காதல் கடன்காரா 55

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
கார்த்திக் தனது அலுவலகத்தில் இருந்தான். வேலையில் கவனமாக இருந்தாலும் அபிராமியின் முகமும் பேச்சும் மனதில் படமாக ஓடிக் கொண்டிருந்தது.

அவள் தன்னை விரும்புவதாக தெரியவில்லை. அதே சமயம் வெறுப்பதாகவும் தோன்றவில்லை.

அவளை நம்பி அவள் முன் மண்டியிடவும் தைரியமில்லை. அவள் அருகிலேயே இருந்தாலும் வாழ்க்கை எப்படியோ போகட்டும் என்றெண்ணி அமைதியாய் இருக்கவும் மனமில்லை.

என்ன செய்வது என்று கூட தெரியாமல் குழப்பினான்.

இல்லாத ஒன்றை கற்பனை செய்கையிலும் பயம் வந்தது. இருக்கும் ஒன்றை கை நழுவ விட்டுவிடுவோமோ என்று நினைக்கையிலும் அதே பயம் வந்தது.

இரண்டு நாட்கள் கடந்து விட்டது. அபிராமி வேலைக்கு கிளம்பிக் கொண்டிருந்த அந்த காலை நேரத்தில் அவளின் தந்தை கோபத்தோடு வீட்டில் உலாவிக் கொண்டிருந்தார்.

"என்னப்பா.?" என்றாள் சமையலறை நோக்கி நடந்தபடி.

அவர் பதில் சொல்லாமல் நகத்தை கடித்தார்.

உணவை தட்டில் போட்டுக் கொண்டு வந்து அமர்ந்தாள் அபிராமி.

"என்ன ஆச்சி.?" என்றாள் மீண்டும்.

நாளிதழ் ஒன்றை கொண்டு வந்து அவளின் முன்னால் வைத்தார்.

மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ள அந்த நாளிதழின் இரண்டாம் பக்கத்தில் "சுயேட்சை எம்.எல்.ஏவுக்கும், துணை கலெக்டருக்கும் இடையில் உள்ள சம்பந்தம் என்ன.?" என்ற தலைப்போடு செய்தி ஒன்று வந்திருந்தது. அதில் அபிராமியும் கார்த்திக்கும் மூணு வருடங்களுக்கு முன்னால் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சிலவும் இருந்தன.

"துணை கலெக்டராக இருக்கும் அபிராமி ஐ.ஏ.எஸ்ஸும், சுயேட்சையாக நின்று வெற்றிப்பெற்ற எம்.எல்.ஏ கார்த்திக்கும் பல வருடங்களுக்கு முன்பே லிவிங் டூ கெதராக வாழ்ந்து வந்ததாக தெரிகிறது. இருவருக்கும் இடையில் இன்னமும் அந்த நட்பு தொடர்வதாக சிலர் தெரிவித்து உள்ளனர்.." அபிராமி நாளிதழை மூடினாள்.

நாளிதழை ஓரமாக ஒதுக்கி வைத்துவிட்டு உணவை உண்ண ஆரம்பித்தாள்.

"எல்லாம் உன்னால வரதுதான்.. மதியை கட்டிக்க சம்மதம் சொல்லியிருந்தா இப்படியெல்லாம் நியூஸ் வருமா.?" என்றார் கோபமாக.

"உங்களுக்கு இது ஒரு சாக்கு.. அதுக்காக நான் கல்யாணம் பண்ணிக்க முடியுமா.? எவனோ வேலை இல்லாதவன் இந்த மாதிரி நியூஸை பரப்பி விட்டிருக்கான். இதுக்கு நான் என்ன பண்ண முடியும்.?" என்றவளை கோபம் தீராமல் பார்த்தார் அப்பா.

"உன் மனசுல என்னதான் நினைச்சிட்டு இருக்கன்னு தெரியல அபிராமி.." என்று கடிந்துக் கொண்டார்‌‌.

கார்த்திக் நாளிதழை கசக்கி தரையில் எறிந்தான்.

"அதுல ஒன்னும் பொய் இல்லையே.." என்றபடி நாளிதழை கையில் எடுத்தார் மேகமானன்.

"மாமா.. புரிஞ்சிக்காம பேசாதிங்க.. இப்படி செய்தி பரவினா அபிராமியோட லைஃப் பாதிக்கப்படும்.." என்றான் பற்களை கடித்தபடி.

"இதென்னடா வம்பா இருக்கு.? அபிராமி லைஃப் ஏன் வீணாகுது.? டைவர்ஸ் வாங்கிட்ட ஒரு பொண்ணு கலெக்டர் ஆக கூடாதா.? இல்ல டைவர்ஸ் வாங்கிட்ட ஒரு பையன் எம்.எல்.ஏ ஆக கூடாதா.?" என்றார் கேலியாக.

"இப்ப இவ இதை நான்தான் செஞ்சேன்னு நினைச்சிட்டு இருப்பா.."

மேகமானன் சிரித்தார்.

"அவ நினைப்பை பத்தி உனக்கு என்ன கவலை.? பெண் விவகாரத்துல சிக்கிய முக்கிய புள்ளின்னு ஒரு மாசத்துக்கு உன் போட்டோதான் டிவியிலும் பேப்பரிலும் இருக்கும்.. அடுத்த எலெக்சனுக்கு கட்சியை விரிவுப்படுத்திடலாம்டா.. குறைஞ்சது பத்து இடத்தையாவது பிடிக்கலாம்.."

கார்த்திக் சந்தேகமாக அவரை பார்த்தான்.

"அரசியல் யுக்தின்னு நினைச்சி ஒரு வேளை நீங்கதான் இப்படி நியூஸ் தந்திங்களா.?"

மேகமானன் மறுப்பாக தலையசைத்தார்.

"இல்லடா மாப்பிள்ளை.." என்றார்.

கார்த்திக் செய்தி தந்தது யாரென்று செய்தித்தாள் வெளியிட்ட ஆசிரியரிடம் விசாரித்தான். அவர்கள் செய்தி தந்தவர்களை பற்றி விசயம் சொல்ல மறுத்து விட்டார்கள்.

"யாரோ நம்ம ஆள்தான் மாமா.. இல்லன்னா நியூஸ் வெளியே போயிருக்காது.." என்றான் போன் இணைப்பை துண்டித்துக் கொண்ட பிறகு.

"கண்டுபிடிக்கலாம்டா மாப்பிள்ளை.." என்ற மேகமானன் "ஆனா இதுல என்னடா போகுது.? இதெல்லாம் மேட்டர்ன்னு பீல் பண்ணிட்டு இருக்க.?" என்றார் அசட்டையாக.

"உங்களுக்கு சீரியஸ்னெஸ் தெரியல.." என்றவன் தன் அண்ணனுக்கு போன் செய்து விசயத்தை விசாரிக்க சொன்னான்.

அலுவலகத்தில் தினம் போல் வேலைகளை பார்த்தாள் அபிராமி. அலுவல் வேலையாக அவளை தேடி வந்த அனைவரும் அவளை ஒரு மாதிரியாக பார்த்துவிட்டு சென்றார்கள்.

யாரின் பார்வையையும் அவள் பெரிதாக கண்டுக் கொள்ளவில்லை.

மாலை நேரத்தில் வீட்டுக்கு சென்றுக் கெண்டிருந்தவளின் முன்னால் வந்து நின்றது ஒரு பைக். காரின் டிரைவர் வண்டியை நிறுத்தினார். பேக் ஒன்றை தோளில் மாட்டிக் கொண்டிருந்த இளைஞன் ஒருவன் பைக்கிலிருந்து இறங்கி ஓடி வந்தான்.

"மேடம் ஒரு நிமிசம்.. நான் தினவாசகன்ல இருந்து வரேன்.. ஒரு பேட்டி எடுக்கணும்.." என்றான்.

காரின் ஓட்டுநர் காரை இயக்கினார்.

"இருங்க அண்ணா.." என்றாள் அபிராமி.

"வீட்டுக்கு வாங்க.. பேட்டி தரேன்.." என்றாள்.

"தேங்க்ஸ் மேடம்.." முகமெல்லாம் சிரிப்பாக சொன்னவன் ஓடிச்சென்று தன் பைக்கை எடுத்தான்.

அபிராமி வீட்டின் முன் இறங்கினாள். வீடு பூட்டி இருந்தது. அப்பா எங்கேயோ சென்றிருக்கிறார் என்பதை புரிந்துக் கொண்டவள் தன்னிடமிருந்த சாவியால் வீட்டை திறந்தாள்.

கைப்பையை வைத்துவிட்டு வெளியே வந்தவள் வீட்டின் வாசலில் இருந்த இருக்கையில் அமர்ந்தாள்.

செய்தி சேகரிப்பாளன் கேட்டை திறந்து உள்ளே வந்தான்.

"வணக்கம் மேடம்.." என்றான்.

"உட்காருங்க.." எதிரே இருந்த இருக்கையை கை காட்டியவள் மேஜையில் இருந்த தண்ணீர் பாட்டிலை அவனருகே நகர்த்தி வைத்தாள்.

தண்ணீரை குடித்துவிட்டு பாட்டிலை வைத்தவன் "தேங்க்ஸ் மேடம்.." என்றான்.

அபிராமி வெறுமனே புன்னகைத்தாள்.

தன் பேக்கிலிருந்த கேமரா ஸ்டேன்ட் ஒன்றை எடுத்தவன் அதை அரையாள் உயரத்திற்கு பிரித்தான். கையடக்க வீடியோ கேமரா ஒன்றை அதில் பொருத்தி தாங்கள் அமர்ந்திருந்த இடத்தின் அருகே வைத்தான்.

"சாரி மேடம்.. எங்க பத்திரிக்கை அவ்வளவா பேமஸ் இல்ல.. அதனால்தான் நானே கேமராமேனாவும், செய்தி தொகுப்பாளனாவும் வர வேண்டியதா போச்சி.." என்றான்.

'எல்லாருமே எடுத்தவுடனே ராக்கெட் ஓட்டியது போலவும், இவங்க மட்டும் தவழ்ந்து எழ கத்துக்கிட்டது போலவும் பேசுறாரு..' என நினைத்தவள் அதை வெளியே சொல்லவில்லை.

"மைக் மேடம்.." என்றவன் சிறு மைக் ஒன்றை அவளிடம் தந்தான். அவளே வாங்கி கழுத்தின் கீழ் புடவை பகுதியில் பொருத்திக் கொண்டாள்.

"எம்.எல்.ஏ கார்த்திக் முருகனுக்கும் உங்களுக்கும் நடுவுல எத்தனை வருட பழக்கம் மேடம்.?" என்றான் அவன்.

"எட்டு வருசத்துக்கு மேல அவரை எனக்கும் எங்க பேமிலிக்கும் தெரியும். என் அண்ணாவோட பிரெண்ட் அவரு.. எங்களுக்குள்ள பழக்கம்ன்னா இடையில் ஒரு வருசம் மட்டும்தான்.." என்றாள்.

அவன் ஆச்சரியத்தோடு பார்த்தான் இவளை.

"நீங்க இரண்டு பேரும் லவ்வர்ஸா.?" தயக்கமாக கேட்டான் அவன்.

அபிராமி ஆமென தலையசைத்தாள்.

"நாலு வருசம் முன்னாடி லவ் பண்ணிட்டு இருந்தோம். கல்யாணமும் பண்ணிக்கிட்டோம். ரெஜிஸ்டர் பண்ணல. ஆனா ஒரே வருசத்துல எங்களுக்குள்ள செட் ஆகாதுன்னு புரிஞ்சிக்கிட்டு பிரிஞ்சிட்டோம்.." என்றாள்.

எதிரில் இருந்தவன் இன்னும் அதிகமாக அதிர்ந்து போனான்.

"மேரேஜ் ஆயிடுச்சா.?" என்றான்.

அபிராமி சிரித்தாள். "அதைதான் முன்னாடியே சொன்னேன் நான்.." என்றாள்.

"ஏன் பிரிஞ்சிக்கன்னு தெரிஞ்சிக்கலாமா.?" சிறு குரலில் எதிர்பார்ப்போடு கேட்டான் அவன்.

"செட் ஆகல.. அதான்.."

"நீங்க இன்னமும் பழகிட்டு இருப்பதாக எல்லாரும் சொல்றாங்களே.."

"நட்பின் ரீதியாக பழகலாம். இது கூட இந்த சமுதாயத்துல தவறா.?" சந்தேகமாக கேட்டாள்.

"இல்ல மேடம்.." என்றவன் மேலும் சில கேள்விகளை கேட்டான்.

அபிராமி பதில்களை சொன்ன பிறகு அங்கிருந்து கிளம்பினான்.

அமர்ந்த இடத்திலிருந்தபடி தலைக்கு மேல் இருந்த மல்லிக் கொடியை பார்த்தாள். வீசிய காற்றில் ஒவ்வொரு பூக்களாக கீழே விழுந்தன. கையில் விழுந்த பூக்களை பார்த்தபடி நேரத்தை கடத்தினாள்.

பத்து நிமிடங்கள் கடந்த நேரத்தில் முத்தமிழும், அப்பாவும் வீடு வந்தார்கள்.

அபிராமி அண்ணனை ஆச்சரியமாக பார்த்தாள். அவன் இவளை முறைத்துவிட்டு வீட்டுக்குள் நுழைந்தான்.

அப்பா இவள் முன் அமர்ந்தார்.

"உன் கிளாஸ்மேட் மாணிக்கம்தான் இந்த விசயத்தை வெளியே பரப்பி விட்டிருக்கான். சுவாதி அப்பாவோட கட்சிக்கு எதிர்கட்சியை சேர்ந்தவனாம். சுவாதியோட அப்பாவாலதான் இந்த முறை இந்த தொகுதியில் அவங்க கட்சி தோத்துடுச்சின்னு பழிவாங்க இந்த நியூஸை பரப்பி விட்டிருக்கான்.." என்றார் அவர்.

"அவனை என்ன பண்ணிங்க.?" பயத்தோடு கேட்டாள் அபிராமி. முன்பை போல யோசிக்க இயலவில்லை. அடி தடியும், வெட்டுக் குத்தும் சகஜம் என்று எண்ண முடியவில்லை. அது கெத்து இல்லை என்பதைப் புரிந்துக் கொண்டாள். ஏதோ ஒரு வகையில் தன் அண்ணன் முரடனாகியதற்கு தானும் ஒரு காரணம் என்று எண்ணி வருந்தினாள்.

"தமிழ் அவனை மூர்த்திக்கிட்ட ஒப்படைச்சிட்டு வந்துட்டான்.. அவங்க பிரச்சனை. அவங்களே தீர்க்கட்டும்.." என்றார் அப்பா.

அபிராமிக்கு இதயத்தின் படபடப்பு சற்று குறைந்தது.

அன்று இரவு முத்தமிழ் அங்கேயேதான் தங்கினான். அபிராமி அவனோடு பேச முயன்றாள். ஆனால் அவன் விலகி சென்றான்.

இரவு உணவை சாப்பிட்ட பிறகு தனியாக இருந்த அறை ஒன்றிற்குள் புகுந்தான் முத்தமிழ். அபிராமி உள்ளே வந்தாள்.

"மரியாதையா வெளியே போ‌.." என்று தலையணையை தூக்கி வீசினான் அவன்.

"இன்னும் சின்ன பையன்னே நினைப்பா.?" என கேட்டவள் தலையணையை கொண்டு வந்து கட்டிலில் வைத்தாள்‌.

"ஏன் கோபம்.? நானா சுயமா வளர்ந்து நின்னா உனக்கு பிடிக்காதா.? உனக்கு பெருமையா இருக்காதா.?" என்றாள் அவனருகே அமர்ந்தபடி.

கட்டிலின் மறுமூலையில் சென்று அமர்ந்தான் முத்தமிழ்.

"அவன் கால்ல நீ விழுறது எனக்கு பிடிக்கல.." என்றான் எரிச்சலாக.

அபிராமி சிரித்தாள். "நான் எப்ப அவன் கால்ல விழுறதா சொன்னேன்.?' என்றாள்.

"பின்ன அவனே உன்னை ஏத்துப்பானா.?" திரும்பி பார்த்துக் கேட்டவனை குழப்பமாக பார்த்தவள் "அவன் ஏன் என்னை ஏத்துக்கணும்.? நான் அவனை லவ் பண்றேன்தான்.." என்றவளை ஆத்திரத்தோடு பார்த்தான் முத்தமிழ்.

"ஆனா இது நீ நினைக்கற லவ் கிடையாது. நான் அவனை கல்யாணம் பண்ணிக்க விரும்பல. அவன்கிட்ட உன்னை நான் விரும்புறேன்னும் சொல்ல விரும்பல. எங்கேயாவது எப்போதாவது ஒரு காதலனை கற்பனை பண்ணிக்க வேண்டிய அவசியம் வந்தா அவனை அந்த இடத்துல கற்பனை செய்வேன்‌. அவ்வளவுதான். எனக்கு அவன் துணை வேணாம். அவனுக்கும் என் துணை வேணாம். ஏன் லவ்வு, எதுக்கு இந்த லவ்வுன்னு விளக்க முடியாது அண்ணா.. நான் இதை அவன்கிட்டயும் சொல்ல விரும்பல.." என்றாள்.

"உன் வாழ்க்கை நாசமா போயிட்டு இருக்கு அபிராமி. அது உன்னாலதான்.!" என்று எரிச்சல்பட்டவன் கட்டிலில் குப்புற விழுந்தான்.

அபிராமி அவனின் தலையை வருடினாள். கையை தட்டி விட்டான் முத்தமிழ். அவன் தலையில் கொட்டு ஒன்றை வைத்தவள் எழுந்து வெளியே நடந்தாள்.

"பிசாசு.." என்று கத்தினான் அவன்.

அபிராமி அன்று இரவு சிரித்தபடியே உறங்கினாள்.

மறுநாள் அதிகாலையில் பக்கத்திலிருந்த பூங்காவில் நடைப்பயணம் செய்துக் கொண்டிருந்தவளை கோபத்தோடு வந்து நிறுத்தினான் கார்த்திக்.

"என்ன பண்ணி வச்சிருக்க நீ.?" என்றான் செல்போனை காட்டி. அதில் அவள் நேற்று தந்த பேட்டி வெளியாகி இருந்தது.

"தானா முடியற விசயத்துக்கு பேட்டி தந்து விளக்கேத்தி வச்சிருக்க.." என்றான் கோபத்தோடு.

"நான் ஒன்னும் பிரச்சனை ஆகற மாதிரி சொல்லலையே.! இரண்டு ஊருக்கு மட்டும் தெரிஞ்சது இப்ப எல்லோருக்கும் தெரிய போகுது..!' என்றாள்.

"உன் வாழ்க்கைதான் வீணாகும்.. சாதாரண டைவர்ஸ்க்கும், உலகம் அறிஞ்ச டைவஸ்ர்க்கும் நடுவுல வித்தியாசம் இருக்கு. ஊர்ல நமக்கு தெரிஞ்சவங்க மட்டும் நம்மை உறுத்து பார்க்கறதுக்கும், இப்ப உலகமே உறுத்து பார்க்கறதும் வேற வேறதான். உன்னை இனி எல்லாரும் ஒரு மாதிரி பார்ப்பாங்க.. உனக்கு இதான் பிடிச்சிருக்கா.?" என்றான்.

அபிராமி‌ கைகளை கட்டினாள். புருவம் உயர்த்தி அவனை பார்த்தாள்.

"யார் என்னை எப்படி பார்த்தா உனக்கு என்ன.? ஏற்கனவே நாசமான வாழ்க்கை இனி என்ன ஆனா என்ன.?" என்றாள்.

கார்த்திக் நெற்றியை பிடித்தான்.

"முடிஞ்ச விசயத்தை மறுபடியும் பேசிட்டே இருப்பியா.?" என்றான்.

"சில விசயங்கள் எல்லா கோணத்திலும் ஒரேடியா முடியறது கிடையாது கார்த்தி.." பற்களை அரைத்தபடி சொன்னவளை குழப்பமாக பார்த்தான்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN