மௌனங்கள் 24

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
புவின் POV

குழலியை நான் கஷ்டப்படுத்துக்கிறேன் என்று எனக்கு தெரியும். ஆனால் இது அனைத்தும் இன்னும் சிறிது நாட்கள்தான். விரைவில் நாங்கள் இந்த சிக்கலில் இருந்து வெளி வந்து விடுவோம்.

அவள் என்னை கடலளவு விரும்ப போகிறாள். நான் அவளை வானம் அளவு நேசிப்பேன். நீங்கள் அனைவரும் பொறாமை கொள்ளும் அளவுக்கு எங்கள் காதல் உலகம் அழகாய் அமைய போகிறது.

அவளை கட்டிப்போட்டிருந்தது தவறு என்று மனம் குற்றம் சாட்டியது. ஆனால் இதை தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை. இவள் சில விசயங்களில் மிக பெரிய முட்டாள். என்னை காதலித்ததுதான் பெரிய முட்டாள்தனம் என்று நினைத்துக் கொண்டிருப்பாள். ஆம் அது என்னவோ உண்மைதான். ஆனால் அதை விடவும் அதிக முட்டாள்தனம் இன்னும் மற்றவர்களை நம்பிக் கொண்டிருக்கிறாள் என்பதுதான்.

நாட்டுக்காக உதவிப்புரிகிறேன் என நினைத்து இவள் என்னை யாரிடமாவது காட்டி தந்தால் பிரச்சனை இவளுக்குதான். இது அவளுக்கு சரியாக புரியவில்லை. நீங்கள் தவறு செய்திருக்க வேண்டிய அவசியமே கிடையாது. தவறு செய்தவர்களுக்கு சொந்தமாக, பந்தமாக இருந்தால் கூட போதும். தவறு செய்தவர்களுக்கு கூட என்றாவது ஒரு நாள் மன்னிப்பு கிடைக்கும். ஆனால் உடன் இருந்தவர்களுக்கு உடனடி தண்டனைதான். அனுபவத்தில் இதை நானே பல முறை அறிந்துள்ளேன்.

என் நிழலுக்குள் வந்து விட்டாலே இவள் என்னை விடவும் அதிக ஆபத்தானவள் என்றுதான் சமுதாயம் சொல்லும். அவளின் நிலையோ அவளின் மன தூய்மையோ யாருக்கும் முக்கியமில்லை.

அவளுக்கு எனது நிலையை எவ்வளவோ எடுத்து கூறி விட்டேன். ஆனால் எதையும் இதயத்தில் இருத்திக் கொள்ள மறுக்கிறாள். நாட்டு பற்று என்ற மாய வலையில் சிக்கி தவிக்கிறாள். இந்த நாட்டை விட்டு சென்ற ஒரே வாரத்தில் அவளின் மனநிலையை நான் மாற்றி விடுவேன்.

"எனக்கு வயித்து வலி மாத்திரையும் வேணும்.."

குழலிக்கு வயிற்று வலி. முட்டாள் போல அவளை கட்டிப் போட்டு விட்டேன். அதனால்தான் இப்படி சிரமம் அவளுக்கு.

மாத்திரையும் அவள் சொன்ன சானிடரி நாப்கின்னையும் வாங்கி வர கிளம்பினேன். கடைத்தெருவுக்குள் நுழையும் முன்பே என் முகம் அச்சிட்ட போஸ்டர்கள் கண்ணில் பட்டது. புகைப்படத்தை உற்று பார்த்தேன். ஹோட்டலின் வரவேற்பறை சிசிடிவி கேமரா. தனசேகர் இவ்வளவு தூரம் வந்து விட்டான் என்று அறிந்துக் கொண்டபோது மகிழ்ச்சியாக இருந்தது. இது அவனின் திறமைக்கு கிடைத்த பரிசு. மற்றவர்களாக இருந்திருந்ததால் இதை கண்டறிய பலநாட்கள் செலவு செய்திருப்பார்கள்.

பேண்ட் பாக்கெட்டில் மடங்கி இருந்த தொப்பியை எடுத்து தலையில் கவிழ்த்துக் கொண்டேன். ஆள் நடமாட்டமில்லாத ஒரு சந்தின் இடைவெளியில் வந்து நின்றேன். போனை எடுத்து தாமுக்கு அழைத்தேன். இவன் எனது புது டிரைவர். தம்பிதான் ஏற்பாடு செய்திருந்தான். பழைய டிரைவரை விடவும் இவன் அதிக செல்வாக்கு உள்ளவனாம். மக்கள் பணத்தை ஏதாவது ஒரு வழியில் பிடுங்கி தின்றால்தான் இவனின் உணவுப்பை செரிக்கும் என்று அவனுக்கு வேண்டப்படாதவர்கள் பேசிக் கொண்டார்கள்.

நான் இருக்கும் இடத்தை அவனுக்கு சொன்னேன். பத்து நிமிடத்தில் வருவதாக சொன்னான். 'வரும்வழியில் மெடிக்கல் ஷாப் இருந்தால் சானிட்டரி நாப்கின்னும், வயிற்றுவலி மாத்திரையும் வாங்கி வா' என்று அவனிடம் சொன்னேன் மறுமுனையில் என்னவோ தடுமாற்றமாக சொன்னான். புரியவில்லை. பிறகு சரியென்றுவிட்டு போனை வைத்தான்.

குழலி பற்றி இவனுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் தம்பிக்கு தெரியும். நான் சொல்லாவிட்டாலும் தெரியும். என்னை பாதுகாக்க எனக்கு தெரியாமலேயே ஆள் போட்டிருப்பான் அவன்.

நிமிடங்கள் கடந்தது. குழலி வயிற்று வலியோடு வேதனை பட்டுக் கொண்டிருப்பாள் என்ற எண்ணம் என்னை பாடாய் படுத்தியது. உணவை சரியாக சமைக்காமல் தந்து விட்டேனே என்றும் புரியவில்லை.

நான் என் யோசனையில் இருந்த நேரத்தில் என் அருகே வந்து நின்றது ஒரு கார். திரும்பி பார்த்தேன். புது டிரைவர் டிரைவரின் சீட்டில் அமர்ந்திருந்தான். "ஏறுங்க சார்.." என்றான்.

நான் காரில் ஏறியதும் ஏசியை அதிகம் செய்துவிட்டு வண்டியை கிளப்பினான். ஐம்பது வயதிருக்கும் இவனுக்கு. அணிந்திருந்த பனியனின் பின்னால் ஐ லவ் *** என்று எழுதியிருந்தது. அயல்நாட்டு மோகம் நல்லதே. ஆனால் இவனின் உள்நாட்டு பற்று பற்றி நான் என்ன சொல்லட்டும்.?

"இந்த நாட்டை அழிக்க இன்னும் எத்தனை மாசம் சார் ஆகும்.?" ஆர்வத்தோடு இருக்கிறான் போல. என்னை விட அவசரக்காரன்.

"ஒன்னிரண்டு வருசங்கள்.."

அவனின் முகம் சோர்வடைந்து போனதை நானும் பார்த்தேன்.

"சீக்கிரம் அழிங்க சார்.. நாடா இது.? எங்கே பார்த்தாலும் சாக்கடை, யாரை பார்த்தாலும் அழுக்கு.." என்றான் வெறுப்பாக.

புத்திச்சாலி. சாக்கடை உருவாக தானும்தான் காரணம் என்ற விசயத்தை அவனின் எண்ணத்திலிருந்து அழித்து விட்டிருக்கிறான். இவனை விட அழுக்கானவனை பார்க்க விரும்பினால் நீங்கள் நிச்சயம் வேற்று கிரகத்திற்குதான் பயணப்பட வேண்டும்.

எந்த பக்கம் செல்ல வேண்டும் என்று கேட்டு காரை திசை திருப்பி சென்றான். எனக்கு என்னவோ நன் கடவுளின் இடத்தில் இருப்பதை போலிருந்தது. இல்லையேல் இவனை போன்றோரையெல்லாம் நொடியில் கண்டறிய முடியுமா.?

வீட்டின் முன் நின்றது கார். இறங்கிக் கொண்டேன். அவன் தந்த கருப்பு கவரை பார்த்தேன். ஒரு கவரும், ஒரு மாத்திரை அட்டையும் இருந்தது.

"என்ன உதவி வேணாலும் கேளுங்க சார்.." என்றான். நான் அவனை என் வழக்கமான அசட்டை பார்வை பார்த்து விட்டு திரும்பினேன்.

"சார் இன்னொரு விசயம்.." திரும்பினேன்.

"உங்க போட்டோதான் டிவியிலும் மத்த இடத்திலும் இருக்கு. இனி வெளியே வராதிங்க. என்னவா இருந்தாலும் என்கிட்டயே சொல்லுங்க. எனக்கும் வாய்ப்பு கொடுங்க. உங்க இயக்கத்துக்கு உயிரை கூட தருவேன் நான்.." என்றான். நன்றாக ஐஸ் வைக்கின்றான். இவனை விட்டால் இன்னும் இரண்டு வருடத்தில் எனது இடத்திற்கு கூட வந்து விடுவான். அவ்வளவு சின்சியாரிட்டி.

அவன் சென்றான். நான் கேட்டை திறந்து வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்றேன். வேகமாக சமையலறைக்குள் நுழைந்தேன். சுடுநீர் வைத்து குடிக்கும் அளவுக்கு ஆற வைத்து எடுத்தேன். தண்ணீர் டம்ளரையும் மாத்திரையையும் எடுத்துக் கொண்டு படுக்கையறைக்கு ஓடினேன். குழலியை காணவில்லை. கையிலிருந்ததை மேஜை மேல் வைத்துவிட்டு குளியலறைக்கு சென்றேன். அவளை அங்கும் காணவில்லை. வயிற்று வலியோடு எங்கே சென்றிருப்பாள் என்று மனம் கவலைக் கொண்டது. வீட்டை சோதித்தேன். அவளை எங்கும் காணவில்லை.

தயக்கத்தோடு மேல் வீட்டிற்கு கிளம்பினேன். 'குழலி இப்படி ஒரு தவறை மட்டும் செய்து விடாதே.! உனக்கு நீயே காலனாக மாறி விடாதே.! என்று கூச்சலிட்டது என் மனம். மேல் வீட்டின் வெளிப்பக்க கதவு திறந்து இருந்தது.

படிக்கட்டிலேயே அமர்ந்து விட்டேன். இவள் ஏன் இப்படி செய்தாள். என்னை மாட்டி விட நினைத்து அவளாக ஏன் மாட்டிக் கொண்டாள். உலகம் தெரியா குழந்தையாகவே ஏன் இன்னும் இருக்கிறாள் என்று கோபம் வந்தது.

யோசித்தபடி அமர்ந்திருக்க நேரம் இல்லை. எழுந்து உள்ளே ஓடினேன். புது டிரைவருக்கு போன் செய்து உடனே இங்கே வர சொல்லி சொன்னேன். எனது அறையிலிருந்த சாட்சி பொருட்கள் அனைத்தையும் பைகளில் நிரப்பினேன். குழலி உடைத்து போட்ட அன்றே பாதி பொருட்கள் குப்பையில் சாம்பலாகி விட்டன. மீதி இருந்தது எதுவும் தனசேகர் கையில் கிடைக்க வேண்டாம் என்ற எண்ணத்தில் அனைத்தையும் எடுத்துக் கொண்டு கீழே வந்தேன்.

குழலி எங்கே சென்றிருப்பாள்.? தனசேகரை தேடியா.? ஆனால் அவன்தான் என்னை பிடிக்க அமைக்கப்பட்ட குழுவின் தலைமை என்று அவளுக்கு எப்படி தெரியும்.? குழப்பமாக இருந்தது.

டிரைவர் காரை நிறுத்தியது எனது பொருட்களை காரின் பின்சீட்டில் வைத்தேன். "இங்கிருக்கும் போலிஸ் ஸ்டேசன் போ.." என்றேன்.

"லெப்டா.. ரைட்டா சார்.?" என்றான் சந்தேகமாக.

இரு பக்கமும் திரும்பி பார்த்தேன். இரு திசையிலுமே குறிப்பிட்ட தூரத்தில் இரண்டு காவல் நிலையங்கள் இருந்தன. அதில் ஒன்று மற்றொரு சரகத்திற்கு உட்பட்டது. குழலி எந்த பக்கம் சென்றிருப்பாள். நான் தேடுவேன் என தெரிந்து இந்த சரகத்திற்கு உட்படாத ஸ்டேசனுக்கு சென்றிருப்பாளா.? இல்லை நான் குழம்பி போவேன் என்று தெரிந்து இந்த பக்கம் உள்ள ஸ்டேசனுக்கே சென்றிருப்பாளா.? ஒரே குழப்பமாக இருந்தது.

"மெயின் ரோட்டை விட்டு தள்ளிப்போய் வண்டியை நிறுத்து.." என்றேன்.

"சரிங்க சார்.." என்றவன் அருகே இருந்த மண் பாதை ஒன்றிற்க்கு காரை திருப்பினான். ஆள் அரவம் இல்லை அந்த பாதையில்.

தலையை பிய்த்துக் கொள்ள வேண்டும் போல இருந்தது எனக்கு. "உடனே உன் ஆளுங்களுக்கு போன் பண்ணு. இரண்டு ஸ்டேசனுக்கும் ஆட்களை அனுப்பு.. நான் அனுப்புற போட்டோவுல இருக்கற பொண்ணு அந்த ஸ்டேசன்ல இருந்தா அந்த ஸ்டேசனைல இருக்கற எல்லோரையும் கொன்னுட்டு இவளை கூட்டி வர சொல்லு. இவ உடம்புல துளி காயம் பட்டா கூட நான் உன்னை கொன்னுடுவேன்.." என்று எச்சரித்தேன்.

"உடனே செஞ்சிடலாம் சார்.. நமக்கு வேண்டப்பட்ட பொண்ணா சார்.. ஆனா குழுவின் தலைமையிலிருந்து நீங்க ஒருத்தர் மட்டும்தான் வந்திருப்பதா சொன்னாங்களே.." என்றான். தேவையற்ற கேள்வி.

"நேரத்தை கடத்தாதே.! கொன்னுடுவேன்.." அடிக்குரலில் மிரட்டிய பிறகு போனை காதில் வைத்தான். அவனின் ஆட்களுக்கு பணி சொன்னான்.

நான் என் போனை எடுத்தேன். போனில் இருந்த மெமரி கார்டை கழட்டினேன். என் சூட்கேஸை திறந்தேன். அதில் இரண்டு போன்கள் இருந்தன. அனைத்திலும் இருந்து மெமரிகளை மட்டும் கழட்டிக் கொண்டேன். போன்களை ஒரே கவரில் பத்திரப்படுத்தினேன். புது போன் ஒன்றை எடுத்து ஆக்டிவேட் செய்தேன். என்னிடமிருந்த கவரை காரிலிருந்து தூரமாக தூக்கி வீசினேன்.

"புறப்படலாம்.."

கார் ஐம்பது மீட்டர் தாண்டி வந்த பிறகு புது போனிலிருந்து அந்த கவரை வெடிக்க வைத்தேன். எனது ஒரு போன் நம்பர் மட்டும்தான் குழலிக்கு தெரியும். ஆனால் அந்த ஒரு நம்பரோடு மற்ற இரண்டு போன்களும் சம்பந்தப்பட்டிருக்கிறது. மற்ற இரண்டு போன்களிலிருந்துதான் நான் தங்சேயாவுக்கும் மற்றவர்களுக்கும் அழைத்து பேசியிருந்தேன். நான் மாட்டுவதையே விரும்பாதவன் என் குழு மாட்டுவதையா விரும்புவேன்.?

குழலியை சீக்கிரம் பார்க்க வேண்டும். அது ஒன்று மட்டும்தான் இப்போதைக்கு எனது ஒரே குறிக்கோள்.

பத்து நிமிடங்கள் கடந்த பிறகு ஒரு அழைப்பும், அடுத்த ஐந்தாம் நிமிடத்தில் மற்றொரு அழைப்பும் வந்தது. இரண்டு போலிஸ் ஸ்டேசனிலுமே குழலி இல்லை.

புது டிரைவர் அவனின் காட்டுப் பங்களாவுக்கு காரை விட்டான். அவனுக்கு அனைத்து குறுக்கு வழிகளுமே தெரிந்ததிருந்தது. செக்போஸ்டே இல்லாமல் பாதைகளை கடந்தான். ஒரு இடத்தில் போலிசார் விசாரித்து நிற்பதாக அறிந்து அவனது ஆட்களை அனுப்பி வைத்தான். அவர்கள் இரண்டு குழுவாக பிரிந்து போலிசாரின் கவனத்தை திசை திருப்பிக் கொண்டிருந்த நேரத்தில் இவன் அந்த பகுதியையும் கடந்து விட்டான்.

அவனின் காட்டுப் பங்களா தனித்திருந்தது.

"இங்கே நீங்க பாதுகாப்பா இருக்கலாம் சார். என்னையும் நம்புங்க. நாயை போல உங்களுக்கு சேவை புரிவேன்.." என்று வசனம் பேசினான் அவன்.

"எனக்கு அந்த பொண்ணு வேணும். இருக்கற மொத்த ஸ்டேசனையும் சலிச்சாலும் சம்மதம். தனசேகரையும் அவன் குழுவையும் மொத்தமா வெட்டி கொன்னாலும் சரி. எனக்கு அவ வேணும். அதுவும் ரொம்ப சீக்கிரமா வேணும்.." என்றேன்.

அவன் சரியென தலையசைத்துவிட்டு நடந்தான். தலையை பிடித்தபடி அமர்ந்திருந்தேன். தம்பி எனது புது போனுக்கு அழைத்தான்.

"நீ செஞ்ச முட்டாள்தனம் என்னன்னு புரிஞ்சதா.?" என்றான். புது டிரைவர் என்னை விட என் தம்பிக்குதான் அதிக விசுவாசமாக இருக்கிறான் என்று புரிந்தது.

"ஸ்டாப் இட்.." என்றேன் எரிச்சலோடு

"யூ ஷெட்அப். பொண்ணுங்களை மட்டுமில்ல அந்த நாட்டுல எந்த எருமையையும் நம்பாதேன்னு தெளிவாதானே தங்சேயா சொன்னாரு. லூசு மாதிரி ஒரு பொண்ணோடு குடும்பம் நடத்திட்டு இருந்திருக்க.. இவ்வளவு நாளா கூட பிறந்த பாசத்துக்கு அந்த விசயத்தை தங்சேயாக்கிட்ட இருந்து மறைச்சி வச்சிருந்தேன். ஆனா இப்ப அவருக்கே விசயம் தெரிய போகுது.. முந்தானையை பார்த்ததும் கவுந்திருக்க.."

"இன்னொரு வார்த்தை பேசாதே.. இல்லன்னா என்ன நடக்கும்ன்னே தெரியாது. என் பிரச்சனையை சமாளிக்க எனக்கு தெரியும். நீ போனை வை.."

"விசயம் உன் கையை விட்டு எப்பவோ போயிடுச்சி. நான் அந்த பொண்ணை கொல்ல ஆள் அனுப்பிட்டேன்.." என்றவன் இணைப்பை துண்டித்துக் கொண்டான். கோபத்தில் போனை தூக்கி சுவற்றில் அடித்தேன்.

குழலி என் தம்பி அனுப்பிய ஆட்களிடம் கிடைக்க கூடாது. தனசேகரிடமும் கிடைக்க கூடாது. இரண்டில் யாரிடம் மாட்டினாலும் அவளின் உயிர் கொடூரமாக போகும். ஏன் குழலி இப்படி ஒரு முட்டாள்தனத்தை செய்தாய்.?

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN