காதல் கடன்காரா 48

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
சுவாதியை பார்த்த மகிழ்ச்சியில் வேகத்தோடு உள்ளே வந்தாள் அபிராமி.

"சுவா.. ஐ மிஸ் யூ.." என்று அவளின் தோளை கட்டிக் கொண்டாள்.

சுவாதி அவளை அணைத்தாள். "நானும்.." என்றாள்.

"ஆனா நீ என் போனை கூட எடுக்கல.." என்று குற்றம் சாட்டினாள் அபிராமி.

"கொஞ்சம் பிசி.." என்றவளை விட்டு விலகி நின்ற அபிராமி "என்ன பிசி.?" என்றாள்.

"எனக்கு ஒன்னரை வயசுல ஒரு பையன் இருக்கான். அவனை பார்த்துக்கறதே பெரிய வேலை.." என்றவள் சோஃபாவில் அமர்ந்தாள்.

"வாவ்.. சுவா.. உனக்கு பேபி இருக்கா.? சூப்பர்டி.!"

அப்பா காப்பியை கொண்டு வந்து சுவாதியிடம் நீட்டினார். இவள் வாங்கிக் கொண்ட பிறகு வெளியே கிளம்பினார். சென்றவரின் முதுகை பார்த்தாள் சுவாதி. அவள் காப்பியை குடித்து முடித்தபோது அபிராமி உடையை மாற்றிக் கொண்டு வந்து அவளருகே அமர்ந்தாள்.

"உன் பையன் எங்க சுவா.? உன் ஹஸ் என்ன பண்றாரு.?" என்றாள் அபிராமி.

"பையன் அவங்க சித்தப்பாக்கிட்ட இருக்கான். என் வீட்டுக்காரர் பத்தி சொல்ல பெருசா இல்ல.."

வந்ததில் இருந்தே அவளின் முகமும் குரலும் வித்தியாசமாகதான் தெரிந்தது அபிராமிக்கு.

"கோபமா சுவா.?"

சுவாதி இல்லையென தலையசைத்தாள்.

"நான் யார் கோபப்பட.?" என்றாள்.

அபிராமி தன் நெற்றியை தடவினாள். சிந்துவை போல ஒற்றை சாரிக்கு சரியென்று தலையசைப்பவள் இல்லை இவள் என்று அவளுக்கு தெரியும்.

"சுவா சாரி.. அது என்ன ஆச்சின்னா.."

அபிராமி தொடரும் முன் கை காட்டி நிறுத்தினாள் சுவாதி.

"எனக்கு கல்யாணம் ஆனது, எனக்கு ஒரு பையன் இருப்பது உனக்கு தெரியாதுதானே.?"

உதட்டை கடித்தபடி இல்லையென தலையசைத்தாள் அபிராமி.

"மூணு வருசமா நீ ஊருல இல்ல ஓகே. ஆனா விண்வெளிக்கே போயிருந்தாலும் கூட என்னை பத்தி விசாரிக்க நினைச்சிருந்தா விசாரிச்சி தெரிஞ்சிட்டு இருந்திருக்கலாம்.."

"சுவா அது.."

"உன் அண்ணன்கிட்ட என்னை பத்தி ஒரு முறை கேட்டிருந்தா கூட என் லைஃப் பத்தி நீ தெரிஞ்சிட்டு இருந்திருக்கலாம். ஆனா நீ கேட்கல. உன் பிடிவாதம் உன்னோடது. ஆனா நான் என்ன தப்பு செஞ்சேன்.? சிந்து என்ன தப்பு செஞ்சா.? கார்த்திக் உன்னை டிஸ்டர்ப் பண்ணது உனக்கு பிடிக்கலன்னு போன. ஓகே.. ஆனா எங்களோடு இருந்த நட்பையும் வெட்டிக்க வேண்டிய அவசியம் என்ன.?"

"சாரி சுவா.. நான் என் அண்ணன்கிட்ட உன்னை பத்தி கேட்டேன். ஆனா அவன்தான் 'எனக்கு தெரியல'ன்னு சொல்லிட்டான்.."

"எங்க நம்பர் உன்கிட்ட இருந்தது.."

அபிராமியின் முகத்தில் வருத்தம் நிரம்பியது.

"எங்களோடு நீ பேசினா நீ இருக்கும் இடத்தை கார்த்திக்கிட்ட சொல்லிடுவோம்ன்னு நினைச்சிட்ட.."

அபிராமி பதில் சொல்லாமல் தரை பார்த்தாள். சுவாதியின் குற்றச்சாட்டு உண்மைதான். தன்னை பற்றிய தகவல்கள் கார்த்திக்கிற்கு போய் சேர விரும்பவில்லை அவள்.

"உன்னை நாங்க புரிஞ்சிக்கல அபிராமி. அது என்னவோ உண்மைதான். இத்தனை வருசம் கூடவே பழகியும், உன்னோட பிடிவாதம் பத்தி தெரிஞ்சிருந்தும்.. இனி இதை பிடிவாதம்ன்னும் சொல்ல முடியாது.. விடாமுயற்சின்னுதான் சொல்லணும். எல்லாம் தெரிஞ்சிருந்தும் நான் கார்த்திக்கிற்கு ஹெல்ப் பண்ணியிருக்க கூடாது.."

அபிராமி மறுப்பாக தலையசைத்தாள். "நீ எனக்காகதான் அப்படி செஞ்சேன்னு எனக்கு தெரியும் சுவா.. சாரி.. நான்தான் புரிஞ்சிக்காம போயிட்டேன்.."

"இனி புரிஞ்சிக்கிட்டாலும் அதை வச்சி நான் என்ன செய்ய போறேன்.?" என்றவள் தன் கைப்பையை எடுத்தாள். அதிலிருந்த தங்க கொலுசை எடுத்து அபிராமியின் கையில் தந்தாள்.

அது அபிராமியின் கொலுசுதான். கார்த்திக்கின் வீட்டில் அவள் விட்டு வந்தது.

"உனக்கு சொந்தமானதை கார்த்திக்கிட்ட இருந்து வாங்கி வந்துட்டேன்.. பத்திரமா வச்சிக்கோ.." என்றாள்.

கொலுசை இறுக்கியது அவளின் கை விரல்கள். அந்த கொலுசை கழட்ட சொல்லி கார்த்திக் சண்டை இட்டது நேற்று நடந்தது போலவே இருந்தது.

"தேங்க்ஸ்‌‌.." என்றாள்.

சுவாதி கசப்பாக சிரித்தாள்.

"கார்த்தியை கடைசி வரை மன்னிக்கமாட்டதானே.?" என்றாள்‌.

"மன்னிக்க என்ன இருக்கு.? அவங்க லைஃப் வேற.. என் லைஃப் வேற.." என்றவளை முறைத்த சுவாதி எழுந்து நின்றாள்.

"லைஃப் வேற வேறதான். இரண்டும் எப்போதுமே ஒன்னு சேராது. ஒன்னா சேர்க்க நினைச்ச நான்தான் முட்டாள்.."

"அவங்க என் மேல வச்சிருந்த பாசத்துல இம்ப்ரஸ் ஆகிதானே பவித்ராவை அவங்களுக்கு கட்டி வச்சிருக்க.?" என்றுப் புன்னகையோடு கேட்டாள் அபிராமி.

சுவாதி அவளை குழப்பமாக பார்த்தாள்.

"எங்க எல்லோரையும் உன் லைஃப்ல இருந்து ப்ளாக் பண்ணி வச்சிட்டதானே.? எங்களை பத்திய எந்த நியூஸூம் உன் காதுக்கு வரவே கூடாதுன்னு உன் காதுகளுக்குள்ள ஈயத்தை காச்சி ஊத்தி செவிடாக்கிட்ட.. எங்களை பார்க்க பயந்து உன் கண்களை நீயே குத்திக்கிட்ட.." என்றாள்.

அபிராமியின் மௌனத்தை கண்டவள் "இனியாவது நீ ஹேப்பியா இருப்பன்னு நம்புறேன் அபிராமி.. பிரச்சனைகள் இல்லாத, சந்தோசம் மட்டுமே நிறைஞ்ச ஒரு வாழ்க்கை உனக்கு அமையணும்ன்னு ஆண்டவன்கிட்ட கேட்டுக்கிறேன்.." என்றாள். அங்கிருந்து கிளம்பினாள்.

"சுவா சாப்பிட்டு போவ.."

வாசற்படியில் நின்றபடி திரும்பி பார்த்தவள் "ஏற்கனவே வயிறு நிரம்பிடுச்சி அபிராமி.." என்றுவிட்டு சென்றாள்.

அபிராமி எழுந்து சென்று கொலுசை பத்திரப்படுத்தினாள். தன் வெற்றுக் காலை பார்த்தாள். கொலுசை அணிந்துக் கொள்ள தோன்றவில்லை. பெருமூச்சின் காரணமாக நெஞ்சம் ஏறி இறங்கியது.

ஸ்வேசன்யாவோடு பேச வேண்டும் போல இருந்தது. ஆனால் இந்த நேரத்திற்கு அவள் பணியில் இருப்பாள் என்பதால் தன் எண்ணத்தை தள்ளிப் போட்டாள்.

சுவாதி அந்த வீட்டிற்குள் நுழைந்தபோது "சரோ குட்டி ஆ காட்டு.." என்று சரணுக்கு ஜிலேபியை பிட்டு ஊட்டிக் கொண்டிருந்தான் கார்த்திக்.

டைனிங் அறையின் மேஜையின் மீது அமர்ந்திருந்தான் சரண். நாற்காலியில் அமர்ந்த வண்ணம் அவனுக்கு இனிப்பை ஊட்டி விட்டுக் கொண்டிருந்தான் கார்த்திக்.

"இனிப்பா.? பல் சொத்தையாக போகுது.." என்றபடி வந்து அவர்களின் அருகே அமர்ந்தாள் சுவாதி.

கார்த்திக் அவளை பார்த்துவிட்டு நெற்றியில் அடித்துக் கொண்டான்.

"கண்ணு வைக்காதப்பா.. குழந்தைன்னா சாப்பாடு, பண்டம், பலகாரம் தந்து பழக்கணும்.." என்றவன் தட்டில் இருந்த ஜிலேபி ஒன்றை எடுத்து அவளிடம் நீட்டினான்.

"இந்தா சாப்பிடு.. முகத்தை பார்த்தா கசந்து வந்த மாதிரி இருக்கு. கொஞ்சம் இனிப்பாவது நாக்குல படட்டும்.." என்றான்.

சுவாதியின் முகத்தில் வருத்தமும், கோபமும் ஒன்றாய் சேர்ந்து பிரதிபலித்தது. ஜிலேபியை உண்டாள்.

அவள் ஜிலேபியை கடித்ததை கண்டு கார்த்திக்கிற்கு சிரிப்பு வந்தது. "என்ன ஆச்சி.? 'நீ யாரு, உன்னை எனக்கு தெரியல'ன்னு சொல்லிட்டாளா.?" என கேட்டான்.

சுவாதியின் கண்களில் கண்ணீர் பளபளத்தது. மேஜை மேல் இருந்த தண்ணீரை எடுத்து ஒரே விழுங்கில் குடித்தாள்.

அவளே வாய் திறக்கட்டும் என்று காத்திருந்தான் கார்த்திக்.

"அவ நம்ம எல்லோரையும் ப்ளாக் லிஸ்ட்ல போட்டு வச்சிருக்கா.. எனக்கு கல்யாணம் ஆனது தெரியாது. எனக்கு கல்யாணம் ஆனது தெரியாது. நான் யாரை கல்யாணம் பண்ணியிருக்கேன்னும் அவளுக்கு தெரியாது. அவளுக்கு என் மேல அப்படி என்ன வெறுப்பு.?" என கேட்டவள் தட்டில் இருந்த இன்னொரு ஜிலேபியையும் எடுத்து கடித்தாள்.

கார்த்திக்கிற்கு அவளை பார்க்கையில் பாவமாக இருந்தது. தினம் அபிராமியை பற்றியேதான் பேசிக் கொண்டிருப்பாள். சிந்துவும், அபிராமியும் தனக்கு எந்த அளவிற்கான தோழிகள் என்பதை மணிக் கணக்கில் வர்ணிப்பாள். தோழிகளின் மீது உயிரையே வைத்திருந்தாள். அபிராமி எப்படி இருக்கிறாள் என்பதை அறிந்துக் கொள்வதற்காக முத்தமிழிடம் பலமுறை கெஞ்சி அவளின் தொலைபேசி எண்ணை கேட்டிருக்கிறாள்.

அபிராமி தோழியை முழுதாய் தலைமுழுகி விட்டது எந்த அளவிற்கு இவளுக்கு வலியை தரும் என்று அவனுக்கும் தெரியும்.

"விடுப்பா.. உனக்கு நாங்க எல்லோரும் இருக்கோம் இல்லையா.?" என்றான்.

சுவாதி இடம் வலமாக தலையசைத்த நேரத்தில் அவளின் கண்களில் இருந்து கண்ணீர் துளி இரண்டு உருண்டு விழுந்தது.

சரண் அவளின் முகத்தை கண்டுவிட்டு தானும் முகத்தை கோண ஆரம்பித்தான். அவன் வீறிட்டு அழ ஆரம்பிக்கும் முன் அவனை தூக்கி தன்னோடு அணைத்துக் கொண்டான் கார்த்திக்.

"உங்க அம்மா விளையாடுறாங்க அப்பு.." என்றவன் சுவாதியை முறைத்தான். "குழந்தை இப்ப உன்னாலதான் அழறான்.." என்றான்.

சுவாதி கண்ணீரை துடைத்துக் கொண்டாள்.

"என் அண்ணன் உன்னை அதிகமா நேசிக்கிறான். என் பேரண்ட்ஸ் உன்னை தங்களோட சொந்த மகளாவே பார்க்கறாங்க. நீ எனக்கு நல்ல தோழியும் கூட.. அவ அளவுக்கு நட்பை தர எனக்கு முடியாதுதான். ஆனா நானும் நல்ல நண்பன்தான் சுவாதி.‌." என்றான்.

சுவாதி ஆமென்று தலையசைத்தாள். பேச வரவில்லை. தொண்டை குழிக்குள் அழுகை நின்றுக் கொண்டிருந்தது.

"நானும் தம்பியும் மேகம் பார்க்க போறோம்.. நீ அதுக்குள்ள ஜிலேபி எல்லாத்தையும் சாப்பிட்டுடு.." என்றவன் குழந்தையோடு மாடிக்கு சென்றான்.

"அப்பு அங்கே பாருங்க.. முயல் மாதிரி ஒரு மேகம்.." என்று வானம் நோக்கி கை காட்டினான்.

அப்பா மறைத்து வைத்திருந்த நாளிதழ்களோடு தன் அறைக்கு வந்த அபிராமி அவற்றை புரட்ட ஆரம்பித்தாள். அனைத்து இதழ்களிலும் அவனை பற்றி ஒரு வரியாவது செய்தி இருந்தது.

அவன் சிறந்த கட்டுரையாளன் என்பது அவன் கட்டுரைகளில் சில பாகங்களை படிக்கும்போதே புரிந்தது அவளுக்கு‌. உழைப்பை பற்றிய, விவசாயம் பற்றிய அவனின் எண்ணம் வேறு ஒரு அழகான கோணத்திற்கு மாறியது அவளுக்கு சந்தோசத்தை தந்தது.

அவன் செய்த சமூக சேவைகளை தொகுத்து ஒரு இதழில் வெளியிட்டு இருந்தார்கள். 'சட்டமன்ற உறுப்பினரின் சமூக காதல்' என்ற தலைப்பில் அவனின் சமூக சேவையின் ஆரம்ப காலம் முதல் இன்றைய பதவி வரை அதில் எழுதியிருந்தார்கள். அவள் இங்கிருந்த கிளம்பிய வெகு சில மாதங்களிலேயே தன்னை அவன் முழுதாக மாற்றிக் கொண்டுவிட்டான் என்பது புரிந்தது. அவனின் அந்த மாற்றம் அவளுக்கே வியப்பை தந்தது‌.

"அப்பு அங்கே பாருங்க.. முயல் மாதிரி ஒரு மேகம்.." தன் வீட்டு மாடியின் பின்பக்க கைப்பிடி சுவரோரம் நின்றுக் கொண்டிருந்தவனின் குரல் கேட்டு அபிராமி ஜன்னலருகே வந்து நின்றாள்.

கொழுகொழு சரண் அவனின் கையில் இருந்தான். தன்னை மறந்து குழந்தையை வேடிக்கை பார்த்தாள் அபிராமி. சுவாதியால் உண்டாகி இருந்த மன சோர்வு இந்த குழந்தையால் நீங்கியது போலிருந்தது.

"அப்பு அங்கே பாரு.. ஒரு யானை மேகம்.." என்றான் கார்த்திக் மறுபக்கம் திரும்பி.

அபிராமி அந்த மேகத்தை பார்த்தாள். ஐம்பது சதவீதம் யானையை போன்று இருந்தது அந்த மேகம்.

சரண் கைகளை தட்டினான். அவனின் முகத்தில் இருந்த சோகம் மறைந்ததே கார்த்திக்கிற்கு சந்தோசமாக இருந்தது. அவனின் கன்னத்தில் முத்தம் தந்தான்.

"அப்பாக்கு முத்தம்.." என்று கன்னத்தை காட்டினான்.

சரண் உதட்டை அருகே கொண்டு சென்றான். முகத்தை தூரம் விலக்கிய கார்த்திக் "கடிச்சி வைக்க கூடாது.." என்று மிரட்டினான். பிறகு மீண்டும் கன்னத்தை காட்டினான்.

அடுத்த இரண்டாம் நொடியில் ஆவென கத்தியபடி கன்னத்தை திருப்பிக் கொண்டான். சரணின் எலிப்பற்கள் நான்கு கார்த்திக்கின் கன்னத்தில் அழுத்தமாக பதிந்திருந்தது.

சரணை முறைக்க இருந்தவன் யாரோ சிரிக்கும் சத்தம் கேட்டு திரும்பினான். அபிராமி அவள் வீட்டின் ஜன்னலோரம் நின்றபடி சரணை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாள். சரணின் செயல் அவளை தன்னை மறந்து சிரிக்க வைத்து விட்டது.

அவளின் சிரிப்பு கார்த்திக்கின் முகத்தில் புன்னகையை வர வைத்தது. என்னவோ சாதித்தது போல இருந்தது அவனுக்கு.

ஆனால் அவன் கீழே சென்ற சில நிமிடங்களுக்கு பிறகு "உனக்கும் பவித்ராவுக்கும் கல்யாணம் ஆயிடுச்சின்னு நினைச்சிட்டு இருக்கா அவ‌.." என்று சுவாதி சொன்னபோது முன்பிருந்த புன்னகை அனைத்தும் சில்லு சில்லாக உடைந்து விழுந்தது போலிருந்தது அவனுக்கு.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN