மௌனங்கள் 26

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
புவின் POV

இத்தோடு நான்கு நாட்கள். சொன்னால் நம்ப மாட்டீர்கள். அரையாய் செத்து விட்டேன் அவள் இல்லாமல்‌. இப்படி என்னை கொல்வதற்கு பதிலாக அவளே அவளின் கையால் என்னை கொன்றிருக்கலாம்.

அவள் எங்கிருக்கிறாள் என்று இதுவரையிலுமே தெரியவில்லை. இந்த நாட்டில் உள்ள எவனையும் நான் நம்ப மாட்டேன். இன்னேரம் அவள் இறந்து கூட போயிருக்கலாம். இந்த எண்ணங்கள்தான் என்னை கொன்றுக் கொண்டிருக்கின்றன.

அரை குறையாய் உண்டு விட்டு எனது அறைக்கு வந்தேன். தம்பி அழைத்தான்.

"ஹலோ.." என்றேன் எரிச்சலாக.

"இன்னைக்கு நைட் நீ அங்கிருந்து கிளம்ப போற.." என்றான்.

"நான் வரமாட்டேன். குழலி இல்லாம எங்கேயும் வரமாட்டேன்.." ஒரே முடிவாக சொன்னேன்.

"அவளை கொல்ல நான் ஆள் அனுப்பிட்டேன்னு முன்னேயே சொன்னேனே.."

"ரொம்ப தப்பு பண்றடா.! அவளை கொல்றதும் நீ என்னை கொல்றதும் ஒன்னேதான்.!" என்று நான் சொன்னதும் சத்தமாக சிரித்தான் அவன்.

"உன்னை கொல்ல ஆசைப்பட்டுதானே அவ போலிஸோடு சேர்ந்திருக்கா. அப்புறம் ஏன் நீ ஓவரா கத்துற.? அவளை கொல்ல மட்டும்தான் நான் ஆள் அனுப்பினேன். ஆனா அவளை கொடூரமா கொல்ல தங்சேயா ஆள் அனுப்பி இருக்காரு.."

ஒருநொடி மூச்சு நின்று விட்டது எனக்கு.

"உன்னை பத்தியும் அவளை பத்தியும் நான் தங்சேயாக்கிட்ட சொல்லிட்டேன்.! நீ உன் பொருட்கள் எல்லாத்தையும் பேக் பண்ணி தயாரா இரு.." என்றவன் போனை வைத்து விட்டான்.

தலையை பிடித்தபடி தரையில் அமர்ந்தேன். இந்த ஒரு வாரமாக நான் குழம்பிக் கொண்டிருப்பது போல என்றுமே குழம்பியது இல்லை. இதற்கு பதிலாக அன்றே நான் பட்டினியாக இறந்திருக்கலாம் என்று தோன்றியது.

குழலி.! அவள் ஒரு தேனீ.! காதலால் கொட்டி விட்டாள். ஒற்றை முறை கொட்டியதற்கே உயிர் தடுமாறி விட்டேன் நான்.

என்னால் இதற்கு மேலும் தாமதிக்க முடியாது. நான் சட்டென்று ஒரு முடிவை எடுத்தாக வேண்டும். இல்லையேல் குழலியின் மரணம் பயங்கரமானதாக மாறி விட கூடும்.

கடந்த நான்கு நாட்களாகவே தனசேகரின் மனைவியை தேடிக் கொண்டிருக்கிறேன். ஆனால் அவளை கண்டுபிடிக்க முடியவில்லை. பெரிய அரசியல்வாதி ஒருவனை கடத்துதலாமா என்று கூட யோசித்து பார்த்தேன்.‌ ஆனால் எதுவுமே சரியாக வரவில்லை.

இந்த விசயம் ஊடகத்திற்கு தெரிய கூடாது என்பதில் இவ்வளவு நாளாக நானும் கவனமாக இருந்தேன். ஆனால் இனி அப்படி இருக்க மாட்டேன். யாருக்கு வேண்டுமானாலும் என்னை பற்றி தெரியட்டும். எனக்கு இன்று இரவுக்குள் குழலி வேண்டும்.

"சார்.." புது டிரைவர் அவசரமாக எனது அறைக்குள் ஓடி வந்தான். என்னை கண்டவன் தயங்கி வாசற்படியிலேயே நின்று விட்டான். சோகமான மனிதனை இதற்கு முன் இவன் பார்த்ததே இல்லையா.?

"என்ன.?"

"மேடம் இருக்கும் இடம் தெரிஞ்சிடுச்சி.!" அவசரமாக எழுந்து நின்றேன்.

"எங்கே.?"

"தனசேகரனும் மத்த அதிகாரிகளும் பயன்படுத்தும் சொந்த உபயோக கட்டிடம்.. அங்கேதான் மேடம் இருக்காங்க. இங்கிருந்து நூத்தியிருபது கிலோமீட்டருக்கும் மேல.!"

"வா போகலாம்.." என்று வெளியே நடந்தேன். மறித்து நிறுத்தினான் அவன்.

"நீங்க போக முடியாது சார். நீங்க வெளியே போனா நிச்சயம் யார் கண்ணிலாவது படுவிங்க.! நீங்க மாட்டிப்பிங்க. நம்ம குழுவும் மாட்டிக்கும்.!"

"அதுக்காக நான் அவளை விட்டுட முடியுமா.?" கோபத்தோடு கேட்டேன்.

"யோசிக்கலாம். பொறுங்க சார். அந்த கட்டிடத்தை கண்காணிக்க சொல்லி இருக்கேன்.." என்றான்.

என்னால்தான் பொறுமையாக இருக்க முடியவில்லை.

தன சேகர் POV

அவனை நெருங்கி விட்டோம். ஆனால் முழுதாக தொடவில்லை. இடையில் சிறு வலை தடுத்துக் கொண்டிருந்தது.

கைகளில் கிடைத்த சி.சி.டி.வி ரெக்கார்ட் வீடியோவையெல்லாம் பார்த்ததில் வீர ராகவனும் புவினும் சேர்ந்து சுற்றிய காட்சிகள் கிடைத்தன. வீர ராகவனும் வசந்தியும் சேர்ந்து பேசியதற்கான ஆதாரங்களும் கிடைத்தன.

இப்போது அவர்கள் இருவருமே இல்லை. அடுத்து யாரோ ஒருவர்தான் அவனுக்கு பாதுகாப்பு தந்திருக்க வேண்டும். வீர ராகவனுக்கும் வசந்திக்கும் பொதுவில் உள்ள ஒற்றுமைகளை தேடினோம்.

இருவரும் அடிக்கடி வெளியூர் சென்று வந்துள்ளார்கள். அதுவும் ஒரே நாளில். இவர்கள் தீவிரவாத குழுவோடு உரையாட வேண்டி கூட சென்றிருக்கலாம் என்று சொன்னான் விஷால். அவனே அதை பற்றி விசாரித்தான்.

இவர்கள் இருவரும் சென்ற ஐந்து பயணங்களின் பயணிகள் பட்டியலை சேகரித்து ஒற்றுமையை தேடிய விஷால் "இதுல பத்து பேர் இந்த அஞ்சி முறையும் அதே பிளைட்ல அதே டைம்ல டிராவல் பண்ணி இருக்காங்க சார். இந்த அஞ்சி மட்டுமில்ல எல்லாத்திலும் இதேதான்.." என்றான்.

"பத்து பேரையும் விசாரிக்கலாம் விஷால்.."

"யெஸ் சார்.." என்று கிளம்பியவன் ஐந்தாறு மணி நேரத்தில் திரும்பி வந்தான்.

"ஒன்பது பேரை தூக்கியாச்சி சார். தாமுங்கற ஒருத்தனை மட்டும் நாலு நாளா காணோம். அவனுக்கும் ஸ்டேசன் உடைச்ச பசங்களுக்கும் கனெக்சன்னு கண்டுபிடிச்சிருக்கேன். நிச்சயம் அவன்தான். அவனை பிடிச்சா புவினை பிடிச்சடலாம்.." என்றான்.

குழலி POV

இத்தோடு நான்கு நாட்கள். புவின் என்ன செய்கிறான் என்று தெரியவில்லை. அவன் எங்கிருக்கிறான் என்றும் தெரியவில்லை. அவனை பற்றி அறியாமல் போனதற்காக மிகவும் வருந்தினேன்.

இந்த வீட்டில் பாதுகாப்பாக இருந்தேன் நான். அதிகாரிகள் அனைவரும் என்னிடம் புன்னகை மாறாமல்தான் நடந்துக் கொண்டனர். அது இன்னும் சில நாட்களுக்கு மட்டும்தான் என்று எனக்கும் தெரியும்.

பெண் அதிகாரி ஒருவரிடம் கேட்டேன். எனக்கு தூக்கு உறுதி என்று சொல்லி விட்டார். மனம் லேசாக வருந்தியது. ஆனால் குற்ற உணர்ச்சி அவ்வளவாக இல்லை.

நேற்று மாலையிலிருந்து லேசாக காய்ச்சல். அதிகம் அழுததின் காரணம். நேற்று இரவே மாத்திரை விழுங்கினேன். ஆனால் சரியாகவில்லை.

காலையில் காய்ச்சல் அதிகரித்து விட்டது. நான் தங்கியிருந்த அறைக்கு கொண்டு வந்து உணவை தந்து சென்றான் ஒரு இளைஞன். என்னை கோபத்தோடு வெறித்தான். நான் யாரென்று அவனுக்கு தெரிந்திருக்கும் போல.

உணவை உண்டேன். ஆனால் குடிக்க தண்ணீரை காணவில்லை. கைகளை குளியலறையில் சுத்தம் செய்துக் கொண்டேன். தண்ணீர் குடிக்க கிளம்பினேன். காய்ச்சலால் நாக்கு வேறு வறண்டு விட்டது.

கொஞ்சமாக மயக்கம் வரும் போல இருந்தது. துணைக்கென்று சுவரை பிடித்துக் கொண்டேன்.

ஹாலில் அதிகாரிகள் அனைவரும் கூடியிருந்தார்கள்‌. அவர்களை தாண்டி கிச்சனுக்கு செல்ல வேண்டும். அவர்களின் உரையாடலையும் கெடுக்க விரும்பவில்லை நான்.

குழப்பத்தில் நான் நின்றிருந்த நேரத்தில் "இந்த பொண்ணை நடுரோட்டுல ஓட விட்டு சுட்டாதான் அவன் நம்ம கைல கிடைப்பான்.." என்றார் ஒருவர்.

என்னையா சொல்கிறார்கள்.? கொஞ்சம் பயமாக இருந்தது. கண்ணீர் கண்களில் துளிர்த்ததும் உண்மையே. ஆனால் அதே வேளையில் இப்படியாவது அவனை பிடித்து விட கூடாதா என்ற ஏக்கமும் வந்தது.

"மிருகம் மாதிரி பேசாதிங்க சார்.. அந்த பொண்ணு நம்மை நம்பி வந்திருக்கா. ஒன்னுமே தெரியல அவளுக்கு. நான் காரணமில்லாமலா இவளை பத்தி பிரெஸ்ஸுக்கு கூட சொல்லாம இருக்கேன்.?" கோபத்தோடு கேட்டார் தன சேகர்.

"உங்க கைல அதிகாரம் இருக்குங்கற காரணத்துக்காக இவ்வளவு அசால்டா இருக்கிங்க நீங்க! அவன் நம்ம ஒட்டு மொத்த நாட்டுக்குமே எதிரி. அவனை பிடிக்காம தள்ளி போடுற ஒவ்வொரு நாளுமே நமக்கும் நாட்டுக்கும் பாதிப்பை தரும்.." என்றார் முன்பு சொன்னவரே.

"நாங்களும் எல்லா முயற்சியையும் செஞ்சிட்டுதான் இருக்கோம் சார். புவினுக்கு உதவி பண்ற ஆளை நெருங்கிட்டோம். ஆனா இப்ப அவனும் தலைமறைவு. சீக்கிரம் கண்டுபிடிச்சிடலாம்.." என்றார் விஷால்.

"எனக்கு உங்களோட ஆட்டமே புரியல விஷால். அந்த பொண்ணால நமக்கு ஒரு பிரயோசனமும் இல்ல.. அவளை கொன்னாலாவது அவன் வெளியே வருவான்.."

தன சேகர் என்னவோ சொல்ல நினைத்தார். ஆனால் அதற்கும் முன் என்னை பார்த்து விட்டார்.

"என்னம்மா.?" என்றார்.

கலங்கும் கண்களை மறைக்க தரையை பார்த்தேன்.

"தா.. தாகம் சார்.."

விஷால் வேகமாய் கிச்சனுக்கு சென்றார். தண்ணீரோடு திரும்பி வந்தார். புன்னகையோடு தண்ணீரை நீட்டியவர் என் கண்களை கண்டு திடுக்கிட்டார். ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.

அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். நான் எனது அறைக்கே திரும்பி வந்தேன். வெளியே யாருக்கும் சொல்லாமல் இவர்கள் என்னை பாதுகாத்துக் கொண்டிருக்கிறார்கள். நான் இவர்களுக்கு தடைக்கல்லாய் மாறி விட்டேன்.

பத்து நிமிடங்கள் கடந்தது. விஷால் அறைக்குள் வந்தார்.

"ஹாய் சிஸ்டர்.. ஹவ் ஆர் யூ.?" தயக்கமாக கேட்டபடி வந்தவர் எனக்கு முன்னால் இருந்த நாற்காலியில் அமர்ந்தார்.

"நல்லாருக்கேன் சார்.." கடன் வாங்கியது போல வேறு விதமாக கேட்டது குரல்.

சந்தேகமாக பார்த்தார். "என்ன பிரச்சனை.?" என்றார்.

"ஒன்னுமில்ல சார்.."

"பிரச்சனை இருக்குன்னு தெரியுது சிஸ்டர். அவர் சொன்னதை மனசுல வச்சிக்காதிங்க. அவர் அவசரத்துல குழம்புறாரு. நாங்க புவினை பிடிச்சிடுவோம்.."

"தேங்க்ஸ் சார்.." என்றேன் கண்கள் பனிக்க.

குழப்பமாக பார்த்தவர் "முகமெல்லாம் ஒரு மாதிரி இருக்கு.." என்றார். என் நெற்றியை தொட்டு பார்த்தார்.

"காய்ச்சல்.. டாக்டரை கூப்பிடுறேன்.." அவசரமாக போனோடு எழுந்தார்.

"வேணாம் சார்.. நான் மாத்திரை சாப்பிட்டுக்கிறேன்.." என்றேன். என் வார்த்தையை அவர் கேட்கவில்லை.

அரை மணி நேரங்களுக்கு பிறகு பெண் மருத்துவர் ஒருத்தர் என் அறைக்குள்ளே வந்தார்.

விஷாலை வெளியே போக சொன்னார். ஏன் என கேட்ட விஷாலிடம் செக்கப் என்று சொல்லி விட்டார்.

விஷாலின் முன்னிலையில் ஊசியை போட்டுக் கொள்வதில் எனக்கும் விருப்பம் இல்லை. ஊசி போட்டு கொள்வது சரிதானா என்றும் தெரியவில்லை. எனது குழப்பத்தில் எனக்கு எதுவுமே விளங்கவில்லை.

அந்த மருத்துவர் கதவை தாழிட்டு விட்டு வந்தார். என்னை முறைப்பாக பார்த்தபடி தன் பாக்கெட்டிலிருந்த போனை கையில் எடுத்தார்.

என்னிடம் போனை நீட்டினார். குழப்பத்தோடு போனை பார்த்தேன். திரையில் புவின் இருந்தான். என்னை கண்டதும் நிம்மதி பெருமூச்சு விட்டபடி அமர்ந்திருந்த இருக்கையில் தலையை சாய்த்தான்.

டாக்டரை பயத்தோடு பார்த்தேன் நான். இங்கிருந்து செல்ல வேண்டும். எப்படியாவது விஷாலை அழைத்தாக வேண்டும் நான். "வி.." எனது வாயின் மீது டேப்பை ஒட்டினார் அந்த டாக்டர். நான் ஓட முயன்ற நேரத்தில் என் கைகளை பின்னால் சேர்த்து டேப்பால் கைகள் இரண்டையும் சுத்தினார். எப்போது அதையெல்லாம் செய்தார் என்று புரியவேயில்லை. நான் ஓட இயலாதபடி என் தோளில் இறுக்கமாக கையை பதித்தார். என்னால் அசையவே முடியவில்லை. அவரை உதைத்து விட்டு செல்ல வேண்டும் என்று வெறி வந்தது. ஆனால் அதை செய்ய உடம்பில்தான் தெம்பில்லை.

விம்மலை தொண்டையிலேயே அடக்கிக் கொண்டு செல்போன் திரையை பார்த்தேன். புவினின் கண்கள் கலங்கி இருந்தது. போனின் திரையிலேயே என்னை அணைத்துக் கொள்ள முயல்வது போல மின்னியது அவனின் கண்கள்.

அவன் எங்கள் நாட்டின் எதிரி என்பதை நொடிக்கொரு முறை நினைவுப் படுத்திக் கொண்டேன்.

தலை முடியை கோதியபடி என்னை பார்த்தவன் "சாரி குழலி! போலிஸ் என்னை நெருங்கிட்டு இருக்கு.! மரணம் உன்னை நெருங்கிட்டு இருக்கு! என்னால உன்னை காப்பாத்த முடியல!" என்றான்.

அவன் சொன்னது புரியவில்லை. அவனின் பார்வையை டாக்டரிடம் சென்றது. டாக்டர் என் வாயின் மீதிருந்த டேப்பை கொஞ்சமாக பிரித்தார்.

"நாம இனி சந்திக்க வாய்ப்பே இல்ல குழலி!"

"எனக்கும் அதுதான் வேணும் புவின்.. உன்னை நான் காதலிச்சது தப்பு!" விம்மியபடி சொன்னேன் நான். உடனே எனது வாயின் மீது டேப்பை ஒட்டினாள் அந்த மருத்துவர்.

மீண்டும் மருத்துவரை பார்த்தான் நான். பிறகு என் பக்கம் பார்த்தான். "நான் இங்கிருந்து கிளம்பறேன். உன்னை கொல்ல நாலாபுறமும் ஆட்கள் வந்துட்டு இருக்காங்க.! உன் மரணம் கொடூரமானதா இருந்தா நிச்சயம் என்னால அதை தாங்க முடியாது.! உன்னை என்னால காப்பாத்த முடியாத சூழல். அதுக்கு காரணம் நீயேதான்.! நீ மட்டும் வீட்டை விட்டு போகாம இருந்திருந்தா இந்த பிரச்சனை எதுவும் வந்திருக்காது.! என் காதலுக்கு நான் செய்ய கூடிய அதிகப்பட்ச உதவியே வலியில்லா மரணத்தை உனக்கு தருவதுதான்!" என்றான்.

எனக்கு புரியவில்லை. என் கையில் ஊசியின் முனை இறங்கியது. மருத்துவரை பார்க்காமல் புவினை பார்த்தேன் நான். அவன் கண்களை துடைத்துக் கொண்டான்.

"லவ் யூ குழலி.! செத்தாலும் உன்னை மறக்க மாட்டேன்.! நீ எல்லாமும்.! நீ தங்சேயாவை விட எனக்கு முக்கியமானவள்.! உன்னை போன்ற பொக்கிஷம் கிடைச்சது என்னோட வரம்.! ஆனா உன்னோடு காலத்துக்கும் சேர்ந்து வாழ முடியாம போச்சி.! நிச்சயம் உன்னை தவிர வேறு யாருமே என் மனசுல அந்த இடத்தை பிடிக்கவே முடியாது.! இது என் காதலின் மீது சத்தியம்.!" என்றான்.

எனக்கு சிரிப்பாக வந்தது. கூடவே மயக்கமும் வந்தது. கண்களை மூடி திறந்தேன். உடலின் வலு குறைந்துக் கொண்டே இருந்தது. அந்த மருத்துவர் என் கையின் கட்டை அவிழ்த்தாள்.

"நானும் உன்னை லவ் பண்றேன் புவின்.! எத்தனை ஜென்மம் எடுத்தாலும் என் மனசுல நீ ஒருத்தன் மட்டும்தான்.! ஆனா தயவு செஞ்சி போலிஸிடம் சரணடைஞ்சிடு.! என் மக்களை கொல்லாதே! உன் பாவங்களை அதிகமாக்கிட்டே போகாதே.! ப்ளீஸ்.." என்றேன். போன் என்னை விட்டு தூரமாக செல்வது போல இருந்தது.

கட்டிலில் விழுந்தேன். கூரை தெரிந்தது. மீண்டும் போன் என் கண் முன் வந்தது‌. புவின் விம்மி அழுதான்.

ஏன் அழுகிறான். நான் இறப்பதற்கா.? அப்படியானால் இத்தனை நாள் இறந்தவர்களுக்காய் யார் அழுவது.?

காலம் அழிகையில் சிவிலிசேசனை கூட அழிக்க முடியும். ஆனால் காதல் தரும் வலியை அழிக்க முடியாது என்று இவனுக்கு யார் எடுத்து கூறுவார்கள்.? அவனின் அழுத விழிகளை பார்த்தபடியே கண்களை மூடினேன் நான்.

என் மூடிய இமைகளில் இருந்து வழிந்த கண்ணீர் சூடாக காது மடல்களை தொட்டதை கடைசி கடைசியாக உணர்ந்தேன்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN