காதல் கடன்காரா 41

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அவர்கள் சொன்னதை கார்த்திக்கால் நம்ப முடியவில்லை.

பாட்டியை பார்த்துக் கத்திக் கொண்டிருந்த முத்தமிழியை தன் பக்கம் திருப்பினான் கார்த்திக்.

"அபிராமி எங்கே?" என்றான்.

அவன் நெஞ்சில் கை வைத்து பின்னால் தள்ளினான் முத்தமிழ். "அவ போயிட்டா. எங்க வீட்டை விட்டு ஓடி போயிட்டா. உனக்கு பயந்து ஓடிட்டா. இந்த வீட்டோட சூழ்நிலையில் தன்னால தாக்கு பிடிக்க முடியாதுன்னு பயந்து ஓடி போயிட்டா!" என்றான் கத்தலாக.

கார்த்திக் நெற்றியை பிடித்தான்.

"மறுபடியும் டிராமா பண்றிங்களா.?" என்றான் நண்பனை பார்த்து.

பற்களை கடித்தபடி வந்து மீண்டும் அவனுக்கு அடியை தந்தான் முத்தமிழ்.

"என்னை பார்த்தா டிராமா பண்ற மாதிரி இருக்கா.?" கோபமாக கேட்டவனை பார்த்து வலியோடு சிரித்தவன் "இதுக்கு முன்னாடி டிராமா பண்ணாத மாதிரியே கேட்கற.." என்றான்.

அந்த வீட்டை சுற்றி பார்த்தவன் "ஏய் அபிராமி.. மரியாதையா வெளியே வாடி.. உன் டிராமா எனக்கு சலிச்சி போச்சி.." என்றான்.

"அவனை கொன்னு போட்டுடு தமிழ்.." என்ற தாத்தா கார்த்திக்கை வெறுப்போடு முறைத்துவிட்டு வெளியே நடந்தார்.

பாட்டி மூக்கை உறிஞ்சினாள். முந்தானையால் வாயை பொத்தியபடி ஓசை வராமல் அழுதாள். பேத்தி இப்படி செய்வாள் என்று அந்த வயதானவள் கனவில் கூட நினைக்கவில்லை.

அழுத கண்களோடு அமர்ந்திருந்தாள் அபிராமியின் அம்மா.

கார்த்திக்கால் நம்பவும் முடியவில்லை. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. பெண்கள் இருவரும் டிராமா செய்ய வேண்டிய அவசியம் இல்லையென்று அவனுக்கு தெரியும். ஆனால் அபிராமி ஏன் செல்ல வேண்டும் என்று தன்னையே கேட்டுக் கொண்டான். தான் அவள் பின்னால் சுற்றியது தவறா எனும் ரீதியில் யோசித்தான். மீண்டும் தவறு செய்து விட்டோமா என்று குழம்பினான்.

"உன்னை கொல்ல மாட்டேன்னு என் தங்கச்சிக்கு நான் சத்தியம் பண்ணி இருக்கேன். இருந்தாலும் கோபம் முழுசா என்னை பிடிக்கும் முன்னாடி இங்கிருந்து போயிடு!" என்றான் முத்தமிழ்.

கார்த்திக் சிலையாய் நின்றிருந்தான். என்ன செய்வதென்று அவனுக்கு புரியவில்லை.

அவனின் பின்கழுத்தில் கை வைத்து அவனை தன் வீட்டிலிருந்து வெளியே தள்ளினான் முத்தமிழ்.

வாசலில் வந்து தடுமாறி நின்றான் கார்த்திக். அந்த வீட்டை திரும்பி பார்த்தான். அத்தனை பேர் இருந்தும் அந்த வீடு அனாதை போல தோன்றியது.

அபிராமியின் எண்ணுக்கு அழைத்துப் பார்த்தான். ஸ்விட்ச் ஆப் என்று வந்தது. அவள் இல்லை என்ற நிதர்சனத்தை புரிந்துக் கொள்ள அவன் மனதிற்கு சக்தி இல்லை.

வெளிச்சம் சுட்டது அவனை. வெப்பம் அவனை தன் பாதையிலிருந்து வழுக்கி விட்டது. காற்றெல்லாம் அனலாய் மாறியது. பார்க்கும் இடமெங்கும் முட்டுச்சந்தாக இருந்தது.

வீங்கிப் போயிருந்த வலது கன்னத்தோடு வீடு வந்து சேர்ந்தான் கார்த்திக்‌.

"காலையிலேயே அந்த வீட்டுக்கு அடிமை பண்ண போனியே.. என்ன ஆச்சி? ஏன் திரும்பி வந்துட்ட?" நக்கலாக கேட்டாள் புவனா. தொலைக்காட்சியை பார்த்தபடி அமர்ந்திருந்தாள் அவள்‌.

நின்று போன சிந்தையோடு அவளருகே வந்து அமர்ந்தான்.

"உனக்கு காலேஜ் இல்லையா?" என்றான்.

புவனா கேலியாய் சிரித்தாள்.

"இன்னைக்கு ஞாயித்து கிழமைடா லூசு பயலே! இது கூட தெரியாம அந்த ஆரவல்லிக்கு சேவகம் செய்ய போயிருக்க!" என்றவளின் முகம் சட்டென்று மாறியது.

"என்னாச்சி உனக்கு?" என கேட்டவள் அவனின் முகத்தை பற்றி தன் புறம் திருப்பினாள்.

கன்னத்தில் அடி வாங்கிய அச்சு அப்படியே தெரிந்தது.

"என்னடா ஆச்சி?" அதிர்ச்சியோடு கேட்டவளிடம் "அவ என்னை விட்டுட்டு போயிட்டா புவி! எனக்கு ஒரு சான்ஸ் கூட கொடுக்காம ஓடிட்டா! என்னை நிருபிக்க கூட டைம் தரல!" என்றான் வருத்தத்தோடு.

புவனாவிற்கு ஒன்றும் புரியவில்லை.

"நான் திருந்திட்டேன்னு சொன்னேன். ஆனா நம்பல அவ! வாய்ப்பு கொடுன்னு சொன்னேன். தரல அவ!" என்றவன் முகத்தை மூடிக் கொண்டு குலுங்கினான்.

புவனாவிற்கும் அழுகையாக வந்தது. 'அழுகை வரும் முன் கத்தி விடு புவனா!' என்று எச்சரித்தது அவளின் மனம்.

ஆனால் அவள்தான் ஏமாந்து விட்டாள். அண்ணனின் கண்ணீர் அவளையும் உடைத்து விட்டது. அவனை அணைத்துக் கொண்டவள் "அவ இல்லன்னா உனக்கு வேற பொண்ணா இல்ல.. விடுடா.." என்றாள் அழுகை குரலில்.

இடம் வலமாக தலையசைத்தான் கார்த்திக்.

"உனக்கு புரியாது. அவ இல்லன்னா எனக்கு உலகமே இல்ல!" என்றான்.

வெளியே சென்று விட்டு வந்த யமுனா இவர்கள் இருவரையும் விந்தையாக பார்த்தாள்.

விசயத்தை கேட்டாள். கார்த்திக் விவரித்து சொன்னான்.

"அதுதான் அன்னைக்கே சொன்னேன். அவ வேணாம் விட்டுடுடான்னு! கேட்டியா?" என்ற அம்மா அவனை கோபத்தோடு பார்த்தாள்.

கார்த்திக் எதிர்த்து பேசும் நிலையில் கூட இல்லை.

அமர்ந்திருந்த சோபாவிலேயே இரவு வரை குறுங்கிப் படுத்து கிடந்தான். அவனை பரிதாபமாக பார்த்தார் முருகன்.

அவன் மீண்டும் சரியாக எத்தனை நாட்கள் ஆகுமோ என்று கவலைக் கொண்டாள் அம்மா‌.

முத்தமிழ் போலிஸ் கம்ப்ளைண்ட் கொடுக்கலாம் என்று இருந்த நேரத்தில் அவனுக்கு அறிமுகமில்லாத ஒரு எண்ணிலிருந்து அழைப்பு வந்தது.

"அண்ணா நான் அபிராமி.."

முத்தமிழுக்கு போன உயிர் திரும்பி வந்தது.

"அறிவு இருக்கா உனக்கு? எங்கே போய் தொலைஞ்ச?" என்று எரிந்து விழுந்தான்.

"சாரிண்ணா! எனக்கு அங்கே பிடிக்கல. அதான் கிளம்பிட்டேன். பாட்டிக்கிட்டயும், அம்மாக்கிட்டயும் சண்டை போடாத. அவங்களை அவன் பிரைன் வாஷ் பண்ணிட்டான். அவங்களுக்கு என் வலி புரியாது.."

"நீ எங்கே இருக்கன்னு சொல்லு!"

"வேணாம்ண்ணா. நானே அடிக்கடி போன் பண்றேன். கொஞ்ச நாள்.. எல்லாம் சரியா போன பிறகு திரும்பி வரேன்!" என்றவள் இணைப்பை துண்டித்துக் கொண்டாள்.

முத்தமிழ் அந்த எண்ணுக்கு அழைத்தான். ஆனால் அழைப்பு இணைக்கப்படவில்லை.

தங்கை அழைத்து பேசினாள் என்று தந்தையிடமும் தாத்தாவிடமும் தகவல் சொன்னான். ஆனால் பாட்டியிடமும் அம்மாவிடமும் சொல்லவில்லை. சில நாட்கள் கழித்து பிறகு சொல்லலாம் என்று சொல்லி விட்டார் அப்பா.

இரண்டு நாட்கள் தன் அறையை விட்டே வெளிவரவில்லை கார்த்திக். உணவை கூட திட்டி திட்டி தந்து விட்டு வந்தாள் புவனா.

"மகராசி என்ன நேரத்துல வீட்டுக்குள்ள காலடி எடுத்து வச்சாளோ, உன்னை கொலையா கொன்னுட்டு இருக்கா!" என்று திட்டினாள் புவனா.

கார்த்திக் யாருக்கும் பதில் சொல்லவில்லை. அபிராமி மீண்டும் தன்னை பாழுங்குழியில் தள்ளி விட்டுவிட்டாள் என்று மட்டும் புரிந்தது.

மூன்றாம் நாள் காலையில் அவனை தேடி வந்தாள் சுவாதி.

"ரூம்குள்ளதான் இருக்கான்ம்மா!" என்ற யமுனா கார்த்திக்கின் அறை கதவை திறந்தாள்.

கட்டிலின் அருகே முட்டிக்காலை பிடித்தபடி அமர்ந்திருந்தவன் சுவாதியை கண்டதும் எழுந்து நின்றான்.

சுவாதி தயக்கமாக அந்த அறைக்குள் நுழைந்தாள்.

"ம்.. ஹாய் அண்ணா!" என்றாள்.

கார்த்திக் நாற்காலி ஒன்றை இழுத்து போட்டான். "உட்காரும்மா!" என்றான்.

சுவாதி தன் கைப்பையை திறந்தாள்.

"நான் கிளம்பணும் அண்ணா. அம்மா உடனே வர சொல்லி இருக்காங்க!" என்றவள் அவனிடம் கடிதம் ஒன்றை நீட்டினாள்.

"அபிராமி இதை உங்ககிட்ட தர சொன்னா. நான் பிரிக்கல. ஆனா அவ ஏதாவது மனசு கஷ்டமா எழுதியிருந்தா படிக்கறதை நிறுத்திடுங்க. அவ இதை தரும்போது சீரியஸா எடுத்துக்கல நான். ஆனா அவ எங்கேயோ போயிட்டான்னு தெரிஞ்ச பிறகுதான் சீரியஸ்னெஸ் புரிஞ்சது.." என்றவள் "நான் கிளம்பறேன். அப்புறம் பார்க்கலாம்!" என்றுவிட்டு அங்கிருந்து நடந்தாள்.

கார்த்திக் தன் கையிலிருந்த கடிதத்தை அவசரமாக பிரித்தான்.

"எங்கே இருக்கேன்னு இதுல எழுதி இருக்கியா?" என கேட்டபடி பிரித்து படித்தான்.

"சாரி கார்த்திக். உன்னோட விளையாட்டுல என்னால கடைசி வரை நின்னு விளையாட முடியல. நீ நினைக்கிற மாதிரி இல்ல நான். ரொம்ப டிபிகல்ட்டான மென்டாலிட்டி உடைய ஆள் நான். நீ என் எதிரி. உன்னை பழி வாங்கறதுல எனக்கு எந்த தயக்கமும் கிடையாது. ஆனா நீ என்னை வம்பிழுக்காம என் குடும்பத்துக்குள்ள குழப்பத்தை தந்துட்ட! எங்க வீடே இழவு வீடு போல இருக்கு. நீ எங்க வீட்டுக்குள்ள வந்தவுடனே எங்களோட மகிழ்ச்சியான நாட்கள் மறைஞ்சி போயிடுச்சி. அணுதினமும் சண்டையும், முறைப்பும், வெறுப்புதான் எங்க வீட்டுல இருக்கு. நான் இதை விரும்பல. என் வீடு எப்பவும் அமைதியா இருக்கணும்.

அது மட்டுமில்லாம எனக்கு உன்னை பிடிக்கல. ஆனா நீ புரிஞ்சிக்காம என்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்ற! எதுக்கு இவ்வளவு கட்டாயப்படுத்துற? நாம சேர்ந்து வாழவே முடியாது. இது ஏன் உனக்கு புரியல. என்னை கோழையா நினைச்சிக்க. நானே தோத்துட்டேன்னு கூட வச்சிக்க. என்னை கெட்ட வார்த்தையில் கூட திட்டு. பொம்பளை ஜென்மமே இப்படிதான்னு எனக்காக உங்க அம்மாவையும் சேர்த்து கூட வெறு. ஆனா இனியும் என்னால உன்னோடு குப்பை கொட்ட முடியாது. அவ்வளவுதான்

சொந்த வீட்டை விட்டு என்னை ஓட வைக்கிற நீ! மறுபடி எப்ப வருவேன்னு எனக்கு தெரியாது. ஆனா நான் வரும் முன்னாடி நீ என்னை மறந்துடுவன்னு நம்புறேன்!

பிளாக்மெயில் பண்ணி கூட்டி போன போதும், ஹாஸ்பிட்டல்ல படுத்துட்டு இருந்தபோதும், இப்ப இந்த ஒரு வாரமும் நீ என்னை ரொம்ப உடைச்சிட்ட! நீ உடைக்கும் அளவுக்கு என் மனசு பலவீனமா இருக்கறது என் தப்பு. நிச்சயம் இந்த மனசை கல்லா மாத்திட்டுதான் திரும்பி வருவேன் நான். ஏனா என்னை என்னை தவிர வேறு யாரும் உடைக்க கூடாது. குட் பை.."

லெட்டரை கீழே விட்டான் கார்த்திக்.

கட்டிலில் பொத்தென்று அமர்ந்தான். ஏன் இவ்வளவு சோதனை என்று புரியவில்லை.

அவன் நல்லவன் கெட்டவன் என்பதெல்லாம் இரண்டாம் பட்சம். அவள் இவன் பேச கூட வாய்ப்பு தரவில்லை என்பதுதான் நிஜம்‌. அழ கூட தெம்பில்லாமல் போனது அவனுக்கு.

நாட்கள் நகர்ந்தது.

அதிகாலை நேரம். அலாரம் இல்லாமலேயே எழுந்து அமர்ந்தான் கார்த்திக். அரை இருளில் இரை தேடி பறந்துக் கொண்டிருந்த பறவைகள் திறந்திருந்த ஜன்னல் வழியே தென்பட்டன‌.

பறவைகளின் சுறுசுறுப்போடு மனிதன் வாழ்ந்த வரை நாட்கள் சொர்க்கமாகதான் இருந்தன என்று எண்ணியவன் குளிக்க கிளம்பினான். சில்லென்ற தண்ணீர் புத்துணர்வை தந்தது.

குளித்து விட்டு வெளியே வந்தான்‌. கட்டில் அருகே இருந்த மேஜையின் மீது தேனீர் கோப்பை இருந்தது. அவசரமாக எடுத்து அருந்தினான்.

அபிராமியை கடைசியாகப் பார்த்து இன்றோடு மூன்று வருடங்கள் ஆகிவிட்டது என்பதை அந்த அறையிலிருந்த காலண்டர் அவனுக்கு அறிவித்தது.

அபிராமியின் கழுத்தில் தங்கியிருக்க வேண்டிய தங்க தாலி அந்த அறையிலிருந்த ஆணி ஒன்றில் மாட்டப்பட்டு இருந்தது. அறையை விட்டு செல்லும் முன் அந்த தாலியை ஒரு தரம் பார்த்துவிட்டு கிளம்பினான்.

வயலில் பருத்திகள் வெடிக்க ஆரம்பித்திருந்தன. வெயில் அதிகம் வரும் முன் பறித்தால்தான் சரிப்பட்டு வரும் என்ற அவசரத்தில் கிளம்பிக் கொண்டிருந்தான் அவன்.

"ஏங்க.. சாப்பாட்டுக்கு வந்திருவிங்களா.?" இவனை கண்டுவிட்டு சமையலறையிலிருந்து கேட்டாள் சுவாதி.

"இல்ல. எனக்கு வேலை இருக்கு.." என்றவன் வேக நடையோடு கிளம்பினான்.

பருத்தி காட்டில் ஐந்தாறு பெண்கள் கூடையோடு நடந்துக் கொண்டிருந்தார்கள். இவனின் மேற்பார்வை இல்லாவிட்டால் வேலை வேகமாக நடக்காது. அதனால்தான் காலையிலேயே கிளம்பி வந்து விட்டான் இவன்.

வயலில் இருந்த பெண்கள் இவனை கண்டுவிட்டு இரு மடங்கு வேகத்தில் வேலையை செய்ய ஆரம்பித்தனர்.

"உங்க குட்டி வாலை எங்கே இன்னைக்கு காணம்?" பருத்தியை பறித்தபடி கேட்டாள் ஒருத்தி.

"தூங்கிட்டு இருக்கான். அவன் எழும் முன்னாடி வந்துட்டேன் நான்.." என்றவன் வேட்டியை தூக்கி கட்டியபடி தானும் பருத்தியை பறித்து கூடையில் நிரப்ப ஆரம்பித்தான்.

அபிராமி இந்த விசயத்தில் உண்மையைதான் சொல்லி இருந்தாள். அவன் ஈடுபாட்டோடு முயலுகையில் இந்த வயலும் பொன்னைதான் வாரி வழங்கிக் கொண்டிருந்தது.

எப்படியோ ஒவ்வொரு விசயத்திலும், ஒவ்வொரு நிமிடத்திலும் அவனின் நினைவுகளில் அபிராமிதான் வாழ்ந்துக் கொண்டிருந்தாள்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN