காதல் கடன்காரா 50

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அபிராமி புன்னகையோடு மறுப்பாக தலையசைத்தாள்.

"நான் பர்சனல் மீனிங்ல சொல்ல வரல. உங்களை போல ஒரு எம்.எல்.ஏ எங்களுக்கு கிடைச்சது மகிழ்ச்சி.." என்றாள்.

கார்த்திக்கும் அவளின் அதே புன்னகையோடு "நன்றிகள்.." என்றான்.

"பவித்ரா வரலையா.?" திருமண மண்டபத்தை அங்கும் இங்குமாக பார்த்து விட்டு கேட்டாள்.

"சாரிங்க.. நான் பர்சனல் கேள்விகளுக்கு பதில் சொல்றது இல்ல.." என்றவன் இருக்கையிலிருந்து எழுந்து நின்றான்.

"பவித்ரா எனக்கும் தங்கச்சிதான்ங்க. அதான் கேட்டேன்.." என்றவளின் முகம் பார்த்தான். அவளின் கண்கள் வறண்டு இருப்பது போலிருந்தது.

"அவ உங்களுக்கு தங்கச்சின்னா அவக்கிட்ட விசாரிங்க. அனாவசிய கேள்விகளுக்கு நான் ஏன் பதில் சொல்லணும்.?" என்றவன் அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.

அபிராமி உதட்டை கடித்தபடி தன் உள்ளங்கையின் பக்கம் பார்வையை திருப்பினாள். அந்த அதிகாலை நேரத்திலேயே அவனால் தன் மனம் வாடி விட்டது போல இருந்தது.

பவித்ராவை நினைக்கையில் பாவம் என்று தோன்றியது. 'நல்ல பெண் அவள். இப்படி ஒருவனோடு சிக்கிக் கொண்டாளே.?' என்று கவலைப்பட்டாள்.

"மேடம்.." யாரோ அழைத்தார்கள். நிமிர்ந்து பார்த்தாள்.

"சிந்து அக்கா உங்களை வர சொன்னாங்க.." என்றாள் ஒரு பதின்ம வயது சிறுமி.

சரியென தலையசைத்துவிட்டு மணமகள் அறையை நோக்கி நடந்தாள். வழியில்‌ சிலர் அவளிடம் நலம் விசாரித்தார்கள். அனைவருக்கும் பதில் கூறியபடி நடந்தவளை தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தான் கார்த்திக்.

"இவளை போல ஒரு கடன்காரியை காதலிச்சதுக்கு பதிலா நாண்டுக்கிட்டிருந்திருக்கலாம்.." என்று தனக்குள் கடுகடுத்தான். காலை நேரத்திலேயே மூட் அவுட் ஆகிவிட்டது போல இருந்தது.

அபிராமி அந்த அறைக்குள் சென்றபோது சிந்துவிற்கு அலங்காரம் நடந்துக் கொண்டிருந்தது. ஒரு இளம்பெண் ஒற்றை ஆளாக அவளுக்கு அலங்காரம் செய்துக் கொண்டிருந்தாள். முகத்திற்கான அலங்காரம் முழுதாய் முடிந்து விட்டிருந்தது. கூந்தலுக்கு பூச்சூடும் வேலையில் இருந்தாள் அந்த அலங்கரிக்கும் பெண்‌.

சிந்து அந்த முகூர்த்த புடவையில் அழகாய் இருந்தாள். சிவப்பு வண்ண சிறுகட்ட பருத்தி சேலை அது. அந்த அழகு முகத்திற்கும் இந்த பழமையான புடவைக்கும் சம்பந்தமே இல்லை என்பது போலிருந்தது. ஊரில் இருந்த பலரும் முகூர்த்தத்திற்கு பட்டுக்கு மாறி விட்டார்கள். ஆனால் சம்பிரதாயத்தை கடைப்பிடிக்கும் ஏதோ ஒருசிலர் மட்டும் இந்த சிவப்பு கட்ட பருத்தி சேலையை முகூர்த்தத்திற்கு தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்தார்கள்.

அவளின் முகூர்த்த சேலை கண்டதும் அபிராமிக்கு தனது திருமணநாள்தான் நினைவுக்கு வந்தது.

தனக்கு அலங்காரம் செய்த பெண்ணை கை காட்டி நிறுத்திவிட்டு கதவு பக்கம் திரும்பினாள் சிந்து.

"ஏன் அனாதை மாதிரி அங்கே ஒரு ஓரமா உட்கார்ந்திருக்க.? இங்கே வந்திருக்கலாமே.! யாரோட தொந்தரவும் இருந்திருக்காது.." என்றாள்.

"வரலாம்ன்னுதான் இருந்தேன்.." என்றவள் கதவை சாத்திவிட்டு உள்ளே வந்தாள்.

அங்கிருந்த கட்டிலில் அமர்ந்திருந்தபடி சரணை கொஞ்சிக் கொண்டிருந்த சுவாதி இவளை கண்டதும் முகத்தை திருப்பிக் கொண்டாள்.

அபிராமி அவளின் வெறுப்பை கண்டுக் கொள்ளாமல் கட்டிலின் ஒரு ஓரத்தில் வந்து அமர்ந்தாள்.

"ம்மா.." என்று கை காட்டியபடி சுவாதியின் மடியிலிருந்தபடி துள்ளி குதித்தான் சரண்.

சுவாதி சற்று அசந்து விட்டதில் அவளின் பிடியிலிருந்து தப்பி வந்து அபிராமியின் மடியில் ஏறி அமர்ந்தான்.

"ஹே.. குட்டிப்பையா.? உங்க அம்மா வரலையாடா.?" என்றாள் அபிராமி அவனை தூக்கிக் கொஞ்சியபடி.

சிந்து திரும்பி பார்த்து சிரித்தாள். அவளின் கூந்தலில் பூக்களை சூட்டிக் கொண்டிருந்த பெண் முறைத்தாள்.

"சாரி.." என்றவள் வாயை மூடிக்கொண்டு சிரித்தாள்.

சுவாதி சரணை தன்னிடமே பிடுங்கிக் கொண்டாள்.

எழுந்து நின்றாள். "உனக்கு பிரெண்ட்ஷிப்பை மெயின்டன் பண்ண தெரியலன்னா செய்யாதே.. நான் அவனை போல உன் காலுல விழுந்து ஒன்னும் கதறிட போறது இல்ல.. ஆனா ஆத்துல ஒரு காலும் சேத்துல ஒரு காலுமா இருக்காத.. ஆபத்து உனக்குதான்.." என்றவள் அந்த அறையை விட்டு வெளியே சென்றாள்.

அபிராமி அதிர்ச்சியோடு கதவை பார்த்தாள்.

"அது அவளோட குழந்தைதான்.." என்றாள் சிந்து கண்ணாடியில் தெரிந்த அபிராமியின் முகத்தை பார்த்து.

அபிராமி குழப்பமாக சிந்துவின் புறம் திருப்பினாள்.

"நைட்டெல்லாம் உன்னை திட்டி திட்டி என் காதை செவிடாகிட்டா அவ.." என்றாள் சிந்து.

அலங்காரம் முடிந்ததாக சொல்லிவிட்டு அந்த அறையை விட்டு வெளியே சென்றாள் அலங்கரிக்கும் பெண்‌.

சிந்து தோழியின் பக்கம் திரும்பினாள்.

"உனக்கு எதுவுமே தெரியாதுன்னு நேத்து நைட் வரை எனக்கு தெரியாது அபிராமி. என்கிட்ட ராசியான மாதிரி அவகிட்டயும் ராசியாகியிருப்பன்னு நினைச்சேன். கார்த்திக்கும் பவித்ராவுக்கும் கல்யாணம் நடக்கல. ஆனா மூர்த்தி அண்ணாவுக்கும் சுவாதிக்கும்தான் கல்யாணம் ஆச்சி. சரோ குட்டி சுவாதியோட குழந்தைதான்.." என்றாள்.

அபிராமி கண்களை சுருக்கினாள். நெற்றியை தேய்த்தாள்.

"சாரி.." என்றாள்.

"எனக்கெதுக்கு.?" என்ற சிந்து எழுந்து நின்றாள்.

"நீ உன் இஷ்டப்படி எப்படியோ போன்னுதான் நானும் சொல்றேன். உன் இஷ்டபடி போ.." என்றாள்.

அபிராமி தயக்கமாக அவளை பார்த்தாள்.

அதே நேரத்தில் கதவை பட்டென்று திறந்துக் கொண்டு உள்ளே வந்தாள் சுவாதி. கைகளில் மணமாலையை வைத்திருந்தாள்.

"டைம் ஆச்சி.." என்றவள் சுவாதியின் கழுத்தில் மாலையை போட்டுவிட்டாள். அவளின் கையை பற்றி வெளியே அழைத்துச் சென்றாள். வாசற்படி அருகில் சென்றதும் நின்ற சிந்து அபிராமியை நோக்கி கையை நீட்டினாள்.

அபிராமி கலங்கும் விழிகளோடு எழுந்து வந்தாள்.

சுவாதி அபிராமியை ஓரக்கண்ணால் முறைத்தாள்.

அபிராமி அருகே வந்ததும் அவளை தன்னோடு அணைத்துக் கொண்டாள் சிந்து.

"சாரி.. திருமண நேரத்துல பிரெண்ட்ஸ் எவ்வளவு முக்கியம்ன்னு இன்னைக்குதான் எனக்கும் புரிஞ்சது. நாங்க அன்னைக்கு லாஸ்ட் டைம் வரை டூரை என்ஜாய் பண்ணியிருக்க கூடாது‌. இரண்டு நாள் முன்னாடியே கிளம்பி வந்திருக்கணும்.. சாரி.." என்றாள் அபிராமியின் தோளில் முகம் புதைத்து.

சுவாதி அவர்களை பார்ப்பதை தவிர்த்தாள். கலங்கும் விழிகளில் இருந்து கண்ணீர் சிந்திவிட கூடாது என்று கண்களை சிமிட்டிக் கொண்டாள்.

தனது திருமணத்திற்கு அபிராமியை அழைக்க வேண்டும் என்று எவ்வளவோ பாடுபட்டாள் சுவாதி. ஆனால் முத்தமிழ்தான் போன் நம்பர் கூட தராமல் போய் விட்டான். 'அவக்கிட்ட சொல்லுங்கண்ணா, கண்டிப்பா அவ வருவா.. இல்லன்னா நான்தான் அவகிட்ட சொல்லலன்னு கோச்சிப்பாண்ணா..' என்று கெஞ்சலாய் கேட்டாள் அவனிடம். 'என் தங்கச்சிக்கு அந்த மொத்த குடும்பமுமே எதிரிதான்‌. அந்த வீட்டுக்கு நீ மருமகளா போற‌. அதுக்கு என் தங்கச்சி வரணுமா.?' என கேட்டு முறைத்தவன் தனது அண்ணன் பாசம் மாறாமல் அவளின் திருமணத்திற்கு வந்துதான் சேர்ந்தான். அபிராமிதான் இவனை அனுப்பி வைத்திருப்பாள் என்று அவள் நினைத்தபோது 'இந்த குடும்பம் ஒரு மாதிரி.. பார்த்து பத்திரமா இருந்துக்க..' என்று அறிவுரை சொல்லி மொய் தந்துவிட்டு போனான். மொய் கவரில் கூட முத்தமிழ் பெயர்தான் இருந்ததே தவிர அபிராமியின் பெயர் இல்லை. அதற்காய் பலநாட்கள் கண் கலங்கி இருக்கிறாள் சுவாதி. அந்த நேரத்தில் சிந்து மட்டுமே உற்ற தோழியாய் அருகே இருந்தாள்.

சுவாதியின் முகத்தை ஓரக்கண்ணால் பார்த்த அபிராமி. அவளின் முகத்தில் இருந்த சோகமும், கோபமும் அபிராமிக்கு தண்டனை போலவே தோன்றின.

மணமேடைக்கு தோழிகள் இருவரின் கைகளையும் பற்றியபடி நடந்தாள் சிந்து.

மணமேடையின் கீழே முதல் வரிசை இருக்கையில் அமர்ந்திருந்தான் கார்த்திக். சரண் அவனின் சட்டை பாக்கெட்டை தூர்வாரும் முயற்சியில் இருந்தான்.

கார்த்திக்கின் பார்வை அபிராமியின் முகத்தில் குடிக் கொண்டிருந்தது.

சிந்து தன் வருங்கால கணவனின் அருகே சென்று அமர்ந்தாள். தோழிகள் இருவரும் அவளின் அருகில் நின்றனர். சிந்துவின் மாப்பிள்ளை சிந்துவை பார்த்து அடிக்கடி புன்னகைத்தான். சிந்து ஒவ்வொரு முறையும் வெட்கம் பரவிய முகத்தோடு தலைகுனிந்தாள்.

அபிராமி தனது திருமணத்தை நினைவுப்படுத்தி பார்த்தாள். கார்த்திக் முதல் முறை தாலி கட்டுகையில் பயத்தில் தலைகுனிந்தாள். இரண்டாம் முறை நடித்தபடி தலைகுனிந்தாள். இது போல இயல்பாய் வெட்கத்தோடு தலைகுனியவில்லை அவள். 'இப்படி வெட்கப்படுத்த அவனாலும் முடியல..' என்று தனக்குதானே சொல்லிக் கொண்டாள்.

சிந்துவை அவளின் புகுந்த வீட்டிற்கு அனுப்பிவிட்டு தன் வீடு நோக்கி கிளம்பினாள் அபிராமி. அன்றைக்கு முழுநாளும் பணிக்கு விடுமுறை எடுத்திருந்தாள்.

சுவாதியின் கார்த்தியின் நினைவுகளோடே வீடு வந்து சேர்ந்தாள். வாசலில் இருந்த ஒட்டடைகளை சுத்தம் செய்துக் கொண்டிருந்த அம்மா இவளின் காரை கண்டதும் ஒட்டடை குச்சியை கீழே வீசிவிட்டு உள்ளே சென்றாள்.

வீட்டிற்குள் செல்லாமல் இப்படியே திரும்பி விடலாமா என்று யோசித்தாள்.

ஒரு நிமிடம் காரிலேயே அமர்ந்து தன் மனதை சரிசெய்துக் கொண்டாள். பிறகு இறங்கி வீட்டிற்குள் சென்றாள்.

"அம்மா தண்ணி கொண்டு வா.." என்றாள் சோபாவில் அமர்ந்தபடி.

இவளின் குரல் கேட்டு தாத்தா தனது அறையிலிருந்து வெளியே வந்தார். முத்தமிழ் அலுவலகம் சென்றிருப்பான் என்பதை யூகித்து கொண்ட அபிராமி தாத்தா தன் அருகே வந்து அமர்ந்ததும் அவரின் தோளில் சாய்ந்தாள்.

"அம்மா தண்ணி.." என்று மீண்டும் ஒருமுறை கிச்சனை பார்த்து குரல் தந்தாள்.

சமையலறை வாயிலில் வந்து நின்ற அம்மா இடுப்பில் கை பதித்தபடி மகளை முறைத்தாள்.

"உங்களுக்கு சேவகம் செய்ய எங்க அப்பனும் அம்மாவும் என்னை பெத்து விடல.." என்றாள்.

அபிராமியின் முகம் சட்டென்று கறுத்து போனது. அம்மாவின் முகத்தை விட்டு பார்வையை திருப்பிக் கொண்டாள். அழுகை வரும்போல இருந்தது.

"பெத்த புள்ளைக்கிட்ட பேசுற பேச்சா இது.?" கடிந்துக் கொண்டார் தாத்தா.

"விடுங்க தாத்தா.. எல்லாம் போதும்.." என்றவள் எழுந்து நின்றாள். தனது அறையை நோக்கி நடந்தாள்.

"இரும்மா.. தண்ணீர் கொண்டு வரேன்.." என்றார் தாத்தா.

"வேணாம் தாத்தா.." என்றவள் தன் அறையின் கதவை திறந்தாள்.

"எவ்வளவு தாகமா இருந்தாலும் பெத்தவ கொண்டு வந்து தண்ணீர் தந்தாதான் தாகம் தீரும்ன்னு சட்டம் ஏதும் இருக்கா.?" கேலியாக கேட்டாள் அம்மா.

அபிராமி கதவின் மீது சாய்ந்து நின்றபடி அம்மாவை பார்த்தாள்.

"ஆமா.. சட்டம்தான்.! எந்த ஏட்டிலும் எழுதாத சட்டம்.." என்றாள் உணர்வுகளை வெளிக்காட்டாமல். இது சாதாரண தண்ணீர் தாகம் அல்ல. அவளுக்குள் மெள்ள மெள்ள இறந்துக் கொண்டிருக்கும் உணர்வுகளுக்கான பாச தாகம்.

"பெத்தவ கையால் தண்ணீர் வாங்கி குடிச்சாதான் தண்ணீர் தாகம் தீரும்ன்னு சட்டம் இருக்கறது தெரிஞ்சிருக்கு. அதுதான் சரின்னும் தெரிஞ்சிருக்கு. அதுபோல தன்னை சுத்தி சுத்தி வந்து தன் மனசுல காதலை விதைச்சவ எவளோ அவளோடுதான் நான் வாழ்வேன்னு சொன்னவங்களோட சட்டம் தெரியல. அப்படி தெரிஞ்சாலும் அதை கார்த்தி சொல்லும்போது அந்த சட்டம் அநியாயம் போல தெரியுது இல்ல.?" என்றாள் அம்மா.

அபிராமி கண்களை மூடியபடி நெற்றியை பிடித்தாள்.

"யசோதா.. சும்மா புள்ளையை டார்ச்சர் பண்ணாத.." என்றார் தாத்தா.

"நான் பேசினா உங்களுக்கு தப்பாதான் தெரியும்.." என்றவள் "காதல்.. வெங்காய காதல்.. காதலிக்க வைக்காம போயிருந்தா அவன் முட்டாள் போல சுத்தியிருக்க மாட்டான் இல்லையா.? உடனே இவ கட்டாய தாலி கட்டினான். காதலில் விழ வச்சி ஏமாத்தினேன்னு சொல்வா. கட்டாய தாலியை கழட்டி எறிய இரண்டு செகண்ட் ஆகுமா.? இல்ல குடும்பம் வந்து பிரச்சனையை தீர்த்து கூட்டி வர இரண்டு நாள்தான் சேர்ந்து ஆகியிருக்குமா.!? ஆனா காதல் வெங்காயம் அப்படியா.? ஒரு நாள் தண்டனை தந்தவனுக்கு ஜென்ம தண்டனை தந்திருக்கா.. இவ சட்டம் சரியாம். முதலாளி விட்டுட்டு போனா பிறகும் நாலு வருசம் கழிச்சி அடையாளம் கண்டாலும் ஓடி வந்து காலை சுத்துற நாயை போல லவ்வு லவ்வுன்னு மனசுல நினைச்சிட்டு சுத்துற அவன் தப்பாம்.." என்று அவளுக்கும் கேட்கும்படி முனகினாள்.

அபிராமி அம்மாவின் முகத்தையே ஏக்கமாக பார்த்தாள்.

"என்னை புரிஞ்சிக்க மாட்டியா அம்மான்னு உடனே என்கிட்டயும் நடிக்காத.. உனக்கு நான் அம்மா. அதுபோல்தான் அவனுக்கும் பெத்து பேரு வைக்காத அம்மா. நான் இங்கே நீதிபதி இல்ல. ஆனாலும் யார் செஞ்சது பெரிய தப்புன்னாவது புரிஞ்சிக்கிட்டவதான்.." என்றாள் அம்மா.

'முடிஞ்சி போன விசயத்தை பத்தி பேசுறதை போல முட்டாள்தனம் வேற இல்ல..' என்றது அபிராமியின் மனம்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN