காதல் கடன்காரா 51

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
முத்தமிழ் வீட்டிற்கு வந்தபோது அபிராமி அரை உறக்கத்தில் இருந்தாள். அண்ணன் தன் அறையின் கதவை திறந்ததும் உடனே எழுந்து அமர்ந்தாள்.

அருகில் வந்து அமர்ந்தவன் "அம்மா திட்டினாங்கன்னு கேள்விப்பட்டேன்.. அவங்களை கண்டுக்காதே.. விட்டுடு.." என்றான்.

"ம்.." என்றவளின் கேசத்தை ஒதுக்கி விட்டவன் "மதுவை உனக்கு ஞாபகம் இருக்கா.?" என கேட்டான்.

நெற்றியை சுருக்கிய அபிராமி "ம்.. உன் காலேஜ்மேட்தானே.? ஞாபகம் இருக்குண்ணா.. ஏன்.?" என்றாள்.

"அவனுக்கும் உனக்கும் செட் ஆகுமான்னு.." தயக்கமாக இழுத்தவனை பயத்தோடு பார்த்தவள் அவசரமாக மறுத்து தலையசைத்தாள்.

"வேணாம்ண்ணா.." என்றாள் பதறிய குரலில்.

தங்கையின் கையை எடுத்து தனது கைக்குள் வைத்துக் கொண்டான் முத்தமிழ்.

"உன் நல்லதுக்குதான் அபிராமி.. நீ எத்தனை நாளைக்கு பேச்சிலராவே இருக்க போற.? பாரு.. உன் பிரெண்ட்ஸ் கூட எல்லாருமே கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க.." என்றான்.

கையை விடுவித்துக் கொண்டு எழுந்து நின்றாள்.

"எனக்கு கல்யாணம் தேவையில்ல.." என்றாள்.

"ஏன் அபிரா.."

"எத்தனை முறைதான் கல்யாணம் பண்றது.? அவன் என் கழுத்துல இரண்டு முறை தாலி கட்டியிருக்கான்.."

"அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்.? அவனை உனக்கு பிடிக்கல.."

"ஆனா அதுக்காக மத்தவங்களை பிடிக்கணுமா.?"

முத்தமிழ் கோபத்தோடு எழுந்து தன் தங்கையை தன்புறம் திருப்பினான்.

"ஓ.. அப்படின்னா இவனை பிடிச்சாலும் பிடிக்கலன்னாலும் மத்த யாரையும் நேசிக்க கூடாது. அதானே.?"

அபிராமி அண்ணனின் முகம் பார்த்தாள். அவள் பதில் சொல்லும் முன் அவனே "நீயும் இதே பெண்ணின குட்டையில் ஊறின அதே மட்டைதானே.? அதான் இப்படி இருக்க.." என்றான் பற்களை கடித்தபடி.

அபிராமிக்கு நெஞ்சம் நொந்தது. அவன் அடுத்து எதுவும் பேசிவிடக் கூடாது என்ற எண்ணத்தோடு ஏக்கமாக பார்த்தாள்.

"அவன் உனக்கு புருசனாகிட்டான் இல்ல.? அதான் வேற யாரையும் பிடிக்கல.. அவன் கட்டிய தாலிக்கு எந்த அர்த்தமும் இல்லைன்னு நீ சொன்னபோது நான் கூட உன்னை தைரியசாலின்னு நினைச்சேன். அவன் முன்னாடி நீ வாழ்ந்து காட்டுவன்னு நம்பினேன். எல்லாமே வீண்.." என்றான் எரிச்சலோடு.

"அவன் முன்னாடி வாழ்ந்து காட்டிட்டுதானே இருக்கேன் அண்ணா.? கல்யாணம் பண்ணாவேதான் வாழ்க்கையா.?" என கேட்டவளை இகழ்ச்சியாக பார்த்தவன் "நாய் வாலை நிமிர்த்த முடியாதுன்னு சும்மாவா சொன்னாங்க.?" என்றுவிட்டு கதவை நோக்கி நடந்தான்.

அபிராமி சட்டென்று பாய்ந்து சென்று அவனின் கையை பற்றி நிறுத்தினாள்.

"என்ன சொல்ல வர.?" என்றாள் பற்களை கடித்தபடி.

கோபத்தில் சிவந்திருந்தது கண்கள். நெஞ்சம் எரிமலை நெருப்பாக கொதித்தது.

"நீ.."

அவனை பேசவிடவில்லை அவள்.

"பிடிக்காத ஒருத்தனை பிடிக்கலன்னு சொல்லிட்டு அந்த வட்டத்தை விட்டு வெளியே வந்தா உங்களுக்கு போதாது இல்ல.? இன்னொருத்தனை கட்டிக்கணும். ஒரு வருசம் கூட வாழ்ந்தவனையே பிடிக்கலன்னு வந்த நான் உங்களுக்காக இன்னொருத்தனை கட்டிக்கணுமா.? லைஃப் என்னோடது. டிசைட் பண்ண வேண்டியது நான். நீங்க இல்ல. ஹெல்ப் பண்றதுக்கும் டிசைட் பண்றதுக்கும் நடுவுல ஏகப்பட்ட வித்தியாசம் இருக்கு. உங்களை நம்பிதானே முதல் முறை கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேன். கொலைக்காரனுக்கு கட்டி வைக்க இருந்திங்க நீங்க.." என்றாள்.

முத்தமிழ் சிரித்தான்.

"ஆனா ஒருத்தன் மிரட்டியதும் பின்னால போனவ நீதான்.." என்றான்.

அபிராமி தன்னை மறந்து சிரித்தாள். அண்ணனின் முகம் பார்த்து கசந்து சிரித்தாள். "அவனை கட்டியிருந்தாலும் நாசம்.. இவன் கட்டியதாலும் நாசம், என் வாழ்க்கை! இதுல ஒப்பீடு ஒரு கேடா.?" என்றவள் "அதே குட்டையில் ஊறிய மட்டை நான்னு என்னை சொன்ன இல்ல.? நீதான் அதை விட மோசமான குட்டையில் ஊறிய மட்டை.. கூட பிறந்தவளுக்கு செய்ய கூடிய அதிகப்பட்ச உதவி அவளுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறது மட்டும்தான்னு நினைக்கிற.! தனியா வாழவே கூடாதா ஒரு பொண்ணு.?" என்றாள் இரண்டாம் முறையாக.

முத்தமிழுக்கு அவளை கோபப்படுத்த விருப்பம் இல்லை. அவளை வெறுக்கவும் இல்லை அவன். ஆனால் அம்மாவின் சவால் காதுகளை சுற்றிக் கொண்டே இருந்தது.

"உன் அண்ணன் நான்.. உனக்கு கல்யாணம் ஆனாதான் நான் கல்யாணம் பண்ணிக்க முடியும்.!" என்றான்.

அபிராமி இந்த முறை அதிகம் சிரித்தாள்.

"இதுக்கும் அதுக்கும் சம்பந்தமா.? நீ கல்யாணம் பண்ணு. நானா குறுக்க புகுந்து நிக்கிறேன்.?" என்றாள்‌ சிரிப்போடு. அந்த சிரிப்பின் பின்னால் ஆத்திரம் இருந்தது.

"வயசு பெண்ணை வீட்டுல வச்சிக்கிட்டு யாரும் பசங்களுக்கு முதல்ல கல்யாணம் பண்ண மாட்டாங்க.."

"அப்படி சட்டம் இல்ல. நீ என் மேல சாக்கு வைக்காத.. உனக்கு இஷ்டம் இருந்து உனக்கு தைரியம் இருந்தா நீ கல்யாணம் பண்ணு.. என்னை ஏன் டார்ச்சர் பண்ற.?"

"அப்ப உனக்கு தைரியம் இல்லங்கறியா.?"

"அப்படிதான் வச்சிக்கேயன்.. உன் ஏட்டிக்கு போட்டியா பதில் சொல்றதுக்கு பதிலா முட்டாளாவும், கோழையாவும் கூட இருந்துட்டு போயிடலாம்.." என்றவள் தன் அறையின் கதவருகே சென்றாள். கதவை திறக்க கைப்பிடியை தொட்டவளின் தோளை பற்றினான் முத்தமிழ்.

"நீ அவனை லவ் பண்றியா.?" என்றான் கடித்த பற்களின் இடையே.

அபிராமி குழப்பமாக திரும்பி பார்த்தாள்.

கோபத்தில் முத்தமிழின் கண்கள் கூட சிவந்து காணப்பட்டது. கழுத்து நரம்புகள் புடைத்திருந்தது. கோபத்தை சிரமப்பட்டு அடக்கிக் கொண்டிருக்கிறான் என்பது புரிந்தது.

"ஆ‌‌.. ஆனா.." அபிராமி உள்ளங்கைகளால் தன் முகத்தை தேய்த்தாள்.

"சொல்லி தொலை.. உன்னை நம்பியதுக்கு கடைசி கடைசியா இந்த கருமத்தையும் என் காதால கேட்டுக்கறேன்.." என்று சீறினான்.

அவனின் சத்தம் அவளின் காது சவ்வை சேதப்படுவது போல தோன்றியது அவளுக்கு.

அபிராமி நிமிர்ந்து பார்த்தாள். "செத்தாலும் நான் அவனோடு சேர்ந்து வாழ விரும்பல.. ஆனா ஒருவேளை நான் யார் கூடவாவது கண்டிப்பா வாழ்ந்தே ஆகணும்ன்னு சட்டம் எழுதினா அப்ப கண்டிப்பா அவனோடு மட்டும்தான் வாழ்வேன்‌. ஏனா.." என்றவள் முடிக்கும் முன்பே அந்த கதவை படாரென்று திறந்துக் கொண்டு வெளியே சென்றான் முத்தமிழ்.

அபிராமி நெற்றியை தேய்த்தாள்.

அவள் அதிகம் யோசிக்கும் முன் அவளின் கைபேசி ஒலித்தது. படுக்கையின் அருகே இருந்த மேஜை மேல் இருந்தது போன். எடுத்து பார்த்தாள். ஸ்வேசன்யா அழைத்திருந்தாள்.

ஏதோ ஒரு நிம்மதி மனதில் பரவியது போலிருந்தது. கைபேசியை காதில் வைத்தபடி படுக்கையில் விழுந்தாள்.

"ஐ மிஸ் யூ கேர்ள்.." என்றாள்.

"நானும்.. ஆனா நீ காரணம் இல்லாம மிஸ் பண்ண மாட்டியே.. என்ன ஆச்சி.?" சந்தேகமாக கேட்டாள் அவள்.

நடந்ததை விவரித்தாள் அபிராமி.

ஸ்வேசன்யா சிரித்தாள்.

"முடிக்காம விட்டதை சொல்லு.. அதையும்தான் கேட்போம்‌‌.." என்றாள் சிரிப்பை அடக்கியபடி.

அவளை நினைத்து சிரிக்காமல் இருக்க முடியவில்லை அபிராமியால்.

"சொர்க்கத்துல அடிமையா இருப்பதை விட நரகத்துல தலைவியா இருந்துட்டு போகலாம்ன்னு சொல்ல வந்தேன். தெரியாத கடவுளை விட பழகிய சாத்தான் எவ்வளவோ மேல்.." என்றாள்.

ஸ்வேசன்யா சத்தமாக சிரிக்கும் சத்தம் கேட்டு போனை காதிலிருந்து தூரமாக விலக்கினாள் அபிராமி. அப்போதும் கூட அவள் சிரிக்கும் சத்தம் கேட்டுக் கொண்டேதான் இருந்தது.

ஒரு நிமிடம் முழுதாய் கடந்த பிறகே அவளின் சிரிப்பு சத்தம் நின்றது.

அபிராமி போனை காதில் வைத்தாள்.

"அபிராமி நான் ஒரு விசயத்தை சொல்லட்டுமா.?" என கேட்டாள் அவள்.

"ம்.."

"நீ உன் ஈகோவை கொஞ்சம் தள்ளி வச்சிடுறது நல்லது.. நீ உண்மையை ஒத்துக்காத வரை இது சீரியல் மாதிரி இழுத்துட்டேதான் போகும்.." என்றாள்.

"சிங்கிள் பெண்.. கெத்துன்னு சொல்லலாம்ப்பா.." என்றாள் அபிராமி.

"இது தப்பு அபிராமி. உன் லைஃப் இது. உன் போராட்டம் இது. உன் பனிஷ்மெண்ட் இது. அவனை பிடிக்கல, நீ வெறுக்கற.. இப்படி ஒரு காரணம் சொல்லி நீ அவனை ஏத்துக்காம போனா அது உனக்கு நீயே தந்துக்கற பாதுகாப்பு லைன், உன் வாழ்க்கைக்கான சரியான முடிவு. ஆனா ஈகோங்கற ஒன்னே ஒன்னுக்காக மட்டுமே நீ அவனை ஒதுக்கி வச்சா அதை விட முட்டாள்தனம் வேற இருக்காது. ஈகோ கடைசி வரை அப்படியே நிற்கும்ன்னு நினைக்காதே.. கோபம் கூட சிலந்தி வலை சுவரு.. காத்துல காணாம போயிடும். ஆனா ஈகோ கானல் சுவரு. கண்ணை மூடி நின்னுட்டு கொஞ்ச நேரம் கழிச்சி கண்ணை திறந்து பார்த்தாவே இருக்கற இடம் தெரியாம போயிடும்.. ஆனா நீ உன் பொறுமையை சீக்கிரம் தேடலன்னா அந்த ஈகோவே உன்னை கொன்னுடும்.." என்றாள் கவலையோடு‌.

"நீ சொன்னதைதான் என் அம்மாவும் சொன்னாங்க. அவங்ககிட்ட முறைச்சேன். ஆனா உன்கிட்ட முறைக்க முடியல.." என்றாள் அபிராமி கூரையை பார்த்தபடி.

"ஏனா அவங்க அவனுக்கு சப்போர்ட் பண்ணியிருப்பாங்க.. ஆனா நான் உன் மனசுக்கு சப்போர்ட் பண்றேன்.." எளிமையாக சொன்னாள் ஸ்வேசன்யா.

"லவ் யூ.."

"உருக்கிடாத என்னை.!" கேலியாய் சொன்னாள் அவள்.

"அப்புறமா பேசலாம் அபிராமி.. டேக் கேர்.." என்றவள் இணைப்பை துண்டித்துக் கொண்டாள்.

அபிராமி அருகே இருந்த தலையணை ஒன்றை எடுத்து முகத்தின் மீது வைத்துக் கொண்டாள். அந்த இருள் அவளுக்கு பிடித்திருந்தது. விடியாத இரவு ஒன்று மரணம் வரை நீண்டு வர வேண்டும் என்று ஆசையாக இருந்தது அவளுக்கு.

அன்று இரவு வெகுநேரம் வரை வாசலில் காத்திருந்தாள் அபிராமி. வெளியே சென்றிருந்த முத்தமிழ் திரும்பி வந்திருக்கவில்லை. அண்ணனை கோபப்படுத்தி விட்டோமே என்று வருத்தமாக இருந்தது. அண்ணன் வந்தால் சாரி கேட்கலாம் என்று காத்திருந்தாள். ஆனால் அவன் வரவேயில்லை. மறுநாள் காலையில் அவள் தன் அலுவலகத்திற்கு கிளம்பி செல்லும் வரையிலுமே அவன் வரவில்லை.

அவள் தன் அலுவலகத்திற்கான தூரத்தில் பாதியை கடந்தபோது அவளின் போனுக்கு செய்தி ஒன்று வந்து சேர்ந்தது.

"உன் அண்ணனை போலிஸ் அரெஸ்ட் பண்ணியிருக்காங்க. செய்தியை பாரு. - சுவாதி.." என்று அதில் இருந்தது.

குழம்பி போனவள் காரை நிறுத்தினாள். முத்தமிழுக்கு அழைத்தாள். போன் அணைப்பில் இருப்பதாக எதிர்முனையில் கணினி குரல் சொன்னது‌.

உள்ளூர் செய்திகளை வழங்கி வரும் செயலி ஒன்றை திறந்தாள். செய்தி ஏதும் உள்ளதா என்று தேடினாள்

"நமது தொகுதியின் எம்‌.எல்.ஏவை நேற்று இரவு பொது இடத்தில் வைத்து கொலை செய்ய முயன்றவன் கைது‌‌.." என்று சிவப்பு நிற எழுத்தில் செய்தி இருந்தது. முத்தமிழின் புகைப்படமும் இருந்தது.

நெற்றியை பிடித்தபடி இருக்கையில் சாய்ந்து அமர்ந்தாள். அண்ணன் பிரச்சனைகளை வேண்டுமென்றே வளர்ப்பது போலிருந்தது.

தாத்தாவுக்கு அழைத்தாள். அவருக்கும் அதற்குள் விசயம் தெரிந்து விட்டிருந்தது போலும்.

"தமிழ் என் பேச்சை கேட்கவே மாட்டேன்கிறான்.." என புலம்பியவரிடம் அண்ணன் இப்போது எங்கே இருக்கிறான் என்று தகவலை கேட்டுக்கொண்டு காவல் நிலையம் நோக்கி காரை விட்டாள்.

நான்கு வருடங்களுக்கு முன்பு இதே அண்ணனுக்காக இதே மன கவலையோடு சென்ற அதே காவல் நிலையம். இப்போதும் அங்கே ஆய்வாளராக இருப்பதும் அதே மூர்த்தி.

அபிராமி காவல் நிலையத்திற்குள் நுழைந்ததும் காவலர்கள் வீர வணக்கம் வைத்தார்கள். கம்பி கதவுகளுக்கு பின்னால் நின்றிருந்த முத்தமிழின் அருகே சென்றாள்.

"ஏண்ணா.?" என்றாள் பற்களை கடித்தபடி.

"ஏன்னு உனக்கு தெரியும்.." என்றான் அவனும் பற்களை கடித்தபடி.

"முட்டாள்தனத்தில் உன்னை மிஞ்ச ஆளில்ல.." என்றவள் அவசரமாக மூர்த்தியின் அறை நோக்கி சென்றாள்.

"தமிழை வெளியே விட்டுடுண்ணா.. நான் கேஸ் எதுவும் தரல.." மூர்த்தியின் முன்னால் அமர்ந்தபடி கேட்டுக் கொண்டிருந்தான் கார்த்திக்.

மூர்த்தி அவனை மேலும் கீழும் பார்த்தான்.

"சாரி சார்.. நீங்க மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர். உங்களுக்கு தேவையான பாதுகாப்பை தர வேண்டியது எங்க கடமை.." என்றான் அவன்.

கார்த்திக் அண்ணனை குறும்பாக பார்த்தான். ஆனால் மூர்த்தி தன் முகத்தின் சிடுசிடுப்பை குறைத்துக் கொள்ளவேயில்லை.

அவர்களின் உரையாடலை கேட்டு அபிராமி அந்த அறையின் வாசலிலேயே சிலையாக நின்று விட்டாள்.

கார்த்திக்கின் தோளிலும் இடது கையிலும் கட்டு இருந்தது. ஓரமாய் நின்று பார்க்கையில் அவனின் நெற்றியில் இருந்த காயங்களும் தெளிவாக தெரிந்தன.

"பிரச்சனை பண்ண வேணாம் அண்ணா.." என்று சிறு குரலில் சொன்னான் கார்த்திக்.

"நீ அநியாயத்துக்கு இருக்காத.. அவ எவ்வளவு பண்ணாலும் நீ திருந்த மாட்ட இல்ல.?" எரிச்சலோடு வினவினான் மூர்த்தி.

"அந்த முதல் சண்டையின் போதே தமிழை அரெஸ்ட் பண்ணாம அமைதியா விட்டிருந்தா அவ இன்னேரம் என்னோடு வாழ்ந்துட்டு இருந்திருக்க சான்ஸ் இருந்திருக்கலாம்ன்னுதான் இப்பவும் தோணுது அண்ணா.." தலை குனிந்தபடி சொன்ன தம்பியை முறைக்கவும் முடியவில்லை அவனால். அதே சமயம் வருந்தாமலும் இருக்க முடியவில்லை.

"நீயும் இருக்கறவங்களும் அவளை நான் மறந்துடணும்ன்னு எங்கெங்கேயோ துரத்துனிங்க.. நானும் சலிக்க ஓடிட்டேன் அண்ணா.. ஆனா எங்கே ஓடிப்போய் நின்னாலும் தலைக்கு மேல வானமா அவளேதான் தெரியற. ஒளிஞ்சிக்க முயற்சி பண்ணி பாதாளத்துக்குள்ள ஓடினாலும் என் பூமியாவும் அவளேதான் இருக்கா.. இந்த ஒரு விசயத்துல மட்டும் எனக்கு சொரணை இல்ல.. எனக்கு தன்மானம் இல்லன்னு எனக்கே தெரியும்ண்ணா.. ஆனா என்ன செய்ய சொல்ற.? நான் செத்தாதான் அவளை மறக்க முடியும்.. ஆனா அப்படியே செத்தாலும் கூட.." சொல்லிக் கொண்டிருந்தவன் சட்டென பேச்சை நிறுத்தினான். திரும்பி பார்த்தான்.

அபிராமி நீள விழிகளோடு அவனை ஆழமாக பார்த்தபடி நின்றுக் கொண்டிருந்தாள்.

கார்த்திக் எழுந்து நின்றான். சுளீரென்று வலித்த தன் இடது கரத்தை வலதுக் கையால் தாங்கிப் பிடித்தான்.

"இவங்களை இம்ப்ரஸ் பண்றதுக்காக நான் உன்னோடு பேசிட்டு இருந்தேன்னு தப்பா நினைச்சிக்க போறாங்க அண்ணா.. அவங்களை போல எனக்கு நடிக்க வராது.." என்று மூர்த்தியிடம் சொல்லிவிட்டு வெளியே நடந்தான் கார்த்திக்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN