காதல் கடன்காரா 36

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
கார்த்திக் தன் வீட்டின் மொட்டை மாடியில் அமர்ந்திருந்தான். வீட்டின் பின்னால் படர்ந்து கிடக்கும் தங்களின் விளைநிலங்களை பார்த்தான்.

அபிராமியின் பிடிவாதம் சில சமயங்களில் அவனுக்கும் எரிச்சலை தந்துள்ளது. 'என் காதலை புரிந்துக் கொள்ளாதவளிடம் நான் ஏன் என் மனதை புரிய வைக்க வேண்டும்.?' என்று கூட இந்த ஒரு வாரத்தில் ஒன்றிரண்டு முறை யோசித்து இருக்கிறான். ஆனால் சுவாதியோடு பேசிவிட்டு வந்த பிறகு அவனுக்கு முன்பை விட அதிகமாக அபிராமியை பிடித்திருந்தது.

கார்த்திக் எப்போதும் கெட்டவன் கிடையாது. அபிராமியின் திருமண நிச்சயத்திற்கு முன்புவரை அவனும் நல்லவனாக நட்பு, குடும்பம், நீதி, நேர்மை என்று இருந்தவன்தான். அவன் தன் வாழ்வில் செய்த முதல் தவறே அபிராமிதான். அவளின் விசயத்தில் இன்று வரையிலுமே அவனின் மனசாட்சி வேலை செய்யவில்லை. தனது தொல்லை அவளுக்கு எரிச்சலை தரும் என்பதை ஏற்க மறுத்து விட்டான்.

அபிராமி தன் வாழ்நாள் முழுக்க பிடிவாதமும், தனியொரு மனநிலை என்று வாழ்ந்தாள். ஆனால் கார்த்திக்கிற்கு அவளோடு மட்டும் இந்த பிடிவாதமும், தனியொரு மனநிலையும் உருவானது.

என்ன நடந்தாலும் அவளை வெறுப்பது அவனால் முடியாது. இது மட்டும் அவனுக்கு தெளிவாக தெரியும்.

"மறுபடியும் அந்த கனவு கன்னியை நினைச்சி பீல் பண்றீரோ.?" மொட்டைமாடிக்கு வந்த புவனாதான் அவனை பார்த்து இதை கேட்டாள்.

"உன்னோட இந்த வாய் உனக்கு எதிரி புவி.." சாந்தமாக சொன்னவனை முறைத்தவள் "உன் பொண்டாட்டியை பத்தி யார் என்ன சொன்னாலும் இப்படிதான் சொல்வ.." என்றாள்.

மொட்டைமாடி கைப்பிடி சுவரின் மீதிருந்து கீழே இறங்கியவன் புவனாவின் அருகே வந்தான். அவளின் தோளை பற்றினான்.

"உன் வார்த்தைகள் மத்தவங்க மனசை கஷ்டப்படுத்துது புவி. இது சரி கிடையாது. இனிய சொல் இருக்கும்போது நீ ஏன் இப்படி பேசணும்.?"

"அட்வைஸா.? எனக்கெல்லாம் நல்ல வார்த்தை பேச தெரியும். ஆனா அது எனக்கு முன்னாடி யார் இருக்காங்கறதை பொறுத்தது.."

கார்த்திக் பெருமூச்சு விட்டான்.

"உன் புகுந்த வீட்டுல உள்ள யாரையாவது உனக்கு பிடிக்கலன்னு நீ இப்படி பேசினா அப்புறம் அது உன் கணவனோடு உனக்கு சண்டையை ஏற்படுத்தும்.." என்றான்.

அவனை விலக்கி தள்ளினாள் புவனா. அவளுக்கு கோபமாக வந்தது. நொந்து போயிருந்த இதயம் அழுதது. அபிராமி முழுதாக இவனை எடுத்தெறிந்துவிட்டு போய்விட்டாள். முத்தமிழுடனான தன் ஒரு தலைக்காதல் இனி கடைசிவரை ஜெயிக்காது என்று அவளுக்கு தெரியும். காதலுக்கு கண்கள் இல்லை என்பார்கள். முத்தமிழை உருகி உருகி காதலித்துக் கொண்டிருந்த புவனாவிற்கு தன் காதல் தோல்வியால் நல் பேச்சும் இல்லாமல் போய் விட்டது. எரிச்சலை, கோபத்தை யாரிடம் காட்டுவது என்றே தெரியவில்லை அவளுக்கு. இவனும் அபிராமியும் இல்லாமல் இருந்திருந்தால் தன் காதல் கை கூட ஒரு சதவீத வாய்ப்பாவது கிடைத்திருக்கும் என்று நம்பினாள்.

"என் வாழ்க்கையை பத்தி நீ கவலைப்படாதே.!" என்றாள் எரிச்சலோடு.

"உன் அண்ணன் நான். அதை ஞாபகத்துல வச்சிக்கோ.. உன் அண்ணியை பத்தியும் தப்பா பேசாதே. எங்களுக்குள்ள ஆயிரம் சண்டை வந்தாலும் நாங்க சேர்ந்துப்போம். அதனால நீ உன் வேலை என்னவோ அதை மட்டும் பாரு.."

"ஒவ்வொரு முறையும் முகத்துல அடிச்ச மாதிரி சொல்ற நீ!" என்று எரிந்து விழுந்தபடி கிளம்பினாள்.

"நீயும் அதைதான் பண்றன்னு உனக்கு புரியுமோ.?" சோகமாக சொன்னவன் மீண்டும் வயலின் திசைக்கு திரும்பினான்.

"எனக்கு வயலை பத்தி ஒன்னுமே தெரியாது. ஆனா அவளுக்கோ நான் வயல்ல வேலை செய்யாததால என் மேல கடுப்பு. என்ன செய்றது.? எதையாவது டிரை பண்ணுவோம்.." தனக்கு தானே தன்னம்பிக்கை வார்த்தைகள் சொல்லிக் கொண்டான்.

நாட்கள் கடந்தது.

அபிராமி தினமும் கல்லூரிக்கு சென்று வந்தாள். வாழ்க்கை மிகவும் நிம்மதியாக செல்வது போலிருந்தது. தோழிகளோடு அரட்டை அடித்தாள். இதயத்தின் பழைய ரணங்கள் அவளின் நினைவுகளை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக அகன்றுக் கொண்டிருந்தது. கார்த்திக் வயலில் பண்ணையம் செய்கிறான் என்று அவளுக்கு செய்திகள் வந்தது. அவளுக்கு அவனை பற்றிய எந்த விசயங்களிலும் அக்கறை இல்லை. அவனை மீண்டும் பார்க்காமல் இருப்பதே திருப்தி என்று நினைத்தாள்.

"அவனை தூக்கிடட்டுமா.?" என்று சில நாட்கள் முன்பே கேட்டார் தாத்தா.

"வேணாம் தாத்தா. சின்ன சின்ன பிரச்சனைகளை கூட நானே சமாளிக்கலன்னா எப்படி.? அவனை கொல்லணும்ன்னு எனக்கும் வெறிதான். அவன் சூஸைட் பண்ணிக்கிட்ட போது கூட கடுப்பு தீரல. அவன் பைத்தியம் போல திரும்பியும் கூட கோபம் குறையல. ஆனா அவனெல்லாம் ஒரு ஆளான்னு எண்ணம் வந்துடுச்சி. அவன் எப்படியோ போகட்டும்.. இனி என்னை மட்டும் விட்டுட்டா சரி.." என்றாள்.

ஆனால் அடுத்த இரண்டாம் வாரம் அவள் முன் வந்து நின்றான் கார்த்திக். அவளிடம் பூச்செண்டை நீட்டினான். அவனை ஏற இறங்க பார்த்தாள் அபிராமி. அண்ணனோடு முதல் நாள் சந்தித்தபோது இருந்த அதே இயற்கை புன்னகையோடு நின்றுக் கொண்டிருந்தான்.

அபிராமி அவனை தாண்டி நடந்தாள்.

"அபிராமி ப்ளீஸ்.." என்றவனை திரும்பி பார்த்து முறைத்தவள் "உனக்கு கொஞ்சமாவது சூடு சொரணை இருந்து, உன் சாப்பாட்டுல கொஞ்சமாவது உப்பு போட்டு சாப்பிட்டா..‌ இனி என் பின்னால வராதே.!" என்று எரிந்து விழுந்தாள்.

"காதல்ல இந்த கருமத்தையெல்லாம் பார்த்தா இங்கே ஆணும் பெண்ணும் சன்னியாசியா மட்டும்தான் இருக்க முடியும்.!" என முனகியவன் "என்னோடு ஒரு நல்ல தோழியா இருக்க விருப்பம் இல்லையா அபிராமி.?" என்று கேட்டான்.

நக்கல் சிரிப்போடு அவன் பக்கம் திரும்பியவள் "தோழியா.? மரியாதையா ஓடிடு.!" என்றாள்.

"என் மேல ரொம்ப லவ்வா.? அதனாலதான் நட்பா பழகினா ஆசை தாங்காம ஐ லவ் யூன்னு சொல்லிடுவன்னு பயப்படுறியா.?"

அபிராமி நெற்றியை பிடித்தபடி அவன் பக்கம் திரும்பினாள். அவனின் வலது கால் முட்டியின் மீது ஒரு உதையை தந்தவள் "இந்த சாம்பிராணி போடுறது, சால்ஜாப்பு பண்றதெல்லாம் என்கிட்ட வேணாம். உன்னை பாவம் பார்த்து உயிரோடு விட்டிருக்கேன். என் வழியில வராதே.!" என்றவளை நடக்க விடாமல் மீண்டும் மறித்தான் அவன்.

"என்னால முடியாது அபிராமி. நீதான் லவ்வை வர வச்ச.! ஒரு வருசம் நீ ஏமாத்தின.! நான் ஒரு வருசமும் ஏமாந்து போனேன். உனக்காக மாடி ஏறி குதிச்சேன். உனக்காக பைத்தியமா திரிஞ்சேன். இனியும் எப்படி உன்னை விடுவேன்.? ஐ வாண்ட் யூ.!" என்றவன் அவளின் தாடையை பற்றினான்.

"தொடாத.!" கண்களை மூடி எரிச்சலோடு சொன்னாள்.

கையை பின்னுக்கு இழுத்துக் கொண்டான் கார்த்திக்.

"ஓகே.. சாரி.!" என்றான்.

"பழசை முழுசா மறந்துடலாம். என் லவ்வை ஏத்துக்கோ.!" என்றான் கண்கள் சிமிட்டி.

அவன் நீட்டிய பூங்கொத்தை வாங்கியவள் அவன் மீதே அதை விட்டெறிந்தாள். பூங்கொத்தை சட்டென்று கைகளில் பற்றிக் கொண்டான் கார்த்திக்.

"பகையே தீராத இடத்துல நீ புது பூச்செடி நட பார்க்கற. உன்னால போன எங்க குடும்ப மானமும், என் உடைஞ்ச மனசும் எப்போதும் சரியாகாது.!" என்றாள் ஆக்ரோசமாக.

"உன் குடும்ப மானம் போனதுக்கு நான் காரணம்தான். இல்லன்னு சொல்லல. ஆனா அதுக்கு நீயும்தான் காரணம். முன்ன பின்ன அதிகம் தெரியாதவன் செத்தா உனக்கு என்னடி போகுது, நீ என்னத்துக்கு கூட வர.? அன்னைக்கு நான் சொன்னதை நல்லா யோசனை பண்ணி பாரு.! நான் லெட்டர் எழுதி வச்சிட்டு செத்தா உன்னை யாரும் நம்ப மாட்டாங்கன்னு நான் சொன்னேன். ஆனா அதை நீ நம்பின.! நீ உன் குடும்பத்தை முழுசா நம்பினவளா‌.? இல்ல உன் குடும்பம் உன்னை முழுசா நம்புதுன்னுதான் நம்பியவளா.? என் சாவை கண்டு உனக்கு எப்போதும் பயம் கிடையாது. ஆனா நான் செத்தா நீ என்னை காதலிச்சன்னு உன் குடும்பமும் உன் வருங்கால அந்த பரதேசி நாய் புருசனும் நம்பிடுவானோன்னு பயந்துட்ட.! 'என் குடும்பம் என்னை நம்பும். நீ கிளம்புடா.!'ன்னு அன்னைக்கு நீ சொல்லல.! ஒருவேளை நிஜமாவே உன் குடும்பம் உன்னை நம்பலையோ என்னவோ.?"

அபிராமி கண்கள் சிவக்க அவனை வெறித்தாள். அவளின் குடும்பம் அவளை முழுதாக நம்பியது. அவள் அந்த குழப்ப நேரத்தில் இவன் சாகட்டும் என்று விட்டுவிட்டு குடும்பத்தை நோக்கி செல்லாதது இவளின் குறைபாட்டில் ஒன்றாகி விட்டது.

'அன்னைக்கு இவன் சாகட்டும்ன்னு விட்டிருந்தா என்ன ஆகியிருக்கும்.? கண்டிப்பா என் குடும்பம் என்னை நம்பியிருக்கும். ஈஸ்வர் என்னை நம்பலன்னாலும் எனக்கு பாதிப்பு இல்ல. கல்யாணம் இதே போலவே நின்னிருக்கும். அப்பவும் என்னை ஊர் தப்பாதான் பார்த்திருக்கும்.. ஆனா.. ஒருவேளை இவன் குறுக்கவே வராம இருந்திருந்தா இந்த பிரச்சனை எதுவுமே வந்திருக்காதே.!' என்று யோசித்தவள் கடுப்போடு அவனை பார்த்தாள்.

"அடுத்து இன்னொன்னு.! அன்னைக்கு நான் வரலன்னா நீ ஈஸ்வரைதான் கல்யாணம் செஞ்சிட்டு இருந்திருப்ப.! அந்த நாயோட குணம் என்னன்னு உனக்கும் நல்லாவே தெரியும். அவனை போல ஒருத்தன்கிட்டயிருந்து உன்னை காப்பாத்தி விட்டிருக்கேன் நான்.!" என்றவனின் சட்டை காலரை பற்றியவள் "என்னடா படம் ஓட்டுறியா.? அவனை கட்டியிருந்தா அவன் எனக்கு செட்டானவன் இல்லன்னு தெரிஞ்ச அடுத்த நாளே தாலியை தூக்கி வீசிட்டு வந்திருப்பேன்.!" என்றாள் பற்களை அறைத்தபடி.

கார்த்திக் அவளின் கையை மெள்ள விலக்கி விட்டான். அருகில் நின்றவளின் இதழ்களின் மீது அவனின் பார்வை விழுந்தது. அபிராமி எரிச்சலோடு பின்னால் நகர்ந்து நின்றாள்.

"அதேதான்.! அவனை கட்டியிருந்தாலும் உனக்கு லைஃப் வீணாதான் போயிருக்கும். என்னை கட்டியதாலும் பர்ஸ்ட் கொஞ்ச நாள் வீணாதான் போச்சி.! நீ எனக்கு மட்டும் மன்னிப்பு கொடுத்து என்னை காதலிச்சிதான் ஆகணும்ன்னு நான் கட்டாயப்படுத்தல.! ஆனா உனக்குள்ள நீயே ஒப்பீடு பண்ணி பாரு.! அவனை விட நான் பெஸ்ட். இது மெயின் பாயிண்ட். அட்லீஸ்ட் என் மேல உனக்கு லஸ்டாவது இருக்கு. இது இரண்டாவது பாயிண்ட். நீ இனி புதுசா ஒருத்தனை கல்யாணம் செஞ்சாலும் அவனை உனக்கு ஏத்தவனா மாத்தி, அவனை நீ லவ் பண்ண வைக்கிறதுக்குள்ள உனக்கு வயசே ஆகிடும்.! ஆனா நான் ரெடிமேடா உனக்கும் உன் மனசுக்கும் மேட்சாகுற மாதிரி நிற்கறேன்.! நீ என்னை சூஸ் பண்றது உனக்குத்தான் நல்லது.!

இது மட்டுமில்லாம இன்னொரு பாயிண்டும் இருக்கு. நீ என்னை செப்பனிட்டுட்ட.! ஆனா அடுத்து இன்னொருத்தனை கல்யாணம் பண்ணி அவன் சரியில்லன்னு போன பிறகு அவனையும் டைவர்ஸ் பண்ணிட்டு இன்னொருத்தனை தேடி போக முடியாது நீ.! உன் குணம் எனக்கும் தெரியும்.! உன் பொசசிவ்னெஸ்க்கு நீ இவ்வளவு நாள் என்னை ப்ரியா விட்டுட்டு இருப்பதே கஷ்டம். இதுல இன்னொன்னு இன்னொன்னுன்னு போறது உன்னையே நீ ஏமாத்திக்கறதை போல.! தப்பு செய்யாத மனுசன் எவனும் இல்ல.! அதுக்காக முழுசா மன்னிக்க தேவையில்ல நீ.! நாளைக்கு குழந்தை பிறந்தா அதை பார்த்துக்கற பொறுப்பை என்கிட்டயே தந்துடு, பனிஷ்மெண்ட் மாதிரி."

அபிராமி அவன் சொல்வதையெல்லாம் சிலை போல் நின்றுக் கேட்டாள்.

"அவ்வளவுதானா.?" என்றாள் கடைசியாக.

"முதல் முயற்சி தோல்வியா.?" என்று நொந்தவன் "மீதியை நாளைக்கு வந்து சொல்றேன்.." என்றான்.

முறைத்து நின்றவளின் கரத்தில் பூங்கொத்தை திணித்தவன் "திருந்திய மனுசனை போல ஒரு ரத்தினத்தை நீ எங்கேயும் பார்க்க முடியாது.! உன் ஈகோவால உன் லைப்பை நீயே கெடுத்துக்காதே.! உன் வெல்விஷரா நினைச்சி இதை நான் சொல்றேன்.! நல்லா யோசி. நம்பி வா. சேர்ந்து வாழ்வோம். நிச்சயம் உனக்கு என்னை பிடிக்கும்.!" என்றான். அவள் பதில் சொல்லாமல் நிற்கும்போதே அங்கிருந்து சென்றான்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN