மௌனங்கள் 23

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
குழலி POV

என் முன் அமர்ந்திருந்த புவினை எரிச்சலோடு முறைத்தேன்.

"என்னை வெளியே விடு.." என்றேன்.

"உன்னை விடமாட்டேன் குழலி.! நீ என்னோட எல்லாமும்.! தங்சேயாவுக்கு அடுத்து நீதான் எனக்கு.!" என்றான் அவன்.

அவனை பார்க்க பார்க்க கொலைவெறி வந்தது. இப்படியும் ஒருவன் இருக்க முடியுமா என்று கோபம் வந்தது.

"பால்கோவா.. உனக்கு பிடிக்கும் இல்லையா.? ப்ரிட்ஜ்ல இருந்தது.." என்று சொல்லியபடி பால்கோவாவை ஊட்டினான்.

நான் வாயை திறக்காதது கண்டு நிமிர்ந்து என் கண்களை பார்த்தான்.

"உன் கையால சாப்பிடுவது ரொம்ப கேவலமான பீலிங்கை தருது புவின்.." என்றேன். சொல்லி முடித்த வினாடி கன்னத்தில் அறை விழுந்தது.

"நீ முதல்ல உன் கற்பனை கோட்டுக்குள்ள இருந்து வெளியே வா.. இங்கே நான்தான் கெட்டவனா.? எல்லாரும்தான் கெட்டவங்க.. நீயும் கூட.! தப்பு செஞ்சவங்க எல்லோரும் சாகணும்ன்னா பல ஆயிரம் வருசம் முன்னாடியே இந்த உலகத்துல இருந்து மனுச இனம் அழிஞ்சி போயிருக்கும்.." என்றான் கோபத்தோடு.

அவன் அறைந்த கன்னம் லேசாக எரிந்தது. பல மணி நேரமாக மௌனமாய் அழுத காரணத்தால் தொண்டையும் எரிந்தது. கண்களும் எரிந்தது‌‌. இவனின் விளக்கத்தையும் வியாக்கியானத்தையும் கேட்கும்போது மனதும் தீப்பற்றி எரிந்தது.

"தயவு செஞ்சி என்னை வெளியே விடு.." என்றேன் இருக்கும் அத்தனை கோபத்தையும் மனதுக்குள் வைத்தபடி.

"முடியாது. உன்னை என்னவளா என் மனசுக்குள்ள பச்சை குத்தி வச்சி நாளாச்சி.. அதை அழிக்க உன்னால மட்டுமில்ல அந்த ஆண்டவனால கூட முடியாது. எங்க தங்சேயா புது உலகம் உருவாக்க போறாரு. அதுல நாம இரண்டும் பேரும் முதல் காதல் தம்பதிகளாக இருக்க போறோம்.." என்றான்.

அவனின் முகத்தில் சிறிதும் வருத்தமோ குற்ற உணர்வோ இல்லை. கடவுளுக்கு அடிமையான சித்தனை போல உணர்ச்சிகளற்று இருந்தது அவனின் முகம்.

தங்சேயா யாரென்று எனக்கு சரியாக தெரியவில்லை. ஆனால் அவன் இந்த உலகத்தையே அழிக்க நினைக்கும் பைத்தியக்காரன் என்பது மட்டும் புரிந்தது. முன்பின் அறியாத எனக்கு கூட அவன் ஆபத்தானவன் என்று புரியும்போது புவினுக்கு ஏன் இது புரியவில்லை. அப்படி என்ன செய்தான் அவன் இவனுக்கு.?

"அந்த தங்சேயா சாத்தான்ங்கறது உனக்கு புரியலையா புவின்.? உன் கண் முன்னாடி எத்தனையோ தவறுகளை செய்திருப்பானே! உனக்கு இது ஏன் தப்புன்னு புரியல?" என்றேன்.

என் முகத்தை சில நொடிகள் பார்த்தவன் வயிற்றை பிடித்துக் கொண்டு சிரித்தான். நான் சொன்னதில் காமெடி இருந்ததோ!?

"என் மைன்டை மாத்த நினைக்கிறியா.?" என கேட்டவன் என் முகத்தை பற்றி அவனருகே இழுத்தான். வீணாய் போனவன் என் கைகளை கட்டிலின் இரும்பு கம்பிகளோடு சேர்த்து கட்டி போட்டிருந்ததில் இவன் இழுத்ததும் கைகள் இரண்டும் வலித்தது‌.

"உனக்கு தெரியாது.. நானும் என் தம்பியும் பசியோடு இருந்தபோது எனக்கு சாப்பாடு தந்தவன் தங்சேயா. நான் என்றோ பசிக்கு செத்திருக்க வேண்டியவன். ஆனா இன்னைக்கும் நான் உயிரோடு இருக்கேன்னா அதுக்கு ஒரே காரணம் தங்சேயா மட்டும்தான்.! இந்த மொத்த நாடும் சேர்ந்து தீர்க்காத பசியை அவன் தீர்த்து வச்சான். என்னை போல எத்தனையோ பேரோட பசியை தீர்த்தவன் எங்களுக்கு கடவுள் போல.!"

'கடவுளே! இன்று ஒருநாள் மட்டும் எனக்கு உன் சக்திகளில் பாதியை கொடேன்!' என்று கெஞ்சியது என் மனம்.

அந்த தங்சேயா சிறு பிள்ளைகளை தேர்ந்தெடுத்து தனது படைக்கு ஆள் சேர்த்து உள்ளான். அவன் புத்திசாலிதான். நிச்சயம் அனைத்து நாட்டு குழந்தைகளிலும் சிலர் அவனுக்கு அடிமையாக இருக்கலாம்.

எவ்வளவு சுலபமாக செயல்பட்டு உள்ளான் அவன்! பசியில் தவித்த குழந்தைகளையே தன் சொந்த நாட்டுக்கே எதிரிகளாக மாற்றி உள்ளான். ஒருவேளை உணவிடு. உனக்கு காலம் முழுக்க நாயாய் இருக்கிறோம் என்ற அளவுக்கு பசி இவர்களை தாக்கியதா.? எனக்கு ஒன்றுமே புரியவில்லை. ஆனால் இவன் என்ன சொன்னாலும் நான் இவனின் செயல் சரியென்று சொல்ல மாட்டேன்.

அவனின் பிடியிலிருந்து விலக முயன்றேன். தாடையை பிடித்திருந்தவன் பிடியை இறுக்கினான். வலிக்கிறது என்று சொன்னால் விட்டு விடுவான். ஆனால் நான் ஏன் என் வலியை பற்றி இவனிடம் சொல்ல வேண்டும்.?

"ஒருவேளை சாப்பாடு தந்தவன் உனக்கு தெய்வமா.?‌ ஆனா அதுக்கும் முன்னாடி நாள் வரை உன் பசி தீர்த்த இந்நாடு உனக்கு எதிரியா.? உன் அம்மாவும் அப்பாவும் உன்னை இப்படி பார்க்கத்தான் ஆசைப்பட்டிருப்பாங்களா.? தன் மகன் தங்களோட நாட்டையே அழிக்கணும்ன்னு ஆசைப்பட்டிருப்பாங்களா.?" என்றேன்.

அவனின் முகத்தில் நக்கல் சிரிப்பு இழையோடியது. நான் சொல்வது அத்தனையும் அவனுக்கு கேலி கிண்டலாகதான் இருக்கும். திருப்பி அழைத்து வர முடியாத அளவிற்கு இந்த இயக்கத்தின் எண்ண ஓட்டத்தில் கலந்து விட்டான் போல.! இவனை பார்க்கையில் கோபம் வரும் அதே வேளையில் பரிதாபமும் வந்தது. காதலித்ததாலா என்று தெரியவில்லை.

பஞ்சு மிட்டாய் காட்டி ஏமாற்றி அழைத்து சென்று கண்களை தோண்டி பிச்சை எடுக்க விடும் அந்த கால கூட்டத்தை போலதான் இதுவும். ஒருவேளை உணவு தந்து அழைத்துச் சென்று மூளையின் சிந்தனை திறன் முழுவதையும் சுரண்டி எடுத்துக் கொண்டு துப்பாக்கியை கையில் தந்துள்ளார்கள் இவர்கள்.

"நீ நினைக்கிற மாதிரி இல்ல குழலி.! இங்கே எல்லாருமே மனித இனத்துக்கு எதிரிதான். எறும்பை கொல்றவன் கூட ஏதோ ஒரு விதத்துல இயற்கையோட போக்கை அழிக்கறவன்தான். மரத்தை வெட்டும் ஒவ்வொருவனும் கெட்டவனே.. நதியில் ஷாம்பு தேய்த்து நீராடுபவளும் கெட்டவளே.! உணவில் கலப்படம் செய்பவன், பள்ளியிலேயே வேற்றுமையை உருவாக்குபவன், கள்ள காதலில் குழந்தை பெற்று அதை அனாதையாக ரோட்டில் திரிய விடுபவள்(ன்), இயற்கைக்கு மாறாக விலங்குகளை பிடித்து வந்து தனக்கு ஏற்றார் போல பழக்கி வைத்திருப்பவன்.. ஆக மொத்தத்துல சிவிலிசேசன் உருவான அந்த இடத்துலயே மனிதன் கெட்டவனாக ஆரம்பிச்சிட்டான்.." என்றான்.

மறுபடியும் அதே காரணம்.! இவன் என்ன பைத்தியமா.? உண்மையில் மொத்த நாட்டையும் அழித்தும் மொத்த உலகத்தையும் அழித்து காடுவாழ் வாழ்க்கை வாழ கிளம்ப போகிறார்களா.?

"நாங்க இந்த மொத்த உலகத்தையும் களையெடுக்க போறோம்.. இந்த நாடு மட்டுமில்ல மத்த எல்லா நாட்டிலுமே இருக்கும் மக்களை அழிக்க போறோம். இன்னும் பத்து வருசம். குழந்தைகளை தவிர எங்கள் புத்துலக டீமை தவிர மீதி எந்த மனுசங்களும் இங்கே இருக்க போறது கிடையாது. நாங்க புது உலகம் உருவாக்குவோம். ஆதி மனிதர்களா கானகம் புகுவோம். பாழடைந்து போன அனைத்து கட்டிடங்களிலும் பச்சை கொடிகள் வேர் பிடிக்க போகிறது. இந்த மொத்த உலகத்தையுமே இயற்கை ஆள போகிறது.! அந்த உலகத்துல நான் இருப்பேன்.. கண்டிப்பா நீயும் என்னோடு இருப்ப.." என்றான்.

உண்மையில் எனக்கு மயக்கம் வரும்போல இருந்தது. தாடையை பற்றியுள்ள அந்த கையை அவன் விலக்கி கொண்டால் பின்னால் சாய்ந்து விடுவேன். இவனின் பேச்சை கேட்டாலே செத்து விடுவேன் போல இருந்தது. பைத்தியக்காரன் அறிவுரையை கேட்டது போல இருந்தது. இவனை விட அறுவை மனிதனை நீங்கள் எங்காவது பார்த்தால் அப்போது என்னை நினையுங்கள். அப்போதுதான் என் கஷ்டம் உங்களுக்கு புரியும்.

அவனின் உதடுகளை பார்த்தேன். எப்போதும் சிவப்பாக இருக்கும். ஆனால் இன்று நிறம் மங்கி போய் இருந்தது. அவன் முகமும் கூட மங்கி போய்..

"குழலி.. என்ன ஆச்சி.?"

நான் மீண்டும் கண் விழித்தபோது அந்த மகராசன் முகத்திலேயேதான் விழித்தேன். இந்த கொடுமையிலிருந்து தப்பிக்க வேறு வழியே கிடையாதா.?

"மயக்கம் போட்டு விழுந்துட்ட.." என்றவன் என்னை எழுப்பி அமர வைத்தான். நான் மறுக்க மறுக்க இளஞ்சூடாக இருந்த பாலை ஒரு டம்ளர் குடிக்க வைத்தான். இதற்கு பதிலா விஷத்தை யாராவது கொண்டு வாருங்களேன்.

இத்தோடு இரண்டு நாட்கள் ஆகிவிட்டது. தினம் பொழுதுக்கும் உணவு சமைத்து எடுத்து வருகிறான். மறுத்தாலும் உணவை ஊட்டி விடுகிறான். பகலிலும் இரவிலும் கொஞ்சல் மொழிகளை பேசுகிறான். கையின் காலின் கட்டுக்களை மட்டும் அவிழ்த்து விடவில்லை. தலையை கூட அவனே வாரிவிட்டான். நான் பயன்படுத்தும் சீப்பை கூட சரியாக பயன்படுத்த தெரியவில்லை அவனுக்கு. ஆனாலும் ஏன் இந்த முயற்சி.? என்னை இம்ப்ரஸ் செய்ய பார்க்கிறானா.?

"நான் குளிக்கணும்.." என்றேன்.

கை காலின் கட்டுக்களை அவிழ்த்தவன் குளியலறைக்கு அழைத்துச் சென்றான். உள்ளே புக இருந்தவனை முறைத்தேன்.

"நா.. நான் குளிக்க காரணம்.." தயங்கினேன்.. தயக்கம் முகத்திலும் குரலிலும் இருந்ததா என்று தெரியவில்லை.

"பீரியட்ஸ் டைம் புவின். நான் குளிக்கணும்.. என்கிட்ட பேட்ஸ் இல்ல.." என்றேன். இந்த பொய்யை தவிர வேறு எதுவும் எனக்கு அவசரத்திற்கு நினைவுக்கு வரவில்லை.

என்னை குழப்பமாக பார்த்தான். நான் சோர்வாக இருப்பது போல குளியலறை கதவின் மீது சாய்ந்தேன். வயிற்றை பிடித்தேன்‌.

"வயிறும் வலிக்குது. டேப்ளட்டும் வேணும்.." என்றேன் பற்களை கடித்தபடி.

தயங்கி என்னை பார்த்தவன் "வயிறு வலிக்குதா.? நான் உன்னை கட்டிப்போட்டதாலா.?" என கேட்டான்.

மெண்டலா இவன்.?

என் முகத்தை உள்ளங்கைகளில் கைகளில் அள்ளியவன் "ரொம்ப வலியா.? நான் டாக்டரை கூட்டி வரட்டா.?" என்றான் கவலையோடு.

அவனின் கண்களை பார்த்தால் சாய்ந்து விடுவேனோ என்று பயமாக இருந்தது.

"எனக்கு அர்ஜென்டா சானிட்டரி நாப்கினும், ப்ரீயட்ஸ் டைம் வயித்து வலிக்கு போட்டுக்கற மாத்திரையும் வேணும்.." என்றேன் தரையை பார்த்தபடி.

என்னை விட்டு விலகி நடந்தவன் குழப்பத்தோடு திரும்பி வந்தான். கட்டிப்போட்டு விடுவானோ என்று பயமாக இருந்தது.

"நாப்கின் எங்கே கிடைக்கும்.?" என்றான்.

உதட்டின் உள் பக்கத்தை அழுந்த கடித்துக் கொண்டேன். என் மனதின் மாறுதல்களை எப்படி சொல்வது.?

"மெ..மெடிக்கலிலேயே இருக்கும்.." என்றேன்.

சரியென்று தலையசைத்துவிட்டு ஓடினான்.

இரண்டு நிமிடங்கள் கடந்தது. அவசரமாக வெளியே வந்தேன். அறையின் கதவை மூடவில்லை அவன். இந்த புத்தி ஏன் எனக்கு முன்பே இல்லை என்று என் மீது கோபம் வந்தது. காய்ச்சல், தலைவலி, இதயவலி என்று முதல் நாளே நாடகமாடி இருந்தால் முன்பே இங்கிருந்து தப்பி இருக்கலாமே என்று இப்போது புரிந்தது.

வீட்டின் கதவருகே சென்று திறக்க முயன்றேன். கதவை வெளியே பூட்டி சென்றிருப்பான் போல. யோசிக்க நேரமில்லை எனக்கு. மாடிக்கு செல்லும் படிகளில் ஏறினேன். அவனது வீட்டுக்குள் புகுந்தேன். வெளிப்பக்கம் செல்ல பயன்படும் படிகளில் இறங்கி நடந்தேன். வேகமாக கீழிறங்கினேன். கேட் சாத்தியிருந்தது. சென்றவன் வந்து விடுவானோ என்று பயமாக இருந்தது. கை கால்கள் நடுங்கியபடி கேட்டில் ஏறி மறுபக்கம் இறங்கினேன்.

சாலையின் இரு பக்கத்தையும் பார்த்தேன். மக்கள் நடமாட்டமே இல்லை‌. என்ன ஆனதென்றே தெரியவில்லை. கடந்த இரண்டு நாட்களாக டிவியை கூட பார்க்க விடவில்லை இந்த பைத்தியக்காரன். அவனின் வரலாறு கேட்டே காதுகள் இரண்டையும் கடைந்தெடுத்து விட்டான்.

வாகனங்களும் ஏதுமில்லை. நடந்தேதான் காவல் நிலையம் சென்றாக வேண்டும். காவல் நிலையம் இங்கிருந்து அரை கிலோமீட்டருக்கு அந்த பக்கம் இருந்தது. பரவாயில்லை. 'நீ எட்டு வைத்தால் இமயமலை ஏழடி' என்ற பாடலை எனக்கே சமர்ப்பித்துக் கொள்கிறேன்.

காவல் நிலையம் நோக்கி நடந்தேன். நூறடி நடந்திருப்பேன். ஒரு சுவரில் புவினின் முகம் அச்சடித்த பேப்பர் ஒட்டப்பட்டு இருந்தது. வான்டட் என்று கொட்டை எழுத்தில் எழுதி இருந்தது.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN