முன்னுரை

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member

முத்தமிழுக்கு நிச்சயத்தார்த்தம் அன்று.

மகிழ்ச்சியோடு தன் நிச்சயத்தார்த்தத்திற்கு தயாராகிக் கொண்டிருந்தான். தனது மனைவியாய் வர போகும் மதுமிதாவோடு சேர்ந்து நிறைய கதைகள் பேசிக் கொண்டிருந்தான். அவன் முகத்திலும் அவ்வளவு சந்தோசம். அவன் வீட்டிலும் அவ்வளவு சந்தோசம்.

புவனா தன் அறையில் முடங்கி அமர்ந்திருந்தாள். இந்த நாள் வருமென்று அவள் எதிர்பார்க்கவேயில்லை.

நேற்று மாலை முத்தமிழோடு பேசியதை நினைத்துப் பார்த்தாள்.

"நிஜமாவே நீங்க அந்த பொண்ணை கல்யாணம் பண்ணிக்க போறிங்களா.?" என்று ஏக்க விழிகளோடு கேட்டாள் அவனிடம்.

"ஆமா. ரொம்ப வருச லவ்.." என்றவனிடம் மறுப்பாக தலையசைத்தாள்.

"பொய் சொல்லாதிங்க. நீங்க யாரையும் லவ் பண்ணல.." அழுகை குரலோடு மறுத்துச் சொன்னாள் புவனா.

"நான் லவ் பண்ணலன்னு உனக்கு எப்படி தெரியும்.?" புருவம் நெரித்து கேட்டவனிடம் பயந்துப் போகவில்லை அவள்.

"இத்தனை வருசமா உங்க நிழல் மாதிரி சுத்திட்டு இருக்கேன். எனக்கு தெரியாதா.?" என்று எதிர்த்துக் கேட்டாள்.

தன்னை கேவலமாக பார்த்தவனை அதே ஏக்கத்தோடுதான் பார்த்தாள் அவள்.

"ஒரு பொண்ணுக்கிட்ட இருக்கற எந்த லட்சணமாவது உன்கிட்ட இருக்கா.?" என்றவனை குழப்பமாக பார்த்தாள். அவன் சொல்ல வருவது புரியவில்லை அவளுக்கு.

"உங்க வீட்டுல உன்னை நம்பி காலேஜ்க்கு அனுப்பினாங்க. ஆனா நீ காலேஜ் போகாம என்னை வட்டம் அடிச்சிட்டு இருந்த.! உன் வீட்டுல இருந்தவங்க உன் மேல வச்ச நம்பிக்கையை உடைச்சவ நீ.! உன்னை நான் என்னன்னு திருப்பி லவ் பண்ணட்டும்.? நான் என்ஜினியரிங்கில் முதுகலை பட்டம் வாங்கியவன். நீ உன்னோட பி.ஏ ஹிஸ்ட்ரியையே இன்னும் முடிக்காம அரியர்ஸ் வச்சிருப்பவ. நான் என் வயல்ல இறங்கி விவசாயம் பார்க்கறவன். நீ சாப்பிடும்போது உனக்கு தாகமெடுத்தா கூட உன் அம்மாதான் தண்ணீர் கொண்டு வந்து தரணும். எனக்கு என் தங்கச்சியை ரொம்ப பிடிக்கும். ஆனா உனக்கு என் தங்கச்சியை கொஞ்சம் கூட பிடிக்காது. அதை விட முக்கியம் எனக்கும் உனக்கும் நடுவுல எட்டு வயசு வித்தியாசம். மதுமிதாவும் நானும் கிளாஸ்மேட்ஸ். எங்களுக்கு ஒத்து வரும். ஆனா எனக்கு நீ எந்த விதத்திலும் செட் ஆக மாட்ட.." என்றுவிட்டு விலகி சென்றான் அவன்.

அவன் சொன்னதையே நினைத்து நினைத்து மனதுக்குள் மாய்ந்தாள் புவனா. அழுகையில் நெஞ்சம் வெடித்தது அவளுக்கு. ஆறாத காயமாய் அவனின் நினைவு கொன்றது.

பதினெட்டு வயதிலிருந்து அவனை காதலித்துக் கொண்டிருக்கிறாள் புவனா. அவன் பின்னால் சுற்றிக் கொண்டிருந்ததில் படிக்கவே இல்லை அவள். அதன் காரணமாய் கடைசி வரையிலும் அந்த வரலாற்று பாடத்தை அவள் எழுதி முடிக்கவேயில்லை.

ஐந்து வருடங்களை கடந்துவிட்ட ஒருதலைக் காதல் அவளுடையது.

ஆன்மா அழிந்தாலும் அவன் மீது கொண்ட அவளின் காதல் அழியும் என்று நம்பிக்கை இல்லை.

அவனின் மனதில் வேறு எவளோ குடிக் கொண்டதை நம்ப முடியவில்லை.

அவனை மற்றொரு பெண்ணோடு மணமேடையில் பார்க்க விரும்பவில்லை அவள்.

மாற்றாள் ஒருத்தியின் மணமகனாய் அவனை காண்பதற்கு பதில் தன்னை மாய்த்துக் கொள்வது மேல் என்று சொன்னது அவளின் முட்டாள் மூளை. அவன் மட்டுமே உலகம் என்று எண்ணிக் கொண்டிருந்தவள் அவன் இல்லாததும் உலகத்தையே துறக்க மூடத்தனமாக முடிவு செய்தாள்.

வயலுக்கு வாங்கி வைத்த விஷத்தை கையில் எடுத்தவள் தன் குடும்பத்தை பற்றி ஒரு நொடி நினைத்து பார்த்திருக்கலாம். இறந்தாலும் கிடைக்காதவனுக்காக இறக்க முடிவு செய்திருக்க கூடாது.

அடுத்த இரண்டாம் மாதம் அவளுக்கும் முத்தமிழுக்கும் இடையே திருமணம் நடந்தது.

பயந்தபடிதான் அவன் கரம் பிடித்தாள். அவளின் பயத்தை நிஜமென்று உரக்க சொன்னான் அவன்.

"முட்டாள் நீ! உன்னை மாதிரி ஒரு முட்டாளோடு வாழ்க்கையை பகிர்ந்துக் கொள்வது சுத்தமா பிடிக்கல எனக்கு.." என்று அவளின் காதோரத்தில் தெளிவாக சொன்னான்.

"இறந்திருக்கலாம் நான். எதற்கு காப்பாற்றினீர்கள்.?" என்று கண்ணீரோடு கேட்டவளுக்கு அந்த இறப்பை விட அதிகமான வலியாய் மாறி போனான் அவன்.

அவன் வேண்டுமென்று கேட்கவில்லை அவள். தன் மனதை மாற்றிக் கொள்ள இயலாமல், தன்னை சரி செய்துக் கொள்ள இயலாமல்தான் சாவை தேடினாள். அப்படியே அவளை விட்டிருக்கலாம் அவர்கள்.

அவனின் காதலை வரமென நினைத்திருந்தவள் அக்காதல் சாபமாய் மாறும் என்று கனவிலாவது அறிந்திருந்தாளா.?

இளவரசிகள் பிறக்கிறார்கள். ஆனால் அரசிகள் உருவாகுகிறார்கள்.

தன் வீட்டின் செல்ல இளவரசி அவள். ஆனால் முத்தமிழின் அரசியாய் மாற இயலுமா அவளால்.? தடைகளை தகர்ப்பாளா.? அவன் அவன் என்று கனவில் கதைத்துக் கொண்டிருந்தவள் அவன் நிஜமாய் கிடைக்கையில் என்ன செய்தாள்.?

விரைவில் முதல் அத்தியாயம்..
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN