காதல் கடன்காரா 49

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
தன்னை மறந்துச் சிரித்துக் கொண்டிருந்த அபிராமியை ஆவலோடு ரசித்தான் கார்த்திக்.

சரண் சிரிப்பவளை கண்டுவிட்டு வெட்கப்பட்டான். தன் குட்டி கரங்களால் தன் முகத்தை மூடிக் கொள்ள முயன்றான். கார்த்திக்கின் பக்கம் திரும்பினான்.

"குட்டி பையா.. உனக்கும் வெட்கம் வருமா.?" என கேட்டவள் இன்னும் சிரித்தபடியேதான் இருந்தாள்.

அவளின் சிரிப்பு கார்த்திக்கின் மனதுக்குள் பட்டாம்பூச்சியை பறக்க வைத்தது. இவளுக்கு சிரிக்க தெரியும் என்பதே ஆச்சரியமாகதான் இருந்தது அவனுக்கு. அவள் தன்னோடு பேசி பழகிய அந்த ஒரு வருட காலமும் நடிப்பென சொல்லப்பட்ட பிறகு அவன் கண்டது அத்தனையும் அவளின் கோப, வெறுப்பு முகம்தான். அதனாலேயே இந்த சிரிப்பு அவனுக்கு புல்லரிப்பை தந்தது.

தன் மனதில் ஆழமாய் பதிந்துக் கொண்டிருந்த இந்த சிரிப்பு முகத்தை இன்னும் நூறாயிரம் வருடங்கள் ஆனாலும் தன்னால் மறக்க முடியாது என்று அவனுக்கு தெரியும்.

முகத்தை கரங்களால் மூடியபடி கார்த்திக்கின் நெஞ்சில் முகம் புதைந்திருந்த சரண் மெள்ள திரும்பி பார்த்தான். அபிராமி அவனை பார்த்து கையை ஆட்டினாள். பறக்கும் முத்தம் ஒன்றை தந்தாள். கார்த்திக்கிற்கு இதயம் நின்று துடித்தது.

சரண் மீண்டும் வெட்கப்பட்டு முகத்தை திருப்பிக் கொண்டான்.

"அழகா இருக்கான்.." என்றாள் மெல்லமாக.

கார்த்திக்கிற்கு அவளின் பாராட்டு காதில் விழுந்தது. புன்னகையை பதிலென தந்தான்.

"மாப்பிள்ளை.." மேகமானன் அழைக்கும் குரல் கேட்டவன் அபிராமியை ஒரு முறை திரும்பி பார்த்துவிட்டு கீழே நடந்தான்‌‌.

"சொல்லுங்க மாமா‌‌.." என்றான் கீழே வந்த பிறகு.

"நம்ம தொகுதியில எத்தனை காலேஜ், ஸ்கூல் இருக்குன்னு புள்ளிவிவரம் கேட்டிருந்தியே.. இந்தா.." என்று பைல் ஒன்றை தந்தார்.

அவனுக்கு எல்லாமுமாக அவரே இருந்தார். பி.ஏவாக, துணையாக, வேலைக்காரனாக, ஆசானாக செயல்பட்டார். அவருக்கு தன் தொகுதி முன்னேற வேண்டும். பல வருடங்களாக தன் கட்சி தேர்ந்தெடுத்த இத்தொகுதி வேட்பாளர்களுக்காக அடிமை வேலை செய்துள்ளார். யாராவது ஒருவர் தன் அறிவுரையை கேட்டு தனது இந்த தொகுதியை செழிப்படைய செய்து விடமாட்டார்களா என்று காத்திருந்திருக்கிறார். அவரின் மனதை அப்படியே தன் செயலில் பிரதிபலித்துக் கொண்டிருந்தான் கார்த்திக். எம்.எல்.ஏவாக அவன் இருப்பதாக தோன்றவில்லை அவருக்கு. தானே இருப்பது போல்தான் இருந்தது.

சரணை அவரே வாங்கிக் கொண்டார்.

"நீ வேலை இருந்தா பாருப்பா.." என்றார்.

பைலை கொண்டுச் சென்று தன் மேஜையின் மீது வைத்தான். சமையலறையில் இருந்து வந்த வாசம் அவனை எச்சில் ஊற வைத்தது.

மனதின் துள்ளலோடு சமையலறைக்கு ஓடினான். சுவாதி வாணலியில் எதையோ வணக்கிக் கொண்டிருந்தாள்.

"சுவாதி.. நீ உண்மையிலேயே சிறந்த குக். என்னை விட சூப்பரா சமைக்கிற.." என்றவன் சமையலறை மேடை மீது ஏறி அமர்ந்தான்.

"அதனாலதான் உங்க அண்ணன் வந்து என்னை கூட்டிப் போகும் முன்னாடி சமைச்சி வச்சிடலாமேன்னு இருக்கேன்.." என்றவளின் இதழில் புன்னகை ஓடியது.

"எங்க அப்பா சமையலுக்கு உங்க சமையல் பரவால்ல‌‌.." என்றாள்.

"அதுதான் அறிந்ததாச்சே.." என்றவன் "சுவாதி ஒரு அதிர்ச்சியான விசயம் சொல்லட்டா.?" என்று ஆரம்பித்தான்.

"ம்.."

"அபிராமி என்னை பார்த்து சிரிச்சா.."

சுவாதி அவனை திரும்பி பார்த்தாள். முகம் முழுக்க பூரிப்பாக அமர்ந்திருந்தான் அவன்‌.

"கோமாளி வேஷம் போட்டிருந்திங்களா.?"

அவள் கேட்டது புரியாமல் குழம்பினான்.

"இல்ல.. கோமாளிகளை பார்த்தாதான் எல்லோரும் சிரிப்பாங்க.." என்றாள். இதாவது அவனுக்கு புரிந்திருக்கும் என்று நம்பினாள்.

"சிரிப்பு இல்லப்பா.. புன்னகை.." திருத்தினான் கார்த்திக்.

"எதுவா இருந்தாலும் உங்களை பார்த்துச் சிரிச்சிருக்க மாட்டா.." என்றவளை சந்தேகமாக பார்த்தான்.

சுவாதி வாணாலியை மூடி வைத்துவிட்டு இவன் பக்கம் திரும்பினாள்.

"அவ அதே பழைய அபிராமிதான். உங்களை எப்பவும் ஏத்துக்க மாட்டா.. இதை நல்லா புரிஞ்சிக்கங்க. உங்களுக்கும் பவித்ராவுக்கும் கல்யாணம் ஆயிடுச்சின்னு நினைச்சிட்டு இருக்கா அவ.." என்று விளக்கி சொன்னாள்.

கார்த்திக்கின் முகத்தில் இருந்த கலை செத்துவிட்டது.

மலை கிராமத்தில் அன்று அபிராமியை சந்தித்ததை பற்றி நினைத்துப் பார்த்தான்.

"நீங்க அவளுக்காக.." அவள் மேலே சொல்லும் முன் மேடை மீதிருந்து கீழே இறங்கிக் கொண்டான் அவன்‌.

"போதும் சுவாதி.. இந்த தகவலே போதுமான அளவுக்கு சேதாரத்தை தந்துடுச்சி.." என்றவன் உடைந்த தன் இதயத்தின் வலியை முகத்தில் காட்டாமல் அங்கிருந்து வெளியே நடந்தான்.

அபிராமியின் சிரிப்பு கேலி சிரிப்பு போல தோன்றியது இப்போது‌.

தனது அறைக்குள் வந்து அமர்ந்தான். "விடு கார்த்தி.. விதியை மாத்தி என்ன பண்ண போற.?" என தன்னையே கேட்டுக் கொண்டவன் பைலை கையில் எடுத்தான். தன் கவனத்தை முழுதாக அதில் செலுத்தினான்.

முத்தமிழும் தாத்தாவும் அன்றைய மாதத்தின் வரவு செலவு கணக்கை பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தார்கள்.

பாட்டியும் அம்மாவும் தோட்டத்து பெஞ்சில் அமர்ந்திருந்தார்கள்.

செடியிலிருந்து விழுந்த பூக்கள் தரையெல்லாம் பரவிக் கிடந்தது‌.

"பூக்களை பறிச்சி சாமிக்காவது சூட்டு யசோதா.." என்றாள் பாட்டி.

"எந்த சாமி நமக்கு வரம் கொடுக்குது.? நாளாக நாளாக மனம் பாரமா போகுதே தவிர ஒரு நிம்மதியும் பிறக்க காணோம்.." என்றாள் அவள் செடியிலிருந்த பூக்களை பார்த்தபடி.

"தாத்தா செல்லம், அப்பா செல்லம்ன்னு அவ வளர்ந்தபோதே நாம அவளை அப்பப்ப கண்டிச்சி இருக்கணும்.." என்றாள் பாட்டி.

"என்னத்தை கண்டிச்சி என்ன செய்ய.? என் வாழ்க்கையை நான் வாழுறேன்னு சொல்றா.. ஆனா நிஜமாவே வாழுறாளான்னுதான் தெரியல.." என்ற அம்மாவின் கண்களில் இருந்து கண்ணீர் துளி கசிந்தது.

"எத்தனை ஆசையோடு இவளை வளர்த்தேன். எல்லாம் அந்த ஈஸ்வரால வந்தது. அவன் பொண்ணு கேட்டு வந்தபோதே மனசுக்கு பிடிக்கல.. அவன் வேணாம்ன்னு சொன்னேன். யார் கேட்டாங்க. இப்ப எல்லாமே குட்டிச்சுவரா போயிடுச்சி.." என்ற அம்மா கண்களை துடைத்தாள்.

பாட்டி அவளின் தோளை தட்டி தந்தாள்.

"நம்ம அறிவுக்கு எட்டிய விசயம் இந்த வீட்டு ஆம்பளைங்க அறிவுக்கு எட்டல.. அபிராமியை சொல்லி தப்பு இல்ல. எல்லாமே இவங்களால வரது.." என்றாள் பாட்டி.

அன்று இரவு உணவு உண்ணுகையில் தாத்தாவின் தட்டில் நெய்யை சற்று தூக்கலாக விட்டாள் பாட்டி.

தாத்தா சந்தேகமாக மனைவியை பார்த்தார்.

"என் பேத்தியை கலெக்டர் ஆக்கிட்டேனேன்னு பரிசா.?" கேலியாக கேட்டபடி உணவை உண்டார்.

பாட்டி சிரித்தாள்.

"அவ படிச்சா. அவ முயற்சி பண்ணா. அவ கலெக்டர் ஆனா.. அவளுக்கு பதிலா நீங்க என்னவோ பரிட்சை எழுதின மாதிரி சொல்றிங்க.." என்றாள்.

"விடுங்க அத்தை.. மாமா சொல்றதும் உண்மைதானே.? என்ன இருந்தாலும் அபிராமியை இவங்கதானே கலெக்டர் ஆக்கி இருக்காங்க.." என்ற அம்மாவை ஆச்சரியத்தோடு பார்த்தான் முத்தமிழ்.

சூழ்நிலையில் ஏதோ மாற்றம் நடக்க போவதாக அவனது மூளை சொன்னது.

"அவளை கலெக்டர் ஆக்கினவங்க அவளுக்கு ஒரு கல்யாணத்தையும் பண்ணி வச்சா நாமும் கண் குளிர பார்க்கலாம்.." யாரின் முகத்தையும் பார்க்காமல் சொன்னாள் அம்மா.

பாட்டி மீண்டும் சிரித்தாள்.

"அது என்ன நடக்கற காரியமா.? நீயேன் இப்படி கனவு காணுற.? அவ விண்வெளிக்கு கூட போயிட்டு வருவா‌. ஆனா ஒருத்தனை கல்யாணம் மட்டும் பண்ணவே மாட்டா.. நமக்கு தெரியாதா முயல் பிடிக்கற மூஞ்சி எதுன்னு.?" என்று நக்கலாக சொன்னாள் பாட்டி.

தாத்தாவின் முகம் கொஞ்சம் கொஞ்சமாக மாறியது.

"என்னடி சொல்ல வர.?" என்றார் பற்களை கடித்தபடி.

"உங்க பேத்திதானே அவ.? நீங்க சொன்னவுடனே கலெக்டராவே ஆனா.. ஏதோ ஒரு பையனை பார்த்து கல்யாணம் பண்ணி வைங்க.. கழுத்தை நீட்டுறாளான்னு பார்ப்போம்.. இல்ல அவளை சன்னியாசம் அனுப்ப முடிவு பண்ணியிருக்கிங்களா.? அதையும் சொன்னிங்கன்னா வெளியே யாராவது கேட்டா தகவல் தர வசதியா இருக்கும்.." என்றாள் பாட்டி.

தாத்தா தன் மனைவியை கேலியாக பார்த்தபடியே உணவை உண்டு முடித்துவிட்டு எழுந்து நின்றார்.

"உன் நக்கலுக்கெல்லாம் முடிவு கட்டுறேன்டி.. அந்த கார்த்தியை விட ஏழு மடங்கு லட்சணமான ஒருத்தனோடு என் பேத்திக்கு சம்பந்தம் முடிச்சி ஊரே பார்க்கற மாதிரி ஜேஜேன்னு கல்யாணம் நடத்தி காட்டுறேன்டி.." என்றார்.

'உன் பேத்தியை உன்னை விட எனக்கு எழுபது மடங்கு நல்லாவே தெரியும் கிழவா.. நீ மட்டும் அவளுக்கு வேற ஒருத்தனோடு கல்யாணம் பண்ணி காட்டு, நான் என் ஒரு பக்க மீசையை.. ஓ.. மீசை இல்ல இல்லையா.? ஒரு பக்க காதை அறுக்கறேன்..' என்று மனதுக்குள் சவால் விட்டாள் பாட்டி.

அடுத்த நாளில் அந்த தொகுதியின் முன்னாள் முன்னாள் எம்‌.எல்.ஏவை கைது செய்தது போலிஸ்.

தொலைக்காட்சி செய்தியில் தோன்றிய கார்த்திக் "இந்த தொகுதிக்கு ஒதுக்கப்பட்ட பணத்துல பத்து சதவீதத்தை கூட இவர் தொகுதிக்காக செலவு செய்யல. பத்து வருசம் முன்னாடி அரை ஏக்கர் வயலுக்கு மட்டும் சொந்தக்காரரா இருந்தவர் இப்ப ஆயிரத்து ஐநூறு ஏக்கர் நிலத்துக்கும் இன்னும் பலதுக்கும் சொந்தக்காரரா இருப்பது அவரோட முயற்சியை காட்டுதுதான். ஆனா என் கையில இருக்கும் டாக்குமெண்ட்ஸ் இவர் ஊழல் செஞ்சிருக்கான்னு சாட்சி சொல்லுது.." என்றான்.

முன்னாள் எம்.எல்.ஏவின் கட்சிதான் இப்போது ஆட்சியில் இருந்தது. தங்கள் கட்சியின் பெயர் கெடுகிறதே என்று எரிச்சல் கொண்டது மேலிடம். இதற்கு பதிலாய் கொலை குற்றம் சாட்டப்பட்டு ஜெயிலுக்கு போன எதிர்கட்சி எம்.எல்.ஏவே இருந்திருக்கலாம் என்று நினைத்தார்கள்.

"என்ன எக்ஸ்ட்ரா ஆதாரம் இருந்தாலும் அதை நமக்குள்ள கை மாத்திக்கலாம்.. நாங்க அவரை கட்சியை விட்டு நீக்கிடுறோம்.." என்று போன் செய்து சொன்னார்கள் அவர்கள்.

"அவர் உங்க கட்சிக்கு எவ்வளவு முக்கியமானவர்ன்னு எனக்கும் தெரியும். நீங்க அவரை கட்சியை விட்டெல்லாம் நீக்க மாட்டிங்க.. அவர் கட்சியை விட்டு நீக்கப்படுறதை பத்தியும் எனக்கு கவலை இல்ல.. இதுவரை சிரமப்பட்ட எங்க வட்டத்துக்கு நீங்க தர தண்டனை சரியாகிடாது. அதுக்கு பதிலா நான் கேட்கற அளவுக்கு பணத்தை பிரச்சனை இல்லாம எங்க தொகுதிக்கு ஒதுக்குங்க.." என்றவன் அத்தோடு இணைப்பை துண்டித்துக் கொண்டான்.

கலை அறிவியல் கல்லூரி ஒன்றும், பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றும் கட்டுவதற்கான முயற்சிகளை எடுத்தான்.

உயர் நிலைக்கு மாற்ற சொல்லி கேட்டிருந்தன பதினைந்து நடுநிலை பள்ளிகள்‌. ஆரம்ப பள்ளி வசதி இல்லாமல் இருந்தன எட்டு கிராமங்கள். புதிய பள்ளிகள் கட்டவும், நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலை பள்ளிகளாக மாற்றவும் முயற்சி எடுத்தான்.

"சந்தோசமா இருக்குடா மாப்பிள்ளை.." என்றார் மேகமானன்.

"ஒதுக்கப்படுற தொகை யாசக தொகை இல்ல மாமா.. நம்ம மக்களோட வரி பணம்தான். வரி கொடுங்க, உங்க தேவைகளை செய்து தரோம்ன்னு சொல்லிதான் அரசாங்கத்தையே நடத்தறோம். ஆனா அதை அரசாங்கத்துல சிலரும், மக்கள்ல பலரும் மறந்து போயிட்டாங்க.. நம்ம புள்ளைங்க படிப்பை கூட பூர்த்தி செய்யாம இத்தனை வருசம் இவங்க எம்.எல்.ஏவாவும், எம்‌.பியாவும் இருக்கறதுக்கு பதிலா கத்தியை காட்டி திருட போயிருக்கலாம். இரண்டுமே ஒன்னுதான்.!" என்றான் கோபத்தோடு.

அந்த வாரத்தின் இறுதியில் சிந்துவின் திருமணத்திற்கு இவனும் சென்றான். சுவாதியை போல நெருங்கிய தோழி இல்லையென்றாலும் சிந்துவும் அண்ணா அண்ணா என்று இவனோடு பழகியவள்தான்.

காவல்துறையை சேர்ந்த இருவர் காவலுக்கு வந்தார்கள். ஆனால் இவன் வேண்டாமென சொல்லிவிட்டு தனியாய் வந்தான்.

சொந்த பந்தமும், தெரிந்தவர்களும் கார்த்திக்கை அன்போடு வரவேற்றார்கள். மணமகனை விட தனக்கு முக்கியத்துவம் அதிகம் கிடைப்பதை உணர்ந்தவன் அமைதியாக சென்று ஒரு ஓரமாக அமர்ந்துக் கொண்டான்.

"முகூர்த்த நேரத்துக்கு வந்துட்டு போயிருக்கலாம்.." என்றார் மேகமானன் சொந்த பந்தங்களின் பார்வையை உணர்ந்து.

"விட்டா என் கல்யாணத்துக்கும் முகூர்த்தம் முடிஞ்சி வந்தா போதும்ன்னு சொல்விங்க போல.?" சிரிப்போடு கார்த்திக் கேட்டபோது அபிராமி அவர்களின் அருகே இருந்த இருக்கை ஒன்றில் வந்து அமர்ந்தாள்.

"நான் போய் சுவாதி எங்கேன்னு பார்க்கறேன்.." என்ற மேகமானன் அங்கிருந்து நழுவினார்.

கார்த்திக் வாத்தியக்காரரின் திசை பார்த்தான்.

"நம் ஊரோட முன்னேற்றத்துக்கு நீங்க எடுக்கற முயற்சி எல்லாமே சூப்பர்.. வாழ்த்துகள்.." என்றாள்.

அவள் பக்கம் திரும்பினான். "நன்றிகள். நீங்களும் எங்களுக்கு பல உதவி செய்றிங்க.. அதுக்கு நன்றிகள். உங்களையும் நம்ம கலெக்டரையும் தவிர வேற யாராவது இந்த இடத்துல இருந்திருந்தா ஒவ்வொரு கையெழுத்துக்கும் ஒரு வருசம் இழுத்தடிச்சி இருப்பாங்க.." என்றான்.

அபிராமி மொத்தமாக தலையசைத்தாள்.

"உங்க ஆக்டிவிட்டி ரொம்ப பிடிச்சிருக்கு. ஐ ஜஸ்ட் இம்ப்ரஸ்ட்.." என்றாள்.

"உங்களை இம்ப்ரஸ் பண்ண இதை நான் செய்யல.." என்றான் கார்த்திக் உடனடியாக.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN