என்னைத் துரத்தும் உன் நினைவுகள்... 7

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
நினைவுகள் - 7

நந்து, யாழினியை எப்படி அசிங்கப் பட வைக்கலாம் என யோசித்துக் கொண்டிருந்த நேரம் அவர்களை மறுவீட்டு விருந்துக்குப் போகச் சொல்ல, தன் டூவீலரில் மனைவியுடன் போகும்போது இதே எண்ணமாக போனவனுக்கு, திடீரென்று ஒரு எண்ணம் உதயமாக அவள் வீட்டுக்கு சற்று முன்பே வண்டியை நிறுத்தி மனைவியை இறங்கச் சொன்னவன் அவள் கையிலிருந்த பர்ஸை வாங்கி அதில் ஆயிரம் ரூபாயை வைத்து

“இங்கேயிருந்து ஆட்டோவுக்கு ஐம்பது கொடுத்தா உன் வீட்டுக்குப் போய்டலாம், இல்லை என் வீட்டுக்குப் போகிறதா இருந்தா கால் டாக்ஸி புக் பண்ணி போய்டு. எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு, என்னால எங்கேயும் வர முடியாது” என்றவன் பர்ஸை அவள் கையில் திணித்து விட்டு என்ன ஏது என்று கேட்பதற்குள் அந்த இடத்தை விட்டு வண்டியில் பறந்திருந்தான்.

யாழினி, சுயம் பெற்று “பாவா... பாவா...” என்று அழைத்ததெல்லாம் காற்றில் தான் கரைந்து போனது.

அப்பவும் விடாமல் கணவனுக்கு இரண்டு முறை அழைக்க, அது ரிங் போனதே தவிர போன் எடுக்கப் படவேயில்லை.

அவளுக்கு மேற்கொண்டு என்ன செய்வது என்றே புரியவில்லை. அதிலும் கணவன் இப்படி செய்வான் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. முன்பே சொல்லியிருந்தால் கூட, வீட்டில் இருப்பவர்களிடம் எதையாவது சொல்லி இந்த விருந்தே வேண்டாம் என்று தடுத்திருப்பாள். நேற்று யாழினியின் தந்தை சொல்லும் போது கூட சரி சரி என சொல்லிவிட்டு இன்று இப்படி செய்தால் அவளும் என்னதான் செய்வாள். ‘அச்சோ! வீட்டில் எல்லோரும் ஆசையும் ஆவலுமா இருப்பங்களே, இப்போ என்ன செய்வது?’ என்று நினைத்தவள்,

கணவன் சொன்ன மாதிரி இரண்டு வீட்டுக்கும் போகாமல் தற்காலிகமாக யோசிக்க அவகாசம் வேண்டும் என்ற எண்ணத்தில் எங்கு போகலாம் என யோசித்தவளுக்கு சட்டென்று ஓரிடம் நினைவுக்கு வர, போனை பிளைட் மோடில் போட்டவள், அடுத்து ஆட்டோ பிடித்து அந்த இடத்திற்குச் சென்றாள்.

ஒரு அரை மணி நேரம் கடந்த நிலையில், நந்து, எப்போதும் வரும் விளையாட்டு மைதானத்தின் அருகே உள்ள மரத்தின் கீழே உள்ள சிமெண்ட் கட்டையில் நெற்றியில் குறுக்கே கை வைத்தபடி படுத்திருக்க, அவனின் போன் தொடர்ந்து அடித்து ஓய்ந்தது. முழித்திருந்தாலும் மனைவிதான் அழைக்கிறாள் என்ற எண்ணத்தில் எடுக்காமல் இருக்க அதுவும் விடுவேனா என்ற எண்ணத்தில் மறுபடியும் அலறியது.

இந்த முறை தொடர்ந்து அழைப்பு வந்துகொண்டே இருக்க, “ச்சு...” என்ற சலிப்புடன் எடுத்துப் பார்க்க, அதில் இரண்டு முறை ராம்பிரகாஷ் மற்றும் மகேஷ் அழைத்திருந்தனர். அதைப் பார்த்ததும் “ஓ.... மேடம் வீட்டுக்குப் போய்ட்டாங்க போல. அதான் ஆள் மாற்றி ஆள் அழைக்கிறாங்க. இந்த குந்தாணி போன் செய்தா எடுக்க மாட்டேனு இப்படி எல்லாம் இவங்களை செய்யச் சொல்லி வீட்டுக்கு என்னை அழைக்கப் பார்க்கிறா…

நான் யாரு? சுவேஷ் நந்தன்! அவ்வளவு சீக்கிரம் பிடி கொடுப்பேனா?” என்று வாய் விட்டு சொல்லிக் கொண்டிருக்க மறுபடியும் இரண்டு முறை அழைத்து ஒய்ந்தது அவன் கைப்பேசி.

மறுபடியும் இவன் படுக்க ஆயத்தமாக இந்த முறை அவன் அக்காவிடமிருந்து அழைப்பு வந்தது. ‘இப்போ ஏன் அக்கா கூப்பிடுறாங்க? வீட்டுக்குப் போய்ட்டிங்களானு கேட்கவா.. இல்லைனா குந்தாணி ஏதாவது சொல்லி இருப்பாளோ?’ என்று அவன் யோசித்துக் கொண்டிருக்கும் போதே அழைப்பு நின்று மறுபடியும் அழைப்பு வந்தது. இந்த முறை அவன் எடுத்துப் பேசவும் “ஏன் டா போன் எடுக்க இவ்வளவு நேரம்?”

“டிராபிக்ல இருந்து வெளியவந்து பேசுறேன்க்கா”

“ஓ..... எங்கே வண்டி சத்தமே காணோம்?”

“அய்யோ அக்கா கொஞ்சம் தள்ளிவந்து பேசுறேன்க்கா. என்ன விஷயம் சொல்லுங்க”

“சரி.... சரி.... இங்க குன்றத்தூரிலிருந்து அண்ணா நகர் செல்ல அரை மணி நேரம் தான் ஆகும். டிராபிக் இருந்தாலுமே முக்கால்மணி நேரம் தான் ஆகும். இவ்வளவு நேரம் வரலைனு யாழினி வீட்டிலயிருந்து எங்களுக்குப் போன் பண்ணிட்டாங்க. உனக்கு போன் பண்ணினா நீ எடுக்கலையாம். யாழினிக்குப் பண்ணினா அவ போன் நாட் ரீச்சபிள் வருதாம். நானும் ட்ரை பண்ணினேன், அப்படி தான் வருது. அப்படி ரெண்டு பெரும் எங்கே தான் இருக்கீங்களோ?” என்று கேட்டவள் கூடவே “என்ன டா அவளைக் கூட்டிட்டு வேற எங்கேயோ போய் இருக்கியா?” என்ற பதிலையும் அவளே சொல்லவும்,நந்துவுக்கு ஒன்றும் புரியவில்லை.

‘என்னது? கீதா என் கூட இருக்காளா... அப்போ அவ இரண்டு வீட்டுக்கும் போகலையா.... எங்க போய் இருப்பா? போன் வேற நாட் ரீச்சபிள் வருதா?’ இவன் தனக்குள்ளேயே கேள்வி கேட்டுக் கொண்டிருக்க, “ஹலோ.... ஹலோ.... நந்தா..... லைன்ல இருக்கியா?” என்று அங்கு ஈஸ்வரி கத்தவும், “ஆங்.... சொல்லுங்க க்கா…”

“என்னத்தடா சொல்ல... யாழினியும் நீயும் வேற எங்கயோ வெளிய இருக்கீங்களா? தான் அப்போது கேட்ட கேள்விக்கான பதிலை இவளே மறுபடியும் சொல்லிக் கேட்கவும்

அது எப்படி தன்னுடன் இல்லாத மனைவியை இருப்பதாகச் சொல்லுவான்? அதிலும் போன் நாட் ரீச்சபிள் இருக்க, இரண்டுபேர் வீட்டிலும் மனைவி இல்லை. இப்போது அவன் மனதில் பயம் கவ்வ, ‘ஒரு வேளை நான் விட்ட இடத்திலேயே வீம்புக்குனு இருக்காளோ? ஆனா அங்கேயும் இல்லைன்னா?’ அவன் மண்டைக்குள் சுருக்கென்றொரு வலி பரவவும்.... தலையை இரு கைகளால் இறுக்கப் பிடித்த படி அங்கிருந்த சிமெண்ட் திண்ணையில் அமர்ந்து விட்டான்.

ஒன்றும் புரியாமல் இருந்தவனின் செவியில் ஈஸ்வரியின் “டேய் நந்தா! ஏதாவது பிரச்சனையாடா? ஏதாவது வி... பத்து... மாதிரி... யாழினிக்கு ஏதாவது...” என திக்கித் திணறி முடிப்பதற்குள் “அக்கா!...” என்று ஒரு அதட்டல் போட்டவன் “அவளுக்கு அப்படி எதுவும் ஆகாதுக்கா...” நடுங்கும் குரலில் தமக்கைக்கு மட்டுமில்லாமல் தனக்கும் தைரியம் சொல்லிக் கொண்டவன், “இன்னும் கொஞ்சம் நேரத்தில் அவ எங்கே இருந்தாலும் உங்க முன்னாடி நிறுத்துறேன் க்கா” என்று இவன் மறுபடியும் தைரியம் அளிக்க..

“என்ன சொல்ற நந்தா? அப்போ யாழினி உன் கூட இல்லையா?” அவள் குரலில் பயமும் கவலையும் சூழவும்

“அக்கா… அக்கா... ப்ளீஸ்! நீ பயப்படாத... முக்கியமா எந்த கவலையும் படாத... வீட்டிலையும் யார்கிட்டயும் எதுவும் சொல்லாதே. கொஞ்ச நேரம் சமாளி. இதோ... நான் அவளைக் கூட்டிட்டு வரேன். ப்ளீஸ் க்கா… நீ ஏதாவது யோசித்து டென்ஷன் ஆகாதேக்கா...” என அவன் கெஞ்ச

“அப்போ யாழினி எங்கேடா? அவளுக்கு என்ன ஆச்சு?” கோபமாகக் கேட்க.

“அக்கா... ப்ளீஸ்.... அவ என் குந்தாணிக்கா. அவளுக்கு எதுவும் ஆக விடமாட்டேன் க்கா... என்னை நம்புக்கா... நீ போனை வை... அவளைக் கூட்டிட்டு வரேன்...” என்றவன் தமக்கை பேச இடம் கொடுக்காமல் போனை வைக்க, அப்போது தான் சுருக்கென இருந்த தலைவலி மின்னலென தலை முழுக்க பாய்வதை உணர்ந்தான்.

இப்போது அவன் மாத்திரை எடுத்துக் கொண்டால் தான் இந்த தலைவலி போகும். ஆனால் அதை பற்றி எல்லாம் அவன் யோசிக்கத் தயாராக இல்லை. அவன் எண்ணம் மூச்சு செயல் எல்லாம் அவன் மனைவியிடமே இருந்தது. ‘அவ அங்கே தான் இருப்பா... வீம்புக்குனு நான் விட்ட இடத்திலேயே தான் இருப்பா என் குந்தாணி...’ இப்படி எல்லாம் உரு போட்டபடி அவன் தன் மனைவியை விட்டுச் சென்ற இடத்திற்கு வந்து பார்க்க…

அங்கு அவன் மனைவி மட்டுமல்ல ஒரு ஈ காக்கை கூட இல்லாமல் இருக்கவும், சுற்றுப்புறத்தில் ஏதாவது விபத்து நடந்ததுக்கான அறிகுறி இருக்கா என்று பார்த்தவன் அப்படி எதுவும் இல்லை என்றதும் ‘என் குந்தானிக்கு அப்படி எதுவும் ஆகி இருக்காது’ என்று தான் அவன் உதடுகள் முதலில் முணுமுணுத்தது.

‘இங்கு இல்லைனா நிச்சயம் அவ பிரண்ட்ஸ் யார் வீட்டுக்குனா தான் போய் இருப்பா. ஆனா அவ சம்பந்தப்பட்டது எதுவும் தெரியாத போது நான் எப்படி தேட?’ என யோசிக்கும் போதே ‘அதற்கு ஏன் அவ போன நாட் ரீச்சபிள் வரணும்? ஒரு வேளை யாராவது கடத்தி இருப்பாங்களோ?’ இப்படி நினைக்கும் போதே தலையிலிருந்து வியர்வை வடிய உடலில் நடுக்கத்துடன் பிளாட்பாரத்தில் அமர்ந்த நேரம் ஈஸ்வரியிடமிருந்து போன் வரவும் யார் போன் அழைப்பையும் எடுக்காமல் தவிர்த்தவனால் இப்போது அப்படி செய்ய முடியாமல் போக, அதை எடுத்தவன்

“அக்கா... அவளைக் காணோம்க்கா.. எனக்கும் தலைவலி அதிகமா இருக்குக்கா... ப்ளீஸ்.... அவளை விட்டுடாதே.... மாமாவுக்குத் தெரிந்தவர்கள் மூலமாகச் சொல்லி கொஞ்சம் தேடச் சொல்லு க்கா...”

“டேய்... அதெல்லாம் நாங்க பார்த்துக் கொள்கிறோம். நீ இப்போ எங்க டா இருக்க? அதைச் சொல்லு. விஜயன் இருக்கான், உனக்கான டேப்லட்டைக் கொடுத்து அனுப்புறேன். அதை வாங்கி சாப்பிட்டு ஆட்டோ பிடித்து வீட்டுக்கு வாங்க”

“அக்கா.. கீதாக்கா... அவ இல்லாம நான் வரமாட்டேன்க்கா... நீ மாத்திரை கொடுத்து அனுப்பு. கூடுமான வரை நான் தேடிப் பார்க்கிறேன்” என்று தான் இருக்கும் இடத்தைச் சொல்லி போனை வைத்தவனுக்கு

மனைவியைத் தேட முடியாமல் உடல்நிலை காரணத்தால் இப்படி கையாலாகாததனத்துடன் அமர்ந்திருக்கும் தன் நிலையை எண்ணி தன் மேலேயே அவனுக்குக் கோபம் வர, அதெல்லாம் மென்று முழுங்கியவன் தனக்குத் தெரிந்த காவல்துறை உயர் அதிகாரியை அழைத்துச் சில தகவல்களைச் சொன்னவன், இவ்வளவு நேரம் அழைக்காத மனைவியை அழைக்க, அப்போதும் நாட் ரீச்சபிள் என்றே வந்தது.

‘அடி... ஏய்... குந்தாணி! எங்க டி.. இருக்க? உன் பாவா செய்தது தப்பு தான் டி… இனி உன்னை இப்படி விட்டுப் போக மாட்டேன் டி... கீதா! ப்ளீஸ்... வந்திடுடி… எனக்கு இவ்வளவு பெரிய தண்டனை எல்லாம் கொடுக்காத டி.... பாவா கிட்ட... பேசுமா... உன் பாவா போனையாவது எடு டா... இப்படி எல்லாம் வாய் விட்டு புலம்பிக் கொண்டே நந்து மனைவிக்கு அழைப்பு விடுத்துக் கொண்டேயிருக்க…

அங்கு அவன் மனைவிக்கோ என்ன யோசித்தும் வீட்டில் என்ன காரணம் சொல்லுவது என்று புரியாத நிலை. சரி இங்கிருந்து நேரம் கடப்பதை விட வீட்டுக்குப் போய் சமாளிப்போம் என்று நினைத்து வெளியே இருந்த ஆட்டோவில் ஏறி எதற்கும் இருக்கட்டும் என்று அவள் போனை ஆன் செய்த நேரம் பாவா காலிங் என்று வரவும், இவள் எந்த தயக்கமும் இல்லாமல் ஆன் செய்ய

“ஏய்... குந்தாணி! எங்க டி இருக்க? இனி இப்படி செய்ய மாட்டேன் டா... பாவா கிட்ட வந்திடுடா...” அவள் போன் எடுத்தது கூடத் தெரியாமல் அவன் புலம்பிக் கொண்டிருக்கவும், கணவன் தன்னைத் தனியே விட்டுச் சென்றதைக் கூட அவன் புலம்பலில் மறந்தவள்

“பாவா! என்ன ஆச்சு பாவா? எங்கே இருக்கீங்க?” என்று இவள் படபடக்கவும், அப்போது தான் சுயநினைவு பெற்றவன் மனைவி தன்னிடம் பேசி விட்டாள் என்பதை உணர்ந்தவனோ,

“கீதா.... கீதா மா.... எங்கடா இருக்க?” என்று அவன் பதற

“ஆட்டோவில் அப்பா வீட்டுக்குப் போயிட்டு இருக்கேன்... நீங்க?...”

“உன்னை விட்ட இடத்திலேயே பிளாட்பாரத்தில உட்காந்து இருக்கேன் டி...”

“அங்கேயா?!” இவள் அதிர, இவள் பதட்டத்தில் ஆட்டோகாரர் இவளைத் திரும்பித் திரும்பிப் பார்க்கவும்,

“அண்ணா... நான் சொன்ன அட்ரஸ் வேண்டாம். இப்போ இந்த வழியா கொஞ்சம் சீக்கிரம் போங்களேன்” என்று சொல்லிய நேரம் அவள் அண்ணன் மகேஷிடமிருந்து அழைப்பு வரவும் அவனிடம் பேசியவள் உடனே கணவன் இருக்கும் இடத்துக்குக் காரை எடுத்து வரச் சொன்னவள் கணவனை நெருங்கிய நேரம் மகேஷும் வந்து விட்டான். பிளாட்பாரத்தில் நந்து முகம் வெளிற தலையைப் பிடித்த படி அமரந்திருந்த கோலம், பார்த்த இருவரின் மனதையும் தாக்கியது.

“பாவா!...” என்ற அவள் குரலில் நிமிர்ந்து மனைவியை உச்சி முதல் பாதம் வரை ஆராய்ந்தவன் சற்றே நிம்மதி பெருமூச்சில் எழுந்தவனோ அவள் இவனை நெருங்கிய நேரத்தில் ‘பளார்’ என்று ஒரு அரை கொடுத்தான். இந்த திடீர் தாக்குதலில் தடுமாறியவளோ பிடிமானம் இல்லாமல் அடித்த கணவனையே பற்றுகோளாகப் பற்றவும் இழுத்து அணைத்துக் கொண்டான் மனைவியை. அவன் உடல் இன்னும் நடுங்குவதை உணர்ந்தாள் யாழினி.

எல்லாம் ஒரு வினாடியில் நடந்து விட, தங்கையை அடிக்கவும் “நந்து!” என்று மகேஷ் கோபத்துடன் அழைத்த பின்னரே மனைவியைத் தன்னிடமிருந்து பிரித்தான் நந்து.

“மகேஷ்! இவளை உங்க வீட்டுக்குக் கூட்டிட்டுப் போங்க”

“அப்போ நீங்க?” அண்ணன் தங்கை இருவரும் கேட்க

“நான் வரலை… நீங்க இவளை மட்டும் கூட்டிட்டுப் போங்க...” அவன் குரல் சற்றுக் குழறவும்

“முடியாது! நான் உங்க கூடத் தான் இருப்பேன். இல்லனா வாங்க நம்ப வீட்டுக்குப் போகலாம்” என யாழினி பிடிவாதமாகச் சொல்லவும், அதற்கு நந்து ஏதோ சொல்ல வருவதற்குள்,

“என்ன நினைச்சிட்டு இருக்கீங்க ரெண்டு பேரும்? அங்கே வீட்டில் இருக்கிறவங்க எல்லாம் உங்களைப் பார்க்காம பதறிப் போய் உட்கார்ந்து இருக்காங்க... நடு ரோட்டுல என்னமோ கதை பேசிட்டு இருக்கீங்க ரெண்டு பேரும்! வாங்க… வந்து கார்ல ஏறுங்க” என்றவன் ஆட்டோவை அத்துடன் திருப்பி அனுப்பி விட்டு இவர்களுக்காகக் கார் கதவைத் திறந்து விட, யாழினி கணவனை ஒரு கெஞ்சும் பார்வை பார்க்க, எதுவும் பேசாமல் காரில் ஏறினான் நந்து.

இவர்கள் கார் யாழினி வீட்டுக்குள் நுழையும்போது கமிஷ்னர் கார் வெளியில் செல்லத் தயாராக இருந்தது. மொத்த குடும்பமும் அவரை வழி அனுப்ப வெளியே வந்த நேரம் இறங்கிய யாழினியைப் பார்த்து

“என்ன யாழினி! இப்படி ஒரு மணி நேரமா உன் அப்பாவை உயிரே இல்லாம நடமாட வைத்துவிட்டாயே மா? என்னமோ போங்க... கொஞ்சம் பொறுப்பா நடந்துக்கங்க...” என்று கணவன் மனைவிக்குப் பொதுப்படையாகச் சொன்னவர் காரில் ஏறிக் கிளம்ப, அவர் எப்போதுடா கிளம்புவார் என்று காத்து கொண்டிருந்த அலமேலு

“எங்க டி போனீங்க? கொஞ்சமாவது அறிவு இருக்கா? நாங்க போன் பண்ணா எடுக்கிறது இல்லையா?” என்று மாப்பிள்ளையைச் சாக்கிட்டு அவர் பெண்ணைச் சகட்டு மேனிக்குத் திட்ட ஆரம்பிக்கவும்,

“அம்மா! கொஞ்ச நேரம் பேசாம இருக்கியா? சாரி ப்பா... சாரி ண்ணா... தப்பு என் மேல் தான்... என்ன நடந்ததுன்னு நான் அப்புறம் சொல்றன். இப்போ அவர் குடிக்க சமையல்காரம்மாவ ஜூஸ் கொண்டுவரச் சொல்லுங்க” எனவும்

அதற்குள் எல்லோரும் ஹாலுக்கு வந்து விட, “ஜூஸ் எதுக்கு டி? சாப்பாடே ரெடியா தான் இருக்கு. வந்து சாப்பிடுங்க. சமைத்ததை என்ன கொட்டவா முடியும்?” என்று யாழினியின் தாய் நீட்டி முழங்கவும்…

“அம்மா! இப்போ அவர் மாத்திரை சாப்பிடணும், அதான் ஜூஸ் கேட்டேன். அவர் ரெஸ்ட் எடுத்து எழுந்த பிறகு நாங்க சாப்பிடறோம். உனக்கு பசித்தா நீ போய் சாப்பிடு” என்று யாழினி நறுக்கென்று பேசவும்

“பார்க்கத் தான் வெளிய பவுசு! உள்ள ஆயிரத்தெட்டு சீக்கு...” என்று யாழினியின் தாய் தன் பேச்சில் எகத்தாளம் படிக்கவும், சட்டென அங்கிருந்த சோஃபாவில் அமர்ந்து கண்களை மூடிக் கொண்டான் நந்து. இப்போது வெளியே போகக் கூட அவனுக்குத் தெம்பு இல்லை.

அதே நேரம் விஜயன் உள்ளே வந்தவன் “அண்ணி! மாத்திரை…” என்று கொடுக்க, அதை வாங்கியவள் விஜயனுக்கும் கணவனுக்கும் ஜூஸ் கொடுத்து நந்து மாத்திரை போட்டதும் ரெஸ்ட் எடுக்கச் சொல்லிவிட்டு விஜயனிடம் தன் கணவனின் பைக் இருக்குமிடம் சொல்லி “கொஞ்சம் போய் எடுத்துட்டு வந்து விடு” என்று சொல்ல

“சரி அண்ணி! அப்படியே பிரண்ட்ஸ் கொஞ்சம் வெளியே கூப்பிட்டாங்க, நான் போயிட்டு வரேன் அண்ணி”

“ம்ம்ம்... ஆனா சாப்பிட இங்கே வந்திடு விஜயா!”

“சரிங்க அண்ணி...” என்று சொல்லி அகன்றான் அவன்.
நந்துவின் உடல்நிலையை முன்னிறுத்தி வீட்டில் இருந்தவர்கள் முதற்கொண்டு இப்போது வந்த விஜயன் வரை யாரும் அவனிடம் எதுவும் பேசவில்லை.

“அப்பா! நாங்க இரண்டு பேரும் நம் வீட்டுக்கு வரும் வழியில் வண்டிக்குப் பெட்ரோல் போட இறங்கிய நேரம் எனக்குப் போன் வரவும் நான் சற்றுத் தள்ளி நின்று பேச, அதில் பிளட்பேங்கிலிருந்து என்னுடைய குரூப் ரத்தம் ஒரு குழந்தைக்கு அவசரமாகத் தேவை எனக் கேட்டதால் அவரிடமும் சொல்லாமல் அங்கிருந்த ஆட்டோவில் கிளம்பிப் போயிட்டேன்ப்பா. உங்களுக்குத் தகவல் சொல்லலாம்னு நினைத்தேன் ஆனால் ஆஸ்பிட்டல் உள்ளே சிக்னல் ப்ராளம் அண்ணா!” என்று எல்லோரும் நம்பும்படியாக ஒரு பொய்யைச் சொன்னவள், தொடர்ந்து

“அங்க நெட்வொர்க் இல்லாததனால உங்களுக்கு எல்லாம் சுவிட்ச்ஆப்னும் நாட் ரீச்சபிள்னும் மாறி மாறி வந்திருக்கு. சாரி! சாரி! என் மேல் தான் தப்பு... உங்க எல்லோரையும் ரொம்ப கலங்க வச்சிட்டேன். சாரி ப்பா! ரொம்ப சாரி ப்பா! என்று சொல்லி அவள் கண் கலங்கவும்

“நீ பிளட் கொடுத்தியா?” என்று தந்தை கேட்க

“ஆமாம்...” என்று தலையாட்டினாள் யாழினி.

“உனக்கு எத்தனை முறை சொல்லுவது? முன்பு இப்படி தான்... கூடப் படிச்சவனுக்கு பிளட் தேவைனு யார்கிட்டயும் சொல்லாமதான் பிளட் கொடுத்துட்டு வந்த. இப்பவும் இதே வேலை செய்திருக்க” என்று அவள் தாய் சத்தம் போட,

“நீயும் மாப்பிளையும் போய் ரெஸ்ட் எடுங்க யாழினி!” என்று அவள் தந்தை சொல்ல, எப்போதும் ராஜாத்தி என்றழைக்கும் தந்தை பெயர் சொல்லி அழைக்கும் போதே அப்பா கோபத்தில் இருக்கிறார் என்பது யாழினிக்குப் புரிந்தது. அதை உணர்ந்தவள்

“அப்பா!...” என்று ஏதோ சொல்லத் தயங்கவும்,

உடனே அவர் “நீ பிளட் கொடுத்தது தவறில்லை. ஆனா எங்க யார்கிட்டேயும் சொல்லாமல் போனது தான் தப்பு. இது இரண்டாவது முறை யாழினி. ஆனா இதுதான் கடைசியும் இறுதியுமான மன்னிப்பு. இதே தப்பை நீ திரும்ப செய்தா... நீ வீட்டுக்கு வரும்போது என் உடலைத் தான் பார்க்கவேண்டி இருக்கும்!” என்று எச்சரிக்க

“அப்பா!” என்று அவர் பிள்ளைகள் அதிரவும்,

“மாப்பிள்ளை! எதுவா இருந்தாலும் எங்ககிட்ட சொல்லுங்க. இப்படி யார்கிட்டேயும் சொல்லாம நீங்களும் கஷ்டப்பட்டு எங்களையும் தவிக்க விடாதிங்க” என்று மாப்பிள்ளையிடம் சொல்ல

அதையெல்லாம் கேட்கும் நிலையில் நந்து இல்லை. அவன் மனைவியைத் தான் உச்சி முதல் பாதம் வரை மறுபடியும் ஆராய்ந்து கொண்டிருந்தான். ‘அப்போ… நான் விட்ட பிறகு ஆஸ்பிட்டல் போய்... பிளட் கொடுத்தாளா? அப்படி வந்தவளையா நான் அடிச்சேன்?’ என்று யோசித்து விசனப்பட்டவனை யாழினி ஏதோ கண்களால் சொல்லி தந்தையை ஜாடை காட்டவும், என்ன எது என்று அறியாமலே “ஆங்... சரிங்க மாமா!” என்று அவருக்குப் பதில் சொன்னான் நந்து. அதே எண்ணத்துடன் உள்ளே வந்தவன்,

“கீதா! பிளட் கொடுக்கிறது தப்புன்னு சொல்ல மாட்டேன். ஆனா நீ... ஏன் தனியா போன? என் கிட்ட சொல்லியிருந்தா... நானும்...” பாதி பேச்சிலேயே தன் முட்டாள் தனத்தை உணர்ந்தவன் மனைவியின் கையைப் பிடித்து, “வலிக்குதா?” என்று கேட்க

‘இல்லை’ என்று தலை உருட்டியவள், கண்ணில் சிரிப்புடன் “அது அப்பாவுக்காக சொன்ன பொய்” எனவும், அவன் ஏன் என்பது போல் பார்க்க, அதில் சற்றே தலை குனிந்தவள் “நான் உண்மையைச் சொன்னா ரெண்டு வீட்டிலேயும் உங்களைத் தான் திட்டுவாங்க. அதான்...” என்றவள் கணவனை நிமிர்த்து பார்க்க,

அவன் கண்ணில் கனிவைப் பார்க்கவும் “ஏதோ... உங்க நேரம்! நான் நல்ல மூடில் இருந்தேன். எப்போதும் இப்படியே இருப்பேன்னு நினைக்காதீங்க. அடுத்த முறை இப்படி எல்லாம் செய்தீங்கனா... எல்லார்கிட்டேயும் சொல்லி உங்களுக்குத் தர்மஅடி வாங்கிக் கொடுக்கிறது நிச்சயம். அப்புறம் என்மேல் கோவப்பட்டு எந்த பலனும் இல்லை” என்று விளையாட்டு கலந்த உறுதியுடன் சொன்னவள் “படுத்து ரெஸ்ட் எடுங்க. நான் அப்பாவுக்கும் அண்ணன்களுக்கும் சாப்பாடு எடுத்து வைத்துவிட்டு வரேன்” என்று விலகவும்,

நந்துவோ தனக்கே உரிய மேனரிசமான நெற்றியை வருடியவன் நிமிர்ந்து “உண்மையா?” என்று கேட்க

“ஆமாம்… தர்மஅடி கன்பார்ம் பாவா!” என்று யாழனி சொல்லவும்

“ச்சு... அது இல்ல. பிளட் கொடுக்கவில்லை தானே? பொய் சொல்லிட்டு நீ பாட்டுக்குப் போய் வேலை செய்யாதே வந்து ரெஸ்ட் எடு” என்றான். எங்கே தன்னைக் காப்பாற்ற தந்தையிடம் பொய் சொன்னது போல் தன்னிடமும் பொய் சொல்லுகிறாளோ என்ற எண்ணத்தில் சிறு கண்டிப்புடன் சொல்ல

“ப்ராமிஸா நான் சொன்னது எல்லாம் பொய் பாவா!” என்று அவள் ப்ராமிஸை அழுத்திச் சொல்லவும் திருப்தியுடன் தலை ஆட்டியவன் “ஆனா, நான் வீட்டில் உண்மையைச் சொல்லியிருந்தா நீ சொன்னது எப்படி செல்லுபடியாகும்? அப்போ எல்லார்கிட்டேயும் மாட்டிதானே இருந்திருப்ப?” என்று குறுகுறுப்பு கண்ணில் வழியக் கேட்கவும்,

“க்கும்…” என்று உதட்டைச் சுழித்தவள் “அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்ல. உங்களைப் பார்க்க வரும் போதே அண்ணி போன் பண்ணாங்க. நந்து உங்க வீட்டில் இருக்கிறவங்க கிட்ட எதுவும் சொல்லல. அதனால் நீ ஏதாவது சொல்லி சமாளினு சொன்னாங்க. அதான் திடீர்னு ஒரு பிளான் போட்டு அதன்படி பேசிட்டேன். எதை செய்யிறதா இருந்தாலும் ப்பிளான் பண்ணி செய்யணும் பாவா! என்று வடிவேலு பாணியில் தன்னைத் தானே சிலாகிக்கவும்,

“அப்போ… எனக்கும் பிளான் போட்டிருக்க! அப்படித் தானே?” என்று கணவன் கேட்க, அதிர்ந்து விழித்தாள் யாழினி.

அவனோ கண்ணில் அதே குறுகுறுப்புடன் உதட்டசைவால் “பிளான் இல்லை தானே?” என்று மவுன மொழியென கேட்க,

கணவன் மாதிரியே உதட்டசைவால் “ஆமாம்...” என்ற சொல்லுடன் கிளுக்கி சிரித்தபடி வெளியே ஓடினாள் யாழினி.
 
Last edited:
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN