காதல் கடன்காரா 47

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அன்று மாலையில் லோக்கல் டிவி சேனலில் அபிராமி நேரடி பேட்டி தந்தாள். பலநாட்கள் தாமதமாகி விட்டதற்காக மன்னிப்பு கேட்டாள்.

தன்னை பற்றியும் தன் குடும்பத்தை பற்றியும் சொன்னாள். கார்த்திக்கை பற்றி மட்டும் சொல்லவில்லை.

தான் இந்த பணிக்கான தேர்வில் வெற்றிப்பெற எவ்வளவு முயற்சி செய்தோம் என்று சொன்னாள். அவளின் கடின உழைப்பை பற்றி விவரித்தாள்.

தொலைக்காட்சியை விட்டு கொஞ்சம் கூட பார்வையை திருப்பவில்லை கார்த்திக். அவளின் முகத்திலேயே கண்களை பதித்திருந்தான். அவளை ரசிக்க கிடைத்த நேரம் இதுதான் என்று தோன்றியது அவனுக்கு.

"என்னடா மாப்பிள்ளை அபிராமியை அந்த பார்வை பார்க்கற.?" என்று அவனருகே அமர்ந்திருந்த மேகமானன் கிண்டலடித்தார்.

"உள்ளே உடைஞ்சாலும் அதை அவ முன்னாடி காட்டாம கெத்தா நிக்கற பார்த்தியா அதை கடைசி வரை காப்பாத்துடா.. அவளை காணும்போது இடறிடாதே.. அவ பக்கத்துல நிற்கும்போது சறுக்கிடாதே.." என்றவர் அவனின் தோளில் தட்டி தந்துவிட்டு எழுந்து சென்றார்.

கார்த்திக் மனதுக்குள் இடறி விழுந்துக் கொண்டேதான் இருந்தான். ஆனால் அவனின் மாமன் சொன்னது போல அதை வெளிக்காட்டாமல் நாட்களை கடந்துக் கொண்டிருந்தான்.

தொலைக்காட்சியை பார்த்தான்.

"முழு மனதோடு முயற்சி செய்கையில் எதுவும் எட்டா கனியில்லை.." என்று இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை தந்தாள் அபிராமி.

கார்த்திக்கின் இதழில் புன்னகை ஓடியது. அவள் சொன்னதை கேட்டு விழுந்து விழுந்து சிரிக்க வேண்டும் போல இருந்தது.

மனம் வாட்டமுற்றது போல உணர்ந்தான். சுவாதிக்கு அழைத்து பேசினால் சற்று நிம்மதியாக இருக்கும்‌ என இவன் நினைத்தபோது சுவாதியே அழைத்தாள்.

"தம்பி அழறான்ப்பா.. உங்களை பார்க்கணும்ங்கறான்.." என்றாள். சரண் அழுவது போனில் கேட்டது கார்த்திக்கு.

தொலைக்காட்சியில் வணக்கம் சொல்லிக் கொண்டிருந்தாள் அபிராமி. டிவியை அணைத்தான் இவன்.

"வீடியோ கால் பண்றேன்.." என்றவன் வீடியோ கால் செய்தபோது அழுதுக் கொண்டிருந்த சரணை பார்த்து மனம் வாடினான்.

"சரோ குட்டி.. அப்பு பையா.." என்று கொஞ்சினான். சரண் கையை நீட்டினான். போனுக்குள் நுழைய முயன்றான்.

கார்த்திக்கிற்கு கஷ்டமாக இருந்தது. பிறந்ததில் இருந்து இவனேதான் தூக்கி வளர்த்தினான். முதல் முறையாக ஒரு மாதம் அவனை விட்டு பிரிந்து இருக்கிறான். வருத்தமாக இருந்தது. அவனின் கண்ணீர் பார்க்கையில் ஊருக்கு ஓடி விட வேண்டும் என்று மனம் கூச்சலிட்டது.

"அழாத அப்பு.. அப்பா சீக்கிரம் வந்துடுறேன்.. வரும்போது உனக்கு நிறைய சாக்லேட், பொம்மையெல்லாம் வாங்கி வரேன்.." என்றவன் சில நிமிடங்கள் சமாதானம் செய்தான். குழந்தையின் அழுகை ஓரளவிற்கு நின்று போனது.

குழந்தையின் அழுகை சத்தம் நின்றதும் வந்து அவனை வாங்கிக் கொண்ட மூர்த்தி தம்பியை பார்த்து கையசைத்தான்.

"எளிமையான எம்.எல்.ஏ அவராகவே துணி துவைத்து உலர்த்துகிறார்ன்னு சோசியல் மீடியா முழுக்க உன் முகம்தான் இருக்கு.." என்றான்.

கார்த்திக்கிற்கு முகம் சிவந்து போனது.

"மாமாதான் எல்லாத்துக்கும் காரணம். ஆள் பார்க்காத சமயத்துல போட்டோ எடுத்து சோசியல் மீடியாவுல ஷேர் பண்ணி விட்டிருக்காரு. கேட்டா 'இதுதான் ஃப்ரீ பப்ளிசிட்டி. உன்னை தெரியாதவங்க கூட இப்ப தெரிஞ்சிப்பாங்க'ன்னு சொல்றாரு.." என்றான் வெட்க குரலில்.

"அவர் பிறப்புலயே அரசியல்வாதி.. நீதான் அட்ஜஸ்ட் பண்ணி போகணும்.." என்று சொல்லி சிரித்தான் மூர்த்தி.

"அபிராமி என்ன நினைப்பா.? நானேதான் சுய விளம்பரம் தேடுறதா தப்பா நினைக்க மாட்டாளா.?" ஆர்வ கோளாறில் வார்த்தையை விட்டு விட்டவன் போனின் திரையை பார்த்தான். சுவாதியும் மூர்த்தியும் அவனை முறைத்துக் கொண்டு இருந்தார்கள்.

"அந்த ஆங்காரிக்காக ஒன்னும் நீ பீல் பண்ண வேணாம். அவ தப்பா நினைச்சா இங்கே ஒன்னும் குறையபோறது இல்ல. முதல்ல அந்த ஈர வெங்காய கனவுல இருந்து வெளியே வாடா.. மூணு வருசத்துக்கு முன்னாடி தூக்கி போட்டு போனா‌. இன்னமும் நீ இல்லாததை இருக்கறதா சொல்லி சீன் போட்டுட்டு இருக்கியா.?" என்று திட்டிய மூர்த்தி மகனோடு தூரம் நகர்ந்தான்.

சுவாதி கணவனை கவலையோடு பார்த்துவிட்டு இவன் பக்கம் திரும்பினாள்.

"ஏன் இப்படி.?" என்றாள்.

கார்த்திக் உதட்டை கடித்தபடி தலை குனிந்தான்.

"அவளை மறக்க தெரிஞ்சிருந்தா அவளோட அண்ணன் அவ கழுத்துல இருந்த தாலியை கழட்டி போட்டு கூட்டி போனபோதே மறந்திருக்க மாட்டேனா.?" என்றான் வருத்தமாக.

சுவாதி அவனின் வாடிய முகம் கண்டு வருந்தினாள்.

"அவளை மறக்க சொல்லல நானும். ஆனா உங்க இயல்பை மாத்திக்காதிங்கன்னுதான் சொல்றேன். மூணு வருசத்துல வேற யாரையாவது அவள் லவ் பண்ணி இருக்கலாம். உங்களுக்குள்ள நட்பு கூட கிடையாதுன்னு எனக்கு தெரியும். ஆனா உங்களுக்குள்ள மறுபடியும் அந்த பழைய பகையை கொண்டு வந்துடாதிங்க.. அவ மேல நீங்க வச்சிருக்கும் லவ்வுக்காகவாவது ஒதுங்கியே இருங்க.." என்றாள்.

கார்த்திக் இடம் வலமாக தலையசைத்தான்.

"நான் சொல்றது உனக்கு புரியுதா.? நான் ஒதுங்கிதான் இருக்கேன். ஆனா அவ என்னை தப்பா நினைச்சிப்பாளோன்னு பயமா இருக்கு.."

சுவாதி முறைத்தாள்.

"நானும் அதான் சொல்றேன். ஒதுங்கியாச்சி. அவ ரூட் வேற. உங்க ரூட் வேற. அவ எதை நினைச்சா நமக்கென்ன.? நாம என்ன அவ வீட்டுக்கு தின விருந்துக்கா போக போறோம்.?" என்றாள்.

சுவாதி இதை சொன்ன பிறகுதான் அவனுக்கு இன்னொரு விசயம் நினைவுக்கு வந்தது.

"அபிராமி என் பின் வீட்டுக்குதான் குடி வந்திருக்கா.." என்றான்.

சுவாதி ஆச்சரிப்பட்டாள். "அவ உங்களை பின் தொடருறான்னு நீங்க நினைக்கிறிங்களா.?" என்றாள்.

கார்த்திக் அவசரமாக மறுத்து தலையசைத்தான்.

"நீங்க நினைக்காதபோது அவ மட்டும் ஏன் நினைக்க போறா.?" என்றவள் சிறிது நேரம் பேசிக் கொண்டு இருந்துவிட்டு அழைப்பை துண்டித்துக் கொண்டாள்.

அவளோடு பேசிய பிறகு சிறு மாற்றத்தை உணர்ந்தான் கார்த்திக். மூன்று வருடங்களில் உற்ற தோழியாக மாறி விட்டவள் அவள். காதலின் பிரிவு எனும் பாதாளம் நோக்கி விழ இருந்தவனை நட்பெனும் கயிறு தந்து மீட்டுக் கொண்டு வந்தவள்.

இவனுக்கு நட்பை தந்தவள் மூர்த்தியிடம் மனதை தந்ததுதான் விசித்திரம். இயல்பாய் அழகாய் அமைந்து விட்டது அவர்களின் காதல். கண்கள் இரண்டும் பார்த்துக் கொள்ள மௌனங்களே காதலின் மொழியாகி இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்கள். தோழி அண்ணியாக வந்ததில் கார்த்திக்கிற்கும் மிகுந்த சந்தோஷமே.

அபிராமி தன் வீட்டு வாசல் வந்து விழுந்த நாளிதழ்களையும், வார இதழ்களையும் எடுத்துக் கொண்டு வீட்டிற்குள் வந்தாள்.

தினம் படிக்கும் இதழ்களை விட இன்று அதிகம் இருப்பது போல தோன்றியது.

காய்கறி வாங்க சென்றிருந்தார் அவளின் அப்பா. இவளே காப்பியை போட்டு எடுத்துக் கொண்டு வந்து அமர்ந்து நாளிதழ்களை புரட்ட ஆரம்பித்தாள்.

அலுவலகத்திலும் கூட வேலையே சரியாக இருப்பதால் நாளிதழ்களை புரட்ட நேரம் கிடைப்பதேயில்லை அவளுக்கு

தினம் படிக்கும் நாளிதழ்களை படிக்க ஆரம்பித்தாள். புரட்டிக் கொண்டே வந்தவள் அந்த நாளின் சிறப்பு செய்திகளை பார்வையிட்டாள். இதற்கு முன் இந்த பக்கங்களை பார்க்காதது போல ஒரு எண்ணம் தோன்றியது.

அதில் விவசாயமும், வீரமும் என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை கண்டவள் ஆச்சரியப்பட்டாள். அந்த கட்டுரையை எழுதியிருந்தது கார்த்திக் முருகன் என்று இருந்தது. அவனின் புகைப்படமும் சிறிதளவில் இடம் பெற்றிருந்தது. அதை விட முக்கியமாக அந்த கட்டுரை தொடரின் நாற்பத்தி எட்டாவது பகுதி இதுவென்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த தொடரை தான் எப்படி தவிர்த்தோம் செய்தோம் என்று குழம்பினாள். விவசாயத்தை பற்றியும், அதோடு ஒன்றியிருக்கும் தமிழர் வீரத்தை பற்றியும் அழகாய் எழுதியிருந்தான் அவன்.

"இவனால இப்படி எழுத முடியுமா.? இல்ல ஏதாவது தில்லுமுல்லு பண்றானா.? வார தொடரோட எண்ணிக்கையை பார்த்தா தில்லுமுல்லு மாதிரி தெரியலையே.." என்றவளுக்கு தன் மீதுதான் வருத்தம் உண்டானது.

பரிட்சைக்காக ஆங்கில நாளிதழ்களை மட்டும் டெல்லியில் புரட்டிக் கொண்டிருந்த நேரத்தில் தமிழ் நாளிதழ்களையும் கொஞ்சம் வாங்கி படித்திருக்கலாம் என்று தோன்றியது.

கைபேசி செயலிகளில் கூட ஆங்கில செய்திகளை மட்டும்தான் படிப்பாள் இவள். அதனால்தான் இந்த பின்தங்கல் என்று புரிந்துக் கொண்டவள் அடுத்த நாளிதழை எடுத்தாள். எம்.எல்.ஏ செய்த சிறப்பு என்று அதிலும் அவனை பற்றிய சிறப்பு செய்தி ஒன்று இருந்தது.

வார இதழ் ஒன்றை எடுத்து புரட்டினாள். விவசாயமும் லாபமும் என்றொரு தலைப்பில் கார்த்திக் எழுதியிருந்த தொடர் ஒன்று அறுபதாவது பாகத்தை தாண்டியிருந்ததை கண்டவள் வார இதழை கீழே வைத்தாள்.

வார இதழின் முன் பகுதியை பார்த்தாள். இங்கு வந்த ஒரு மாதத்தில் இந்த இதழை அவள் படித்ததே இல்லை. இன்று மட்டும் ஏன் அவனை பற்றிய செய்திகளே வருகிறது என்று குழம்பி போனாள்.

"கேம் ஆடுறானா அவன்.?" என்று சந்தேகித்தவள் தொடரை படித்தாள். விவசாயத்தால் எந்த அளவிற்கு லாபம் சம்பாதித்து தர முடியும் என்று பொருளாதார ரீதியான கட்டுரை அது.

கட்டுரையை படித்து முடித்ததும் நாளிதழை ஓரம் வைத்தவள் கண்களை மூடிக் கொண்டு இருக்கையில் சாய்ந்து அமர்ந்தாள்.

"அரை குறை எழுத்து இல்ல இது. விவசாய பொருளாதாரம் பத்தி தெளிவா எழுதியிருக்கான். ஆனா இது எப்படி சாத்தியம்.? இருக்கற எல்லா பேப்பர்லயும் சார் தில்லாலங்கடி வேலை செய்ய ஆரம்பிச்சிட்டாரா.? ஆனா ஏன் இன்னைக்கு மட்டும்.? அதுவும் இதை ஏன் செய்யணும்.? பவித்ராவை கல்யாணம் பண்ணி குழந்தை பெத்து நல்லபடியா வாழ்றான். பிறகு ஏன் என் வீட்டுக்கு வர பேப்பர்ல மட்டும் கோல்மால் செய்யணும்.?" என யோசித்தவள் தலையை பிடித்தபடி எழுந்து நின்றாள்.

அறைக்கு சென்று மாத்திரை ஒன்றை விழுங்கினாள்.

அவள் திரும்பி வந்தபோது காய்கறி வாங்க சென்றிருந்த அப்பா வந்து விட்டிருந்தார்.

இவளை கவனிக்காதவர் மேஜையில் இருந்த நாளிதழ்களை பிரித்து அதில் இருந்த சில ஸ்பெஷல் பக்கங்களையும், சில வார இதழ்களையும் எடுத்துக் கொண்டார்.

அவர் எடுத்தவற்றில் எல்லாம் கார்த்திக்கை பற்றிய செய்திகள் இருந்தன. அவன் பற்றிய செய்திகள் வரும் இதழ்களையெல்லாம் தினம் இவர்தான் எடுத்து மறைத்து வைக்கிறார் என்பதை புரிந்துக் கொண்டாள்.

'கோல்மால் அவன் பண்ணல. இவர் பண்ணி இருக்காரு.. என் மேல ஏன்ப்பா இவ்வளவு அக்கறை உங்களுக்கு.? லவ் யூப்பா..' என்றாள் மனதுக்குள்ளேயே.

நாளிதழ்களோடு திரும்பியவர் இவளை கண்டதும் நாளிதழ்களை முதுகின் பின்னால் மறைத்துக் கொண்டார்.

"மார்கெட்ல கூட்டம் குட்டி.. இரு அப்பா உனக்கு காப்பி போட்டு கொண்டு வரேன்.." என்று சமையலறை நோக்கி நடந்தார். அபிராமி இருக்கையில் வந்து அமர்ந்தாள். நாளிதழ்களை எடுத்து படிக்க ஆரம்பித்தாள். அப்பா தன் கையில் இருந்த இதழ்களை சமையலறையின் மேல் ஷெல்பில் எறிவது ஓரக்கண்ணில் தென்பட்டது. உள்ளுக்குள் சிரித்துக் கொண்டாள்.

காப்பியை கொண்டு வந்து தந்தார். தலைவலி இல்லை. ஆனாலும் காப்பியை பருக சொல்லியது மனம். அப்பா எதிரில் அமர்ந்தார். நாளிதழ்களை புரட்டினார்.

"நமது சப் கலெக்டரின் ஸ்வீட் ஜர்னி.." என்றவர் நாளிதழை அவள் பக்கம் காட்டினார்.

"நீதான்ம்மா.." என்றார் புன்னகையோடு. அவளை பற்றிய கட்டுரை ஒன்று அந்த நாளிதழில் வெளி வந்திருந்தது. முத்தமிழின் வேலையாகவோ, இல்லை உண்மையிலேயே நாளிதழ்காரர்களே அந்த செய்தியை வெளியிட்டிருக்கலாம் என்று யூகித்தாள்.

அன்று மாலையில் அவள் பணி முடிந்து திரும்பி வந்தபோது வீட்டினில் இவளுக்காக காத்திருந்தாள் சுவாதி. தோழியை கண்டதும் பழைய நட்பு மனம் முழுக்க பரவியது அபிராமிக்கு.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN