நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

1.அழகே

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
பெண்களை வெறுக்கும் கதிருக்கும் வாழ்க்கையை வெறுக்கும் மைவிழிக்கும் கட்டாய திருமணம் செய்து வைக்கின்றனர் பெற்றோர். இருவருக்கும் இடையில் உள்ள ஒற்றுமை அவர்களின் திமிர்தான். இருவரும் இணைந்தால் என்னவெல்லாம் நடக்கும் என்பதை இக்கதையில் பார்க்கலாம்..


இரவு வானில் அழகாய் ஒளி வீசிக் கொண்டிருந்தது வெண்ணிலா.

திருமண மண்டபம் செயற்கை ஒளி விளக்கில் ஜொலித்துக் கொண்டிருக்க அந்த மண்டபத்தின் மொட்டை மாடியில் நிலவொளியில் ஜொலித்தப் படி அமர்ந்திருந்தாள் மைவிழி.

குளிர்பானத்தோடு அவள் அருகே வந்து அமர்ந்தான் செழியன்.

"ஜூஸ் வேணுமா..?"

அவன் கையிலிருந்து அதை பிடிங்கி இரு நொடியில் காலி செய்தாள்.
"இது கனவுன்னு சொல்லு செழியா..." என்றாள் நிலவை பார்த்தபடி.

அவளோடு இணைந்து நிலவு ரசித்தவன் "ஜூஸ் ஜில்லுன்னு இருந்ததா..?" என்றான்.

"ம்... ரொம்ப ஜில்லுன்னு..."

"அப்படின்னா இது கனவு இல்ல.. இன்னும் சந்தேகம்ன்னா சொல்லு... சூடா காபி கொண்டு வரேன் ‌.."

அவனுக்கு பதில் சொல்லாமல் "எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது..?" என தன்னை தானே கேட்டு கொண்டாள்.

மைவிழிக்கு நாளை காலை திருமணம். மைவிழிக்கு இந்த திருமணத்தையும் பிடிக்கவில்லை. மாப்பிள்ளை கதிரையும் பிடிக்கவில்லை. தன் அப்பாவின் மன திருப்திக்காக மட்டுமே இந்த திருமணத்திற்கு சம்மதித்தாள். ஆனாலும் கூட உள்ளுக்குள் இது கனவாகி கூடாதா என்ற எண்ணம் வருவதை தடுக்க முடியவில்லை.

"நம்ம வீட்டாளுங்க எல்லோருமே என்னை பழி வாங்கிட்டாங்க செழியா... அவங்க யாருக்குமே என்னை பிடிக்கல... அதனால்தான் நான் பிடிக்கலன்னு சொன்ன மாப்பிள்ளைக்கு என்னை கட்டி வைக்கிறாங்க..."

செழியனுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. அவனுக்கு கதிரை பிடித்திருந்தது. கொஞ்சமே கொஞ்சம்தான் பிடித்திருந்தது என்றாலும் கூட கதிரிடம் பெரிய அளவில் அவனுக்கு எந்த வித வெறுப்பும் இல்லை.

"எனக்கு அவன் ஓகேன்னுதான் தோணுது..."

"உனக்கு அவனை பத்தி என்ன தெரியும்...?"

"அதேதான் நானும் கேட்குறேன்... உனக்கு அவனை பத்தி என்ன தெரியும்..? நீ வெறுத்து பேசுற அளவுக்கு அவன் ஒன்னும் அவ்வளவு மோசமா தெரியல..."

அவனை நம்ப முடியாமல் பார்த்தாள்.

"நீயுமா..? ச்சே... நீயாவது என் பக்கம் இருப்பன்னு நினைச்சேன்...நீயும் எல்லாரையும் போலதான் இல்ல... பத்து நாள் முன்னாடி வரை அவன் யாருன்னு கூட எனக்கு தெரியாது. பத்து நாளைக்கு முன்னாடி பொண்ணு பார்க்க வந்தப்ப அவன் என்னை பிடிக்கலன்னு சொன்னான்னு உனக்கே தெரியும்தானே..."

"நீயும் அதைதான் சொன்ன..."

"எனக்கு ஒரு காரணம் இருந்தது.‌‌.."

"உனக்கு ஒரு காரணம் இருக்கும் போது அவனுக்கு ஒரு காரணம் இருக்காதா..? இரண்டு பக்கமும் காரணங்கள் இருக்கலாம்... உனக்கு வாழ்க்கை துணை அவன்தான்... அவனோடுதான் உன் ஆயுள்..."

"தெரியாத ஒருத்தன் கூட எப்படி வாழ்க்கை முழுக்க வாழ முடியும்..?"

"வாழ்க்கை உனக்காக தந்த சர்ப்ரைஸா இந்த கல்யாணத்தை நினைச்சிக்க.‌.. தெரியாத ஒருத்தரோடு வாழ்க்கையை ஆரம்பிச்சி அவங்களை பத்தி ஒவ்வொன்னா தெரிஞ்சிக்கிட்டு அந்த ஒவ்வொன்னையும் விரும்பரதுதான் காதல்ன்னு நான் நினைக்கிறேன்..."

மைவிழி மானசீகமாக தலையில் அடித்து கொண்டாள்.
"உனக்கு அப்படி ஒரு வாழ்க்கை அமைய வாழ்த்துறேன் செழியா... இப்போ என் சோகத்துல பங்கெடுத்துக்க என்னோடு சேர்ந்து இந்த சோகபாட்டை கேளு..." என்றபடி தன் போனில் பாடலை ஒலிக்க செய்தாள்.

வீடு வரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரோ...?

மைவிழி அவ்வளவு சீக்கிரத்தில் யாரையும் வெறுப்பவள் அல்ல... ஆனால் அவளுக்கு தன் சிறு வயதிலிருந்தே தன் வீட்டில் உள்ள அனைவரும் தன்னை வெறுப்பதை போல தோன்ற ஆரம்பித்து விட்டது. அவள் அப்படி எண்ண காரணம் உண்டு.

வீட்டில் இவளோடு சேர்த்து ஐந்து வாரிசுகள். வீட்டில் இவள் மூன்றாவதாக பிறந்தவள். இவளுக்கு முன் ஒரு அக்காவும் ஒரு அண்ணனும் உண்டு.

இரண்டாவது பெண் குழந்தை... நிறமும் மாநிறம் என்பதால் பாட்டிக்கு பிடிக்கவில்லை. இதே காரணத்தாலும் மாமியாரிடம் வாங்கிய ஏச்சு பேச்சுகளுக்காகவும் அம்மாவுக்கும் இவளை பிடிக்கவில்லை.

அண்ணன் சரணும் தங்கை மீராவும் வீட்டின் செல்லப் பிள்ளைகள். அழகாய் பிறந்த காரணம் மீராவை அனைவரும் நேசிக்கும் படி செய்தது.

கடைக்குட்டி தம்பி பிருந்தன் தனி வழி. அவனை யாரும் கொஞ்சவும் இல்லை. அதே நேரம் மைவிழியை வெறுப்பதை போல வெறுக்கவும் இல்லை.

அம்மாவும் பாட்டியும் வெறுக்கிறார்கள் என்ற காரணத்தால் சரண் இவளிடம் அதிகம் பேசுவதில்லை. இவளாக சென்று பேசினால் கூட தன்னால் முடிந்த வரை தங்கையிடம் பேசுவதை தவிர்ப்பான்.

மீராவிற்கு தெரிந்ததெல்லாம் மைவிழியின் குறைகளை பட்டியலிடுவதே...

மைவிழியின் ஒரே ஆறுதல் செழியன் மட்டுமே. செழியன் அவளின் அத்தை மகன். இருவரும் ஒன்றாம் வகுப்பிலிருந்து ஒன்றாக படித்தவர்கள். இருவருக்குள்ளும் உள்ள நட்பு ஊர் பார்த்து பொறாமை படும் அளவிற்கு இருக்கிறது.

மைவிழி அப்பாவை தவிர யாரையும் மதிப்பதில்லை. தம்பியை தவிர வேறு யாரிடமும் தன் அன்பை வெளிகாட்டியதில்லை. செழியனை தவிர வேறு யாரிடமும் நட்பு பாராட்டியது இல்லை.

இவளிடம் இருந்த பெருங்குறை தன் கோபத்தை அப்போதைக்கு அப்போதே காட்டி விடுவதுதான். பாட்டியையும் அம்மாவையும் எப்போதும் எதிர்த்து பேசுவாள். வெளியாட்கள் இவளை ஏதாவது குறை சொல்லி விட்டால் போதும் உடனே சண்டைதான். வம்பு சண்டை செய்வதில் கில்லாடி இவள்.

அப்பாவின் பால்ய நண்பனின் மகனுக்கு இவளை பெண் பார்க்க வருகிறார்கள் என்று பத்து நாட்களுக்கு முன்பு அம்மா சொன்ன போதே இவள் தன் எதிர்ப்பை காட்ட ஆரம்பித்து விட்டாள். இளங்கலையில் கணிதம் முடித்தவளுக்கு முதுகலை பட்டம் பெற ஆசை. ஆனால் இந்த வாயாடி பெண்ணை வீட்டில் வைத்திருக்க அம்மாவுக்கும் பாட்டிக்கும் விருப்பம் இல்லை.

"எனக்கு கல்யாணம் வேண்டாம்... உங்களுக்கு நான் வீட்டுல இருக்கறது பிடிக்கலன்னா சொல்லுங்க நான் ஹாஸ்டல் போயிக்கிறேன்..."

"நீ படிச்சு கிழிக்க ஒன்னும் இல்ல... உன் வாயாடி தனத்துக்கு கடிவாளம் போடலன்னா நீ இந்த வீட்டையே சந்தி சிரிக்க வச்சிடுவ..." என்ற பாட்டியை ஆக்ரோசமாக பார்த்தாள்.

"நீ உயிரோடு இருந்தா கூடதான் இந்த வீட்டை நாசமா போக வச்சிடுவ... அதுக்காக உன்னை கொல்லவா முடியும்..?"

பாட்டி கையிலிருந்த தடியில் ஒன்று விட்டதில் மைவிழியின் கைகளில் அடி வாங்கியதற்கான சூடு உடனடியாக எழுந்தது.

கண்களில் நிரம்பி நின்ற கண்ணீரை கீழே வழிய விடாமல் ஏக்கமாக அம்மாவை பார்த்தாள். அம்மா இதை கண்டுக் கொள்ள மாட்டாள் என ஏற்கனவே தெரிந்திருந்தாலும் கூட ஏதாவது ஒரு நொடியில் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அம்மா தனக்காக... தனக்கு ஆதரவாக ஒரு வார்த்தை சொல்ல மாட்டாளா என்ற ஆதங்கம் ஒவ்வொரு முறையும் வந்தது.

அம்மா வழக்கம் போல முகத்தை திருப்பி கொண்டாள். மைவிழிக்கு பாட்டியிடம் வாங்கிய அடியை விட அம்மாவின் வருத்தமில்லா முகமே அதிக வலிகளை தந்தது.

அம்மாவின் பாசத்திற்கு ஏங்கும் தன்னை வெறுத்த படியே வீட்டை விட்டு வெளியேறினாள். தூரத்து ஏரிக்கரை இவளது சங்கடம் தீர்க்க அமைந்த கருவறை. அம்மாவிடமும் பாட்டியிடமும் திட்டு வாங்கும் ஒவ்வொரு முறையும் இங்கு வந்துதான் அமர்வாள். ஏரிக்கரையின் ஓரம் அமைந்திருந்த சுடுகாட்டை பார்த்தபடி ஏரிக்கரையில் இருக்கும் வேப்ப மரத்தடியில் அமர்ந்திருப்பாள்.

இன்று இவள் வருவதற்கு முன்பே அங்கு வந்து அமர்ந்திருந்தான் செழியன். இவள் வந்து அவனருகே அமர்ந்தாள். தனது கையிலிருந்த ஆரஞ்சு மிட்டாயை நீட்டினான் அவன். அவளுக்கு புளிப்பு சுவை பிடிக்கும் என்பதால் செழியன் இந்த மிட்டாயை எப்போதும் கையில் வைத்திருப்பான். வாழ்க்கையில் கசப்பான அனுபவங்கள் பலவற்றை சந்தித்தவளுக்கு இந்த புளிப்பு சுவை அதிக முறை ஆறுதல் தந்துள்ளது.
"நான் இங்கே வருவேன்னு உனக்கெப்படி தெரியும்..?"

"நட்பும்மா... கழுத கெட்டா குட்டிச்சுவரு போல நீயும் மனசு சரியில்லன்னா வர ஒரே இடம் இதுதானே... உங்க அம்மா எங்க வீட்டுக்கு போன் பண்ணி இன்னைக்கு உன்னை பொண்ணு பார்க்க வராங்கன்னு சொன்னப்பவே இன்னேரம் உங்க வீட்டுல சண்டை நடந்திருக்கும்ன்னு புரிஞ்சிக்கிட்டேன்..."

"என்னை பிடிக்காத ஒரே காரணத்துக்காக எனக்கு கல்யாணம் பண்ண முயற்சிக்கறாங்க.‌.."

"அப்படி ஏன் நினைக்கிற..? வர போறவன் நல்லவனா இருக்கலாம் இல்ல..?"

"எனக்கு கல்யாணமே பிடிக்கல... இதுல வர போறவன் எப்படி இருந்தா எனக்கென்ன..?"

"தோடா...நம்ம ஊரு அழகி ஏரி கரையோரம் உட்கார்ந்திருக்கா..." ஏரிக்கு குளிக்க வந்த இளைஞர்கள் கூட்டத்தில் ஒருவன் கூறியதை கேட்டு இருவரும் திரும்பி பார்த்தனர்.

"இவ இங்கே காதலன் கூட கடலை போட்டுட்டு இருக்கா... இது தெரியாம எவனோ ஒருத்தன் பொண்ணு வேற பார்க்க வரானாம்..." இவளின் நெடுங்கால எதிரியான சந்தர் சொல்லியதை கேட்டு பற்களை கடித்தபடி எழுந்தாள். சந்தருக்கும் இவளுக்கும் எப்போதுமே சரி கிடையாது. சந்தர் எப்போதும் இவளிடம் வம்பு இழுப்பான். ஆனால் இவளின் பதிலடியால் கடைசியில் ஏன் வம்பிழுத்தோம் என நினைப்பான். ஆனாலும் பழக்க தோசம் சட்டென விட்டு செல்வதில்லை என்பதால் இன்றும் இவளிடம் வாங்கி கட்ட வந்து விட்டான்.

இப்போது இதை பிரச்சனையாக மாற்றினால் முடிவு எங்கு கொண்டு போய் நிறுத்துமென மைவிழி அறிவாள்.

'மாப்பிள்ளை வீட்டுல இருந்து வரவங்க என் சுயரூபத்தை பார்த்தா இந்த மொத்த மேட்டரும் முடிஞ்சிடும்..'
உடையில் ஒட்டியிருந்த மண்ணை துடைத்தபடி இவனருகே வந்தாள்.

"நான் உன் வம்புக்கு வந்தேனா...? நான் அமைதியா இருந்தாலும் கூட எதுக்காக என்கிட்ட வம்பு பண்ண திரியற...? நீ எவ கூட நாசமா போறன்னு நான் எப்படி கேட்காம இருக்கனோ அப்படியே நீயும் இருக்க வேண்டியதுதானே..."

"நியாயத்தை யார் வேணாலும் கேட்கலாம்..."

" நான் இவனோடு பேசுவதை தப்புன்னு நீ சொன்னா அப்புறம் நான் நீ உன் அம்மாவோடு பேசுவதை கூட தப்பாதான் சொல்லுவேன்..."

"ஓவரா பேசுற மைவிழி..."

"டேய் வம்புக்கு வந்தது நீதான்டா... ஊரான் வீட்டுல நடக்கறத தெரிஞ்சிக்கும் முன்னாடி உன் வீட்டுல நடக்கறத பாருடா... பெரிய **** மாதிரி வந்துட்ட..."

"என்ன கெட்ட வார்த்தையெல்லாம் பேசுற...?" என்றபடி அவளை நோக்கி நடந்தான்.

ஏற்கனவே கோபத்தில் இருந்தவள் ஓரடி முன்னால் வந்தவனின் முகத்தில் ஒரு குத்து விட்டாள். அவளது கை அவனது வாயை பதம் பார்த்ததில் உடனடியாக அவனது உதட்டிலிருந்து ரத்தம் சொட்ட ஆரம்பித்தது.

கலவரம் எல்லை மீறும் முன் இருவருக்கும் இடையில் வந்து நின்றான் செழியன்.

"அமைதி... அமைதி..."

"என்னடா அமைதி... இவ என் வாயை உடைச்சிட்டா..."

"ஆமா... அதுவும் இது ஆறாவது முறை..." என்றான் அருகில் இருந்தவன்.

அவனை முறைத்து விட்டு செழியன் பக்கம் திரும்பியவன் "மரியாதையா விலகி போ... இவளை நான் இந்த முறை சும்மா விட போறதில்ல..." என்றான்.

"அதேதான்டா வெங்காயம் இங்கேயும்... *** நானும் இன்னைக்கு உன் பல்லை தட்டாம விடறதா இல்ல..." என்றவள் செழியனை வழியில் இருந்து விலக்க பார்த்தாள்.

"தள்ளி போ செழியா... இவன் சும்மாவெல்லாம் திருந்த மாட்டான்... புத்தி வர மாதிரி நாலு விட்டாதான் திருந்துவான்..."

"பிரச்சனையை பெருசு பண்ண வேணாம் விழி..." என்றவன்,
"இவளுக்காக நான் மன்னிப்பு கேட்குறேன் சந்தர்..." என்றான் அவனிடம்.

"அடிச்சது அவ... மன்னிப்பு நீ கேட்கற... உன் கண்ணுக்கு நான் அவ்வளவு முட்டாளாவா தெரியறேன்...
இருடி... நீ அடிச்சத உங்க அம்மாக்கிட்ட சொல்றேன்..."

"போடா பயந்தாங்கொள்ளி... நேர்ல எங்கிட்ட மோத தைரியம் இல்ல... அம்மாகிட்ட சொல்றானாம்... போய் சொல்லுடா..."

செழியன் சந்தரை கெஞ்சலாக பார்த்தபடி மைவிழியை தூரமாக இழுத்து சென்றான்.

சந்தர் உதட்டிலிருந்த ரத்தத்தை துடைத்தபடி நேராக மைவிழியின் வீடு நோக்கி நடந்தான்.

ஆனால் இதில் ஆச்சரியம் என்னவென்றால் மைவிழியின் எண்ணம் போல மாப்பிள்ளை வீட்டார் சரியான நேரத்திற்கு அங்கு வந்து நடந்த கூத்து அனைத்தையும் பார்த்தனர்.

நண்பர்களே கதை பிடித்திருந்தால் vote பண்ணுங்க. Comment பண்ணுங்க. Share பண்ணுங்க.
 
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN
Top