காதல் கடன்காரா 43

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
முத்தமிழ் தன் நண்பர்களோடு கேக் ஷாப்பில் அமர்ந்திருந்தான். யாருக்கு எது வேண்டுமோ வாங்கி உண்ணுங்கள் என்று சொல்லி விட்டு அமைதியாக அமர்ந்துக் கொண்டான்.

மூன்று வருடங்களுக்கு முன்பு எதிரியை போல் பாவித்து பழகிய அதே நண்பர்களைதான் இப்போது மன்னித்து ஏற்றுக் கொண்டான் முத்தமிழ். நண்பன் கார்த்திக் உண்மையிலேயே அபிராமியை விரும்புவதாக சொன்னதால் அவனின் உயிரை காப்பாற்றவே அவனுக்கு துணை நின்றோம் என்று அவர்கள் சொன்னபோது சரியென்று விட்டான்.

அவன் யாரையும் மனதார மன்னிக்கவில்லை என்பதுதான் உண்மை. அது அவர்களுக்கும் தெரியும் என்பது அதை விட முக்கியமான உண்மை.

நண்பர்கள் என்ற பெயரில் சும்மா பழகி கொண்டிருந்தார்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

"உன் தங்கச்சி ஐ.ஏ.எஸ் பாஸ் பண்ணது சந்தோசம்டா.!" என்றான் ராகுல்.

"ம்.. ஆமா கார்த்திக் மச்சான் கூட ஜெயிச்சிடுவான்னுதான் நினைக்கிறேன்!" என்று தன்னை மீறி வாயை விட்டான் ரவி.

முத்தமிழ் அவனை முறைத்தான். ஆனால் ஏதும் சொல்லவில்லை. கார்த்திக்கின் தோல்விக்கு பிறகு சிரித்து கொண்டாடலாம் என்று நினைத்திருந்தான்.

அபிராமியின் அம்மாவும் பாட்டியும் வீட்டின் தரையில் கிடந்த பொருட்களை எடுத்து இருக்க வேண்டிய இடத்தில் வைக்க ஆரம்பித்தார்கள்.

தினம் வேலையே இதுதான் அவர்களுக்கு. சண்டை என்று வந்துதும் பாத்திரங்களையும் மற்ற பொருட்களையும் அள்ளி தரையில் எறிவார்கள். ஆண்கள் வீட்டை விட்டு நகர்ந்த பிறகு இயலாமையின் வேதனையோடு அவற்றை திரும்ப எடுத்து வைப்பார்கள்.

"முத்தமிழ்.." வாசலில் நின்று யாரோ அழைத்தார்கள். அம்மா சென்றாள்.

வாசலில் ஊர் பெரியவர் ஒருவர் நின்றிருந்தார். அவ்வூர் பள்ளியின் முன்னாள் ஆசிரியர். ஊரில் பலரும் இவரின் பேச்சை கேட்டுதான் முக்கிய முடிவுகளை எடுப்பார்கள். கையில் ஸ்வீட் பாக்ஸை வைத்திருந்தார்.

"வாங்க ஐயா.." உள்ளே அழைத்தாள் அம்மா.

"வரேன் கண்ணு.." என்று உள்ளே வந்தவரை கண்ட பாட்டி "ஐயா இவ்வளவு தூரம் வந்திருக்கிங்க.." என்றாள் ஆச்சரியத்தோடு.

"பாப்பா கலெக்டர் ஆகியிருக்கு.. இதையெல்லாம் நாங்களே நியூஸ்ல பார்த்துட்டு வரதா இருக்கு. பாப்பா முத பரிட்சையில் பாசாகும்போதே சொல்லியிருந்தா அப்பவே பாராட்டு விழா நடத்தி இருக்கலாம்.." என்றவர் ஸ்வீட் பாக்ஸை பாட்டியிடம் தந்தார்.

"பாப்பாவால ஊருக்கு மட்டுமில்ல நம்ம மாவட்டத்துக்கே பெருமை. காலையில இருந்து எனக்கே பத்து போன் வந்துடுச்சி 'என்னய்யா உங்க ஊர்க்கார பொண்ணு கலெக்டருக்கு பாஸாகிடுச்சாமே'ன்னு.!" என்றவரின் முகத்தில் இருந்த பூரிப்பு அளவில் அடங்காதது.

பாட்டியும் அம்மாவும் ஆச்சரியமும் அதிர்ச்சியுமாக நின்றிருந்தார்கள்.

"பாராட்ட பத்து பேர் போன் பண்ணா, அத்தோடு இன்னொரு போன். இப்பவே லஞ்சம் பேசுறாங்க! நான் நேரடியாவே சொல்லிட்டேன் 'எங்க பாப்பாவை பத்தி உங்களுக்கு தெரியாது. ரோசத்துல விளைஞ்சி வளர்ந்தவ. என்கிட்ட கேட்ட மாதிரி அவகிட்ட கேட்டுடாதிங்க. உடனே ஜெயில்லதான் இருக்கணும்'ன்னு சொல்லிட்டேன்!" என்றார்.

நேரடியாகவே புகழ்ச்சியில் சிக்கி விட்டார்கள் அம்மாவும் பாட்டியும். ஊரே மதிக்கும் ஒருவரிடமிருந்து தங்கள் வீட்டு பெண் பெருமையுரை பெறுவது அவர்களுக்கு முற்றிலும் புதிதாக இருந்தது.

அபிராமி பெற்றிருக்கும் வேலையின் மதிப்பை மட்டுமே கண்டிருந்தவர்கள் அந்த வேலையால் அபிராமிக்கு கிடைத்த மதிப்பை பற்றி சரியாக யோசிக்காமல் போய் விட்டனர்.

"சரி நான் கிளம்பறேன்ம்மா! பாப்பா வந்தா நான் வந்து பார்க்கறேன். இருந்தாலும் நான் வந்து பார்த்துட்டு போனேன்னு பாப்பாக்கிட்ட சொல்லுங்க!" என்றவர் அங்கிருந்து கிளம்பினார்.

அவர் வீட்டை விட்டு தாண்டிய சில நிமிடங்களுக்கு பிறகே "அட.. அவருக்கு டீ காபி கூட தராம போயிட்டோம்!" என்று வருத்தப்பட்டாள் அம்மா.

பாட்டி கையிலிருந்த ஸ்வீட் பாக்ஸை கொண்டு போய் சமையலறையில் வைத்தாள்.

பத்து நிமிடங்கள் கடந்த நேரத்தில் "யசோதாம்மா.." என்றபடி வந்தார் ஒருவர்.

தன்னை யார் அழைப்பது என்றபடி திரும்பி பார்த்தாள் அம்மா. இரண்டு ஊர் தள்ளியிருந்த பெரும்புள்ளி ஒருவர் வீட்டுக்குள் வந்தார். அரசாங்க வேலைகளுக்கான டென்டரெல்லாம் இவர்தான் எடுத்து செய்துக் கொண்டிருந்தார்.

தன்னை விட பெரியவர் தன்னை அம்மாவென அழைக்கிறாரே என்ற குழப்பத்தில் அவள் நின்றிருந்தபோதே உள்ளே வந்த அவர் கிஃப்ட் பாக்ஸ் ஒன்றை நீட்டினார்.

"பட்டு சேலை ஒன்னு. உங்களுக்கு நல்லாருக்குமேன்னு வாங்கி வந்தேன்!" என்றார் அவர்‌.

ஈரகுலை நடுங்கியபடி தன் மாமியாரை பார்த்தாள் யசோதா.

"அபிராமி பாப்பா நம்ம ஏரியாக்கார பொண்ணுன்னு இவ்வளவு நாளா தெரியாம போயிடுச்சி எனக்கு.." என்றவர் அவராகவே சோஃபாவில் அமர்ந்தார்.

"பாப்பாவுக்கு என்ன வசதி வேணாலும் நான் செஞ்சி தரேன்‌. நாம எல்லாம் ஒன்னுக்குள்ள ஒன்னு! நம்மூர்கார பொண்ணு டெல்லி வரை போய் பாஸ் பண்ணிட்டு வரது சின்ன விசயமா? நானும்தான் ஒன்னை பெத்தேன்‌. புள்ளை நல்லா படிக்கணும்ன்னு கான்வென்ட்ல சேர்த்தி ஏசி கார்ல கூட்டிப் போய் விட்டு, கேட்ட எல்லாத்தையும் வாங்கி தந்தேன். சனியன் காலேஜ் சேர்ந்த நாலாம் நாளே எங்க அக்கா மகனை இழுத்துட்டு ஓடிடுச்சி. புள்ளையை கூட்டி வந்து நல்ல புத்தி சொல்லலாம்ன்னு தேடி கூட பார்த்தோம். ஆனா ஒன்னரை வருசம் கழிச்சிக்கிட்டு மூணு மாச குழந்தையோட வந்து நின்னா‌‌.. புருசன்காரன் குடிக்கிறான், அடிக்கறான்னு இப்ப வந்து மூக்கை சிந்திட்டு இருக்கு கழுதை. மாசா மாசம் அதுங்க குடும்ப செலவுக்கு நான் காசு தந்துட்டு இருக்கேன்.!" என்று புலம்பினார் அவர்.

அம்மாவும் பாட்டியும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

"உங்க புள்ளை எங்க வீட்டுல பிறந்திருக்கலாம். கட்டாய தாலி கட்டினான்னு கழட்டி வீசிட்டு இப்படி போய் சாதிக்கிற புள்ளைங்க எங்கே நிறைய இருக்குங்க?" என்றவர் எழுந்து நின்றார்.

"சரி நான் கிளம்பறேன். பாப்பா வந்தா என்னை பத்தி நாலு வார்த்தை சொல்லுங்க.." என்றுவிட்டு கிளம்பி சென்றார்.

அம்மாவின் கையில் இருந்த புடவை பாக்ஸை வாங்கி சோஃபாவில் எறிந்தாள் பாட்டி.

"என் புள்ளை மொட்டையா இருக்கு‌. அது இவன் கண்ணுக்கு தெரியல. பாராட்ட வந்துட்டான், ஆளை பாரு!" என்று திட்டினாள்.

இரவு வரையிலும் ஆட்கள் வந்துக் கொண்டேதான் இருந்தார்கள். மாலை, கிஃப்ட் பாக்ஸ்கள், பூங்கொத்துகள் என்று தந்தார்கள். அபிராமியை ஆகா ஓகோவென்று புகழ்ந்தார்கள்.

அவர்களின் புகழ்ச்சிகளை கண்ட பிறகு பாட்டிக்கும் அம்மாவுக்கும் அபிராமியை குடும்பம் குழந்தையோடு பார்க்க முடியாமலேயே போய் விடுமோ என்று பயமாக இருந்தது.

"அவ சும்மாவே ஆடுவா! இனி என்ன பண்ண போறாளோ? கடைசி வரை ஔவையாராவே இருந்திடுவாளா?" என்று வாய் விட்டே கேட்டு விட்டாள் அம்மா.

"என் பேத்தி படிச்சும் மக்குன்னு நிரூபிச்சிட்டு இருக்கா. இனி எல்லாம் விதி கையில. பார்க்கலாம் அந்த மகராசனோட நாளைய போராட்டத்துலயும் வெற்றி கிடைக்குதான்னு!" என்றாள் பாட்டி.

மறுநாள் காலையில் விமான நிலையம் சென்று அபிராமியை அழைத்து வந்தான் முத்தமிழ். அவர்களின் வீட்டு வாசலில் ஊரார் பலர் கூடி நின்றிருந்தார்கள்

அம்மா கோப முகத்தோடு சென்று மகளுக்கு ஆரத்தி எடுத்தாள். அபிராமி அதை கண்டுக் கொள்ளவில்லை.

அபிராமி அப்படியேதான் இருந்தாள். எளிமையான சுடிதார் ஒன்றில் இருந்தாள். பார்வையில் கூர்மை அதிகரித்திருந்தது.

அபிராமி இந்த மூன்று வருடத்தில் கார்த்திக்கை பற்றி எதையும் இவர்களிடம் கேட்கவில்லை. இவர்களும் எதுவும் சொல்லவில்லை. அனாவசியங்களை ஒதுக்கி தள்ளுவது சிறந்தது என்று நினைத்திருந்தார்கள் அபிராமியும் அவள் வீட்டு ஆண்களும்.

அபிராமியின் மனதில் கார்த்திக் மீதான எண்ணங்கள் கொஞ்சம் மாறியிருந்தது. ஆனால் அது காதல் இல்லை. அவளின் வெறுப்பு குறைந்திருந்தது என்று வேண்டுமானால் சொல்லலாம்.

முக்கியமான மனிதர்கள் சிலர் அவளுக்கு மாலை அணிவித்தார்கள். அவர்களின் பாராட்டுக்களுக்கு நன்றி கூறி அனுப்பி வைத்துவிட்டு உள்ளே வந்தாள் அபிராமி.

"நம்மூர் சொர்க்கம்ண்ணா!" என்றாள் அண்ணனிடம்.

புரியாமல் பார்த்தான் முத்தமிழ்.

"நான் என்ன பாஸ் பண்ணாலும் நாட்டுக்கு வெறும் பணி அது. கடமையை செய்றன்னு சொல்லிட்டு நகர்ந்துடுவாங்க! ஆனா நம்மூர்ன்னா நாம சின்னதா ஜெயிச்சா கூட பெருசா கொண்டாடுறாங்க. பிடிச்சிருக்குண்ணா இது!" என்றாள்.

"ஆமா. இங்கே ஒருத்தர் ஜெயிச்சா ஊர் ஜெயிச்ச மாதிரி. ஒருத்தர் இறந்தா எல்லாருக்கும் இழப்பு ஏற்பட்ட மாதிரி. அதனால்தான் கிராமங்கள் இன்னும் கிராமங்களாவே இருக்கு!" என்றான் அவன்.

அம்மாவும் பாட்டியும் அபிராமியோடு பேசவில்லை. அவளும் அவர்களோடு பேசவில்லை.

"நேத்திருந்து பார்க்கற இடமெல்லாம் உன்னை பத்திதான் பேச்சு. பேத்தியை கலெக்டருக்கு படிக்க வச்சிருக்கான்ய்யா இந்த ஆளுன்னு காது படவே எல்லாரும் பாராட்டி தள்ளிட்டாங்க.!" என்று முகம் சிவந்தபடி சொன்னார் தாத்தா.

அபிராமி மகிழ்ச்சியில் முகம் மலர்ந்தாள்.

மதியமும் இரவும் ஆண்களும் அபிராமியும் சேர்ந்து உணவு உண்டார்கள். நிறைய பேசினார்கள். நிறைய சிரித்தார்கள்.

"இதுக்கு மேல வீடியோ கால் பண்ண தேவையில்ல.. என் பேத்தி முகத்தை நேர்லயே பார்ப்பேன் நான்!" என்று அபிராமியின் தாடையை பற்றி கொஞ்சினார் தாத்தா. பாட்டிக்கோ கோபம் அதிகரித்துக் கொண்டிருந்தது.

"இந்த கிழவனுக்கு சாப்பாட்டுல விஷம் வைக்க போறேன் நான்.." என்று முனகினாள்.

தாத்தாவின் காதிலும் விழுந்தது அது.

"முதல்ல உன் வார்த்தையில கலக்கற விஷத்தை நிப்பாட்ட பழகுடி! பிறகு சாப்பாட்டுல விஷம் வைக்கிறதை பத்தி யோசிப்ப.!" என்றார் அவர்.

பாட்டி பற்களை கடித்தபடி அங்கிருந்து நகர்ந்தாள்.

அபிராமிக்கு சுருக்கென்று என்னவோ தைத்தது போலிருந்தது. இந்த சண்டையை பார்க்க பிடிக்காமல்தானே கிளம்பினாள் அவள்?

குடும்பத்தின் தீரா சண்டை தீராமலேயே இருப்பது அவளுக்கு வலியை தந்தது.

தொலைக்காட்சியை இயக்கினார் அப்பா.

"நம்மூர்க்கு இனி எம்.எல்.ஏ யார்ன்னு பார்க்கலாம்.." என்றபடி நேராக நிமிர்ந்து அமர்ந்தபடி தொலைக்காட்சியை பார்க்க ஆரம்பித்தார் தாத்தா.

"முக்கிய அறிவுப்பு.. நம்மூரின் செல்ல மகள் அபிராமி ஐ.ஏ.எஸ் அவர்களுடனான நேரடி உரையாடலை வரும் ஞாயிறு இரவு ஏழு மணிக்கு காண மறவாதீர் மக்களே.." என்று தேர்தல் செய்தி இடைவெளியின் போது வாசித்துக் கொண்டிருந்தான் ஒருவன்‌.

அபிராமி அதிர்ச்சியோடு டிவியை பார்த்தாள். "நான் எதையும் சொல்லலையே. ஆமா இது என்ன டிவி.?" என்று குழப்பமாக கேட்டாள்.

"நம்ம வட்டத்தோட லோக்கல் டிவிம்மா. பேட்டி எடுக்க என்கிட்ட கேட்டாங்க‌. நான்தான் சரின்னு சொன்னேன்.. நம்மூர்லயும் எல்லாரும் உன்னை பார்க்கணும், உன்னோடு பேசணும்ன்னு ஆசைப்படுவாங்க இல்லையா.?" என்றார் அவர்.

அபிராமி யோசித்து விட்டு சரியென தலையசைத்தாள்.

"தேர்தல் நிகழ்ச்சி தொடர்கிறது.." என்றான் அவன் டிவியில்.

அவ்வூரின் எம்.எல்.ஏ கொலை குற்றம் சாட்டப்பட்டு, அது நிரூபிக்கப்பட்டு சிறைக்கு சென்றுவிட்டார் என்பதால் இந்த இடை தேர்தல் அறிவிக்கப்பட்டு இருந்தது.

"அதே கட்சிதான் ஜெயிக்கும்.." என்றார் தாத்தா.

"கருத்து கணிப்பு எதிர்கட்சி தலைவர்தான் பெரும்பான்மையை ஜெயிப்பார்ன்னு சொன்னாங்கப்பா.!" என்றார் அபிராமியின் அப்பா.

முத்தமிழ்‌ மட்டும் கலவர முகத்தோடு செய்தியை பார்த்துக் கொண்டிருந்தான். அண்ணனிடம் விசயத்தை கேட்கலாம் என்று அபிராமி நினைத்த வேளையில் தொலைக்காட்சியில் தேர்தல் எண்ணிக்கையின் புள்ளிவிவரங்கள் காட்டப்பட்டது.

"நாம் எதிர்பார்த்திருந்த கடைசி கட்ட வாக்கு எண்ணிக்கையும் முடிவுற்றது. ஆனால் முடிவு பலரும் எதிர்பாராதது‌. சுயேட்சையாக போட்டியிட்ட நம் மண்ணின் மைந்தன் கார்த்திக் முருகன் பெரும்பான்மை வாக்குகளோடு வெற்றி பெற்றுள்ளார்.." என்று வாசிக்கப்பட்டது. கார்த்திக் மண்வெட்டியோடு வயலில் தண்ணீர் பாய்ச்சும் புகைப்படமும் தொலைக்காட்சியில் தோன்றியது.

அபிராமி அதிர்ச்சியோடு அண்ணனை பார்த்தாள். அவன் எரிச்சலோடு ஒரு கையை மடக்கி மறு கையில் குத்தினான். கார்த்திக் ஜெயிக்க மாட்டான் என்று பெரும் நம்பிக்கையோடு இருந்தான் அவன்‌.

ஆனால் கார்த்திக்கின் மூன்று வருட பொது சேவை உழைப்பு அவனை வெற்றி பெற செய்து விட்டது.

நிச்சயம் இந்த வெற்றியை கார்த்திக்கே எதிர்ப்பார்த்திருக்க மாட்டான் என்று முத்தமிழுக்கும் தெரியும்.

அப்பா டிவியை அணைத்து விட்டு எழுந்தார்.

"இதெல்லாம் நியூஸா.?" என்று கடுப்போடு கேட்டுவிட்டு தன் அறைக்கு கிளம்பினார்.

பாட்டியும் அம்மாவும் தாங்களே வெற்றி பெற்றதாக எண்ணி சந்தோசப்பட்டனர். அபிராமிக்காக வாங்கி வந்த இனிப்புகளை எடுத்து உண்டு கார்த்திக்கின் வெற்றியை கொண்டாடினார்கள்.

அபிராமி இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை.

நான்கு நாட்களுக்கு பிறகு அவனே அவளின் அலுவலகம் தேடி வந்து பூங்கொத்து தந்து வாழ்த்துவான் என்றும் அவள் எதிர்பார்க்கவில்லை.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN