காதல் கடன்காரா 61

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
இரண்டு நாட்கள் கடந்து விட்டது.

மழை கொட்டிக் கொண்டே இருந்தது. அடித்த காற்றில் கார்த்திக்கும் அபிராமியும் தங்கியிருந்த ஹோட்டலை சுற்றி இருந்த மரங்கள் பாதி சாய்ந்து விட்டன. சாலைகளில் முழங்கால் ஆழ மழைநீர் ஓடிக் கொண்டிருந்தது.

கார்த்திக்கும் அபிராமியும் நிறைய பேசினார்கள். கடந்து விட்ட மூன்று வருடங்களையும் வார்த்தைகளால் பரிமாறிக் கொண்டார்கள்.

சுவாதி ஆரம்பித்த டிரஸ்ட் பற்றியும், கார்த்திக் பொது சேவையில் எப்படி இறங்கினான் என்பதையும் சொன்னான்.

அபிராமி தான் எப்படி இரவு பகலாக படித்து பரிட்சை எழுதினேன் என்பதை சொன்னாள்.

இரவுகளில் கார்த்தியின் நெஞ்சில் தலை வைத்து தூங்கினாள் அபிராமி.

இருவர் மனதிலும் நெருடல் இருந்தது.

"நடிப்புன்னு சொல்லி மறுபடியும் விட்டுட்டு போயிடுவியோன்னு பயமா இருக்கு.!" என்றான் அவன்.

"என் நடவடிக்கை எதுவும் பிடிக்கலன்னு என்னை வேணாம்ன்னு சொல்லிடுவியோன்னு எனக்கும் பயமா இருக்கு.!" என்றாள் அவள்.

ஏற்றுக் கொள்வதற்கும் பயம். எதிராளி மனதார ஏற்றுக் கொண்டார்களா என்று நம்பவும் பயம்.

இருவருமே அந்த பயத்தை உணர்ந்தனர்.‌ பயத்தை தாண்டி காதலிப்பது திகில் உணர்வை தந்தது. இருவருக்கும் பிடித்திருந்தது.

"நீயும் நானும் மறுபடியும் கல்யாணம் பண்ணிக்கிட்டா எங்க வீட்டுல இருக்கும் எல்லாரும் ஆச்சரியப்படுவாங்க.‌" என்று கார்த்திக் சொன்னான்.

"எங்க வீட்டுல ஷாக் ஆவாங்க.. தாத்தாவும், அப்பாவும் எதுவும் தடை சொல்ல மாட்டாங்க. ஆனா இந்த பாட்டியும் அம்மாவும்தான் திட்டுவாங்க, என்னவோ அவங்க சொன்னதுதான் சரிங்கற மாதிரி பேசியே சாவடிப்பாங்க.." என்றாள் அபிராமி.

கார்த்திக் கவலையோடு சிரித்தான்.

"டிமான்ட்.. டிமான்ட்.. என்னை டிமான்ட் பண்ண யாருக்கும் ரைட்ஸ் கிடையாது. அவங்க சொன்ன காரணங்களுக்காக என்னால உன்னை கல்யாணம் பண்ணிக்க முடியாது. இந்த செண்டிமென்டெல்லாம் எனக்கு செட்டே ஆகாது. ஐ வான்ட் லவ்.! அது மனசுக்குள்ள தானா உருவாகணும். அது உருவாக எவ்வளவு கேவலமான காரணமா இருந்தாலும் எனக்கு அது மேட்டர் இல்ல. இவனோடுதான் வாழணும். இவனோடுதான் சாகணும்ன்னு மனசு சொல்லணும்.." என்று தலையாட்டியவளின் கூந்தலை வருடி விட்டவன் "ஆமா.." என்றான் ரகசிய சிரிப்போடு.

அடுத்து இரண்டு நாட்கள் முடிந்தது. புயல் அடித்து ஓய்ந்தது.

அபிராமியும் கார்த்தியும் அந்த ஹோட்டலை விட்டு கிளம்பினர்.

வீட்டுக்கு வந்த அபிராமியை நலம் விசாரித்தார் அப்பா. நான்கு நாட்களாக அந்த வீட்டிலேயே தங்கி விட்டிருந்த முத்தமிழும் தங்கையின் உடல் நலம், மனநலம் பற்றி விசாரித்தான்.

"நல்லாருக்கேன் நான்.." என்ற அபிராமியின் தயங்கிய முகம் பார்த்த முத்தமிழ் "ஏதாவது பில்டப் பண்ணானா அவன்.?" என்றுக் கேட்டான்.

மறுப்பாக தலையசைத்தாள் அபிராமி.

"பதவி வந்ததாலதான் நீ என்னை தேடி வந்தங்கற மாதிரி ஏதாவது சொன்னானா.?" நகத்தை கடித்தபடி கேட்டான் அண்ணன்.

இல்லையென தலையசைத்தாள் அபிராமி.

ஆனால் இப்படியும் ஒரு வார்த்தை கேட்க வாய்ப்பிருக்கிறது என்ற விசயம் உறுத்தலை தந்தது.

"இப்படி ஒரு வார்த்தையை அவன் எப்பவும் சொல்லிட கூடாதுன்னுதான் அவன் தேர்தல்ல ஜெயிக்கவே கூடாதுன்னு டிரை பண்ணேன்.." என்ற அண்ணனை சந்தேகமாக பார்த்தவள் "ஆனா உன் எதிர்மறை விமர்சனம் அவனை ஜெயிக்க வச்சிடுச்சி.." என்றாள். முத்தமிழின் தோளில் சாய்ந்தவள் "உன்னை மாதிரி ஒரு அண்ணன் கதையில் மட்டும்தான் வருவான் அண்ணா.! ஒருவேளை தங்கச்சி மனசுல காதல் ஏதாவது உருவாகிட்டா அப்ப அவன் உயர்ந்த பதவியில் இருந்து அதன் காரணமா தங்கச்சிக்கு தாழ்வு மனப்பான்மை வர கூடாதுன்னு நினைச்சவன் நீயாதான் இருப்ப. உயர் பதவிக்கு அவன் போயிட்டா தங்கச்சியை கோல்ட் டிக்கரா பார்த்துடுவானோங்கற காரணத்துக்காக அவன் தோற்கணும்ன்னு நினைச்சவனும் நீயாதான் இருப்ப.." என்றாள்.

"நீ கனவுல கூட தோற்பதை நான் விரும்பல.." என்றவனின் முகம் பார்த்தவள் 'உன்னாலதான் அண்ணா நான் அவனை லவ் பண்ணேன்.! உன்னை விட அதிகமா என்னை நேசிக்க இந்த உலகத்துல அவனை விட்டா வேற ஆள் இல்ல..' என்று மனதுக்குள் சொன்னாள்.

இந்த நான்கு நாட்களில் தாத்தாவிடமும் அப்பாவிடம் விசயத்தை எடுத்துச் சொல்லியிருந்தான் முத்தமிழ்.

"அவளுக்கு பிடிச்சா போதாதா தாத்தா.? நாமளா வருசம் முழுக்க பார்த்துக்க போறோம். அவளேதான் அவளை கவனிச்சிக்க போறா.. கூட வாழ்க்கை துணைன்னு அவனை தேர்ந்தெடுத்தா வாழ்ந்துட்டுதான் போகட்டுமே.! மூணு வருசமா முகத்துல சிரிப்பே இல்ல தாத்தா அவளுக்கு. இனியாவது சிரிக்கட்டும்.." என்று சமாதானம் பேசியிருந்தான்.

"யார் என்ன சொன்னாலும் நீயும் உங்க அப்பாவும், நானும் அவ கட்சிங்கறது எப்பவும் மாற போறது கிடையாது தமிழ்.! என் பேத்திக்கு நான் புத்தி சொல்ற காலம் எப்பவோ போயிடுச்சி. அவ மன திருப்திக்கு பழி வாங்கினா அதுக்கும் நான் கூடத்தான் நிற்பேன். அவ தன் மனசுக்காக அவனோடு சேர்ந்து வாழ்ந்தா அப்பவும் அவளுக்கு துணையாதான் நிற்பேன்.! வீட்டுல உள்ள பெண் திலகங்களை போல அவளை புரிஞ்சிக்காம வாட்டி வதைக்க மாட்டேன்.! இவளுக போட்ட சவால்ல தோக்குறதை பத்தி கவலை இல்ல.! என் பேத்தி சந்தோசமா இருந்தா போதும்.." என்று விட்டார் அவர்.

அபிராமியின் மீது ஏன் இந்த பாசம் என்று முத்தமிழுக்கு புரியவில்லை. அனைத்து அண்ணன்களும் தங்கையின் மீது இப்படிதான் பாசம் கொண்டிருப்பார்களா என்றும் தெரியவில்லை. ஆனால் இவள் சொன்னால் அனைத்திற்கும் தலையாட்ட சொன்னது மனம். இவளின் சிரித்த முகத்திற்காக மலையையும் பெயர்த்து எடுக்க சொல்லி சொன்னது மனம். இனி வரும் ஜென்மங்களில் கூட இவளே தனக்கு தங்கையாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டான்.

மேகமானன் கார்த்தியை திட்டினார்.

"என் கஷ்டம் எனக்கு.." என்றவனிடம் "நாட்டுக்கு சேவை செய்றதை விட ஒரு பொண்ணை கரெக்ட் பண்றது கஷ்டம்தான்.." என்றார் கேலியாக.

"ஒவ்வொரு வீட்டிலும் அன்பும் காதலும் நிறைஞ்சி இருக்கணும் மாமா. அதுதான் நாட்டையே அன்பா மாத்தும்.." என்றவனை முறைத்தார் அவர்.

"அவளை அழ வச்சிட்டு பிறகு நான் யாரை சிரிக்க வைக்கட்டும்.?" அவன் இதை கேட்கவும் முறைப்பதை நிறுத்தி விட்டார் அவர். தனக்கு இணையென படைக்கப்பட்ட ஒரு ஜீவனையே சிரித்த முகத்தோடு வைத்துக் கொள்ளா முடியாவிட்டால் பிறகு யாரை சிரிக்க வைக்க இயலும்.? என்று யோசித்துப் பார்த்தார்.

"என் அம்மாவை லவ் பண்றேன். என் அப்பா அண்ணன், தங்கை எல்லாரையும் லவ் பண்றேன். அதே போல அபிராமியையும் லவ் பண்றேன். நான் தப்பு பண்ணா அம்மா அப்பா உடனே மன்னிப்பாங்க. தங்கை மன்னிக்க ஒரு வாரம் ஆகும். அண்ணன் மன்னிக்க ஒரு மாசம் ஆகும். ஆனா இவ பொண்டாட்டி ஆச்சே.. அதுதான் கொஞ்சம் ஓவரா டைம் எடுத்துக்கிட்டா. நாம வெளியே கரெக்டா செயல்படணும்ன்னா முதல்ல நம்ம மனசு நல்லா இருக்கணும் மாமா. அவ மனசும் என் மனசும் லவ்வால கனெக்ட் ஆகிடுச்சி மாமா. அவ மனசு சரியாகாத வரை என் மனசும் சரியாகாது.!" என்றான்.

"முடியலடா. போதும். விட்டுடு. இது உங்க லவ்வு. இது உங்க கதை.. அதுக்காக கருத்து சொல்லியே எங்களை சாகடிக்காதே.!" என்ற மேகமானன் தனது வேலைகளை பார்க்க கிளம்பினார்.

புயலில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மானியம் கிடைக்க ஏற்பாடு செய்தான் கார்த்திக்‌. வீணான பொதுச் சொத்துக்களை சரி செய்தான். புயலால் இறந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரண தொகை கிடைக்க ஏற்பாடு செய்தான்.

மாவட்டம் புயலில் இருந்து மீண்டு வர அபிராமியும் கலெக்டரோடு சேர்ந்து நிறைய நடவடிக்கைகள் எடுத்தாள். விரைவிலேயே ஊர் பழைய நிலைமைக்கு திரும்பி விட்டது.

அபிராமியின் காரும் சரியாகி வீடு வந்து சேர்ந்தது.

ஒரு மாதம் சென்றது.

முத்தமிழ் தன் அலுவலகம் கிளம்பிக் கொண்டிருந்த ஒரு நாளில் கார்த்திக்கின் குடும்பம் பழ தட்டோடு இவர்களின் வீட்டிற்குள் நுழைந்தது.

பாட்டி திகைத்து நின்றாள். என்ன செய்வதென்று அம்மாவுக்கும் புரியவில்லை.

"வாங்க.." தாத்தாதான் அவர்களை அழைத்து அமர வைத்தார்.

முத்தமிழ் அவனே சென்று தண்ணீரை கொண்டு வந்து இவர்களுக்கு தந்தான். கார்த்திக்கின் குடும்பம் தாத்தாவோடு சகஜமாக பேச முயன்றது.

"திடீர்ன்னு வந்துட்டிங்க.. முன்னாடியே சொல்லி இருந்தா பாப்பாவை வர சொல்லி இருப்பேன்.." என்ற தாத்தாவிடம் "பரவால்லைங்க. நாங்க என்ன அபிராமியை பார்க்காமலா இருக்கோம்.? கார்த்திக்கும் கூட வேலை இருக்குன்னு வராம இருந்துட்டான்.." என்றார் முருகன்.

முத்தமிழ் அவசரமாக காப்பி போட்டுக் கொண்டு வந்தான்.

முத்தமிழின் அம்மாவையும், பாட்டியையும் சந்தேகத்தோடு பார்த்த மூர்த்தி சுவாதியிடம் என்னவோ சொன்னான். சுவாதி சட்டென எழுந்துச் சென்று முத்தமிழிடம் இருந்த தட்டை வாங்கிக் கொண்டாள்.

"கொடுங்க அண்ணா.. நான் காப்பி தரேன்.." என்றவள் அனைவருக்கும் காப்பியை தந்தாள்.

சர்க்கரை போதாத காப்பி அது. புவனாவிற்கு மட்டும் பஞ்சாமிர்தம் போல இருந்தது. அனைவரையும் பார்த்து புன்னகைத்த முத்தமிழ் புவனாவின் பக்கம் சும்மா கூட திரும்ப மறுத்து விட்டான்.

"என்ன நடக்குது அங்கே.?" சமையலறையில் இருந்த மருமகளிடம் கேட்டாள் பாட்டி. "தெரியல அத்தை.. எனக்கும் தெரியல. திடீர்ன்னு அவங்க வராங்க. இவங்களும் வரவேற்கறாங்க. அன்னைக்கு சாதாரணமா இருந்தவன் இன்னைக்கு எம்‌.எல்.ஏ ஆனதும் இந்த வீட்டுல இருந்தவங்களுக்கு மனம் மாறிடுச்சோ என்னவோ.?" என்றாள் அம்மா.

"என் பேத்தி ஏன் உங்க இரண்டு பேர் பேச்சையும் கேட்க மறுத்தான்னு எனக்கும் இப்பதான் முழுசா புரியுது. கெட்ட எண்ணத்தோடு இருக்கும் ஒருத்தங்க நல்லதையே சொன்னா கூட யாரும் கேட்க மாட்டாங்க.." தாத்தாவின் குரல் கேட்டு இருவரும் திரும்பி பார்த்தார்கள்.

இருவரையும் முறைத்தபடி உள்ளே வந்தவர் ஃப்ரிட்ஜில் இருந்த ஸ்வீட் பாக்ஸை எடுத்தார்.

"என் புள்ளையை நம்பாதவங்க நீங்க. அவ மேல இருக்கற அக்கறையில் அவளை திட்டினிங்களோன்னு சில நேரத்துல நினைச்சது உண்டு நானும். அது தப்புன்னு இன்னைக்கு புரிஞ்சது.." என்றவர் ஸ்வீட் பாக்ஸோடு ஹாலுக்கு கிளம்பினார்.

"உங்க பொண்ணு எங்களுக்கு செஞ்ச எதையும் மறக்கல நாங்க. அவளாலதான் எங்க பையனுக்குள் முன்னேற்றம் வந்தது. ஒரு காதல் என்ன செய்யும்ன்னு நினைச்சவன்தான் நானும். ஆனா அவன் தன் காதலுக்காக மட்டும்தான் வயல்ல இறங்கினான். நாங்க திட்டியும் கேட்காம பொது சேவையில் இறங்கினான்.. ஆனா எங்க பையன் செஞ்ச எல்லாத்தையும் நீங்க மறந்துடுங்க. அறியாத வயசு இல்லதான். ஆனாலும் வாழ்க்கையை பற்றிய புரிதல் இல்லாத நேரத்துல அப்படி ஒரு தப்பு பண்ணிட்டான்.." என்றார் முருகன்.

"நடந்ததை விடுங்க. எந்த பேரண்ட்ஸ் தன் புள்ளைங்க மனம் வாடி இருக்கணும்ன்னு நினைப்பாங்க.? எங்களுக்கு அபிராமி சந்தோசமா இருந்தா போதும்.!" என்றான் முத்தமிழ் பெரிய மனுசதனமாக.

பேசினார்கள். நொடிகள் தீர தீர இரு பக்கமும் தயக்கங்கள் உடைந்து நொறுங்கியது.

அவர்களே பேசி தேதி குறித்தார்கள்.

"போன முறையே நீங்க நிறைய செலவு பண்ணி அபிராமிக்கு கல்யாண ஏற்பாடு செஞ்சிருப்பிங்க.! இந்த முறை நாங்களே முழு செலவையும் ஏத்துக்கறோம். மறுத்து சொல்லாதிங்க.." என்றாள் யமுனா.

சரியென்று தலையசைத்தார் தாத்தா.

மூர்த்தியும் அவனது குடும்பமும் அங்கிருந்து சென்ற பிறகே சமையலறையை விட்டு வெளியே வந்தார்கள் அம்மாவும் பாட்டியும்.

"இப்ப ஏன் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டிங்க.?" கோபத்தோடு கேட்டாள் அம்மா.

"என் பேத்திக்கு அந்த பையனை பிடிச்சிருக்கு.!" என்றார் தாத்தா பழ தட்டில் இருந்த கொய்யாவை எடுத்துக் கடித்தபடி.

"நாங்களும் முதல்ல அதைதானே சொன்னோம்.?" விழிகளை உருட்டியபடி கேட்டாள் பாட்டி.

"நீங்க சொன்னதை நாங்க ஏன் கேட்கணும்.? நீங்களா அவனோடு வாழ போறிங்க.? வாழ போறவளுக்கு பிடிச்சிருக்கான்னு பார்க்கறதுதான் புத்திசாலிதனம்.!" என்றவர் இருக்கையை விட்டு எழுந்து நின்றார்.

"இந்த பழத்தட்டை வாங்கி வைக்க கூட எங்களை கூப்பிடல நீங்க.!" என்ற அம்மாவை விசித்திரமாக பார்த்தான் முத்தமிழ்.

"சம்பந்தம் பேசி முடிச்சது அடுத்த ஊர்ல இல்ல. இதே வீட்டுலதான். அவங்கதான் வெத்தலை பாக்கோடு வந்தாங்க. உங்களுக்கும் நாங்க தனியா வெத்தலை பாக்கு வச்சிருக்கணுமா.?" என்ற தாத்தாவை முறைத்தாள் பாட்டி.

"அவ வாழ்க்கை மேல எங்களுக்கும் அக்கறை இருக்கு.!" பாட்டி சொல்லி முடிக்கும் முன்னால் கொய்யாப்பழம் வந்து அவளின் காலின் ஓரம் விழுந்தது.

"அக்கறை இருப்பவங்க பிரஷர் தர மாட்டாங்க. உரிமையோடு அன்பா சொல்றதுக்கும், வெறுப்பை மனசுல வச்சிக்கிட்டு திட்டி திட்டி ஒரு விசயத்தை ஏத்துக்க சொல்றதுக்கும் இடையில் நிறைய வித்தியாசம் இருக்கு.." என்ற தாத்தா பாட்டியை முறைத்து விட்டு சென்று விட்டார்.

இரு வீட்டிலும் சம்பந்தம் பேசியதை பற்றி அபிராமியும் கார்த்திக்கும் தங்களின் வீட்டு மொட்டை மாடிகளில் நின்றபடி பேசினார்கள்.

"சந்தோசமா இருக்கு.." என்றான் கார்த்திக்.

"எனக்கும்.." வெட்கம் பொங்க சொன்ன அபிராமிக்கு தன் வெட்கத்தை நினைத்தே வெட்கம் வந்தது. வெட்கம் பற்றிய புரிதல் முகத்தை அதிகமாக சிவக்க வைத்தது.

அவனின் கொஞ்சம் மொழி கூட தேவைப்படவில்லை அவளுக்கு. அவனுடன் திருமணம் என்பதே வெட்கத்தை உண்டு பண்ணியது. நினைத்து நினைத்து வெட்கப்பட்டுக் கொண்டே இருந்தாள். ஊர் பார்த்திருக்க அவனின் கைப்பற்ற போகிறோம் என்பது த்ரில்லை தந்தது அவளுக்கு. அடுத்து வரும் ஒவ்வொரு நொடியும் ஓராயிரம் கனவுகளை தந்தது‌. நான்கு வருடங்களுக்கு முன்பு இருந்த எதிர்பார்ப்புகள் எல்லாம் இப்போது சர்வ சாதாரணமாக தெரிந்தது. அவனோடு வாழ போகிறோம் என்பதே அவளுக்கு பலவாயிரம் உணர்வுகளை தந்தது.

அடுத்த மாதத்தின் இறுதியில் அபிராமிக்கும் கார்த்திக்கும் திருமணம் நடந்தது. சுவாதியும் சிந்துவும், திருமணம் முடியும் வரை நிழல் போல கூடவே இருந்தார்கள். ஸ்வேசன்யா போனில் வாழ்த்துச் சொன்னாள். வர முடியாமல் போனதற்காக மன்னிப்பு கேட்டாள். அவள் வராதது சிறு குறையாக இருந்தாலும் கூட அவளின் மன்னிப்பை ஏற்றுக் கொண்டு விட்டாள் அபிராமி.

ஈஸ்வரின் மொய்யை கூட சிரிப்போடே பெற்றுக் கொண்டாள் அபிராமி. மூர்த்திக்கும் தனக்கும் இடையில் இருந்த நட்பு மீண்டும் திரும்ப சில காலங்கள் ஆகும் என்று புரிந்தது அவளுக்கு.

பாட்டியோடும் அம்மாவோடும் அளவாய் மட்டுமே பேசினாள் அபிராமி.

"எங்களுக்கு உன் மேல இருந்த கோபம் இன்னும் தீரல அபிராமி.." என்றாள் அம்மா.

"எனக்கும்தான்ம்மா உங்க மேல இருந்த கோபம் தீரல.." என்றாள் அபிராமி முதலிரவுக்கு தன்னை அலங்கரித்தபடி.

"ஆனா ஏன் எங்க மேல கோபம்.? நாங்க சொன்னது நல்லதுக்குன்னு இப்பவாவது புரிஞ்சிதானே அவனை கல்யாணம் பண்ற.? இல்ல இப்பவும் பழி வாங்க கல்யாணம் பண்றியா.?" என்று கேட்டாள் அம்மா.

நெற்றிக்கு பொட்டிட்டுக் கொண்டு திரும்பினாள் அபிராமி.

"நீங்க சொன்னது புரியவே வேணாம் எனக்கு. ஏனா நான் அவனை கல்யாணம் பண்ணிக்க காரணம் காதல். டிமான்ட் இல்ல. நீங்க முதல்ல உங்க எண்ணத்தை மாத்துங்க. அவன் எம்.எல்.ஏ ஆனதாலதான் நான் அவனை கல்யாணம் பண்ண சம்மதிச்சேன்ங்ற மாதிரி நீங்க பேசியதா கேள்விப்பட்டேன். நான் அவனை பிரிஞ்சது தப்புன்னு நீங்க குத்தி காட்ட கூடாதுன்னுதான் நான் என் தரத்தையே உயர்த்திக்கிட்டேன். ஆனா அது உங்களுக்கு கடைசிவரை புரியல. அவனோட பதவி வெறும் அஞ்சி வருசம். ஆனா எனக்கு அப்படி இல்ல. அவன் வெறும் ஒரு தொகுதிக்குதான் எம்.எல்.ஏ. ஆனா நான் இன்னும் அஞ்சி மாசத்துல ஒரு மாவட்டத்தையே நிர்வாகம் செய்ய போற கலெக்டரா பதவி உயர்வு பெற போறேன்.! அவன் நேர்மைக்கும் என் நேர்மைக்கும் நாங்க லஞ்சம் வாங்க போறது இல்ல. அப்புறம் எதுக்கு நான் அவன் பதவியை பார்த்து கல்யாணம் செய்யணும்.?" என்று கேட்டவள் பூச்சரத்தை எடுத்து கூந்தலில் சூடினாள்.

"உங்களுக்கு ஒரு விசயம் தெரியுமா.? இவங்க புருசன் பொண்டாட்டிதான்னு முடிவான பிறகு யாரும் அவங்க சண்டைக்குள்ள தலையிட கூடாது. சமாதானம் செஞ்சி வைக்கும்போது கூட கவனமாகதான் இருக்கணும்.. எந்த ஒரு செகண்டிலும் டிமான்ட் பண்ணவே கூடாது. இல்லன்னா அவங்க பிரிய முக்கிய காரணமே சமாதானங்கற பேர்ல டிமான்ட் பண்ணவங்களாதான் இருப்பாங்க. நானும் அவனும் இத்தனை வருசமா பிரிஞ்சிருக்க காரணமே நீங்கதான்னு ரொம்ப ஈசியா சொல்லிட முடியும் என்னால.! மத்தவங்க என் சிந்தனைக்குள்ள வலுக்கட்டாயமா புகுந்து ஆட்சி செய்றது எனக்கு சுத்தமா பிடிக்காது.." என்றவள் அங்கிருந்து கிளம்பினாள்.

"நாம செஞ்சது தப்புன்னு தோணல அத்தை எனக்கு.." என்றாள் அம்மா.

"எனக்கும் அப்படிதான் தோணுது. ஆனா இந்த கிழவன பிடிக்கலன்னு சொன்ன பிறகும் என்னை யாராவது கட்டாயப்படுத்தி வாழ சொல்லி இருந்தாங்கன்னா அவங்க தலையில கல்லை தூக்கி போட்டிருப்பேன்.." என்றாள் பாட்டி.

அம்மா அவளை அதிர்ச்சியோடு பார்த்தாள்.

"அவளுக்கு மூளை இருக்கு. நாம சொல்லி இருக்க கூடாதுன்னு இப்ப புரியுது.." என்றாள் பாட்டி.

"புருசன் பொண்டாட்டி சண்டைக்கு நடுவுல போக கூடாது. புருசன் பொண்டாட்டி எப்பவும் சின்ன புள்ளைங்கதான். அவங்க எப்ப வேணாலும் ஒன்னு சேர்ந்துப்பாங்க. குறுக்கே போறவங்கதான் பகையாவாங்க.!" என்று அன்றிரவு பாட்டியிடம் அறிவுரை சொன்னார் தாத்தா.

கார்த்திக் வியர்த்த முகத்தோடு அபிராமியை பார்த்தான். அபிராமி தரையில் காலால் கோலம் போட்டுக் கொண்டிருந்தாள்.

"புதுசா இருக்கு இல்ல.?" தன் கழுத்தின் வியர்வையை துடைத்தபடி கேட்டான் கார்த்திக்.

ஆமென தலையசைத்தவள் ஏசியின் அளவை கூட்டினாள்.

"ஏன் உனக்கு வேர்க்குது.?" எனக் கேட்டபடி வந்து கட்டிலில் தள்ளி அமர்ந்தாள்.

"உனக்கும் வேர்க்குது.." அவளின் நெற்றியை சுட்டிக் காட்டினான் கார்த்திக்.

"பூ வச்சிருப்பதும், புடவை கட்டி இருப்பதும் கசகசன்னு இருக்கு.!" என்றாள்.

சில நிமிடங்கள் மௌனத்திற்கு பிறகு அவளின் கையை எடுத்து தன் கைக்குள் வைத்துக் கொண்டான் கார்த்திக்.

"நீ என்னை‌ லவ் பண்றியா.?" எனக் கேட்டான்.

"நீ.?" அபிராமி அவனின் முகத்தை பார்த்தாள்.

"நான் லவ் பண்றேன். ரொம்ப.!" என்றான் கார்த்திக்.

"நானும். ரொம்ப லவ் பண்றேன்.!" என்றாள் அவள்.

அவளின் கன்னத்தில் தன் உள்ளங்கை பதித்தவன் "ஐ மிஸ் யூ.." என்றான்.

"நானும்.." என்றவளின் கரங்கள் இரண்டும் அவனின் கழுத்தை சுற்றின.

"லைட்.?" ஒளிர்ந்துக் கொண்டிருந்த விளக்கை பார்த்தான் கார்த்திக்.

மேஜை மேல் இருந்த ரிமோட்டை எடுத்து விளக்கை அணைத்தாள் அபிராமி.

"உன் கொலுசு நல்லாருக்கு.!" இருளில் அவளின் பாதம் வருடியபடி சொன்னான் கார்த்திக்.

"எங்க மாமா செஞ்ச சீர்.." என்றவளின் கை வருடி கழுத்தை வந்து தொட்டான்.

"நீ எது வேணாலும் போட்டுக்கோ.. நான் கேட்க மாட்டேன்.. ஆனா புடவை உனக்கு செம சூப்பரா இருக்கு.." என்றான் அவளின் முந்தானையில் இருந்த பின்னை கழட்டியபடி.

"உண்மையாவா.?"

"ஆமா.. கூந்தலை பின்னி பூ சூடும்போது இன்னும் அழகு.." என்றவனுக்கு அவளிடம் எப்படி சொன்னால் கேட்பாள் என்பது ஏற்கனவே தெரிந்திருந்தது. அவன் ஏன் இதை சொன்னான் என்று அவளுக்கும் தெரிந்திருந்தது.

"நானும் இனி ஒவ்வொரு முறையும் குங்குமம் வச்சி விட சொல்லி உன்னையே கேட்கிறான்.." என்றாள். அவனது பொசசிவ்னெஸ் இந்த குங்கும மேட்டரை கூட விட்டு தராத பிடிவாதத்திலும் இருக்கிறது என்பது அவளுக்கு புரிந்திருந்தது. தாலி கொடியை நெஞ்சோர பாக்கெட்டிலேயே வைத்திருந்த அவனின் காதல் பிடிவாதமும் கூட இப்போது பிடித்துதான் இருந்தது. 'யார் இங்கே இவ்வளவு காதலிக்கிறார்கள்' என்ற ஒரு கேள்வியே அவன் எந்த அளவுக்கு காதலோடு இருக்கிறான் என்பதை எடுத்துச் சொன்னது‌

"எதுக்கு புடவையில் இத்தனை பின்.?" சில நொடிகளுக்கு பிறகு எரிச்சலாக கேட்டான் கார்த்திக்.

அபிராமி சிரித்தாள்‌. "புடவைன்னா அப்படிதான். புடவைக்கு ஆசைப்பட்டா மட்டும் போதாது.‌ பின்விளைவுகளையும் சந்திக்கணும்.!" என்றாள் சிரிப்போடு.

"நைட்ல நைட்டி மட்டும் போட்டுக்கோ.. புடவையை விட உனக்கு அதுதான் ரொம்ப அழகா இருக்கு.." என்றான்.

"காரியம் ஆகணும்ன்னா காலை கூட பிடிப்பாங்களாம்.." கேலியாக சொன்னாள் அபிராமி தன் தலையில் இருந்த பூச்சரத்தை எடுத்து அவனின் கழுத்தில் போட்டபடி.

"காதலுக்காக காதலி காலை மட்டுமில்ல காலன் காலை கூட பிடிச்சி கூடதானே ஆகணும்.?"

"யோவ்.. காதலிதான்யா காலனோட காலை பிடிச்சா.. சத்தியவான் பொண்டாட்டி சாவித்திரி. அவங்கதான் புருசன் உயிருக்காக எமன்கிட்ட மல்லு கட்டுனாங்க.! பல ஆயிரம் வருசமா பெண்கள் சேர்த்து வச்சிருக்கும் பேரை மூணு வருச வெயிட்டிங் லிஸ்ட்ல நின்னு நீ தட்டிட்டு போக பார்க்கறியா.?" கோபமாக கேட்டாள் அபிராமி.

"ஆண்களோட காதலை எழுதினா காவியங்களே கண்ணீர் விடும்ன்னுதான் நம்ம பசங்க தங்களோட பீலிங்கை வெளியவே சொல்லாம இருக்காங்க.." என்றவன் "மல்லிகை மணக்குது.." என்றான் அவளின் இதழை வருடியபடி.

"நான் உன்னை எவ்வளவு லவ் பண்றேன் தெரியுமா.?" எனக் கேட்டபடி அவளின் இதழில் தன் உதடுகளை பதித்தான்.

அவளின் மூச்சை அவனின் முத்தம் திருடிக் கொண்டு விட்ட காரணத்தால் "எவ்வளவு.?" என்று சில வினாடிகளுக்கு பிறகு சிரமத்தோடு மூச்சு விட்டபடி கேட்டாள் அபிராமி.

"பல் விளக்காம கிஸ் பண்ற அளவுக்கு லவ் பண்றேன்.!"

"ச்சீ.. பல் விளக்காம பக்கத்துல வந்தா கொன்னுடுவேன் நான்.." என்றாள் அவள் எச்சரிக்கும் விதமாக.

"கொன்னாலும் பரவால்ல.." என்றவன் மீண்டும் முத்தத்தால் அவளின் மூச்சுக்காற்றை திருட ஆரம்பித்தான்.

முத்தத்தால அவங்க இரண்டு பேரும் மூச்சு முட்டி சாகும் முன்னாடி நான் முற்றும் போட்டுடுறேன் மக்களே..

முற்றும்.. அடுத்த கதைக்கான அறிவிப்பு இந்த எபியின் லாஸ்ட்ல இருக்கு. படிச்சி பார்த்துட்டு அந்த கதைக்கும் வந்து சேருங்க.

இதுவரை இந்த கதைக்கு வோட் கமெண்ட் தந்த அனைவருக்கும் நன்றிகள். உங்களின் ஆதரவின் காரணமே கதையை இது வரை எழுத வைத்தது. ஊக்குவிப்பு ஸ்டிக்கர் தந்த நட்புக்களுக்கும் நன்றிகள். சைலண்ட் ரீடர்ஸ்க்கும் எனது நன்றிகள்.

கதையின் நிறை குறைகளை மறக்காமல் பட்டியலிடுங்கள். குறைகள் அதிகமாக இருந்தால் ஐபி கதவை தட்டி சொல்லுங்கள். சொதப்பல்களை நல் முறையில் சுட்டிக் காட்டினால் திருத்திக் கொள்வேன் நானும்.

நான் ஏன் ஆன்டி ஹீரோ கதை படிக்கிறேன்னு எனக்குன்னு சில காரணங்கள் இருக்கு. நீங்களும் உங்க காரணங்களை சொன்னா இனி வரும் நாட்களில் ஆன்டி ஹீரோ கான்செப்டை கை தொடலாமா வேணாமான்னு முடிவெடுப்பேன் நான். ஏனா நான் இங்கே கதை எழுதுவது உங்களுக்காகதான். உங்க விருப்பம்தான் முக்கியம்.

இது ஒரு என்டெர்டெயினர் ஸ்டோரிதான்‌. ஆனா இதுவும் காதல் சர்வாதிகாரியும் நான் நிஜத்தில் கண்ட இருவரின் வாழ்க்கை கதையோடு சம்பந்தப்பட்டதுதான். இதுக்கு மேல இப்போதைக்கு சொல்ல விருப்பம் இல்ல. முடிஞ்சா, ஒருவேளை மறுபடியும் கிறுக்குதனமான யோசனையோடு ஆன்டி ஹீரோ கதை எழுதுற அளவுக்கு தைரியம் வந்தா இந்த இரண்டு கதைகளின் ஒன்லைன்னை நான் எப்படி பிடிச்சேன்னு சொல்றேன்.

இந்த கதை பிடிச்சா மறக்காம உங்க பிரெண்ட்ஸோடும் ஷேர் பண்ணுங்க. அடுத்தடுத்த கதைகளின் அறிவிப்புகளை உடனே பெற பாலோவ் பண்ணுங்க.. உங்களின் எண்ணங்களை கமெண்டில் சொல்லுங்க. மறக்காம நாளைக்கு இன்னேரம் அடுத்த இரண்டு கதைக்கும் வந்து சேருங்க.

நன்றிகளுடன் crazy writer

அடுத்த கதைக்கான முன்னுரை;

மனதைக் கொடுடா மணாளா!!

முத்தமிழுக்கு நிச்சயத்தார்த்தம் அன்று.

மகிழ்ச்சியோடு தன் நிச்சயத்தார்த்தத்திற்கு தயாராகிக் கொண்டிருந்தான். தனது மனைவியாய் வர போகும் மதுமிதாவோடு சேர்ந்து நிறைய கதைகள் பேசிக் கொண்டிருந்தான். அவன் முகத்திலும் அவ்வளவு சந்தோசம். அவன் வீட்டிலும் அவ்வளவு சந்தோசம்.

புவனா தன் அறையில் முடங்கி அமர்ந்திருந்தாள். இந்த நாள் வருமென்று அவள் எதிர்பார்க்கவேயில்லை.

நேற்று மாலை முத்தமிழோடு பேசியதை நினைத்துப் பார்த்தாள்.

"நிஜமாவே நீங்க அந்த பொண்ணை கல்யாணம் பண்ணிக்க போறிங்களா.?" என்று ஏக்க விழிகளோடு கேட்டாள் அவனிடம்.

"ஆமா. ரொம்ப வருச லவ்.." என்றவனிடம் மறுப்பாக தலையசைத்தாள்.

"பொய் சொல்லாதிங்க. நீங்க யாரையும் லவ் பண்ணல.." அழுகை குரலோடு மறுத்துச் சொன்னாள் புவனா.

"நான் லவ் பண்ணலன்னு உனக்கு எப்படி தெரியும்.?" புருவம் நெரித்து கேட்டவனிடம் பயந்துப் போகவில்லை அவள்.

"இத்தனை வருசமா உங்க நிழல் மாதிரி சுத்திட்டு இருக்கேன். எனக்கு தெரியாதா.?" என்று எதிர்த்துக் கேட்டாள்.

தன்னை கேவலமாக பார்த்தவனை அதே ஏக்கத்தோடுதான் பார்த்தாள் அவள்.

"ஒரு பொண்ணுக்கிட்ட இருக்கற எந்த லட்சணமாவது உன்கிட்ட இருக்கா.?" என்றவனை குழப்பமாக பார்த்தாள். அவன் சொல்ல வருவது புரியவில்லை அவளுக்கு.

"உங்க வீட்டுல உன்னை நம்பி காலேஜ்க்கு அனுப்பினாங்க. ஆனா நீ காலேஜ் போகாம என்னை வட்டம் அடிச்சிட்டு இருந்த.! உன் வீட்டுல இருந்தவங்க உன் மேல வச்ச நம்பிக்கையை உடைச்சவ நீ.! உன்னை நான் என்னன்னு திருப்பி லவ் பண்ணட்டும்.? நான் என்ஜினியரிங்கில் முதுகலை பட்டம் வாங்கியவன். நீ உன்னோட பி.ஏ ஹிஸ்ட்ரியையே இன்னும் முடிக்காம அரியர்ஸ் வச்சிருப்பவ. நான் என் வயல்ல இறங்கி விவசாயம் பார்க்கறவன். நீ சாப்பிடும்போது உனக்கு தாகமெடுத்தா கூட உன் அம்மாதான் தண்ணீர் கொண்டு வந்து தரணும். எனக்கு என் தங்கச்சியை ரொம்ப பிடிக்கும். ஆனா உனக்கு என் தங்கச்சியை கொஞ்சம் கூட பிடிக்காது. அதை விட முக்கியம் எனக்கும் உனக்கும் நடுவுல எட்டு வயசு வித்தியாசம். மதுமிதாவும் நானும் கிளாஸ்மேட்ஸ். எங்களுக்கு ஒத்து வரும். ஆனா எனக்கு நீ எந்த விதத்திலும் செட் ஆக மாட்ட.." என்றுவிட்டு விலகி சென்றான் அவன்.

அவன் சொன்னதையே நினைத்து நினைத்து மனதுக்குள் மாய்ந்தாள் புவனா. அழுகையில் நெஞ்சம் வெடித்தது அவளுக்கு. ஆறாத காயமாய் அவனின் நினைவு கொன்றது.

பதினெட்டு வயதிலிருந்து அவனை காதலித்துக் கொண்டிருக்கிறாள் புவனா. அவன் பின்னால் சுற்றிக் கொண்டிருந்ததில் படிக்கவே இல்லை அவள். அதன் காரணமாய் கடைசி வரையிலும் அந்த வரலாற்று பாடத்தை அவள் எழுதி முடிக்கவேயில்லை.

ஐந்து வருடங்களை கடந்துவிட்ட ஒருதலைக் காதல் அவளுடையது.

ஆன்மா அழிந்தாலும் அவன் மீது கொண்ட அவளின் காதல் அழியும் என்று நம்பிக்கை இல்லை.

அவனின் மனதில் வேறு எவளோ குடிக் கொண்டதை நம்ப முடியவில்லை.

அவனை மற்றொரு பெண்ணோடு மணமேடையில் பார்க்க விரும்பவில்லை அவள்.

மாற்றாள் ஒருத்தியின் மணமகனாய் அவனை காண்பதற்கு பதில் தன்னை மாய்த்துக் கொள்வது மேல் என்று சொன்னது அவளின் முட்டாள் மூளை. அவன் மட்டுமே உலகம் என்று எண்ணிக் கொண்டிருந்தவள் அவன் இல்லாததும் உலகத்தையே துறக்க மூடத்தனமாக முடிவு செய்தாள்.

வயலுக்கு வாங்கி வைத்த விஷத்தை கையில் எடுத்தவள் தன் குடும்பத்தை பற்றி ஒரு நொடி நினைத்து பார்த்திருக்கலாம். இறந்தாலும் கிடைக்காதவனுக்காக இறக்க முடிவு செய்திருக்க கூடாது.

அடுத்த இரண்டாம் மாதம் அவளுக்கும் முத்தமிழுக்கும் இடையே திருமணம் நடந்தது.

பயந்தபடிதான் அவன் கரம் பிடித்தாள். அவளின் பயத்தை நிஜமென்று உரக்க சொன்னான் அவன்.

"முட்டாள் நீ! உன்னை மாதிரி ஒரு முட்டாளோடு வாழ்க்கையை பகிர்ந்துக் கொள்வது சுத்தமா பிடிக்கல எனக்கு.." என்று அவளின் காதோரத்தில் தெளிவாக சொன்னான்.

"இறந்திருக்கலாம் நான். எதற்கு காப்பாற்றினீர்கள்.?" என்று கண்ணீரோடு கேட்டவளுக்கு அந்த இறப்பை விட அதிகமான வலியாய் மாறி போனான் அவன்.

அவன் வேண்டுமென்று கேட்கவில்லை அவள். தன் மனதை மாற்றிக் கொள்ள இயலாமல், தன்னை சரி செய்துக் கொள்ள இயலாமல்தான் சாவை தேடினாள். அப்படியே அவளை விட்டிருக்கலாம் அவர்கள்.

அவனின் காதலை வரமென நினைத்திருந்தவள் அக்காதல் சாபமாய் மாறும் என்று கனவிலாவது அறிந்திருந்தாளா.?

இளவரசிகள் பிறக்கிறார்கள். ஆனால் அரசிகள் உருவாகுகிறார்கள்.

தன் வீட்டின் செல்ல இளவரசி அவள். ஆனால் முத்தமிழின் அரசியாய் மாற இயலுமா அவளால்.? தடைகளை தகர்ப்பாளா.? அவன் அவன் என்று கனவில் கதைத்துக் கொண்டிருந்தவள் அவன் நிஜமாய் கிடைக்கையில் என்ன செய்தாள்.?

தொடர் தனி பதிவா இருக்கு. லைப்ரரியில் ஆட் பண்ணிகங்க. நாளையிலிருந்து இந்த கதை அப்டேட் ஆகும். காதலெனும் நெடும்வனத்தில் கதையும் மூணு எபி அப்டேட் ஆகிடுச்சி. மறக்காம அதையும் படிங்க. நன்றிகள்...
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN