காதல் கடன்காரா 31

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
சிந்துவும் சுவாதியும் கல்லூரி முடிந்ததும் வாசலில் நின்று அபிராமிக்காக காத்திருந்தனர். மூவரும் சேர்ந்து திரைப்படம் ஒன்றிற்கு செல்லலாம் என்று திட்டமிட்டு இருந்தனர்.

பத்து நிமிடங்கள் கடந்தது. அபிராமி இவர்களின் அருகே வந்து காரை நிறுத்தினாள்.

"நைட் எங்களை எங்க வீட்டுல டிராப் பண்ணிடு அபிராமி. உன்னை நம்பிதான் நாங்க எங்க ஸ்கூட்டியை கூட எடுத்து வரல.." என்றபடியே உள்ளே ஏறி அமர்ந்தாள் சிந்து.

"சரின்னு எத்தனை முறைதான் சொல்றது.?" என கேட்ட அபிராமி சாலையின் திசைக்கு பார்வையை திருப்பியபடியே காரை கிளப்பினாள். சாலையின் மீது முழு கவனமும் சென்ற அடுத்த நொடியே காரை சட்டென பிரேக்கடித்து நிறுத்தினாள்.

கார் நின்றிருந்த இடத்திலிருந்து நான்கடி இடைவெளியில் நின்றிருந்தான் கார்த்திக். ஐஸ்க்ரீம் கடையின் முன்பு நேற்று எந்த நிலையில் விட்டு வந்தார்களோ அதே நிலையில்தான் இருந்தான் இப்போதும்.

"இவனுக்கு என்ன முழுசாவே பைத்தியம் பிடிச்சிடுச்சா.?" கடுப்போடு கேட்டாள் சிந்து.

"இன்னைக்கு படத்துக்கு போன மாதிரிதான்.." என்றபடி இருக்கையில் சோகமாக சாய்ந்தாள் சுவாதி.

அபிராமி கோபத்தோடு கீழே இறங்கினாள். கார்த்திக்கின் அருகே சென்றாள்.

"இப்ப உனக்கு என்ன வேணும்.?" என்றாள் கோபத்தோடு.

அவளை அருகில் கண்டதும் அவனின் மனதில் பட்டாம்பூச்சி பறந்தது. நேற்றைய தோற்றத்திலிருந்து முழுதாக மாறிப் போயிருந்தாள் அவள்.

இடையை இறுக்கிக் கொண்டிருந்த சுடிதாரும், காற்றில் பறந்த கூந்தலும், அவளை கால் அடி உயர்த்தி காட்டிய செருப்பும் அனைத்துமே வித்தியாசமாகதான் தெரிந்தது அவனுக்கு. அவளின் முகத்தில் இருந்த சிடுசிடுப்பு கூட புதியதே.

"உன்கிட்ட பேசணும் அபி.. உனக்கு என் மேல ஏன் கோபம்ன்னு எனக்கு சரியா தெரியல.." என்றவனை விசித்திரமாக பார்த்தவள் "ஏன் கோபமா.? உன் மேல ஆரம்பத்துல இருந்தே வெறுப்புடா.!" என்றாள்.

"இல்ல அபிராமி.. பொய் சொல்லாதே.. நீ என்னை எவ்வளவு லவ் பண்றன்னு எனக்கு தெரியும்.. நீ எங்களுக்கா எவ்வளவோ செஞ்சிருக்க..!"

அபிராமி தன் நெற்றியை பிடித்தாள்.

"கார்த்தி நீ நினைக்கற மாதிரி கிடையாது. நேத்தைய நாள் வரையிலுமே நான் உன்கிட்ட நடிச்சிட்டு மட்டும்தான் இருந்தேன்.. நான் உன்னை என் லைப்ல இருந்து தள்ளி நிறுத்தி வைக்க நினைக்கிறேன். இது போரடிக்குது. எனக்குன்னு நிறைய வேலை இருக்கு. எனக்குன்னு ஒரு வாழ்க்கை இருக்கு.. உன் மேல இருந்த கோபத்துல என் லைப்ல ஒரு வருசத்தையே காலி பண்ணிட்டேன். இனியும் முடியாது. என்னை விட்டுடு.. என்னை பாலோவ் பண்ணாதே.." என்றவளை வெடுக்கென தன் பக்கம் பிடித்து இழுத்தான்.

"என்ன லூசு மாதிரி சொல்லிட்டு இருக்க.? உனக்குன்னு எப்படி லைப் இருக்கும்.? உன் லைப் நான்தான். கோபத்துல எது வேணாலும் பேசிட்டு இருக்காதே.." என்றவனின் கையை விலக்கி தள்ளியவள் அவனின் கன்னத்தில் ஒரு அறையை விட்டாள்.

சிலையாக நின்றபடி அவளை பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு ஒன்றுமே புரியவில்லை.

"பர்ஸ்ட்.. இது எல்லாமே பொய்.. செகண்ட்.. நான் உன்னை துளி கூட லவ் பண்ணல.. ஐ ஹேட் யூ.. உனக்கு பைத்தியம் பிடிக்க வச்சி என் பின்னாடி சுத்த வைக்கணும்ன்னு நினைச்சேன்.. இந்த மூணு மாசம் நீ என் பின்னாடி சுத்தியதே எனக்கு கடுப்பாகிடுச்சி. என்னை விட்டு போ.." என்றாள் முகத்தை சுளித்தபடி.

"நீ எங்க வீட்டுக்கு எவ்வளவோ.."

"ஸ்டாப்.. உங்க வீட்டுக்கு நான் எதுவும் செய்யல.. உன் மனசுல என் மேல காதல் வரணும்ன்னுதான் அத்தனையும் செஞ்சேன்.. போதுமா.?"

"நீ எனக்காக கையை அறுத்து.."

தன் கையை அவன் முன் நீட்டினாள் அபிராமி. "அது எல்லாம் செட்டப்.. நான் கையவும் அறுக்கல.. உனக்காக பட்டினியும் கிடக்கல.. மயங்கி விழல.. நீ எவளையோ பார்த்தன்னு நான் அழவும் இல்ல.. போதுமா.?"

"ஆனா.."

"எந்த ஆனாவும் இல்ல.. ஐ ஹேட் யூ மட்டும்தான்." என்றவள் திரும்பி நடந்தாள்.

"அபிராமி.."

அவனின் அழைப்பில் திரும்பியவள் "இன்னும் என்ன.?" என்றாள்.

"உன் கழுத்துல தாலி இருக்கு. அதையும் பொய்யுன்னு சொல்வியா.?"

அவள் தன் கேள்வியால் பொய்யை நிறுத்திவிட்டு தன்னோடு வருவாள் என்று எதிர்பார்த்தான் கார்த்தி.

அபிராமி பற்களை கடித்தபடி கழுத்திலிருந்த கயிற்றை கழட்டி அவன் மீது வீசினாள். "போதுமா.? குட் பை.." என்றவள் காரில் ஏறி அவனை தாண்டி சென்றாள்.

"அவன் இனியாவது பின்னாடி சுத்தாம இருந்தா சரிதான்.." என்று பெருமூச்சு விட்டாள் சிந்து.

சுவாதி கார்த்திக்கை திரும்பி பார்த்தாள். தாயை இழந்த பிஞ்சு குழந்தை போல அபிராமியின் திசை பார்த்து நின்றான் அவன். அவனை பார்க்கையில் பாவமாக இருந்தது. ஆனால் அதை வார்த்தையாக வெளியில் சொன்னால் தோழி தன்னை முறைப்பாள் என்றும் அவளுக்கு தெரியும்.

மூவரும் திரைப்படத்தை ரசித்து பார்த்தனர். பல நாட்களுக்கு பிறகு காலில் இருந்த சங்கிலி கழட்டப்பட்டது போல இருந்தது அபிராமிக்கு.

மூவரும் தியேட்டரை விட்டு வெளியே வருகையில் மணி ஒன்பதை தாண்டி விட்டிருந்தது. அங்கேயே அருகில் இருந்த ஒரு உணவகத்தில் உணவை முடித்துக் கொண்டனர்.

சிந்துவையும் சுவாதியையும் அவரவர் வீட்டில் விட்டுவிட்டு தன் வீட்டுக்கு கிளம்பினாள் அபிராமி. இருளின் சில்லென்ற காற்றை சுவாசித்தபடி இதமான பாடல் ஒன்றை கேட்டு ரசித்தபடி வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தவள் திடீரென்று முன்னால் வந்து நின்ற உருவத்தை கண்டு பிரேக்கடித்தாள். காரின் முன் விளக்கு வெளிச்சத்தில் கார்த்திக் அங்கே நின்றுக் கொண்டிருப்பது தெரிந்தது.

அபிராமிக்கு கடுப்பாக இருந்தது. "என்னடா வேணும் உனக்கு.?" என கேட்டபடி இறங்கினாள்.

"நீ வேணும்.. பொண்டாட்டியா, காதலியா, தோழியா.. எல்லாமுமா.!" அமைதியான குரலில் சொன்னவனை நம்ப இயலாமல் பார்த்தவள் "உன்னோட இந்த மைன்ட் செட்டுகாகதான் நம்ப வச்சி பிரிஞ்சி வந்தேன். அப்புறம் என்ன.?" என்றாள்.

"எனக்கு உன் நாடகம், நடிப்பு, பழி வாங்கறது எதுவும் வேணாம்.. நீ மட்டும்தான் வேணும்.."

தலைசாய்த்து அவனை பார்த்தவள் அந்த இரவில் நடுசாலையில் நின்றபடி தன்னை மறந்து சிரித்தாள்.

"உன்னை இப்படிதான் பைத்தியமாக்கணும்ன்னு ஆசைப்பட்டேன். நினைச்ச மாதிரியே ஆக்கிட்டேன்.." என்றவள் திரும்பினாள்.

அவளின் கையை எட்டி பிடித்தான் கார்த்திக்.

கையை வெடுக்கென பிடுங்கியவள் "என்னை தொடாதே.! அப்புறம் என் நிஜ முகத்தை காட்ட வேண்டி வரும்.." என்று எரிந்து விழுந்தாள்.

ஒருநொடி விதிர்த்து நின்றவன் அடுத்த நொடி தன்னை சரி செய்துக் கொண்டான்.

"நீ.. நீ என்னோடு வரலன்னா நான் நிஜமாவே விஷம் குடிச்சிடுவேன்.." என்றவனை விழிகள் உருட்டி பார்த்தவள் "விஷத்தை பாக்கெட்டுல வச்சிருக்கியா.?" என்றாள்.

இல்லையென தலையசைத்தான் கார்த்திக்.

"ஒரு நிமிஷம் இரு.." என்றவள் காரில் இருந்த தன் கைப்பையை திறந்து எதையோ எடுத்துக் கொண்டு வந்தாள்.

அவன் கையை பற்றியவள் தான் எடுத்து வந்த விஷத்தை அவனின் உள்ளங்கையில் வைத்தாள். "குடி.." என்றாள்.

கார்த்திக் தயக்கமாக பார்த்தான். அவளை பார்க்கையில் அவளுக்கு கோபம், பிடிவாதம், திமிர் என்று எதுவும் நினைக்க தோன்றவில்லை அவனுக்கு. விஷத்தை குடித்தாலாவது அவள் தன்னோடு வருவாளா என்றுதான் நினைத்தான்.

தயக்கத்தோடு விஷ பாட்டிலை பார்த்துக் கொண்டிருந்தவனின் முன்னால் காகித தாள் ஒன்றை ஆட்டினாள் அபிராமி. கார்த்திக் அந்த தாளை குழப்பமாக பார்த்தான்.

"அன்னைக்கு என் கல்யாண நாள் அன்னைக்கு நீ என்கிட்ட காட்டி மிரட்டிய அதே லெட்டர்தான். விஷமும் கூட அதேதான்.." என்றவள் அந்த தாளை படிக்க ஆரம்பித்தாள்.

"முத்தமிழின் தங்கை அபிராமியை நான் உயிராய் விரும்புகிறேன். அவளும் என்னை உயிருக்கு உயிராக நேசிக்கிறாள். ஆனால் இன்று என்னை எடுத்தெறிந்துவிட்டு என் காதலை மறந்துவிட்டு வேறு ஒருவனை திருமணம் செய்ய முயலுகிறாள். இந்த துக்கத்தை என்னால் தாங்க முடியவில்லை. அதனால் நான் விஷம் அருந்தி தற்கொலை செய்துக் கொள்கிறேன். என் இறப்பின் நொடிகளில் அவளுக்கென்று புது சொந்தம் பிறப்பெடுக்கட்டும். இறந்தாலும் அவளையே நினைத்திருப்பேன் நான். அதனால் யாரும் என் இறப்புக்கு என்னவள்தான் காரணமென்று பழி போட்டு விடாதீர்கள். அவள் என் இதயராணி.."

கடிதத்தை படித்து முடித்துவிட்டு நிமிர்ந்த அபிராமி "அன்னைக்கு இந்த லெட்டர்ல எழுதி இருந்த எல்லாமே பொய். நீ விஷம் குடிச்சா அது பொய்யான காரணமா இருந்திருக்கும். ஆனா இன்னைக்கு அப்படி இல்ல.. இந்த லெட்டர்ல இருக்கற விசயம் முக்கால்வாசி உண்மை. நீ என் மேல இருக்கற காதலாலதான் தற்கொலை பண்ணிக்க போற.. இந்த லெட்டர் இப்ப உண்மை. இப்ப எந்த பழி என் மேல விழுந்தாலும் எனக்கு கவலையே இல்ல.. அதனால அதை குடிச்சிட்டு செத்து போ.." என்றாள்.

கார்த்திக் அதிர்ந்து போனான்.

"செய்யாத தப்புக்கு பழியை ஏத்துக்கறது இந்த அபிராமியோட வழக்கத்துலயே இல்ல.. இப்ப பழியை ஏத்துக்கிட்டேன்னா அது பழி கிடையாது. அது எனக்கான பரிசு.." என்றவள் அவனை வெறுப்பாக பார்த்துவிட்டு நடந்தாள்.

யோசனையோடு நின்றவள் அவன் பக்கம் திரும்பினாள். "உன் முட்டாள் மூளைக்கு இன்னும் கொஞ்சம் தெளிவா புரியட்டும்ன்னு இதையும் சொல்றேன், கேளு.. உன்னை கட்டிப்பிடிச்ச வேலைக்காரியும் என் செட்டப்புதான். உன் பேர் சொல்லி எங்க வீட்டுக்கு வந்ததா காட்டிய அத்தனை போட்டோஸ்ம் என் செட்டப்புதான்.." என்றுவிட்டு சென்று காரில் ஏறியவள் அவனை முறைத்தபடியே கடந்து சென்றாள்.

முழு இருளில் நின்றான் கார்த்திக். மனம் கனத்து போனது. வேலைக்காரியும், புகைப்படங்களும் அபிராமியின் நாடகத்தில் ஒன்று என்பதை அவனால் நம்பமுடியவில்லை. அந்த இரு விசயங்களும் உண்மை என்றால் அவள் சொன்ன நாடகங்களும் உண்மைதான் என்பது உறுதியாகும். அவன் தன் கற்பனையில் கட்டி வைத்த கோட்டையை கலைக்க நினைக்கவில்லை.

அவள் பேசி சிரித்த நொடிகள் அத்தனையும் உண்மை என்றுதான் மனம் சொன்னது. அவளின் காதலை விட தன் காதலைதான் அவன் நினைத்துப் பார்த்தான். அவள் மீது அவன் வைத்த காதல் நாடகம், பழி வாங்கல் என அனைத்திற்கும் அப்பாற்பட்டது. அவள் கொன்று போட்டாலும் அவளை காதலிப்பான் அவன். அப்படிதான் அவனின் மனதில் காதல் வேர் விட்டு இருந்தது.

கையில் இருந்த விஷத்தை பார்த்தான். மங்கலான இருட்டில் விஷ பாட்டில் சரியாக தெரியவில்லை. 'இறந்தால் வருவாளா.? அல்லது இறந்த போக முயன்றால் வருவாளா.?' என்று யோசித்து குழம்பியது அவன் மனம்.

ஒரு வாரம் கடந்தது.

மூர்த்தி விடுமுறையில் வீட்டுக்கு வந்தான். வீட்டுக்குள் நுழைந்த உடனேயே அவனின் கண்கள் தம்பியைதான் தேடியது.

"எத்தனை நாள் வீட்டுல இருப்ப.? என்ன பலகாரம் செய்யட்டும்.?" என்று அக்கறையோடு அவனிடம் விசாரித்தாள் யமுனா.

"நாலு நாள் இருப்பேன்ம்மா.. உனக்கு என்ன இஷ்டமோ அதையே செய்.." என்றவன் கார்த்திக்கின் அறை நோக்கி சென்றான். மூடியிருந்த கதவை திறந்தான். அறையே இருளில் இருந்தது. ஜன்னலை கூட திறக்காமல் தன் சகோதரன் அந்த அறையில் சிறை கைதியாக இருப்பது போல தோன்றியது. அறையின் விளக்கை ஒளிர விட்டான்.

கார்த்திக் கட்டிலில் ஒரு ஓரமாக படுத்திருந்தான். அபிராமியின் கூரை புடவை அவனின் முகத்தை மூடியிருந்தது. அவனை பார்க்கையில் மூர்த்திக்கு மனம் உடைந்து போனது. ஒருமுறை பார்த்த தனக்கே இப்படி என்றால் அம்மாவும் தங்கையும் எந்த அளவிற்கு தினம்தினம் மன வருத்தப்பட்டிருப்பார்கள் என நினைத்து பார்த்தான். நெஞ்சமே சோகமானது போல இருந்தது.

கட்டிலில் சென்று அமர்ந்தான் "கார்த்திக்.." தம்பியின் தோள் தட்டி எழுப்பினான்.

கார்த்திக் தன் பார்வையை மறைத்த புடவையை விலக்கினான். அண்ணனை கண்டுவிட்டு மெதுவாக எழுந்து அமர்ந்தான். அபிராமியின் கழுத்தில் இருந்த தாலி கயிறு அவனின் வலது கரத்தின் மணிக்கட்டின் மீது இரண்டு மூன்று சுற்றுகளாக கட்டப்பட்டு இருந்தது.

"எப்ப வந்த அண்ணா.?" கண்களை கசக்கிக் கொண்டு கேட்டவனின் குரல் மிக மெல்லமாகதான் ஒலித்தது.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே..

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN