காதல் கடன்காரா 58

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
மூர்த்தியை தேடி வந்தான் ஈஸ்வர். அவனின் கையில் அன்றைய நாளிதழ் இருந்தது.

மூர்த்தியும் அப்போதுதான் காவல் நிலையத்திலிருந்து திரும்பி வந்திருந்தான்.

"என்ன நடக்குது இவங்களுக்குள்ள.?" என்றான் ஈஸ்வர் செய்தித்தாளை கை காட்டி.

"கார்த்தி ஜெயிச்சது பிடிக்காம பழைய விசயத்தை திரிச்சி விட்டுட்டான் ஒருத்தன். அதுதான் இப்ப புது நியூஸ் மாதிரி பேசிட்டு இருக்காங்க.." என்று பதில் சொன்னான்.

"இவன்தான் இவ்வளவு உருகுறானே அவ ஏத்துக்கிட்டா ஆகாதா.? அதுதான் மூணு வருசமா அலைய விட்டுட்டா இல்ல.?" என்றான் ஈஸ்வர் கோபத்தோடு.

"சொரணை கெட்டவன் தம்பி. பிடிவாதம் பிடிச்சவ அவ. அவங்க சேர்ந்தா என்ன சேரலன்னா என்ன.?" ஏனோதானோவென்று பதில் சொன்ன மூர்த்தியை ஆச்சரியமாக பார்த்தான் ஈஸ்வர்.

"அதுக்காக இவன் வாழ்க்கை இப்படியே போனா நல்லா இருக்கா.? எப்பவும் எதையாவது பறிகொடுத்த மாதிரியே இருக்கான். அவளை மறந்துட்டு வாழ்ந்திருந்தா பிரச்சனை இல்ல. அவளும் இவனை மறந்துட்டு எவனையாவது கல்யாணம் பண்ணிக்கிட்டு இருந்திருந்தா பரவால்ல. இரண்டுமே இல்லாம இவங்க தன்னை தானே பழி வாங்கிக்கறது எப்படி சரிவரும்.?" என்றான் ஈஸ்வர் கவலையோடு.

சுவாதி இருவருக்கும் தேனீரை கொண்டு வந்து வைத்தாள்.

தேனீரை கையில் எடுத்தபடி கோப்பையை பார்த்தான் மூர்த்தி.

"ஒரு காலத்துல அவ எனக்கு நல்ல பிரெண்ட்.. இரண்டு பேரும் அவ்வளவு பேசுவோம். அவளோட ஒவ்வொரு வார்த்தையும் கூட எனக்கு ஆச்சரியமா இருக்கும். அவளோட சுறுசுறுப்பு ரொம்ப பிடிக்கும் எனக்கு. இந்த வீட்டை கட்டுக்கையில் அவள் செஞ்சது கொஞ்ச நஞ்ச வேலை இல்ல.. ஆனா அது அத்தனையையும் நடிப்புன்னு சொல்லி தூக்கி போட்டுட்டு போயிட்டா.. அவனோடு இருந்த காதல் மட்டுமில்ல என்னோட இருந்த நட்பும் கூட நடிப்புதான். சொல்லிட்டு செஞ்சான் இவன். சொல்லாம செஞ்சா அவ. ஆனா ஒன்னு மட்டும் தெரிஞ்சிக்கிட்டேன்.

பொண்ணுதானே, பையன்தானே.. நம்மால அவங்களை வழிக்கு கொண்டு வர முடியாதாங்கற தன்னம்பிக்கையில் தெரியாத ஒருத்தவங்களையோ, தெரிஞ்ச ஒருத்தங்களையோ கூட கட்டாயப்படுத்திக் கட்டிக்கவே கூடாது. ஒவ்வொருத்தரும் அவங்கவங்க வாழ்க்கையை வாழ வந்திருக்காங்க. அதுக்கு இடையூறு வந்தா எப்படி வேணாலும் பழி வாங்குறாங்க.

அப்பா அம்மா சொன்னாங்கன்னு பிடிக்காத பொண்ணை கட்டிக்கிட்டு ஒரே அறையில் இரண்டு குடித்தனம் ஏன் செய்யணும்.? பிடிக்காத ஒருத்தனை கட்டிக்கிட்டு ஏன் அவன் பேச்சை கேட்டு தன் மனசை கொன்னுக்கணும்.? வாழ்க்கையில் லைஃப் பார்ட்னர் எவ்வளவு முக்கியம்ன்னு எனக்குன்னு ஒரு பார்ட்னர் வந்த பிறகுதான் புரிஞ்சது.." என்றான் தேனீரை பருகியபடி.

"உண்மை.. அபிராமியை கட்டியிருந்தேன்னா இதே மன நிம்மதியோடு, மனசெல்லாம் காதலோடு இருந்திருப்பேனேனான்னு எனக்கு தெரியல. ஆனா வசு வேறப்பா.. பார்ட்னரெல்லாம் கிடையாது. அவளே என் முழுசும். எப்படி அவ இல்லாம இத்தனை வருசங்களை கடந்தேன்னு எனக்கே ஆச்சரியமா இருக்கு. அவளை ரொம்ப முன்னாடியே காதலிச்சிருக்கணும். எனக்காக எப்படி ஆண்டவன் அம்மா அப்பாவை படைச்சானோ அதே மாதிரி வசுவையும் படைச்சிருக்கான். நான்தான் கவனிக்காம இருந்துட்டேன்.."

"மச்சினருக்கு காதல் ரொம்பதான் பொங்குது போல.. இதை வசுக்கிட்ட சொன்னா கூட சந்தோசப்படுவா.." தேனீர் கோப்பைகளை எடுக்க வந்த சுவாதி சொன்னாள் இதை.

"அவக்கிட்ட என்னான்னுப்பா சொல்றது.?" என்றவனை கேலியாக பார்த்தவள் "மனுசங்க எல்லாம் ஏன் இப்படி இருக்காங்கன்னு தெரியல. யாரை பிடிக்குமோ அவங்ககிட்ட அதை சொல்றதே இல்ல. காதல் அவங்களுக்கானது. அதை சொல்வதை விட வேற என்ன ஒன்னை அந்த காதலர்கிட்ட தந்துட போறிங்க.? சாகும் நேரத்துல இதையெல்லாம் சொல்லி இருக்கலாமேன்னு பீல் பண்ணாம இருக்கும்போதே எல்லாத்தையும் சொல்லுங்க.." என்றவள் கோப்பைகளோடு கிளம்பினாள்.

"சப்பாத்தி செய்ய போறேன்.." இரண்டடி நடந்த பிறகு சொன்னாள். மூர்த்தி எழுந்து நின்று உடம்பை வளைத்து நெட்டி முறித்தான்.

தன்னை கேலியாக பார்த்த ஈஸ்வரிடம் "சப்பாத்தி திரட்டி தரது என்னோட வேலைப்பா.. அவளும் எத்தனை வேலை செய்வா.?" எனக் கேட்டபடி சமையலறை நோக்கி நடந்தான்.

"நானும் கிளம்பறேன்.. வசு வெயிட் பண்ணிட்டு இருப்பா.." என்று கிளம்பினான் ஈஸ்வர்.

இரண்டு நாட்கள் கடந்துப் போனது. அபிராமியும் கார்த்திக்கும் ஒருவரையொருவர் சந்தித்துக் கொள்ளவில்லை.

அபிராமி தன் மனதுக்கும் தன் ரோசத்துக்கும் இடையே போராடிக் கொண்டிருந்தாள்.

கார்த்திக் தன் காதலுக்கும் தன் மீதான கோபத்துக்கும் இடையே போராடிக் கொண்டிருந்தான். அபிராமியின் அழுத கண்கள் அவனின் சிந்தையை விட்டு நகரவில்லை.

இந்த இரண்டு நாட்களும் இவர்கள் இருவரும் ஏன் பிரிந்தார்கள் என்று ஒரு லோக்கல் டிவி சேனல் ஒன்றில் பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருந்தார்கள். ஆனால் இவர்கள் இருவருக்கும்தான் அதை பார்க்க நேரம் கிடைக்கவில்லை.

அடுத்த நாள் காலையில் பரபரப்பாக சமையல் செய்துக் கொண்டிருந்தார் மேகமானன். தூங்கி எழுந்ததில் இருந்தே என்னவோ போல் இருந்தது அவருக்கு.

பொங்கி வந்துக் கொண்டிருந்த காப்பியை அடுப்பில் இருந்து இறக்கியவர் இரு டம்ளர்களில் ஊற்றி எடுத்துக் கொண்டு ஹாலுக்கு வந்தார்.

"மாப்பிள்ளை இன்னைக்கு ரொம்ப அதிசயமா ஏழு வரை தூங்கறான் போல.." என்றபடி சென்று அவனின் அறை கதவை திறந்தார்.

அறை காலியாக இருந்தது‌. மேகமானன் கடிகாரத்தை பார்த்தார்.

"ஜாக்கிங் போனானா.? ஆனா நான் பார்க்கவே இல்லையே.. அப்படி போயிருந்தாலும் இன்னேரம் வந்திருக்கலாமே.!" குழப்பத்தோடு சென்று தனது போனை தேடி எடுத்தார்.

கார்த்திக்கிற்கு அழைத்தார்.

"மாப்பிள்ளை எங்கேடா இருக்க.?" என்றார் அவன் அழைப்பை ஏற்றதும்.

"தலைநகருக்கு போயிட்டு இருக்கேன் மாமா.."

"ஆனா ஏன்டா.? திடீர்னு கூட்டம் எதையாவது கூட்டிட்டாங்களா.?" எனக் கேட்டார். அப்படி இருந்தாலும் இவன் தன்னை அல்லவா உடன் அழைத்துச் சென்றிருப்பான், இப்போது ஏன் தனியாக செல்கிறான் என்று குழப்பமாக இருந்தது.

கார்த்திக் சில நொடிகள் மௌனம் காத்தான். "சாரி மாமா.." என்றான் வருத்தம் நிரம்பிய குரலில்.

"ஏ.. ஏன்டா மாப்பிள்ளை.?"

"நான் இந்த சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகிக்க போறேன் மாமா.. முறைப்படி ரிசைன் பண்ணிட்டு எங்கேயாவது போயிடலாம்ன்னு இருக்கேன்‌.."

மேகமானன் நெற்றியை பிடித்தபடி நாற்காலியில் அமர்ந்தார்.

"உன்னை நம்பியதுக்கு என் மொத்த அரசியல் வாழ்க்கையையும் முடிச்சி வைக்க பார்க்கற இல்ல.?" ஆத்திரத்தோடு கேட்டார் இவர்.

"சாரி மாமா.. உங்க நம்பிக்கைக்கு நான் தகுதியானவன் இல்ல. இந்த உலகத்துல மனுசனா வாழவே தகுதி இல்லாதன் நான்.. உங்களுக்கு இது நிச்சயம் இழப்புதான். ஆனா நீங்க என்னை விட சிறந்த மக்கள் பணியாளர்கள் நிறைய பேரை உருவாக்குவிங்க. நான் எதுக்குமே லாயக்கில்ல மாமா.. நான் ரொம்ப டேஞ்சர்.."

"பைத்தியம் மாதிரி உளறுவதை தவிர வேற எந்த எழவுமே உனக்கு தெரியாதா.? நீ ரிசைன் பண்ணா அப்புறம் நாம ஆரம்பிச்ச எந்த வேலையுமே பினிஷ் ஆகாது.‌. நீ விசயத்தை தெளிவா சொல்லு.. நாம வேற ஏதாவது முயற்சி பண்ணலாம்.." என்றார் அவர்.

"என்னால தினமும் அபிராமி தனக்குள் அழறா மாமா.. காதலிச்ச பெண்ணையே நிம்மதியா வாழ விடாத நான் நிச்சயம் நல்ல மனுசன் கூட கிடையாது. நான் இந்த பதவிக்கும் தகுதி உடையவன் இல்ல.. நான் இங்கே இருக்கும் ஒவ்வொரு நாளும் அவளுக்கு வாழ்க்கை நரகம். போதும் மாமா.. இதுக்கு மேலயாவது அவ நிம்மதியா இருக்கட்டும். அவளோட கண்ணுக்கு படாத இடத்துக்கு போய்ட்டா அவ நிச்சயம் நல்லபடியா வாழுவா.." என்றான்.

மேகமானன் நெற்றியில் அடித்துக் கொண்டார்.

"சில்ற புள்ளைங்கங்கறது சரியாதான் இருக்கு."

"அத்தையை நினைச்சி பாருங்க மாமா.. நீங்களும் சில்லறையாதான் தெரிவிங்க.." என்றவன் அவரை பேச விடாமல் அத்தோடு இணைப்பை துண்டித்துக் கொண்டான்.

இரு புறமும் புளியமரங்கள் நின்றிருந்த நெடுஞ்சாலை அது.

தலைநகரம் நோக்கி புறப்பட்டுக் கொண்டிருந்தான் கார்த்திக்.

தான் செய்வது தவறு என்றும், மக்களுக்கு செய்யும் நம்பிக்கை துரோகம் என்றும் அவனுக்கு நன்றாகவே தெரியும்.

ஆசை ஆசையாக தன் மக்களுக்காக எத்தனை திட்டங்களை, எத்தனை வேலைகளை ஆரம்பித்து வைத்திருக்கிறான். கடைசியில் அத்தனையும் தன் மனம் ஒன்றால் மட்டுமே வீண் என்று நினைக்கையில் அவனுக்கு தன் மீதே கோபமாக வந்தது. பாரம் ஏற்றிக்கொண்டு எதிரில் வரும் லாரிகளில் ஒன்றில் காரை கொண்டுச் சென்று மோதி விடலாமா என்று கூட நினைத்தான்.

தான் என்ன செய்தால் அபிராமி நிம்மதியாக இருப்பாள் என்று இந்த இரண்டு நாட்களும் யோசித்து சலித்து விட்டான். தான் தற்கொலை செய்துக் கொண்டால் குற்ற உணர்வில் அவளும் மாய்ந்துக் கொண்டே இருப்பாள் என்று அவனுக்கு தெரியும்.

தனது இந்த முடிவும் அவளுக்கு நிச்சயம் மனகசப்பை வரும் என்று தெரியும். ஆனால் இதை விட வேறு என்ன செய்வதென்றும் தெரியவில்லை.

முள் மேல் சேலை விழுந்தால் சேதாரம் சேலைக்கு என்று பேச்சு உண்டு. ஆனால் தானும் அவளும் காதல் எனும் முள்வேலியில் விழுந்து விட்ட காரணம் விடாத பிசாசாய் இத்தனை வருடங்கள் கழித்தும் துரத்தும் என்று நினைக்கவேயில்லை.

காதலித்து விட மாட்டாளா என்று ஏங்கியிருந்த காலம் போய் ஏன் அவள் மனதில் காதல் வந்தது என்று இதயம் நொந்தான். அவளிடம் தன் தன்மானத்தை இழக்க கூடாது என்று இந்த இரண்டு மாதங்களாக வீராப்பாக நடந்தும் கடைசியில் தோற்று மட்டுமே போனோம் என்று நினைக்கையில் மனம் அழுதது.

தனது ஒற்றை நாள் தவறு இந்த அளவிற்கு தன்னை பழி வாங்கும் என்று அவன் நினைக்கவேயில்லை. அடுத்த நொடி நடக்க இருப்பதை பற்றி யோசிக்காமல் அவள் கழுத்தில் கட்டிய ஒற்றை கயிறு தன்னை ஆழ பெரு ஆழியில் உயிரோடு புதைக்கும் என்று கனவாய் கூட காணவில்லை.

சிக்கல். வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும் துக்கம். அவளை மறக்கவும் முடியவில்லை. அவளின் மனதை கைப்பற்றவும் முடியவில்லை. அவளும் நிம்மதியாய் இல்லை. தானும் நிம்மதியாய் இல்லை.

சுற்றி வந்த போது விரட்டினாள். ஒதுங்கி இருந்தாலும் உயிரோடு வெந்தாள் அவள். சுற்றி வருகையிலும் அவளின் கடைக்கண் பார்வைக்கு காத்து கிடந்தான். ஒதுங்கி இருக்கையிலும் தூரத்தில் இருந்து அவளை பார்த்து பார்த்தே மூளையில் கரையான் பிடித்தது போல உணர்ந்தான் இவன்.

தன்னை பிடிக்காத ஒருத்தியை கட்டியது தன் தவறு. எதிரியாய் பார்த்த ஒருவன் மீது காதல் கொண்டது அவள் தவறு என்று மட்டும் தெளிவாக புரிந்தது.

தன்னையும் அவள் காதலிக்கிறாள் என்ற விசயம் விஷத்திலும் அமிர்தமாய் இனித்துக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால் எப்படி காதல் கொண்டாள் என்பதைதான் அவனால் யூகிக்க முடியவில்லை.

இந்த பதவிக்கோ, இல்லை இந்த நல்லவன் என்ற பொதுமக்களின் பாராட்டுக்கோ பணிந்து செல்பவள் அல்ல அவள் என்று அவனுக்கு தெரியும். பிறகு என்ன காரணம். அதுதான் தெரியவில்லை.

ஆனால் நிச்சயம் இது நடிப்பு கிடையாது என்றும் அவனின் மூளை சொன்னது. ஏற்கனவே வாழ்ந்த ஒரு வருடமும் கூட நடிப்பு என்று ஏற்றுக் கொள்ள மறுத்த மூளைதானே அது.?

அவனின் கார் அரை மணி நேர பயண தூரத்தை கடந்த நேரத்தில் குறுக்காக வந்து நின்றது அபிராமியின் கார். கார்த்திக் தனது காரை சட்டென்று நிறுத்தினான்.

மாமன் அதற்குள் போட்டு தந்து விட்டாரா, இதற்கும் தடையாய் ஏன் வந்து சேர்ந்தாள் இவள் என்று வருந்தினான். வாழவும் விடாமல் சாகவும் விடாமல் செய்வதுதான் காதல் என்றால் அந்த காதல் இந்த பிரபஞ்சத்தை விட்டே செத்தொழியட்டும் என்று கருவியபடி காரை விட்டு கீழிறங்கினான்.

அபிராமி தன் காரிலிருந்து வேகமாய் கீழிறங்கினாள். இரவு உடையாய் தொளதொளப்பாய் ஒரு டாப்பையும், பேண்டையும் அணிந்திருந்தாள். உறக்கத்தில் இருந்து அப்படியே வந்து விட்டாளா என்று நினைக்கும்படி அவளின் முகத்தில் அயர்ச்சி இருந்தது.

எதிர் கொண்டு செல்லும் முன்பே இவனின் அருகே நெருங்கி விட்டவள் சப்பென்று ஒரு அறையை தந்தாள். இதைதான் எதிர்பார்த்தான் அவனும்‌.

உள்ளத்தில் பெருங்கடலாய் அலை அடித்தது‌. கை நீட்டி அடிக்க உரிமை கொண்டவளுக்கு உடன் வந்து வாழ்ந்து இந்த மாபெரும் தண்டனைக்கு முடிவு தர வேண்டும் என்ற எண்ணம் ஏன் ஏற்படவில்லை என்று அழுதது விழிகள்‌.

"என்னை கொன்னுட்டுதான் நிம்மதியா இருப்பியா நீ.?" கோபத்தோடு கேட்டாள்.

"பேசாம வா.. போய் இரண்டு பேரும் செத்து போயிடலாம். அப்பவாவது நிம்மதிங்கற ஒன்னு மனசுல இருக்கும்.. அன்னைக்கு நீ காரை கொண்டுப்போய் கிணத்துல விடுறதா சொன்ன.. அப்பவே ஓகே சொல்லி இருக்கலாம்.." என்று நெற்றியில் அடித்துக் கொண்டாள்.

"உன் பர்சனல் உன் தலையெழுத்து. என் பர்சனல் என் தலையெழுத்து. ஆனா என்ன கருமத்துக்கு நம்ம மக்களுக்குன்னு முன்னெடுத்த வேலையை பாதியில் ஒழிச்சி கட்ட பார்க்கற.. உன்னை மாதிரி டுபாக்கூரை நம்பி இவ்வளவு பெரிய பொறுப்பை வாங்கி தந்த மேகமானன் அப்பாவைதான் சொல்லணும்.." என்றாள் பற்களை கடித்தபடி.

"அரசியல்ல இறங்கிய நம்ம தொகுதிக்காரன் ஒருத்தனாவது நல்லவனா இருந்து, நேர்மையாளனா இருந்திருந்தா நீ செத்தா கூட அமைதியா நானும் செத்துட்டு போயிட்டே இருந்திருப்பேன். சேத்துல தாமரையா, சாக்கடையில் துளசியா நீ ஏன் இருக்க.?" என்றாள்.

தான் நிஜமாக அப்படிதான் இருக்கிறோமா என்று அவனுக்குள் கேள்வி எழுந்தது. மக்கள் பணத்தை மக்களுக்கே செலவழிப்பது கூட இந்த ஊழல் உலகில் பெரிய விசயம் ஆகிவிட்டது என்று புரிந்தது.

"உனக்கு நான் மட்டும்தான் தண்டனை தருவேன்‌.? நான் குத்துக்கல்லு மாதிரி இருக்கையில் நீ யாருடா உன் பர்சனல் லைப்பை டிசைட் பண்ண.?" என்றவளின் கன்னத்தை தன்னை மீறி தொட்டான்.

"அப்படி ஒரு வெங்காயம் இருந்தா என் கூடவே இருந்து நீ டிசைட் பண்ண வேண்டியதுதானே.? அனாதை புள்ளை மாதிரி விட்டுட்டு போன.. நான் என்ன செய்வேன்.?" என்றான் எரிச்சலும் கோபமுமாக.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN