நெடும்வனம் 1

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
வணக்கம் நட்புக்களே..

இந்த கதையில் ஹீரோயின்தான் தன்னிலையில் நின்னு கதையை சொல்ல போறா.. ஹீரோவை முன்னிலையில் நிறுத்தி அவனுக்குதான் கதை சொல்ல போறா. விசாகாவோட டார்ச்சர் தாங்காமதான் அவ மனசுக்குள்ள உட்கார்ந்து சொல்ல சொல்ல நான் அதை அப்படியே எழுதுறேன். புது அட்டெம்ட் எனக்கு. அதனால ஆதரவை வோட், கமெண்ட் வடிவில் வாரி வழங்கவும் நட்புக்களே. முதல் அத்தியாயம் புரியலன்னா அப்படியே திரும்பி போகாம இரண்டாம் அத்தியாயம் வாங்க. அதுவும் புரியலன்னா மூணாவது அத்தியாயம் வாங்க. அதுக்குள்ள புரிய ஆரம்பிச்சிடும்..

⚠️⚠️⚠️விசாகா, சகாவோட இடத்துல மறந்தும் கூட உங்களை வச்சி கற்பனை பண்ணி பார்க்க வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

அழகான மான்கள் கூட்டம் அது. குட்டி மான் ஒன்று தன் தாயை சுற்றி சுற்றி வந்தது. துள்ளி குதித்தது. அதன் மேனி பளபளப்பாக இருந்தது.

அதனை தொட்டு பார்க்கும் ஆவல் ஏற்பட்டது எனக்கு. அருகே சென்று கையை நீட்டினால் அவைகள் ஓடி விடலாம். அதனாலேயே அமைதியாய் தூரமாக நின்றிருந்தேன் நான். என் கேமராவில் பதிவாகி கொண்டிருந்த இந்த புள்ளிமான் கூட்டங்களை ஆர்வத்தோடு அதே சமயம் அமைதியோடும் பார்த்துக் கொண்டிருந்தேன்‌.

இந்த அடர்ந்த வனத்தில் இருக்கும் சொத்துகளில் இந்த மான் கூட்டங்களும் ஒன்று.

நான் என்ன தவம் செய்தேன் என்று தெரியவில்லை‌. இவ்வளவு அழகான ஜீவராசிகளோடு இணைந்து வாழும் வரம் பெற்றுள்ளேன்.

'உடனே கோபம் கொள்ளாதே சகா.! உன்னை போன்று யாரும் எனக்கு முக்கியம் இல்லை‌. உன் ஒருவன் முன் ஒப்பிடுகையில் இந்த மொத்த உலகத்தையும் கூட வேண்டாமென்று மறுத்து வருவேன் நான்‌.'

எனது கேமராவில் இருந்து பார்வையை எடுத்தேன். மான்கள் கூட்டத்தை வெற்று கண்களால் ரசித்தேன். ஒவ்வொன்றும் அவ்வளவு அழகாக இருந்தன.

நான் அவற்றை ரசிப்பதை அறிந்தும் என் பின்னால் வந்து நின்று என்னை அணைத்தாய் நீ. உன் நெஞ்சத்தில் தலை சாய்த்து இந்த உலகத்தை பார்க்கும் ஒவ்வொரு முறையும் எனது பிறவி வேறு ஒரு உலகில் வாழ்வது போன்று உணர்க்கிறேன் என்றால் அது பொய்யில்லை சகா.

"அந்த குட்டி மான் அழகா இருக்கு." என்றேன் நான்.

என் வலது தோள்ப்பட்டையில் உன் முகத்தை வைத்தாய் நீ. நான் விரல் காட்டிய மான்குட்டியை பார்த்தாய்.

"ஆமாம். அழகு. உன்னை போலவே!" என்றாய் மென்மையான புன்னகையோடு.

உன் கன்னத்தோடு என் கன்னத்தை உரசினேன் நான்.

"உண்மையை ஒத்துக்கிட்டதுக்கு தேங்க்ஸ்." கேலியோடு சொன்ன என்னை சிரிப்போடு பார்த்தாய் நீ.

என் கன்னத்தில் பதிந்தது உன் இதழ்கள். அதன் மென்மையில் சிலிர்த்துப் போய் மெய் மறந்துக் கொண்டிருந்தேன் நான்.

மான் கூட்டங்கள் மெள்ள நகர்ந்துக் கொண்டிருந்ததை சில நொடிகளுக்கு பிறகே பார்த்தேன் நான்.

"நாம அந்த மான் கூட்டத்தை பின்தொடர்ந்துப் போகணும்‌.." என்றபடி உன்னிடமிருந்து விலகினேன். கேமரா ஸ்டேன்டை கையில் எடுத்தேன்‌. என் பேக்கை நான் எடுக்கும் முன்னால் என் தோளில் பதிந்தது உந்தன் கரம்.

"போதும். இருள் வர போகுது. கூடாரத்துக்கு போகலாம்." என்றாய் கட்டளையாய் நீ.

மேற்கை பார்த்தேன். சூரியன் மலைதொடரை தொட்டும் தொடாமலுமாக சரிந்து விழுந்துக் கொண்டிருந்தது‌. தவறு உன் மீதுதான். உன்னோடு இருந்தால் பொழுது புலர்வதையும், மறைவதையும் கவனிக்க கூட மறந்து விடுகிறேன் நான்.

கூடாரம் இங்கிருந்து அரை மைலுக்கு அந்த புறம் உள்ளது. வேகமாய் நடந்தால் மட்டும்தான் இருளுக்கு முன் போய் சேர முடியும்.

கேமராவை பேக்கில் பத்திரப்படுத்தி அதை முதுகில் மாட்டிக் கொண்டேன். ஸ்டேன்டை அதன் பையில் வைத்து கையில் எடுத்துக் கொண்டேன்.

கூடாரம் நோக்கி புறப்பட்டேன். உடன் வந்தாய் நீ. வழியெங்கும் பேசியே கடந்தோம். பேச்சின் இடையிடையே நிறைய சிரித்தோம். நீ சிரித்தால் மிகவும் அழகாய் இருப்பாய். எனக்கு உன்னை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று அவ்வளவு ஆசை சகா.

அரை மணி நேரம் கடந்த வேளையில் நமது கூடாரத்தின் நடுவே அமர்ந்துக் கொண்டிருந்தேன் நான். ஒரு மூலையில் அமர்ந்து என்னை ரசித்துக் கொண்டிருந்தாய் நீ. உன் பார்வையால் வெட்கம் பூசிக் கொண்டிருந்தது எனது மேனி‌.

இருள் வெளியே சூழ்ந்து விட்டது. இன்று முழுவதும் காடுகளில் சுற்றி சுற்றி எடுத்த புகைப்படங்களையும், வீடியோக்களையும் எனக்கு சம்பளம் தரும் நிறுவனத்திற்கு அனுப்பி வைத்தேன். எனது லேப்டாப்பை அணைத்து வைத்தேன். உறக்கம் வரும்போல இருந்தது. உன் அருகே வந்து உன் மடியில்தான் தலை சாய்த்தேன். குளிர்வது போலவே இருந்தது. காலடியில் இருந்த போர்வையை நான் கையில் எடுத்த வேளையில் கூடாரத்திற்குள் தலையை நுழைத்தாள் சுசி.

அவளை வெறித்தாய் நீ. என்னோடு பேசும் யாரையும் உனக்கு பிடிக்காது. என்னோடு பழகும் யாரையும் உனக்கு பிடிக்காது. இது எனக்கு நன்றாக தெரியும் சகா.

"நாங்க எல்லோரும் மூவி பார்க்கலாம்ன்னு இருக்கோம்.. நீயும் வா.." என்று என்னை அழைத்தாள் சுசி.

"நான் வரல சுசி.. நீங்களே பாருங்க.." என்றேன் நான். உன்னை விட்டு விலகி போய் அந்த திரைப்படத்தை பார்த்து என்ன செய்ய போகிறேன் என்ற எண்ணம் எனக்கு.

ஆனால் என்னை உன்னோடு இருக்க விடாமல் கூடாரத்திற்குள் புகுந்து என் கையை பிடித்து இழுத்துக்கொண்டு வெளியே நடந்தாள் சுசி.

நான் உன்னைதான் திரும்பி பார்த்தேன். என்னை புன்னகையோடு பார்த்தாய் நீ. நானோ உன்னை ஏக்கமாக பார்த்தேன். உனக்கு திரைப்படம் பிடிக்காது. அதனால்தான் எனக்கும் பிடிக்காது. ஆனால் சுசி எங்கே என்னை‌ விட்டாள்.?

அனைவரும் அறிந்த வைல்ட் லைப் போட்டோகிராபர் நான். எனக்கு காடுகளும் நீயும் மட்டும்தான் உலகம் என்பது என் மனம் அறிந்த ரகசியம் சகா. இப்போது இருபத்தி ஐந்து வயதை தொட்டு விட்டேன் நான்.

எனது வேலையின் காரணமாக சில வெளிநாடுகள் சென்று வந்துள்ளோம் நீயும் நானும். ஆனால் எந்த நாட்டு கலாச்சாரத்தை பற்றியும் நான் கண்டுக் கொண்டதே இல்லை சகா. எனது ஒரே தேடல் வனமும் நீயும் மட்டும்தான்.

நான் இன்று இப்படி ஒரு நடு காட்டில் கேமராவோடு சுற்றுவதை கண்டால் என் அம்மா என்னை கொன்றே போட்டு விடுவாள். ஆனால் நான் என் வீட்டை விட்டு வெளியேறி ஐந்து வருடங்கள் ஆகிவிட்டது என்பது நீ அறிந்ததே. நான் புரட்சி பெண் அல்ல சகா. ஆனால் எனது சொந்த எண்ணப்படி வாழ நினைப்பவள்.

தவிர்க்க முடியா ஒரு சூழலில் என்னால் சமாளிக்க இயலாத ஒரு நிலமையில்தான் வீட்டின் படியை தாண்டினேன். இதெல்லாம் உனக்கு தெரியும். பிறகேன் இதை நான் சொல்கிறேன் என்றால் இதை படிப்பவர்களுக்கு முறையான தகவல் தேவை என்பதால்தான் சகா.

வீட்டை பற்றி நினைக்கவோ இல்லை வீட்டின் மனிதர்கள் பற்றி கவலை கொள்ளவோ நேரம் இல்லாத அளவிற்கு இந்த ஐந்து வருடங்களில் எனது வேலையிலும் உன்னுடனான காதலிலும் என்னை முழுதாய் தொலைத்து விட்டிருந்தேன் சகா.

என்னை உன்னிடமிருந்து பிரித்து இழுத்து வந்த சுசி அருகே இருந்த மஜீத்தின் கூடாரத்திற்குள் என்னை இழுத்து சென்றாள்.

நான் சில நண்பர்களோடு சேர்ந்து மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு அடர்ந்த காட்டிற்கு டிரெக்கிங் வந்திருக்கிறேன். துணையாய் நீ இருக்கையில் வேற்று கிரகத்திற்கு கூட பயணிப்பேன் நான்.

இந்த டிரெக்கிங்கிற்கு வந்தது இரண்டு பெண்கள் மூன்று ஆண்கள். அனைவரும் நெருங்கிய நண்பர்கள் இல்லை‌. ஆனாலும் டிரெக்கிங் போகும் நாட்களில் மட்டும் ஒன்று சேர்ந்து கொள்வோம்.

நான் கூடாரத்திற்குள் வந்ததும் மஜீத் என்னை பார்த்து புன்னகை புரிந்தான். நான் எனது போர்வையை போர்த்தி கொண்டு ஒரு ஓரமாக அமர்ந்தேன். நீயும் உடன் வந்திருக்கலாம். திரைப்படத்திற்கு பதிலாக என்னை பார்த்து அமர்ந்திருக்கலாம்.

சுசி ராம் அருகே சென்று அமர்ந்தாள்.

மஜீத் தனது கேட்ஜட்டை பயன்படுத்தி எதிரே இருந்த திரையில் திரைப்படத்தை ஒளிப்பரப்பினான். ஏதோ ஒரு ஆங்கில படம் ஓடியது. அனைவரும் ஆவலோடு பார்த்த வேளையில்

எனக்கு மட்டும் கொட்டாவியாக வந்தது. உனது மடியில் படுத்து உறங்க வேண்டும் என்று இருந்தது சகா. இந்த திரைப்படத்தை விடவும் நம் கனவுகள் அருமையாக இருக்கும்.

ராம் அவ்வப்போது ஓரக்கண்ணால் என்னை பார்த்தான். கண்டும் காணாதது போல இருந்தேன் நான். அவனின் பார்வை எதற்கென்று எனக்கு தெரியும்.

அரைமணி நேரம் தாண்டியது. அதற்கு மேல் என்னால் அந்த படத்தை பார்க்க முடியவில்லை.

"எனக்கு தூக்கம் வருது.. நான் கிளம்பறேன்.." என சொல்லி விட்டு போர்வையோடு எழுந்து நின்றேன்.

"பேய் படமாக இருந்தா விசாகாவுக்கு பிடிச்சிருக்கும்.." கிண்டலாக சொன்னான் ராம். முகம் கறுத்து போனது போல இருந்தது எனக்கு. அந்த இடத்தில் இருக்க பிடிக்காமல் எழுந்து வெளியே வந்தேன். அந்த கூடாரத்தின் வாயிலில் நின்றிருந்த நீ ராமை முறைத்தாய். உன் கைப்பற்றி இழுத்துக் கொண்டு தள்ளி வந்தேன் நான்.

"அவனை விடு.." என்றேன்.

"நம்ம வீட்டுல அவனை தங்க விட்டிருக்க கூடாது நீ. அதனால்தான் இப்படி உளறுறான் அவன்.." இதை மட்டும் இந்த ஒரு வாரத்தில் தினம் நான்கு முறையாவது சொல்லிக் கொண்டுதான் இருக்கிறாய் நீ.

"அவன் என் பிரெண்ட் சகா. 'சிட்டியில் வந்து வேலை பார்க்க போறேன், அவசரத்துக்கு வீடு இல்ல'ன்னு கேட்டான். அதனால்தான் நான் சரின்னு தங்கிக்க சொன்னேன். உன்னை கேட்டுட்டுதான் தங்க விட்டேன். இப்ப வந்து என்னை முறைக்காத.." என்ற பிறகும் நீ என்னை தொடர்ந்து முறைத்தாய்.

"நீ அவனை பத்தி நினைச்சி டென்ஷன் ஆகாத. குளிருது.. கணப்புல காய வரியா.?" சிணுங்கலாய் அழைத்தேன் நான்.

மறுப்பாக தலையசைத்தாய் நீ. உன்னை விட்டு விலகி நடந்தேன்.

கூடாரங்களின் முன்னால் இருந்த நெருப்பு புகைந்து கொண்டு இருந்தது. தணலை கிளறி விட்டு அங்கேயிருந்த நாற்காலி ஒன்றில் அமர்ந்தேன் நான். உன்னை அழைக்க மனம் ஆர்பரித்தது. திரும்பி பார்த்தேன். நீயாகவே வந்து எனது வலது பக்கத்தில் இருந்த நாற்காலியில் அமர்ந்தாய். சிரிப்பாக வந்தது எனக்கு உன் கோபத்தைப் பார்க்கையில்.

"அனல் போதுமா.?" நெருப்பை இன்னும் கொஞ்சம் கிளறி விட்டபடி கேட்டேன். நீ மொத்தமாக தலையசைத்தாய். அதே வேளையில் மஜீத் அவன் கூடாரத்திலிருந்து வெளியே வந்து எனக்கு இடது பக்கம் இருந்த நாற்காலியில் அமர்ந்தான்.

மஜீத் என்னை விட ஐந்தாறு வயது பெரியவன். நல்ல வாட்ட சாட்டமும் கூட. சத்தியமாக உன் அளவுக்கு அழகானவன் அல்ல‌ சகா.

அவனை சுசி ஒருதலையாக காதலித்து கொண்டிருக்கிறாள். தனது காதலுக்கு உதவி செய்ய சொல்லி அவ்வப்போது என்னையும் இம்சிப்பாள். ஆனால் நான் என்னால் முடியாதென சொல்லிக் கொண்டு இருக்கிறேன். தனது காதலை சொல்ல கூட தைரியம் இல்லாவிட்டால் பிறகேன் காதலிக்க வேண்டுமென எண்ணுபவள் நான். உன்னிடம் நான் காதலை சொன்ன நேரத்தை நினைத்து பார். அப்போது தெரியும் என் தைரியம் பற்றி‌.

மஜீத் ஒரு எழுத்தாளன். மனிதம் பேசும் கதைகள் எழுதி கொண்டிருக்கிறான். அவனும் நானும் அதிகம் பேசிக் கொண்டது இல்லை. தேவைப்படும் போது நான்கு வார்த்தைகளோடு சரி.

"உனக்கு ஏன் படம் பிடிக்கல விசாகா.?" அவனாகவே பேச்சை ஆரம்பித்தான்.

"எனக்கு தூக்கம் வரும் போல இருந்தது. அதனாலதான் எழுந்து வந்தேன்.‌." என்றுவிட்டு எரியும் தணலை பார்த்தேன்.

"தொல்லை பண்ணுவதா நினைச்சிக்காத.. சும்மா தெரிஞ்சிக்கலாம்ன்னு கேட்க வந்தேன்.. போன வாரம் நீயும் ராமும் பேய் ஆராய்ச்சியாளரை சந்திக்க போன போது என்ன நடந்தது.?" அவன் தனது ஆவலை அடக்க முடியாமல் கேட்கிறான் என்பது அவனது குரலிலேயே புரிந்து போனது.

நான் எனது கால்களை தூக்கி நாற்காலியின் மீது வைத்து கொண்டேன். முட்டிக்காலை கட்டியபடி நெருப்பை பார்த்தேன். "பேய் இருக்கறது நிஜம்ன்னு சொன்னாரு அவர்.." என்றேன். அருகே அமர்ந்திருந்த நீ எனது கையை பற்றினாய். நீ எனக்கு ஆறுதல் கூற முயலுவது எனக்கும் புரிந்தது.

"ஓ.." தனது தாடையை தடவி விட்டுக் கொண்டான் மஜீத். "இதை பத்தி நீ என்ன நினைக்கிற.?" என்று கேட்டான்.

"என்ன நினைக்கணும்.? எனக்கு இந்த பேய்கள் மேலயோ ஆவிகள் மேலயோ எந்த நம்பிக்கையும் இல்ல. அது சும்மா பைத்தியக்காரதனம்.." என்றேன். ஏனோ அதற்கு மேல் அவனோடு பேச பிடிக்கவில்லை. எழுந்து நின்றேன்.

"எனக்கு தூக்கம் வருது. குட்நைட்." என சொல்லிவிட்டு நமது கூடாரத்திற்குள் நுழைந்து படுக்கையில் விழுந்தேன்.

"பேயாவாது பிசாசாவது.." என்றபடி சலித்து கொண்ட எனக்கு மஜீத் மனதில் இப்போது என்ன ஓடும் என்று புரிந்துக் கொள்ள முடிந்தது.

கண்களை இறுக்க மூடி தூங்க முயன்றேன் நான். ஆனால் தூக்கம் வரவே இல்லை. பழைய நினைவுகள் உறங்க விடாமல் துரத்தியது. உன் மடி தேடினேன். உன்னை காணவில்லை. கூடாரத்தின் கதவு பகுதியை விலக்கி விட்டுக் கொண்டு வெளியே பார்த்தேன்‌.‌ நாற்காலியில் அதே இடத்தில் மஜீத்தோடு சேர்ந்து அமர்ந்துக் கொண்டிருந்தாய் நீ. நான் கூடாரத்தின் ஜிப்பை திறந்த சத்தம் கேட்டு மஜீத்தோடு சேர்ந்து நீயும் திரும்பி பார்த்தாய்.

நான் உன்னை கண்ணால் அழைப்பதை அறிந்து சட்டென்று எழுந்து வந்தாய் நீ. உன் மடி சாயாமல் நான் உறங்க மாட்டேன் என்பதை நீ புரிந்து வைத்துள்ள வரை நலமே சகா.!

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே.

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN