காதல் கடன்காரா 46

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
கார்த்திக் துணிகள் அனைத்தையும் உலர்த்த போட்டுவிட்டு மாமாவின் பக்கம் திரும்பினான்.

"யார் போன் பண்ணாலும் நான் எடுக்கறது இல்ல மாமா.. நீங்க சீக்கிரம் உங்க கட்சி தலைமைக்கிட்ட பேசிடுங்க.." என்றவன் தோளை வளைத்தபடி திரும்பினான். அபிராமி எதிர் மாடியில் இருப்பதை ஆச்சரியமாக பார்த்தான்.

மேகமானன் இவளை பார்த்துவிட்டு மொட்டை மாடியின் இந்த பக்க எல்லைக்கு வந்தார்.

"நல்லாருக்கியா பாப்பா.? அடிக்கடி பார்த்துக்கிட்டாலும் சரியா பேச கூட நேரம் கிடைக்க மாட்டேங்குதும்மா.." என்றார் வருத்தமாக.

"ந.. நல்லாருக்கேன்ப்பா.." என்றாள் புன்னகையோடு.

"ஒரு மாசமா இங்கேதான் இருக்கோம். தினம் நிறைய பேர் எம்.எல்.ஏ ஆபிஸ் வராங்க. இங்கேயே இருந்தா அவங்களுக்கு சிரமம் இல்லையேன்னு வந்துட்டோம்.." என்றவர் "இங்கேதான் இருப்போம்.. ஏதாவது உதவி தேவைப்பட்டா கூப்பிடும்மா.." என்றார்.

தரையில் கிடந்த பிளாஸ்டிக் வாளியை கையில் எடுத்த கார்த்திக் "அவங்களுக்கு நம்ம உதவி எதுக்கு மாமா.? கவர்மெண்ட் ஆபிசருக்கு உதவி செய்யதான் கவர்மெண்டே இருக்கே.." என்றவன் அங்கிருந்த படிகளில் இறங்கி நடந்தான்.

அவனின் குரலில் நக்கலோ, கிண்டலோ, வெறுப்போ இல்லை. அதுவே அபிராமிக்கு ஆச்சரியத்தை தந்தது.

"அவன் கிடக்கறான்.. உனக்கு ஏதாவது உதவி வேணும்ன்னா என்னை கேளும்மா.." என்ற மேகமானன் கார்த்திக்கை தொடர்ந்து கீழே சென்றார்.

அபிராமி மலர்ந்த ஜாதி மல்லியில் பத்து பூக்களை பறித்துக் கொண்டு கீழே வந்தாள். தன் அறையின் மேஜை மேல் வைத்தாள். பூவின் வாசம் அறை முழுக்க நிறையட்டும் என்று எண்ணினாள்.

''இவன் ஏன் துணி காயப்போட்டுட்டு இருக்கான். பவித்ரா என்ன செய்றா.? அவ இங்கே இல்லையா.?" என்று காற்றை கேட்டாள். "நமக்கு எதுக்கு அவங்க வீட்டு பஞ்சாயத்து.?" என அதற்கு பதிலும் அவளாகவே சொல்லிக் கொண்டாள்.

சமையல்காரரை வேண்டாமென்று சொல்லிவிட்டு அப்பாவே சமைத்து வைத்திருந்தார். இரவு இருவரும் இணைந்து உணவு உண்டார்கள்.

"உங்க அம்மாவுக்கு கொழுப்பு அதிகம்.." என்றார் உணவை உண்ணபடியே.

வெளியில் என்ன திட்டினாலும் உள்ளுக்குள் அவர் தன் மனைவியை மலையளவு நேசிக்கிறார் என்று அபிராமிக்கும் தெரியும். மனைவி தன் பேச்சை கேட்கவில்லை என்ற கோபத்தை எப்படி வெளிக்காட்டுவது என்று அவருக்கு புரியவில்லை.

இந்த ஒரு விசயத்தில் மட்டும் அபிராமிக்கு வருத்தம்தான். தாத்தா பிறகு அப்பா பிறகு தான் என்று வழி வழியாக துணைக்கு அடங்கி போக வேண்டிய சூழலே என்பதை பலமுறை நினைத்துப் பார்த்து உள்ளாள். அவர்களுக்கேனும் காதல் என்ற ஒரு விசயம் இருக்கையில் தான் எதற்காக அந்த அடங்கலுக்குள் செல்ல வேண்டும் என்று யோசித்துள்ளாள். பரம்பரைக்கே சாபம் போல என்று நினைத்தவள் அதை தன் தலைமுறையில் மாற்றி விட வேண்டும் என்று பலமுறை சபதம் எடுத்துக் கொண்டிருந்திருக்கிறாள்.

அன்று இரவு சிந்து போன் செய்தாள். கட்டுமான நிறுவனம் ஒன்றில் வேலை செய்துக் கொண்டிருந்தாள் அவள். அடுத்த வாரத்தில் அவளுக்கு திருமணம் என்று அழைப்பு விடுத்திருந்தாள் அவள்.

அபிராமி இங்கே வந்து பிறகுதான் சிந்துவின் கைபேசி எண்ணை வாங்கி அவளோடு பேசினாள்.

அதற்கு முன்பு வரை தோழிகளோடு அவள் தொடர்பு கொள்ளவேயில்லை. சுவாதியோடும் கூட பல நாள் முன்பே பேச முயன்றாள். ஆனால் முதல் நாள் "ஹலோ.." என்று இவளின் குரல் கேட்டு போன் இணைப்பை துண்டித்துக் கொண்ட சுவாதி அதன் பிறகு இவளின் போனை எடுக்கவேயில்லை‌.

மணப்பெண் சிந்துவோடு சில நிமிடங்கள் பேசினாள். சுவாதியின் சொந்த வாழ்க்கையை பற்றி கேட்க நினைத்தாள். ஆனால் என்னவோ தயக்கம். அவளே தன்னை வெறுக்கும்போது தான் என்னவென்று அறிந்து என்ன செய்வது என நினைத்தாள்.

சிந்து அழைப்பை துண்டித்துக் கொண்ட பிறகு படுக்கையில் விழுந்தாள். மனதெங்கும் ஏதேதோ யோசனைகள் ஓடியது. அதை கலைக்கும் விதமாக யாரோ அவளின் போனுக்கு அழைத்தார்கள். எடுத்துப் பார்த்தாள். ஸ்வேசன்யா அழைத்திருந்தாள்.

ஸ்வேசன்யா ஆங்கிலோ இந்தியன் பெற்றோருக்கு பிறந்தவள். அபிராமியின் இரண்டு வருட தோழி. இருவரும் ஒன்றாகதான் டெல்லியின் பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்தார்கள். தேர்வையும் சேர்ந்தேதான் எழுதினார்கள். ஸ்வேசன்யா ஐ.எப்.எஸ் அதிகாரியாகி பிரான்ஸ் சென்று விட்டாள். அது அவளின் பல வருட கனவு என்று பலமுறை சொல்லியுள்ளாள்.

"ஹாய்.. சில்க் வோர்ம்.." என்று ஆரம்பித்தாள் அவள்.

"ஸ்வேசா.. என்ன செய்ற.?"

"வீட்டுக்கு கிளம்பிட்டு இருக்கேன். சரி உன்னோடு கடலை போடலாமேன்னு போன் பண்ணேன்.." என்றாள்.

"எப்படி இருக்கு பிரான்ஸ்.?"

"நல்லாருக்கு‌. ஆனா நம்மூரை மிஸ் பண்றேன்‌.. அங்கே இருந்தவரை தெரியல.. இங்கே வந்து பிறகுதான் அருமை புரியுது, உன்னை மாதிரியே.." என்று சிரித்தாள் அவள்‌.

"அருமைகள் எதுக்கு.? நமக்கு இப்ப என்ன வேலையோ அதைதான் பார்க்கணும்.." என்றாள் இவள்.

இருவரும் சிறிது நேரம் பேசினார்கள். ஸ்வேசன்யா போனை வைத்ததும் உறங்க ஆரம்பித்தாள் அபிராமி.

மறுநாள் மாலையில் மூர்த்தி வேலை முடிந்து வீட்டிற்கு வந்தபோது அவனுக்காக வாசலிலேயே காத்திருந்தான் ஈஸ்வர்.

மூர்த்தியை மீண்டும் சொந்த ஊருக்கே பணி மாறுதல் செய்து விட்டார்கள். கடந்த இரண்டு வருடங்களாக இங்கேதான் வேலை செய்துக் கொண்டிருக்கிறான்.

"வா அண்ணா.." என்றுவிட்டு வீட்டுக்குள் நுழைந்தான்.

ஒன்றரை வருடங்களுக்கு முன்பு ஒருநாள் தார்சாலையில் லாரி மோதி விபத்துக்குள்ளாகி மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்ட ஈஸ்வர் அரை உயிராய் போராடிக் கொண்டிருந்தான். அப்போது கார்த்திக்கும் மூர்த்தியும் சென்றுதான் அவனுக்கான மருத்துவ செலவுகளை செய்தனர். இருக்கும் பணத்தையெல்லாம் தந்தையை ஜெயிலில் இருந்து வெளிக் கொண்டு வருவதற்கே செலவு செய்துவிட்ட ஈஸ்வருக்கு அந்த பண தட்டுப்பாட்டில் இவர்கள்தான் உதவினார்கள்.

அண்ணனும் தம்பியும் அவனுக்காக தங்களின் ரத்தத்தை தானம் செய்தனர். அவர்கள் இல்லாவிட்டால் இவன் பிழைத்திருக்கவே முடியாது என்பதுதான் உண்மை.

ஈஸ்வரின் தந்தை இன்னமும் ஜெயிலில்தான் இருந்தார். அவர் செய்தது தவறு என்றும், அதற்கு தான் மன்னிப்பு கேட்பதாகவும் இவர்களிடம் மன்னிப்பு கேட்டான் ஈஸ்வர்.

மன்னிப்பு கேட்போரை உடனே மன்னிக்க வேண்டும் என்று சொல்லி கார்த்திக்தான் அவனை தங்களின் வீட்டோடு சேர்த்துக் கொண்டான்.

ஆறு மாதத்திற்கு முன்பு ஈஸ்வருக்கும் தூரத்து மாமன் மகள் ஒருத்திக்கும் திருமணம் நடந்தபோது கூட இவர்கள்தான் முன்னால் நின்று அனைத்து வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்தார்கள்.

மூர்த்தி உடையை மாற்றிக் கொண்டு ஹாலுக்கு வந்தான். சுவாதி ஈஸ்வருக்கும் மூர்த்திக்கும் காப்பியை கொண்டு வந்து தந்தாள்.

"ஒரு மாசமா அபிராமி பத்திய நியூஸேதான் காதுக்கு வருது மூர்த்தி.." சிரித்தபடியே சொன்னான் ஈஸ்வர்‌.

சுவாதி சமையலறையில் நின்றபடி இவர்கள் பேசுவதைதான் காது கொடுத்துக் கேட்டுக் கொண்டிருந்தாள். கார்த்திக் இன்னமும் அபிராமியைதான் விரும்பிக் கொண்டிருந்தான்‌. அதில் சுவாதிக்கு எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால் மூர்த்தியும் அவனது குடும்பமும், ஈஸ்வரும் அபிராமியின் மீது கொண்டுள்ள வெறுப்பு எப்போதும் மாறாது என்றும் அவளுக்கு தெரியும்.

தோழியின் மீதான பாசத்தால் இவர்கள் அவளை பற்றி ஏதாவது பேசினாலே இவளுக்கு இதயம் படபடக்கும்‌. ஊரையே வெறுத்து ஓடியவள் இப்போதுதான் வந்து சேர்ந்துள்ளாள், இவர்கள் ஏதாவது தொல்லை செய்தால் மீண்டும் கிளம்பி விடுவாளோ என்று கவலையாக இருந்தது.

"ம்மா.." அண்ணன்களின் முன்னால் வந்து அமர்ந்த புவனாவின் மடியில் இருந்த சரண் அவளை கொஞ்சிக் கொண்டிருந்தான்.

"வாலு பையா.. எங்கடா உங்க கார்த்தி அப்பா.?" என்று அவனின் கன்னம் கிள்ளி கேட்டான் ஈஸ்வர்.

"நைட்ல கூட அவன்கூடதான் தூங்கிட்டு இருப்பான். பகலெல்லாம் ப்பா.. ப்பான்னு அவனோடவேதான் பைக் ஏறிக்கிட்டும், காடு காடாவும் சுத்திட்டு இருப்பான்.. இந்த ஒரு மாசத்துல அவன் ஞாபகத்துல இளைச்சே போயிட்டான்.." என்றான் மூர்த்தி தன் மகனை மடி மீது தூக்கி வைத்தபடி.

"கார்த்தி அப்பா வேணுமா அப்பு.?" என்றான்‌.

குழந்தை கார்த்திக்கின் நினைவில் உதட்டை பிதுக்கினான். அவன் அழும் முன் அவனை தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டான் மூர்த்தி.

"சரிடா அப்பு.. இந்த வாரம் கார்த்திக் அப்பாவை வர சொல்லலாம்.." என்றான் கொஞ்சலாக.

ஆனால் சரணுக்கு சமாதானம் ஆகவில்லை. சின்னதாக ஆரம்பித்த சிணுங்கல் விரைவில் கத்தலாகி விட்டது.

சுவாதி முறைப்போடு வந்து அவனை தன் கையில் வாங்கிக் கொண்டாள்.

"நல்லா இருந்த குழந்தையை அழ வச்சிட்டிங்க.. சரியான சில்லறை நீங்க.!" என்று மூர்த்தியிடம் கடுகடுத்துவிட்டு சென்றாள்.

மூர்த்தி முகம் சிவப்பை கண்டு புவனா சிரித்தாள். "ஊரையே மிரட்டற போலிஸ்.. ஆனா பொண்டாட்டிக்கு சில்லறையா தெரியுறிங்க.." என்று கிண்டலடித்தாள்.

"உனக்கு இங்கே என்ன வேலை.? போய் படி போ.. அபிராமியெல்லாம் பாரு.. ரோசமா போனா.. ரோசமா கலெக்டராகி வந்திருக்கா.. நீயும்தான் இருக்கியே தண்டம்.. போய் முதல்ல அரியரை கிளியர் பண்ற வழியை பாரு.." தங்கையை அங்கிருந்து துரத்தினான் மூர்த்தி.

புவனா அவனை முறைத்தபடியே எழுந்து தன் அறைக்கு வந்தாள். மேஜையில் புத்தகங்கள் அடுக்கப்பட்டு இருந்தது. அதை கண்டுக் கொள்ளாதவள் தனது போனை எடுத்துக் கொண்டு கட்டிலில் விழுந்தாள்.

தன் போனில் இருந்த முத்தமிழின் புகைப்படங்களை கோபத்தோடும், காதலோடும் பார்க்க ஆரம்பித்தாள். அவள் படிக்கவே இல்லை. படிக்க விரும்பவும் இல்லை.

அவளுக்கு அபிராமி மாதிரி இருக்க விருப்பம் இல்லை. தினமும் முத்தமிழுக்கே தெரியாமல் அவனை பின்தொடர்ந்து அவனை புகைப்படங்கள் எடுத்து அதை ரசித்துக் கொண்டிருக்க வேண்டும்.

அபிராமி தன் வீட்டை விட்டு சென்ற சில நாட்களுக்கு பிறகு சென்று தன் காதலை மீண்டும் முத்தமிழிடம் சொன்னாள் புவனா.

"எனக்கு வெட்கம் மானம், சூடு சொரணை இல்லன்னு கூட நினைச்சிகங்க. ஆனா நான் உங்களை லவ் பண்றேன்.. எத்தனை காலம் ஆனாலும் உங்களைதான் லவ் பண்ணுவேன்.." என்றாள்.

முத்தமிழ் மீண்டும் அவளுக்கு புத்திதான் சொன்னான். "இது சரிவராது புவனா. காதலும் கல்யாணமும் விளையாட்டு கிடையாது‌. மன ஒற்றுமையோடு இணையுறவங்களே எத்தனையோ பேர் பாதியில் பிரிஞ்சிடுறாங்க. நாம ஏன் சேரணும்.? அடித்தளமே சரியில்லாத உறவு இது.. உன் லைப்பை ஸ்பாயில் பண்ணிக்காத.." என்று சொல்லி அனுப்பி வைத்தான்.

அவன் தன்னை எப்போதும் ஏற்றுக் கொள்ள மாட்டான் என்று அவளுக்கு புரிந்து போனது.

ஆனால் அவனை மறக்கத்தான் முடியவில்லை அவளால். "ஒருதலையா காதலிக்க கூடாதுன்னு எனக்கு யாரும் ரூல்ஸ் போட முடியாது‌. இது என் மனசு. நான் எப்பவும் உங்களை மட்டும்தான் நினைச்சிட்டு இருப்பேன்.." என்று கைபேசியில் இருந்த அவனின் புகைப்படத்தை பார்த்து சொன்னாள்‌.

"அபிராமி முன்ன மாதிரி இல்ல மூர்த்தி.." ஈஸ்வர் சொன்னது கேட்டு ஆச்சரியமாக அவனை பார்த்தான் மூர்த்தி.

"ஏன்.?".

"நேத்து அவ ஆபிஸ்க்கு போயிருந்தேன். இப்பதான் என்னை புதுசா பார்க்கறவ மாதிரி அன்பா கூப்பிட்டு உட்கார வச்சி என்ன பிரச்சனைக்கு விசாரிச்சி மனுவா எழுதி வாங்கிட்டு அனுப்பி வைக்கிறாப்பா.." என்றான்.

மூர்த்தி சிரித்தான். "அவ வேலையே அதானே.?" என்றான்‌.

"இருந்தாலும் முகத்துல இருந்த சிரிப்பு செயற்கை மாதிரியே தெரியல.. அவ இடத்துல யார் இருந்திருந்தாலும் சிரிச்சிருக்க மாட்டாங்க.." என்றான் இவன்.

மூர்த்தி உச்சு கொட்டினான். "அவளுக்கு நடிக்கறதுக்கு சொல்லியா தரணும்.?" என்றான்.

ஈஸ்வர் பெருமூச்சு விட்டான். அபிராமியை கார்த்திக்கை பழிவாங்க என்னவெல்லாம் செய்தாள் என்று அவனுக்கும் தெரியும். அனைத்தையும் மூர்த்தி சொல்லியுள்ளான். ஆனால் ஈஸ்வருக்கு உடல்நிலை சரியில்லாமல் போக யார் காரணம் என்றும், அவனின் தந்தைக்கு எதிராக சாட்சி தயாரிக்கப்பட்ட விதத்தையும் பற்றி அவனுக்கு யாரும் சொல்லவில்லை. இந்த ஒரு விசயத்தில் மட்டும் எதிரிக்கு எதிரி நண்பன் என்பது போலதான் அபிராமியை பார்த்துக் கொண்டிருந்தான் மூர்த்தி.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN