காதல் கடன்காரா 44

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
சுவாதி போனின் கேமராவை பார்த்தாள்.

"நான்காம் பதிவு, யூஜி செகண்ட் இயர்.." என்றாள். பிறகு போன் திசை மாற்றப்பட்டது.

தன் கையிலிருந்த சிறு புத்தகம் ஒன்றை அவசரமாக சுருட்டி அபிராமியின் முன்னால் நீட்டினாள் சிந்து.

"இதான் மைக்.. ஓகே.? இப்ப சொல்லுங்க உங்க பேர் என்ன.?" என்று கேட்டாள்.

அபிராமியின் முகத்தில் பொங்கி நின்ற சிரிப்பு தெளிவாக தெரிந்தது. இளம்பெண்ணா இல்லை சிறுபெண்ணா என்று அடையாளம் காண முடியாத அளவிற்கு இருந்தாள் அவள்.

"நான் அபிராமி.." என்றாள்.

"உங்க ஹாபி.."

"தூங்குறதுதான்.." என்று சொல்லி சிரித்தவள் "அடுத்து உன்கிட்ட கேட்கும்போது இருக்கு இரு.." என்று தோழியை கிண்டல் செய்தாள்.

"உங்களின் லட்சியம்.?"

"தூங்கிட்டே இருப்பது.."

சிந்து புத்தகத்தால் தோழியின் தோளில் அடித்தாள்.

"கிண்டல் இல்லாம பதில் சொல்லு.. நீ ஒரு வேளை முதலமைச்சர் ஆனா என்ன செய்வ‌.?"

அபிராமி கன்னத்தில் விரல் பதித்து யோசித்தாள்.

"நான் முதலமைச்சரானா.. வீட்டுக்கு ஒரு ஏரோப்ளேன் தருவேன்.‌."

"மறுபடியும் கிண்டல்.. கரெக்டா பேசு குரங்கே.." சிணுங்கினாள் சிந்து.

அபிராமி நேராக அமர்ந்தாள். "ஓகே.. இனி சீரியஸ்‌.." என்றாள்.

"ஒருவேளை கிருஷ்ணர் மாதிரி ஒருத்தனோடு லவ்வுல விழுந்துடுற.. இப்ப என்ன செய்வ.?"

சிந்துவின் கேள்வியால் அபிராமியின் முகம் மாறி போனது.

"அவன் கிருஷ்ணனா இருந்தா அங்கே ராதையும் நானாவே இருக்கணும். ருக்மணி, பாமாவாவும் நானே இருக்கணும். அவன். அவன் தேரோட்ட ஆசை கொண்டா அங்கே அர்சுனனாவும் நானே இருக்கணும். அவன் கொஞ்சி விளையாடும் பசுக்களாவும் நானே இருக்கணும். அவன் இதழ் தடவும் புல்லாங்குழலும் நானாவே. அவன் தானம் கேட்கையில் கர்ணனும் நானாவே. அவனுக்கு நட்பென்று வருகையில் குசேலனும் நானாகவே. அவன் கொல்ல நினைக்கையில் கொடூர அரக்கரும் நானாவே. அவனுக்கு தோள் தரும் பலமாரனும் நானாவே. அவனுக்கு அடி கொடுக்கும் யசோதாவும் நானாவே இருக்கணும். அவன் குளிக்கையில்.."

"போதும் ராசாத்தி.." என்று நிறுத்தினாள் சிந்து.

"எனக்கானவனுக்கு நானே எல்லாமுமா இருக்கணும்ன்னு ஒரு வரியில சொல்லாம ஏன் இழுக்கற.?" என்று கேட்டாள்.

"நீதானே கேள்வி கேட்ட‌‌.." என்ற அபிராமி பொய் கோபத்தோடு தோழியின் கையிலிருந்த புத்தகத்தை பிடுங்கினாள்.

"இன்டர்வியூ முடியல.." என்று சிந்து கத்தினாள்.

அறையின் கதவு தட்டப்பட்டது. கார்த்திக் தான் பார்த்துக் கொண்டிருந்த வீடியோவை நிறுத்தினான். சுவாதியின் புண்ணியத்தால் கிடைத்த வீடியோ அது. இது போன்று பல வீடியோக்களை இவனின் நிலை பார்த்து இவனின் போனுக்கு ஷேர் செய்துள்ளாள் சுவாதி.

போனை அணைத்து வைத்துவிட்டு சென்று கதவை திறந்தான். அபிராமி இன்றைக்கு ஊருக்கு வருகிறாள் என்று அறிந்தவன் காலையிலிருந்து அறையை விட்டுக் கூட வெளிவரவில்லை. மீண்டும் ஏன் இந்த மன சிறை என்று அவனுக்கே புரியவில்லை.

கதவின் வெளியே அவனின் குடும்பம் முழுவதும் நின்றுக் கொண்டிருந்தது.

"எ.." என்னவென கேட்க வாய் திறந்தவனுக்கு லட்டை ஊட்டி விட்டான் மூர்த்தி.

"நீ ஜெயிச்சிட்ட.." என்றான்.

கார்த்திக்கிற்க்கு முதலில் புரியவில்லை. புரிந்த பிறகும் நம்பிக்கை வரவில்லை. குடும்பத்தாரின் முகத்தில் இருந்த மகிழ்ச்சி கண்டபிறகு நம்பாமலும் இருக்க முடியவில்லை.

முன்னால் நடந்து சென்றான். தொலைக்காட்சியை பார்த்தான். கார்த்திக் முருகன் எம்.எல்.ஏவாக வெற்றி பெற்று விட்டதாக செய்தியில் வாசித்துக் கொண்டிருந்தார்கள்.

அவன் பதவிக்கு ஆசைபடவில்லை என்பதுதான் உண்மை. தன் உழைப்பில் லாபம் வர ஆரம்பித்த பிறகு உதவி கேட்போருக்கே சிறு சிறு உதவிகளை செய்தான். உதவி செய்கையில் உண்டான நெஞ்சின் மகிழ்ச்சி பிடித்து போனதால் அதையே தொடர்ந்தான்.

சுவாதி சும்மா இருக்க பிடிக்காமல் டிரஸ்ட் ஒன்றை உருவாக்கியபோது அவளுக்கு துணை நின்று நிறைய உதவிகள் செய்தான். அவளின் டிரஸ்ட்டால்தான் அவனின் பெயர் வெளியே தெரிய ஆரம்பித்தது. சமூக முன்னேற்றத்திற்காக தங்களால் முடிந்த அளவிற்கு உதவினார்கள் இருவரும்.

சுவாதியின் அப்பா மேகமானன் நெடுங்கால அரசியல்வாதி. ஆனால் சமூகத்திற்கு சேவை செய்ய நினைப்பவர். அவருக்கென்று அந்த தொகுதியில் நல்ல பெயர் இருந்தது. ஆனால் அவரின் கட்சி அவரை நம்பி சீட் ஒதுக்க மறுத்துவிட்டது.

இந்த முறை கட்சியை பழிவாங்க கார்த்திக்கை பயன்படுத்திக் கொள்ள நினைத்தார் அவர். அவரின் வற்புறுத்தலுக்காகவும், ஒருவேளை ஜெயித்துவிட்டால் மக்களுக்கு தான் செய்யும் உதவியின் அளவு அதிகரிக்குமே என்று நினைத்துதான் சென்று மனு கொடுத்து வந்தான்.

பிரசாரத்திற்கு கூட இவனை வரவேண்டாம் என்று சொல்லிவிட்டார் மேகமானன். ஆனால் முத்தமிழ் இவனுக்கு ஓட்டு விழ கூடாது என்பதற்காக எதிர்மறை பிரச்சாரம் செய்தான் என்று இவனுக்கும் செய்தி வந்தது.

மேகமானன் தனது அரசியல் புத்தியை பயன்படுத்தி கார்த்திக்கிற்கு ஓட்டு கேட்டார். அவன் ஜெயித்தால் தான் தன் கட்சியை வெற்றி கொண்டதாக பெருமைபடுவார் அவர்.

டெபாசிட்டாவது வந்துவிடும் என்றுதான் நினைத்திருந்தான் கார்த்திக். ஆனால் முத்தமிழின் செயலும், மேகமானனின் பிரச்சாரமும் தன்னை வெற்றிபெற செய்யும் என்று கனவில் கூட நினைக்கவில்லை அவன். மக்கள் அவன் மீது வைத்திருந்த நம்பிக்கை அவனுக்கே ஆச்சரியத்தை தந்தது.

அம்மாவும் அப்பாவும் மகனை புகழ்ந்து தள்ளிக் கொண்டிருந்தார்கள். மேகமானன் ஓட்டு எண்ணிக்கை நடைபெற்ற இடத்திலிருந்து போன் செய்து இவனை வாழ்த்தினார்.

"மருமகனே, இனி நம்ம ராஜ்ஜியம்தான்டா.! இனி எந்த நாயும் நம்ம வரிபணத்துல கொள்ளை லாபம் பார்க்க கூடாது. நம்ம மக்கள் பணத்தை நம்ம மக்களுக்கே சரியா செலவு செய்யணும்டா. புது புரட்சி உருவாகணும்டா நம்மால.!" என்றார்.

"சரி மாமா.. இணைந்து செயல்படலாம் மாமா.." என்றான்.

மறுநாள் காலையில் அவனின் வீட்டின் முன் கூட்டம் கூடி விட்டது. பல்வேறு கட்சியை சார்ந்தவர்கள் இவனை தேடி வந்தார்கள். அவனை தங்களின் கட்சியில் இணைந்துக் கொள்ளும்படி அழைப்பு விடுத்தார்கள்.

இவனுக்கு பதில் சொல்ல விருப்பமில்லை. ஆனால் மேகமானன்தான் அனைவருக்கும் பதில் தந்தார்.

"எதுவா இருந்தாலும் கொஞ்ச நாள் போகட்டும்.." என்றார்.

கார்த்திக் தன் வயலில் நேரத்தை கடத்தினான். மேகமானனுக்கு ஒன்றும் புரியவில்லை.

"மாப்பிள்ளைக்கு என்ன ஆச்சி.?" என்று கேட்டார்‌‌.

விசயத்தை சொன்னாள் சுவாதி‌.

"நான் பேசுறேன்ப்பா.." என்றவள் கார்த்திக்கை தேடி வந்தாள். குழிகாட்டின் நடுவே இருந்த ஒரு தென்னை மரத்தடியில் கட்டில் போட்டு படுத்திருந்தான் அவன்‌.

"அவளை நினைச்சே நேரம் கடத்த போறிங்களா.?" என்றாள்‌ சுவாதி அவனருகே அமர்ந்தபடி.

கார்த்திக் எழுந்து அமர்ந்தான்.

"நேத்திருந்து அவளும் இங்கே இருக்கா.. நேத்திருந்து ஸ்டக் ஆகி போனமாதிரி இருக்கு.." என்றான் அவன்.

"கொஞ்ச நாள் போனா எல்லாம் சரியா போயிடும். இனி அவளை நீங்களும் தவிர்க்க முடியாது. அவளும் உங்களை தவிர்க்க முடியாது. முள்ளோ கல்லோ பாதையை கடந்துதான் ஆகணும். சும்மா சும்மா ஸ்டக் ஆகாதிங்க.." என்றாள்.

கார்த்திக் புரிந்ததாக தலையசைத்தான்.

மறுநாள் முறைப்படி எம்.எல்.ஏவாக பதவியேற்றுக் கொண்டான் கார்த்திக். வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை அணிய சொல்லி சுவாதி வற்புறுத்தியதால் வேறு வழியில்லாமல் அதை அணிந்தான்.

"நம்ம தொகுதியை ஏ கிளாஸ் தொகுதியா மாத்தணும்டா மாப்பிள்ளை‌‌.." என்றார் மேகமானன்.

"கொஞ்சம் கொஞ்சமா செய்யலாம் மாமா.. நீங்க ஓவரா உணர்ச்சிவசப்படுவதை முதல்ல நிறுத்துங்க.." என்றான். மேகமானனின் எண்ணத்தை பற்றி அவனுக்கும் தெரியும். அவரின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யும் அளவிற்கு உழைக்க வேண்டும் என்று தனக்குள் பிரமாணம் எடுத்துக் கொண்டான். இந்த ஒற்றை வெற்றிக்கு பின்னால் அவரின் முப்பத்தைந்து வருட உழைப்பு இருக்கிறதென்று அவனுக்கும் தெரியும்.

முதலமைச்சர் மற்றும் மற்ற தலைவர்களிடமிருந்து வாழ்த்து பெற்றான் கார்த்திக்.

அபிராமி இரண்டாம் நாள் பணிக்கு வந்திருந்தாள். மனதின் துள்ளல் இன்னமும் குறையவில்லை. இந்த மூன்று நாட்களாக வாழ்த்து மழையில் நனைந்துக் கொண்டே இருந்தாள் அவள்.

அனைவருமே அவளை எங்கள் பெண் என்றே அழைத்தார்கள். அவர்களின் பாசம் பிடித்திருந்தது.

மாவட்ட நிர்வாகம் பற்றிய பைல் ஒன்றை அவள் பார்த்துக் கொண்டிருந்த வேளையில் அவளின் அறை கதவை தட்டப்பட்டது.

"கம்மின்.." என்றவள் கார்த்திக் அங்கே வருவான் என்று எதிர்பார்க்கவில்லை.

பூங்கொத்தோடு உள்ளே வந்தவன் அபிராமியை பார்த்துவிட்டு சில நொடிகள் தனக்குள் தடுமாறினான். ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.

புடவை ஒன்றை அழகாய் கட்டியிருந்தாள். தலைமுடியை முடிந்திருந்தாள். அவளின் முகத்தில் இருந்த இளமை அப்படியே இருப்பது போல் தோன்றியது அவனுக்கு.

கார்த்திக்கை கண்டதால் உள்ளத்தில் ஏற்பட்ட எந்த மாற்றத்தையும் முகத்தில் காட்டவில்லை அவள்.

ஆடையால் அவனின் தோரணை சற்று மாறியிருந்தது. அவனின் எண்ண ஓட்டத்தை அவளால் கண்டறிய முடியவில்லை.

பூங்கொத்தை அவளிடம் நீட்டினான் கார்த்திக். இருவருக்கும் இடையில் அதே பழைய முள்வேலி இன்னமும் இடையில் நின்றது.

"பூங்கொத்து பிடிக்காதுங்களா.? கலெக்டருக்கும் மத்தவங்களுக்கும் வாங்கியது போலவே உங்களுக்கும் வாங்கிட்டேன்.." என்றவனின் கையிலிருந்த பூங்கொத்தை வாங்கினாள் அபிராமி‌.

'நீ ஒன்னும் ஸ்பெஷல் இல்லடின்னு சொல்ல வரியாடா.? நீயும் எனக்கு ஸ்பெஷல் கிடையாதுடா..' என்று நினைத்தபடி பூங்கொத்தை மேஜையின் மீது வைத்தாள்.

"நான் கார்த்திக். தெற்கு தொகுதிக்கு எம்.எல்.ஏ.. ஒன்றிணைந்து பணி செய்து நம்ம பகுதியின் தரத்தை உயர்த்துவோம்.." என்றபடி அவளிடம் வலது கையை நீட்டினான்.

பணி நிமித்தமான அவனின் புன்னகையை இவளும் பிரதிபலித்தாள்.

"நிச்சயம்.." என்றபடி தன் கையை நீட்டினாள்.

இரண்டு நொடி குலுக்கலோடு கையை பின்னுக்கு இழுத்துக் கொண்டான் கார்த்திக்.

அவளின் ஸ்பரிசம் தந்த சிலிர்ப்பை முன்பை விட அதிகமாக உணர்ந்தான் அவன்.

நேரம் கடந்தால் மறைவது அல்ல காதல், நேரம் செல்ல செல்ல வளர்வது காதல் என்பதை தாமதமாய் புரிந்துக் கொண்டான்.

ஆனால் தன் காதலை மதிக்காதவளிடம் எந்நிலையிலும் காதலை வெளிக்காட்ட விரும்பவில்லை அவன்.

"அவசியம் இருந்தால் பார்க்கலாம்.." என்றவன் அங்கிருந்து கிளம்பினான்.

அபிராமி அவன் தந்த பூங்கொத்தை பார்த்தாள். இந்த இரண்டு நாளில் அவனை பற்றிய செய்திகள் சிலவும் அவளின் காதுகளுக்கு வந்து சேர்ந்துள்ளது.

"சும்மாவே திமிரு.. இப்ப எம்.எல்.ஏ வேற.. இவனுக்கெல்லாம் ஓட்டு போட்டவங்களை சொல்லணும்.." என்று எரிந்து விழுந்தாள்.

கார்த்திக்கிற்கு நிறைய பொறுப்புக்களும் வேலைகளும் இருந்தன. நல்லவேளையாக மேகமானனின் உதவியால் சிக்கலில்லாமல் வேலைகளை செய்தான்.

மலை கிராமம் ஒன்றில் தண்ணீர் வசதி இல்லை என்று அவனிடம் சொன்னார் மேகமானன்.

"அந்த ஊரை பத்தி நானும் பல முறை பல பேர்கிட்ட சொல்லிட்டேன். ஒருத்தரும் கண்டுக்கல.. ஒரு குடம் தண்ணீர் எடுக்கவும் நாலு கிலோமீட்டர் நடந்து போய் ஊத்துல தண்ணி மொண்டு வராங்கப்பா.. நாமளாவது ஏதாவது செய்யணும்டா.!" என்றார்.

"கண்டிப்பா மாமா.!" என்றான் அதற்கான ஏற்பாடுகளை செய்ய தொடங்கினான்.

அந்த கிராமத்திலேயே நான்கு இடங்களில் ஆழ்துளை கிணறு அமைத்து, அதன் அருகருகே டேங்குகளை கட்ட நிதி ஒதுக்கப்பட்டது. எந்தெந்த இடங்களில் தண்ணீர் தொட்டி கட்டுவது என்றும் மேகமானனே முடிவு செய்தார்.

வேலைகள் மின்னல் வேகத்தில் நடந்தன.

தண்ணீர் தொட்டியை மக்கள் உபயோகத்திற்கு திறந்து வைக்கும் விழாவும் ஏற்பாடு செய்யப்பட்டது.

அந்த நிகழ்ச்சிக்கு அபிராமிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இதற்கு முன்பு கூட சில முறை சென்று வேலை எப்படி நடக்கிறது என்று ஆய்வு செய்துள்ளாள் அவள். ஆனால் இவள் செல்லும்போது கார்த்திக் வரமாட்டான்.

அவனை நினைத்தால் சங்கடம் ஏதும் இல்லை. ஏதோ ஒரு இனம் காண இயலாத குறுகுறுப்பு.

நிகழ்ச்சி நடந்த கிராமத்திற்கு வந்தாள் அபிராமி. காரில் இருந்து இறங்கியவளை வரவேற்றாள் சுவாதியின் தங்கை பவித்ரா. அவளின் இடுப்பில் சரண் அமர்ந்து இருந்தான்.

"வாங்க மேடம்.." என்றாள் புன்னகையோடு. தன் கையில் இருந்த சாக்லேட் தட்டை அவள் முன் நீட்டினாள்.

அவளை பார்த்து பலநாள் ஆகிவிட்டதில் புன்னகை பூத்தாள் அபிராமி. ஆனால் அவள் புன்னகைக்கவில்லை.

"ம்மா.. சாக்கே.." என்று சாக்லேட்டில் கை வைக்க முயன்றான் சரண்.

"அப்பா அடிச்சிடுவாரு.. சாக்லேட் வேணாம் தங்கம்.!" என்றவள் அபிராமியை மற்றவர்கள் கூடி நின்ற இடத்திற்கு அழைத்துச் சென்றாள்.

"எப்ப உனக்கு கல்யாணம் ஆச்சி பவி.? என்கிட்ட கூட ஒரு வார்த்தை சொல்லல.." ஆதங்கமாக கேட்டாள் அபிராமி.

"நீங்க கூடத்தான் கலெக்டர் ஆகியிருக்கிங்க. அதை மட்டும் என்கிட்ட சொல்லவா செஞ்சிங்க.?" திருப்பி கேட்டாள் அவள்.

மலை கிராமத்தின் முக்கிய மனிதர்களோடு பேசிக் கொண்டிருந்தான் கார்த்திக்.

"இதுக்கு முன்னாடி இருந்த எம்.எல்.ஏக்கிட்ட எத்தனையோ மனு தந்தோம். கலெக்டர்ல இருந்து கம்பவுண்டர் வரைக்கும் கூட நடையா நடந்து கேட்டுட்டோம். மலை கிராமத்துக்கு பாதை வராது, மலை கிராமத்துக்கு தண்ணீர் வராதுன்னு சொல்லியே காலத்தை கடத்திட்டாங்க.. நீங்களாவது எங்களுக்கு இந்த வசதியை ஏற்படுத்தி தந்துருக்கிங்க.. நிச்சயம் உங்களை மறக்க மாட்டோம் தம்பி.." என்றார் ஒரு பெரியவர்.

"நீ என்ன நினைப்பியோ தெரியல தம்பி‌.. உன் மாமன் முகத்துக்காகதான் நாங்க ஓட்டு போட்டோம். ஆனா எங்க மனசு வாடாம நீ இதை பண்ணி கொடுத்துட்ட.. அப்படியே ஊருக்கு ரோடும் போட்டு தந்துட்டின்னா புண்ணியமா போகும்.." என்றாள் ஒரு பாட்டி.

"நிச்சயம் செய்றேன் பாட்டி.." என்ற கார்த்திக் கை கடிகாரத்தை பார்த்தான்.

"ப்பா.." என்று கத்தினான் சரண். கைக்கடிகாரத்தை பார்த்துக் கொண்டிருந்த கார்த்திக் நிமிர்ந்து சரணை வாங்கிக் கொள்ள முயன்றான்.

சரணை தான் பிடுங்கிக் கொண்டார் மேகமானன். "நீ வேலையை பாருடா மாப்பிள்ளை.." என்றார்.

சரண் அவரிடம் நிற்க மாட்டேன் என்று நழுவ முயன்றான்.

"ப்பா.. ம்மா.." என்று கார்த்திக்கை பார்த்தும், பவித்ராவை பார்த்தும் கை காட்டியபடி தாவ முயன்றான்.

"அமைதியா இருடா துடுக்கு பையலே.. அப்பனையும் அம்மாவையும் இதுக்கு முன்னாடி பார்க்காத மாதிரியே துள்ளுவான்.." என்று அதட்டினார் அவர்.

"சார் போட்டோ எடுக்க ஆரம்பிச்சிடலாமா.?" என்று கேட்டார் செய்தியாளர் ஒருவர்.

"போட்டோவுல நாம எதுக்கு.. ஓரம் வா பாப்பா.." மகளையும் பேரனையும் அழைத்துக் கொண்டு ஓரமாக சென்றார் மேகவானன்.

"மேடம் நீங்க வாங்க.‌. டைம் ஆச்சி.. பங்சன் ஆரம்பிக்கலாம்.." என்று அழைத்தார் உள்ளூர்காரர் ஒருவர்.

'அபிராமியோ' என்றபடி திரும்பி பார்த்தான் கார்த்திக். அவளேதான் வந்திருந்தாள். எங்கே கலெக்டர் சார் இவளை அனுப்பாமல் தான் வந்து விடுகிறாரோ என்று பயந்திருந்தான் அவன்.

அபிராமி சரணையும், பவித்ராவையும் வெற்று பார்வை பார்த்துவிட்டு கார்த்திக்கின் அருகே வந்தாள்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN