காதல் கடன்காரா 40

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
கார்த்திக் ஸ்டியரிங் வீலில் நெற்றியை முட்டினான்.

"ரொம்ப கடுப்புன்னா சொல்லு.. காரை அப்படியே கொண்டு போய் கிணத்துல விட்டுடுறேன். இரண்டு பேரும் நிம்மதியா செத்து போகலாம்.." என்றான் கோபத்தோடு.

அபிராமி கையில் இருந்த பேக்கை எடுத்து அவன் மீது வீசினாள். அவனின் தோளில் மோதி கீழே விழுந்தது பேக்.

"செத்து போறதா இருந்தா நீ மட்டும் தனியா போய் சாவு. நான் ஏன் வரணும்.?" என்றாள் கடுப்போடு.

கார்த்திக் அவள் புறம் திருப்பினான்.

"என்னை பார்த்தா மெண்டல் மாதிரி தெரியுதா உனக்கு.? ஆனா மெண்டலா ஆக்கினதே நீதான்டி.."

அபிராமி இருக்கையில் தலையை சாய்த்தாள். "மொக்கை போட்டே சாகடிக்கிறான்.." என்று முனகினாள்.

"கார்த்திக்.. உன் நல்லதுக்கு நான் ஒன்னு சொல்லட்டுமா.?" அழுத்தமான குரலில் கேட்டாள்.

"ம்.." என்றவன் அவளின் விழிகளை பார்த்தான்.

"போதும் உன் டார்ச்சர். தயவுசெஞ்சி என்னை விட்டுடு. உனக்கு என் மேல இருக்கறது லவ் கிடையாது. கிடைக்காத பொருள் மேல ஒரு ஆசை வரும் இல்லையா, அது போலதான் இதுவும். காடு வேணும், தோட்டம் வேணும்ன்னு ஈஸ்வர் குடும்பத்தோடு சண்டை போட்டிங்க. சொத்து கிடைச்சதும் உடனே அதை கொண்டாடி அதுக்கான மரியாதையை தந்திங்களா.? கிடையவே கிடையாது!"

"ஆனா நான் இப்ப வயல்ல முழுசா வேலை பார்க்கறேன் அபிராமி.." என்று அவன் சொன்னதும் சிரித்தாள் அவள்.

"என்னை இம்ப்ரஸ் பண்றதுக்காக அதை செய்ற! எதுவா இருந்தாலும் ஈடுபாடு தானா வரணும். நான் உன்னோடு வந்தா கூட என் மேல இருக்கற ஈர்ப்பு ஒன்னு இரண்டு வருசத்துல குறைஞ்சிடும். நீயே உன் லைப்பை கெடுத்துக்காதே!"

இந்த முறை கார்த்திக் சிரித்தான்.

"இவ்வளவுதான் நீ என்னை புரிஞ்சிக்கிட்டது. நான் ஹண்ட்ரட் பர்செண்ட் யோக்கியன் கிடையாதுதான். ஆனா ஈர்ப்புக்கும் காதலுக்கும் கூட வித்தியாசம் தெரியாதவன் இல்ல. உன்னை தொந்தரவு பண்ணாம உன் மனசை ஜெயிக்க நினைக்கிறேன். தயவுசெஞ்சி அதுக்கேத்த மாதிரி நடந்துக்கோ.!" என்றான்.

"நீ இப்படி நினைக்கிறதே எனக்கு தொல்லைதான்!" எரிந்து விழுந்தாள் அபிராமி.

கார்த்திக் காரை கிளப்பினான்.

"எங்கே பதிலை காணம்.!"

"பதில் எல்லாம் சண்டையில் முடியற மாதிரி இருக்கு அபிராமி. என்னை நீயும் ஏத்துக்க மாட்ட. உன்னை நானும் விட மாட்டேன். இந்த காலம் போகும் வரை போகட்டும். ஆறு மாசத்துக்கு பிறகு நானே கழண்டுக்கறேன். அதுவரை என் முன்னாடி மட்டுமாவது மத்த பசங்களோடு பேசாம இரு.." என்றான்.

அபிராமி எதையோ சொல்ல வாயை திறந்தாள். பிறகு அமைதியாகி கொண்டாள். அவன் சொன்னது போலவே எது பேசினாலும் சண்டையில்தான் முடிந்தது அனைத்தும். அவனுக்காக இல்லையென்றாலும் தனக்கு தலைவலி வராமல் இருக்கவாவது அமைதி காக்கலாம் என்று நினைத்தாள் அபிராமி.

வீட்டின் முன்னால் அபிராமி இறங்கினாள். அவசரமாக வீடு நோக்கி நடந்தாள்

"அபிராமி.." அழைத்து நிறுத்தினான்.

எரிச்சலோடு திரும்பியவளிடம் பேக்கை நீட்டினான் கார்த்திக்.

"மறந்துட்ட.."

பேக்கை பிடுங்கிக் கொண்டு உள்ளே நடந்தாள்.

பாட்டி இவளை கண்டதும் வாசலுக்கு ஓடினாள்.

அபிராமி தன் அறைக்குள் புகுந்தாள். அவள் முகம் அலம்பி உடைமாற்றி வந்தபோது பாட்டி என்னவோ முனகிக் கொண்டிருந்தாள்.

"என்னவாம்.?" சந்தேகமாக கேட்டபடி தன் அண்ணனின் அருகே அமர்ந்தாள்.

"அந்த ஆபிசர் காலையில் இருந்து சாப்பிடலையாம். அதனால பாட்டிக்கு மனசு வருத்தமாம்!" கேலியும் கடுப்புமாக சொன்னான் முத்தமிழ்.

'ஓ..‌ அதான் சாருக்கு கோபம் வந்துடுச்சோ.!' என்று காரில் நடந்ததை நினைத்துப் பார்த்தாள்.

அவனுக்கு பசியை தாக்கு பிடிக்க தெரியாது. புவனாவும் யமுனாவும் மூன்று வேளைக்கு பதில் ஆறு வேளை சோற்றை தந்து நன்றாக அவனின் பசியை வளர்த்தி விட்டிருந்தார்கள். அதனால் பசியின் வலி பொறுக்க முடியாத சமயங்களில் சாதாரண பேச்சை கூட மாடு போல கத்திதான் சொல்லுவான்.

"தாத்தாவை சாடையா திட்டிட்டே இருக்காங்க பாட்டி. பாவம் தாத்தா!" கவலையோடு சொன்னான் முத்தமிழ்.

அபிராமியின் கண்கள் தாத்தாவை தேடியது. அவர் அங்கே எங்கேயும் இல்லை.

"நீ வரும் முன்னாடி மொட்டை மாடிக்கு போனாரு. இன்னும் கீழே வரல.." தகவல் சொன்னான் முத்தமிழ்.

பாட்டி இரண்டு டம்ளர் தேனீரை எடுத்து வந்தாள். அண்ணன் தங்கையின் முன்னால் நங்கென்று டம்ளரை வைத்தாள்.

"அடுத்த மனுசனை பட்டினி போட்டுதான் உங்க வயிறு நிறையணுமா?" என்று கேட்டபடி சமையலறை நோக்கி நடந்தாள்.

தாத்தாவின் நிலை நினைத்து ஏற்கனவே உள்ளுக்குள் கோபத்தில் இருந்த அபிராமி பாட்டியின் சொல்லால் அதிகம் காயப்பட்டு விட்டாள்.

அவளுக்காக பாட்டி வைத்து விட்டு சென்ற தேனீர் டம்ளர் பாட்டியின் கால்களை தாண்டி பறந்து சென்று தரையில் விழுந்தது.

பாட்டி இடுப்பில் கையை ஊன்றியபடி திரும்பி பார்த்தாள்.

அபிராமி கண்கள் சிவக்க பாட்டியை முறைத்தாள்.

"அவனை விட உங்களுக்கு என்னை பத்தி நல்லா தெரியும். உலகமே அழிஞ்சாலும் நான் அவனோடு வாழ போக மாட்டேன்னு தெரியும். அவனை நல்புத்தி சொல்லி அனுப்பி வைக்கதான் உங்களுக்கு முடியல. அட்லீஸ்ட் எங்களையாவது நிம்மதியா இருக்க விடுறிங்களா.?" என்று பொறுமையான குரலிலேயே கேட்டாள்.

பாட்டி கீழே கிடந்த தேனீர் டம்ளரை பார்த்தாள்.

"உன் கோபம் இப்படிதான் அபி.. அவன் மேல இருக்கற கோபத்தை டீ மேல காட்டின. உன் மேல இருக்கற கோபத்தை அவன் மேல காட்டின.! ஒரு விசயத்தை நல்லா நினைவுல வச்சிக்க. நம்ம வாழ்க்கையில நடக்கற ஒவ்வொரு விசயத்துக்கும் நாம மட்டும்தான் பொறுப்பு. அவன் உன்னை ஏமாத்தினான். ஆனா நீதான் ஏமாந்த. அவன் கட்டாயப்படுத்தினான். ஆனா நீதான் கட்டுப்பட்ட.. ஆணோ பொண்ணோ அவங்க மனசை உடைக்கிறது ரொம்ப தப்பு. அவன் அவசரத்துல செஞ்ச தப்பை நீ திட்டமிட்டு செஞ்சிட்ட. இனியும் அதையே தொடராதே!" என்றவள் தரையில் கிடந்த தேனீர் டம்ளரை கையில் எடுத்தாள்.

"உன் நியாயமே எனக்கு புரியல பாட்டி. நான் ஏமாந்தேன். நான்தான் கட்டுப்பட்டேன். இல்லன்னு நானும் சொல்லல. ஆனா இனி அந்த தப்பை பண்ண மாட்டேன்னுதான் சொல்றேன். அதை நீ புரிஞ்சிக்க மாட்டேங்கற.! பிடிக்காத, எனக்கு செட்டாகாத ஒரு வட்டத்துக்குள்ள என்னை நிறுத்தணும்ன்னு உனக்கு என்ன ஆசை.?" என்று திருப்பிக் கேட்டாள் அபிராமி.

"காலையில் இருந்து தலைவலி மட்டும்தான் எனக்கு. என் வீட்டையே எனக்கு நரகமா மாத்தணும்ன்னு அவன் டிரை பண்றான். நீங்க அதுக்கு ஹெல்ப் பண்றிங்க! சொந்த பேத்தியோட மனசை புரிஞ்சிக்க முயற்சி செய்ய மாட்டேங்கிறிங்க. ஏன் நான் வெறும் பொண்ணுங்கறதாலா.?" என கேட்டவளுக்கு கடைசி வாக்கியங்களில் கண்கள் கலங்கி விட்டது.

பாட்டி பேத்தியையே பார்த்தாள். அபிராமி முகத்தை திருப்பி கண்களை துடைத்துக் கொண்டாள்.

"இவ்வளவு புத்தி இருப்பவ இரண்டாம் நாளே விலகி வந்திருக்கணும். இப்பவும் கெட்டு போகல. உன் அண்ணன்கிட்ட சொல்லு. அவன் கார்த்திக்கை கொன்னு போட்டுடுவான். அப்புறம் உனக்கு எந்த தொல்லையும் இருக்காது. ஒரு வருசம் கூடவே வாழ்ந்து அவனை சின்னாபின்னமா மாத்தியதுக்கு பதிலா இந்த மாதிரி ஈஸியான வழியை முயற்சி பண்ணியிருக்கலாம் நீ!" என்ற பாட்டி டம்ளரோடு சமையலறைக்கு சென்றாள்.

முத்தமிழ் எழுந்து வந்து தங்கையின் தோள் பற்றினான். "பிரஷரை ஏத்திக்காத. அவனே இலவு காத்த கிளியா காத்திருந்து திரும்பி போயிடுவான். அதுவரை பொறுமையா இரு. உன்னை டென்ஷன் பண்ணனும்ன்னுதான் அவன் நினைக்கிறான். அது நடக்க வேணாம்.." என்றான்.

அபிராமி சரியென்று தலையசைத்தாள்.

தரையில் ஒரு ஓரமாக அமர்ந்து பூக்களை தொடுத்துக் கொண்டிருந்த அம்மாவை திரும்பி பார்த்தாள். அங்கு நடந்த எந்த விசயத்திற்கும் தன்னோடு சம்மந்தம் இல்லை என்பது போல இருந்தது அவளின் நடவடிக்கை.

"அவன் கெட்டிக்காரன் இல்ல‌? வீட்டோட தலைவிகளை கைக்குள்ள போட்டுக்கிட்டா வீடு எரியும். நாம உள்ளே புகுந்து இருக்கறதை எடுத்துடலாம்ன்னு திட்டம் போட்டிருக்கான்.." என்றாள் கிசுகிசுப்பாக.

முத்தமிழ் அவளின் தலையை வருடி விட்டான். "டோன்ட் வொரி.." என்றான்.

மொட்டை மாடியில் தனியாக அமர்ந்திருந்தார் தாத்தா. இருள் அவ்விடத்தில் மெள்ள பரவிக் கொண்டிருந்தது. அபிராமி அங்கிருந்த விளக்கை எரிய விட்டாள். தாத்தா திரும்பி பார்த்தார்.

பேத்தியை பார்த்தவுடன் அமர்ந்திருந்த கைப்பிடி சுவரில் இருந்து இறங்கி நின்றார்.

அபிராமி அவரின் அருகே சென்றாள். தாத்தாவின் வலது கரத்தில் தன் கரத்தை கோர்த்தாள்.

"சாரி.." என்றாள் தரை பார்த்து.

தாத்தா பேத்தியை வியப்பாக பார்த்தார்.

"எதுக்கு?"

"என்னாலதான் பிரச்சனை. அன்னைக்கு நான் சரியா இருந்திருந்தா இன்னைக்கு நம்ம குடும்பத்துல பிரச்சனை வந்திருக்காது.." என்றாள் வருத்தமாக.

"தப்பு எதுவும் இல்லடா. சிறு இடறல். அவ்வளவுதான்‌. இடறல் கூட இல்லன்னா அப்புறம் எப்படி நாம மனுசங்களா இருக்க முடியும்?" என்றார்.

"பாட்டி கொஞ்சம் ஓவராதான் பண்றாங்க.." என்றாள் சிடுசிடுப்போடு.

தாத்தா சிரித்தார்.

"அந்த கிழவி எப்பவும் அப்படிதான். நீ பெருசா எடுத்துக்காத. நாம பண்ற டார்ச்சர்ல அவனா ஓடணும். நாம எப்பவும் பயந்து பின்வாங்க கூடாது. அவன் ஆரோக்கியமான விளையாட்டை விளையாட ஆசைப்படுறான். நாமும் ஆரோக்கியமாவே விளையாடுவோம்.." என்றார் ரகசிய சிரிப்போடு.

"ஆனா அம்மா பாட்டி.." இழுத்தாள் அபிராமி.

"அவங்க கிடக்கறாங்க. அவங்களை கொஞ்ச நாளைக்கு பார்வைக்கு தென்படாத மனுசங்களா நினைச்சிக்க வேண்டியதுதான்!" என்றவர் பேத்தியை அழைத்துக் கொண்டு கீழே வந்தார்.

ஒரு வாரம் கடந்தது. வீடு அதே போலதான் இருந்தது. அபிராமியின் அம்மாவும் பாட்டியும் தங்களின் எதிர்ப்பை வெளிப்படையாகவே வெளிக்காட்டினார்கள்.

அப்பா வெகு நேரங்களை வெளியிலேயே கடத்தினார். தாத்தா பாட்டியை பார்க்கும் போதெல்லாம் வெறுப்பை காட்டினார்.

அபிராமியால் அதற்கு மேல் பொறுக்க முடியவில்லை.

கார்த்திக் வழக்கம்போல அபிராமியின் வீட்டிற்கு வந்தான்.

கல்லூரி செல்வதற்கான நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. அவள் வாசலில் வந்து காத்திருப்பாள் என்று நினைத்திருந்தான் அவன். ஆனால் அவள் இன்னும் வீட்டை விட்டு கூட வெளிவரவில்லை.

கைக்கடிகாரத்தை பார்த்தவன் அவசரமாக வீட்டிற்குள் புகுந்தான்.

"அ.." அவளை அழைக்க இருந்தவன் வீட்டிலிருந்தவர்களின் முகங்களை கண்டுவிட்டு தயங்கி நின்றான்.

பாட்டியும் அம்மாவும் தரையை பார்த்த வண்ணம் அமர்ந்திருந்தார்கள்.

தாத்தாவும் அப்பாவும் சோஃபாவில் சோகமாக அமர்ந்திருந்தார்கள்.

கார்த்திக் வீட்டுக்குள் வந்ததும் கண்டதும் தனது அறைக்குள்ளிருந்து வேகமாக வந்த முத்தமிழ் இவனின் முகத்தில் ஒரு குத்து விட்டான்.

கார்த்திக் இந்த தாக்குதலை எதிர்பார்க்கவில்லை. ஆனால் முத்தமிழ் அடுத்த அடியை தர கையை ஓங்கியபோது சட்டென்று பின்வாங்கி நண்பனின் கையை அந்தரத்திலேயே நிறுத்தினான்.

"ஏன் அடிக்கற.?" என்றான் கோபத்தோடு.

"என் தங்கச்சி வீட்டை விட்டு போயிட்டா.." வீடே அதிரும்படி கத்தினான் முத்தமிழ்.

கார்த்திக் அதிர்ச்சியோடு அவனை பார்த்தான்.

"உன்னாலதான் என் தங்கச்சி இரண்டாம் முறையா எங்க வீட்டை விட்டு போயிட்டா. முத முறையாவது அவ உங்க வீட்டுல இருக்காங்கறதாவது எங்களுக்கு தெரிஞ்சது. ஆனா இப்ப அவ எங்கே இருக்கான்னே தெரியல. எல்லாத்துக்கும் காரணம் நீதான்.." என்றவன் அதிர்ந்து நின்றவனின் தாடையிலும் கழுத்திலும் குத்துக்களை தந்தான்.

அபிராமி பற்றிய யோசனையில் ஆழ்ந்து விட்ட கார்த்திக்கிற்கு இவனது அடிகளை தடுக்க கூட புத்தி வேலை செய்யவில்லை.

"அவனை அடிச்சி கொன்னுடாதடா.." என்று ஓடி வந்து முத்தமிழை விலக்கி நிறுத்தினாள் பாட்டி.

"நீதான்னே அன்னைக்கு என் தங்கச்சிக்கிட்ட சொன்ன.. இவனை கொன்னிருந்தா ஈஸியா வேலை முடிஞ்சிருக்குமேன்னு! என் தங்கச்சிக்கு இவனை சாகடிக்கற அளவுக்கு கெட்ட மனசு இல்ல. விளையாட்டு போல அவளுக்கு தெரிஞ்ச அதிகப்பட்ச தண்டனை காதல்ன்னு நினைச்சி இவன் மனசுல காதலை வர வச்சிட்டு பிரிஞ்சி வந்தா.. ஆனா அவளை நீங்கதான் இன்னும் அதிகமா உடைச்சிட்டிங்க.." என்றான்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN