நெடும்வனம் 2

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
ஐந்து வருடங்களுக்கு முன்பு என்ன நடந்தது என்பதை அவ்வப்போது நினைத்துப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன் சகா.

நான் என் அப்பாவின் செல்ல பிள்ளை. ஒரு அண்ணன் இருக்கிறான். எப்போதும் தலையில் கொட்டி வைப்பான். ஆனால் அம்மா தரும் பலகாரத்தில் பங்கு தந்து விடுவான்.

எனக்கு முதலில் இருந்தே கேமரா மீதுதான் காதல். ஆனால் வீட்டில் யாரும் ஒத்துக் கொள்ளவில்லை. பள்ளி படிப்பை முடித்து கேட்டதால் ஒத்துக் கொள்ளவில்லை கல்லூரியை முடித்து விட்டு கேட்கலாம் என்று அமைதியாகி கொண்டேன் அப்போது.

அதற்கு முன் நான் உன்னை சந்தித்ததில்லை சகா.

எங்கள் வீட்டிற்கு என சில கட்டுப்பாடுகள் இருந்தது. அந்த கட்டுப்பாடுகள் தளர்ந்து விட கூடாதென்று அருகில் இருக்கும் கல்லூரிகளில் ஆண்களும் படிக்கிறார்கள் என்று தூரத்தில் இருந்த ஒரு பெண்கள் கல்லூரியில் என்னை சேர்த்து விட்டார்கள்.

என்னோடு சேர்ந்து பள்ளியில் படித்த மற்ற பெண்கள் அருகிலேயே ஒரு கல்லூரியில் சேர்ந்து கொண்டார்கள். என்னை பார்க்கும் போதெல்லாம் நான் என்னவோ அயல் நாட்டுக்கு பட்டம் படிக்க சென்றது போல நினைத்து பாராட்டினார்கள் ‌

எண்பது கிலோமீட்டருக்கும் அந்த பக்கமாக உள்ள அந்த கல்லூரிக்கு கிளம்ப வேண்டுமென்றால் காலையில் ஆறு மணிக்கே தயாராகி விட வேண்டும். அந்த கல்லூரிக்கு செல்லும் பேருந்தும் ஊர் வரை வராது. ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் உள்ள மெயின்ரோட்டுக்கு சென்றுதான் கல்லூரி பேருந்தை பிடிக்க வேண்டும். முதல் நாள் காலையில் அண்ணன் தனது பைக்கில் கூட்டிச் சென்று விட்டு வந்தான். தினமும் காலை நேரத்தில் என்னை பேருந்துக்கு கூட்டி சென்று விடுவதாக வாக்குறுதியும் தந்தான்.

என் அண்ணன் நகரத்தில் உள்ள ஒரு தனியார் அலுவலகத்தில் வேலை செய்துக் கொண்டிருந்தான். அலுவலக வேலை முடியவே மணி ஆறரையை தாண்டிவிடும். அதற்கு மேல் ஊருக்கு கிளம்பி வருபவன் அவன் வந்து சேரவே ஏழு மணி ஆகி விடும். அதனால் அவனால் மாலை வேளையில் என்னை வீட்டிற்கு கூட்டி செல்ல முடியாமல் போய்விட்டது. எனது அப்பாவிற்கும் பைக் ஓட்ட தெரியாது.

மாலையில் அண்ணன் வரமாட்டான் நாம்தான் நடந்தே ஊர் போய் சேர வேண்டும் என்ற எண்ணம் முதல் நாள் கல்லூரி பேருந்தில் ஏறிய போதே சலிப்பை தந்தது எனக்கு. முதல் நாள் கல்லூரி வழக்கத்தை விட சற்று உற்சாகத்தை தந்தது. புது தோழிகள் அறிமுகமானார்கள். புது இடம், புது முகம் என அந்த நாள் சென்றதே தெரியவில்லை.

மாலையில் பேருந்தை விட்டு இறங்கும் போது பழைய சலிப்பு மீண்டும் வந்து சேர்ந்தது. பேருந்தில் இருந்த என் தோழிகள் "விசாகா டாடா.." என கத்தினார்கள். சிறு புன்னகையோடு அவர்களுக்கு கையசைத்து விட்டு என் ஊருக்கு செல்லும் பாதையில் இறங்கி நடக்க தொடங்கினேன்‌

அந்த சாலைக்கும் எனது ஊருக்கும் இடையில் எந்த சம்பந்தமும் இல்லை. எங்களுடைய ஊரை மேற்கு திசையில் இருந்த மற்றொரு சாலை நகரத்தோடு இணைத்து கொண்டிருந்தது‌. கல்லூரி பேருந்து அந்த சாலையை விடுத்து இந்த சாலையில் வந்தது என் துரதிஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும்.

அந்த சாலையும் அந்த சாலையின் ஓரங்களில் தூரதூரமாக உள்ள ஒற்றை வீடுகளும் எனக்கு அறிமுகம் கிடையாது. டிராக்டர் செல்லும் மண் சாலை அது. பாதையின் இருபக்கமும் ஆளுயர கருக்கட்டான் செடிகள் புதர் போல வளர்ந்து இருந்தன.

மணி ஆறை நெருங்கி கொண்டிருந்தது‌. ஜீன் ஜீலை பருவம் ஆறு மணியை பளிச்சென காட்டிக் கொண்டிருந்தது. இருந்தாலும் ஜன நடமாட்டம் இல்லாத சாலையில் தனியாக நடப்பதற்கு சற்று நெருடலாகதான் இருந்தது‌ எனக்கு.

"இதெல்லாம் ஒரு ஊரா.? ஏழு மைலுக்கு ஒரு வீட்டை கட்டி வச்சிருக்காங்க.. அவசரத்துக்கு தாகத்துக்கு கூட தண்ணீர் கிடைக்காது போல.." சிறு கோபத்தோடு மண் பாதையில் இருந்த சிறு கல்லை உதைத்தபடி நான் சலித்துக் கொண்ட நேரத்தில் என் பின்னால் களுக்கென ஒரு சிரிப்பு குரல் கேட்டது.

சட்டென என் நடையை நிறுத்தி விட்டு திரும்பி பார்த்தேன் நான். அரை குறை தாடியோடு இளைஞனாக இருந்த நீ உனது தோள் பையை தோளிலிருந்து கழட்டியபடி என் பின்னால் நடந்து வந்துக் கொண்டிருந்தாய்.

அன்று முதல் முறை உன்னை பார்த்தபோது மனதுக்குள் பட்டாம்பூச்சி எதுவும் பறக்கவில்லை. உண்மையைதான் சொல்கிறேன் சகா.

யார் இவன் என்று உன்னை பற்றி நான் யோசித்து குழம்பி நின்ற வேளையில் பக்கத்தில் வந்த நீ உன்னிடமிருந்த தண்ணீர் பாட்டிலை நீட்டினாய். நானோ புரியாமல் உன்னை பார்த்தேன்.

"அவசரத்துக்கு தண்ணீர் தர கூட வீடு இல்லன்னு சொன்னியே, அதான் தாகமா இருக்கியோன்னு நினைச்சேன்.." என்று சொன்ன நீ தண்ணீர் பாட்டிலை பின்னுக்கு இழுக்க நேரத்தில் அந்த பாட்டிலை பிடிங்கிக் கொண்டேன் நான். வறண்டுக் கொண்டிருந்த நாக்கை பற்றி என்னவென்று சொல்ல.?

தண்ணீரை குடித்து முடித்ததும் காலி பாட்டிலை உன்னிடம் தந்து விட்டு "தேங்க்ஸ்.‌" என்றேன்.

"எந்த ஊர் நீ.?" நீதான் முதலில் பேச்சு தந்தாய்.

"எதுக்கு சொல்லணும்.?" என் பதில் கேட்டுவிட்டு சிரித்தாய் நீ. என் பதில் உனக்கு ஏன் சிரிப்பை தந்தது என்று அப்போது தெரியவில்லை எனக்கு.

"குப்பம்மா பட்டிகார பொண்ணுன்னு பார்க்கும் போது கூட தெரியல.. ஆனா பேசும்போது தெரியுது.." என்றாய் நீ. எனக்கு கோபமாக வந்தது நீ சொன்னதை கேட்டு.

நீ உனது பையை தோளில் மாட்டிக் கொண்டு என்னோடு இணைந்து நடக்க ஆரம்பித்தாய். அவ்வளவு நீள சாலையில் உன்னோடு நான் இணைந்து நடக்கும்படி செய்த விதியை என்னவென்று சொல்வது.?

"எங்க ஊர் பேர் குப்பம்மா பட்டி இல்ல.. குப்பியூர்.." என்றேன் நான் ரோசத்தோடு. எங்களூருக்கு பல வருடங்களுக்கு முன்பு இந்த பேர் இருந்தது. ஆனால் நாங்கள் எங்கள் ஊரின் பெயரை மாற்றிக் கொண்டோமே!

இதை நான் சொன்ன அடுத்த நொடி உன் வயிற்றை பிடித்துக் கொண்டு சிரித்தாய் நீ.

"குப்பம்மா பட்டியே பரவால்ல.. உங்க ஊரோட புது பேர் இன்னும் காமெடியா இருக்கே.." என்ற நீ அடக்க முடியாமல் சிரித்தாய்.

எனக்கோ ஊர் மீது கொண்ட பாசத்தால் தன்மானம் பொங்கி எழுந்தது. எனது கை விரல்களை மடக்கி உனது நடு வயிற்றில் ஒரு குத்து விட்டேன். நீ சட்டென சிரிப்பை நிறுத்தி விட்டு அதிர்ச்சியோடு என்னை பார்த்தாய். 'இளைத்தவள் என்று நினைத்தாயா என்னை.?' என்ற கேள்வி என் தூக்கி நின்ற புருவங்களுக்கு இடையே இருந்தது.

"எங்க ஊரை இன்னொரு முறை கிண்டல் பண்ணா அப்புறம் நடக்க கால் இருக்காது.." என்று உதட்டை சுழித்துச் சொன்ன நான் உன்னை முறைத்து விட்டு நடந்தேன்.

நமது முதல் சந்திப்பை பற்றி நினைக்கையில் எனக்கு இன்னமும் கூட சிரிப்பாகதான் வரும் சகா.

சில அடி தூரம் சென்ற பிறகு திரும்பி பார்த்தேன் உன்னை‌. பார்க்கவில்லை முறைத்தேன் என்று சொல்லலாம்‌.

உனது வயிற்றை பிடித்தபடி என்னை பார்த்துக் கொண்டிருந்தாய் நீ‌. நான் தந்த குத்து உனக்கு வலியை தந்திருக்கிறது என்பதை நினைக்கையில் என் மீதான எனது பெருமிதம் அதிகரித்தது‌.

"வேலியில் போன ஓணானை எடுத்து வேட்டியில் விட்ட கதை போல என்னோடது.." நீ புலம்பியது என்‌ காதிலும் வந்து விழுந்தது.

உன்னை முறைத்துவிட்டு கோபத்தோடு திரும்பி நடந்தேன் நான். கோபத்தின் காரணமாய் நடை சற்று வேகமாக இருந்தது எனக்கு. ‌ வெகு தூரம் வந்த பிறகு திரும்பி பார்த்தேன். நீ என் கண்களில் தென்படவில்லை. ஏதோ ஓர் எருமை மாடு என உன்னை எண்ணியபடியே வீட்டிற்கு வந்து சேர்ந்தேன்.

அம்மாவும் அப்பாவும் எனது கல்லூரி நாள் எப்படி இருந்தது என விசாரித்தனர்.

"எல்லாம் நல்லாதான் போச்சி." என்று ஒற்றை வாசகத்தோடு முடித்துக் கொண்டு எனது கல்லூரி பையை கூடத்தின் ஒரு ஓரத்தில் இருந்த இருக்கையின் மீது தூக்கி போட்டேன்.

"இதை எடுத்து ஒழுங்கா வை.." அம்மா கத்தினாள் வழக்கம் போல. நானும் செவிடு போல அமைதியாக இருந்துக் கொண்டேன் வழக்கம் போல.

முதல் நாள் கல்லூரி சென்றது அலுப்பாக இருப்பது போல் தோன்றியதால் உணவை கூட உண்ணாமல் உறக்கத்தில் விழுந்து விட்டேன்.

இரவு உணவை உண்ணும்போது அண்ணன்காரன் என்னை எங்கே என்று அம்மாவிடம் கேட்டிருப்பான் என்று நினைக்கிறேன். எனது தூக்கத்தில் என் தலையை அவன் தடவி தந்ததாக கொஞ்சமாய் நினைவு இருக்கிறது.

நடைப்பயணம் எனக்கு தந்த அசதியாலோ என்னவோ அன்று இரவு அடித்து போட்டது போல உறங்கினேன்‌.

மறுநாள் அதிகாலையில் எழுந்து கல்லூரிக்கு தயாரானேன். "அவ்வளவு தூரத்துல இருக்கற காலேஜ்க்கு அனுப்புறதுக்கு பதிலா எனக்கு ஒரு கேமராவை வாங்கி தர கூடாதா.?" குளியலறையில் நின்றபடி புலம்பினேன் நான்.

"பொட்டபுள்ளைக்கு எதுக்குடி கேமரா எழவெல்லாம்.?" அம்மா தனது வழக்கமான பல்லவியை பாடினாள்.

கடுப்பாக இருந்தது அம்மா சொன்னதை கேட்டபோது. பொட்டபுள்ளை ஏன் கேமராவை கையில் எடுக்க கூடாது.? இந்த உலகத்தின் வனங்களில் ஒளிந்துள்ள பல அற்புதங்களை யாரும் பார்த்தது இல்லை. நான் கேமராவின் மூலம் அதை அனைவருக்கும் காட்ட நினைக்கிறேன். இது அம்மாவுக்கு மட்டும் புரிவதே இல்லை.

ஈர தலையோடு வெளியே வந்தேன்.

"ஒருநாள் நான் இந்த வீட்டை விட்டு ஓடி போக போறேன்.." கடுப்பின் மிகுதியில் என்னை மீறி வந்தது வார்த்தைகள். ஆனால் நான் இதை சொல்லி முடித்த வேளையில், அம்மாவின் கையில் இருந்த துடைப்பம் என் மீது வந்து மோதியது.

அதிகாலையில் இதை விட சிறந்த அர்ச்சனை யாருக்கு கிடைக்கும்!?

"உன்னை வளர்த்தினதுக்கு பதிலா ஒரு எருமையை வளர்த்தி இருக்கலாம்.." அம்மாவின் புலம்பலை காதில் வாங்க மறுத்தேன் நான்.

"காலங்காத்தால என் மவ மேல தொடப்பகட்டையை எடுத்து வீசுறியே, அறிவிருக்காடி உனக்கு.?" அப்பா அம்மாவை திட்ட ஆரம்பித்த நேரத்தில் நான் எனது ஈர தலையை உலர்த்த போய் விட்டேன்.

"எருமையையே வாங்கி மேய்க்க வேண்டியதுதானே.. என்னை யார் வளர்த்த சொன்னாங்க.?" டிபன் பாக்‌ஸில் உணவை நிரப்பும்போது சொன்னேன். இதோடு இந்த வார்த்தைகளை பத்து முறையாவது சொல்லி இருப்பேன். எருமையும் நானும் ஒன்று என்று எப்படி அம்மா சொல்லலாம்.?

ஆறு மணிக்கெல்லாம் கல்லூரி பேருந்தில் ஏறியாயிற்று. இவர்களின் கட்டுப்பாட்டிற்காக என்னை சரியாக தூங்க கூட விடாமல் கொல்கிறார்கள்.

"பாப்பா பத்திரம்.." அண்ணன் கையசைத்து விட்டு கிளம்பினான்.

இது போன்ற நேரங்களில்தான் நானும் ஆணாய் பிறந்திருக்க வேண்டியது எவ்வளவு முக்கியம் என்று தோன்றும். ஆணாய் பிறந்திருந்தால் அருகில் உள்ள கல்லூரியில் சேர்ந்து படித்திருக்கலாம். அம்மாவிற்கும் செல்லமாக இருந்திருக்கலாம். அப்பாவின் வருவாயை சுதந்திரமாக செலவு செய்திருக்கலாம்.

உயர்நிலை பள்ளி நாட்களில் பணம் கேட்டால் கூட எனக்கு பணம் தர அம்மாவிற்கு மனம் வராது. ஆனால் எனக்காக நிறைய பணம் சேர்த்து வைத்திருந்தார்கள். அந்த பணமெல்லாம் என்னை கட்டிக்கொள்ள போகிறவனுக்கு நகையாய் போய் சேர போகிறது என்று சொல்லி கொள்வார்கள். அம்மா என்னை இப்படியே எருமையோடு ஒப்பிட்டு பேசிக் கொண்டிருந்தால் பிறகு நான் அந்த பணத்தில் கேமரா ஒன்றை வாங்கிக் கொண்டு ஊரை விட்டே ஓடி விடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன் அப்போது.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN