மௌனங்கள் 28

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
தன சேகர் POV

விஷால் இடம் வலமாக தலையசைத்தான்.

"வீராசாமி சார் சாக கூடாது சார். ஷர்மாவுக்கு போன வாரம்தான் மேரேஜ் ஆச்சி.." என்றான் கோபத்தோடு.

"இந்த துறைக்கு பணியாற்ற வந்த பிறகு சாவை பார்த்து பயப்பட கூடாது விஷால். ஆனா நமக்கு புவின் உயிரோடு வேணும். அப்பதான் அவனுக்கு பின்னாடி இருக்கற கூட்டத்தை நம்மால பிடிக்க முடியும்.." என்றேன்.

"ஏதாவது ஒன்னு செஞ்சே ஆகணும் சா.." அவன் முடிக்கும் முன் அவனின் போன் ஒலித்தது. எடுத்து பேசியவன் கலவரமாக என்னை பார்த்தான். போன் இணைப்பை துண்டித்துக் கொண்ட பிறகு என் பக்கம் திரும்பினான். அவனின் நெற்றியில் வியர்வை பூத்திருந்தது. தடுமாறிய மனதோடு இருக்கிறான் என்று புரிந்தது

"இன்னும் பத்து நிமிசத்துல இந்த கட்டிடம் துப்பாக்கி சூட்டுக்கு உள்ளாக போகுது சார்.." என்றான்.

இன்றைய நாளில் இரண்டாவது அதிர்ச்சி.

"யார் தகவல் சொன்னது?"

"எதிரி கூட்டத்துல இருக்கும் நம்மோட கழுகு.."

அந்த கழுகுதான் தாமுவின் அருகில் புவின் இருக்கிறான் என்ற விசயத்தை எங்களுக்கு நிச்சியத்து தந்தான். ஆனால் அவனாலும் தாமுவின் தனி வீட்டை கண்டுப்பிடிக்க முடியாமல் போனதுதான் எங்களின் சறுக்கல்.

யோசித்தேன். அவசரமாக செயல்பட்டாக வேண்டும். துப்பாக்கியோடு வரும் அனைவருமே புவினை போன்றவர்கள்தான். அவர்களால் நிச்சயம் நாட்டுக்கு கேடு மட்டும்தான்.

இந்த கட்டிடத்தில் இப்போது என்னோடு சேர்த்து பன்னிரெண்டு பேர் இருக்கிறோம். நாங்கள் போராடினால் எதிரே வருபவர்கள் நூறு பேராக இருந்தாலும் வெற்றி எங்களுக்குதான்.

ஆனால் வேகத்தை விட விவேகமாக செயல்பட வேண்டும் இப்போது. என் குழுவில் இருக்கும் யாரையும் இழக்க விரும்பவில்லை நான்.

"விஷால் இந்த கட்டிடத்தில் இருக்கும் எல்லோருக்கும் மெஸேஜ் அனுப்பு.. உடனே எல்லோரும் இந்த கட்டிடத்தோட பின்வாசல் வழியே வெளியே போகணும்ன்னு சொல்லு. இங்கிருந்து இருநூறு அடி தள்ளி போகணும்ன்னு சொல்லு!" என்றேன்.

விஷால் போனை எடுத்தான். அவனுக்குள் சந்தேகம் இருந்தாலும் கேள்வி கேட்காமல் மெஸேஜ்களை அனுப்பினான்.

அறையை விட்டு வெளியே நடந்தேன்.

"வசி.." தூரத்தில் நின்றுக் கொண்டிருந்த பயிற்சி காவலனை அழைத்தேன்.

"சார்.." ஓடி வந்து என் முன் நின்றான் அவன்.

"புவினோட வீட்டுல இருந்து எடுத்த வெடிகுண்டுகள் நம்ம கேரேஜ்ல இருக்கும். சீக்கிரம் அது எல்லாத்தையும் எடுத்துட்டு வா.." என்று சாவியை அவனிடம் வீசினேன்.

வசி சரியென தலையசைத்து விட்டு ஓடினான்.

"எல்லாத்தையுமே எடுத்துட்டு வா.." கத்தினேன் நான்.

"சார் மெஸேஜ் எல்லோருக்கும் அனுப்பிட்டேன்.." என்றான் விஷால்‌.

"வசி கொண்டு வர பாமை இந்த கட்டிடம் முழுக்க வைக்க போறோம்‌ உள்ளே எத்தனை பேர் வந்தாலும் அவங்க எல்லோரும் காலியாகணும். இவனுங்க கண்டிப்பா கீழ் மட்ட வேலையாட்களாதான் இருப்பாங்க. இவனுங்களை பிடிச்சி வச்சி அரசாங்கம் சார்ப்பில சோறு போடுறத்துக்கு பதிலா இந்த கட்டிடத்தை வேறு இடத்துல புதுசா கட்டிக்கலாம்.." என்றேன்.

"ஆனா சர்மா சார், வீராசாமி சார்.." தயக்கமாக கேட்டான்.

"மெஸேஜை மேல் அதிகாரிக்கு அனுப்பி இருக்கேன் விஷால். நம்மோட இக்கட்டான சூழலை பத்தியும் வாய்ஸ் மெயில்ல சொல்லி அனுப்பி வச்சிருக்கேன்.. பத்து நிமிசத்துக்கு பிறகுதான் நாம எதையும் யோசிக்க முடியும்!" என்றேன்.

புரிந்துக் கொண்டதாக தலையசைத்தான்.

வசி பாமோடு வந்தான். அதற்குள் மற்ற அதிகாரிகளும் எங்களின் அருகே வந்து விட்டனர்.

"டைம் பாம்ஸை எல்லோரும் எடுத்துக்கங்க. இந்த கட்டிடத்தோட வரவேற்பறையின் ஒவ்வொரு மூலையிலும் பாம்ஸை வைங்க. சரியா.." விஷால் வாட்சை பார்த்து விட்டு "இன்னும் எட்டு நிமிசம் சார்.." என்றான்.

"சரியா எட்டு நிமிசங்களுக்கு பிறகு பாம்ஸ் வெடிக்கணும். மறக்காம ஒரு பாமை வாசல்லயும் வைங்க. நம்மை அழிக்க வரவங்க யாரும் உயிரோடு இந்த கட்டிடத்தை விட்டு போக கூடாது.." என்று எச்சரித்தேன்.

"ஓகே சார்.." என்றவர்கள் பாமோடு கிளம்பினார்கள்.

"வசி.. நீ போய் என் ரூம்ல இருக்கும் சிகப்பு கலர் பைல்ஸ் எல்லாத்தையும் எடுத்து லாக்கர்ல வச்சி பூட்டு.." என்று சாவியை தந்து விட்டேன்.

"சார்.. முக்கியமானது அதெல்லாம்.."

"தெரியும் விஷால். என் லாக்கர் பயர் ரெசிஸ்டன்ட்.." என்றுவிட்டு சுற்றி முற்றி பார்த்தேன்.

"என்னவோ மிஸ் ஆகுது விஷால். எல்லாருக்கும் மெஸேஜ் அனுப்பிட்டியா?"

"அனுப்பிட்டேன் சார்.." என்றவன் நெற்றியில் அடித்துக் கொண்டான்.

"அந்த பொண்ணு சார்.. நான் போய் கூட்டி வரேன்.." என்றவன் ஓடினான்.

"மறக்காம அந்த டாக்டரை சீக்கரம் வெளியே அனுப்பிடு.." என்றேன்‌.

விஷால் POV

அந்த பெண்ணை எப்படி மறந்தேன் என்று என்னையே கேட்டுக் கொண்டேன்.

நான் அவளின் அறைக்கு சென்ற போது கதவு வெளிப்பக்கத்தில் தாழிடப்பட்டு இருந்தது. நான் தாழிடவில்லை.

அவசரமாக கதவை திறந்தேன். டாக்டர் அங்கே இல்லை. குழலி கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்தாள்.

ஓடிச்சென்று அவளின் தோளை பற்றி உலுக்கினேன்.

"குழலி அவசரம்.. எழு.." என்று கத்தினேன்.

அவள் அசையவேயில்லை என்பதை விட மற்றொரு விசயம் என்னவென்றால் அவளின் மேனி சில்லிட்டு போய் இருந்தது.

சந்தேகத்தோடு மணிக்கட்டை பிடித்து பார்த்தேன். சந்தேகப்பட்டது போலவே நாடி துடிக்கவேயில்லை. அதிர்ச்சியில் எனக்கு நாக்கு எழவில்லை.

எப்படி இது நிகழ்ந்திருக்கும். யோசிக்காமலேயே இது அந்த டாக்டரின் வேலைதான் என்று புரிந்தது.

போனை எடுத்து தனசேகருக்கு தகவல் சொன்னேன்.

"நமக்கு டைம் இல்ல விஷால். அந்த பொண்ணை அங்கேயே விட்டுட்டு வா.. நெருப்பு அவ ரூம் வரை பரவாம இருந்தா அப்புறம் வந்து பார்த்துக்கலாம்.." என்றார்.

அவசரத்தில் வேறு என்ன செய்ய முடியும் அவரால் மட்டும்? ஆனால் நான் அந்த டாக்டரை கொல்ல போகிறேன். அது மட்டும் உறுதி.

இமையோரம் ஈரம் ஆகும் முன் அந்த அறையை விட்டு வெளியே நடந்தேன். குழலியின் கடைசி பார்வை இன்னும் நெஞ்சில் இருந்தது. நான் பார்த்த எங்கூர் அழகி அவள். புவினுக்கு பதிலாய் என்னை இவள் விரும்பியிருக்கலாம் என்று வெட்கமே இல்லாமல் யோசித்துக் கூட இருக்கிறேன். இவளின் பயந்த சுபாவம்தான் இவ்வளவு தூரம் கொண்டு வந்து விட்டு விட்டது.

நாங்கள் அனைவரும் அந்த கட்டிடத்தை விட்டு கிளம்பினோம்‌.

நானும் சேகர் சாரும் கட்டிடத்தின் முன்புறம் இருந்த கடை ஒன்றில் மறைந்து நின்றோம். எங்கே அவர்கள் தாமதமாக வந்து விடுவார்களோ என்று கவலையாக இருந்தது. ஆனால் கவலைப்பட்டு முடிக்கும் முன்பே நான்கு வேன்கள் வந்து எங்களின் கட்டிடத்தின் முன்னால் நின்றது.

சும்மா சொல்ல கூடாது. நான்கு வேன்கள். அப்படியானால் அவர்களின் வார்த்தைக்கு உருகி போன மெழுகு ஓநாய்கள் எத்தனை இந்த நாட்டில்? இவர்களை விட்டு வைத்திருப்பதும் நாட்டை நாங்களே கொளுத்துவதும் ஒன்றேதான்.

முதல் வேனில் இருந்தவர்கள் வாசலில் காவலுக்கு நின்றனர். மற்றவர்கள் கட்டிடத்திற்குள் நுழைந்தனர். அவர்கள் நுழைய நுழையவே பாம்கள் வெடிக்க ஆரம்பித்து விட்டன. டைமிங் நொடிகள் கணக்கில் மிஸ் ஆகிவிட்டது. ஆனாலும் வாசலில் இருந்த குண்டுகள் தங்களின் வேலையை காட்டி விட்டன.

டமார் டமார் என்று வெடித்தது குண்டுகள் அனைத்தும். கட்டிடத்தின் ஒரு பகுதி சிதறு தேங்காய் போலாகிவிட்டது. குழலி இருக்கும் அறைக்கு எதுவும் ஆக கூடாது என்று மனம் வேண்டிக் கொண்டது.

சாலையில் அவ்வளவாக போக்குவரத்து இல்லை. இருந்தாலும் சுற்றி இருந்தவர்கள் இந்த குண்டு வெடிப்பிற்கு பயந்து விட்டார்கள்.

எங்களை கொல்ல வந்தவர்களில் முக்கால்வாசி பேர் இறந்திருக்க கூடும். நான்கைந்து பேர் மட்டும் அரை குறையாக எரிந்தபடி நிமிர்ந்து பார்த்தார்கள்.

சேகர் சார் கடையிலிருந்து இறங்கி சென்றார். கட்டிடத்தின் வாசலில் நின்றபடி தப்பி பிழைத்து நிமிர்ந்தவர்களின் நெஞ்சில் தன் துப்பாக்கி குண்டுகளை இறக்கினார்.

மற்ற அதிகாரிகளும் வந்து சேர்ந்தனர்.

"இனி என்ன சார் செய்றது?" என்று கேட்டான் வசி.

"பயர் ஸ்டேசனுக்கு போன் பண்ணி வர சொல்லு. என் பீரோ உருகும் முன்னாடி நெருப்பை அணைச்சாகணும்.." என்றவர் என் போனை வாங்கினார்.

மேலதிகாரிகளுக்கு போன் செய்தார். என்னவோ உரையாடினார். பின்னர் என் பக்கம் திரும்பினார்.

"‌‌ஹெலிகாப்டர் போகும் திசையை மானிட்டர் பண்ண சொல்லியிருக்கேன். அவங்க ஹெலிகாப்டரை வெடிக்க வைக்கும் முன்னாடி நாம போயாகணும்!" என்றார்.

"வசியுமா சார்?"

"இல்ல.. ஏன்?"

"சும்மாதான் சார்.." என்றுவிட்டு அவன் பக்கம் திருப்பினேன்.

"இந்த நெருப்பை அணைச்ச பிறகு குழலியை நெருப்பு பிடிச்சிடுச்சான்னு பாரு.." என்றேன்.

என் தோளில் தட்டினார் சேகர் சார். வசி சரியென்று தலையசைத்தான்.

"டைம் இல்ல விஷால். பக்கத்து கட்டிடத்தோட மொட்டை மாடிக்கு ஹெலிகாப்டரை வர சொல்லியிருக்கேன். வா போகலாம்.." என்றவர் என் கையை பற்றி இழுத்தார்.

செல்லும் முன் மற்ற அதிகாரிகளை பார்த்தவர் "அந்த வேன்களை சீஸ் பண்ணுங்க. மறக்காம செத்தவங்க யாரையும் பரிசோதனை செய்யாம போஸ்ட் மார்டத்துக்கு அனுப்பிடாதிங்க!" என்றார்.

நாங்கள் மாடி ஏறிய ஐந்தாவது நிமிடத்தில் வந்து இறங்கியது ஹெலிகாப்டர்.

இன்னும் நூறு கிலோமீட்டர்தான். அதன் பிறகு ஜெட் ஒன்றை வர சொல்லியிருக்கிறார் சேகர் சார்.

தனசேகர் POV

இரண்டு மணி நேரம். எவ்வளவு வேகமாக வந்தும் கூட எங்களால் வீராச்சாமியையும், சர்மாவையும் உயிரோடு பார்க்க முடியவில்லை.

வன பகுதி ஒன்றில் எரிந்து போய் கிடந்தது இரண்டு ‌ஹெலிகாப்டர்கள். உடல்கள் எதுவும் கிடைக்கவில்லை. அவர்களின் உடல்களை தேடும் பணி தீவிரமாக நடந்துக் கொண்டிருந்தது. அவர்களின் தியாகத்தை நானும் என் மக்களும் எப்போதும் மறக்க மாட்டோம்.

ஒரு நாள் முழுதாக கடந்தது. இன்னும் உடல்கள் கிடைக்கவில்லை. அந்த வனப்பகுதியில் விலங்குகள் ஏதாவது எரிந்த உடல்களை இழுத்து சென்றிருக்கலாம் என்று சொன்னார்கள் அந்த பகுதி மக்கள்.

சர்மா மற்றும் வீராச்சாமியின் குடும்பங்கள் பத்திரமாக மீட்கப்பட்டன. அவர்கள் இறந்த செய்தி கேட்டு கதறினார்கள் இவர்கள்.

எங்களது கட்டிடத்திற்கே நானும் விஷாலும் திரும்பி வந்தோம். பிணங்கள் அப்புறப்படுத்து இருந்தன. அனைத்து செய்திகளிலும் மூடி வைத்த முயல் வெளிவந்து விட்டதாக சொல்லிக் கொண்டிருந்தார்கள். எதிர் கட்சிகளாக இருப்பவை என்னை மட்டுமின்றி எனது துறையையே வெளிப்படையாக திட்டிக் கொண்டிருந்தன.

விஷால் POV

கல்லறை காட்டில் நின்றுக் கொண்டிருந்தேன் நான். குழலியின் கல்லறை முன்பு கண்ணீரை மட்டும் சிந்திவிட கூடாது என்ற கட்டுப்பாடோடு நின்றுக் கொண்டிருந்தேன்.

என் அருகில் நின்றிருந்த நிஷாவின் அம்மா கண்களை துடைத்துக் கொண்டாள்.

"மதியோடு சேர்ந்து இவளும் இறந்துட்டான்னு நினைச்சோம். வெந்து கிடந்த மதியோட பிணத்து பக்கத்துல இருந்த பெண் பிணம் இவதான்னு நினைச்சி இறுதி சடங்கு கூட செஞ்சோம். ஆனா பாவி மக உயிரோடுதான் இருந்தான்னு தெரிஞ்சிருந்தா காப்பாத்திருப்பேனே.." என்று அழுதாள்.

குழலியை என்னாலும் காப்பாற்ற முடியவில்லை என்பதை எப்படி சொல்வது?

குழலியின் இறப்புக்கு காரணமான மருத்துவரை நேற்றே கண்டுபிடித்து விட்டேன். அவள் சொன்ன காரணம் என் கோபத்தை திசை திருப்பி விட்டது. அவளுக்கு அவளை கடத்திய வண்டியின் எண்ணும், அவர்களின் முகமும் நினைவிருந்ததாக சொன்னாள். குழலிக்காக அவளும் அழுதாள்.

ஏனோ இவளை என்னால் தண்டிக்க முடியவில்லை. ஆனால் என் கோபத்தை அந்த தாமுவின் அடியாட்களிடம் காட்டி விட்டேன். குழலிக்கு இறுதி மரியாதை முடியும் முன்பே அவர்கள் அனைவரும் சிறைசாலைக்குள் தள்ளப்பட்டு விட்டனர். அவர்களை வெளியனுப்ப யாராவது முயன்றால் நான் பிணமாகதான் அனுப்பி வைப்பேன். இவர்களை முன்பே பிடித்து உள்ளே போடாதது எனது தோல்வியை எப்போதும் எனக்கு நினைவுப் படுத்திக் கொண்டிருக்கும்.

குழலியின் கல்லறையில் பூங்கொத்தை வைத்துவிட்டு கிளம்பினேன். அடிக்கடி அங்கு வருவேன் என்றுதான் தோன்றியது.

நல்லவேளையாக ஊடகத்திற்கு இவளை பற்றிய செய்தி கிடைக்கவில்லை. இல்லையேல் இவளை செத்தும் சாகடித்துக் கொண்டே இருந்திருப்பார்கள்.

தனசேகர் POV

தாமுவின் ரகசிய வீடு கண்டறியபட்டது. ஆனால் அவன் அங்கே இல்லை. அவனின் அனைத்து சொத்துக்களும் அரசாங்கத்தால் எடுத்துக் கொள்ளப்பட்டது. அவனை கண்டுபிடித்து தருவோருக்கு கோடி ரூபாய் சன்மானம் என்றும், அவன் ஒரு தேச விரோதி என்றும் அறிவிக்கப்பட்டது.

‌தாமுவிற்கு உடந்தையாக இருந்த சிலரை கைது செய்து அடுத்த நாளே தூக்கில் ஏற்றினார்கள். அனைத்து தொலைக்காட்சிகளிலும் தூக்கு மேடை காட்சி ஒளிப்பரப்பட்டது. மொத்த நாட்டுக்கும் துரோகம் செய்யும் முன் அனைவரும் ஒரு நொடியாவது யோசிப்பார்கள் என்று நம்புகிறேன்.

என்னவோ குறை போலவே இருந்தது எனக்கு. அதை விஷாலும் உணர்ந்ததாக சொன்னான்.

இருவரையும் எங்களின் மேலதிகாரி அழைத்தார். வேலையிலிருந்து எங்களை விலக்குவதாக சொல்லி இருவரின் கையிலும் கடிதங்களை தந்தார்.

விஷால் சிரித்தான்.

"ஏன் சார்.? ஊடகமா.? மாறி மாறி பேசிக் கொண்டிருக்கும் கட்சிகளா.? இல்ல உங்களுக்கும் மேலே இருப்பவங்க உங்களுக்கு தர பிரஷரா.?" என்று கேட்டான்.

மேலதிகாரி கோபத்தோடு எழுந்து நின்றார்.

"முதல் குண்டு வெடிச்சபோதே உங்க கையில இந்த கேஸை தந்தேன். ஆனா நீங்க என்னத்தை செஞ்சிங்க.? நாட்டுல எவ்வளவு பலின்னு உங்களுக்கே நல்லா தெரியும்.. உங்களோட மனசாட்சியே உங்களை வேலை செய்ய விடாது. இத்தனை வருசமா இதே டிபார்ட்மெண்ட்ல இருக்கற எனக்கு தெரியாதா எது உங்களுக்கு நல்லதுன்னு. இன்னும் ஒரு வருசத்துக்கு உங்களுக்கு சஸ்பென்ஸன்தான். இது என் சொந்த முடிவு.." என்றார்.

விஷால் கவிழ்ந்த முகத்தோடு லெட்டரை எடுத்துக் கொண்டு வெளியே நடந்தான்.

சோகத்தோடு திரும்பினேன் நான்.

"சேகர்.." அழைத்தார் மேலதிகாரி.

"அந்த ஹெலிகாப்டர் பறந்த அதே சமயத்துல அதுக்கும் இருபது கிலோமீட்டர் தள்ளி இன்னும் இரண்டு ஹெலிகாப்டர் போயிருக்கு. விசயம் எனக்கே இப்பதான் தெரிஞ்சது. அந்த ஹெலிகாப்டர் பக்கத்து நாட்டு மந்திரிக்கு சொந்தம்ன்னும், அவர் நம்ம ஊர் கடை ஒன்னோட திறப்பு விழாவுக்கு வந்ததாவும் தகவல் சொல்றாங்க. ஆனா எனக்கு என்னவோ உறுத்தல். நீ இந்த பேட்ஜை கழட்டி வச்சிட்டு வேலை பார்க்கறதுல உனக்கு எந்தவித மன வருத்தமும் இல்லையே.!?" என்று கேட்டார்.

வீர வணக்கம் வைத்தேன் அவசரமாக.

"தேங்க் யூ சார்.. எனக்கு எந்த வருத்தமும் இல்லை சார். ஆனா நான் இதுல விஷாலை கூட சேர்த்துக்கலன்னாதான் அவன் வருத்தப்படுவான்.!" என்றேன்.

"சேர்த்துகங்க!" என்றார் அவர்.

பெருமூச்சு விட்டபடி அந்த அறையை விட்டு வெளியே நடந்தான். நான் எடுத்துக் கொண்ட பணிகளில் முதல் முறையாக தோற்றுப் போன பணி இதுவே. தோல்வி இவ்வளவு வலிக்கும் என்று இத்தனை நாள் வரை தெரியாது.

ஒரு தீவிரவாதியை இத்தனை நாட்களாக பிடிக்காமல் விட்டது தினம் என்னை கொல்ல போகிறது. அரசாங்கமே இப்படிதான், அதிகாரிகளே இப்படிதான் என்று வர்ணிக்கும் யாருக்கும் எனது வலிகள் தெரிய போவது இல்லை.

புவின் POV

நான் எங்களது தனி தீவில் இருந்தேன். செத்துப்போன பிணம் போல அமர்ந்திருந்தேன்.

தங்சேயா அறிவுரையை கிலோ கணக்கில் தந்துக் கொண்டிருந்தார்.

"சாரி.." இதை இருபதாவது முறையாக சொன்னேன்.

அவருக்கு நான் செல்ல பிள்ளை என்பதால்தான் என்னை இன்னும் உயிரோடு விட்டு வைத்திருப்பதாக சொன்னார். எனக்கு என் உயிர் தேவையில்லை என்று கதறியது என் நெஞ்சம். ஆனாலும் சிலை போலதான் அமர்ந்திருந்தேன்.

இனி எனக்கு புத்தி வந்து விடும் என்று சொல்லிவிட்டு என் அறையை விட்டு சென்றார் அவர்.

நான் கட்டிலில் சோகமாக சாய்ந்தேன்.

நான் அந்த ஹெலிகாப்டர் விபத்தில் இறக்கவில்லை. அந்த ஹெலிகாப்டரில் இருந்தது எனது ஆட்கள்தான். அவர்கள்தான் அந்த விபத்தில் இறந்து போனார்கள்.

நான் பக்கத்து நாட்டு மந்திரியின் பெயர் சொல்லி தப்பி வந்து விட்டேன். ஷர்மாவும் வீராச்சாமியும் இப்போது எங்களின் பிணைய கைதிகளாக உள்ளனர். இவர்களால் ஒரு பயனும் இல்லைதான். இருந்தாலும் சில நாட்கள் வைத்திருந்து கொல்ல வேண்டும் என்று திட்டமிட்டிருக்கிறார் தங்சேயா.

வீராசாமியும், சர்மாவும் இதை எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். கடைசி நேரத்தில் அவர்களின் மூக்கில் குளோரோபார்ம் வைக்கப்படும் என்றோ மயங்கிய நிலையிலேயே அவர்கள் கடத்தப்படுவார்கள் என்றோ அவர்கள் முன்பே யோசித்துப் பார்த்திருக்க மாட்டார்கள்.

என்னை தப்புவிக்க தங்சேயா எதுவும் செய்வார்.

இரண்டு நாட்கள் சென்றிருக்கும். குழலியின் கடைசி கணங்கள் கண் முன்பாகவே இருந்தன. கண்கள் மூடியும் கூட காட்சிகள் மறையவில்லை.

எனது பொருட்கள் இருந்த பைகளை எடுத்து வந்து எனது அறைகளில் வைத்தாள் ரூபி.

"எல்லாம் சரியா போயிடும் பாஸ்.." என்றாள்.

பைகளை பிரித்து அதிலிருந்த பொருட்களை அள்ளி தரையில் வீசினாள். துப்பாக்கிகள், சில மின் உபயோக கருவிகள், ஆயுதங்கள் சிலவற்றின் உதிரி பாகங்கள் மத்தியில் ஒரு கிஃப்ட் பாக்ஸ்ம் சேர்ந்து வந்து தரையில் விழுந்தது.

குழலியின் கிஃப்ட் பாக்ஸ். என் கண்கள் குளம் கட்டியது.

"கிஃப்ட்.? யார் பாஸ்.? அண்ணியா.?" கடைசி வார்த்தை சோகமாகதான் ஒலித்தது அவளுக்கும்.

சுவர் புறம் திரும்பி ஆமென தலையசைத்தேன்‌.

"பீல் பண்ணாதிங்க பாஸ்.." என்றவள் கிப்டை எடுத்து பிரித்தாள்.

கண்களை துடைத்துக் கொண்டு திரும்பினேன் நான். திறந்திருந்த கிஃப்ட் பாக்ஸை பார்த்தபடி அதிர்ந்து போய் நின்றிருந்தாள் ரூபி.

கிப்ட் பாக்ஸில் அப்படி என்ன இருக்கிறது என்று கேட்டது என் மனம். ஆனால் எழுந்து சென்று பார்க்க மனம் வரவில்லை.

வெள்ளை நிறத்தில் பிளாஸ்டிக் குச்சி போல் ஒன்றை வெளியே எடுத்தாள் ரூபி. பிறகு புகைப்படம் போல் ஒன்றையும் கையில் எடுத்தாள்.

"அந்த பொண்ணு பிரகனென்டா இருந்திருக்காங்க பாஸ்.." என்றாள் என்னை பார்த்து.

அதிர்ந்து போய் எழுந்தோடி அவள் கையில் இருந்ததை வாங்கினேன். அந்த பிளாஸ்டிக் குச்சி என்னவென்று தெரி‌யவில்லை. அந்த புகைப்படமும் கூட கருப்பாகதான் இருந்தது.

"என்ன சொன்ன நீ.?" என்றேன் குழப்பத்தோடு.

புகைப்படத்தின் நடுவில் இருந்த வெள்ளை புள்ளியை தொட்டு காட்டினாள் அவள். "இது அவங்க குழந்தை.." என்றாள்.

கண்களை மூடினேன். கண்கள் இரண்டும் கண்ணீரால் தளும்பியது.

ரூபி என் அறையை விட்டு செல்வதை உணர்ந்தேன்.

தரையோடு மண்டியிட்டேன். கடந்த இரு நாட்களாக இல்லாத அளவிற்கு மனசோர்வு என்னை பிடித்துக் கொண்டது.

குழலி உயிர் விட்டபோதே என்னையும் எடுத்துக் கொண்டு விட்டாள். நான் அவளை கொல்வதற்கு ஆள் அனுப்பாமல் இருந்திருந்தால் இன்னேரம் அவள் சிறைகம்பிகளுக்கு பின்னாலாவது உயிரோடு இருந்திருப்பாள்.

கையில் இருந்த புகைப்படத்தை பார்த்தேன்.‌ குட்டியாய் ஒரு வெள்ளை புள்ளி. மங்கிய பார்வையோடு அந்த புகைப்படத்தை வருடினேன். என் வாழ்வில் இப்படி ஒரு நாள் வருமென்று கொஞ்சம் கூட கற்பனை செய்ததில்லை நான்.

எத்தனை ஆசைகளோடு இருந்தாளோ குழலி?

கட்டி வைத்திருந்த நாட்களில் அவள் ஏன் இதை சொல்லாமல் போனாள்? நான் ஏன் இதை அன்றே பிரித்து பார்க்காமல் போனேன்? அந்த அளவிற்கு என் மீது வெறுப்பா? இல்லை அந்த அளவிற்கு அவளின் நாட்டின் மீது பற்றா?

ஒருமுறை குறிப்பு காட்டி இருக்கலாம். கடத்தி வந்தாவது அவளையும் என் குழந்தையையும் காப்பாற்றி இருப்பேன்.

உருவாகும் முன்பே அழிந்த சொர்க்கத்தை கையில் வைத்து பார்த்துக் கொண்டிருந்தேன். கண்ணீர் கன்னங்களை தாண்டிக் கொண்டிருந்தது.

யோசிக்க எதுவும் இல்லை இனி. என் மனைவி இங்கு இல்லை. இதோ என் குழந்தை. பிறக்கும் முன்பே உருக்குலைக்கப்பட்டுவிட்ட என் குழந்தையும் இங்கு இல்லை.

யோசிக்கவேயில்லை. தரையில் கிடந்த துப்பாக்கிகளில் ஒன்றை எடுத்தேன். குண்டுகள் இருப்பதாக அதன் பாரம் சொன்னது. துப்பாக்கியின் முனையை நெற்றியில் பதித்து டிரிக்கரை இழுத்தேன்.

தலை தரையில் சாய்ந்த நேரத்தில் பார்த்தேன். எனது பொருட்களின் குவியலில் இருந்த புகைப்படம் ஒன்றிலிருந்து குழலி என்னை பார்த்து புன்னகைத்துக் கொண்டிருந்தாள்‌. நானும் புன்னகைக்க முயன்றேன்.

ஆனால்.. ஆனால்.. கண்கள் பாரமானது. இருள் பார்வையை சேர்ந்தது. மூடிய என் விழிகளில் இருந்தும் கூட கண்ணீர் வழிந்தது.

பசியை போலவே பெரிய வலியை தருவது அன்பு என்பதை உயிர் போகும் நேரத்தில் தெளிவாக உணர்ந்தேன்.

முற்றும்.

இந்த கதை முழுக்க முழுக்க என் கற்பனை மட்டுமே. நிஜத்துல இப்படி நடக்காது. ஒரு போன் கால் இருந்தா போதும் இந்த உலகத்துல எங்கே இருந்தாலும் அவங்களை கண்டுபிடிச்சி தூக்கிடலாம். அதனால இந்த கதையில் வர மாதிரி தீவிரவாதிங்க தங்கள் எண்ணங்களை செயல்படுத்தும் அளவிற்கு நம் உண்மையான நாயகர்கள் எப்போதும் விடவே மாட்டாங்க.

நமக்கான பாதுகாப்பு அந்தந்த நாட்டு அரசாங்கதால் உறுதி செய்யப்பட்டு இருக்கு. இந்த கதையில் உள்ளது போல் ஒரு போதும் நடக்காது. அப்படி நடந்தா அதுக்கு காரணம் யாரா இருக்கும்ன்னு கதையிலேயே சொல்லிட்டேன். ஆயிரம் நட்சத்திரங்கள் பார்வைக்கு தென்பட்டாலும் ஒற்றை மேகம் மூடினா நமக்கு தெரியாது. அது போலதான் தேச விரோதிகளும். யாராவது ஒன்னு இரண்டு பேர் எதிரி கூட சேர்ந்துட்டா பிறகு நாம அதிகாரிகளை குறை சொல்லி ஒரு பயனும் இல்லை. அவங்களும் நமக்காகதான் உழைக்கிறாங்க. யாரோ ஒருத்தர் செய்ற தப்புக்கு மொத்த துறைகளையும் திட்டுவது தவறு. அவங்களுக்கும் மனசு இருக்கு. அவங்களுக்கும் வலிக்கும், நம்மை போலவே.

நமக்கு தலைவர்கள் பலர் மேல ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனா எப்போதும் நாட்டை வெறுக்காதிங்க. நாடுங்கறது நம்ம ஒவ்வொருவரும் சேர்ந்ததே!

இந்த பாகத்தில் ஏதோ ஒரு விதத்துல எதிரி கூட்டங்கள் ஜெயிச்சிட்டாங்க. அதுக்கு சாரி. நம்ம ஹீரோக்கள் தோற்பதை கதைகளில் கூட நான் விரும்பவில்லை. ஆனால் இந்த கதையின் போக்கிற்காக இப்படி கொண்டு செல்வதாகி விட்டது.

அடுத்த பாகங்களில் இப்படி நடக்காது. அடுத்த பாகங்கள்.????? எப்ப எழுத போறேனோ யாருக்கு தெரியும்.🙈

இந்த கதைக்கு இதுவரை ஆதரவு தந்த அனைத்து நட்புள்ளங்களுக்கும் எனது நன்றிகள். நீங்க தந்த ஒவ்வொரு வோட்டுக்கும் கமெண்டுக்கும் மிக்க நன்றிகள். ஊக்குவிப்பு ஸ்டிக்கர்கள் தந்த நட்புக்களுக்கும் நன்றிகள்.

சைலண்ட் ரீடர்ஸ்க்கும் எனது நன்றிகள்.

கதையில் நிறை குறைகளை மறக்காம கமெண்ட்ல சொல்லிட்டு போங்க. எங்கேயாவது சொதப்பல்‌‌... கதை முழுக்கவே லாஜிக்கை மீறியதுதான்னு எனக்கும் தெரியும்..🙈 ஆனா அதை மீறிய சொதப்பல்கள் இருந்தால் மறக்காம சொல்லுங்க.

முக்கியமான விசயம். இதுல எதுவுமே‌ என் எண்ணப்போக்கு கிடையாது. முழுக்க முழுக்க கேரக்டர்களோட இடத்துல இருந்து மட்டும்தான் யோசிச்சி எழுதினேன்.

நன்றிகளுடன் உங்களின் crazy writer
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN