நெடும்வனம் 3

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
கல்லூரியின் இரண்டாம் நாளில்தான் சுசி வகுப்புக்கு வந்து சேர்ந்தாள். அவளை பார்த்த உடனே அவளுக்கும் எனக்கும் இடையே பந்தம் இருப்பதாக மனம் சொன்னது. உடனே நட்பில் இணைந்து விட்டோம்.

மற்ற தோழிகளை விட இவள் எனக்கு நெருங்கிய தோழியாகிவிட்டாள். அதுவும் முதல் நாளே! நினைத்துப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கும் எனக்கு.

காலையில் நான் வந்த அதே கல்லூரி பேருந்தில்தான் அவளும் வந்துள்ளாள் என்பதை மாலையில் பேருந்தில் ஏறும்போதுதான் அறிந்தேன் நான்.

இருவரும் அன்றிலிருந்து எங்களுக்கான பேருந்து இருக்கையை பட்டா இல்லாமலேயே பதிவு செய்துவிட்டோம்.

புது தோழிகளின் இடையே இருந்தது பிடித்திருந்தது எனக்கு. பேருந்து பயணம் கூட இவ்வளவு கலகலப்பாக இருக்கும் என்பதையே அந்த நாளில்தான் அறிந்துக் கொண்டேன் நான். ஆனால் இந்த பேருந்தை விட்டு இறங்கியதும் ஒன்றரை கிலோமீட்டர் நடக்க வேண்டுமே என்ற கவலைதான் என்னை வருத்தியது.

அந்த மெயின் ரோட்டில் எங்கள் பேருந்து நின்ற அதே நேரத்தில் எங்கள் பேருந்தின் பின்னால் வந்து நின்றது மற்றொரு பேருந்து. இருபது கிலோமீட்டருக்கு அந்த பக்கம் இருந்த பாலிடெக்னிக் கல்லூரிக்கு சொந்தமான பேருந்து அது. பேருந்தோ கல்லூரியோ முக்கியமில்லை. பேருந்திலிருந்து இறங்கிய நீதான் முக்கியம். சாலையில் இறங்கி நின்றதும் திரும்பி என்னை பார்த்த உன் விழிகளின் பார்வைதான் முக்கியம்.

"விசாகா தள்ளு நில்லுடி.." என்று தோழிகளின் கத்தல் சத்தம் கேட்டு தள்ளி நின்றேன்.

இரண்டு பேருந்துகளும் அவ்விடத்தை விட்டு நகர்ந்தன.

கையில் முக்கோண ஸ்கேலை பிடித்தபடி தோளில் இருந்த பேக்கை சரிசெய்துக் கொண்டு என் அருகே வந்தாய் நீ.

என்னை குறும்பு சிரிப்போடு பார்த்துவிட்டு என்னை தாண்டிக் கொண்டு மண் சாலையில் இறங்கி நடக்க தொடங்கினாய்.

உன் முதுகை வெறித்தேன் நான். நீ என் ஊரை செய்த கேலியை நான் மறந்து விடவில்லை. குப்பியூர் என்பது எவ்வளவு அழகான பெயர் என்று எங்களுக்கு தெரியும். நீ நம்பாவிட்டால் எங்களுக்கு ஒன்னும் நட்டமில்லை.

பாடல் ஒன்றை முனகியபடி நடந்தாய் நீ. நான் உன்னை கண்டும் காணாதது போல நடக்க முயன்றேன்.

"உன் பேர் என்னன்னு சொல்லவே மாட்டியா.?" கொஞ்ச தூரம் போன பிறகு என் பக்கம் திரும்பி பார்த்துக் கேட்டாய் நீ.

நான் மறுப்பாய் தலையசைத்ததும் நீ களுக்கென்று சிரித்தாய்.

"நீ இனி தினம் இதே வழியில்தான் போக போறியா.?" மீண்டும் கேட்டாய் நீ.

என்னை பார்த்தபடி பின்னால் அடியெடுத்து வைத்து நடந்துக் கொண்டிருந்தாய் நீ. என் முகத்தில் படம் காட்டுகிறார்களா என்று முறைக்க தோன்றியது எனக்கு.

ஆமென தலையசைத்தேன் நான்.

"நானும் இதே வழியில்தான் நடக்க போறேன். தினம் இதே முகத்தைதான் நீ பார்க்கணும். உன் பேரை தைரியமா சொல்லு.. நான் உன்னை கடிச்சி தின்னுட மாட்டேன்.!" என்றாய் நீ.

"உன் பேர் என்ன.?" உனது பெயரை அறியாமல் நான் ஏன் எனது பெயரை சொல்ல வேண்டும் என்று எனக்குள் ஒரு கேள்வி.

"சகாதேவன். நீ வேணா தேவான்னு கூப்பிட்டுக்கோ.." என்றாய் என்னைப் பார்த்து நடந்தபடி.

அப்போதே முடிவெடுத்தேன் உன்னை அழைக்க வேண்டிய சூழ்நிலை வந்தால் நிச்சயம் சகா என்று மட்டும்தான் அழைப்பேன் என்று.

"நான் விசாகா.." என்றேன்.

உன் விழிகள் ஆச்சரியத்தில் விரிந்தது.

"உன் பேர் செமையா இருக்கு பாப்பா.." என்றாய். உன் குரலில் உண்மையிலேயே ஆச்சரியம் இருந்தது.

"பாப்பான்னு கூப்பிடாதே.." எனது குரலில் கடுகடுப்பு தானாய் வந்து விட்டது.

என் அண்ணன் மட்டும்தான் என்னை பாப்பா என்று அழைக்க வேண்டும். மற்றவர்கள் அழைத்தால் எனக்கு அவன் நினைவுதான் வரும். என் அண்ணனை இங்கிருக்கும் எந்த ஆண்களோடும் நிறுத்தி பார்க்க முடியாது என்னால். அவன் மீது நான் கொண்ட பாசம் அப்படி.

"சரி விசாகா.." என்றாய்.

"உன் பின்னாடி டிராக்டர் வருது.."

நான் சொன்னது கேட்டு திரும்பி பார்த்தாய். டிராக்டர் வெகுதூரத்தில் வந்துக் கொண்டிருந்தது. பிறகு நீ திரும்பவில்லை‌. நேராய் மட்டுமே நடந்தாய்.

டிராக்டர் நம்மை கடந்துச் சென்றது.

பாதி தூரம் சென்ற பிறகு வடக்கே இருந்த ஒரு ஒற்றையபடி பாதையில் இறங்கி நடந்தாய் நீ.

உன் வீட்டிற்கு அந்த வழியில்தான் செல்ல வேண்டும் என்று புரிந்து போனது. நான் என் ஊரை நோக்கி நடந்தேன்.

நடப்பது சிரமமில்லை. ஆனால் நான் நடப்பதுதான் சிரமம். இப்போது வனங்களில் அலையுகையில் அந்த சிரமம் ஏனோ தென்படவில்லை சகா.

நமது இரண்டாம் நாள் சந்திப்பு அப்படிதான் முடிந்தது.

கிழக்கு சாலை வழி நான் தினம் பயணப்பட்டேன். நீயும் உடன் வந்தாய். பெரிதாய் பேசிக்கொள்ளவில்லை இருவரும்.

உன்னோடு அந்த சாலையில் நடந்த ஒவ்வொரு நாட்களுக்கு அவ்வளவு முக்கியமாக இருக்கும் என்று அப்போது எனக்கு புரியவில்லை.

இரண்டு மாதங்கள் கடந்து விட்டது அதற்குள். அப்போது வரையிலுமே உன்னை பார்க்கையில் எலியை துரத்தும் பூனையாகதான் வெறித்தேன் நான்.

அதிகாலை நேரத்தில் எழுந்து மாலை வீடு வந்து சேருவது சோம்பலை தந்தது. என் அண்ணனை, அப்பாவை விட நான் அதிகம் உழைப்பது போல இருந்தது.

இந்த தொலைத்தூர கல்லூரி பயணத்தில் நடந்த ஒரே நல்ல விசயம் என்னவென்றால் என் அம்மா எனக்கு எந்த வீட்டு வேலையும் வைக்கவில்லை. இச்செய்தி உனக்கு சிரிப்பை தரலாம் சகா. ஆனால் என்னை போன்று தினமும் அதே வேலைகளை சுழற்சியாய் செய்வோருக்குதான் கஷ்டம் தெரியும்.

அந்த இரண்டு மாதங்கள் கடந்த ஒரு நாளில் பேருந்து விட்டு நான் இறங்கி ஐந்து நிமிடங்கள் கடந்த பிறகும் கூட உனது பேருந்து அங்கே வந்து சேரவில்லை.

உனக்காகதான் மெள்ள நடந்தேன் நான். உனது பேருந்து ஏற்கனவே சென்றிருக்கலாம் என்ற எண்ணமும் வந்தது. இந்த இரு மாதத்தில் இரண்டு பேருந்துகளும் ஒரே சமயத்தில்தான் கிழக்கு ரோட்டை வந்தடைந்துக் கொண்டிருந்தது‌. இன்று ஏன் உன் பேருந்துக்கு தாமதம் அல்லது அவசரம் என்று தெரியவில்லை.

வேகமாய் நடக்கவும் முடியவில்லை. காத்திருக்கவும் தயக்கமாக இருந்தது.

பத்து நிமிடங்கள் நான் அன்ன நடை நடந்த பிறகு உன் செருப்பு சத்தம் கேட்டது. எவ்வளவு ஆவலாக திரும்பினேன் என்பதை சொன்னால் புரியாது.

நீ என்னை பார்த்தாய். உடனே உன் கை கடிகாரத்தையும் பார்த்தாய்.

"விசாகா.. உன் பஸ் லேட்டா.?" உனது கேள்விக்கு மறுத்து தலையசைத்தேன் நான்.

"உன் பஸ் ஏன் லேட்.?" கேட்கவே கூடாதென்று இருந்தும் கேட்டு விட்டேன்.

"எங்க காலேஜ்க்கு போற ரோட்டுல வேலை நடக்குதுப்பா.. இன்னும் ஒரு மாசத்துக்கு சுத்திதான் பஸ் வரும். அதனால பத்து நிமிசம் லேட்டாகும்.." என்ற நீ உன் பேக்கை திறந்தாய்.

"எங்கே அதுக்குள்ள போயிடுவியோன்னு நினைச்சிட்டே இருந்தேன் நான்.." என்ற நீ உன் பேக்கிலிருந்து ஒரு காகித மடிப்பை எடுத்து நீட்டினாய்.

பத்தாய் மடித்திருந்த காகிதம் அது. நீ எனக்கு காதல் கடிதம் தருகிறாயோ என்னவோ என்று எண்ணி குழம்பி விட்டேன் நான்.

"உனக்குதான்.." என்று என் கைகளை பிடித்து அந்த காகிதத்தை வைத்தாய்.

சந்தேகத்தோடு பிரித்தேன்.

"பத்திரமா பிரி.. கொட்டிடாத.." உன் எச்சரிப்புக்கு பிறகே உள்ளே உள்ளது காதல் வார்த்தைகள் அல்ல வேறு ஏதோ என்பது புரிந்தது. என்னை நினைத்து என் எண்ணம் நினைத்து சிரிப்பாக வந்தது எனக்கு.

உள்ளே சிறு சிறு குச்சிகளாக என்னவோ இருந்தது. ஏதோ பூக்களின் விதை. ஆனால் சட்டென்று பிடிபடவில்லை எனக்கு.

"டேரா பூ விதைங்க.. எங்க காலேஜ் கேம்பஸ்ல இருக்கு செடிகள். அதுல ஒரு பூவை பிச்சி அதை காய வச்சி விதை சேகரிச்சேன்.." என்றாய் நீ.

டேரா பூ செடி வளர்க்க நான் ஆசை கொண்டது என்னவோ உண்மைதான். ஆனால் இது எப்படி உனக்கு தெரியும் என்றுதான் எனது குழப்பமே!

உன்னை அதிர்ச்சியோடு நான் பார்த்ததை என்னவென்று நீ புரிந்துக் கொண்டாயோ தெரியவில்லை. ஆனால் உடனேயே "உன் தலையில் இருக்கும் டேரா பூ வாடி காஞ்சி போனா நீ தூக்கி எறியாம சாயங்காலம் வரை வச்சிட்டு இருப்பியே.. அதான் அந்த பூ பிடிக்குமோ என்னவோன்னு எடுத்து வந்தேன்.. ஏற்கனவே நிறைய செடி வளர்த்துறன்னு நினைக்கிறேன். ஆனா இந்த பூ நல்லா பெரிய பெரிய மலரா பூக்கும். இதையும் டிரை பண்ணு.." என்று பதில் தந்தாய் நீ.

குழப்பமாக இருந்தது எனக்கு. என் அண்ணன் எனக்காக தினம் டேரா பூ வாங்கி வருகிறான். ஆனால் அந்த பூவிலேயே விதை இருக்கும் என்று நான் ஏன் யோசிக்காமல் போனேன்.? எங்கள் ஊரில் யார் வீட்டிலும் டேரா பூச்செடி இல்லை. அதனால்தான் எனக்கு இதை பற்றி சரியாக தெரியவில்லை.

உனது வீட்டுக்கு செல்லும் பாதை வந்ததும் என்னை தயக்கமாக பார்த்துவிட்டு திரும்பி நடந்தாய் நீ.

நான் என் கையில் உள்ள காகித மடிப்போடு உன்னை பார்த்தேன்.

எனக்கு பிடித்ததை பற்றி நீ ஏன் ஆவல் கொள்ள வேண்டும் என்று குழப்பம். சாலை பயணிகள் இருவரும். இந்த பழக்கத்திற்காக இதை கொண்டு வந்தாயா.? என்று எனக்குள் ஆயிரம் யோசனை.

ஆனால் வீட்டிற்கு வந்ததும் என் அம்மாவின் அடுப்படியில் இருந்த சிறு மண் சட்டி ஒன்றை எடுத்து வந்து அதில் மண்ணை நிரப்பி அந்த டேரா விதைகளை அதில் பரப்பி வைத்தேன் நான்‌‌.

உன் முகத்தை நினைத்தபடியே அதற்கு தண்ணீர் தெளித்தேன். செடி வளருமா என்று தெரியவில்லை. உண்மையில் செடி வளரும் என்றால் என் அண்ணன் வாங்கி வரும் அத்தனை பூக்களையும் செடியாய் மாற்றி விடுவேன் நான். யாருக்குதான் பிடிக்காது இந்த பலவிதழ் பூவை?

அடுத்து இரண்டு வாரங்கள் கடந்தது. கிழக்கு சாலையோடு ஒட்டியிருந்த மண் சாலையில் இறங்கும்போது உன்னை நினைத்தது என் உள்ளம். நீ தந்த விதைகள் செடியாய் துளிர் விட்டு விட்டது. இதை உன்னிடம் சொல்ல வேண்டும் என்று ஆசைக் கொண்டேன். ஆனால் காத்திருக்க தயக்கம். நான் காத்திருந்தால் அதை நீ தவறாக எண்ணி விடலாம்.

நான் விவரம் அறியா சிறு பெண். அதனாலேயே சில விசயங்களில் இருந்து ஒதுங்கி இருந்தேன்.

உன் மனதில் என்னை பற்றி எந்த எண்ணமும் உருவாகி விடக் கூடாதென்ற கவனம் இருந்தது எனக்கு. அதனாலேயே காத்திருக்க விரும்பாமல் தினமும் முன்னால் சென்றுக் கொண்டிருந்தேன்.

அன்றும் கூட அப்படிதான் கிளம்பினேன். அந்த சாலையில் இருநூறு மீட்டரை கடந்திருப்பேன். எனது நேரத்தை என்னவென்று சொல்ல.?

பாதையை பார்க்காமல் வானம் பார்த்து நடந்துக் கொண்டிருந்த நான் நெஞ்சின் குறுகுறுப்பில்தான் பார்வையை இறக்கி சாலையை பார்த்தேன். அப்படியே சிலையாய் நின்று போனேன். சாலையை முழுதாய் மறித்து படுத்திருந்த இரண்டு பாம்புகள் ஒன்றுக்கொன்று சண்டைப் போட்டுக் கொண்டிருந்தன.

பத்தடி தூரம்தான் இருந்தது பாம்புகளுக்கும் எனக்கும் இடையில். பத்தடி தூரமாவது இருந்ததே என்று இன்று எண்ணினாலும் அப்போது அந்த பத்தடி தூரம் பயத்தைதான் தந்தது.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN