காதல் கடன்காரா 38

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
கல்லூரியின் இடைவேளை நேரங்களில் கார்த்திக்கை திட்டி தீர்த்தாள் அபிராமி.

மரத்தடியில் நின்றபடி அவளின் புலம்பலை கேட்டுக் கொண்டிருந்த சிந்துவுக்கு இவள் இன்னும் எத்தனை நாட்களுக்கு தங்களை டார்ச்சர் செய்ய போகிறாளோ என்று கவலையாக இருந்தது.

"அவனுக்கு சாப்பாட்டுல விஷத்தை வச்சிருக்கணும்.." என்றாள் அபிராமி கடுப்போடு.

"அதை விட அதிக விஷத்தை நீ அவனோட இதயத்துல வச்சிட்ட.. அவனை பார்த்தா எனக்கு பாவமா இருக்கு.." என்று சுவாதி சொல்லி முடித்த நேரத்தில் அவளின் காலில் ஓங்கி மிதித்தாள் அபிராமி.

"அம்மா.." காலை பிடித்துக் கொண்டு கத்திய சுவாதி "பிரெண்ட்ங்கற பேர்ல வாய்ச்ச பிசாசே, கால் வலிக்குதுடி.." என்று சிணுங்கினாள்.

"எனக்கும்தான் மனசு வலிக்குது நீ சொன்னதை கேட்டு.!" என்றவள் சிந்துவின் பக்கம் திரும்பினாள்.

"எனக்கு அவ்வளவு கடுப்பாகுது சிந்து. அவனை மாதிரி ஒரு மனுசனை நான் பார்த்ததே இல்ல. பிடிக்கலன்னு சொன்ன பிறகும் திரும்ப திரும்ப வந்து டார்ச்சர் பண்றான்.." என்றாள்.

"உன்னை மாதிரி காண்டாமிருகத்துக்கிட்ட மாட்டியது அவன் விதி. அவனை மாதிரி ஒரு விடாகண்டன்கிட்ட மாட்டியது உன் விதி.." என்று சொல்லி விட்டு அவசரமாக தன் வாயை பொத்தினாள் சுவாதி. சொல்லாமல் இருந்திருக்கலாம் என்று தோன்றியது இப்போது‌.

அபிராமி அவளை ஓரக்கண்ணால் வெறித்தாள்.

"அவனை ரொம்ப பிடிச்சிருக்கா.?" என்றாள்.

சுவாதி ஆமென தலையசைத்து விட்டு உடனே இல்லையென்று தலையாட்டினாள்.

"ஒரு அண்ணன் மாதிரி, நண்பன் மாதிரி.." என்றவளின் முன்னால் கை காட்டி நிறுத்திய அபிராமி "இப்ப நீ என்ன சொல்ல வர.? அவன் செஞ்ச அத்தனையும் சரி. நான் செஞ்ச அத்தனையும் தப்பு. இதானே.? அவன் செஞ்சது தப்பாவே இருந்தாலும் அவன் சாரி கேட்டதும் உடனே நான் அவனை கட்டியணைச்சி 'காதல் கணவா, நீ கெஞ்சலாமா.?'ன்னு கேட்கணும். அதானே.?" என்று கேட்டாள்.

சுவாதி வாடிய முகத்தோடு இடம் வலமாக தலையசைத்தாள்.

"அவன் ப்ளாக்மெயில் பண்ணி கூப்பிட்டதும் மனசு குழப்பத்தோடு அவனோடு போனாலும் கூட நான் செய்றது தப்போங்கற பயத்துல குளத்துல சூஸைட் பண்ணிக்க டிரை பண்ணேன். தப்பு என் மேலதான்.. அவன் இரண்டாவது முறையா ஹாஸ்பிட்டல்ல பிளாக்மெயில் செஞ்சபோது குழப்பத்தோடு ஸ்கூட்டியை ஓட்டி போய் ஒரு கார் மேல மோதி ஆக்ஸிடென்ட் பண்ணிட்டேன்.! இதுலேயும் தப்பு என் மேலதான்.." என்றவளை தோழிகள் இருவரும் அதிர்ச்சியோடு பார்த்தார்கள்.

"சின்ன காயம்தான்.. அந்த ஆக்ஸிடென்ட் சின்னதுங்கறதால சாகாம போயிட்டேன். ஆனா என்னால என் ஸ்கூட்டியை ஓட்ட முடியல‌. நான் கார் யூஸ் பண்றது பந்தாவுக்குன்னு நீங்க நினைப்பிங்க. ஆனா ஸ்கூட்டியில உட்கார்ந்தாவே கை கால் நடுங்குதுன்னு எனக்கு மட்டும்தானே தெரியும்.?" என்றாள்.

சிந்து அவளின் தோளில் கரம் பதித்தாள்.

"பீல் பண்ணாதப்பா.."

முகத்தின் கவலையை மறைத்துக் கொண்டு சுவாதியை பார்த்த அபிராமி "அவன் எல்லாருக்கும் நல்லவன்னு ஊரே சொல்லுது. ஆனா அவன் எனக்கு நல்லவனா நடந்துக்கல சுவாதி. லவ்வே இல்லாமதான் கல்யாணம் செஞ்சான். அவன் வீட்டுல நான் ஒரு வருசம் இருந்திருக்கேன். நானா கேட்ட பிறகு நாலு புடவை எடுத்து வந்து தந்தான். வேற எதுவும் கிடையாது.

நான் எங்க வீட்டுல செல்லமா வளர்க்கப்பட்ட பொண்ணு. இதுவரை நான் எனக்குன்னு ஒரு டிரெஸ்‍, ஒரு ஜூவல், ஒரு மேக்கப் கிட் வாங்கியது கிடையாது. இத்தனைக்கும் எனக்கு தேவையான எதையும் என் அம்மாவோ பாட்டியோட கூட அதிகம் வாங்கி தந்தது கிடையாது. முழுக்க என் அண்ணன், அப்பா, தாத்தா மட்டும்தான் வாங்கிட்டு வந்திருக்காங்க. எனக்கு என்ன வேணும்ன்னு எனக்கும் தெரியும். ஆனா அது என்னை விட அவங்களுக்கு இன்னும் பெட்டராவே தெரியும்.

நான் பெமினிசம் பேசுறேன், அவன் ஆணாத்திக்கம் பிடிச்சவன்னு நான் சொல்லவே மாட்டேன். ஆனா என்னை கல்யாணம் பண்ணிக்கறவன் எப்படி இருக்கணும்ன்னு எனக்கும் ஆசைகள் இருந்திருக்கு. என் தாத்தா, அப்பா, அண்ணன் இவங்க மூணு பேரோட பாசத்தையும் எனக்கு வர போறவன் தரணும்ன்னு ஆசைப்பட்டிருக்கேன். இதெல்லாம் வாங்கி தந்தாதான் நல்லவன்னான்னு நீ கேட்ப சுவாதி.! ஆனா இதையும் கூட வாங்கி தர முடியலன்னா அவன் எப்படி எனக்கு தேவையான மத்த விசயங்களை செய்வான்.? பத்து ரூபா பித்தளை மோதிரமா இருந்தாலும் அது என் மனைவிக்கு நல்லாருக்குமேன்னு நினைச்சி ஆசையோடு வாங்கிட்டு வரவன் வேணும்ன்னு ஆசைப்பட்டேன். இது பேராசைன்னு கூட சொல்லுங்க. ஆனா நான் ஆசைப்படுறதுல என்ன தப்பு.?

இவன் எனக்கானவன் கிடையாது சுவாதி. கொஞ்சம் கூட பாசம் கிடையாது. என் பின்னாடி அவன் சுத்திட்டு இருக்க காரணம் லவ்வே இல்ல. ப்யூர் லஸ்டால மட்டும்தான்னு கூட சொல்வேன் நான்.! ஏனா லவ் பண்றவன் லவ்வர் மனசை காயப்படுத்த விரும்ப மாட்டான். ஆனா இவன் இன்னைக்கு வரை என்னை கஷ்டப்படுத்திட்டுதான் இருக்கான்.. என்னோட சின்ன சின்ன கனவுகளை உடைச்சி, என் மனசோட வலுவையெல்லாம் உடைச்சி, கடைசியில் என்னையும் உடைச்சவன் இவன்.

ஏன் நான் அனுசரிச்சி வாழணும்.? தேவை என்ன.? எனக்கு எதுவும் தேவையில்ல. அவனா சாவான்னு ஒரு முடிவு வந்தா கூட நான் சாவைதான் கையில் எடுப்பேன். இது என் திமிரா கூட இருக்கலாம். ஆனா இதான் என் இயல்பு. இவன் என் பின்னாடி சுத்தி எங்களை பார்க்கறவங்ககிட்ட என்னை கெட்டவளா மாத்தி காட்டுறதுக்கு பதிலா அவன் அவனோட வேலையை போய் பார்க்கலாம். அவன் என்னை டிஸ்டர்ப் செய்யலன்னா நான் கெட்டவளா தென்பட வேண்டிய அவசியமே கிடையாது. அவனோட செயல்தான் என் மனசோட நிறத்தை மாத்துது. அவனை பார்த்தா இதுக்கு மேலாவது என் பின்னாடி வர வேண்டாம்ன்னு சொல்லு.." என்றவள் அங்கிருந்து கிளம்பினாள்.

சுவாதி நெற்றியை பிடித்தபடி பின்னால் இருந்த மரத்தின் மீது சாய்ந்தாள்.

சிந்து அவளை தோளோடு அணைத்துக் கொண்டாள். அவளை சமாதானம் செய்ய முயன்றாள்.

"இங்கே நான் கெட்டவளா சிந்து.?" என்று கேட்டாள்.

மறுப்பாக தலையசைத்த சிந்து "அவளுக்கு என்ன வேணும்ன்னு அவளுக்கே தெரியாது. அவனை மன்னிச்சிட்டா தன் ஈகோ போயிடும்ன்னு முழுசா நம்புறா.. அவ அனுசரிச்சி போகவும், தேவைக்கான காரணமும் ஒன்னே ஒன்னுதான். அதான் லவ்வு! அவனை பத்தி எனக்கும் முழுசா தெரியாது. ஆனா அவனோட விடாமுயற்சி எனக்கும் பிடிச்சிருக்கு. அவன் செய்றது ஒரு வகையில் தொல்லைதான். ஆனாலும் இவ மனசை மாத்திட்டான்னா அது தொல்லையா இல்லாம முயற்சியா போயிடும். ஒரு வருசம் கஷ்டப்பட்டிருக்கா இவ. அவன் நோகாம நோம்பு கும்புட ஆசைப்படுறானா.?" என்று கேட்டாள்.

சுவாதி புரியாமல் அவளை பார்த்தாள்.

"கொஞ்சமா சுத்த சொல்லு.. அபிராமியை கொலைக்காரியா மாத்திட வேணாம்ன்னு சொல்லு‌. நீ அவனுக்கு உன் உதவியை செய்.‌." என்றாள்.

சுவாதி அரையாய் புன்னகைத்தாள்.

"எப்பவும் எட்டா கனிதான் ருசியா தெரியுமாம். அதான் இப்ப அவனுக்கும். என்னவோ.! அபிராமி அவனை மன்னிச்சா சரி.." என்றபடி சிந்துவும் அங்கிருந்து கிளம்பினாள்.

மேற்கத்திய காற்று கார்த்திக்கின் முகத்தில் வந்து மோதியது. மரத்தடி ஒன்றில் நின்றிருந்தது அவனது பைக். அருகே இருந்த மண்டபத்தில் சுவாதியோடு சேர்ந்து அமர்ந்திருந்தான் அவன்.

அபிராமி பேசியது அனைத்தையும் கேட்டான். பிறகு சுவாதியின் போனை அவளிடமே திருப்பி தந்தான்.

"அவ பீலிங்க்ல பேசும்போது நான் இப்படி வாய்ஸ் ரெக்கார்ட் பண்ணிட்டு இருந்தேன்னு தெரிஞ்சதுன்னா என்னை கொன்னுடுவா.!" என்றாள் சுவாதி.

சோகமாக தரை பார்த்து அமர்ந்திருந்தவன் "எதையும் சொல்ல மாட்டேன் சிஸ்டர். தேங்க்ஸ்.!" என்றான் நிமிர்ந்து.

"நீங்க பீல் பண்றிங்கன்னு தெரியுது.! நீங்க அவளுக்கு பிரஸர் தந்தது தப்பு. நீங்க வில்லன் போல நடந்துக்கிட்டு இருந்திருக்கிங்க. அதுக்காக உங்களை தூக்குல போட முடியாது. நாயகிக்குன்னு செதுக்கிய நாயகன் நீங்க.! இது வேற லவ் ஸ்டோரின்னு கேட்டகரி தேர்ந்தெடுத்தாச்சி. சோ எப்படியாவது அவ மனசை வின் பண்ணிடுங்க. ஆல் த பெஸ்ட்.." என்றவள் போனோடு அங்கிருந்து சென்றாள்.

கார்த்திக் அதே இடத்தில் அமர்ந்திருந்தான். முதல் நாள் இருந்த நம்பிக்கை இன்று இல்லை. அவளோடு பேச பேச, அவளை புரிந்து கொள்ள புரிந்து கொள்ள தன் நம்பிக்கையில் ஒவ்வொரு இழையாக இழந்துக் கொண்டே வந்தான் அவன்.

எட்டா கனி இல்லை. அவள் வானத்து நட்சத்திரம் போலவே தெரிந்தாள். அவளை எப்படி கைப்பிடிப்பது என்று அவனுக்கு புரியவில்லை. செய்த தவறுக்கு என்ன செய்தால் மன்னிப்பாள் என்றும் தெரியவில்லை.

தன் காதலை காமமென சொல்லிவிட்டாளே என்று கோபம் கொஞ்சம் வந்தது. ஆனால் தன் காதலை நிரூபிக்க வழி கிடைக்காதா என்று மூளையை கசக்கி யோசித்தான்.

அமர்ந்திருந்த மண்டபத்தின் தரையில் படுத்தான். கைகளை தலைக்கு அடியில் வைத்துக் கொண்டான். அன்றைக்கு மருத்துவமனையிலிருந்து அபிராமி திரும்பி சென்றபோது அவளின் முகம் எப்படி வெளுத்திருந்தது என்பதை யோசித்து பார்த்தான். தன் மீது மட்டுமே கோபம் வந்தது. அன்று தான் அந்த கன்டிஷனை போடாமல் இருந்திருந்தால் அவள் விபத்தில் சிக்கியிருக்க மாட்டாள் என்று புரிந்துக் கொண்டவனுக்கு அந்த விபத்தில் அவள் இறந்திருக்கவும் நூறு சதவீத வாய்ப்புண்டு என்ற நியாயம் புரிந்தபோது அதற்கு மேல் யோசிக்க கூட மனம் வரவில்லை.

அவளின் முகத்தை மனதில் நினைத்தபடி கண்களை மெள்ள மூடினான். இமைகள் ஈரமானது போல இருந்தது.

மாலை மங்கியது. அதே இடத்தில் படுத்துக் கொண்டிருந்தான் கார்த்திக்.

இரவு நெருங்கிய நேரத்தில் அவனின் போன் ஒலித்தது‌. அரை தூக்கம் கலைந்து எழுந்து அமர்ந்தான். போனை எடுத்து பேசினான்.

"எருமை.. எங்கே போய் தொலைஞ்ச.? துரை பார்க்கற உத்யோகத்துக்கு லேட் நைட்லதான் வீட்டுக்கு வருவிங்களோ.? சீக்கிரம் வீட்டுக்கு வாடா தண்டச்சோறு. உனக்காகவெல்லாம் குழம்பை மறுபடியும் சூடு பண்ண முடியாது.." என்று விட்டு போனின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

புவனாதான் பேசியிருந்தாள்.

கைகளில் ஒட்டியிருந்த மண் துகள்களை துடைத்து விட்டுக் கொண்டான்.

இருளை பார்த்தபடியே சென்று பைக்கை கிளப்பினான். வீடு நோக்கி புறப்பட்டான்.

அடுத்து என்ன செய்வது என்று யோசிக்கையில் வெள்ளை காகிதமாக காட்சியளித்தது அவனின் சிந்தனை. அவளை தொல்லை செய்ய நினைக்கவில்லை அவன். ஆனால் அவளை பிரித்து விடவும் மனம் வரவில்லை.

ஒரு வாரம் கடந்திருந்தது.

அபிராமி கல்லூரிக்கு கிளம்பிய அதே நேரத்தில் அவர்களின் வீட்டு வாசலின் முன்னால் வந்து நின்றான் கார்த்திக்.

"காலங்காத்தால உன் முகத்துலயா விழிக்கணும்.?" எரிச்சலோடு கேட்டாள்.

"ஒரு வாரமாக கண்ணுல படலையே.. விட்டதுடா சனியன்னு நினைச்சேன். விடாத கருப்பா மறுபடியும் வந்து நிக்கற.." என்றவள் காரை நோக்கி நடந்தாள்.

காரின் பின் கதவை அவளுக்காக திறந்து விட்டான் கார்த்திக். அவனை நக்கலாக பார்த்தவள் "என் காரை எனக்கு ஓபன் பண்ண தெரியும். நீ கிளம்பு.!" என்றாள்.

"நான் உன.. உங்க வீட்டு புது டிரைவர். உங்களை தினம் காலையில் காலேஜ் கொண்டுப்போய் விட்டுட்டு சாயங்காலம் கூட்டி வரணும்ன்னு உங்க பாட்டி சொல்லி இருக்காங்க.!" என்றான்.

அபிராமி காரின் மீது சாய்ந்து நின்றாள். கலகலவென சிரித்தாள்.

"நீ நல்லா வருவடா.! என் பாட்டியை உன் வலையில கவுத்துட்ட இல்ல.? ஒரு வாரமா எங்க தாத்தாவோடு அந்த கிழவி பேசாம இருக்கும்போதோ நான் யூகிச்சி இருக்கணும், இந்த மாதிரி வில்லங்கம் எதாவது வந்து சேரும்ன்னு.!" என்றாள்.

"புது டிரைவர்.!? பாட்டியை நீ உன் பொய்யால கவுத்த. பாட்டி எங்க தாத்தாவை அவங்களோட பிடிவாதத்தால கவுத்துட்டாங்க. சூப்பர் ப்ளான் இல்ல உன்னோடது.?" நக்கலும் கேலியுமாகவே கேட்டவள் தனது இயலாமையை துளியும் முகத்தில் வெளிக்காட்டவேயில்லை.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN