காதல் கடன்காரா 34

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
கார்த்திக் மீண்டும் ஒரு வாரம் தன் அறையிலேயே முடங்கினான். அம்மாவும் புவனாவும் வழக்கம்போல அபிராமியையே திட்டினார்கள். எழுந்து சென்று வேலை தேடும்படி அப்பாவும் கத்தினார். மூர்த்தி அங்கிருந்து செல்லும் முன் தம்பிக்கு நிறைய அறிவுரைகளை தந்து விட்டு சென்றான்.

கார்த்திக் தன்னை சுற்றி சுழன்றுக் கொண்டிருந்த உலகத்தில் ஒன்றிணைய மறுத்து விட்டான். அபிராமியின் நினைவுகளுடனான தனி உலகில் வாழ்ந்துக் கொண்டிருந்தான்.

அபிராமியோடு கடைசியாக பேசிவிட்டு வந்த பிறகுதான் அவனுக்கு அவளை பற்றி கொஞ்சமேனும் புரிந்தது.

அவள் தனக்கென்று தனி விதிகளை வகுத்து வாழ்பவள். மற்றவர்களின் பார்வையில் திமிரான பழக்க வழக்கங்களை உடையவளாக இருந்தாலும் கூட அவன் மனதில் தனியொரு அடையாளமாகதான் தோற்றத்தை கொண்டிருந்தாள்.

'என்னை நானே பாதுக்காக்காம போனதுக்கு இந்த தண்டனையாவது இருக்கட்டும்..' அவள் சொன்ன வார்த்தைகளே அவனின் மனதில் திரும்ப திரும்ப ஒலித்துக் கொண்டிருந்தன.

ஈஸ்வரை பழிவாங்க புறப்பட்டு கடைசியில் ஒரு பெண்ணின் வாழ்க்கையை அழித்துள்ளோம் என்பது இப்போதுதான் அவனுக்கு தெளிவாக புரிந்தது.

'எத்தனை கனவுகளோடு மணமேடை ஏற இருந்தாளோ.? இப்படி அவளின் மனதை கருக்கி அழித்து விட்டோமே.!' என்று கவலைக் கொண்டான்.

அவனின் உள்ளம் அவனை நோக்கி பல கேள்விகளை கேட்டது.

ஏதேதோ எண்ணத்தில் இருந்தவனை கண்டுக் கொள்ளாமல் உள்ளே வந்த புவனா டீ கோப்பையை மேஜையின் மீது நங்கென்று வைத்தாள்.

"நம்ப வச்சி கழுத்தறுத்துட்டு போனவளுக்காக நீயும் எத்தனை நாளைக்குதான் அழறேன்னு பார்க்கறேன்.." என்றாள் நக்கலாக.

"அமைதியா போ புவி.." தரையை பார்த்தபடி சொன்னான் கார்த்திக்.

"நீ நிஜமாவே ஆம்பளதானா.? இன்னேரம் நானா இருந்திருந்தா என்னை தூக்கி போட்டியான்னு கேட்டு கன்னம் கன்னமா அறைஞ்சிருப்பேன். அவளெல்லாம் ஒரு ஆளான்னு நினைச்சி அவ முன்னாடியே நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணி வாழ்ந்து காட்டி இருப்பேன். இப்படி சொந்த வாழ்க்கையை கெடுத்துட்டு இருக்க.." சொல்லிக் கொண்டிருந்த புவனாவின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறையை விட்டான் கார்த்திக்.

"அம்மா.." கத்தியபடி கன்னத்தை பிடித்தவள் "பைத்தியமாடா நாயே உனக்கு.?" என்றாள்.

"அவளை அறைன்னு சொன்னா. இவளை அறைஞ்சா கத்துற.? ஆம்பளன்னா பொண்டாட்டியை மட்டும்தான் அடிக்கணுமா.? இதுக்கு முன்னாடி அவளை அடிச்சேன். அப்படின்னா இப்ப அவளுக்காக நான் அழுதா மட்டும் என்ன தப்பு.?" குழப்பத்தோடு தன்னையே கேட்டுக் கொண்டான்.

சத்தம் கேட்டு அறைக்கு வந்த யமுனா கண்கள் கலங்கியபடி நின்றிருந்த மகளின் அருகே வந்து நின்றாள்.

"என்னடி ஆச்சி.?"

"உன் மெண்டல் பையன் என்னை அடிச்சிட்டான்ம்மா.!" என்று எரிச்சலோடு சொன்னவள் "என்னை அடிக்க உனக்கு என்னடா ரூல்ஸ் இருக்கு.?" என்றாள் அண்ணனிடம் கோபமாக.

மற்றொரு கன்னத்திலும் ஒரு அறையை தந்தான் அவன். அம்மா அவனை தூரமாக விலக்கி தள்ளினாள்.

"உங்களுக்குள்ள என்ன நடந்துச்சி.? ஏன் இந்த சண்டை.? தங்கச்சியை ஏன்டா அடிக்கற.?" என்றாள் சோகமும் கோபமுமாக.

"அப்படின்னா உங்களை அடிக்கலாமா.?"

யமுனா மகளை இழுத்துக் கொண்டு ஓரடி பின் வந்து நின்றாள். "ஏன்டா இப்படி பயமுறுத்துற.?"

"அவளை பத்தி தப்பா பேசிட்டேன்னு ரோசமாம்மா.." என்ற தங்கையை நோக்கி கையை ஓங்கியவன் பற்களை கடித்தபடி கையை கீழே விட்டான்.

"உனக்கு கல்யாணம் நடக்கற நாள்ல எவனோ ஒருத்தன் வந்து கட்டாயப்படுத்தி கடத்திட்டு வந்திருந்தா என்னடி பண்ணி இருப்ப.?" புவனாவை பார்த்து கோபத்தோடு கேட்டான்.

அவன் அபிராமிக்கு வரிந்து கட்டுகிறான் என்பதை புரிந்துக் கொண்ட புவனா "நான் முதல்ல வந்திருக்கவே மாட்டேன். செத்து கூட போவேன். ஆனா வந்திருக்க மாட்டேன். கூட வந்து கல்யாணம் பண்ணி வாழ்ந்த பிறகு ஏமாத்திட்டு போகணும்ன்னு நினைச்சிருக்கவே மாட்டேன்.." என்றாள். அவளுக்கு இன்னும் ஒரு அறை தரலாம் என்று தோன்றியது அவனுக்கு.

அபிராமி அன்று குளத்தில் மூழ்கிய காட்சி நினைவுக்கு வந்தது. தன்னையே கொட்டிக் கொள்ள வேண்டும் போல இருந்தது. குழப்பத்தில் இருந்தவளை சரியாக யோசிக்க கூட விடாமல் செய்ததில் அவள் கடைசியில் தற்கொலை முயற்சியை கூட கையெடுத்திருக்கிறாள் என்பதை நினைக்கையில் தான் எவ்வளவு பெரிய முட்டாள் என்று புரிந்தது.

"போனவளுக்காக எங்களை ஏன்டா சாகடிக்கிற.? அவதான் வேணாம்ன்னு போயிட்டா இல்ல.?" என்று எரிச்சலோடு கேட்டாள் அம்மா.

"உன் பொண்ணை ஒருத்தன் கடத்தி இழுத்துட்டு போயிருந்தா அப்பவும் நீ இதைதான் சொல்லி இருப்பியாம்மா.?"

புவனா அம்மாவின் பிடியிலிருந்து விலகி வந்தாள். "நீ அவளுக்கு சப்போர்ட் பண்றதை முதல்ல நிறுத்து. இழுத்துட்டு வந்தது உன் தப்புதான். நானும் இல்லைன்னு சொல்லல. வந்த அவ மேலயும் ரொம்ப பெரிய தப்பு இருக்கு. இது ஒன்னும் விளையாட்டு கிடையாது மாறி மாறி பழி வாங்கிக்கறதுக்கு.! நீ அவளை எவ்வளவு லவ் பண்ற.!? ஆனா அவ அதை கண்டுக்காம போயிட்டா.. உன் பொண்டாட்டி மாதிரி ஒரு திமிர் பிடிச்சவளை நான் பார்த்ததே இல்ல.." என்றவள் அந்த அறையிலிருந்து வெளியே சென்றாள்.

கார்த்திக் கட்டிலில் அமர்ந்தான். கைகளில் முகத்தை புதைத்துக் கொண்டான். தங்கையோடு பேச பேச தவறு முழுக்க தன் மீதுதான் என்பது கண்ணாடி போல புரிந்தது.

"நான் வேணா வேற பொண்ணு பார்க்கட்டுமாடா.? எல்லாம் கொஞ்ச நாள்ல சரியா போயிடும். அவளை மறக்க ஈஸியா இருக்கும்.."

"தயவு செஞ்சி வெளியே போம்மா.. எனக்கு பொண்ணும் வேணாம்‌. மண்ணும் வேணாம்.." என்றவன் படுக்கையில் விழுந்தான்.

மனம் முழுக்க சிந்தனை. தான் அபிராமியோடு வாழ்ந்த வாழ்வை இரண்டாம் முறையாய் நினைவில் வாழ்ந்து பார்த்தான். ஆரம்பத்தில் இருந்தே தவறு அவன் மீதுதான்.

எந்த சம்பந்தமும் இல்லாமல் திடீரென்று திருமண நாளில் சென்று அவளை கட்டாயப்படுத்தியது முதல் தவறு. அவன் நினைத்திருந்தால் ஈஸ்வரை கடத்தி இருக்கலாம். ஈஸ்வரின் உணவில் ஏதாவது கலந்து தந்திருக்கலாம். மணமகன் சென்ற காரின் பிரேக் ஒயரை பிடுங்கி விட்டிருக்கலாம். ஆனால் ஏன் அபிராமியை கடத்த வேண்டும்.?

ஏன், மற்ற பெண்களில் இவளும் ஒருத்தி, கட்டாய திருமணம் செய்தால் பலரை போலவே இவளும் நான்கு நாள் அழுது ஐந்தாம் நாளிலிருந்து கணவனே தெய்வம் என்று மாறிவிடுவாள் என்று நம்பியதாலா.!?

ஆரம்பத்திலேயே தன் எண்ணம் முழுக்க தவறாகவேதான் இருந்துள்ளது என்பதை மிகவும் தாமதமாக புரிந்துக் கொண்டவனுக்கு இனி வரும் நாளையேனும் சரிசெய்ய வேண்டும் என்ற ஆசை வந்தது.

அன்றைய நாள் முழுக்க சிந்தித்தே செலவழித்தான். மறுநாள் புது மனிதனாக வெளியே வந்தான்.

புவனா அவனை கண்டுவிட்டு முகத்தை திருப்பிக் கொண்டாள். அவளை அடித்தது தவறு என்று மனம் உறுத்தியது. அப்புறமாக சமாதானம் செய்துக் கொள்ளலாம் என்று எண்ணிக் கொண்டு நடந்தான்.

"எங்கடா வேலை தேடி கிளம்பிட்டியா அதுவும் இந்த நேரத்துல.?" என்றாள் அம்மா சீரியலை பார்த்தபடி.

"இல்ல.. வாழ்க்கையை தேடி.." என்றவன் புவனாவின் குழப்ப பார்வையை கண்டுக் கொள்ளாமல் நடந்தான்.

அணிந்திருந்த கருப்பு பனியன் வியர்வையில் உப்பு பூத்து இருந்தது. பாடல் ஒன்றை முனகிய முத்தமிழ் கையிலிருந்த மண்வெட்டியை கீழே வைத்து விட்டு நிமிர்ந்தான். பிற்பகல் வெயில் கண்டதும் கண்கள் கூசியது. தலையில் இருந்த துண்டை அவிழ்த்து உதறிவன் மீண்டும் சரியாக கட்டிக் கொண்டான்.

"தம்பி இந்த பாத்தி நிரம்பிடுச்சி.." வரப்போரம் நின்றிருந்த பெரியவர் குரல் தந்ததும் அவசரமாக மண்வெட்டியை எடுத்தவன் அந்த பாதையை மறித்து அடுத்த பாத்திக்கு தண்ணீரை அனுப்பினான்.

ஒரு மணி நேரம் கடந்தது. "தம்பி கடைசி பாத்தி நிறைய போகுது. நான் போய் மோட்டரை நிறுத்திட்டு வந்துடுறேன்.." என்ற பெரியவர் கிணற்றை நோக்கி ஓடினார்.

முத்தமிழ் மண்வெட்டியை தூக்கிக் கொண்டு வரப்பின் மீது வந்து நின்றான்.

வேலைக்காரர்களை வைத்து கட்டியிருந்தால் கூட வராத திருப்தி தானே தண்ணீர் பாய்ச்சுகையில் வந்தது அவனுக்கு. பயிர்களை உயிராக நேசித்தான் அவன். இன்று கூட யாரேனும் கேட்டால் 'படித்தது என் ஆசைக்கு, இங்கே உழைக்கிறது என் பொழப்புக்கு.!' என்பான்.

லட்சம் லட்சமாக சம்பளம் வாங்குகையில் வராத திருப்தி இந்த பயிர்களில் விளைந்த உணவை உண்கையில் வந்தது அவனுக்கு.

"தமிழ்.." தண்ணீரில் அசைந்தபடி நின்றிருந்த பயிர்களை பார்த்துக் கொண்டிருந்தவன் கார்த்திக்கின் குரல் கேட்டு திரும்பினான்.

"இன்னும் என்ன.?" என்றான் எரிச்சலோடு. கையிலிருக்கும் மண்வெட்டியால் அவனை அடித்து பயிர்களின் வேர்களில் புதைத்து விட வேண்டும் என்று வெறி வந்தது அவனுக்கு.

"சாரி.."

"என்ன **க்கு.?"

கார்த்திக் நண்பனை வருத்தமாக பார்த்தான். "உன் தங்கச்சி லைப்பை ஸ்பாயில் பண்ணதுக்கு.?"

முத்தமிழ் அவனை ஏற இறங்க பார்த்தான்.

"சாரி.. நான் அவளுக்கு செஞ்சது அத்தனையும் தப்பு.. மனசார மன்னிப்பு கேட்கிறேன்.."

"அவளுக்கு தப்பு செஞ்சா அவகிட்ட மன்னிப்பு கேளு.. என்கிட்ட வந்து ஏன் சீன் போட்டுட்டு இருக்க.?" என்றவன் அவனை தாண்டி செல்ல முயன்றான்.

"அவளுக்கு நான் செஞ்சது தப்புன்னு தெரியும். ஆனா உனக்கு துரோகம் செஞ்சிட்டேன்‌‌. சாரி.. நான் நல்ல நண்பனா நடந்துக்கல.." திரும்பி வந்து அவனின் சட்டையை கொத்தாக பிடித்தான் முத்தமிழ்.

"துரோகம்.!? நீ செஞ்ச துரோகம் சாதாரணமானது கிடையாது. ஈஸ்வர் குணம் சரியில்லன்னு உனக்கு தெரியும். ஆனா நீ அதை என்கிட்ட சொல்லல. அந்த இடத்துலயே நீ என் நண்பனா நடந்துக்கல. என் தங்கச்சியை என் பேரை வச்சி பிளாக்மெயில் பண்ணி கூட்டி போயிருக்க. அதுவும் இரண்டு முறை.! இது சட்டப்படியும் குற்றம். நட்பின் படியும் குற்றம் தெரியுமா.? உன்னை நம்பி என் வீட்டுக்குள்ள விட்டேன். ஆனா நீ என் செல்ல தங்கச்சியோட லைப்பை குளோஸ் பண்ணிட்ட. இப்ப வந்து சாரின்னு நாடகம் ஆடுற.?"

"ரொம்ப பெரிய தப்பு.. மன்னிப்பு கேட்கறேன் தமிழ்.."

"மன்னிப்பு கேட்கற அளவுக்கு நீ நல்லவனா இருக்கலாம். ஆனா மன்னிக்கற அளவுக்கு நான் நல்லவன் கிடையாது. நீ என் தங்கச்சியை வலுக்கட்டாயமா கூட்டி போய் உன் வீட்டுல வச்சிருந்த அதே டைம்ல, உன் தங்கச்சி என்னை லவ் பண்றதா வந்து என்கிட்ட சொன்னா. அவளை கட்டிக்க சொல்லியும் கேட்டா.." என்ற முத்தமிழை அதிர்ச்சியோடு பார்த்தான் கார்த்திக்.

"ஆனா நான் முடியாதுன்னு காரணம் எல்லாத்தையும் தெளிவா சொல்லி விலக்கி வச்சேன்.. நீ என்ன நினைக்கிற, உன்னை பழி வாங்க எங்களுக்கு காரணமே கிடைக்காதுன்னா.? என் தங்கச்சி நினைச்சிருந்தா உங்க மொத்த குடும்பத்துக்கும் சாப்பாட்டுல விஷத்தை வச்சிட்டு வெளியே வந்திருப்பா. அவளை எந்த போலிஸும் பிடிக்காத அளவுக்கு நாங்க கேஸை திசை திருப்பி இருப்போம். ஆனா அவ உன்னை மட்டும்தான் வெறுத்தா. அதனாலதான் உன்னை சுத்தல்ல விட்டுட்டு வந்தா. இதை நான் ஏன் சொல்றேன்னா உன்னோடு ஒப்பிடும்போது என் தங்கச்சி எவ்வளவு நேர்மையானவன்னு சொல்லதான்.!" என்றவன் அவனின் சட்டையிலிருந்த தன் கையை எடுத்தான்.

"அன்னைக்கு நீ மட்டும் என்னை அடிக்காம இருந்திருந்தா இவ்வளவு தூரம் இது வந்திருக்காது.." என்றவனின் காலில் உதைத்தான் முத்தமிழ்.

"என் தங்கச்சியை நீ கடத்திட்டு போவ.. நான் உன்னை கொஞ்சுவேனோ.? அன்னைக்கு உன்னை கொல்லாம விட்டது நான் செஞ்ச ரொம்ப பெரிய தப்பு. கரெக்டா அதே நாள்ல உன் அண்ணன் இந்த ஏரியா இன்ஸ்பெக்டரா வந்து சேர்ந்தது எங்க விதி செஞ்ச தப்பு.. இனி குறுக்க வராதே.! நான் என் தங்கச்சி வார்த்தைக்கு கட்டுப்பட்டு இருக்கேன். அதனாலதான் உன்னை இன்னும் உயிரோடு விட்டு வச்சிருக்கேன்.!" என்றவன் அங்கிருந்து திரும்பி நடந்தான்.

"அவளை ரொம்ப லவ் பண்றேன் தமிழ்.. அவளை இனி எப்பவும் கஷ்டப்படுத்த மாட்டேன். சத்தியம்.! தயவுசெஞ்சி அவளை என்னோடு சேர்த்து வை.." என்று அவன் சொன்ன நேரத்தில் நடந்துக் கொண்டிருந்த முத்தமிழ் திரும்பினான். கார்த்திக்கை நோக்கி மண்வெட்டியை வீசினான்.

கார்த்திக் சட்டென்று விலகி கொண்டதில் மண்வெட்டி அவனை தாண்டி சென்று வயலில் விழுந்தது.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN