காதல் கடன்காரா 37

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அதிகாலை நேரம். அபிராமியின் தாத்தா காலை நேர உடற்பயிற்சிக்காக கிளம்பினார்.

சென்றமுறை அவரை சோதித்த அவர்களின் குடும்ப மருத்தவர் அவரின் உடல் நலம் நீடித்து நிற்க வேண்டும் என்பதற்காக தினம் காலை அவரை நடக்க சொல்லி விட்டார்.

அரை இருட்டில் தென்பட்ட சுற்று புறத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டே நடந்தார் அவர்.

"நடைப்பயணமா தாத்தா.?" என கேட்டபடி எங்கிருந்தோ வந்த கார்த்திக் அவரோடு இணைந்து நடந்தான்.

நடையை நிறுத்தி விட்டு அவனை முறைத்த தாத்தா "உனக்கு இங்கே என்னடா வேலை பொறுக்கி பையலே.?" என்று எரிச்சலோடு கேட்டார்.

கார்த்திக் சிறு சிரிப்போடு அவரின் கன்னம் கிள்ளினான். "கோபத்துல நீங்களும் அபிராமியை போலவே க்யூட்டா இருக்கிங்க.. ஸ்வீட் தாத்தா.." என்று அவரை கொஞ்சினான்.

தாத்தாவிற்கு கோபத்தில் ரத்தம் கொதித்தது.

"என் பேத்தியை பத்தி நீ ஏன்டா பேசுற.?"

"புருசன் நான் பேசாம வேற யார் தாத்தா பேசுவாங்க.."

தாத்தாவிற்கு பி.பி எகிறுவது போல இருந்தது.

"யார்க்கு யாருடா தாத்தா.? காலங்காத்தால வந்துட்டான். ச்சீ! தூர போ.." என்று கடுப்போடு சொன்னவர் அவனை விட்டு விலகி நடந்தார்.

"ஆயிரம் காலத்து பயிரை அழிக்க நினைக்காதிங்க தாத்தா.! உங்க பேத்திதான் சின்ன பொண்ணு. விவரம் பத்தல. நீங்க நாலும் தெரிஞ்சவர்தானே.?"

"கிழவன்தானேன்னு நினைச்சிட்டு இருக்காத. பல்லை உடைச்சிடுவேன்.!" என்றவர் வேகமாக நடக்க ஆரம்பித்தார்.

கார்த்திக் அவரின் பின்னால் ஓடினான்.

"தாத்தாவுக்கு செம எனர்ஜி. பாட்டி சமையல்தான் காரணமா இருக்கும். அந்த சமையல் ரகசியத்தை அபிராமிக்கும் சொல்லி தர சொல்லுங்க. நானும் நாளைக்கு உங்களை போலவே. ஸ்ட்ராங்கா இருக்கேன்.!" என்றவன் ஓட்டமாக ஓடி அவரோடு சேர்ந்து நடந்தான்.

"ஒருமுறை உன் கை காலை உடைச்சி விட்டது போதாதா.? மறுபடியும் ஏன் எங்களை தொல்லை பண்ற.? சனியம் தொலைஞ்சதுன்னு என் பேத்தி இப்பதான் நிம்மதியா இருக்கா.. உனக்கு அது பொறுக்கலையா.?" எரிந்து விழுந்தவரின் முன்னால் சென்று நின்றவன் "சனியம்ன்னு நீங்களே சொல்லிட்டிங்க. அப்புறம் எப்படி அது தொலையும்.?" என்று கேலியோடு கேட்டான்.

"என்னை பத்தி நானே பெருமையா சொல்ல கூடாது தாத்தா. ஆனாலும் என்னை பத்தி சொன்னாதானே உங்களுக்கும் தெரியும். அதனால சொல்றேன் கேளுங்க. நான் இருபத்தி நாலு கேரட் தங்கம். என் மனசு வைரத்தை விட மதிப்புடையது. என் பாசம் நேசமெல்லாம் வானமும் பூமியும் மாதிரி. அதையெல்லாம் கணக்குலயே சொல்ல முடியாது. உங்க பேத்திக்கு என்னை மாதிரி ஒரு மாப்பிள்ளை எங்கே தேடினாலும் கிடைக்க மாட்டான். அவளுக்கும் எனக்கும் சின்னதா சண்டை. அதையெல்லாம் பெருசு பண்ணாதிங்க.. நான் அவளை சமாதானம் செஞ்சிக்கிறேன்.." என்றவனின் தொடையின் மீது சிறு கல் ஒன்று வந்து மோதியது.

தன் மீது கல்லை உதைத்து எறிந்த தாத்தாவை வியப்போடு பார்த்தவன் "ஏன் தாத்தா இப்படி.?" என்றான் கவலையோடு.

"பொறுக்கி.. உன் நடிப்பை என்கிட்டயே காட்டுறியா.? கொன்னுடுவேன். காலை நேரத்துல கடுப்ப கிளப்பாம ஓடிடு.! உன்னை கொல்லாம விட்டது தப்புன்னு நினைக்க வச்சிடாதே.!"

"உங்க பேத்தியை சாமியாரிணியாவா நேந்து விட போறிங்க.? அவளை எவனுக்கோ கட்டி தரதுக்கு பதிலா அவ புருசன் எனக்கே கட்டிக் கொடுங்கன்னுதான் சொல்றேன்.! முதல் கோணல் முற்றிலும் கோணலா இருக்கலாம். ஆனா முதல் முறையா உங்களை கடுப்பேத்தின நான் நிச்சயம் உங்க மனசுல இடம் பிடிப்பேன். 'என் பேத்திக்கு நீதான்டா எல்லாமும்'ன்னு நீங்களே சொல்ல போறிங்க.." என்றவன் அங்கிருந்து நடந்தான்.

அரையாய் விழுந்து விட்ட பொழுதில் நெற்றியை பிடித்தபடி நின்றார் தாத்தா. அவருக்கு இவனை சுத்தமாக பிடிக்கவில்லை. நடைபயணம் செல்லும் யோசனையே வெறுத்து போய் விட்டது. வீட்டுக்கு திரும்பி நடந்தார்.

"அம்மா காப்பி.." என்றபடி தன் அறையிலிருந்து வந்த முத்தமிழ் தாத்தா வீட்டுக்குள் வருவதை கண்டு கடிகாரத்தை பார்த்தான்.

"ஏன் தாத்தா அதுக்குள்ள வந்துடிங்க.? நேரத்துலயே வாக்கிங் கிளம்பிட்டிங்களா.?"

"அந்த நாய்.. கார்த்திக் எங்கே நடக்க விட்டு தொலைஞ்சான்.?" கோபத்தோடு கேட்டவர் சோஃபாவில் அமர்ந்தார்.

அபிராமி அப்போதுதான் தூங்கி எழுந்து வெளியே வந்தாள். தாத்தா சொன்னதை கேட்டவளுக்கு கார்த்திக் மீது கொலைவெறியாக வந்தது.

"நம்ம மாப்பிள்ளை அவர்.. அவரை போய் நாய்ன்னு சொல்றது நல்லாவா இருக்கு.?" என கேட்டபடி தாத்தாவின் முன்னால் காப்பி டம்ளரை வைத்தாள் பாட்டி. கோபத்தில் இருந்த தாத்தா டம்ளரை தூக்கி தரையில் அடித்தார்.

"அவன் காலங்காத்தால என்னை டென்ஷன் பண்ணிட்டானேன்னு இருக்கேன். உனக்கு மாப்பிள்ளையோ.? அந்த நாய் குறுக்க வராம இருந்திருந்தா இன்னேரம் நம்ம புள்ளை நல்லா இருந்திருக்கும்.!" என்று கத்தினார்.

பற்களை அரைத்த பாட்டி தாத்தாவின் உச்சந்தலையில் நச்சென்று கொட்டு வைத்தாள். தாத்தா கண்களை இறுக்கமாக மூடியபடி தலையை தேய்த்தார்.

"கத்துற வேலையெல்லாம் என்கிட்ட இருக்க கூடாது.. நீங்களும் உங்க மகனும் மாப்பிள்ளை பார்த்த லட்சணம் என்னன்னு எனக்கு தெரியாதா.? ஆளும் அவன் மூஞ்சியும், சரியான பச்சை தவளை மாதிரி! சொத்துல தகராறு, தம்பிக்கே விஷம் தந்திருக்கான், என் பேத்தி இருக்கும்போதே அவ இருந்த வீட்டுல சிலிண்டரை வெடிக்க வச்சிருக்கான்.! அவனெல்லாம் மாப்பிள்ளையா.? அந்த நாதாரிக்கு கார்த்தி எவ்வளவோ தேவல.! இவனாவது நல்ல லட்சணமா இருக்கான். உங்க சிடுமூஞ்சி பேத்திக்காரியை வச்சி சமாளிக்கிறேன்னு அவனா வந்து கேட்கிறான். இவனை மாதிரி நல்ல பையன் எங்கே கிடைப்பான்.?" என்றாள்.

தாத்தாவிற்கு பாட்டியின் கன்னத்திலேயே அறைய வேண்டும் போல இருந்தது. வயதான காலத்தில் ஒரு அறைக்கே போய் விடுவாளோ என்று பயந்தவர் தன் கோபத்தை உள்ளுக்குள்ளேயே வைத்துக் கொள்ள மிகவும் போராடினார்.

அபிராமி தன் அறை வாசற்படியிலேயே நின்றபடி பாட்டியை முறைத்தாள்.

"மரியாதையா போயிடு அந்த பக்கம்.! என் பேத்திக்கு என்னடி குறை.?" என்றார் தாத்தா பற்களை கடித்தபடி.

பாட்டி விசயத்தை விடுவதாக இல்லை. "அவனுக்கு மட்டும் என்ன குறை‌.? இவளை இழுத்துட்டு போய் தாலி கட்டிட்டான். அது தப்புதான். ஆனா அதுக்குதான் மன்னிப்பு கேட்டுட்டான் இல்ல.?" என்றாள்.

தாத்தா எழுந்து நின்றார். "போடி தூர.." என்றவர் மனைவியோடு உரையாடுவதே முட்டாள்தனம் என நினைத்து தனது அறை நோக்கி நடந்தார்.

"ஆமா.. நீங்க தப்பே செஞ்சது இல்ல. என்கிட்ட மன்னிப்பும் கேட்டதே இல்ல பாருங்க.!" என்று பொரிந்து தள்ளிய பாட்டி சமையலறை நோக்கி நடந்தாள். பேத்தி தூரத்தில் நிற்பதை கண்டவள் "உன் தாத்தா பேச்சை கேட்டா காலம் முழுக்க நீ திமிர் குறையாம வேணா இருக்கலாம். ஆனா எந்த புது சொந்தத்தோடும் வாழ முடியாது. அனுசரணையும் அன்பும் இல்லன்னா வாழ்க்கையே வீண்தான். அவன் தப்பு செஞ்சிட்டான். அவனை மன்னிச்சி ஏத்துக்கலன்னா நீயும் தப்பு செஞ்சவளாதான் இருப்ப.." என்றாள்.

அபிராமி பதில் கூட சொல்லவில்லை. கண்களை சுழற்றியபடி தன் அறைக்கு திரும்பினாள்.

"என்னை பார்த்தா முட்டாள் மாதிரி இருக்கு இல்ல.? ஆனா உன் நல்லதுக்குதான்டி சொல்றேன்.."

பாட்டியை திரும்பி பார்த்தவள் கதவின் மீது சாய்ந்து நின்றாள். "உங்க நல்லதுக்கு நானும் ஒன்னு சொல்றேன் கேளுங்க, தாத்தாக்கிட்ட இப்படி பேசாதிங்க.. அப்புறம் கோபத்துல அடிச்சிட்டார்ன்னா உங்களுக்குதான் வருத்தமா போகும்.." என்றாள்.

பாட்டி சிரித்தாள். "உன் தாத்தா ஆம்பளை.. சொந்த பொண்டாட்டியா இருந்தாலும் நான் அவரை எதிர்த்து பேசினா அவரோட கௌரவம் குறைஞ்சிடும்ன்னு நீயும் இப்ப மனசுக்குள்ள நினைச்சிக்கிட்டுதான் இருப்ப‌‌.. இதே தப்பை நீ உன் புருசனுக்கு செய்யாதேன்னு நான் சொன்னா உனக்கு கோபம் வரும். ஏனா இந்த இடத்துல உன் உரிமை பாதிக்கப்படுது. இந்த உரிமை, ஆதிக்கம் இதையெல்லாம் ஒதுக்கி வச்சிட்டு நேசத்தை மட்டும் பங்கு போட்டு வாழ்ந்தா மட்டும்தான் ஒரு குடும்பம் உருப்படியா இருக்க முடியும். அதையெல்லாம் அந்த பையன் விட்டுட்டான். அதனாலதான் நீ துரத்தி துரத்தி விட்டாலும் திரும்ப திரும்ப வரான். நீயும் அதையெல்லாம் விட்டுடு.." என்றாள்.

"லூசாகிட்ட பாட்டி நீ.! அதான் இப்படி உளறுற.. சம்பந்தமே சம்பந்தம் இல்லாம பேசிட்டு இருக்க.!" என்ற அபிராமி தன் அறைக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டாள்.

பாட்டிக்கு கோபம் தீரவேயில்லை‌. கார்த்திக் சில நாட்களுக்கு முன்பு இந்த வீட்டிற்கு வந்தான். அப்போது ஆண்களும் அபிராமியும் அந்த வீட்டில் இல்லை.

கார்த்திக் தான் அபிராமியை எந்த அளவிற்கு நேசிக்கிறேன் என்றும், அவளுக்காக எதையும் செய்ய தயாராக இருப்பதாகவும் கூறினான். கார்த்திக் மீது அம்மாவுக்கும் பாட்டிக்கும் ஆரம்பத்தில் கோபம் இருந்தாலும் கூட வீட்டின் மருமகன் ஆகிவிட்டானே என்று இயல்பாக எழுந்த மரியாதை விரைவிலேயே பாசமாக மாறி விட்டது.

அவனுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்வதாக இருவருமே சொன்னார்கள். ஆனால் அபிராமியின் மனதை சுலபத்தில் மாற்றி விடலாம் என்று பாட்டி கணக்கிட்டதுதான் தவறாகி விட்டது.

அன்று காலை உணவிற்கு வந்து அமர்ந்த தாத்தாவிற்கு வேலைக்காரி உணவை பரிமாறினாள். பாட்டியை தேடியது அவரின் கண்கள். சமையலறையை விட்டு வெளியே வரவில்லை அவள். தாத்தா கோபத்தோடு உணவு தட்டை தள்ளி வைத்துவிட்டு எழுந்துக் கொண்டார்.

"இதெல்லாம் வீடா.? மனுசன் நிம்மதியா சாப்பிட முடியுதா.?" என்று கத்திக் கொண்டே வீட்டை விட்டு கிளம்பினார்.

அபிராமியும் எழுந்தாள். முத்தமிழும் எழுந்தான்.

"எவனோ ஒருத்தனுக்காக சொந்த வீட்டுலயே குழப்பம் செய்ய உங்களாலதான் முடியும்.!" என்று சாடையாக சொல்லிவிட்டு முத்தமிழும் கிளம்பினான்.

"நான் காலேஜ்க்கு போறேன்ப்பா.." என்ற அபிராமி கல்லூரி பையோடு கிளம்பினாள் அபிராமிக்கு ஆத்திரமாக வந்தது.

அவள் தனது காரில் ஏற இருந்த சமயத்தில் அவர்களின் கேட்டை திறந்துக் கொண்டு உள்ளே வந்தான் கார்த்திக். அவனின் கையில் பூங்கொத்து இருந்தது.

புன்னகையோடு வந்து நின்றவனை வெறுப்போடு பார்த்தவள் "இந்த உலகத்துல நான் நிம்மதியா இருக்கணும்ன்னா அதுக்கு இரண்டே வழிதான். ஒன்னு நீ சாகணும். இல்லன்னா நான் சாகணும்.." என்றாள் எரிச்சலோடு.

பெருமூச்சோடு குனிந்தவன் அவளின் பாதத்தின் முன்னால் பூங்கொத்தை வைத்தான். வலுக்கட்டாயமான புன்னகை ஒன்றை வரவழைத்துக் கொண்டு நிமிர்ந்து நின்றான்.

"என் காதலுக்கு நான் மரியாதை தரேன் அபிராமி. என் மனசுல நீ இடம் பிடிக்க எவ்வளவு செஞ்சன்னு எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு. நம்மோடது பார்த்த உடன் வந்த காதலும் இல்ல. இனிப்பை மட்டும் சுவைத்து வளர்ந்த காதலும் இல்ல. என் மனசுல இடம் பிடிக்க நீ போராடின. உன் மனசுக்குள்ள அப்ப எவ்வளவு கோபம் வெறுப்பெல்லாம் இருந்திருக்கும்ன்னு இப்பதான் என்னால புரிஞ்சிக்க முடியுது.! என்னோட நோக்கம் தப்பு உன் கழுத்துல நான் தாலியை கட்டியபோது. ஆனாலும் நீ என் பொண்டாட்டிங்கறதை யாராலும் மாத்த முடியாது. அதே போல என்னை உன் காதல்ல நீ விழவச்சபோது உன் நோக்கமும் தப்பு. ஆனாலும் நான் உன் காதலன்ங்கறதை யாராலும் மாத்த முடியாது. எவ்வளவு வேணாலும் திட்டு. என்னை என் பொண்டாட்டி திட்டாம வேற யார் திட்டுவா.?" என்றான்.

அபிராமி சிரித்தாள். "உன்னால எப்போதும் என்னை புரிஞ்சிக்க முடியாது. என்னாலும் உன்னை வெறுக்காம இருக்க முடியாது. என் லைஃப் நாசமா போச்சி. போய் உன் லைப்பையாவது காப்பாத்திக்கோ.!" என்றவள் காரின் கதவை திறந்தாள். டிரைவர் சீட்டில் ஏறி அமர்ந்தவள் கதவை மூட முயன்றபோது காரின் கதவை கைகளால் தடுத்து நிறுத்தினான் கார்த்திக்.

"என் லைஃப் காப்பாத்தப்படுறதும், நாசமான உன் லைஃப் சரியாக போறதும் ஒரே ஒரு புள்ளியில்தான் அபிராமி. அதுதான் காதல். நான் உணர்ந்துட்டேன். நீ அதை உணரும்வரை எத்தனை முறை துரத்தப்பட்டாலும் திரும்ப வருவேன் நான். ஏனா உன்னோட காதல் எனக்கு சொந்தமானது.." என்றவன் காரின் கதவை விட்டான்.

"அதை விட சுலப வழி என்னன்னா நீயாவே செத்துடு. எல்லாம் சரியாகிடும்.." என்றவள் அங்கிருந்து கிளம்பினாள். காரின் டயரில் நசுங்கி போன பூங்கொத்து அவனின் மனதை கண்ணாடியாக பிரதிபலித்தது.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN