காதல் கடன்காரா 57

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
கார்த்திக் யோசனையோடு அமர்ந்திருந்தான். அபிராமி வாசற்படியில் நின்றுச் சொன்னது மனதிற்குள்ளேயே சுழன்றுக் கொண்டிருந்தது.

"உன்னை அவ்வளவு பிடிச்சிருக்கு கார்த்தி..‌‌ ஆனா அதே அளவுக்கு என் மேலயே எனக்கு கோபமும் இருக்கு. இது எல்லாம் வேற மாதிரி இருந்திருக்க கூடாதோன்னு ஆசையா இருக்கு. என் அண்ணனுக்கு அத்தனை வருசம் நண்பனா இருந்த நீ.. எத்தனையோ நாள் எங்க வீட்டுக்கு வந்த.. ஒரு நாள் என்னை பார்த்து சிரிச்சிருக்க கூடாதா.? அந்த டைம்ல வந்து என்கிட்ட காதலிக்கிறேன்னு ஒரு வார்த்தை சொல்லி இருக்க கூடாதா.? பர்பெக்ட் நீ எனக்கு.. ஆனா பர்பெக்ட்டுக்கு நடுவுல இருக்கற பேரியரைதான் விலக்கி தள்ள முடியல..

என் பிரெண்ட் ஒருத்தி கேட்டா, 'உன் அம்மாவுக்கும் உனக்கும் செட் ஆகல.. ஆனா அதுக்காக நீ அவங்களை ஒதுக்கி வைக்க முடியாது. இதே மாதிரி குடும்ப சொந்தங்களோடு எவ்வளவு சண்டை‌ வந்தாலும் அட்ஜஸ்ட் பண்ணி போவ நீ.. ஆனா காதலன்கிட்ட மட்டும்தான் ஈகோ பார்ப்பன்னு.! நீ என் காதலன் இல்ல கணவன் இல்லன்னு நானும் ரொம்ப தைரியமா வெளியே சொல்லிட முடியும். ஆனா மனசை ஏமாத்ததான் தெரியல. உனக்கும் எனக்கும் நடுவுல சொல்ல முடியாத, தைரியமா வெளியே ஒத்துக்க முடியாத ஒரு கனெக்சன் இருக்கு. அதை இரண்டு பேராலயுமே மறுக்க முடியாது.. விதி மேல கோபம். கடவுள் மேல் கோபம். உன் மேல கோபம். என் மேலயும் கோபம். தற்கொலையையும், தனி இடம் தேடி ஓடிப் போவதையும் தவிர வேற வழியே இல்லையான்னு மனசு கேட்குது.." என்றவள் கலங்கும் விழிகளை துடைத்தாள்.

"டிரெயின்ங்கல இருக்கும்போது உன்னை பத்தி என் பிரெண்ட் ஒருத்திக்கிட்ட சொன்னேன். அவ சொன்னா 'உன்னை போலதான் எங்க அம்மாவும். எங்களோடது ஏழ்மையான குடும்பம். என் அப்பாவோடு சேர்ந்து போராடினாங்க. வறுமையிலிருந்து மீண்டு வர உயிரை உருக்கி உழைச்சாங்க. எங்களோட வீட்டுல ஒவ்வொரு செங்கலிலும் எங்க அம்மாவோட கை ரேகை இருக்கும். எங்க வீட்டுல உள்ள செல்ப்ல இருந்து தரை வரை அனைத்தும் அவங்களுக்கு சவுகரியமான மாதிரி மாத்தினாங்க. ஆனா வீடு குடிப்புகுந்த அடுத்த ஆறாம் மாசமே ஆக்ஸிடென்ட்ல செத்துட்டாங்க.. அவங்க பார்த்து பார்த்து கட்டிய வீட்டையும், எங்க அப்பாவோட காதலையும், என் அன்பையும் அவங்க கடைசி வரை அனுபவிக்கவே இல்லை. அவங்களை போலதான் நீயும். உனக்கேத்த மாதிரி ஒருத்தனை மாத்திட்டு விட்டுட்டு வந்துட்ட.. எப்படிப்பட்ட சவுகரியத்தை வீண் பண்ணிட்டு வந்திருக்க.. இங்கே மிக பெரிய வறுமை காதலாதான் இருக்கும். இங்கே திகட்ட திகட்ட காதலிப்பவங்களும், விரட்ட விரட்ட அன்பை தருபவங்களும் சொச்சம் பேர்தான் இருக்காங்க. உன் வசதிக்கு ஏத்த, உன் அழகுக்கு ஏத்த, உன் அறிவுக்கு ஏத்த ஒருத்தரை உன்னால தேடி பிடிக்க முடியும். ஆனா உன் காதலுக்கு ஏத்த ஒருத்தரை தேடி பிடிக்க முடியாது'ன்னு.!

எல்லாம் இருந்தும் ஏதுமற்ற மனசோடு நிற்க வைக்க இந்த காதலால மட்டும்தான் முடியும் போல. உன்னை பழி வாங்க நான் யூஸ் பண்ண அதே காதல் என்னையும் பழி வாங்கும்ன்னு கனவுல கூட நினைச்சி பார்க்கல கார்த்தி.." என்றவள் அத்தோடு கிளம்பி விட்டாள்.

அவள் சென்ற பிறகும் அவள் சொல்லி சென்றதையே யோசித்தபடி அமர்ந்திருந்தவன் நேரம் சென்றுக் கொண்டிருப்பதை கூட பார்க்கவேயில்லை.

அன்றும் செய்தி சேனல்களிலும், பேப்பர்களிலும் அபிராமி தந்த பேட்டிதான் ஓடிக் கொண்டிருந்தது. இவர்கள் முன்னாள் கணவன் மனைவி என்பதை புது அணு ஆயுதம் கண்டறிந்தது போல நினைத்து செய்தியை ஆச்சரியத்தோடு வாசித்துக் கொண்டிருந்தார்கள்.

'ஏன் காதல் வருகிறது, எப்படி காதல் வருகிறது என்று தெரிந்திருந்தால் இந்த நாட்டில் பல தற்கொலைகள் தடுக்கப்பட்டிருக்கும்' என்று நினைத்தபடி தனது கையிலிருந்த மாத்திரைகளை பார்த்தாள் அபிராமி. மாலை பொழுதில் இருண்டு கொண்டிருந்த அறையில் விளக்கை கூட ஏற்றி வைக்க தோன்றவில்லை அவளுக்கு.

"அபிராமி.." என்றபடி அவள் அறையின் கதவை திறந்தான் முத்தமிழ். விளக்கின் ஸ்விட்சை தட்டியவன் அவளை உறுத்து பார்த்தான். அவள் அருகே வந்தான். அவள் கையிலிருந்த இரண்டு மாத்திரைகளை தன் கையில் எடுத்தவன் "இது என்ன.?" என்றான்.

"தலைவலி மாத்திரை அண்ணா.." என்றவள் அவனின் கையிலிருந்த மாத்திரைகளை எடுக்க முயன்றாள். கையை பின்னுக்கு இழுத்தவன் ஒற்றை மாத்திரையை மட்டும் அவளிடம் தந்தான்.

"ஓவர் டோஸ் போட்டுக்காத.." என்று எச்சரித்தான்.

சரியென தலையசைத்து விட்டு கையிலிருந்த ஒற்றை மாத்திரையை விழுங்கினாள்.

"ஹாஸ்பிட்டல் போகலாமா.?" எனக் கேட்டான்.

மறுப்பாக தலையசைத்தாள்.

"சாரி.." என்றான் சில நொடி தயக்கத்திற்கு பிறகு.

"ஏன்.?" கட்டிலில் அமர்ந்த வண்ணம் கேட்டாள். தலை வேறு அதிகமாக வலித்தது.

"அன்னைக்கு மதியை கல்யாணம் பண்ணிக்க சொல்லி உன்னை திட்டிட்டேன். சாரி. உன் வாழ்க்கையில் உன் டிசிசன் எவ்வளவு முக்கியம்ன்னு எனக்கும் தெரியும்.. நான்தான் இந்த அம்மா பாட்டி சவாலால கொஞ்சம் கடுப்பாகிட்டேன்.." என்றான்.

அபிராமி குழப்பத்தோடு அவனை பார்த்தாள்.

"என்ன சவால்.?"

நடந்ததை விவரித்தான் முத்தமிழ்.

அபிராமி சிரித்தாள். சிரித்தால் கூட தலை விண் விண்ணென்றது. உடனே தலையை பிடித்துக் கொண்டாள்.

"வா.. நான் நெத்தியை பிடிச்சி விடுறேன்.." என்றழைத்தான் அவன்.

அபிராமி தரையில் இறங்கி அமர்ந்தாள். அவனின் மடியில் தலை சாய்த்தாள். அவளின் நெற்றியில் இரு கட்டை விரல்களையும் வைத்து மெள்ள மெள்ள அழுத்தினான். தலைவலி மட்டு படுவது போல இருந்தது.

"அம்மாவும் பாட்டியும் மட்டும் அப்ப பிரஷர் தராம இருந்திருந்தா நான் ஊரை விட்டே போயிருக்க மாட்டேன் தெரியுமா.?" என்றாள் கண்களை மூடியபடி.

"ம். தெரியும்.." என்றான்.

"இப்பவும் அவங்க தன் டிமான்டால எனக்கு கோபத்தை மட்டும்தான் தராங்க. டிமான்ட் பண்ணாம இருந்திருந்தா கூட அவனோடு செட்டில் ஆகியிருப்பேன்.." என்றாள் சிரித்தபடி. ஆனால் அவளின் மூடிய விழிகளில் இருந்து கண்ணீர் வழிந்தது.

"உன் ஈகோவை அவங்க தூண்டி விட்டுட்டாங்க, கார்த்தியும்தான்.! உன் காலேஜ்க்கு வந்து சீன் காட்டாம, நம்ம வீட்டுக்கு டிரைவர்ன்னு வந்து டார்ச்சர் பண்ணாம இருந்திருந்தா நீயே மூணு மாசத்துல அவனை தேடிப்போய் 'ஏன்டா டேய், பொண்டாட்டி உன்னை வேணாம்ன்னு சொல்லிட்டு போனா.. அத்தோடு விட்டுடுவியான்னு கேட்டு அவனை நாலு மிதி மிதிச்சிட்டு சேர்ந்து வாழ்ந்திருப்ப.." என்றான் சிரிப்போடு.

அபிராமியின் முகத்தில் புன்னகை தவழ்ந்தது. அப்படி ஒன்று நடந்திருக்குமா என்று யோசித்து பார்த்தாள்.

"ஆனா ஆணா ஒன்னு கேட்கட்டா.?" என கேட்டவனுக்கு மொத்தமாக தலையசைத்து சம்மதம் சொன்னாள்.

"ஒருத்தன் தன் காதலியை சுத்தியே வராம எப்படி காதலை வெளிப்படுத்த முடியும்.?" குழப்பமாக கேட்டான்.

அபிராமி சிரிப்போடு அவனை திரும்பி‌ பார்த்தாள்.

"நீ எவளுக்காவது ரூட் விடுறியா.?" என்று கேலியாக கேட்டாள்.

மறுப்பாக தலையசைத்தவன் அவளின் கழுத்தை திருப்பினான். மீண்டும் நெற்றியை பிடித்து விட ஆரம்பித்தான்.

"அவன் என்னை தொடர்ந்து வந்து டார்ச்சர் பண்ணதுதான் தப்பு. டைம் தரவே இல்ல அவன். அதான் அந்த கடுப்புல நானும் அவனுக்கு டைம் தரல.." என்றாள் சிரிப்போடு.

"கடைசியில இரண்டு பேருமே வாழ்க்கையை நாசம் பண்ணிக்கிட்டிங்க.." என்றவனை சந்தேகமாக பார்த்தவள் "நீ ஏன் இப்ப திடீர்ன்னு அவன் காதலுக்கு சப்போர்ட் பண்ற.. நேத்து வரை அவனை திட்டிட்டுதானே இருந்த..?" எனக் கேட்டாள்.

"இது அப்படி இல்ல.. நான் அவனுக்கு சப்போர்ட் பண்ண வேண்டிய அவசியமே கிடையாது. ஐ லவ் யூ.. சோ உனக்கு என்ன பிடிச்சிருக்கோ அதுதான் எனக்கும் எங்களுக்கும் பிடிக்கும்.. இது ஒரு சுயநல லவ்.. சுய சிந்தனை கூட இல்லாம பண்ணிடும் லவ்.. ஆனாலும் இந்த லவ் ஒரு அடிக்சன் இல்லையா.. அதான் நானும் அடிக்ட் ஆகிட்டேன்.." என்றான்.

தங்கையின் நெற்றியை பிடித்து விட்டுக் கொண்டிருந்தவன் அவளின் உடல் குலுங்குவது கண்டு குழம்பி போனான். அவளை தன் பக்கம் திருப்பினான். முகத்தை மூடியபடி அழுதுக் கொண்டிருந்தாள்.

"அபிராமி.." அதிர்ச்சியாய் அவளை பார்த்தவனுக்கு அவளின் அழுகையின் காரணம் சரி வர தெரியவில்லை.

"ஏன் அண்ணா இவ்வளவு பாசம் காட்டுறிங்க.?" என கேட்டபடி அவன் வலதுக் கால் தொடையில் தலை சாய்த்தாள்.

"ஏன் பாசம்.? அளவுக்கு அதிகமான பாசம். மூணு வருசம் உங்க பக்கத்துல இல்லாம நரகமாவே இருந்துடுச்சி. நீங்களும் நார்மலா இருந்திருந்தா நானும் நார்மலா எவனையாவது கல்யாணம் பண்ணிக்கிட்டு நிம்மதியா இருந்திருப்பேன். ஆனா பாழாப்போன கார்த்தி எந்த நேரத்துல இடையில வந்தானோ.? எல்லாமே மாறிப்போச்சி. ஒப்பீடு பண்ண வச்சிட்டான். ஈஸ்வர் கூட இருந்திருந்தா வாழ்ந்திருப்பேன். ஆனா இவனை பைத்தியமா நினைக்கிற மாதிரி விரும்பியிருப்பேனான்னு தெரியல. டிராக்கை மொத்தமா மாத்திட்டான். என் மூளைக்குள்ள விசத்தை விதைச்சிட்டான். சுயநலமா மட்டும்தான் யோசிக்க தோணுது அண்ணா.. காதலிக்காக எத்தனை வருசம் ஆனாலும் தனியா வாழுறவங்க சொற்பம். அதுல ஒன்னா இவன் இருக்கான். ஏன் அண்ணா இருக்கான்.? எனக்கு நல்ல பையனா பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிறேன்னு சொல்றான் அண்ணா.. ஏன் அண்ணா இப்படி சொல்றான்.?" என்று அழுதபடியே கேட்டாள்.

"ஏனா அவனுக்கு தெரிஞ்சிருக்கு.. நீதான் அவனோட நாயகின்னு.!" என்றவன் அவளின் முதுகை வருடி விட்டான்.

"நீ நினைக்கிற அளவுக்கோ அழுகுற அளவுக்கோ ஒன்னும் மேட்டர் இல்ல.. கட்டாய தாலிக்கு ஒரு வருசம் கூட இருந்தும், விடாம டார்ச்சர் பண்ணதுக்கு மூணு வருசம் தனியா தவிக்க விட்டும் தண்டனை தந்துட்டேன். இனி உனக்கு மன்னிப்பு தரேன்டான்னு சொல்லிடு.. அவன் ஓகே சொல்லலன்னா நான் வேணா அவன் கை காலை உடைச்சி இழுத்துட்டு வந்துடுறேன்.." என்றான்.

இன்னும் அதிகமாக அழுதாள்.

"என் மனசுக்குள்ள மலையளவு கட்டி வச்சேனே ரோசத்தை. அது அத்தனையும் தவிடு பொடியாகிடுமே அண்ணா.." என்றாள் அழுகையின் இடையே.

அவளின் உச்சந்தலையில் முத்தமிட்டான் முத்தமிழ். அவளின் அழுகை காணுகையில் அவனுக்கும் நெஞ்சம் பிசைந்தது. அண்ணனுக்கு சிறு பாதிப்பு என்றதும் தன்னை மறந்து, தன் நிலையை யோசிக்க பயந்து, அடுத்த நொடியில் நிகழ இருக்கும் துன்பம் அறிந்தும் கார்த்தியோடு புறப்பட்ட அவளின் பாசத்தை நினைக்கும் போதெல்லாம் அவனுக்குள் நெஞ்சம் நெகிழ்ந்துக் கொண்டேதான் இருந்தது.

அவளின் மனதில் உள்ள ரோசத்தின் அளவு அவனுக்கும் தெரியும். ஆனால் அதை விட ஆயிரம் மடங்கு பாசத்தை அவள் மீது வைத்திருந்தான் முத்தமிழ். ஒற்றை துளி கண்ணீர் கூட இவள் சிந்தி விட கூடாது என்பதற்காகவே அவளின் அத்தனை ஆசைகளுக்கும், விளையாட்டுக்களுக்கும், குறும்புகளுக்கும், சண்டைகளுக்கும், பழி வாங்கல்களுக்கும் அவளின் நிழலாய் உடன் நின்றான்.

அவளின் அத்தனை போராட்டமும் நடந்து முடிந்த கடைசி நேரத்தில் இப்படி அழுவாளென்று அவன் எதிர்பார்க்கவே இல்லை.

"நான் அவன் கையை உடைச்சி விட்டுடட்டா.? பிறகு வேணா கருணைன்னு சொல்லி அவனை ஏத்துக்கலாம்.." என்றவனை நிமிர்ந்து பார்த்தவள் "உனக்கு ரோசம் இல்லையா அண்ணா.?" என்றாள்.

அவளின் முகம் எல்லாம் கண்ணீராகவே இருந்தது. துடைத்து விட்டான்.

"உன் மேல நான் வச்ச பாசத்தை இவ்வளவு மோசமாவா நினைச்சிட்ட.? உன் பாசத்துக்காக, உனக்காக எத்தனை சண்டை, பகை, அவமானம் வந்தாலும் இந்த அண்ணன் தாங்குவேன். நான் சொல்றது சினிமா பாணியா கூட தெரியலாம். ஆனா என் பாசம் என்னன்னு எனக்குத்தான் தெரியும். அதை விவரிக்க வார்த்தைகள் இல்ல.. ஒரே ஒரு முறை பிறந்திருக்கேன் நான். எனக்கு துணையா, தோழியா, சில நேரத்துல தாயா, மகளா கூட நீ இருந்திருக்க.. என் மனசுக்குள்ள உள்ள உன் சிறப்பு என்னன்னு எனக்கு மட்டும்தான் தெரியும் அபிராமி.." என்றான்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN