காதல் கடன்காரா 59

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
கார்த்திக் தன் பதவியை துறக்க எண்ணி சென்றுக் கொண்டிருக்கிறான் என்று அபிராமியிடம் தகவல் சொன்ன மேகமானன் சோகமாக இருக்கை ஒன்றில் தஞ்சம் புகுந்தார்.

"அரைகுறை காதல் ஆசாமிக்கிட்ட பொறுப்பை தந்தது என் தப்பு‌.." என்று புலம்பினார்.

அதே நேரத்தில் "கிழக்கு கடற்கரையில் உருவான புயல் தற்சமயம் திசைமாறி வடக்கு நோக்கி நகர்வதால் வடக்கு மாவட்டங்களை புயல் பெரிதாக பாதிக்கும் என்று கருதப்படுகிறது.. ஆகையால் வட மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பத்திரமாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.." என்று செய்தியில் வாசித்தார்கள்.

மேகமானன் ஜன்னலின் வழியே வானத்தை பார்த்தார். இன்னும் சூரியன் வரவில்லைதான். ஆனால் மழை வரும் என்று தோணவில்லை.

"என்னய்யா சொல்லிட்டு இருக்கிங்க.? இந்த ஊர்ல மழை வந்தாலே பெரிய விசயம். கொஞ்சம் கூட கூசாம புயல் வருதுன்னு சொல்லிட்டு இருக்கிங்க.." டிவியை பார்த்துக் கேட்டார் அவர்.

கடலில் மையம் கொண்ட புயல் திசை மாறி எத்தனை கிலோமீட்டர் வேகத்தில் வடக்கு மாவட்டங்களை நோக்கி நகர்கிறது என்று தொலைக்காட்சியில் காட்டிக் கொண்டிருந்தார்கள்.

"உலகம் அழிய போகுதா என்ன.?" என்று கேட்டார். 'இந்த ஊருக்கெல்லாம் புயல் வருமா.?' மீண்டும் மீண்டும் அதையே யோசித்து ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்தார்.

அரை மணி நேரம் கடந்தபோது படபடவென்று தூறல்கள் விழ ஆரம்பித்தன. மேகமானன் மழை தூறலை சந்தேகத்தோடு வேடிக்கை பார்த்தார். சில நிமிடங்கள் கடந்த பிறகு தூறல் எல்லாம் சாரலாய் மாறி ஜன்னல் தாண்டி வீட்டுக்குள் நுழைந்தது தரையை நனைத்தது. மேகமானன் ஜன்னல்களை இழுத்து மூடினார். சற்று நேரத்தில் பேய் இரைச்சலோடு காற்று வீச ஆரம்பித்தது. ஒற்றை ஜன்னலை மட்டும் அரையாய் திறந்து வைத்துக் கொண்டு அந்த புயலை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார்.

"இதான் புயலா.? அப்பப்ப டிவியில் பார்த்தது.? எதிரே உள்ள எதுவுமே கண்ணுக்கு தெரியல.. அரை மணி நேரத்துல ஒரு உலக மழை பொழிஞ்சிருக்கும் போல.. நல்லாதான் இருக்கு இதுவும். அப்பப்ப இந்த மழை பெஞ்சா அணைகளாவது சட்டுன்னு நிறையும்.." என்றார்.

அவர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சில நொடிகளில் மரக்கட்டை ஒன்று பறந்து வந்து அவர் நின்றிருந்த ஜன்னலின் மீது மோதியது.

"ஆண்டவா.! பேய் மழை.." என்று அதிர்ச்சியோடு ஜன்னலை மூடினார்.

"நிஜமாவே புயல் வந்துடுச்சி போல இருக்கு.." என்று சொல்லியபடி சமையலறை நோக்கி நடந்தவர் சட்டென்று நின்றார்.

"கார்த்தி வேற வெளியே போயிருக்கானே.. புயல்ல சிக்கிட்டாதடா மாப்பிள்ளை. பிறகு மறுபடியும் தொகுதியில் இடைத்தேர்தல் நடக்கும்படி ஆகிட போகுது. பத்திரமா வீடு வந்து சேர்ந்துடுடா.!" என்று கவலையோடு சொன்னார்.

அந்த நெடுஞ்சாலையில் புளியமரம் ஒன்றின் கீழே நின்றுக் கொண்டிருந்தார்கள் கார்த்திக்கும் அபிராமியும். இறக்கை விரித்து ஆடிக் கொண்டிருந்த புளிய மரத்தை அண்ணாந்து பார்க்க தவறி விட்டார்கள். அடிக்கும் காற்றும் இயல்பை மீறிய வேகத்தோடு வீசுவதையும் கவனிக்க மறந்து விட்டார்கள்.

கார்த்திக் கேட்ட கேள்வி அபிராமிக்கு மௌனத்தை தந்தது. அவனின் குரல் ஒன்றே அவளை கரைத்தது என்றால் பொய்யில்லை.

ஒரு இயந்திரம் போல தன் மனதை வைத்துக் கொள்ள ஆசைக் கொண்டாள் அவள். ஆனால் எவ்வளவு முயன்றும் மானிடத்தின் அதே நெகிழ்வு மனதினில் வாழ்ந்தது. காதலும், அன்பும் தன்னை தின்னவே கூடாது என்று முயற்சித்தாள். ஆனால் தன்னிடமே தோற்றுக் கொண்டிருந்தாள். தோற்பதும் வலித்தது. தோற்காமல் இருக்க முயன்றதும் வலியை தந்தது.

"உன் ரோசம் உனக்கு எவ்வளவு முக்கியம்ன்னு எனக்கு தெரியும் அபிராமி. நீ அதை விட வேணாம். தன் ரோசத்தை ஒருத்தர் ஒதுக்கி வைக்கும்போது எவ்வளவு வலிக்கும்ன்னு எனக்கும் தெரியும். கூட இருந்து உன்னை சங்கடப்படுத்தறதுக்கு பதிலா தூர போயிடலாம்ன்னு நினைச்சிதான் இந்த முடிவுக்கு வந்தேன்.." என்றான் தரையை பார்த்தபடி. அவனின் கரம் அவளின் கன்னத்தை விட்டு விலகிக் கொண்டது.

அபிராமி அவனின் சட்டையை பிடித்தாள். நிமிர்ந்து பார்த்தான். நிறைய சொல்ல ஆசைப்பட்டாள் அவள். ஆனால் தனக்குள் போராடிக் கொண்டிருந்தாள். அதை காண்கையில் அவனுக்கும் மனம் நொந்தது.

"டேக் இட் ஈஸி அபிராமி.."

"ஏன் இப்படி டார்ச்சர் பண்ற கார்த்திக்.?" அவனை பார்த்து கேட்டாள். கண்கள் கலங்கி விட துடித்தது.

மழை துளி துளியாய் தூற ஆரம்பித்தது. இருவரும் நின்ற இடத்தை விட்டு நகரவில்லை.

"சாரி.." என்றான் கார்த்திக் அவளின் கேள்விக்கு பதிலென.

"இதனால்தான் உன்னை பிடிக்கல.. ஏன்னா நீ என்னை விட அதிக திமிரா இருக்க.." எரிச்சலாக சொன்னவள் "அதனாலதான் உன்னை பிடிச்சும் இருக்கு.." என்றாள் சிறு குரலில். அதை சொல்லி முடிக்கையில் கண்ணீர் அவளின் கட்டுப்பாட்டை மீறி கசிந்து விட்டது.

"ஏன்டா இப்படி இருக்க.? நாட்டுல கொஞ்சம் போய் பாருடா.. பிடிக்கலன்னு சொன்னா ஒன்னு ஆசிட் ஊத்துவாங்க. இல்லன்னா அடுத்த பொண்ணை தேடி போவாங்க.. நீ ஏன்டா என்னை நினைச்சி உன் லைப்பையும் சேர்த்து நாசம் பண்ணிக்கிற.? இந்த நாட்டுல உனக்குன்னு ஒரு பொண்ணு கூடவா கிடைக்கல.?" என்றாள். கதறி அழ வேண்டும் போல இருந்தது. இந்த கோபத்தை, இந்த ரோசத்தை அழுகையிலேயே வெளியேற்றி விட வேண்டும் என்று துடித்தாள்.

"நாட்டுல நான் மட்டும்தான் ஆணா அபிராமி.?" அவன் கேட்டது புரியவில்லை அவளுக்கு.

"நான் பண்ணதுக்கு நீ திருப்பி பண்ணிட்டியே.. பிறகேன் நீ வேற ஒரு ஆணை லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கல.? உனக்கேத்த ஒருத்தன் கூட இங்கே இல்லையா அபிராமி.?" என்றான் கண்ணீரில் மின்னிய அவளின் விழிகளை பார்த்து. அவனின் கண்களும் தூசு பட்டது போல கலங்கிக் கொண்டுதான் இருந்தது.

அபிராமி அவனின் கேள்வியால் தடுமாறி போனாள்.

தூறல் மழையாய் மாறி பொழிய ஆரம்பித்தது. புளிய மரங்களின் பேயாட்டம் சற்று அதிகரித்திருந்தது. அந்த வழியில் அவசரமாக கடந்துக் கொண்டிருந்தவர்கள் இவர்களை ஆச்சரியமாக பார்த்தார்கள். 'இவ்வளவு மழையிலும் சிலையா நிக்கிறாங்க.. ஒருவேளை எருமை மாடுகளா இருப்பாங்களோ.?' என எண்ணினான் அவ்விடத்தை கடந்துச் சென்ற ஒருவன்.

அபிராமியின் தடுமாற்றத்தை பார்த்துக் கொண்டிருந்தான் கார்த்திக்.

"என்னை வேணாம்ன்னு சொல்லிட்டு போனவ யாரையாவது கல்யாணம் பண்ணிக்கிட்டு இருந்திருந்தா இந்த பிரச்சனையே இருந்திருக்காது அபிராமி.. உன் ஈகோவை நீ விட வேண்டாம். என்னை ஏத்துக்க வேணாம். என்னை விட்டுடு, நான் போறேன். உனக்கு ஏத்த ஒருத்தனை தேடி கட்டிக்க.." என்றவன் தன் காரை நோக்கி திரும்பினான்.

அவனின் கையை சட்டென பிடித்தாள் அபிராமி. மழையில் நனைந்த அவனின் கரங்களை இறுக்கமாக பற்றியிருந்தாள். அவன் உடனே திரும்பினான். இருவரின் உடலும் மோதியும் மோதாமலும் இருந்தது. இதழ்கள் இரண்டும் ‌ஒரு இன்ஞ் இடைவெளியில் இருந்தன.

"போகாதா.. ப்ளீஸ்.." என்றாள்‌ அபிராமி.

கார்த்திக் அவளை ஏக்கமாக பார்த்தான்.

"என்னை லவ் பண்றியா அபிராமி.?" எனக் கேட்டான்.

மறுபடியும் மௌனம் காத்தாள் அவள்.

அடித்த மழையில் உடையெல்லாம் முழுதாய் நனைந்து விட்டது இருவருக்கும். காற்றின் சத்தம் அவர்களின் செவியில் ஏறவில்லை. மாறாக இருவரின் உதட்டசைவில் இசைதனை அறிய முயன்றுக் கொண்டிருந்தார்கள்.

"இந்த காதல், கல்யாண உறவுல நான் எப்பவுமே அப்பர்ஹேண்டா இருக்கணும்ன்னு ஆசைப்பட்டதே இல்ல அபிராமி. உன்னை மிரட்டிதான் கல்யாணம் பண்ணேன். ஆனா உன் முந்தானை வாசத்துல வாழ்க்கையை கடக்கணும்ன்னுதான் ஆசைப்பட்டேன். ஆணாத்திகமெல்லாம் இந்த காதல்ல எனக்கு இல்ல அபிராமி. நீ ஆதிக்கம் செலுத்தினா அமைதியா சொல் பேச்சு கேட்டு நடப்பேன். உன்னை பார்க்கும் முன்னாடி வரை கொஞ்சம் முட்டாளா வேணா இருந்திருக்கேன். ஆனா லவ் வேறன்னு ரொம்ப நல்லா புரிஞ்சிக்கிட்டேன். காதலெனும் ஒரு மேட்டர்ல அப்பர்ஹேண்டை விட அந்த அப்பர்ஹேண்டையே ஆள விட்டுட்டு அமைதியா இருப்பவங்களுக்குதான் அதிக பெனிபிட். அதனால்தான் அப்பவே காதல்ல உன்னை ஆள விட்டு உனக்கு என்னை‌அடிமை சாசனம் எழுதி தந்தேன். ஆனா நீதான் விஷம் போல காதலை தந்துட்டு விலகி போன..

இப்பவும் அதே நிலையில்தான் இருக்கேன் அபிராமி. நீ உன் ஆதிக்க பதவியை கையில் எடுத்தா போதும். உன் காதல் தரும் வெளிச்சத்துல நானும் ஒரு பூச்செடியா வாழ்ந்துட்டு இருந்துப்பேன்.." என்றான்.

அபிராமி சிரிப்போடு கண்களை துடைத்துக் கொண்டாள்.

"நல்லா பேச கத்துக்கிட்ட நீ.!" என்றாள்.

"இல்ல அபிராமி. உண்மைதான். உனக்கு டூ‌ ஹண்ட்ரட் பர்செண்ட் பொருத்தமானவன் நான்தான். ஒரு வட்ட தகட்டை கோணையாய் இரண்டு துண்டா வெட்டி உன்னையும் என்னையும் படைச்சிட்டான் கடவுள். இரண்டு பேரும் இந்த கியர் பற்கள் மாதிரி.. ஆனா ஆரம்பத்துல தப்பா இணைஞ்சதால மேடு பள்ளம் முறையா நிரம்பவே இல்ல. இப்ப நிறைய பட்டுட்டோம். சரியா பொருந்துவோம். பற்களோ முட்களோ ஒன்னையொன்னு இடிச்சிக்காது. கரெக்டா வாழ்க்கை மூவ் ஆகும்." என்றான்.

"பைக் ரிப்பேர் கடையில் வேலை பார்த்தியா.?" சிரிப்போடு கேட்டவளின் முகத்தை இரு கைகளாலும் பற்றியவன் அவளின் கன்னங்களை துடைத்து விட்டான்.

"இல்ல.. ஆனா கியர் சக்கரங்களை பார்க்கும் போதெல்லாம் உன்னை ஒன்னாவும், என்னை ஒன்னாவும் நினைச்சி பார்ப்பேன்.." என்றான்.

"எனக்கு உன் திமிர் பிடிக்கவே பிடிக்காது.. இது தெரியும்தானே.?" என்றாள்.

"தெரியும். ஆனா எனக்கு உன் திமிரை ரொம்ப பிடிக்கும்.."

அபிராமி இடம் வலமாக தலையசைத்தாள்.

"இங்கே ஆண்களுக்கு பெண்களோட திமிரை பிடிக்காது.." என்றாள்.

இப்போது கார்த்திக் இடம் வலமாக தலையசைத்தான்.

"நிறைய பேருக்கு பிடிக்கும். தன் மகள், தன் தங்கை திமிரா இருக்கும்போது பெரும்பாலோனோருக்கு பிடிக்கும். அதே காதலியோ மனைவியோ திமிரோடு இருந்தா சிலருக்கு மட்டும் பிடிக்கும். அந்த சிலரில் நானும் ஒருத்தன்.." என்றான் தன் நெஞ்சில் விரலை குத்திக் காட்டியபடி.

அவர்களின் பேச்சை நிறுத்தும் விதமாக படாரென்று சத்தம் ஒன்று கேட்டது. இருவரும் தங்களின் தனி உலகில் இருந்து வெளிவந்தனர். திரும்பி பார்த்தார்கள். இவர்கள் நின்றிருந்த புளியமரத்திற்கும் அருகில் இருந்த மற்றொரு புளியமரம் அடித்த மழை காற்றிற்கு வேரோடு சாய்ந்து கீழே விழுந்திருந்தது.

ஏதோ மழை என அரையாய் மனதில் பதிந்து வைத்திருந்தவர்கள் இந்த பேய் மழையை சரியாக கவனிக்கவில்லை.

விழுந்த புளியமரத்தின் கிளை ஒன்று அபிராமியின் காரின் மீது விழுந்திருந்தது.

தன் காரை நோக்கி செல்ல முயன்றவளை கைப்பிடித்து இழுத்த கார்த்தி தனது காரை திறந்தான்.

"உள்ளே போ.." என்றான்.

அடித்த மழை இப்போதுதான் கண்களுக்கு தெளிவாய் தெரிந்த காரணத்தால் சட்டென்று காரில் ஏறி அமர்ந்துக் கொண்டாள் அபிராமி.

கார்த்திக் புளிய மரங்களை வியப்போடு பார்த்தபடி காரில் ஏறினான்.

"நல்ல மழை.." என்றவன் காரை இயக்கினான்.

"என்ன பண்ற.? அடிக்கற காத்தை பார்த்தியா.? காரோடு சேர்த்து நம்மையும் காத்து தூக்கிட்டு போயிடும்.." என்று எச்சரித்தாள் அபிராமி.

"ஆனா இங்கே இருந்தா இந்த புளியமரமும் கீழே விழுந்தா காரோடு சேர்ந்து நாமும் அப்பளமா நொறுங்கி போவோம்.. இது ஓகேவா.?" என கேட்டவன் காரை திருப்பினான்.

மழையில் எதிரில் இருந்த எதுவும் தெரியவில்லை. சிரமப்பட்டு காரை செலுத்தினான்.

"இந்த மழையில் செத்துடுவோமா கார்த்தி.?" பயந்த குரலில் கேட்டாள் அபிராமி.

"பரவால்ல.. செத்துப்போனா மறுபடியும் பிறக்கலாம். சண்டை இல்லாம சாதாரணமா ஆயிரம் கோடி லவ் பண்ணலாம்.. பிரியாம சேர்ந்து வாழலாம்.." என்றான்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN