காதல் கடன்காரா 53

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
கிராமப்புற பள்ளிக் கூடம் அது.

கார்த்திக் சிறு வயதில் தன் தாய் வழி பாட்டி வீட்டில் தங்கியிருந்தபடி படித்த ஆரம்ப பள்ளி அது. அவன் அங்கே படிக்கையில் பணியில் இருந்த‌ ஆசிரியர் ஒருவர் இன்று பணி ஓய்வு பெறுகிறார். அவரின் பல வருட சேவையை பாராட்டி பள்ளியில் பாராட்டு விழா வைத்திருந்தார்கள். அதற்கு கார்த்திக்கும் சென்றிருந்தான்.

தான் எழுத படிக்க கற்றுக் கொடுத்த பள்ளியையும், ஆசிரியரையும் நேரில் காணுகையில் நெகிழ்ந்தான் கார்த்திக்.

"அடிப்பட்ட உடம்போடு வந்திருக்கிங்களே தம்பி.." கவலையோடு விசாரித்தார் ஒரு ஆசிரியை.

"அது சின்ன காயம்தான் அம்மா.." என்றவனை ஆச்சரியத்தோடு பார்த்தார்கள் பள்ளி மாணவர்கள்.

"சார் உங்களை மாதிரி ஆகணும்.." என்றான் ஒரு சிறுவன்.

அவனை அருகே அழைத்து நலம் விசாரித்தான் கார்த்திக். "நீ ஏற்கனவே இப்படின்னு எழுதியாச்சி.. அதுவா நீ உருமாறணும். அவ்வளவுதான் உன் வேலை. உன்னை விட சிறந்த ஒருத்தனை உன்னால பார்க்கவும் முடியாது. உன்னை போல யாராலும் உருவாகவும் முடியாது. ஏனா நீ என்பது தனித்துவம்.." என்றான்.

அந்த சிறுவன் தலையசைத்துவிட்டு நகர்ந்தான்.

"இது அந்த பையனுக்கு புரிஞ்சி இருக்குமா மாப்பிள்ளை.?" சந்தேகமாக கேட்டார் மேகமானன்.

"ஞாபகத்துல இருக்கும் மாமா.. பெருசான பிறகு யோசிச்சானா புரியும்.." என்றவனை வியப்போடு பார்த்தார் அவர்.

"ஏன் மாமா.?" கேள்வியாக பார்த்தவனிடம் "நீயே உன்னை செதுக்கிட்டு இருக்கடா.. உன்னோட இந்த மெச்சூரிட்டி எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.." என்றார்.

"மெச்சூரிட்டி பத்தி எனக்கு சரியா தெரியல அபிராமி.. ஆனா உணர்வுகளை கொன்னு புதைச்சிட்டு வாழுறதுதான் மெச்சூரிட்டின்னா அந்த மெச்சூரிட்டியே எனக்கு தேவையில்ல.." கைபேசியில் ஸ்வேசன்யா சொன்னது கேட்டு சிரிப்பு வந்தது அபிராமிக்கு.

"சிரிக்காத அபிராமி.. சீரியஸ்.. குழந்தையை போல வாழணும். அதான் வாழ்க்கை. பிடிச்சதுக்கு போராடணும். பிடிச்சது கிடைக்க அழணும்.. ஆசைப்படுறது நெருப்பாவே இருந்தாலும் தானா சுட்டு தானா விலகணும். அதுதான் வாழ்க்கை.." என்றாள் அவள்.

"நெருப்புக்கு பதிலா எரிமலைக்குள் கூட நீ விழு.. நான் விழ மாட்டேன்.." சிரிப்போடு சொன்னாள் அபிராமி.

சட்டென்று கார் நின்றது. அபிராமி ஓட்டுனரை பார்த்தாள்.

"நான் பார்க்கறேன் மேடம்.." என்றபடி கீழிறங்கினார் ஓட்டுனர்.

அந்த மாவட்டத்தில் இருந்த விருது பெற்ற எழுத்தாளர் ஒருவரின் புதிய புத்தக வெளியீட்டு விழாவிற்கு சென்று விட்டு வீடு நோக்கி திரும்பிக் கொண்டிருந்தாள் அபிராமி. ஸ்வேசன்யாவோடு கைபேசியில் பேசிக் கொண்டிருந்த போதுதான் கார் பழுதாகி நின்றது.

கார்த்திக் ஆசிரியரின் காலை தொட்டு வணங்கினான்.

"நல்லாருப்பா.." என்றார் அவர்.

"உங்க மாணவர்களான எங்களுக்கு நீங்க செஞ்ச கல்வி உதவியை நாங்க என்னைக்கும் மறக்க மாட்டோம் சார்.. நாங்க என்ன படிச்சாலும், எந்த பதவிக்கு போய் அமர்ந்து அங்கே கையெழுத்து போட்டாலும் அந்த அரிச்சுவடி எழுத்துக்கள் அத்தனையும் உங்ககிட்ட கத்துக்கிட்டோம்கறதை எப்போதும் மறக்க மாட்டோம்.. நன்றிகள் சார்.." மைக் முன் நின்று பேசினான் கார்த்திக்.

பணி ஓய்வு பெற்ற ஆசிரியரிடம் மற்ற ஆசிரியர்களும், முன்னால் மாணவர்களும் ஆசி பெற்றார்கள். அவர் கலங்கிய கண்களோடு அவர்கள் அனைவரையும் பார்த்தார்.

"உங்களின் முயற்சி நேர்மையானதாகவும், நியாயமானதாகவும் இருக்கும் வரை அந்த முயற்சியை எங்கேயும் தோற்றுப் போக விடாதிங்க பசங்களா.." என்றார் அவர்.

அனைவரும் ஆமோதித்து தலையசைத்தனர்.

விழா முடிந்து திரும்பினான் கார்த்திக். ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்திருந்த மேகமானன் "சார் காலுல விழுவன்னு நான் நினைக்கவே இல்ல கார்த்தி.." என்றார் ஆச்சரியத்தை மறைக்காமல்.

கார்த்திக் சிரித்தான்.

"அது விழுறது இல்ல மாமா.. வாழ்த்து பெறுவது.. தாய் தந்தை, ஆசிரியர்கிட்ட வாழ்த்து வாங்க அவங்க காலை தொடுறது கூட அவமானம்ன்னு நினைச்சி அதை ஒதுக்கியதாலதான் இந்த வீணா போன வாழ்க்கையில கண்டவங்க காலுலேயும் விழ வேண்டிய சூழல் உருவாகியிருக்கு.. மத்தவங்க காலுல விழுந்து கிடக்காம இருக்கவாவது இவங்ககிட்ட ஆசி வாங்கணும்.." என்றான்.

மேகமானன் புரிந்துக் கொண்டதாக தலையசைத்தார்.

"வளருறடா மாப்பிள்ளை.." என்றார்.

"செல்லம் கொடுத்து கெடுத்து வைக்காதிங்க மாமா.." என்றவனை கண்டு சிரித்தார் அவர்.

மிதமான வேகத்தில் காரை செலுத்திக் கொண்டிருந்த மேகமானன் தூரத்தில் சாலையோரத்தில் காரின் மீது சாய்ந்து நின்றுக் கொண்டிருந்த அபிராமியை கண்டு காரின் வேகத்தை சற்று குறைத்தார்.

காரை சரி செய்ய முயற்சித்துக் கொண்டிருந்தார் அந்த காரின் ஓட்டுனர். இரவு சூழ்ந்து கொண்டிருந்த மாலை பொழுதை கவலையோடு பார்த்துக் கொண்டிருந்தாள் அபிராமி.

"என்னடா மாப்பிள்ளை.. விதி உன் வாழ்க்கையில மட்டும் விடாம விளையாடுது போல.." கேலி செய்தார் அவர்.

கார்த்திக் நிமிர்ந்துப் பார்த்தான். அலைப்பாய்ந்துக் கொண்டிருந்த அபிராமியின் விழிகளையும் கண்டான்.

"வீட்டுக்குத்தான் போறா போல.. பக்கத்துலதான். லிஃப்ட் தரலாமா.?" என்றார்.

"விதி விளையாடுது மாப்பிள்ளைன்னு கமெண்ட் பண்ண பிறகு கேட்கறிங்களே மாமா.. உங்களுக்கே ஓவரா தெரியலையா.?" கிண்டலாக கேட்டான் இவன்.

மேகமானன் அபிராமியின் அருகே காரை நிறுத்தினார்.

"கார் ரெடியாகலையா அபிராமி.?" அக்கறையோடு கேட்டார்.

"மெக்கானிக்கு போன் பண்ணியிருக்கோம் சார்.." என்றார் அந்த காரின் ஓட்டுனர்.

"லேட்டாகும் போல.. வா அபிராமி இந்த கார்ல போகலாம்.." என அழைத்தார் அவர்.

அபிராமி அவரை தாண்டி தெரிந்த கார்த்திக்கின் முகத்தை பார்த்தாள். அவனோ தன் அருகே இருந்த ஜன்னல் வழியே பார்த்துக் கொண்டிருந்தான். இவர்களின் பேச்சில் தனக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்பது போலிருந்தது அவனின் போக்கு.

"ஏம்மா தயங்கற.? நாங்க எந்த கட்சியும் இல்ல.. அதனால நீ விமர்சனத்துக்கு பயப்பட வேணாம்.." என்றார்.

அபிராமி ஓட்டுனரை திரும்பி பார்த்தாள்.

"நீங்க கிளம்புங்க அம்மா.. கார் ரெடியாக நைட் கூட ஆகலாம்.." என்றார்.

அபிராமி தன் கைப்பையை எடுத்து தோளில் மாட்டிக் கொண்டாள்.

"அப்படி லேட்டா ஆகிட்டா நீங்க நேரா வீட்டுக்கு போயிடுங்க அண்ணா.. காலையில் வீட்டுல வந்து என்னை பிக்அப் பண்ணிக்கங்க.." என்றாள்.

ஓட்டுனர் சரியென தலையசைத்தார். அபிராமி மேகமானனின் காரில் வந்து ஏறினாள்.

"புத்தக வெளியீடு நல்லபடியா முடிஞ்சதாம்மா.?" காரை ஓட்டியபடிக் கேட்டார் மேகமானன்.

"நல்லபடியா நடந்துச்சிப்பா.." என்றவள் கார்த்திக்கை கவனித்தாள்.

அவன் இவள் இருப்பதாகவே காட்டிக் கொள்ளவில்லை. இருக்கையில் ஒரு ஓரமாய் சாய்ந்து அமர்ந்திருந்தான். பார்வை வெளியே இருந்தது.

அபிராமி அவனின் அடிப்பட்ட கரத்தை பார்த்தாள்.

"சாப்பிட்டியாம்மா.?" கார்த்திக்கை வெறித்துக் கொண்டிருந்தவள் மேகமானனின் குரலில் திரும்பினாள்.

"அப்பா.." என்றாள் புரியாமல்‌.

"சாப்பிடலாமாம்மா.? மதிய சாப்பாடு சாப்பிடல.. நைட்டும் வந்துடுச்சி.. வயிறு வேற பசிக்குது.." வெட்க குரலில் சொன்னார் அவர்‌‌.

அபிராமி காலையில் இருந்தே சாப்பிடவில்லை. மன குழப்பத்தில் வயிற்று பசியை மறந்து விட்டாள்.

காரை நிறுத்தினார் மேகமானன். யோசனையில் இருந்தவளை திரும்பி பார்த்தார்.

எதிரே இருந்த உணவகத்தை பார்த்தவள் "நீங்க சாப்பிட்டு வாங்கப்பா.. நான் வெயிட் பண்றேன்.." என்றாள்.

கார்த்திக் கதவை திறந்துக் கொண்டு இறங்கினான்.

"அட வாம்மா.. இந்த கடையில் களியும், கறிக்குழம்பும் டேஸ்டா இருக்கும்.." என்றவர் தான் இறங்கிக் கொண்டு அவளுக்கும் கதவை திறந்து விட்டார்.

அபிராமி தயக்கமாக இறங்கி நின்றாள். பசித்தது. உணவகத்தில் இருந்து வந்த வாசனை பசியை பத்து மடங்காக தூண்டி விட்டது.

உணவகத்தின் வரவேற்பறையில் அமர்ந்திருந்தவன் கார்த்தியையும் மேகமானனையும் கண்டுவிட்டு ஓடி வந்தான். அபிராமியை கண்டவன் ஒரு நொடி தயங்கி விட்டு அருகே வந்தான்.

அதற்குள் கார்த்திக் அங்கிருந்த அறை ஒன்றை நோக்கி கிளம்பி விட்டான்.

"வாங்க சார்.." என்ற வரவேற்பாளன் "மேடம்.. நீங்க.." என்றான் குழப்பமாக.

"சாப்பிடதான் வந்திருக்காங்கப்பா.. கலெக்டரா இருந்தா பசிக்காதா என்ன.?" என்றவர் கார்த்திக் சென்றிருந்த அறையை நோக்கி நடந்தார்.

"வா அபிராமி.." என்றார் தயங்கி நின்றிருந்தவளை பார்த்து.

அபிராமி அந்த அறைக்குள் நுழைந்தாள். சிறிய அறை. ஆனாலும் எட்டு பேர் அமர்ந்து சாப்பிடும் அளவிற்கு இடம் இருந்தது. ஓரமாக இருந்த வாஷ்பேஸினில் கையை சுத்தம் செய்துக் கொண்டு சென்று இருக்கையில் அமர்ந்தாள்.

அவளுக்கு முன்னால் இருந்த இருக்கையில் கார்த்திக் ஏற்கனவே அமர்ந்திருந்தான். அவனின் அருகே மேகமானன் அமர்ந்தார்.

"சார் ஆர்டர்.." என்று உள்ளே வந்தார் சர்வர் ஒருவர்.

"உனக்கு என்னடாம்மா வேணும்.?" அபிராமியை பார்த்து கேட்டார் மேகமானன்.

அபிராமி மெனுவை படித்து விட்டு "களி, சிக்கன்.." என்றார்.

மேகமானன் பற்களிடையே உதட்டை கடித்தபடி கார்த்திக்கை பார்த்தார். அவன் கைபேசியில் கவனமாக இருந்தான்.

"மூணு பேருக்கும் களி.. இரண்டு மட்டன்.. ஒரு சிக்கன்.." என்று ஆர்டர் தந்தார்.

சூடாக பரிமாறப்பட்ட உணவை உண்ண ஆரம்பித்த கார்த்திக்கை நொடிகள் தயக்கமாக பார்த்தாள்‌ அபிராமி. பின்னர் பார்வையை மாற்றிக் கொண்டாள்.

முகத்தில் சிறு மாற்றம் கூட இல்லாமல் உணவை உண்டுக் கொண்டிருந்த கார்த்திக்கை சில நொடிகள் நின்று பார்த்தார் மேகமானன்.

சில நாட்களுக்கு முன்பு அவன் சொன்னது இப்போது நினைவுக்கு வந்தது அவருக்கு.

'அவளுக்கு சிக்கன் பிடிக்காது மாமா.. அதுக்காக எங்க வீட்டுல எப்போதும் மட்டன் மட்டும்தான் சமைப்போம்.. அதுக்கு முன்னாடி வரை மட்டன் வாசம் வந்தாலே குமட்டும் எனக்கு.. ஆனா அவளுக்காக மட்டன் சாப்பிட ஆரம்பிச்சேன். இப்ப சிக்கன் பிடிக்கல எனக்கும்.. ஆனா இதுல இன்னொரு விசயம் என்ன தெரியுமா.? அவளுக்கும் உண்மையிலேயே மட்டன்தான் பிடிக்காதாம். ஆனா எனக்கு பிடிக்காததை நான் சாப்பிடணுங்கற ஒரே காரணத்துக்காக இப்படி பொய் சொல்லி இருக்கா.. அவளுக்கும் மட்டன் பிடிக்காதுன்னு ஒருநாள் எதேச்சையா சுவாதி சொல்லிதான் எனக்குமே விசயம் தெரியும்..'

அன்று கார்த்திக் சொல்லும்போது சிரிப்பு வந்தது மேகமானனுக்கு. ஆனால் இப்போதோ மனம் வருந்தியது.

'அவனை பழி வாங்க முயற்சி பண்ணியிருக்கா.. அதுக்காக அவளும் தனக்கு பிடிக்காத உணவை சாப்பிட்டிருக்கா.. விளையாட்டு மாதிரியும் இருக்கு.. வினையாவும் தெரியுது..' கவலைப்பட்டார்.

அபிராமியும் கார்த்தியும் ஒரே நேரத்தில் உணவை முடித்துக் கொண்டு எழுந்தார்கள்.

"வயசான மனுசனை ஒரு எலும்பையாவது கடிக்க விடுறியாடா.?" இலையில் அமர்ந்தபடியே கேட்டார் மேகமானன்.

கையை சுத்தம் செய்துக் கொண்டு வந்து அவர் அருகே அமர்ந்தான் கார்த்திக். எதுவும் பேசாமல் கைபேசியை எடுத்து நோண்ட ஆரம்பித்தான்.

அபிராமி சுவரில் சாய்ந்து நின்றபடியே கார்த்திக்கை பார்த்தாள்.

'நீ கேட்டது இதுதான் அபிராமி.. அவன் உன்னை மறக்கறது, உன்னை கண்டுக்காம இருக்கறது..' என்று மனதுக்குள் ஒரு குரல் சோகமாக சொன்னது.

மேகமானன் உணவை முடித்துக் கொண்டு எழுந்தார். பில்லை கட்டிவிட்டு மூவரும் மீண்டும் பயணப்பட்டனர்.

அபிராமியின் வீட்டின் முன்னால் இருந்த சாலையில் காரை நிறுத்தினார் மேகமானன். அபிராமி இறங்கினாள்.

கார்த்திக்கை தயக்கமாக பார்த்தாள்.

"உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்.." என்றாள்.

கைபேசியை பார்த்தபடி அமர்ந்திருந்தவன் கதவை திறந்துக் கொண்டு கீழே இறங்கி நின்றான்.

"நீங்க போங்க மாமா.. நான் குறுக்கு சந்துல நடந்து வந்துடுறேன்.." என்றான் மேகமானனிடம்.

அவர் சென்ற பிறகு இவள் புறம் திருப்பினான்.

"என்ன பேசணும்.?" என்றான் விருப்பு வெறுப்பில்லாத குரலில்.

"தேங்க்ஸ்.. என் அண்ணன் செஞ்சது தப்பு.. சாரி.. எனக்காக எங்க அண்ணனை மன்னிச்சதுக்கு.." என்றவளை மேலே பேச விடாமல் கை காட்டி நிறுத்தினான்.

"உங்களுக்காக இல்ல.. எனக்கு அப்படி ஒரு அவசியமும் இல்ல.." என்றான் அழுத்தமாக.

இருவரின் POV (இடைச்செறுகலாய் ஒரு கவிதை)

எழுதி எழுதி அழிக்கப்பட்ட கவிதைகள் உனக்காக.!

எழுதாமல் மனதுக்குள்ளேயே கொன்று புதைத்த காதல் நினைவுகள் அனைத்தும் உனக்காக.!

பார்க்கும் நொடிகளில் பேச்சை மறந்து செயலிழந்த எந்திரமாய்
மாறி போனது அனைத்தும் உனக்காக.!

உணர்வுகளை கொன்று புதைத்து வீரநடை போட்டு வாழ கற்றுக் கொண்டது முழுக்க உன்னால்.!

செந்தீயின் இடை நின்றாலும் சில்லென்று தித்திப்போடு சிரித்துக் கொண்டிருக்க பழகியது உன்னால்.!

கிறுக்கல்களின் இடையே கிறங்கி போகாமல் கிழக்கை எதிர்ப்பார்த்து காத்திருப்பது உன்னால்.!

மரமே சாய்ந்தாலும் வேரே காய்ந்தாலும் பூவில் புன்னகை பூத்து சருகியானும் உரமாகியது உன்னால்.!

வானமே கதறுகையிலும் வாசங்கள் அத்தனையும் சுடுகையிலும் அனைத்தும் வரமென்றே நம்பி வாக்கில் மௌனம் வைத்து மரத்து போனது உன்னால்.!

அனைத்தும் உன்னால்.!
நானும் உன்னால்.!
நாசம் அத்தனையும் உன்னால்.!
நலன்கள் அனைத்தும் கூட உன்னால்.!
பைத்தியமாகும் காரணம் உன்னால்.!
பதறி துடித்தாலும் பளிச்சென்று சிரித்திருக்க காரணமும் உன்னால்.!

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN