காதல் கடன்காரா 39

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
கார் அதன் பாதையில் சென்றுக் கொண்டிருந்தது. அபிராமி மூடிய ஜன்னலின் வழியே வெளியே வெறித்துக் கொண்டிருந்தாள்.

"உன்னால எங்க தாத்தாவுக்கும் பாட்டிக்கும் இடையில் ஒரு வாரமா சண்டை.." என்றாள்.

கார்த்திக் கண்ணாடியில் தெரிந்த அவளின் முகம் பார்த்தான். அவள் முகம் வேறு பக்கம் இருந்தது.

"விட்டுட்டு போக முடிஞ்சிருந்தா திரும்பி வந்திருக்க மாட்டேன் அபிராமி.." வருத்தமாக சொன்னான் அவன்.

"தப்பு என் மேலன்னு சொல்றியா.?" எரிச்சலோடு அவன் புறம் திரும்பி பார்த்துக் கேட்டாள்.

"பின்ன இல்லங்கறியா.? என்ன பண்ணாலும் உன்னை மறக்க முடியல. நானா வந்து உன்னை தேடி தேடி லவ் பண்ணேன்.? நீதானே மயக்கின.? எங்க அம்மா தங்கச்சி பேச்செல்லாம் காதுல கூட ஏற மாட்டேங்குது. என்னை தொல்லைன்னு நீ வாய் திறந்து சொல்லிடுற. ஆனா என்னால சொல்ல முடியல. அவ்வளவுதான். மத்தபடி உன்னால எனக்கும் தொல்லைதான்.! சொரணை கெட்டுப்போய், நீ துரத்தியடிச்ச பிறகும் உன் பின்னாடி நாய் மாதிரி சுத்தணும்ன்னு எனக்கென்ன தலையெழுத்தா.?" என்றான் அவனும் அதே எரிச்சலோடு.

அபிராமி பற்களை அரைத்தாள்.

"இப்ப நீ என்ன சொல்ல வர.?" என்றாள்.

கல்லூரி வாசலில் காரை நிறுத்தினான் கார்த்திக்.

அபிராமியை திரும்பி பார்த்தான்.

"எனக்கு ஆறு மாசம் டைம் வேணும்.! நான் உன் மனசை உடைச்சேன். நீ என் மனசை சிதைச்ச. இரண்டும் ஈக்வெல் கிடையவே கிடையாது.! ஏனா நீ பழி வாங்கிய திருப்தியில் போயிடுவ. ஆனா நான் செஞ்ச தப்பை உணர்ந்த பிறகும் கூட உன்னை மறக்க முடியாம அழுது சாவேன்.! இது சரி கிடையாது. என் லைப்பை அழிச்சிட்டா உன்னோட இழந்த நாட்கள் அத்தனையும் திரும்ப வந்துடாது. அட்லீஸ்ட் நான் தப்பை புரிஞ்சிக்கிட்டது போல நீ என்னை மன்னிச்சிட்டா நம்ம லைப் இனியாவது நல்லா இருக்கும்.

ஆறு மாசம். என்னால உன்னை வின் பண்ண முடியலன்னா அதுக்கப்புறம் உன் நிழலை கூட திரும்பி பார்க்க மாட்டேன் நான். உறுதிமொழி தரேன். ஆனா நடுவுல என்னை துரத்தாதே.! உன் புருசனா ஒரு வருசம் வாழ்ந்திருக்கேன். உன் வலையில விழுந்து நல்லா ஏமாந்திருக்கேன். அதுக்காகவாவது எனக்கு டைம் கொடு. எல்லாருக்கும் எல்லார் மேலயும் லஸ்ட் வரது கிடையாது. நான் உனக்கு பொக்கிஷம் போல. இது உனக்கு புரியல. நீ புரிஞ்சிக்கவும் தேவையில்ல. ஆனா ஆறு மாசத்துக்கு என்னை சகிச்சிக்கோ.!" என்றான்.

"நான் ஏன் சகிச்சிக்கணும்.?" இயல்பாய் எழுந்தது அவளின் கேள்வி.

கைக்கடிகாரத்தை பார்த்தவன் "காலேஜ்க்கு டைம் ஆச்சி. போய்ட்டு வா. மீதியை சாயங்காலம் பேசிக்கலாம்.‌" என்றான்.

"உன்னை மாதிரி ஒரு பொறுக்கியை நான் பார்த்ததே இல்ல.." என்றவள் காரிலிருந்து இறங்கினாள்.

"நீ ஒரு கேடி. நான் ஒரு கேடி. நம்மை போல இந்த உலகத்திலேயே இல்லையாம் ஒரு ஜோடி. அதனால ஒழுங்கா போய் படி.!" என்றவன் காரை திருப்பிக் கொண்டு சென்றான்.

காரோடு அவனை கொளுத்த வேண்டும் என்று வெறி வந்தது அபிராமிக்கு.

"எல்லாம் பாட்டியால வருது.. ஊர் உலகத்துல அத்தனை பொண்ணுங்க இருந்தும் எங்க தாத்தா ஏன் இந்த கிழவியை கல்யாணம் செஞ்சாரோ.?" என்று கேட்டு நெற்றியில் அடித்துக் கொண்டவள் கல்லூரியை நோக்கி நடந்தாள்.

"இந்த வீட்டுல யாருமே என் பேச்சை கேட்கறது இல்ல.." என்று முனகினார் அபிராமியின் தாத்தா.

வெற்றிலையை மென்ற பாட்டி "என் பேச்சை எல்லாரும் கேட்டுடுறிங்களோ.? பேருக்குதான் பண்ணையக்காரி. என் சட்டமா செல்லுது இந்த வீட்டுல.? ஒரு டிரைவரை கூட நானா தேர்ந்தெடுக்க கூடாதாம்.." என்றாள்.

தாத்தாவின் முனகலுக்கெல்லாம் அவள் பணிந்து பயந்து விட மாட்டாள். தனக்கு உரிமை இல்லை உரிமை இல்லை என்று சொல்லியே வீட்டிலிருந்த மொத்த பேரின் குடுமியையும் தன் கையில் வைத்திருந்தாள் அவள்.

"வீட்டுல யாரும் நிம்மதியா இருக்க கூடாது. அதானே உங்க பிளான். நல்லா இருங்க.." என்ற முத்தமிழ் பாட்டியை முறைத்தபடி வீட்டிலிருந்து கிளம்பினான்.

அவன் வாசலுக்கு வந்தபோது விரலில் கார் சாவியை சுற்றியபடி எதிரே வந்தான் கார்த்திக்.

அவனை முறைத்துவிட்டு கடந்தான் முத்தமிழ்.

"எதுக்கு மச்சி இவ்வளவு கோபம்.? எனக்கும்தான் ஒரு சான்ஸ் கொடுக்கறதுல என்ன குறைஞ்சிட போறிங்க.?" என்று அவன் கேட்டு முடித்த நொடி அவனின் தாடையில் விழுந்தது ஒரு குத்து.

கார்த்திக் தாடையை பிடித்தபடி எதிரே இருந்த நண்பனை பார்த்தான்.

"அண்ணனும் தங்கையும் வயலன்ஸ் மட்டும்தான் யூஸ் பண்ணுவிங்களா.?" என கேட்டான்.

"பொறுக்கி. உன்னால எங்க நிம்மதியே போச்சிடா.!"

"கொஞ்சமாவது மெச்சூரா பேசு தமிழ்.! இங்கே என்னை விட யோக்கியணும் இல்ல. உன் தங்கச்சியை மாதிரி ராங்கியும் இல்ல." என்றவன் அவன் முறைப்பதை பொருட்படுத்தாமல் வீட்டுக்குள் நடந்தான்.

அவனை கண்டு தாத்தா ஒரு பக்கமும், அபிராமியின் அப்பா ஒரு பக்கமும் முகத்தை திருப்பிக் கொண்டனர்.

"சாப்பிட வாங்க தம்பி.." என்று அழைத்தாள் பாட்டி.

ஆண்கள் காட்டிய வெறுப்பால் மனம் நொந்திருந்த கார்த்திக் வலுக்கட்டாய புன்னகை ஒன்றை முகத்தில் வரவழைத்தபடி சென்று டைனிங் ஹாலில் அமர்ந்தான்.

"எனக்கு கொஞ்சம் வெளியே வேலை இருக்கு. நான் கிளம்பறேன்டா.!" என்று தன் மகனிடம் சொன்ன தாத்தா எழுந்து வெளியே நடந்தார்.

பாட்டி கார்த்திக்கிற்கு உணவை பரிமாறினாள்.

"டிரைவர்ன்னு ஒருத்தனை வேலைக்கு வச்சும் நாமளேதான் வண்டி ஓட்டி போகணும் போல.." வாசற்படி அருகில் நின்றபடி தாத்தா இதை கோபத்தோடு சொல்லவும் உணவு தட்டில் கை வைக்க இருந்த கார்த்திக் எழுந்து நின்றான்.

பாட்டி தன் கணவனை முறைத்தாள். "நீ சாப்பிடு தம்பி. அவர் நிற்கட்டும்.!" என்றாள்.

"இல்ல பாட்டி. நான் வந்து சாப்பிட்டுறேன்.!" என்ற கார்த்திக் அவசரமாக சென்றான்.

தாத்தாவின் கார் அருகே ஓடினான்.

"சீக்கிரம் காரை எடு.." என்ற தாத்தா காரில் ஏறி அமர்ந்தார்.

கார்த்திக்கிற்கு உள்ளுக்குள் உதறியது. இவர் மனதையெல்லாம் தான் வெல்வது சாத்தியமா என்ற சந்தேகம் பிறந்தது.

காரை ஸ்டார்ட் செய்தான் அவன்.

"பால் பண்ணைகாரர் ராசேந்திரன் வீட்டுக்கு போ.." என்றார்.

கார்த்திக் தலையசைத்துவிட்டு வண்டியை ஓட்டினான். அவனுக்கு இது புது அனுபவமாக இருந்தது.‌ தன் வீட்டில் தன் அம்மா முகத்தை காட்டும்போதும், வேலைகளை சொல்லும்போதும் அபிராமிக்கும் இப்படிதான் இருந்திருக்குமா என்று யோசித்தான்.

முதல் நாளே அவனை பயமுறுத்தியது. பின்வாங்கி கொள்ளலாமா என்ற எண்ணத்தை தந்தது. ஒரு வருடம் வாழ்ந்த அபிராமி உண்மையிலேயே திறமைசாலிதான் என்று தோன்றியது.

ராசேந்திரன் வீட்டின் முன் காரை நிறுத்தினான் கார்த்திக். தாத்தா அவனை முறைத்தபடியே இறங்கினார். "இங்கேயே இரு.." என்று விட்டு வீட்டுக்குள் சென்றார்.

கார்த்திக் காரிலேயே அமர்ந்திருந்தான்.

ராசேந்திரனின் வீட்டின் முன்னால் இருந்த சம்பங்கி பூச்செடி காற்றில் அழகாய் அசைந்தது. அதன் வாசம் அவன் நாசி வரை வந்து தீண்டியது.

அபிராமியின் கூந்தல் கூட இதே வாசம்தான். மல்லிகையை விட சம்பங்கியைதான் அதிகம் சூடுவாள் அவள்.

"ரொம்ப வாசம் வந்தா தலைவலிக்குதுன்னு சொல்ற. அப்புறம் ஏன் இந்த சம்பங்கியை வச்சிக்கிற.?" என்று சில முறை இவனும் கேட்டுள்ளான்.

"தலைவலிக்காக இதை தூர தள்ளிட முடியாது கார்த்திக். சில விசயங்கள் நமக்கு ஒவ்வாததா இருந்தாலும் பிடிச்சி போச்சின்னா அதை ஒதுக்க முடியாது. இதெல்லாம் விதி.!" என்பாள் அவள்.

இப்போது அவளுமே அவனின் பார்வையில் அப்படிதான் இருக்கிறாள். அவளோடு ஒத்துப் போகவில்லை என்றாலும் பித்து மனதிற்கு பிடித்து விட்டதால் இப்படி இவனும் சுற்றிக் கொண்டிருக்கிறான்.

குழப்பத்தில் தன்னோடு வந்தவள் குழப்பம் தெளிந்த மறுநாளே திரும்பி சென்றிருக்க கூடாதா என்று கேட்டது மனம். ஆனால் அவளை எங்கும் விடும் அளவிற்கு அவனின் மனமும் தயாராக இருந்ததே இல்லை. அவள் இவ்வளவு வெறுத்தும் கூட அவளை தன் வழியில் செல்ல விடாமல்தான் குறுக்கே புகுந்து இம்சித்துக் கொண்டிருக்கிறான்.

காதலோ வேறு ஒன்றோ. அவளை அப்போதும் விலக்கி நிறுத்த விரும்பவில்லை. இப்போதும் விலக்கி நிறுத்த விரும்பவில்லை. இது ஒன்று மட்டும் அவனுக்கு தெளிவாக புரிந்தது.

நிமிடங்கள் மணி நேரங்களாக கடந்தது. கார்த்திக்கின் வயிறு பசியால் வாடியது.

ராசேந்திரனின் வீட்டை எட்டிப் பார்த்தான். வாசலில் இருந்து பார்க்கையில் ஒன்றுமே தெரியவில்லை.

தாத்தா வேண்டுமென்றே தன்னை பழிவாங்குகிறார் என்பதை புரிந்துக் கொண்டான்.

கைபேசியில் இருந்த அபிராமியின் புகைப்படங்களை பார்க்க ஆரம்பித்தான். அவனோடு ஜோடி சேர்ந்து அவள் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் அனைத்திலும் அவளின் புன்னகையில் நேர்மை இருப்பதாகவே எண்ணினான்.

மதிய வேளை நெருங்கியது. அப்போதுதான் தாத்தா அந்த வீட்டிலிருந்து வெளியே வந்தார்.

காரில் வந்து அமர்ந்தவர் பெரிய ஏப்பம் ஒன்றை விட்டார்.

"நாராயணன் வீட்டுக்கு கிளம்பு.." என்றார்.

நாராயணன் வீட்டில் காரை நிறுத்தியதும் இறங்கியவர் "இங்கேயே இரு.." என்றுவிட்டு கிளம்பினார்.

கார்த்திக்கிற்கு கடுப்பாக இருந்தது. "தாத்தனை போலவே பேத்தி. இந்த கிழவன்கிட்ட இருந்துதான் சேடிஸ்டா பழி வாங்க கத்து இருக்கா போல.." என்று முனகினான்.

இரண்டு மணி நேரங்களுக்கு பிறகு அந்த வீட்டிலிருந்து வந்தார் தாத்தா.

"வீட்டுக்கு போகலாம்.." என்றார்.

இப்போதாவது மனசு வந்ததே என நினைத்தபடி வீட்டுக்கு வந்த கார்த்திக் காரிலிருந்து இறங்க இருந்த நேரத்தில் "அபிராமிக்கு காலேஜ் முடியற டைம் ஆச்சி.. கிளம்பி போய் அவளை கூட்டி வா‌‌.." என்றார்.

கார்த்திக் மீண்டும் காரை இயக்கினான். "எவ்வளவு கொடுமை பண்ணுவிங்களோ பண்ணுங்க. நானா ஆசைப்பட்டு அத்தனை கொடுமைகளையும் ஏத்துக்கறேன்.!" என்று காற்றோடு சொன்னான்.

"இன்னும் அவ என்ன செய்ய காத்திருக்காளோ.?" என்று கவலையோடு யோசித்தது அவனின் மனம்.

இவன் சென்றபோது கல்லூரி வாசலின் வெளியே இருந்த சுவரில் சாய்ந்து நின்றபடி சக மாணவன் ஒருவனோடு பேசிக் கொண்டிருந்தாள் அபிராமி.

பசியில் இருந்தவனுக்கு கோபமாக வந்தது. அவள் யாரோடு பேசினாலும் அதை நட்பு என்று எண்ணுவதற்கு மனமே வரவில்லை அவனுக்கு.

அபிராமி தாத்தாவின் காரை கண்டதும் அவனுக்கு கையசைத்து விட்டு காரை நோக்கி வந்தாள்.

"போகலாமா.?" என்றான் கார்த்திக் அவள் உள்ளே ஏறி அமர்ந்த பிறகு.

"ம்.." என்றவள் அவனை பார்க்க பிடிக்காமல் வெளியே மட்டும் பார்த்தாள்.

"யார் அவன்.?" கார் சற்று தூரம் சென்ற பிறகு கேட்டான் கார்த்திக்.

"உனக்கெதுக்கு நான் சொல்லணும்.?" எரிச்சலாக கேட்டாள்.

"எனக்கு கடுப்பாகுது அபிராமி.." காரை நிறுத்தி விட்டு அவள் பக்கம் திரும்பினான்.

"எதுக்கு இப்படி என்னை டார்ச்சர் செய்ற.?" என்றுக் கேட்டான்.

"இதான்டா நீ! உனக்கு தெரிஞ்ச வெங்காயமெல்லாம் என்னை கடுப்பேத்துவது மட்டும்தான். ஒரு பிரெண்ட்கிட்ட நான் பேசினா கூட உனக்கு தப்பாதான் தெரியும். ஏனா நீயே தப்பானவன்தான். உன் கேவலமான மைன்ட் செட்டை இன்னும் ஆறு மாசத்துக்கு பொறுத்து போகணும்ன்னு நீயாவே கன்டிஷன் போட்டிருக்க பார்த்தியா.. அதான் என் தலைவிதிங்கறது.!" என்றாள் வருத்தத்தை மறைத்துக் கொண்டு.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN