நெடும்வனம் 4

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
சண்டை போட்டுக் கொண்டிருந்த பாம்புகளை பயத்தோடு பார்த்தபடி பின்னால் நகர்ந்தேன் நான்.

வார்த்தைகளே வரவில்லை. உதடுகள் வறண்டு விட்டது. நாக்கை யாரோ கடித்து தின்று விட்டது போல அதை கண்டே பிடிக்க முடியவில்லை அப்போது.

இரு பக்கமும் இருந்த கருக்கட்டான் புதர்கள் பயத்தை தந்தன. அந்த புதர்களின் இடையே இருந்து பாம்புகள் ஓடி வந்து என்னை சுற்றி வளைத்துக் கொள்ளுமோ என்று பயம். இது கனவாக இருக்க கூடாதா என்று ஏக்கம்.

சுற்றும் பார்த்தேன். அருகே ஒரு வீடு கூட இல்லை‌. இந்த சாலையை முன் எப்போதையும் விட இப்போது அதிகம் வெறுத்தேன்.

வேறு வழியே இல்லாமல், உதவிக்கு அழைக்க அருகே ஆட்கள் யாரும் இல்லாமல் போகவும், பாம்புகளை பார்த்தபடியே பின்னால் நடந்துக் கொண்டே இருந்தேன்.‌ இருபதடிக்கும் மேலே வந்திருப்பேன். பலகை கல் ஒன்று இரண்டடி உயரத்திற்கு சாலையின் ஓரத்தில் இருந்தது. பயத்தோடு கல்லின் மீது அமர்ந்தேன்.

கல்லின் பின்னால் இருந்தோ, கல்லின் அடியில் இருந்தோ பாம்பு வந்து விடுமோ என்று பயந்து அடிக்கடி சுற்றும் முற்றும் பார்த்தேன்.

கைக்கு எட்டிய தூரத்தில் இருந்த கிளையிலிருந்த கருக்கட்டான் பழத்தை பறித்து வாயில் போட்டுக் கொண்டேன். அதன் ருசியாவது என் பயத்தை போக்கி விடாதா என்று நப்பாசை. ஆனால் அதன் இனிப்பு வேலை செய்யவில்லை. பயத்தில் நடுங்கிய கால்கள் நடுங்கியபடியேதான் இருந்தன.

கல்லூரி பையை நெஞ்சோடு அணைத்துக் கொண்டேன். நாளையிலிருந்து கல்லூரிக்கு செல்ல போவதில்லை என்று முடிவெடுத்து விட்டேன். படித்து பட்டம் வாங்கி பாழாய் போயிற்று என்று சோக பாட்டு பாடியது என் மனம். வைல்ட் லைப் போட்டோகிராபர் ஆக வேண்டும் என்ற எனது ஆசையும் என்னை விட்டு பறந்து போய் விட்டது. ஆசைகளுக்கும் நிஜத்திற்கும் இருந்த வித்தியாசம் தெரிந்தது‌. எனது பயத்திற்கும், எனது ஆசைக்கும் இடையில் ஒரு ஒளியாண்டு தூரம் இருந்ததை அறிந்துக் கொண்டேன்.

எப்படி அந்த பக்கம் செல்வது என்ற யோசனையில் இருந்த எனக்கு உன்னை பற்றிய நினைவு கூட அப்போது வரவில்லை சகா. என் இடத்தில் இருந்து பார்த்திருந்தால் என் பயம் உனக்கு புரிந்திருக்கும். பல்லியை கண்டாலே கத்திக் கொண்டு காத தூரம் ஓடுபவள் நான். எப்படி பாம்பிடம் தைரியமாக இருப்பேன்.?

"ஏன் இங்கே உட்கார்ந்து இருக்க.?" நீ கேட்டதில் துள்ளி விழுந்தேன் நான்.

நெஞ்சில் கை வைத்தபடி திரும்பிப் பார்த்தேன். கேள்வியாக என்னை பார்த்தபடி நின்றிருந்தாய் நீ! எப்போது வந்தாய் நீ? பயத்தில் உன் காலடி சத்தம் கூட காதில் ஏறாமல் போய் விட்டது போலும்.

"பாம்பு.." ஏன் என் குரல் உடைந்துப் போய் என்னை அழ வைத்தது என்று எனக்கு புரியவில்லை.

என் அம்மாவின் முன் தவிர வேறு யார் முன்பும் நான் அழுததில்லை. அண்ணன், அப்பாவின் முன்பு கூட அழுததில்லை.

குழப்பமாக என்னை பார்த்தாய் நீ! பாம்புகள் சண்டை போட்டுக் கொண்டிருந்த இடத்தை கை காட்டினேன் நான்.

"ஓ.. இணையிலாடுற பாம்புங்களா.? ரொம்ப பயந்துட்டியா.?" என கேட்டபடி உன் தண்ணீர் பாட்டிலை எடுத்து என் முன் நீட்டினாய்.

யோசிக்காமல் தண்ணீரை வாங்கினேன் நான்.

தாகம் சற்று தீர்ந்த பிறகு அழுகை சற்று மட்டுப்பட்டது.

வெறும் பாட்டிலை சிரிப்போடு வாங்கி உன் பேக்கில் வைத்துக் கொண்டாய்.

"இதுக்கெல்லாம் அழலாமா.? சின்ன புள்ளை மாதிரி இருக்க." என்று உன் கைக்குட்டையை நீட்டினாய். நான் மறுத்து தலையசைத்துவிட்டு என் துப்பட்டாவில் முகம் துடைத்துக் கொண்டேன்.

"இணையிலாடுறதுன்னா சண்டை போடுறதுன்னு பேரா.?" சந்தேகமாக கேட்ட என்னை சிரிப்போடு பார்த்தாய் நீ.

"அவங்க லவ் பண்ணுறாங்கன்னு அர்த்தம்.." உன் பின்னங்கழுத்தை தடவியபடி என் முகத்தை பார்க்காமல் சொன்னாய் நீ!

நீ வெட்கப்பட்டாய் என்பது புரிந்தது. ஆனால் ஏன் என்றுதான் புரியவில்லை.

லவ் பண்றதுக்கு ஏன் சண்டை போடணும் என்று பாம்புகளை பற்றி யோசித்த எனக்கு நான்கைந்து நொடிகளில் விசயம் புரிந்ததே பெரிய விசயம்தான். மண்டையில் பல்ப் எரிந்தபோது என் முகத்திலும் சூடு அதிகமாகியிருந்ததை எப்படி சொல்வது?

"இந்த பக்கம் குறுக்கு வழி இருக்கா.?" தயக்கமாக கேட்டேன்.

"இல்ல.. எல்லா நிலத்துலயும் விதைச்சிட்டாங்க.. வரப்பு வரப்புக்கு தாண்டி போறதுக்குள்ள பொழுது இறங்கிடும். நெல்லும் சோளமும் விதைச்சி இருக்காங்க. எல்லா பயிரும் அரை அடிக்கு மேல இருக்கு. பாம்பு அங்கேயும் கூட இருக்கும்.."

உன் கைக்கு எட்டும் தூரத்தில் இருந்த கருக்கட்டான் பழ கொத்து ஒன்றை பறித்தாய். என்னிடம் நீட்டினாய்.

"பிடிக்காதா.?" என்றாய் எனது தயக்கத்தை கண்டுவிட்டு.

"அப்படி இல்ல.." என்ற நான் அந்த கொத்தில் இருந்து சில பழங்களை மட்டும் பறித்தேன். என் காலடியை நீ பார்க்காத வரை பரவாயில்லை என்று நினைத்தேன். நான் சுவைத்துத் துப்பிய கருக்கட்டான் கொட்டைகள் காலடியில் நிரம்பியிருந்ததை கடைசி வரை நீ பார்க்கவில்லை.

"நீ இங்கேயே உட்கார்ந்திரு.. நான் போய் அதை விரட்டி விட டிரை பண்றேன்.." சாலையோரம் கிடந்த கருக்கட்டான் குச்சி ஒன்றை கையில் எடுத்தபடி சொன்னாய் நீ.

"ஆனா அது பாவம்ன்னு சொல்வாங்க!"

என்னை ஆச்சரியமாக பார்த்தாய் நீ!

"இல்ல கேள்விப்பட்டிருக்கேன். ஆனா பாம்பு இணையிலாடியதை பார்த்தது இல்ல.. முதல் தடவையா ரொம்ப நீளத்துல இரண்டு பாம்பை பார்த்ததும் பயந்துட்டேன்.." தரை பார்த்து சொன்ன என்னை என்னவென்று நினைத்தாயோ நீ!? நாளை வளர்ந்து விடுவேன் என்ற நம்பிக்கை இருந்தது இப்போது‌. அப்போது பயமில்லாமல் அந்த பாம்புகளை புகைப்படம் எடுப்பேன் என்றும் நம்பினேன்.

உன் கைக்கடிகாரத்தை பார்த்தாய் நீ. "இன்னும் பத்து நிமிசம் வெயிட் பண்ணி பார்க்கலாம்.." என்றாய்.

"உனக்கு யார் விசாகான்னு பேர் வச்சாங்க.?" ஆர்வத்தோடு உரையாடலை தொடங்கினாய் நீ.

"அப்பாவா இருக்கும். நான் கேட்டுக்கல.!" என்றேன்.

"அழகா இருக்கு உன் பேரும் உன்னை போலவே.!"

கேலியாக முறைத்தேன் உன்னை. ஆனால் மனம் துள்ளியதை எப்படி சொல்வது.?

"உன் பேர் நல்லாவே இல்லை உன்னை போலவே.!" என்றேன் நான் பதிலுக்கு.

"ஆமா என்னை போல என் பேர் அவ்வளவு அழகா இல்ல.. நான் அழகில் கொஞ்சம் அதிகபடிதான்.!" என்றாய்.

"தற்பெருமையோ.?"

"ஆனா நான் அசிங்கமா இருக்கேன்னு நீ சொல்லல.!"

வேறு பக்கம் பார்த்தேன் நான். என் வெட்க முகத்தை நீ பார்க்க கூடாது என்று விரும்பினேன்.

"நான் பாலிடெக்னிக்ல கம்ப்யூட்டர் என்ஜினியரிங் படிக்கிறேன்.."

"நான் பி.காம்.." ஒரு பி.காம்முக்கு எத்தனை கிலோமீட்டர் தாண்டிப் போய் படிக்க வேண்டி உள்ளது என்பதை நினைக்கையில் என் வீட்டின் மீது எனக்கு கோபமாக வந்தது.

"ஆனா எனக்கு இருபது வயசு.."

ரொம்ப முக்கியமோ என்று எண்ணினேன் நான் அப்போது.

"எனக்கு பதினெட்டு.." என்றேன் கருக்கட்டான் பழத்தை கடித்தபடி. பழத்தின் வாசம் பிடித்திருந்தது எனக்கு.

இருவரும் பேசிக் கொண்டிருந்தோம். மேற்கில் இருந்து வந்த காரை இருவருமே கவனிக்கவில்லை அப்போது. ஹாரன் கூட இல்லாமல் அதிக இன்ஜின் சத்தமும் இல்லாமல் நம்மை தாண்டிச் சென்றது அந்த கார். அந்த காரின் வேகம் கண்டு உன் கையை பிடித்து என் அருகே பிடித்து இழுத்து நிறுத்தினேன் நான். அனிச்சையாக எனது கை செயல்பட்டு விட்டது.

"பைத்தியக்காரன்.. மெள்ளமா போக என்ன நோக்காடு வந்துச்சி இவனுக்கு.?" என்று காரோட்டியை திட்டினாய் நீ.

"எல்லாம் குப்பம்மாபட்டியால வரது. இந்த காலத்திலயும் சாராயம் காய்ச்சி விக்கிறது நீங்களாதான் இருப்பிங்க. சாராயத்துக்கு வந்தவங்கதான் இப்படி கண்மண் தெரியாம போறாங்க.." என்று எங்கள் ஊரையும் சேர்த்து திட்டினாய்.

ரோசம் ஒரு புறமும், குற்ற உணர்வு ஒருபுறமும் உருவானது எனக்கு. சிலர் சாராயம் காய்ச்சிக் கொண்டுதான் இருந்தார்கள் இன்னமும். ஆனால் கையூட்டு வாங்கும் போலிஸ் இருக்கும்போது நான் என்ன செய்ய முடியும்.? மேலிடத்திற்கு தகவல் தந்தவன் யாரென்று அறிந்து அவனையும் தூக்கிப் போட்டு மிதிக்கிறார்கள் சாராய வியாபாரிகள். சிறு பெண் நான் என்ன செய்வேன்.?

மண் சாலையில் புழுதியை கிளப்பியபடி தூரத்தில் சென்றுக் கொண்டிருந்த காரை வெறித்த நீ திடீரென்று திடுக்கிட்டு மேற்கு நோக்கி ஓடினாய். இரண்டு நொடிகளுக்கு பிறகே எனக்கும் விசயம் புரிந்தது. ஓடி வந்தேன் உன் பின்னால்.

இணையில் ஆடிக் கொண்டிருந்த இரு பாம்புகளும் கார் டயரில் சிக்கி நசுங்கி போய் துடித்துக் கொண்டிருந்தன. உயிர் போகவில்லை இன்னும். இரண்டும் துடிதுடித்தன. ஒன்றுக்கொன்று நெருங்க முயற்சித்தன. கலங்கியது கண்கள் எனக்கு‌.

பாம்புகளை வெறித்த நீ என் பக்கம் திரும்பியபோது உதட்டை கடித்தபடி கண்ணீரை அடக்க முயன்றுக் கொண்டிருந்தேன் நான்.

"வா போயிடலாம்.." என்று என் கையை பிடித்தாய் நீ.

என்னை அழைத்துக் கொண்டு பாம்புகளின் வால் பகுதி இருந்த பாதையோரத்தில் நடந்தாய் நீ. துடித்த பாம்புகளை பார்த்துக் கொண்டே இருந்தேன் நான். பாம்புகள் இரண்டும் என்னை பார்த்து கெஞ்சியது போல இருந்தது.

அந்த நிமிடத்தை இன்னும் மறக்க முடியவில்லை சகா. இறந்தாலும் கூட மறப்பேன் என்ற நம்பிக்கை இல்லை.

"அங்கே பார்க்காதே.!" எச்சரித்தாய் நீ. ஆனாலும் நான் அந்த பாம்புகளை பார்த்துக் கொண்டேதான் அவ்விடத்தை கடந்தேன்.

என் கையை இறுக்கி பிடித்திருந்தன உன் விரல்கள். ஆனால் உன் தைரியம் எனக்கு உதவவில்லை என்பதை எப்படி சொல்வேன்?

"அந்த பாம்புங்க பாவம்.." அழுத குரலில் சொன்ன என்னை விந்தையாக பார்த்தாய் நீ.

"அதை போய் அடக்கம் பண்ணிட்டு வந்துடலாமா.?" முப்பதடி தூரம் வந்த பிறகு திரும்பிப் பார்த்துக் கேட்டேன் நான்.

மறுப்பாக தலையசைத்தாய் நீ.

"அதுங்க இன்னும் சாகல.. வேற யாராவது வந்தா ஓரமா தூக்கி போட்டுடுவாங்க.."

"அது நாகபாம்புகளா.?" அவற்றை விட முடியவில்லை என்னால்‌.

ஆமென தலையசைத்தாய் நீ.

"என்னால அதுங்க செத்துப் போச்சி.. நீ விரட்ட போறேன்னு சொன்னபோது நான் விட்டிருக்கணும்.." அழுத என் தோளை பற்றினாய் நீ.

"சும்மா அழாதே! அதுதான் அதோட விதின்னா நாம என்ன செய்ய முடியும்.? இன்னும் கொஞ்ச நேரத்துல இருட்டு வந்துடும். உன்னை உங்க ஊரோட எல்லை வரை விட்டு வரேன் நான்.." என்ற நீ மீண்டும் என் கையை பற்றிக் கொண்டு நடந்தாய்.

மனமே இல்லாமல் ஊர் நோக்கி நடந்தேன் நான். வழியெங்கும் அழுதுக் கொண்டே கடந்தேன். யாராவது அந்த சாலையில் செல்ல மாட்டார்களா என்று காத்திருந்தேன். கடந்துச் சென்ற இருச்சக்கர வாகன ஓட்டிகள் இருவரிடமும் 'அந்த பாம்புகளை ஓரமாக தூக்கிப் போட்டுவிட்டு செல்லுங்கள்' என்று மனதுக்குள் கேட்டுக் கொண்டேன்.

பாதி தூரம் கடக்கும் முன்பே அரை இருள் சூழ்ந்து விட்டது. நீ உன் பாக்கெட்டில் இருந்த பேனா டார்ச்சை எடுத்து அதற்கு உயிர் தந்தாய். அதன் மூலம் பாதைக்கு வெளிச்சம் தந்தாய்.

அந்த பேனா டார்ச்சின் வெளிச்சத்தில் நூறடி நடந்திருப்போம். தூரத்திலிருந்து ஒளி வீசியபடி வந்த இருசக்கர வாகனம் ஒன்று நம் முன் நின்றது.

"விசாகா.." எங்கள் பக்கத்து வீட்டு அண்ணன் குரல். உன் கையை சட்டென விட்டுவிட்டு அவரின் அருகே சென்றேன்.

"துணைக்கு வந்தாரு அண்ணா.." என்றேன் நான் அவரிடம்.

"லேட்டாகி போச்சி. நீ வரல. அதான் உங்க அப்பா என்னை அனுப்பி வச்சாரு.." என்ற அவர் பைக்கை திருப்பி நிறுத்தினார். உன்னை பார்த்தபடி பைக்கில் ஏறி அமர்ந்தேன்.

"தேங்க்ஸ் தம்பி.." என்றவர் பைக்கை கிளப்பிச் சென்றார்.

என்னை காணாமல் தவித்தபடி இருந்த என் வீட்டாரிடம் வழியில் நடந்ததை பற்றி சொன்னேன். பாம்பை பற்றி சொல்லுகையில் மீண்டும் விக்கி அழுதேன்.

"பொம்பளை புள்ளைக்கு எதுக்குப்பா படிப்பு.? படிச்சி வேலைக்கு போனா வர சம்பளத்தை நமக்கா தர போறாங்க.? காலாகாலத்துல கட்டி தராம காலேஜ்க்கு அனுப்பிட்டு இருக்கிங்க.." பக்கத்து வீட்டு பெரியப்பா என் வீட்டாருக்கு இலவச அறிவுரை தந்துச் சென்றார்.

இரவிலும் அழுதுக் கொண்டே இருந்தேன் நான். அழுகை தீர்ந்தபோது காய்ச்சல் பிடித்துக் கொண்டது என்னை.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN