

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN